Thanimai – 18

3172101f5e543f6dfcefa26867b332d6-3260ea8f

நமக்காக வாழ்வோமா?!

தன்னுடைய கடந்த காலத்தில் இருந்து விடுபட்ட கீர்த்தனா கணவனின் முகம் நோக்கினாள். அதுவரை தன் மனதில் போட்டு புதைத்து வைத்திருந்த கடந்த காலத்தை தன் கணவனிடம் சொன்ன பிறகு மனம் லேசாகிவிட்டத்தை உணர்ந்தாள்.

அவளை தன் மீது சாய்த்துக்கொண்டு அவன் அமைதியாக இருக்க “ஒரு குழந்தைக்கு தாயாக இல்லாமல், என்னோட பெத்தவங்களை மட்டும்தான் யோசிச்சேன். இன்னைக்கு எனக்கிருக்கும் தைரியமும், துணிச்சலும்  அன்னைக்கு இல்ல. அப்படி வந்திருந்தால் என் குழந்தையை நான் தூக்கிட்டு வந்திருப்பேன்” என்றாள்.

அவளின் தாய்மை உணர்வு தலைத்தூக்க, “குழந்தை உருவாக அவன் காரணம் என்றாலும், பத்து மாசம் சுமந்தது நான்தான். அதனால் என்னால அந்த குழந்தையை வெறுக்க முடியல” என்றவளின் விழியில் கண்ணீர் தேங்கி நின்றது.

தவறான வழியில் மண்ணுலகிற்கு வந்திருந்தாலும், அதுவும் உயிர்தானே? அவளுள் ரத்தமும் சதையுமாய் வளர்ந்து கடைசியில் அவ்வளவு வலியைத் தாங்கி பெற்றவள் என்ற உணர்வே அவனுள் சிலிர்ப்பை ஏற்படுத்தி சென்றது.

“என்னோட படிப்பு முக்கியம்னு சுயநலமாக கிளம்பி வந்துட்டேன். ஆனால் என் கடந்தகாலத்தில் இது நடந்தது என்று யாரிடமும் சொல்ல முடியல ரவி. பெத்தவங்ககிட்ட மறைக்கும் விஷயத்தை நண்பர்களிடம் பகிர முடியும். எனக்கு அந்த வாய்ப்பு கூட அமையல” அவளின் கண்ணீர் அதிகரிக்க தாயாய் மாறி அவளை அரவணைத்துக் கொண்டான் கணவன்.

அந்த அணைப்பு அவளுக்கு நம்பிக்கையைக் கொடுக்க, “அவங்ககிட்ட சொன்னாலும் என்னை தவறாக நினைப்பாங்க ரவி. அதுதான் அவங்களைவிட்டு விலகி நின்று எனக்கு நானே தனிமையை உருவாக்கி கொண்டேன். அதனால் நான் அனுபவித்த கஷ்டத்தை வார்த்தையால் வடிக்க முடியாது” அவனின் மார்பில் முகம் புதைத்து தேம்பினாள்.

ஒரு காலத்தில் ஆறுதலுக்கு தோள் சாய ஆளில்லாத தனிமையை அனுபவித்தவனுக்கு எல்லோரும் இருந்தும் அனாதையாக நின்றவளை உள்ளங்கையில் வைத்து தாங்கிட எண்ணினான்.

இறுதியாக, “என் மனசாட்சிக்கு மட்டும் நான் நிரபராதின்னு நல்லா தெரியும். வாழ்ந்தாலும் ஏசும், தாழ்ந்தாலும் ஏசும் இந்த மனிதர்களுக்கு நான் எதற்காக கவலைபடனும்? ஒரு பெண் குழந்தையை விட்டுட்டு வந்துட்டேனே என்ற தவிப்பில் இருந்து என்னால் மீள முடியல” கீர்த்தி கூறிய ஒவ்வொரு வாக்கியத்திலும் அவளின் மனவலி அப்பட்டமாக தெரிந்தது.

“படிப்பை முடிச்சவுடன் திருமணம் செய்ய வேணாம்னு முடிவெடுத்தேன். ஆனால் ஒரு கட்டத்திற்கு மேல் அப்பா – அம்மாவின் கட்டாயத்தில் சரியென்று சம்மதித்து மாப்பிள்ளையிடம் நடந்த விஷயத்தை சொல்லி திருமணத்தை நிறுத்த முடியுமான்னு கேட்க வந்த இடத்தில் உங்களை சத்தியமாக எதிர்ப்பார்க்கல” என்று சொல்லும்போதே தன்னைப் பார்த்தும் அவள் அதிர்ந்து நின்றது ஞாபகம் வந்தது.

“உதயாவை ஊட்டி வளர்த்தால் என் பிள்ளையை யாராவது பத்திரமாக பார்த்துப்பாங்க என்ற நம்பிக்கையில் கல்யாணத்திற்கு சம்மதிச்சேன்” என்றவளின் உதட்டில் புன்னகை அரும்பியது.

அவளின் குழந்தைத்தனமான மனநிலையை ரசித்தவனிடம், “என் குழந்தை பாதுக்காப்பான இடத்தில் இருக்கும் இல்ல” சந்தேகத்துடன் கேட்க, அவனும் ஒப்புதலாக தலையசைத்தான்.

“என் குழந்தையிடம் நான் கட்ட நினைத்த பாசத்தை உதயாவிடம் காட்ட ஆரம்பிச்சேன்.  காயபட்ட என் நெஞ்சுக்கு அவள் மருந்தாக மாறியது  இன்னொரு காரணம்” தன் மனபாரத்தை மடைதிறந்த வெள்ளமாக அவள் கொட்டி தீர்த்தாள்.

 அவளை பேசவிட்டு வேடிக்கை பார்த்த அரவிந்தன், “நீ அன்னைக்கு இருந்த சூழ்நிலையில் எடுத்த முடிவு சரிதான் கீர்த்தி. ஒரு குழந்தையை விட்டுட்டு வந்ததை நினைத்து வருந்தும் உன்னைப் பார்க்கும்போது  கஷ்டமாக இருக்கு. எந்தவொரு தாயும் தன் குழந்தையை அனாதையாக விட மாட்டா. அப்படியொரு சூழல் வருதென்றால் அவளின் மறுப்பக்கத்தையும் நம்ம யோசிக்கணும்” நிதானமாக கூறிய கணவனை வியப்புடன் பார்த்தாள்.

அவளின் விழிகளில் தன் பார்வையைக் கலக்கவிட்டு, “கற்பு என்பது மனசை சார்ந்தது. ஒரு பொண்ணு கர்பமாக அவமட்டும் காரணமில்ல. அதே மாதிரி காதல் என்ற மயக்கத்தில் தவறு செய்யும் பொண்ணும் நீயில்ல” என்றவன் அவளின் தலையை பாசத்துடன் வருடினான்.

தன்னை முழுவதும் புரிந்து வைத்திருந்த கணவனை அவள் இமைக்காமல் நோக்கிட, “உன் மனதில் நான் மட்டும் இருக்கேன்னு எனக்கு தெரியும். கடைசி நிமிஷம் நீ அனுபவித்த வலியை அருகிருந்து பார்த்த எனக்கு நீ விளக்கம் சொல்ல வேண்டிய அவசியமே இல்லடி” என்று ஒரே வாக்கியத்தில் அவளின் தவிப்பை போக்கினான்.

கீர்த்தனா அழுகையுடன் அவன் மார்பில் புதைந்திட, “இன்னொரு முறை நீ அழுத அப்புறம் என்னிடம் அடிதான் வாங்குவ. ம்ஹும் எழுந்துபோய் முகம் அலம்பிட்டு வந்து சாப்பிடு. மற்றதெல்லாம் நாளைக்கு பேசிக்கலாம்” என்று அவளை அதட்டினான்.

அவனிடமிருந்து வேகமாக விலகிய கீர்த்தி, “இந்நேரம் வரை கதை கேட்டுட்டு இப்போ என்னையே மிரட்டுறீங்க இல்ல?” என அவனை முறைத்தாள்.

அவளின் கன்னத்தை செல்லமாக கிள்ளிய அரவிந்தன், “ஆமா நான் அதட்டியதும் பயப்படும் ஆள்தான் நீ.. முதலில் எழுந்து போய் தூங்கு. இன்னைக்கு உனக்கு நிம்மதியாக தூக்கம் வரும்” என்றவன் சொல்ல அவளும் சரியென்று தலையசைத்துவிட்டு எழுந்து சென்றாள்.

சட்டென்று அர்ஜூனின் நினைவு வர, “உன் வாழ்க்கையைக் கேள்விக் குறியாக்கியவனுக்கு என்ன தண்டனை தரணும்னு நீ நினைக்கிற கீர்த்தி” என்று கேட்டான் அரவிந்தன் யோசனையோடு.

சிலநொடி அமைதிக்கு பிறகு கணவனின் பக்கம் திரும்பியவள்,  “அவனுக்கும் ஒரு பெண் குழந்தை பிறக்கணும் ரவி. அந்த குழந்தையை வளர்க்கும்போது அவனுக்கு புரியும். ஒரு பொண்ணோட கற்பை அழிப்பது எவ்வளவு பெரிய பாவச்செயல்னு. மற்றபடி அவனைபற்றி நினைக்கக்கூட அருவருப்பாக இருக்கு” என்றவள் வேகமாக சென்று முகம் அலம்பிவிட்டு வந்து அவனின் அருகே படுத்து உறங்கினாள்.

கீர்த்தனாவின் தலையை வருடிய அரவிந்தன் மனம் சிந்தனையில் ஆழ்ந்தது. தன்மீது தவறில்லை என்றபோதும், காலம் முழுவதும் பளிச்சொல்லைச் சுமந்து அவமானப்பட வேண்டிய அவசியமில்லையே..

அவளின் இடத்தில் மற்றொரு பெண்ணிருந்தால் என்ன நடந்திருக்கும் என்று யோசிக்கும்போது, அவள் எடுத்த முடிவு சரியானதே என்று சுயநலமாகவே நினைத்தான் அரவிந்தன்.

அன்றைய நிலையில் கைக்குழந்தையுடன் சென்றிருந்தால், அவளின் பெற்றோர் அவளை முழுமனதாக ஏற்றுக்கொள்ளும் வாய்ப்பு முற்றிலும் குறைவே. அந்த குழந்தையை ஒரு அனாதை ஆசரமத்தில் சேர்த்துவிட்டு அவளுக்கு வேறொரு திருமணம் செய்து வைத்திருப்பார்கள். அதுதான் நிதர்சனமும் கூட!

‘அவர்களைப் பொறுத்தவரை அவள் நன்றாக இருக்க வேண்டும்.  பெற்றவர்களின் விருப்பமே பிரதானமாக வைத்து திருமணம் செய்தவளின் பின்னணி அறிந்து கோபப்படுகிறார். அன்றைய நிலையில் இருந்து யோசிக்கும்போது அவளை தலைமுழுகி இருப்பார்கள்’ என்று உணர்ந்தான்.

அவளின் தலையை வருடிவிட்டு அருகே படுத்த அரவிந்தன் மகளைத் தூக்கி மார்பில் போட்டு, மறுகரத்தால் மனைவியை அணைத்தவனின் மனம் நிம்மதியடைய விழிகளில் உறக்கம் தழுவியது.

மறுநாள் காலை விடியலுக்கு முன்னரே கண்விழித்த கீர்த்தனா படுக்கையில் கணவன் மற்றும் மகளைக் காணாமல், “இந்நேரத்தில் இவங்க எங்கே போனாங்க” என்ற குழப்பத்துடன் எழுந்தாள். காலை நேரத்தில் குளிரடிக்க சுற்றிலும் பார்வையைச் சுழற்றினாள்.

ஆணியில் அரவிந்தனின் சட்டை இருக்கவே அதை எடுத்து சுடிதாரின் மீது போட்டு பட்டனைப் போட்ட, “உதயா நீ கோலம் போட்டால் கோலமாவுக்கு டிமாண்ட் வந்துடும் செல்லம். நான் கேட்கும் கலரை மட்டும் கொடு” அரவிந்தன் குரலைக்கேட்டு வாசலுக்கு விரைந்தாள்.

உதயா ரோஸ் நிற ஸ்வெட்டர் அணிந்து படிக்கட்டில் உட்கார்ந்திருக்க, “என்னங்க இதை நான் செய்ய மாட்டேனா? வீட்டில் பொண்டாட்டி ஒருத்தி இருக்கும் நினைவு இருந்தா இந்த வேலையெல்லாம் செய்ய தோணுமா?” என்ற கேள்வியுடன் மகளின் அருகே அமர்ந்தாள்.

அவளை நிமிர்ந்து பார்த்த கணவனோ, “நான் கட்டிக்கிட்ட பொண்ணு ஒரு பால்வாடி குழந்தை. அத்தோட என் மகளும் சேர்த்து எனக்கு இரண்டு குழந்தைங்க. இந்த இலட்சணத்தில் நான் பொண்டாட்டி நினைவில்லாமல் இருக்கிறேனாம்” தன்னவளை வேன்றுமென்றே வம்பிற்கு இழுத்தான் கணவன்.

இருவரின் உரையாடலைக் கேட்ட உதயா, “அம்மா நீயும் பாப்பாவா? என்கிட்ட நீ சொல்லவே இல்ல?” அவளை கேலி செய்து சிரிக்க கீர்த்தி கணவனை பொய்யாக முறைத்தாள்.

“என்ன அப்பனும், பொண்ணும் சேர்ந்து என்னை கிண்டலடிக்கிறீங்களா?” என்றாள் கோபத்துடன்.

“இதுவே உனக்கு இப்போதான் புரிஞ்சிதா? சுத்தம்..” என்ற அரவிந்தன் கோலத்தைப் போட்டு முடித்துவிட்டு எழுந்தான்.

கீர்த்தி கோபத்துடன் மெளனமாக இருக்க கீழ்வானம் மெல்ல சிவக்க தொடங்கியது.

“நான் போட்ட கோலம் நல்ல இருக்கா?” என அவன் கேட்க பதில் சொல்லாமல் இருந்தவளின் கோபத்தை எப்படி தணிப்பது என்ற கேள்வியோடு மகளை நோக்கினான்.

சின்னவளின் பார்வை கலர் கோலப்பொடி மீது படிந்தது. சட்டென்று அதை எடுத்து கீர்த்தனாவின் கன்னத்தில் பூச, ““ஏய் உதயா என்ன பண்ற?” என பதற அப்போதுதான் அவள் அணிந்திருந்த தன் சட்டையைக் கவனித்தான் அரவிந்தன்.

“அம்மா நீ இப்போ ரொம்ப அழகா இருக்கிற” என்றவள் நெற்றியில் இதழ்பதித்துவிட்டு  வீட்டிற்குள் ஓடிவிட்டாள்.

கணவனின் பார்வை தன் மீது படிவத்தை உணர்ந்து, “ரொம்ப குளிராக இருந்தது. அதுதான் உங்க சர்ட் போட்டேன்” அவள் காரணத்தை சொல்ல அவளின் எதிரே மண்டியிட்டு அமர்ந்தான்.

பக்கத்தில் இருந்த கோலமாவை எடுத்து அவளின் கன்னத்தின் இரு புறமும் பூசி நெற்றியில் இதழ் பதித்தான். அவன் விரல் ஸ்பரிசம்பட்ட இடமெங்கும் வெக்கப்பூக்கள் முற்றுகையிட, பெண்ணவளின் தேகம் சிலிர்த்து அடங்கியது.

அவளின் முகத்தை மறைத்த கூந்தலை காதோரம் ஒதுக்கி, “இந்த கோலத்தில் பார்க்க நீ ரொம்ப அழகாக இருக்கிற கீர்த்தி. இன்னொரு முறை இதே கோலத்தில் உன்னை பார்க்கணும் போல தோணுது” மெல்லிய குரலில் கூறிவிட்டு அவன் அங்கிருந்து சென்றான்.

அவன் சொன்னதற்கான அர்த்தம் புரியாமல் சிலையாகி அமர்ந்துவிட்டாள் கீர்த்தனா. காலையில் கோலம் போட வெளியே வந்த மௌனிகா, “என்ன மேடம் கோலம் போட சொன்னால் கலர் மாவை கன்னத்தில் பூசிட்டு உட்கார்ந்துட்டு இருக்கிற? ஆமா எப்போ ஊரிலிருந்து வந்த?” என விசாரித்தாள்.

அவளின் குரல்கேட்டு வேகமாக கன்னத்தில் திட்டு திட்டாக இருந்த கோலமாவை இரண்டு கைகளால் அழித்த கீர்த்தி, “நேற்றுதான் வந்தேன் மௌனி” என்றவளின் குரலில் புத்துணர்ச்சியின்றி இருப்பதை கவனித்தாள்.

“என்னாச்சு காலையிலேயே ஒரு மாதிரி இருக்கிற?” அவளின் அருகே அமர கணவன் சொல்லிவிட்டுப் போனதை தோழியிடம் ஒப்பித்தாள்.

“ஏய் அரவிந்தன் அண்ணாவை சாதாரண ஆளுன்னு நினைச்சேன். பரவால்ல நல்ல ரொமாண்டிக்கா பேசியிருக்காரே” அவன் சொன்ன அர்த்தத்தைப் புரிந்து அவள் வியந்தாள்.

“மௌனி எனக்கு சத்தியமா நீ சொல்றது புரியலடி” என்ற கீர்த்தியின் தலையில் நறுக்கென்று கொட்டினாள். 

 ‘காலையில் எழுந்த நேரமே சரியில்ல போல.. எல்லோரும் என்னையே குழப்பறாங்க..’ என்று தலையை அழுந்த தேய்த்தவள், அவளை பொய் கோபத்துடன் முறைக்கவும் மறக்கவில்லை.

அவளுக்கு சொல்லி புரிய வைக்க முடியாதென்ற முடிவிற்கு வந்தவள், “இப்படியே எழுந்திருச்சு போய் கண்ணாடியைப் பாரு” என்ற மௌனி அங்கிருந்து நகர்ந்துவிட சிந்தனையுடன் வீட்டிற்குள் நுழைந்தாள்.

அரவிந்தன் மகளுக்கு பால் ஆற்றி கொடுத்துவிட்டு சோபாவில் அமர்ந்து காபியைக் குடிக்க, “கோலம்.. கோலமாவுன்னு என்னை குழப்பி விட்டுட்டு அமைதியாக உட்கார்ந்திருப்பதை பாரு..” அவன் காதுபட முணுமுணுக்க குறும்புடன் தன்னவளை ஏறிட்டான்.

அவனின் பார்வை தனக்குள் விதைத்துவிட்டு செல்லும் உணர்வுகளைப் பிரித்தறிய முடியாமல் பாவை அவள் திணறினாள். அவளின் எதிரே இருந்த கண்ணாடியில் முகம் பார்த்தவளுக்கு சட்டென்று அவன் சொன்ன அர்த்தம் விளங்கியது.

கீர்த்தனாவின் முகம் செவ்வானமாக சிவப்பதைக் கண்டவன், “உதயா அம்மா இன்னைக்கு கலர்ஃபுல்ல இருக்காங்க இல்ல” அவளை சீண்டிய கணவனை பொய்யாக முறைத்தாள்.

 “ஆமாப்பா. நான் மஞ்சக்கலர் கோலப்பொடி தான் அம்மா கன்னத்தில் பூசிட்டு வந்தேன். அப்போ மஞ்சள் நிறத்தில் இல்லாமல்  இதென்ன சிவப்பு கலரில் இருக்கு” நேரம் காலமில்லாமல் மகள் ஆராய்ச்சியில் இறங்கினாள்.

ஏற்கனவே காலையிலிருந்து அரவிந்தன் சொல்லும், செயலும் வேறு விதமாக இருப்பதை உணர்ந்தவள், “இப்போ ஆராய்ச்சி ரொம்ப முக்கியம். வா உதயா நம்ம போய் குளிக்கலாம்” மகளைத் தூக்கிக்கொண்டு அறைக்குள் சென்று மறைந்தாள்.

அவர்கள் இருவரும் குளித்துவிட்டு வருவதற்குள் இட்லி ஊற்றி தக்காளி சாம்பார் வைத்தான். கீர்த்தி மகளுடன் சமையலறைக்குள் நுழைய, “நீங்க போய் குளிச்சிட்டு வாங்க” என்றாள்.

“அப்பா தூக்குங்க” என்ற மகளைக் கையில் வாங்க யோசித்தவனை நிதானத்துடன் ஏறிட்டாள் கீர்த்தி. பம்பரமாக சுழன்று வேலை செய்ததில் அவனின் மேனியெங்கும் முத்து முத்தாக வேர்த்திருக்க பனியன் முற்றிலுமாக நனைந்திருந்தது.

வலது தோளில் போட்டிருந்த துண்டை எடுத்து அவன் அவசரமாக முகம் துடைத்தவன், “நீ எல்லோருக்கும் சாப்பாடு எடுத்து வை” சமையலறை விட்டு வெளியேறினான். அவன் செய்த உணவை எடுத்து வைத்துவிட்டு மகளுக்கு ஊட்டிவிட தொடங்கினாள்.

அதற்குள் குளித்துவிட்டு வந்தவன், “நீயும் உட்காரு கீர்த்தி” அவளுக்கும் ஒரு தட்டில் பரிமாற இருவரும் இணைந்து சாப்பிட்டு எழுந்தனர்.

அவள் மெளனமாக இருப்பதைக் கவனித்தவன், “உதயாவிற்கு தேவையானதை எடுத்து வைச்சிட்டு போய் புடவையைக் கட்டிட்டு வா. நம்ம கோவிலுக்கு போயிட்டு வரலாம்” என்றான்.

பச்சை நிற பூனம் புடவையணிந்து வந்தவளை மனதினுள் ரசித்த அரவிந்தன் மகளைத் தூக்கிகொண்டு முன்னே செல்ல வீட்டைப் பூட்டிவிட்டு கணவனை பின்தொடர்ந்தாள் பெண்ணவள்.

தன் பைக்கில் மகளை அமர வைத்துவிட்டு பைக்கை ஸ்டார்ட் செய்ய அவனின் பின்னோடு அமர்ந்து அவனின் தோளைப் பிடித்து கொண்டாள். மூவரும் அருகில் இருக்கும் கோவிலுக்கு சென்று சாமியை மனதார கும்பிட்டு வெளியே வரும்போது கீர்த்தியின் உள்ளம் நிறைந்திருந்தது. அங்கிருக்கும் பிரகாரத்தில் அமர்ந்தவன் மகளுக்கு தேங்காய் மற்றும் வாழைப்பழம் இரண்டையும் சாப்பிட கொடுத்தான்.

 “கீர்த்தி” ஆழ்ந்த குரலில் அழைத்தவனை கேள்வியோடு ஏறிட்டாள்.

“இதுவரை எப்படியோ.. ஆனால் இனிமேல் நம்ம நமக்காக வாழலாமா?” அவளின் கைகளைப் பிடிக்க சம்மதமாக தலையசைத்தவளின் உதடுகளில் புன்னகை அரும்பியது.

இருவருக்கும் இடையே இருந்த புரிதல் அவர்களை மணவாழ்க்கை என்ற ஒரு வழி பாதையில் அழைத்து செல்ல அடுத்த கட்டத்தை நோக்கி நிதானமாக அடியெடித்து வைத்தனர்.