Thanjam mannavan nenjam 21

அத்தியாயம் 21

அன்று மதுமதியின் மனம் நிலை கொள்ளாமல் தவித்தது…காரணம் அவளுடைய செல்பேசி வேலை செய்யவில்லை. ஒவ்வொரு நாளும் சரியாக மாலை 6 மணிக்குச் சுந்தரம் மகளுக்குக் காணொளி அழைப்பு போட்டுப் பேசி விடுவார். அவருக்கு மகளிடமும் மனைவியிடமும் பேசினால் மட்டுமே இரவு நிம்மதியாகத் தூக்கம் வரும்.அவளும் செல்பேசியைத் தனித்தனியாகப் பிரித்துப் போட்டு அறுவை சிகிச்சையே செய்து பார்த்து விட்டாள்.சிகிச்சை என்னவோ ஜெயம் தான். நோயாளிதான் கண் விழிக்காமல் மயக்கத்திலேயே இருந்தது. ”ச்சே… இதுக்கு யாரோ சூனியம் வச்சுட்டாங்க போல…”என்று அதனைத் தூக்கி வீசி எறிந்தவள் கடுப்பாகிப் போய்த் தூங்கிவிட்டாள்.

மதுவிற்கு எப்போதுமே ஒரு பழக்கம் உண்டு.பிடிக்காத நிகழ்வு ஏதேனும் நிகழ்ந்து விட்டால் உடனே போய் இழுத்துப் போர்த்தித் தூங்கிவிடுவாள். எழுந்ததும் தெளிந்த மனநிலையில் அதற்கான தீர்வை கண்டுபிடிப்பாள்.மதுமதி எழும் போது மணி நான்கு.

’இன்னும் இரண்டு மணி நேரத்தில் அப்பா அழைத்து விடுவாரே என்ன செய்வது’ என்று சிந்தித்துக் கொண்டிருக்கும் போதே ராஜா வந்தான்.’அவனிடம் உதவி கேட்கலாமா…’ அன்று இரவு பண விஷயமாக நடந்த வாக்கு வாதத்திலிருந்து ராஜா அவளிடம் பேசவே இல்லை.’இப்போது எப்படிச் சென்று கேட்பது’ என்று தயங்கியவள்…வேறு வழி இல்லாமல் உதவிக் கேட்டு விட்டாள்.

“ராஜா…” 

என்ன என்றுகூடக் கேட்காமல் அவன் அவளை ஏறிட்டு மட்டும் பார்த்தான்.

“என் செல்போன் ஹேங்க் ஆயிடுச்சு…இத கொஞ்சம் சர்வீஸ் பண்ணிட்டு வர முடியுமா…” சற்று நேரம் சிந்தித்தவன்,

“எனக்கு உன் போனை பத்தி என்ன தெரியும்…நீயும் வர்றதுன்னா வா…” என்றான் பட்டுக் கொள்ளாமல்.

“சரி” என்று கிளம்பியவளுக்கு ‘ஏனடா சென்றோம்’ என்று ஆகிவிட்டது. வேண்டா வெறுப்பாகக் கூட்டிச் சென்றவனுடனான அந்தப் பயணம் அவளுக்கு அத்தனை உவப்பானதாக இல்லை.’ இதே வெற்றிவேலுடன் வந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்’ என்று அவளால் எண்ணாமல் இருக்க முடியவில்லை.ஏனோ வெற்றிவேலுடன் இருக்கும் போது தோன்றும் பாதுகாப்பு உணர்வு இவனிடம் தோன்றுவது இல்லை என்று நினைத்துக் கொண்டாள்.ஒரு வழியாக வேலையை முடித்துக்கொண்டு வந்து இறங்கியவளை வாசற்படியிலேயே நின்றிருந்த வெற்றிவேலின் அனல் பார்வை வரவேற்றது.

‘இந்த வீரபாகு ஏன் இந்த முறை முறைக்கிறான்…அவனது மனநிலை கணிப்பிற்கு அப்பாற்பட்டது போலும்.இந்த நிலையில் இவன் இருக்கும்போது இவனுடன் என்ன பேசுவது’ என்று எண்ணியவாறே அவனைக் கடந்து சென்றாள்.

“எங்க போய்ச் சுத்திட்டு வர்ற…” கூர்மையாக வந்து விழுந்தது அவனுடைய கேள்வி.இந்த கேள்வியை மதுமதி விரும்பவில்லை. இருப்பினும்,

“சுத்திட்டு வர்றதுக்காக நான் வெளியே போகல…” என்று பொறுமையாகவே சொன்னாள்.

“அப்புறம் உனக்கு அவன் கூட வெளியே என்னடி வேலை…”

“வாட்…டி யா…”

“ ஆமாண்டி…”

“ இத பாருங்க..ஐ டோன்ட் லைக் திஸ் டைப் ஆஃப் யுவர் ஆட்டிட்யுட் டுவேர்ட்ஸ் மீ…”

“என்னடி தஸ்ஸு புஸ்ஸுங்குற… எங்க போயிட்டு வர்றேன்னு கேட்டா அதுக்குப் பதில் சொல்ல முடியல…”

“பதில் சொல்ல முடியாம என்ன…என் செல் ஹேங்க் ஆயிடுச்சு…அப்பா சிக்ஸ் ஓ கிளாக் கால் பண்ணிடுவாரு.அதான் சர்வீஸ் பண்ணப் போனேன்”

“ ஏன் நான் வந்து கூட்டிட்டு போக மாட்டேனா…இல்லாட்டி வீட்ல இருக்குற போன்ல பேச வேண்டியது தான…”

அவளுக்கு ஆயாசமாக இருந்தது…வீட்டில் இருப்பது தரைவழி இணைப்புத் தொலைபேசி…அதில் எப்படிக் காணொளி அழைப்புச் செய்ய முடியும்…இதை இவனுக்கு யார் புரிய வைப்பது.

“ என்னடி முழிக்குற…இப்பப் பேசு…” ஏதோ குற்றவாளியை நிறுத்தி கேள்வி கேட்பது போன்ற அவன் செய்கை அவளை எரிச்சல் படுத்தியது.

“ இப்ப என்ன வேணும் உங்களுக்கு…ராஜா கூட வெளியே போயிட்டு வருதுல என்ன தப்பு…அதை ஏன் நீங்க அப்ஜக்ட் பண்றீங்க… எனக்கு எப்ப எப்படிப் பிடிச்சிருக்கோ அப்படி நடந்துப்பேன்…என்னய கண்ட்ரோல் பண்ண நீங்க யாரு…” என்று கேட்டே விட்டாள்.

இவளது இந்த வார்த்தைதான் பின் வரும் நாட்களில் அவளது நிம்மதியை காவு வாங்கப் போகிறது என்பதை அறியாதவளாய்…

அவ்வளவு தான்…வெற்றிவேலுக்குக் கண்மண் தெரியாமல் கோபம் வந்து விட்டது.

“ என்னடி சொன்னே…” என்று அவளை அடிக்கக் கை ஓங்கி விட்டான். அடிப்பதற்காகத்தான் கையை ஓங்கினான்,ஆனால் அவளது பயந்து மிரண்ட பார்வையில் நிதானித்தவன்… கண்களை இறுக மூடி தன்னைக் கட்டுக்குள் கொண்டு வந்தான்.அவன் கண் திறந்தபோது மதுமதி அங்கு இல்லை.

தன் செய்கையை நினைத்து தானே மனம் வெறுத்து விட்டான் வெற்றிவேல். அவனும் தான் என்ன செய்வான்…அன்று மில்லில் இருந்து விரைவாகவே வந்துவிட்டவன் மதுமதியை காணாது ,”மது எங்கம்மா” என்று அஞ்சுகத்திடம் வினவினான்.

“வெற்றி…நானே சொல்லணும்னு நினைச்சேன்ப்பா…மதுவ எங்கேயாவது வெளியே கூட்டிட்டுப் போகக் கூடாதா… வீட்டுக்குள்ளேயே மொட்டு மொட்டு உட்காந்து கெடக்க அதுக்கும் சள்ளையா வருமில்ல…”அஞ்சுகம் கூறியதை உள் வாங்கிக் கொண்டவன்,

“சரிம்மா…கூட்டிட்டு போறேன்…இப்ப அவளை எங்க…”

“ ராஜா கூட எங்கேயோ போயிருக்கு…” என்றார்.இதனை மதுமதி ராஜாவுடன் ஊர் சுற்றிப் பார்க்கச் சென்று இருப்பதாக நினைத்துக் கொண்டான் வெற்றிவேல்.

ராஜாவுக்குச் சிறுவயதிலிருந்தே ஒரு வழக்கம்.வெற்றிவேல் எதையெல்லாம் விரும்பி எடுக்கிறானோ,அதையெல்லாம் தான் தனக்கு வேண்டும் என்று கேட்பான் ராஜா. தம்பிதானே என்று வெற்றியும் விட்டுக் கொடுத்து விடுவான். வெற்றிவேலிடமிருந்து பெற்றுக் கொண்ட பின் அந்தப் பொருளை குப்பையாய் தூக்கி எறிந்து விடுவான் ராஜா.சிறிய வயதில் வெற்றிவேல் விரும்பிய சிவப்புச் சட்டையிலிருந்து பெரியவனாகி வாங்கிய புல்லட் வண்டி வரை இந்தக் கதை தான் நடந்திருந்தது.

எனவே வெற்றிவேலின் சிறுவயது ஆசைகள் எல்லாம் ஏக்கங்களாகவே நின்று விட்டன.ஆனால் இப்போது அவன் மதுமதியை விரும்புகிறான்…மனமார விரும்புகிறான்…இப்போது ராஜா வந்து மதுமதியை கேட்டு விட்டால் மற்ற அனைத்தையும் விட்டு கொடுத்ததைப் போல மதுமதியை கண்டிப்பாக அவனால் விட்டுக் கொடுத்துவிட முடியாது.மதுமதி மற்ற பொருட்களைப் போல உயிரற்றவள் அல்லவே.அவள் உயிரும் உணர்வும் கொண்ட அவனது ஆருயார்க்காதலி ஆயிற்றே…

எனவே அவள் அவனுடன் பழகுவதை ஆரம்பத்திலிருந்தே வெறுத்தான் வெற்றிவேல்.முதல்நாள் மதுமதி வந்திறங்கியபோது கோவிலில் வைத்து முதன் முதலில் பார்த்தவன் வெற்றிவேல் தான்…ஆனால் ராஜா முந்திக் கொண்டு போய்ப் பேசிவிட்டான்.அதன் பின்னரும் கூட மதுமதி ராஜாவுடன் பேசுவது வெற்றிவேலுக்கு ஒவ்வாததாகத் தான் இருந்தது.இந்நிலையில் மதுமதி,

“என்னைக் கண்ட்ரோல் பண்ண நீ யார்” என்று கேட்டால் அவனுக்கு வெறி ஏறுமா…ஏறாதா…கோபம் அவன் உச்சித் தலைக்கு ஏறி விட்டது.அதை மதுமதியிடம் காட்டியும் விட்டான்.அதன் விளைவு…

மதுமதி முறைத்துக் கொண்டாள்.அவன் பார்த்தால் அவள் பார்ப்பது இல்லை.அவன் பேசினால் அவள் பேசுவதில்லை. அவ்வளவு ஏன்…அவன் இருக்கும் இடத்தில் கூட அவள் இருப்பதில்லை…இவ்வாறு அவனுடன் கண்ணாமூச்சி ஆட்டம் ஆடி வந்தாள்.

இவன் தலை காய்ந்து போனான். தோட்டத்தில் இருந்தவளை ஒரு முடிவுடன் தேடிச் சென்றவன் அவள் அருகில் சென்று “பூனை குட்டி என்ன பண்ணுது…” என்றான். அவனைக் கண்டவுடன் முகத்தைத் திருப்பிக் கொண்டு எழுந்து செல்லப் போனவளை கைப் பிடித்து நிறுத்தினான்…

“வீரபாகு கூடப் பேச மாட்டியா பூனைக்குட்டி…”

“பேசாம இருந்தாத்தானே உங்களுக்குப் பிடிக்கும்…இல்லைனா அடிக்க வருவீங்களே…” என்றாள் விட்டேத்தியாக.

இதைச் சொல்லும் போது அவள் கண்கள் கலங்கியிருந்தன… ‘ச்சே…பூ போன்ற மென்மையானவளை கடிந்து கொண்டோமே…’ மனம் கசந்தான்.

“அன்னைக்கு நான் வேற ஏதோ ஒரு டென்சன்ல இருந்தேன் பூனைக்குட்டி… அதான் உன் மேல ரொம்பவும் கோபப் பட்டுட்டேன்…நீயும்தான் என்னயப் பேசின…நீ யாருனு என்னயப் பார்த்து கேட்ட…எங்க என் முகத்தப் பாத்து சொல்லு…உனக்கு நான் யாரோவா” என்றான்.

அதில் தன் தவறை உணர்ந்தவள்,அவனை நிமிர்ந்து பார்த்தாள்.

“சாரி பூனை குட்டி” என்றான் வெற்றிவேல்.

அவன் வெற்றிவேல்…பெரிய நூற்பாலை வைத்து நூற்றுக்கணக்கான பேருக்கு வேலை போட்டுக் கொடுத்திருக்கும் முதலாளி…ஊரில் அவன் இறங்கி நடந்தால் வயதில் பெரியோரும் கூட வணக்கம் சொல்வர்.அப்படிப்பட்ட அவன் அவளிடம் மன்னிப்பு வேண்டியதும் அவளுக்கு என்னவோ போல் ஆகிவிட்டது.

“சாரி எல்லாம் ஒண்ணும் வேணாம்…பட் நீங்க என்ன அடிக்க வந்ததுக்கு நிச்சயம் பனிஷ்மென்ட் உண்டு” என்றாள்.

“சரி குடு வாங்கிக்கிறேன்” என்று சரணடைந்தான் வெற்றிவேல்.அப்படியும் சமாதானம் ஆகாமல் உர்ரென்றே இருந்தவளிடம்,

“நீ இப்ப சிரிச்சா நான் உன்னைப் பக்கத்துல ஏற்காட்டுக்கு கூட்டிட்டு போகலாம்னு நினைச்சேன்..உனக்குப் பிடிக்கலைன்னா சரி…நீ உர்ருன்னே இரு” என்றான்.

இதைக் கேட்டதும் உடனே மலர்ந்தவள்…

“ உண்மையாவா” என்றாள்.

‘ஆமாம்’ என்று தலையசைத்தவனிடம்,

“ யார் யாரெல்லாம் போறோம்…” என்றாள். “நீ,நான்,கதிர்,கயல் நாலு பேரும் போறோம்” என்றான்.

ஆனால் இயற்கை உபாதைகளால் கயலால் வரமுடியவில்லை.கதிரும் வரவில்லை என்று விட்டான்.மதுமதியும் வெற்றிவேலும் மட்டுமே ஏற்காட்டிற்குப் பயணமாயினர்.

ஏற்காட்டில் கோடை விழா தொடங்கியிருந்தது!

குளுகுளுவென்ற இதமான தட்பவெட்ப நிலையில் வெற்றிவேலின் கைப்பிடியில் அந்தப் பயணத்தை வெகுவாக ரசித்தாள் மதுமதி. வெற்றிவேலின் நிலையினைக் கேட்கவே வேண்டாம்.அத்தை மகளின் அருகாமையில் உல்லாசமான மனநிலையில் அந்த நாள் அவனுக்கு இனிமையானதாகவே அமைந்தது.

இளஊதா நிறத்தில் மெல்லியச் சரிகை நூலின் வேலைப்பாடு கொண்ட பருத்தியினாலான சுடிதாரை அணிந்திருந்தவள் பட்டாம்பூச்சியாக அங்குமிங்கும் சிறகடித்துக் கொண்டிருந்தாள். ஏற்காட்டில் முதன் முதலில் அவர்கள் சென்றது மலர்க்கண்காட்சிக்குத்தான்… பூக்களால் செய்யப்பட்டிருந்த விமானம்,விலங்குகள், பறவைகள் என அனைத்தையும் கண்டு விழிவிரித்தாள்.

“ஹய்யோ…எவ்வளவு அழகா இருக்கு இல்ல மாமா…”

“எனக்கு உன்னைத் தவிர எல்லாமே அவுட் ஆஃப் ஃபோகஸ்ல தான் தெரியுது பூனக்குட்டி…”

“ம்ப்ச்…நல்லா பொறுமையா எல்லா ஃப்ளவர்ஸையும் ஃபோக்கஸ் பண்ணி என்னய ஃபோட்டோ எடுங்க மாமா…” என்று அவனிடம் தனது செல்பேசியை நீட்டினாள்.

வெற்றிவேல் மனம் நொந்துபோனான்.

‘நான் என்ன சொல்றேன்…இவன் என்ன சொல்றா…இவளுக்கு என் மனசு புரியுதா இல்ல…புரியாத மாதிரி என் கூட விளையாடி பாக்குறாளா…’ என்று அவளைக் கூர்ந்து பார்த்தான்.

அவளது கள்ளமில்லாச் சிரிப்பு நான் இன்னும் மனதளவில் குழந்தைதான் என்று கட்டியம் கூறியது.இன்று தன் மனதை அவளுக்கு எப்படியாவது உணர்த்தி விட வேண்டும் என்று நினைத்துக் கொண்டு தானும் அவளது உற்சாகத்தில் பங்கெடுத்துக் கொண்டான்.ஆனால் எதிர்பாராமல் அவளுக்கு நேர்ந்த அந்த விபத்து இதுவரை எதற்குமே கலங்கியிராத அவனையே கதிகலங்கச் செய்து விட்டது.

—-தொடரும்

சென்ற அத்தியாயத்திற்கு லைக்ஸ் மற்றும் கமண்ட்ஸிட்ட அனைத்து நட்புகளுக்கும் என் நன்றிகள்…படித்துவிட்டுச் சொல்லுங்கப்பா…உங்கள் கருத்துக்களை ஆவலுடன் எதிர் நோக்கும் பிரியா குமார்…