Enge enathu kavithai epilogue

நான்கு வருடங்களுக்கு பிறகு…….

“ப்பா…..எங்க இருக்கீங்க…..ப்பா…..கிஷ் பாப்பாவ பார்க்க போகணும் வாங்கபா….ப்பா….” என்றவாறு அந்த அறை முழுவதும் தன் மழலை குரல் எதிரொலிக்க சூர்யாவை தேடி கொண்டு நின்றாள் மூன்றரை வயது நிரம்பிய சூர்யா- வெண்ணிலாவின் செல்ல மகள் ஜனனி.

“என்ன உங்க அப்பா கும்பகர்ணன் இன்னும் எழும்பலயா???” என்று கேட்டுக் கொண்டே குளியலறையில் இருந்து தலையை டவலால் துவட்டிக் கொண்டு வந்த வெண்ணிலாவை ஓடி வந்து கட்டி கொண்ட ஜனனி

“ம்மா…..ப்பா ரொம்ப பேட் பாய்….நேத்து நைட் நான் சமத்தா சாப்பிட்டா இன்னைக்கு கிஷ் பாப்பாவ பார்க்க கூட்டிட்டு போறேனு சொன்னாங்க….ப்பாவ காணோம்மா….ப்பாவ வர சொல்லுமா…..” என்று மழலை பாதி கெஞ்சல் பாதியாக கண்களில் சிறு முத்தாய் தோன்றிய கண்ணீரோடு கூறிய தன் மகளை வாரி அணைத்துக் கொண்ட வெண்ணிலா

“அச்சோ…..ஜனனி பாப்பா எப்போவும் ஹேப்பியா தானே இருக்கணும் இல்லையா???” என்று கேட்க

ஆமாம் என்று கலங்கிய கண்களை துடைத்து கொண்டே ஜனனி தலை அசைத்தாள்.

சிரித்துக் கொண்டே ஜனனியின் நெற்றியில் முத்தமிட்ட வெண்ணிலா

“ஜனனி பாப்பா உங்க புது ட்ரெஸை தாத்தா,பாட்டி கிட்ட காமிக்கல தானே….. நீங்க போய் தாத்தா,பாட்டி கிட்ட உங்க ட்ரெஸை காமிச்சுட்டு தாத்தா,பாட்டி ரெடி ஆகிட்டாங்காளானு பாருங்க சரியா???அப்பா இப்போ வந்துடுவாங்க….” என்று வெண்ணிலா கூறவும் வேகமாக சரி என தலை அசைத்த ஜனனி தன் பிஞ்சு கரங்களால் தன் பட்டு பாவடையை கால்களில் இடறாத வண்ணம் தூக்கி கொண்டு ஓடி செல்ல தன் மகளை சிறிது நேரம் கண் இமைக்க மறந்து ரசித்து கொண்டு நின்றாள் வெண்ணிலா.

சூர்யா- வெண்ணிலாவின் திருமணம் முடிந்த தருணத்தில் அவர்கள் இருவரும் ஒரு சேர முடிவு எடுத்த விடயம் ஜனனி மட்டுமே அவர்களது குழந்தை.

வெற்றி மற்றும் அபிநயா பலமுறை இதை பற்றி சூர்யா மற்றும் வெண்ணிலாவிடம் பேசி இருந்தும் அவர்கள் இருவரும் தங்கள் முடிவில் இருந்து மனம் மாறவில்லை.

தங்கள் ஒட்டுமொத்த பாசமும் ஜனனிக்கு மட்டுமே இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் உறுதியாக இருந்த சூர்யா மற்றும் வெண்ணிலா தங்கள் அன்பு, பாசம், அரவணைப்பு, கண்டிப்பு, தைரியம் என எல்லாவற்றையும் ஜனனிக்கு மட்டுமே வழங்கினர்.

அதே போல் ஜனனியும் வெண்ணிலாவினதும், சூர்யாவினதும் குணங்களை கொண்டு வளர்ந்து வந்து கொண்டு இருந்தாள்.

எல்லாவற்றையும் நினைத்து பெருமூச்சு ஒன்றை விட்டு கொண்ட வெண்ணிலா

“எங்க போனான் இந்த தேவாங்கு??? பாப்பாவ அழ வைக்குறதே இவருக்கு வேலையாக போச்சு…..வரட்டும் இன்னைக்கு அவரை ஒரு வழி பண்ணிடுறேன்…..” என்று சூர்யாவை திட்டிக் கொண்டே தன் போனை எடுத்த வெண்ணிலா சூர்யாவிற்கு அழைப்பை மேற்கொண்டாள்.

போன் அறையில் இருப்பதை பார்த்து குழப்பம் கொண்ட வெண்ணிலா

“போனை வேற வைச்சுட்டு அப்படி எங்க இவ்வளவு அவசரமாக போய் இருப்பாரு???? காலங்கார்த்தாலேயே என்னை கோபப்படுத்தி பார்க்குறதுல என்னதான் ஒரு ஆர்வமோ??? எங்க போய் இருப்பாரு????” என்று யோசித்து கொண்டு நிற்கையில்

“என்ன நின்னுட்டே தூங்குற போல???” என்ற சூர்யாவின் குரலில் 

தன்னை மீட்டு கொண்ட வெண்ணிலா அவனை கோபமாக முறைத்து பார்த்தாள்.

“என்ன நக்கலா??? இவ்வளவு நேரம் எங்க போய் இருந்தீங்க??? ஜனனி எவ்வளவு நேரமாக உங்களை தேடுறா தெரியுமா??? பாவம் குழந்தை….உங்களை காணோம்னதும் எவ்வளவு கவலை படுறா தெரியுமா????……” என்ற வெண்ணிலா அப்போது தான் சூர்யாவின் காலைக் கட்டிக்கொண்டு நின்று தன்னை பார்த்து சிரித்த வண்ணம் நின்ற ஜனனியை பார்த்தாள்.

“அப்பாவை தேடுனியா செல்லம்???” என்றவாறு ஜனனியை தூக்கிய வண்ணம் சூர்யா கேட்கவும் அவனை பார்த்து வேகமாக ஆமாம் என்பது போல தலை அசைத்த ஜனனி வெண்ணிலாவைப் பார்த்து சிரித்துக்கொண்டே இல்லை என்பது போல தலை அசைத்தாள்.

“கூட்டுக் களவாணிங்களா!!! காலையிலேயே உங்க வேலையை ஆரம்பிச்சுட்டீங்களா……உங்களை….” என்றவாறு வெண்ணிலா சூர்யாவின் அருகில் வரவும்

“ஐசு சூடாகிச்சுடுவோய்…..விடு ஜூட்…….” என்று கூறி கொண்டே ஜனனியை தூக்கி கொண்டு சூர்யா ஓடி செல்ல வெண்ணிலா அவர்களை துரத்திக் கொண்டு ஓடினாள்.

ஜனனியோ குதூகலத்துடன் சிரித்து கொண்டு அந்த விளையாட்டை ரசித்து கொண்டு இருக்க மகாலட்சுமி மற்றும் பெருமாள் இவர்களது சத்தம் வந்த பக்கமாக பார்த்து கொண்டு நின்றனர்.

வேகமாக படியிறங்கி வந்த சூர்யா

மகாலட்சுமியின் பின்னால் வந்து நின்று கொள்ள மூச்சிறைக்க அவர்களின் முன்னால் வந்து நின்ற வெண்ணிலா

“பாருங்க அத்தை இவங்க இரண்டு பேரையும்….காலையிலேயே என்னை டென்ஷன் பண்ணிட்டாங்க……” என்று குற்றம் சாட்டும் குரலில் கூறவும் 

சூர்யாவின் காதை பிடித்து தன் முன்னால் கொண்டு வந்த மகாலட்சுமி

“ஏன்டா என் மருமகளை காலையிலேயே டென்ஷன் படுத்துற????” என்று கோபமாக கேட்பது போல கேட்க ஜனனியும், சூர்யாவும் மகாலட்சுமியை பார்த்து தங்கள் வாயை கைகளால் மூடிக்கொண்டு சிரித்துக் கொண்டு நின்றனர்.

சூர்யாவையும், ஜனனியையும் பார்த்து மகாலட்சுமியின் முகத்திலும் புன்னகை வந்து ஒட்டிக் கொள்ள வெண்ணிலாவோ இடுப்பில் கை வைத்து அவர்களை முறைத்த வண்ணம் நின்றாள்.

“ஆளாளுக்கு என் நிலாவை எதுக்கு கோபப்படுத்துறீங்க??? நீ வாம்மா நிலா….நான் இருக்கேன் உனக்கு சப்போர்ட் பண்ண…..” என்று பெருமாள் கூறவும் 

புன்னகையோடு பெருமாளின் புறமாக சென்று நின்ற வெண்ணிலா

“இவங்க எப்போவும் இப்படி தான் மாமா…..எனக்கு சப்போர்ட்க்கு என் மாமா இருக்காரு பார்த்துக்கோங்க…..” என்று கூற சூர்யா, ஜனனி மற்றும் மகாலட்சுமி ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு நின்றனர்.

“யாருமே இல்லாத கடையில் யாருக்கு தான் டீ ஆத்தப் போறாங்களோ!!!!” என்று மகாலட்சுமியிடம் கூறுவது போல சூர்யா வெண்ணிலாவைப் பார்த்து கொண்டே கூற 

அவனைப் பார்த்து பழிப்பு காட்டிய வெண்ணிலா

“இங்க ஒரே கொசுத் தொல்லை இல்லையா மாமா??? நீங்க வாங்க நான் உங்களுக்கு ஸ்பெஷலாக கேரட் அல்வா பண்ணி தர்றேன்……” என்று கூற

“அல்வாவா?????” என்று சப்புக் கொட்டினான் சூர்யா.

“ஹை…..அல்வா……” என்றவாறு சூர்யாவிடம் இருந்து பாய்ந்து இறங்கிய ஜனனி

“ம்மா…..மீ குட் கேர்ள்…..ப்பா தான் பேட்…..அல்வா ப்பாக்கு வேண்டாம்…..” என்று கூறி கொண்டே தன் அருகில் வந்த ஜனனியை தூக்கி கொண்ட வெண்ணிலா

“அய்யோ பாவம்…..சூர்யா உங்க கட்சி ரொம்ப அடிவாங்குதே…..” என்று கூறி நக்கலாக சிரித்தாள்.

“அது தானே நிலா பாரேன்…. சூர்யா தனியா நிற்குறானே….பார்க்கவே பாவமாக இருக்கு…..” என்று மகாலட்சுமியின் குரல் கேட்கவும் சுற்றிலும் தேடி பார்த்த சூர்யா வெண்ணிலாவின் அருகில் நின்று தன்னை பார்த்து கை அசைத்த மகாலட்சுமியை பார்த்து அதிர்ச்சியாகி நின்றான்.

“அம்மா ஒரு அல்வாக்காக உன் பையனை அம்போனு விட்டுட்டியேமா….ஹய்யோ…..என்ன கொடுமை ஸார் இது????” என்று சூர்யா போலியாக வருத்தப்படுவது போல கூறவும் அவனது பேச்சை கண்டு கொள்ளாதது போல பெருமாள் மற்றும் மகாலட்சுமி ஜனனியை வாங்கி கொண்டு சென்று விட வெண்ணிலா சூர்யாவின் அருகில் வந்து நின்றாள்.

“அய்யோ பாவம்…..என்னை டென்ஷன் பண்ணுறேனு சொல்லி கடைசியாக நீ இப்படி பல்பு வாங்கிட்டிங்களே மிஸ்டர். சூர்யா…..” என்று வெண்ணிலா கூறவும்

விஷமமாக சிரித்துக் கொண்டே அவளை ஒரே எட்டில் நெருங்கி தன் கை வளைவுக்குள் நிறுத்திய சூர்யா அவளை பார்த்து கண்ணடித்து சிரித்தான்.

சூர்யாவின் சிரிப்பை பார்த்து சொக்கிப் போன வெண்ணிலா உடனே தன்னை சுதாரித்துக் கொண்டு

“தள்ளி நில்லுங்க சூர்யா….நீங்க பக்கத்தில் வந்தா எதாவது ஏடாகூடமாக பண்ணிடுவீங்க….” என்று கூற

“வாய் தான் தள்ளி போக சொல்லுதே தவிர மனசு அப்படி எதுவும் நினைக்கலயே…..” என்று அவள் கண்களை பார்த்து கொண்டே சூர்யா கூறவும் விழி இமைக்காமல் அவனையே பார்த்து கொண்டு நின்றாள் வெண்ணிலா.

அவள் நெற்றியில் தன் இதழ்களை பதித்த சூர்யா அவள் முகத்தில் தன் விரல்களால் கோலம் போட்டான். 

வெண்ணிலா கண்கள் மூடி அவன் தொடுகையை ரசித்து கொண்டு நிற்க சூர்யாவின் பார்வை வெண்ணிலாவின் இதழ்களில் நிலை குத்தி நின்றது.

மெல்ல வெண்ணிலாவின் இதழ்களை சூர்யா நெருங்கி செல்கையில் 

“ம்மா அல்வா யம்மி…..” என்றவாறு ஓடி வந்த ஜனனியின் குரலில் சூர்யாவும், வெண்ணிலாவும் தங்களை மீட்டு கொண்டனர்.

சூர்யாவை நேர் கொண்டு பார்க்க முடியாமல் வெட்கத்தோடு வெண்ணிலா ஜனனியை தூக்கி கொண்டு அவளோடு கதை பேசி கொண்டு சென்று விட சூர்யா இதழில் தவழ்ந்த குறு நகையோடு ஜனனியோடு சென்ற வெண்ணிலாவை பார்த்து கொண்டு நின்றான்.

அதன் பிறகு சிரிப்பும், சந்தோஷமுமாக காலை உணவை முடித்து விட்டு பெருமாள், மகாலட்சுமியுடன் சூர்யா, வெண்ணிலா மற்றும் ஜனனி அக்ஸயாவின் வீட்டை நோக்கி புறப்பட்டனர்.

ராபர்ட் மற்றும் அக்ஸயாவின் நிச்சயதார்த்தம் நிறைவடைந்த ஒரு சில மாதங்களில் அவர்களது திருமணம் அதி விஷேசமாக நடந்து முடிந்தது. 

மனமொத்த தம்பதிகளாக வாழ்ந்து வரும் ராபர்ட் மற்றும் அக்ஸயாவிற்கு இரண்டு வயதில் ஒரு மகன் கிஷோர் அதாவது ஜனனியினால் செல்லமாக அழைக்கப்படும் கிஷ் பாப்பா.

வாரத்தில் ஒரு தடவை ஒட்டுமொத்த குடும்பத்தினரும் யாராவது ஒருவரது வீட்டில் ஒன்று கூடி விடுவர்.

அன்றைய நாள் முழுவதும் சிரிப்புக்கும், கேலிக்கும் பஞ்சமே இருக்காது. 

சூர்யாவின் கார் ராபர்ட்டின் வீட்டினுள் நுழையும் அதே நேரம் வெற்றியின் காரும் வந்து சேர்ந்தது. 

வெற்றியின் காரில் இருந்து வைபவ் இறங்குவதை காணவும் அவனருகில் ஓடி சென்ற ஜனனி

“வைபண்ணா……” என்று அவன் கால்களை கட்டி கொள்ள

“ஹேய் ஜானு பாப்பா…..” என்று ஜனனியை தூக்கி கொண்டு வைபவ் வீட்டினுள் சென்றான்.

கார் சத்தம் கேட்டு வெளியே வந்த ராபர்ட் மற்றும் அக்ஸயா எல்லோரையும் இன்முகத்துடன் வீட்டிற்குள் அழைத்து கொண்டு சென்றனர்.

பெரியவர்கள் அனைவரும் ஒரு புறமாக அமர்ந்து கொண்டு பேசிக் கொண்டு இருக்க ராபர்ட், சூர்யா மற்றும் வெற்றி மற்றொரு 

புறம் அமர்ந்து பேசிக் கொண்டு இருந்தனர்.

பெண்கள் மூவரும் சமையலறைக்குள் நுழைந்து தங்கள் வேலைகளை ஆரம்பித்து விட எப்போதும் போல அவர்களது கேலி பேச்சுக்கு அங்கு குறை இருக்கவில்லை.

அக்ஸயாவின் வீடு ஒரு ஏரிக் கரையோரமாக இருக்கும் ஒரு அழகிய பண்ணை வீடு.

ராபர்ட்டின் தாத்தா பார்த்து பார்த்து கட்டிய அந்த வீடு அவர்களது பரம்பரை சொத்து.

சமைத்த உணவுகள் எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு அக்ஸயாவின் வீட்டுக்கு பின் புறமாக இருந்த ஏரியின் புறமாக அனைவரும் சென்று அமர்ந்து கொள்ள வெண்ணிலா மற்றும் அபிநயா அனைவருக்கும் உணவை பரிமாறத் தொடங்கினர்.

சில்லென்ற இயற்கை காற்றும், ஏரியில் நீர் பாயும் ஓசையுடன் பறவைகளின் கீச்சொலியும் ஒன்று சேர அந்த சூழலே ரம்மியமாக காட்சி அளித்தது.

“ம்மா கிஷ் பாப்பாவுக்கு நான் ஊட்டி விடவா???” என்று ஜனனி கையில் தட்டு ஒன்றை வைத்து கொண்டு வெண்ணிலாவைப் பார்த்து கண்களை சுருக்கி கேட்கவும் 

அவளை வாஞ்சையோடு அணைத்துக் கொண்ட வெண்ணிலா

“கிஷ் பாப்பாவுக்கு இது வேணாம்…..நாம கிஷ் பாப்பாவுக்கு ஜனனி பாப்பாவுக்கு புடிச்ச சாக்லேட் வாங்கி கொடுக்கலாம்….இப்போ ஜனனி பாப்பா இதை சாப்பிடுவாங்களாம்……” என்றவாறே தட்டில் இருந்த உணவை ஜனனிக்கு ஊட்டி விட ஆண்டாள் கண்கள் கலங்க வெண்ணிலாவைப் பார்த்து கொண்டு இருந்தார்.

ஆண்டாளின் முகத்தை பார்த்து அவரது மன எண்ணத்தை புரிந்து கொண்ட வெற்றி

“அம்மா…நோ ஷெண்டிமெண்ட்…..நிலா பார்த்துடப் போறா…..” என்று அவருக்கு மட்டும் கேட்குமாறு கூறவும் அவசரமாக தன் கண்களை துடைத்து கொண்ட ஆண்டாள் புன்னகையோடு வெற்றியை பார்த்தார்.

“எனக்கு என்ன சொல்லுறதுனே தெரியல வெற்றி…..நிலாவை நினைச்சா எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கு….இவ்வளவு நடந்ததுக்கு அப்புறமும் அவ எந்த மன சஞ்சலமும் இல்லாமல் இருக்குறா….அதே மாதிரி நிலாவுக்கு எப்போவும் உறுதுணையாக இருக்குற உன்னை பார்க்கும் போதும் பெருமையாக இருக்கு…..உங்களை மாதிரி குழந்தைங்க யாருக்கு கிடைப்பாங்க…..அந்த வகையில் நான் ரொம்ப அதிர்ஷ்டசாலி……” என்று ஆண்டாள் கூறவும் 

அவர் தோளில் ஆதரவாக கை வைத்த வெண்ணிலா

“இன்னும் நீங்க பார்க்க வேண்டியது எவ்வளவோ இருக்கு மை டியர் ஆண்டாள்….இப்போவே பெருமைப் பட்டா எப்படி???” என்று கேட்க

“அம்மா இவ சொல்ற ஸ்லாங்கே சரி இல்ல….ஏதோ பெரிய ஆப்பு வைக்க போறா போல இருக்கு பார்த்துக்கோ….” என்று வெற்றி வேண்டுமென்றே அவளைப் பார்த்து சிரித்துக்கொண்டே கூறினான்.

“வெற்றி…..” என்று கோபத்தோடு வெண்ணிலா வெற்றியை முறைத்து பார்க்க 

வெண்ணிலாவின் அருகில் வந்த சூர்யா

“எதுக்கு டா என் ஐசுவ கோபத்தில் உருக வைக்குற???” என்று வெற்றியை பார்த்து கேட்கவும் 

சூர்யாவின் தலையில் தட்டிய வெண்ணிலா

“எல்லாரும் இருக்கும் போது ஐசுனு சொல்லாதீங்கனு சொல்லி இருக்கேன்லே….” என்று கூற சூர்யா சமாளிப்பாக சிரித்துக் கொண்டே வெண்ணிலாவைப் பார்த்து கண் சிமிட்டினான்.

“ஐசு எனக்கும் வேணும்…..” என்றவாறு ஜனனி துள்ளிக் குதிக்க 

“ஹைய்யா ஐசு….” என்று வைபவும் அவர்களின் அருகில் ஓடி வந்து நின்றான்.

“எங்க ஐசு??? எங்க ஐசு???” என்று ராபர்ட், அக்ஸயா மற்றும் அபிநயாவும் அவர்களின் வரவும் அவர்களை பார்த்து வாய் விட்டு சிரித்த சூர்யா

“அந்த நாள்… ஞாபகம்…..நெஞ்சிலே….. வந்ததே….” என்று பாட வெண்ணிலா மற்றும் வெற்றியும் பழைய நினைவுகளில் ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகத்து கொண்டனர்.

அதன் பிறகு குழந்தைகள் எல்லோரையும் சமாளித்து அனுப்பி விட்டு வருவதற்குள் சூர்யாவிற்கு போதும் போதுமென்று ஆகி விட்டது.

எல்லா வேலைகளையும் முடித்து விட்டு வெளியே வந்த வெண்ணிலா சூர்யா தனியாக ஏரியின் புறமாக நிற்பதைப் பார்த்து அவனருகில் வந்து அவன் தோளில் கை வைக்க சூர்யா சிறு தயக்கத்துடன் திரும்பி பார்த்தான்.

சூர்யாவின் முகம் வாடி இருந்ததைப் பார்த்து பதட்டம் கொண்ட வெண்ணிலா

“தேவ் என்ன ஆச்சு???” என்று பதட்டத்துடன் வினவினாள்.

“நீ சந்தோஷமாக இருக்கியா நிலா???” என்று சூர்யா கேட்கவும்

 அவனை ஆச்சரியமாக பார்த்த வெண்ணிலா

“என்ன கேள்வி இது??? என் மனசுக்கு பிடிச்ச என் தேவ் என் கூட இருக்கும் போது எனக்கு என்ன கவலை??? அதுக்கும் மேல என்னோட செல்ல பொண்ணு ஜனனி பாப்பா, வைபவ், கிஷோர்…..எப்போவும் எனக்கு ஒரு பிரச்சினைனா துணையாக இருக்குற வெற்றி, அபி, அப்பா, அம்மா…..என்னை அவங்க பொண்ணாகவே பார்க்குற அத்தை, மாமா…..ஆரோக்யா மில்க் ஆட்ல சொல்ற மாதிரி இதுக்கு மேல வேற என்ன வேணும்?????” என்று சிரித்துக்கொண்டே கூற சூர்யா அவளை தோளோடு அணைத்துக் கொண்டான்.

“என்ன ஆச்சு பாஸ்???” என்று வெண்ணிலா சூர்யாவின் தலை முடியை கலைத்து விட்டவாறு கேட்கவும் அவளிடம் இருந்து விலகி நின்ற சூர்யா வெண்ணிலாவின் கை பிடித்து அமரச் செய்து அவளருகில் அமர்ந்து கொண்டான்.

“என்ன விஷயம்??? புலி ரொம்ப தான் பம்முது…..” என்று வெண்ணிலா கேட்கவும்

 அவள் 

கைகளை தன் கைகளுக்குள் எடுத்து வைத்து கொண்ட சூர்யா

“உனக்கு ஜனனியை பார்க்கும் போது எதுவும் தோணலயா????” என்று தயக்கத்துடன் அவள் முகம் பாராமல் தலை குனிந்த படி கேட்டான்.

“நிறைய தோணுமே….நம்ம பொண்ண எந்த விதத்திலும் கஷ்டப்பட விடக் கூடாதுனு தோணும்…..அவளுக்கு எதையும் தைரியமாக எதிர்த்து நிற்க சொல்லிக் கொடுக்கணும்னு தோணும்…..எந்த ஒரு இக்கட்டான சூழ்நிலையிலும் மனம் தளர்ந்து போய் விடக்கூடாதுனு சொல்லிக் கொடுக்க தோணும்…..அப்புறம்….” 

“போதும் போதும்…..தெரியாம கேட்டுட்டேன் தாயே!!! என்னை விட்டுடு…..” என்று சூர்யா கூறவும் 

அவனை பார்த்து வாய் விட்டு சிரித்த வெண்ணிலா

“இனிமேல் இப்படி சின்ன புள்ள தனமான கேள்வியாக கேட்காம வளரப் பாருங்க…..” என்று கூற 

தன் வாய் மேல் கை வைத்து தலை குனிந்து இருந்த சூர்யா

“சரிங்க டீச்சர் மேடம்…..” என்று கூறினான்.

“ம்மா….ப்பா….ம்மா….” என்றவாறு அவர்களின் பின்னால் ஓடி வந்து நின்ற ஜனனியை தூக்கி தங்கள் மடியில் வைத்துக் கொண்ட வெண்ணிலா மற்றும் சூர்யா ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகத்து கொண்டனர்.

ஜனனி சூர்யாவின் கழுத்தை கட்டி கொண்டு அவனோடு ஒன்றிக் கொள்ள வெண்ணிலா சூர்யாவின் தோளில் சாய்ந்து அமர்ந்தவாறு 

“வானத்தில் இருக்குற அந்த நிலவோட பிரகாசத்துக்கு அந்த சூரியன் காரணம்னா இந்த நிலாவோட பிரகாசத்திற்கு இந்த சூர்யன் தான் காரணம்……” என்று அவன் மார்பில் கை வைத்து கூற

 அவளை தன் தோளோடு அணைத்துக் கொண்ட சூர்யா

“அந்த நிலவு இல்லாம அந்த வானம் எப்படி வெறுமையாக இருக்குமோ அதே மாதிரி இந்த நிலா இல்லாத என் வாழ்க்கையும் பரிபூரணமாகாது…..” என்று கண்களில் காதல் மின்ன கூற வெண்ணிலா மேலும் அவன் தோளோடு சாய்ந்து அமர்ந்து கொண்டாள்.

சூர்யன், நிலவு ஜனனத்தோடு அந்த ஏரிக் கரையோரம் ஒரு அழகிய கவிதை அரங்கேற அந்த அழகிய கவிதையை ரசித்து கொண்டே நாமும் விடை பெறுவோம்……..

error: Content is protected !!