Then mazhai – Episode 1

Then mazhai – Episode 1

 

தேன் மழை அத்தியாயம் ஒன்று

நீண்டு வளர்ந்து கொண்டிருந்தது அந்த ராஜபாட்டை… இருபுறமும் செழித்து வளர்ந்து நின்ற மரங்கள் அந்த காட்டிற்கு அரணாக இருக்க நடுவில் சுமங்கலி பெண்ணின் நடுவகிடு போல நேராக இருக்க … இதமான தென்றல் தவழ்ந்து வந்து அந்த புரவிகளின் மேல் பயணம் செய்து கொண்டிருந்தவர்களை தழுவியது!

“இளவரசே …!” சற்று தயங்கியவாறு அழைத்தவனை புரவியை மென்மையாக செலுத்தியவாறு திரும்பி பார்த்தான் அவன்!

என்ன ஒரு தேஜஸ் அந்த கண்களில்!

நிமிர்ந்து அவன் அமர்ந்திருந்த விதமே தனி கம்பீரத்தை தர, அந்த கருமை நிறத்தவனுக்கு ரசிகர் கூட்டமென்று நிறைய உண்டு!

மார்பை மறைக்கவென ஒரு மேலாடையும் இடுப்பில் ஒரு இறுக்கமாக கட்டியிருந்த கீழாடையும் முறுக்கிய மீசையும், முறுக்கேறிய புஜங்களும், திண்மையான மார்பும், அதிலிருந்த வடுக்களும், கூர்மையான கண்களும் அவனை மிகச்சிறந்த வீரனென கூற,

“சொல் முத்தழகா…” என்றான் ஆதித்த கரிகாலன்.

ஆம்… அருள்மொழி வர்மனுக்கு மூத்தவன்.

வரலாற்றின் சோழத்தின் பக்கங்களிலிருந்து வலுகட்டாயமாக பறிக்கப்பட்ட ஆதித்த கரிகாலன் தான் அவன்.

“இளவரசே! தாங்கள் அழைத்ததின் பெயரில் உங்களுடன் பயணித்துக் கொண்டிருப்பதில்  எனக்கு ஆனந்தமே. ஆனால், நாம் எங்குச் சென்று கொண்டிருக்கிறோம், என்ற அவா என் மனதை குடைந்து கொண்டிருக்கிறது.” என்று கூறினான்  முத்தழகன் சற்று இறங்கிய குரலில். முத்தழகனின் குரல் அவன் தயக்கத்தை வெளிப்படையாக அடிக்கோடிட்டுக் காட்டியது.

“ஹா… ஹா… ஹா… ஹா…” என்று பெருங்குரல் எடுத்துச் சிரித்தான் ஆதித்த கரிகாலன்.  ஆதித்த கரிகாலனின் சிரிப்பொலி அந்த அடர்ந்த கானமெங்கும்    பேரிடியென எதிரொலித்தது .

“முத்தழகா இதைக் கேட்பதில் உனக்கென்ன இத்தனை தயக்கம்?” என்று தன் கூர்மையான கண்களை விரித்து, தன் வெண்புரவியைச் செலுத்தியவாறு  முத்தழகனை கேள்வியாய் நோக்கினான் ஆதித்த கரிகாலன்.

செழுமையாக, கூரிய பார்வையோடு ஆதித்த கரிகாலனின் கட்டளைக்கிணங்க பயணித்துக் கொண்டிருந்த வெண்புரவியும் இவர்கள் உரையாடலை செவிமெடுக்க ஆரம்பித்தது.

கரிகாலனின் கேள்விக்குப் பதில் கூற தயங்கி முத்தழகன் மரியாதையோடு புன்னகைத்தான்.

“நாம் பாண்டிய நாட்டை நோக்கிப் பயணிக்கிறோம் முத்தழகா.” என்று ஆதித்த கரிகாலன் தீவிரமான குரலில் கூற, கரிகாலனின் குரலில் உள்ள தீவிரம் அவர்கள் செல்லும் காரியத்தைத் தெளிவாக கண்முன் விரிக்க, தன் தலை அசைத்துக் கேட்டுக்கொண்டான் முத்தழகன்.

முத்தழகனின் அறிவுக் கூர்மையும், சாமர்த்தியசாலித்தனமும், வீரமும் அறிந்தே ஆதித்த கரிகாலன் அவனை உடன் அழைத்து வந்திருந்தான்.

“தங்கள் திட்டம் என்னவோ?” என்று முத்தழகன் காலம் தாமதிக்காமல் நேரடியாகக் காரியத்தை நோக்கி தன் வினாவை எழுப்பினான்.

“நாம் பாண்டிய நாட்டிற்குள் செல்ல வேண்டும். நம் ஒற்றர்கள் அங்கிருந்தாலும், நாம் அவர்களுக்கு எந்த இடையூறும் விளைவிக்காமல் பாண்டிய நாட்டின் காவலை  மீறி உள்ளே செல்ல வேண்டும்.” என்று ஆதித்த கரிகாலன் முத்தழகனுக்கு மட்டும் கேட்கும் விதமாக ரகசிய குரலில் கூற, ஆமோதிப்பது போல் தலை அசைத்தான் முத்தழகன்.

அவர்கள்  இருவரும் பேசிக்கொண்டே நிதானமான வேகத்தில் தங்கள் புரவிகளைச் செலுத்தினர். ஆதித்த கரிகாலன் மார்பை மறைக்கும் மேலாடையோடும், இடுப்பில் இருக்கும் கீழாடையும் அவனை ஏழ்மையற்றவன் என்று காட்டும் விதமாகவே அமைந்தது. ஆம்! ஆதித்த கரிகாலன் தான் இளவரசன் என்பதை மறைப்பது போல் மாறுவேடமே தரித்திருந்தான்.

அந்த மாறுவேடத்தில், கரிகாலனின் தேகத்தில் அச்சிடப்பட்டிருந்த சோழ வம்ச முத்திரையும் புத்திசாலித்தனமாக மறைக்கப் பட்டிருந்தது.  கரிகாலனின் உடலில் திமிறிக் கொண்டு நின்ற வீரத் தழும்புகள் அவன் மாவீரன் என்றும் அவன் முகத்தில் உள்ள தேஜஸ் அவனை ராஜ வம்சம் என்று உரைக்கத்தான் செய்தது. அவர்கள் இருவரும் ஏதோ திட்டத்தோடு பாண்டிய நாட்டை நோக்கிப் பயணிப்பதை நம்மால் அறிந்து கொள்ள முடிகிறது

அவர்கள் பாண்டிய நாட்டை நெருங்கினர். நாட்டின் எல்லைக்குச் சற்று தொலைவிலே அவர்கள் புரவியை நிறுத்திக் கொண்டனர். பாண்டிய நாட்டின் கொடி கம்பீரமாக உயர்ந்து எங்களுக்கு நிகர் வேறெவருமில்லை என்று கூறும் வண்ணம் பறந்து கொண்டிருக்க, அதை தன் கூர்மையான கண்களால் கவனித்தான் கரிகாலன்.

“முத்தழகா… நாட்டின் பாதுகாப்பைப் பற்றி தாங்கள் என்ன எண்ணுகிறீர்?” என்று வினாவைச் சொல்லில் செலுத்தி, நாட்டின் கோட்டை மதிலைப் பார்வையிட்டேன் கரிகாலன்.

“இளவரசே! கூட்டம் கூட்டமாகக் காட்சி அளிக்கும் புள்ளிகள் அங்கு நின்று கொண்டிருக்கும் பாதுகாப்புப் படையைக் காட்டுகிறது இளவரசே. உயர்ந்து காட்சி அளிக்கும் மதில் சுவர்  அதற்குப் பலத்த பாதுகாப்பும் இருக்கும் என்ற எண்ணத்தை அளிக்கிறது.” என்று முத்தழகன் உறுதியாகக் கூற, அவனை ஆமோதிப்பது போல் தலை அசைத்தான் கரிகாலன்.

அங்கு சலசல வென்று நீர் சத்தம் கேட்டுக் கொண்டிருக்க, “முத்தழகா, கையிலிருக்கும் பொட்டலத்தில் உள்ள பொறியை வைத்து, பசியைப் போக்கி.. நாம் அருகிலிருக்கும் ஆற்றில் நீர்  அருந்திக் களைப்பை போக்குவோம்.” என்று கூறி ஆதித்த  கரிகாலன் சளசளவென்ற நீரின் சத்தத்தை நோக்கி நடக்க, முத்தழகனும் கரிகாலனை பின் தொடர்ந்தான்.

அவர்கள் பசியாறி, நீரருந்தி அங்கிருந்த இயற்கையை ரசித்தனர்.

தன் கணவனின் முதல் பார்வையைக் கண்ட புது மனைவியின் முகம் போல் வானம் சிவந்திருக்க, அவளை அருகே அழைக்கும் கணவனின் கண்பார்வையின் ஒளி போல் சூரிய கதிர்கள் அதன் கதிர் வீச்சைச் செலுத்திக் கொண்டிருந்தது. கணவனின் கைகளுக்கு எட்டாமல் ஓடி ஒளிந்து கொள்ளும் மனைவியைப் போல் மேகங்கள் அழகாக நகர்ந்து நகர்ந்து ஒளிந்து கொள்ள, இயற்கை அங்கு ஓர் அழகான காதல் காட்சி  அரங்கேறப் போவதை நமக்குத் தெளிவாகக் காட்டியது.

இவை எதுவும் அறியாமல், அந்த இயற்கை காட்சியை ரசித்துக் கொண்டிருந்தான் கரிகாலன். புள்ளினங்காள் இன்னிசையாய் சப்திக்க, வெள்ளை நிற கொக்குகள் தங்கள் நீளமான அலகால் மீன்களைக் கொத்தித் தின்ன… தென்றல் மெலிதாய் வருட அப்பொழுது கரிகாலன், “முத்தழகா மல்லிகை சரத்தின் மணம் நம்மைத் தீண்டுகிறதல்லவா?” என்று வேகமாகத் தவழ்ந்து வரும் குழந்தையைப் போல் தவழ்ந்து வரும் நீர் வீழ்ச்சியைப் பார்த்தபடி கூறினான் கரிகாலன்.

“இளவரசே! என்னை அப்படி எதுவும் தீண்டவில்லை. உங்கள் வயதையும், மனதையும் தான் மல்லிகை மணம் தீண்டுகிறதோ?” என்று கரிகாலன் கூறும் வார்த்தைகளை ஊர்ஜிதம் செய்ய முடியாமல் சந்தேகமாகக் கேட்டான் முத்தழகன்.

கரிகாலனின் கவனம் நீர்வீழ்ச்சியில் இருக்க, மல்லிகை சரத்துடன் கூடிய மலர்கள் இவர்களை  நோக்கி வரக் கரிகாலன் அந்த பூக்களைக் கூர்மையாகப் பார்த்தான்.

மல்லிகை சரத்தின் கீழ் மேலே மிதக்கும் வெண் மேகம் தரை இறங்கி கார்மேகமாக மாறியதோ என்று வியக்கும் அளவுக்குக் கூந்தல் பறந்துவிரிந்திருக்க, அந்த காரிகை  நீரில் மூழ்கி  இருந்ததால் அந்த கார்மேக கூந்தலின் அளவை கரிகாலனால் அளவிட முடியவில்லை. அந்த காரிகை அவனை நெருங்க நெருங்க முழுமதியாய் அவள் முகம் கரிகாலனின் மனதில் பதிந்தது.

நீரின் வேகத்தில் அடித்து வரப்பட்ட அந்த அழகிய காரிகை  நீரின் வேகத்தில் இவர்களை வேகமாகக் கடந்த செல்ல முற்படுகையில் அரை நொடி கூட தாமதியாமல் கரிகாலன் நீரில் குதித்து  அந்த கார்மேக கூந்தலைக் கொத்தாகப் பிடித்து தன் பக்கம் இழுத்து அவளை கைகளில் ஏந்தினான் கரிகாலன்.

அவன் கட்டுமஸ்தான தேகத்திலும், முறுக்கேறிய புஜங்களிலும் அந்த மெல்லிடையால் அழகாய் பொருந்திப் போனாள்.

கரிகாலன் மனதில் சோழ நாடுமில்லை. பாண்டிய நாடுமில்லை. முத்தழகனின் நினைவுமில்லை. இத்தனை நிமிடங்கள் அவன் ரசித்த இயற்கையும் ருசிக்கவில்லை.

கரிகாலனின் பார்வை, அவன் கைகளில் ஏந்திய காரிகையின் மீது நிலைத்து நின்றது.

மீன் போன்று வளைந்து  மூடியிருந்த அவள் விழிகள், அவள் மயக்கத்தில் இருக்கிறாள் என்று கூறியது. ‘அதைத் திறந்தால், அந்த விழிகளுக்குள் இருக்கும் காந்த பார்வையை ரசிக்கலாமே!’ என்ற எண்ணம் கரிகாலனுக்குத் தோன்றியது.

அவள் விழிகளுக்குக் கீழ் இருக்கும் மூக்கை பார்த்தபடி, “இப்படி தான் இருக்க வேண்டும்.” என்று பிடித்து வைத்திருப்பார்களோ?’ என்ற கேள்வியோடு கரிகாலன் அவள் முகம் பார்க்க, அவள் செவ்விதழ்கள் சில நீர்த் துளிகளோடு சிவந்து குவிந்து கரிகாலனின் மதியைக் கள் உண்ணச் செய்தது.

கரிகாலனின் அஞ்சா உள்ளம் இவள் அழகில் மயங்கிவிடுவோமா என்று அஞ்சியதே நிஜம்.

அவள் சங்கு கழுத்தில் தொங்கிக்கொண்டிருந்த மாலை அவள் செல்வச் செழிப்பைக் காட்டியது.  அந்த முத்து மாலை அவள் மார்பு பகுதியிலிருந்து சற்று விலகி தொங்கி கொண்டிருந்தது. அந்த காரிகையை அதற்குக் கீழ் நோக்க ஆதித்த கரிகாலன் ஒழுக்க நெறி தடை கூற, அவள் கட்டியிருந்த மார்பு கச்சையும், இடைக் கச்சையும் அந்த நீரின் ஓட்டத்திலும்  சிறிதும் விலகாமல் அவள்  வதனத்தின் அழகை மட்டுமே எடுத்துக்காட்ட ஆதித்த கரிகாலனின் மனதில் அவள் எழிலோடு ஒழுக்க நெறியும்  பதிந்தது.

கரிகாலன் அவள் மென்மையான பட்டு கன்னத்தில் தன் நீளமான விரல்களால் அவளை எழுப்ப முயல, அப்பொழுது வீசிய தென்றல் காற்றும் அவளைத் தீண்ட… அந்த காரிகை சடாரென்று எழுந்து அமர்ந்தாள்.

உயிருக்காகப் போராடி நீரில் வந்தவள் என்ற  சிந்தனை இல்லாமல், அவள் விழிகள் கூர்மையான பார்வையோடு விரிந்தது. ‘அச்சமென்பது இவளுக்குச் சொல் மட்டும் தான் போலும்!’ என்ற யோசனையோடு  ஆதித்த கரிகாலன் அவள் முன் நிற்க, அந்த காரிகையின் காந்த பார்வை,  கண்களில் தேஜஸோடும், கம்பீரமான பார்வையோடும் நின்ற கருமை நிறத்தவனை அளவிட்டுக் கொண்டிருந்தது. மார்பை மறைக்கவென ஒரு மேலாடையும் இடுப்பில் ஒரு இறுக்கமாகக் கட்டியிருந்த கீழாடையும் முறுக்கிய மீசையும், முறுக்கேறிய புஜங்களும், திண்மையான மார்பும், அதிலிருந்த வடுக்களும், பெண்ணுக்கே உண்டான வெட்கத்தைக் கொடுக்க அவள் முகம் தாமரையென்ன சிவந்து கவிழ்ந்தது.

அவள் மறுத்தும், கரிகாலன் முகம் அவள் மனதில் பதிய, ‘ஒரு பார்வையிலா?’ என்று சந்தகத்தில் அவள் விழிகளை  இறுக மூடினாள். அவள் விழிகள் மூட, கரிகாலன் மனம் கனத்தது. விழிகள் மூடினாலும், அவள் மனத்திரையில் கரிகாலனின் முகம் தெளிவாய் தெரியச் சிறிது அச்சப்பட்டு, கரிகாலனை அச்சத்தோடும், விலகலோடும் பார்க்க முயன்று தோற்று, ஓரக் கண்களால் கரிகாலனை காதலோடு பார்த்தாள் அந்த காரிகை.

அவள் செவ்விதழ்கள் உதிக்கப் போகும் சொல் முத்துக்களுக்காகக் காத்திருந்தான் ஆதித்த கரிகாலன்.

தேன் மழை பொழியும்…

 

error: Content is protected !!