tmn26

tmn26

அத்தியாயம் 26
இயற்கை உந்துதலால் விழிப்பு வரவே தூக்கம் கலைந்து எழுந்த அஞ்சுகம், தலைவலி என்று காரணம் கூறி இரவு உணவைக் கூடச் சாப்பிடாமலே படடுக்கச் சென்ற கயலின் அறை கதவு திறந்திருப்பதைப் பார்த்தார்.கதவுகளைத் தள்ளி உள்ளே எட்டிப் பார்த்தபோது அங்குக் கயல் கையொருபுறமும் கால் ஒருபுறமுமாகப் படுத்திருந்தாள்.வாயில் நுரை தள்ளிக் கொண்டிருந்தது.அவளருகே தென்னை மரங்களுக்குத் தெளிக்கப்படும் பூச்சி மருந்து புட்டி இருந்தது.
அதிர்ந்துபோன அஞ்சுகம் பெருங் குரலெடுத்து அலறினார்.அவர் சத்தம் கேட்டுத் தூங்கிக் கொண்டிருந்த அனைவரும் பதறியடித்து ஓடி வந்தனர். உடனடியாகக் கயல் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டாள்.கயலின் குடல் கழுவப்பட்டுப் பூச்சி மருந்து வெளியே எடுக்கப்பட்டிருந்தாலும் அவள் மறுநாள் மதியம் வரையிலும் கூடக் கண்களைத் திறக்கவே இல்லை.
அழுது அழுது சோர்ந்து போய் விட்டார் அஞ்சுகம்.மாலையில் பரிசோதிக்க வந்த மருத்துவரிடம் வெற்றிவேல் கயலின் உடல்நிலை பற்றி விசாரித்தபோது
“பாய்சன் எல்லாம் எனிமாக் குடுத்து ரிமூவ் பண்ணியாச்சு வெற்றி…ஆனா கயலுக்கு அதத் தாண்டுன ஏதோ ஒரு அதிர்ச்சி அது மனசயும் முளையையும் தாக்கியிருக்கு… பேஷன்டும் ட்ரீட்மெண்டுக்குக் கோவாப்ரெட் பண்ணினாத்தான் மருந்தும் வேலை பார்க்கும்…இப்படியே இருந்துச்சுன்னா கயல் கோமாவுக்குப் போறதுக்குக் கூட வாய்ப்பிருக்கு…கயலுக்கிட்ட போய் அதுக்கு நம்பிக்கையூட்டுற மாதிரி பேசுங்க…தைரியம் சொல்லுங்க…அதுக்கு மேல கடவுள் இருக்கான்”
என்று கூறிச் சென்றுவிட்டார் அவர்களது குடும்ப மருத்துவர்.
“ ஐயா…பெரிய கருப்பா…என் பிள்ளையை இந்தக் கோலத்துல பார்க்கவா நான் வருசா வருசம் உங்கோவிலுல கெடா வெட்டி படையல் போட்டேன்.இந்த வருஷம் படையல் போடலண்டுதேன் என் பிள்ளையைக் காவு வாங்கப் பாக்குறியா… உனக்கு ரத்தக் காவு வேணும்டா என் உசுர எடுத்துக்கோ… எம்புள்ள உசுர காப்பாத்திக் குடுத்துரு சாமி…”
அழுது புலம்பிய அஞ்சுகத்தை வெளியே அழைத்து வந்தனர் அனைவரும்.அவர் சிறிது சிறிதாகத் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு அமைதியான போது வேறு புறத்திலிருந்து அழுகை பலமாக வெடித்தது…
“ஐயோ பாப்பு…பாப்பு…நானே உனக்கு எமனாயிட்டேனேடா…இப்பிடி பண்ணுவன்னு தெரிஞ்சிருந்தா எத்தன எதிர்ப்பு வந்தாலும் மீறிக்கிட்டு உன் கழுத்துல தாலியக் கட்டி இருப்பேனே…தப்பு பண்ணிட்டேன்டா…பாப்பு…நான் பாவி…எந்தங்கத்தை இப்பபிடித் தவிக்க விட்டுட்டேனே…ஐயோ…புழு பூச்சிக்குக் கூடத் தீம நெனக்காதவள பூச்சிமருந்த கையில் எடுக்குற அளவுக்குக் கொண்டு வந்துட்டேனேடா… நீ நல்லா இருக்கணும்னு தான நினைச்சேன்…இப்படி நார் நாரா துவண்டுபோய்க் கிடக்கியே…”என்றவன் தன் கண்களைத் துடைத்துக்கொண்டு,
பாப்பு…பாப்பு… எந்திரிச்சு வாடா…நான்… நான் இருக்கேன் உனக்கு…சத்தியமா நான் உன்னைய கல்யாணம் பண்ணிக்குவேன்…வேற ஒரு மாப்பிள்ளயக் கல்யாணம் பண்ணிக்கச் சொல்லி உன்னய கட்டாயப் படுத்த மாட்டேன்… உன் வீட்டு ஆளுங்க கையில கால்ல விழுந்தாவது அவங்களைச் சம்மதிக்க வைக்கிறேன்…கதிர் மாமா சொன்னா கேப்பயில்ல… வாடா…பாப்பு… எந்திரிச்சு வா பாப்பு… இனிமே உன் மேல எப்பவுமே நாம கோபப்பட மாட்டேன்…கண்ணைத் திற பாப்பு… கண்ணைத் திறந்து என்னைப் பாரு…எனக்கு உன்னை விட்டா இந்த உலகத்தில் யாருமே இல்லடா…மறுபடியும் என்னை அனாதையாக்கிடாதடா…”என்றான்.
இத்தனை சொல்லியும் கண் விழிக்காமல் கிடந்தவளைக் கண்டு,”பாப்பு…இப்ப மட்டும் நீ கண்ண முழிக்கல…நானும் நீ குடிச்ச அதே பூச்சி மருந்த குடிச்சுட்டு செத்துப் போயிருவேன் ஆமா…”என்று அவள் கைகளை இறுக பற்றிக் கொண்டு கதறினான்.
கதிர் கதறி அழத் தொடங்கியதுமே உள்ள செல்ல எத்தனித்த குலசேகரனை தடுத்தாள் மதுமதி.
“மாமா…இப்ப கயலுக்கு ட்ரீட்மெண்ட் கதிர்ண்ணாக்கிட்ட தான் இருக்கு மாமா…கொஞ்சம் பொறுமையா இருங்க மாமா ப்ளீஸ்”என்றவளைப் புரியாமல் பார்த்தவருக்கு இப்போது எல்லாம் புரிந்து போனது .
கதிரின் கதறலுக்குப் பலன் இருந்தது…கயலின் கால்விரல்களில் லேசான அசைவு தெரிந்தது…அவனது கரங்களுக்குள் அடைக்கலமாகி இருந்த அவள் கைகள் மெல்லமாய் நடுங்கின.இதை உணர்ந்த கதிர் அவள் முகத்தைப் பார்த்தபோது மூடியிருந்த அவள் கண்களுக்குள் கண்மணிகள் உருண்டு நீர் வழிந்தது…மிகவும் சிரமப்பட்டுக் கண்களைத் திறந்து கதிரை ஒரு வெறுமையான பார்வை பார்த்துவிட்டு மறுநொடியே மீண்டும் ஆழ்ந்த மயக்கத்திற்குச் சென்றாள் கயல்…இதைக் கண்ட கதிர் “பாப்பு…பாப்பு” என்று அவளை உலுக்கினான்…
அசைவின்றிப் படுத்துக்கிடந்தவளைப் பார்த்தபடியே “டாக்டர்…”
என்று அந்த மருத்துவமனையே அதிரும் அளவுக்குக் கத்தியவன்…மருத்துவரின் அறையை நோக்கி ஒரு பைத்தியக்காரனைப் போல வெறிக் கொண்டு ஓடினான்.
படிக்கட்டுகளில் தடுமாறி கீழே விழுந்து உருண்டு புரண்டு தலையில் அடிபட்டு ரத்தம் வழிவதைக் கூடப் பொருட்படுத்தாமல் மருத்துவரிடம் சென்று மூச்சிரைக்க,
“பாப்பு…பாப்பு… கண்ணு முழுச்சா… இப்ப திரும்பி…மயக்கம் உடனே வாங்க” என்று நாக்குழற தொடர்ச்சியில்லாமல் பேசினான் கதிர். அவன் நிலையை உணர்ந்து கொண்ட மருத்துவர்,”ஓகே…ஓகே கதிர்… ரிலாக்ஸ்… நான் வந்து பார்க்கிறேன்” என்று எழுந்து நடந்த மருத்துவரின் பின்னே ஓடினான்… கயலைப் பரிசோதித்த மருத்துவர்,
“இனி பயப்பட ஒன்றும் இல்லை…கயல் அபாயக் கட்டத்தைத் தாண்டிருச்சு…” என்றார்
“டாக்டர் அப்புறம் ஏன் பாப்பு திரும்ப மயக்கமகிட்டா…” பதறிய கதிரிடம்
“இது சாதாரண மயக்கம் தான்பா கதிர் இன்னும் கொஞ்ச நேரத்துல உன் பாப்பு முழிச்சிடுவா…” என்று கூறி அவன் தோளைத் தட்டி விட்டுச் சென்றார்… அப்படியே சரிந்து கயலின் கால்களைப் பிடித்துக் கொண்டு தரையில் அமர்ந்து கயலையே பார்த்திருந்தவனின் தோள்கள் அழுத்தப்பட்டன…
நிமிர்ந்து பார்க்காமலே தன்னை அழுத்திய அந்தக் கரங்கள் வெற்றிவேலுக்குச் சொந்தமானவை என்று உணர்ந்து கொண்டவனுக்கு அப்போதுதான் நாம் உணர்ச்சிவசப்பட்டு விட்டோம் என்று புரிந்தது.அச்சத்துடனே வெற்றுவேலை ஏறிட்டுப் பார்த்த கதிர் அவனிடம்,”வெற்றி…அ…அது வந்து” என்று ஆரம்பித்த போது அவனை இடை மறித்த வெற்றிவேல் இறுக்கமான முகத்துடன் “எதுவா இருந்தாலும் வீட்டில போய்ப் பேசிக்கலாம்…” என்றான்.
கயல் சீரான உடல் நிலைக்கு வந்த பிறகு மறுநாள் மாலை மருத்துவமனையில் இருந்து விடுவிக்கப்பட்டாள். மருத்துவமனையில் இருந்து கிளம்பும்போது அழகம்மையின் அண்ணன் தருமரை சந்தித்தார்கள்.என்னவென்று விசாரித்தபோது தன் மகன் சந்திரனை யாரோ கடுமையாகத் தாக்கிவிட்டதாகவும் அவன் குற்றுயிரும் கொலையுயிருமாய்க் கிடப்பதாகவும் கூறி வருத்தப்பட்டார் தருமர்.
“பொறுக்கிப்பய…எங்க போயி இவன் வேலயக் காட்டுனானோ…”என்று அவனைச் சாடினார் அஞ்சுகம்.சந்திரனைச் சென்று பார்த்துவிட்டு வருவதாகக் குலசேகரனும் வெற்றிவேலும் கூறிடவே பெண்களும் கதிரும் வீடு வந்து சேர்ந்தனர்.
கதிர் தன் கண்ணின் மணி போலக் கயலைக் கவனித்துக் கொண்டான்.
அவளுக்குச் சகல விதமான பணிவிடைகளையும் தானே செய்தான். ஆனால் கயலோ அவனை ஒரு வெற்றுப் பார்வையுடன் ஒதுக்கியே வைத்திருந்தாள்.அவனும் அவளிடம் ஆயிரம் முறை மன்னிப்புக் கேட்டுவிட்டான்.ஆனால் அவள் தான் மனமிரங்கவே இல்லை.அன்று சூனியத்தை வெறித்த படி அமர்ந்திருந்த கயலிடம் சென்ற குலசேகரன்,
” தாயீ…கயலு…என்ன காரியம் பண்ணணிப்புட்டம்மா… நீயிந்த வீட்டு வம்ச விளக்கு தாயீ…உனக்குப் பிடிக்காத ஒன்ன உன் அப்பன் செஞ்சுருவேனா கண்ணு…கதிரு மேல தான் உன் மனசு இருக்குண்டு சொல்லியிருந்தா இப்பிடி நடக்கக் கூடாததெல்லாம் நடக்க விட்டிருப்பேனா…கதிரு நல்ல பைய தான்…விவரம் தெரிஞ்ச நாளுல ஒண்ணுமண்ணாத் திரிஞ்சவன்…உன் மேல உசுரயே வச்சுருக்கான்… மங்குனிப்பய…அவனாச்சும் சொன்னானா…சரி…ஆனது ஆச்சு…போனது போச்சு…உன் மனசுப்படி வார முகூர்த்தத்திலயே உனக்கும் கதிருக்கும் கலியாணம் முடிவு பண்ணியிருக்கேன்…சந்தோசம்தான…” மகளின் தலை வருடிய படியே கேட்ட குலசேகரனிடம்,
“இல்லப்பா…எனக்கு இதுல விருப்பமில்லை” என்று கதிர் உட்பட அனைவரையும் அதிர வைத்துவிட்டுச் சென்று மீண்டும் ‘எங்கே செல்லும் இந்தப் பாதை’ என்று இளையராஜாவின் இசையைப் பிண்ணனியில் ஓடவிட்டு கடந்த ஒரு வாரமாய் அவள் மேற்கொள்ளும் கடமைகளில் மிகமுக்கியமானதொன்றான சூனியத்தை வெறித்தலைத் தொடர்ந்தாள்…
இதைக் கண்ட மதுமதிக்குக் கோபம் பொத்துக் கொண்டு வந்துவிட்டது…’அண்ணனுக்கும் தங்கச்சிக்கும் இதுவே வேலையா போச்சு… மாஞ்சு மாஞ்சு லவ் பண்ண வேண்டியது… அப்புறம் எனக்குச் சம்மதமில்லை என்று தலையில் இடியை இறக்க வேண்டியது…இன்னைக்கு இதை என்னன்னு கேட்காம விடக்கூடாது’ என்று எண்ணி அவள் கயலிடம் சென்றாள்.
“எதுக்கு அப்படிச் சொன்ன கயல்”
“ எப்படி அண்ணி”
“கதிரண்ணாவ கல்யாணம் பண்ணிக்கச் சம்மதம் இல்லைன்னு”
“ உண்மையைத்தானே சொன்னேன் அண்ணி…”
கயலின் முகத்தை வெடுக்கென்று தன் பக்கம் திருப்பியவள்,”என் கண்ணைப் பாத்து சொல்லு…கதிரண்ணாவ கல்யாணம் பண்ணிக்க உனக்குச் சம்மதம் இல்லைன்னு… எனக்கு எல்லாம் தெரியும் கயல் கதிர்ண்ணாவ விரட்டி விரட்டி காதலிச்சுட்டு…இப்ப மாட்டேன்னு சொன்னா என்ன அர்த்தம்…அவரு நீ ஹாஸ்பிட்டல்ல மயக்கமா கிடந்தப்போ எவ்ளோ துடிச்சாரு தெரியுமா…உனக்கு அவர் மேல கோபம் இருந்தா அவர நாலு அடிகூட அடிச்சுக்கோ…ஆனா இப்பிடிச் செய்யாத…அதுனால வர்ற வலியத் தாங்குற சக்தி அவருக்கு மட்டுமில்ல…உனக்குமே இல்ல…சொல்லு…அண்ணாவ கல்யாணம் செய்ய உனக்கு விருப்பம் தானே”
கயலோ கலங்கிய கண்களோடு,”கதிர் மாமாவக் கல்யாணம் பண்ணிக்க எனக்கு விருமப்பமில்லை அண்ணி” என்று கூறி விட்டு கதறினாள்.கதறிய கயலைத் தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டவள்,”கயல் என்ன சொல்ற… மனசுவிட்டுப் பேசிக்காததால தான் என் வாழ்க்கை இப்படி இருக்கு…நீயாவது நல்லா இருக்கணும்…உன் மனசிலே என்ன இருக்கு…அதை என்கிட்ட சொல்லு…என்னால முடிஞ்சதை நான் செய்கிறேன்…“என்றாள் மதுமதி.
கயல் கண்ணீரோடு அவள் மனதைத் திறந்தாள்.முதல் நாள் கதிரிடம் பேசிய கயலுக்கு மனதெல்லாம் பாரமாக இருந்தது. தன் மனபாரத்தை இறைவனிடமாவது இறக்கி வைக்கலாம் என்று பலவாறு சிந்தித்தபடியே கோவிலுக்கு நடந்து சென்ற கயலை யாரோ பின் தொடர்வது போன்று அவளுக்குத் தோன்றியது.ஆனால் அவள் திரும்பிப் பார்த்த போது யாருமே இல்லை… மீண்டும் நடந்தவளின் மூக்கில் மயக்க மருந்து தோய்க்க்கப்பட்ட துணியை வைத்து அழுத்தினான் அவன்.
கயலுக்கு மயக்கம் தெளிந்தபோது ஊருக்கு ஒதுக்குப்புறமான பாழடைந்த கட்டிடத்தில் உடைந்த நாற்காலி ஒன்றில் தான் கட்டி வைக்கப்பட்டு இருப்பது புரிந்தது.
“ஆரது…என்னைய கட்டி வைச்சுருக்குறது…எங்க வீட்டுக்கு தெரிஞ்சா என்ன ஆகுமுன்னு தெரியுமா… உன் உசுரு உடம்புல இருக்காதுடா… ஆருடா என்னைக் கட்டி வைத்திருக்கிறது…என் முன்னாடி வந்து தொலை…”என்ற கயலின் குரலுக்கு அவள் முன்னே தோன்றினாள் அவன்… அவன் சந்திரன்…தருமரின் மகன்…
“நான் தான் கண்ணு… உன்னைய இங்கே தூக்கிட்டு வந்து இருக்கேன்…”
“நீயா…நீ எதுக்குடா என்னை இங்கே தூக்கிட்டு வந்து இருக்க…”
“வேற எதுக்குக் கண்ணு கல்யாணம் பண்ண தான்…”என்று அவன் கையிலிருந்த தாலியினை ஆட்டிக் காண்பித்தான். அதிர்ச்சியுடன் அவனைப் பார்த்தாள் கயல்.
“ஏலேய்…உனக்கு குளிரு விட்டுப் போச்சுதாடா…பொறுக்கிப் பயலே…
இந்தாரு…இது மட்டும் எங்க அண்ணனுக்குத் தெரிஞ்சா…” என்று ஆரம்பித்தவளிடம்
“தெரிஞ்சா…தெரிஞ்சா மட்டும் என்ன செஞ்சு கிழிச்சுருவான் உங்கண்ணன்…என்னடி அண்ணன் அண்ணன்னு பூச்சாண்டி காட்டறே…உன் அண்ணன் என்ன பெரிய இவனா…இப்போ உன் கழுத்துல நான் தாலி கட்டிட்டேன்னா அவனை என் காலடியில் விழவப்பேன்டி” என்றான் திமிராக…
“என்னாது தாலிகட்டப் போறியா…அது என் உசுரு இருக்கிற வரைக்கும் நடக்காதுடா…நான் என் கதிர் மாமாவுக்கு மட்டும் தான்…”
“அப்படி வாடி என் அத்த மவளே…அது என்னடி உன் குடும்பத்துப் பொம்பளைகளுக்கு வெறும் பயலுகளத்தான் பிடிக்குது…எங்க அப்பன் இருக்கும்போது உங்கத்தகாரி அந்த வேலைக்கார சுந்தரத்தை இழுத்துக்கிட்டு ஓடினா… இப்ப நான் ஒருத்தன் இருக்கும்போது நீ எனக்கு அந்த வெம்போட்டுப்பய கதிரு தான் வேணுங்குற… நான் என்னமோ என்னை விட்டுட்டு அசலூருல இருந்து உனக்கு உன் வீட்டுல மாப்பிள்ள பார்த்து இருக்காங்கன்ற கோபத்துல உன்னத் தூக்கினா… நீயும் அந்த வேலைக்காரப் பயலும் தனியா படம் ஓட்டிக்கிட்டு இருக்கீங்களா…இதப் பாருடி எங்கப்பன் வேணும்ன்னா கேணயனா இருந்துருக்கலாம்…ஆனா நான் அப்பிடி இல்லடி…நான் சந்திரன்…உன்னயக் கட்டாம விடமாட்டேன்… இதுக்கு ஒரு முடிவு கட்டறேன் இரு…”
என்ற படியே அவன் கயலைக் கையில் தாலியுடன் நெருங்கினான்.
“ஏய் என்னடா நெனச்ச… நீ என் கழுத்துல இந்தக் கயிறை கட்டிட்டா மட்டும் நீ எனக்குப் புருஷனாயிருவியா… “
“அட  ஆமாங்கண்ணு… நீ சொல்றது சரி தான்… தாலி கட்டினா மட்டும் புருஷனாகிற முடியாது… குடும்பம் நடத்தனும் அப்பத்தான் புருஷனாக முடியும்…உனக்கு நான் முதல்ல புருஷன் ஆகிடுறேன்…அப்புறமா தாலி கட்டுறேன்…”என்றவன் ஒரு வக்கிரமான கோணல் சிரிப்போடு அவளை நெருங்கினான்.
நாற்காலியில் இருந்து கயலை விடுவித்தவன் அவள் ஓடுவதற்குள் அவளது தாவணியைப் பற்றி இழுத்து உறுவித் தூக்கி எறிந்தான்.அவளைக் கீழே தள்ளி அவள் மேல் சரிந்து படர்ந்தான்.
“வேணான்டா… என்னை விடுடா… நான் கதிர் பொண்டாட்டிடா…”என்று கத்தினாள்… கதறினாள்… துடித்தாள்…கயலின் அந்தக் கதறல் எதுவும் அந்த மூர்க்கனின் காதில் விழவே இல்லை. தன் காரியத்திலேயே குறியாக இருந்த அவனை அடித்தும்,கடித்தும், பிராண்டியும் அவனைத் தடுத்து நிறுத்த போராடியவளின் முயற்சியால் கடுப்பானவன் கயலின் கன்னத்தில் ஓங்கி அறைந்தான். அவ்வளவுதான்…அத்தனை நேரம் போராடியதாலும் மயக்க மருந்தின் மிச்சமிருந்த தாக்கத்தாலும், உடல் வலிமையும் வடிந்து போய் விடக் கண்கள் சொருக சிறுது சிறிதாக மயக்க நிலைக்குச் சென்றாள் வெற்றிவேல் வீட்டு இளவரசி…
—தொடரும்
சென்ற அத்தியாயத்திற்கு ஆதரவு தெரிவித்த அனைத்து நட்புக்களுக்கும் நன்றி…கருத்துக்களை ஆவலுடன் எநிர்நோக்கும் பிரியா குமார்
error: Content is protected !!