paadal thedal- 6

paadal thedal- 6

6
வார்த்தை மோதல்

ஜானவி தன் கரத்தைப் பற்றியிருந்த அன்புச்செழியனைத் திரும்பிப் பார்த்து முறைத்து, “ஹலோ கையை விடுங்க” என்றதும் அவள் கரத்தை விடுவித்தவன்,

“சாரிங்க… மீனுவை அடிச்சிற போறீங்களோன்னுதான் கையைப் பிடிச்சேன்” என்று அவன் தயங்கியபடி சொல்ல,

“என் பொண்ணை நான் அடிப்பேன்… உங்களுக்கு என்ன?” என்று கேட்டு அவனை கடுகடுப்பாகப் பார்த்தாள். அவனோ மேலே எதுவும் பேசாமல் மௌனமாக நின்றான்.

அவள் அதன் பின் தன் மகள் புறம் திரும்பி, “எதுக்குடி  இங்கே வந்த? உன்னை எங்கெல்லாம்டி  நான் தேடறது” என்று மீனாவின் கரத்தைப் பற்றி வெளியே இழுத்துக் கொண்டு போனாள்.

“இல்லம்மா… என் பிரெண்ட் அன்பு” என்று மீனா ஏதோ பேச வாய் திறக்க, “பேசாதே… பின்னிடுவேன் உன்னை” என்று தன் வீட்டிற்குள் அழைத்துக் கொண்டு அவள் செல்லும் போது, “ஜானவி ஒரு நிமிஷம்” என்று செழியனின் அழைப்பு அவளைத் திகைத்துப் போக செய்தது.

அவனைக் குழப்பமாய் திரும்பி, “என் பேர் எப்படி உங்களுக்குத் தெரியும்?” என்று கேட்க,

“அது… மீனாதான் சொன்னா” என்றான்.

மகளை முறைத்துப் பார்த்தவள், “அவ சொன்னா நீங்க உடனே என்னைப் பெயரிட்டுக் கூப்பிட்டுருவீங்களா? உங்களுக்குக் கொஞ்சம் கூட மேனர்சே தெரியாதா?” என்று அவள் கத்த, “ம்மா… என் பிரெண்ட் அன்புச்செல்வியோட அப்பா ம்மா” என்று மீனா இடையில் புகுந்து பதிலளித்தாள்.

“பிரெண்டா?” என்று ஜானவி குழப்பமாக மகளைப் பார்க்க,

அப்போது செழியன், “ஆமா… என் பொண்ணும் உங்க பொண்ணும் பிரெண்ட்ஸ்தான்… ஸ்கூலில் ஒரே கிளாஸ்… அன்ட் ஒரே ஸ்டேண்டர்ட்” என்று பதிலளித்தான்.

அவனை அவள் யோசனையாய் பார்க்க, “என் பொண்ணு அன்புதான் மீனாவைப் பார்த்துட்டு வீட்டுக்குக் கூப்பிட்டு இருக்கா” என்றவன் மேலும் சொல்ல,

ஜானவி இப்போது மீனாவை முறைத்துப் பார்த்து, “கூப்பிட்டா மேடம் உடனே போயிடுவீங்களா… என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லிட்டுப் போகணும்னு தோணல… கொஞ்ச நேரத்துல பைத்தியக்காரி மாதிரி இந்த அப்பார்ட்மென்ட் முழுக்க என்னை அலைய விட்டுட்ட… உன்னை” என்று மகளிடம் கொந்தளித்தாள்.

“ப்ளீஸ் ங்க மீனுவைத் திட்டாதீங்க… பாவம் அவளுக்கு என்ன தெரியும்… ஏதோ பிரெண்டை பார்த்த சந்தோஷத்துல உங்ககிட்ட சொல்லாம வந்துட்டா” என்று அவன் நிதானமாக எடுத்துரைத்தான்.

“போதும்… என் பொண்ணை நான் திட்டணுமா வேண்டாமான்னு எல்லாம் நீங்க சொல்ல வேண்டாம்… அவளைக் காணாம தேடின வலியும் கஷ்டமும் எனக்குதான் தெரியும்” என்று அவள் வெறுப்போடு சொல்லிவிட்டு,

“ஹ்ம்ம்… அட்வைஸ் எல்லாம் ஈசியா பண்ணிடுவாங்க… அவங்கவங்களுக்கு வந்தாதான் தெரியும்” என்று முனகிக் கொண்டே வீட்டிற்குள் தன் மகளை இழுத்துச் சென்றுவிட்டாள்.

இதற்கு மேல் அவளிடம் பேசுவது வீண் என்று அவனும் மௌனமாகிட உள்ளே சென்றவுடன் கத்தத் தொடங்கிய ஜானவி, “இனிமே அந்த வீட்டுப் பக்கம் போனே உன் காலை உடைச்சிடுவேன்” என்று மகளிடம் காட்டமாக உரைக்க அது அவன் காதிலும் விழுந்தது.

சந்தானலட்சுமி நடந்த நிகழ்வைப் பார்த்துவிட்டு, “என்னடா அந்த பொண்ணு வாசலில் நின்னு இப்படி கத்திட்டு போகுது… சரியான வாயாடியா இருப்பா போல” என்று மகனிடம் சொல்ல,

“விடுங்க ம்மா… ஏதோ பொண்ணை காணோமேங்கிற டென்ஷன்ல கத்திட்டுப் போறாங்க” என்று தன் அம்மாவை சமாதானப்படுத்திக் கொண்டே உள்ளே வந்தான்.

“அதுக்கு ஏன்டா உன்னைக் கத்தணும்… இருந்தாலும் ஒரு பொண்ணுக்கு இவ்வளவு கோபம் இருக்கக் கூடாதுடா” என்றவர் சொல்ல,

“அப்போ ஆம்பளைங்களுக்கு இருக்கலாமா?” என்று தன் தாயிடம் எகத்தாளமாக எதிர்கேள்வி கேட்டான்.

“உனக்கு போய் சப்போர்ட் பண்ணேன் பாரு…  என்னை சொல்லணும்” என்று மகனைப் பார்த்து நொடித்துக் கொண்டு சந்தானலட்சுமி மீண்டும் தன் வீட்டு வேலையைத் தொடர ஆரம்பித்தார்.

செழியன் சோபாவில் அமர்ந்து கொண்டுவிட  அனபுச்செல்வியும் வந்து தன் தந்தையின் அருகில் அமர்ந்து கொண்டு, “மீனாவோட அம்மா ரொம்ப பேட் இல்ல ப்பா” என்றாள் .

“சேச்சே… அப்படி எல்லாம் இல்ல அன்பும்மா” என்று செழியன் உடனடியாக மறுக்க,

“அப்புறம் ஏன் மீனுவை அடிக்க வந்தாங்க… உங்ககிட்டயும் சண்டை போட்டாங்க” என்று அன்புச்செல்வி தான் பார்த்த நிகழ்வை வைத்து அவள் அறிவுக்கு எட்டியவரைக் கேட்டு வைத்தாள்.

“அன்பும்மா” என்று மகளை மடியில் அமர்த்திக் கொண்டவன், “மீனு அவங்க அம்மாகிட்ட சொல்லாம இங்க வந்தது தப்பு… அதான் அவளை அடிக்க வந்தாங்க… அப்புறம் என்கிட்ட அவங்க சண்டை எல்லாம் போடல… ஜஸ்ட் பேசுனாங்க… அவ்வளவுதான்” என்றவன் மகளிடம் தெளிவாக விளக்கம் கொடுக்க,

“ஆனாலும் அடிக்கிறது தப்புதானே… அப்படிதானே நீங்க என்கிட்ட சொல்லி இருக்கீங்க” என்றாள்.

“குழந்தைங்க தப்பு செஞ்சா அவங்க தப்பைத் திருத்திக்க அம்மா அப்பா டீச்சர்ஸ் எல்லாம் அடிக்கலாம்… அது ஒன்னும் தப்பில்ல”

“நான் தப்பு செய்யும் போது கூட நீங்க என்னை அடிச்சதே இல்லையே ப்பா… ஏன் அம்மா கூட என்னை அடிச்சதே இல்லையே” என்றவள் வருத்தமாக கேட்க,

“எல்லாருமே ஒரே மாதிரி இருக்க மாட்டாங்கடா… ஏன்… நான் உன்னை மாதிரி சின்னதா இருக்கும் போது லட்சு பாட்டி என்னை அடிச்சிருக்காங்களே…நீ வேணா பாட்டியைக் கேட்டுப் பாரு?” என்றவன் சொல்ல, “நிஜமாவா பாட்டி” என்று அவள் உடனே தன் பாட்டியிடம் கேட்க,

“நான் எப்படா உன்னை” என்று ஆரம்பித்தவர் மகனின் கண்ணசைவைப் பார்த்துவிட்டு, “ஆமா ஆமா அடிச்சிருக்கேன்… உங்க அப்பா தப்பு செஞ்சா அடிச்சிருக்கேன்” என்றார் .

“பார்த்தியா? இப்ப லட்சு பாட்டி பேடுன்னு சொல்வியா?”

“உஹும்ம்” அன்புச்செல்வி நிதானமாகத் தலையசைத்தாள்.

“நம்ம குட் டா இருக்கிறதுக்காக அடிக்கிறது ஒன்னும் தப்பு இல்ல… மீனாவோட அம்மாவும் பேட் எல்லாம் இல்ல… மீனா நல்லதுக்காகத்தான் அவங்க அடிக்கிறாங்க… புரியுதா?” என்றான். அன்புச்செல்வி தன் அப்பாவின் வார்த்தைகளைக் கேட்டு ஓரளவு புரிந்து கொண்டு தலையசைக்க, “குட் கேர்ள்… சரி போய் சாப்பிடுங்க… அப்பா ஈவனிங் உங்களை பார்க்குக்கு கூட்டிட்டுப் போறேன்” என்றான்.

“மீனாவையும் கூட்டிட்டுப் போகலாம் ப்பா” என்று அன்புச்செல்வி சொல்ல ஜானவி கடைசியாக சொன்ன வார்த்தைதான் அவன் காதில் விழுந்தது. நிச்சயம் ஜானவி அனுப்ப மாட்டாள் என்று எண்ணிக் கொண்டவன் இருப்பினும் மகளின் திருப்திக்காக, “கூட்டிட்டுப் போகலாம்” என்றான்.

இதற்கிடையில் மீனாவை வீட்டிக்குள் அழைத்துச் சென்ற ஜானவி  வாயில் கதவை மூட மீனாவுக்கு கிலி பற்றிக் கொண்டது. இப்போதைக்கு தன்னைக் காப்பாற்ற தன் அம்மம்மா கூட இல்லையே என்று அஞ்சி அப்படியே சுவற்றோரம் போய் ஒண்டிக் கொண்டு, “சாரி ம்மா… இனிமே உங்க கிட்ட சொல்லாம எங்கேயும் போக மாட்டேன்” என்றாள் முகத்தை பாவம் போல் வைத்துக் கொண்டு!

இன்று அடி தனக்கு நிச்சயம் என்று மீனாவின் குழந்தை உள்ளம் அஞ்சிக் கொண்டே தன் தாயைப் பார்க்க ஜானவியோ அப்படியே தரையில் சரிந்து கொண்டு தம் கால்களில் முகம் புதைத்து அழ ஆரம்பித்தாள். ஒரு வாரமாக அவளுக்குள் தேங்கியிருந்த துக்கம் அது.

மீனாவின் முன்னிலையில் அழுதுவிடக் கூடாது என்று எவ்வளவோ தன் வேதனைகளைத் தனக்குள்ளாகவே புதைத்துக் கொண்ட போதும் மீனாவைக் காணாமல் தேடிய அந்த நொடிகள் அவள் உணர்வுகள் மொத்தமும் கட்டவிழ்த்துக் கொண்டது.

இனி தன் எதிர்காலமே கேள்விக்குறியாகிப் போனதா என்று அதிவேகமாக பயணித்த எண்ணவோட்டத்தில் மீண்டும் தன் பொறுப்பின்மையால் தன் குழந்தையைத் தொலைத்து விட்டோமோ? இந்த சமுதாயத்தில் ஒரு மனைவியாகத் தோற்றதோடல்லாமல் இப்போது ஒரு தாயாகவும் தோற்றுப் போய்விட்டோமோ? என்று அவள் மனம் விபரீதமாக சிந்தித்து அவளை சொல்லவொண்ணா வேதனையில் ஆழ்த்தியது.

உறவுமுறை என்ற உணர்வுப்பூர்வமான கயிற்றால் ஒவ்வொரு பெண்ணின் உணர்வுகளும் பிணைக்கப்பட்டிருக்கிறது. அந்த கட்டுக்குள்தான் அவளின் சந்தோஷமும் சுதந்திரமும்! எதில் வெற்றி கண்டாலும் உறவுமுறைகளில் தோற்றவள் வாழ்க்கையே தோற்றவளாகதான்  இந்த சமுகம் அங்கீகரிக்கும்.

ஜானவியின் உறுதியும் நம்பிக்கையும் தாய்மை என்ற ஒற்றை வார்த்தையில் உடைந்து போயிருந்தது. அழுது கொண்டிருந்த தாயைப் பார்த்த மீனா மிரட்சியாக, “ஏன் ம்மா அழுற… நான் இனிமே சொல்லாம எங்கேயும் போக மாட்டேன்… அழாதே ம்மா” என்று அவள் தோளைப் பற்றிக் கெஞ்ச,

மகளை இழுத்து அணைத்துக் கொண்டாள். “என்னை விட்டுட்டு எங்கேயும் போயிடாதே மீனா! அம்மாவுக்கு நீ மட்டும்தான் எல்லாம்… நீ மட்டும்தான்டி என்னோட ஒரே சந்தோஷம்… நீதான்டி என் உயிர்” என்று கண்ணீர் மல்க உரைக்க மீனாவும் தேம்பி அழ ஆரம்பித்துவிட்டாள்.

அவளுக்கு என்ன புரிந்ததோ? ஆனால் தாயின் கண்ணீர் அவள் மனதை நெகிழ்த்திவிட்டது. “உஹும்… போக மாட்டேன்” என்று மீனா அழுது கொண்டே சொல்ல ஜானவி கண்ணீரோடு அவள் கன்னங்களில் முத்தமிட்டாள்.

தாயும் மகளும் அந்த மனநிலையில் இருந்து மீண்டு வரவே சில மணி நேரங்கள் பிடித்தது. அதன் பின் ஜானவி இயல்பு நிலைக்கு வந்து அவள் எடுத்து வந்த பொருட்கள் துணிமணிகள் எல்லாவற்றையும் பிரித்துவைக்கத் தொடங்கினாள்.

அதற்குள் அந்தி சாய்ந்துவிட்டது.  மீனா தன் வீட்டின் பால்கனி வழியாக அன்புச்செல்வியும் செழியனும் பார்க்கில் விளையாடிக் கொண்டிருப்பதைப் பார்த்தாள். குழந்தை மனம் ஏங்கித் தவிக்க, “ம்மா… நானும் போய் விளையாடவா?” என்று ஜானவியிடம் கேட்க,

“அம்மாவுக்கு வேலை இருக்குடா செல்லம்… நாளைக்குக் கூட்டிட்டுப் போறேன்” என்றாள்.

“அன்புவும்… அன்பு அப்பாவும் அங்கேதான் இருக்காங்க ம்மா… நான் போறேனே?!” என்றவள் மீண்டும் ஏக்கமாகக் கேட்க,

“அப்படி எல்லாம் தெரியாதவங்க கூட எல்லாம் போய் விளையாடக் கூடாது மீனு” என்று ஜானவி கண்டிப்பாக உரைத்தாள்.

“தெரியாதவங்க ஒன்னும் இல்ல… அன்பு எனக்கு பிரெண்ட்”

“அதெல்லாம் ஸ்கூலில்… இங்கெல்லாம் அப்படி யாரையும் நம்பி உன்னை என்னால விட முடியாது… நானே உங்க தாத்தா அம்மம்மாகிட்ட சண்டை போட்டு உன்னைக் கூட்டிட்டு வந்திருக்கேன்… நீ வேற எதையாச்சும் இழுத்து வைச்சி என்னைக் கடுப்பேத்தி வைக்காதே டி” என்றதும் மகளின் முகம் சுருங்கிப் போனதில் ஜானவியின் மனமும் இறங்கிப் போனது.

“அம்மாவைக் கொஞ்சம் புரிஞ்சுக்கோ மீனு… நாளைக்குப் போகலாமே” என்று மகளை சமாதனம் செய்து அணைத்துக் கொண்டாள்.

ஒரு பெண்ணாக அதுவும் ஒரு பெண் குழந்தையோடு தனியாக வாழ்வதில் இருக்கும் கடினம் ஜானவியின் இந்த மனநிலைக்குக் காரணம்.  அந்தப் பயமே அவளை சந்தேகப் பார்வையோடு எல்லோரையும் தள்ளி நிறுத்திப் பார்க்க வைக்கின்றது. பெண்களுக்கான பாதுக்காப்பில் இந்த சமூகத்தின் மகாமட்டமான சாபக்கேடு அது.  

அடுத்த நாள் ஜானவி மகளைப் பள்ளிக்குத் தயார் செய்தாள். அதுவும் ஆச்சரியத்திற்கு இடமாக சீக்கிரமாக எழுந்து. வேறு வழி. எல்லாவற்றையும் தானே செய்தாக வேண்டுமே! காலை உணவு மதிய உணவு என்று எல்லாம் அன்றைக்கு ப்ரெட் ஜாம்தான்.

“மீனா குட்டி… இன்னக்கு ஒரே ஒரு நாள் ப்ரெட் ஜேம் சாப்பிடு… அம்மா வீட்டுக்குத் தேவையானதை எல்லாம் வாங்கிட்டு உனக்குப் பிடிச்சதெல்லாம் செஞ்சு தர்றேன்” என்று மகளிடம் சொல்ல,

“டிவி எப்போ வரும் ம்மா” என்று ஆர்வமாகக் கேட்டாள் மீனா.

“ரொம்ப முக்கியம்” என்று மகளிடம் நொடித்துக் கொண்டு அவள் பேகை தயார் செய்து வைத்துவிட்டு, “சீக்கிரம் சாப்பிடு… அப்புறம் உங்க பிரின்சிப்பெல்… டிசிப்ளின் டிக்னிட்டி டெக்கோரம்னு கிளேஸ் எடுக்க ஆரம்பிச்சிருவாங்க” என்றாள்.

அதன் பின் இருவரும் தயாராகி வெளியே வந்து மகளுக்கு ஜானவி காலணி போட்டு விட்டுக் கொண்டே, “எல்லாம் எடுத்துக்கிட்டோமா… எதையும் மறக்கலையே?” என்று கேட்க,

மீனா தீவிரமாக யோசித்துவிட்டு, “ஹ்ம்ம்… ஸ்நேக்ஸ் பாக்ஸ் வைச்சியா ம்மா” என்று கேட்க, “அதெல்லாம் கரெக்டா கேளுடி… புக் நோட்ஸ் எல்லாம் மறந்திடு… போதா குறைக்கு ஒரு நாளைக்கு ஒரு ரப்பர் பென்சில் வேற… மவளே! இன்னைக்கு எதையாச்சும் தொலைச்சிட்டு வாயேன்” என்று மகளைக் கண்டித்துக் கொண்டே வீட்டைப் பூட்டியவள் பேகை கையில் ஏந்திக் கொண்டு கீழே இறங்க அவளுக்கு அப்போதுதான் நினைவு வந்தது.

 “ஐயோ! ஸ்கூட்டி சாவி” என்று மீண்டும் கதவைத் திறந்து உள்ளே ஓடினாள். அதற்குள்ளாக அன்புச்செல்வியும் செழியனும் பள்ளிக்கு செல்லத் தயாராகி வெளியே வர மீனாவின் முகத்தில் சந்தோஷம் பொங்கியது.

“மீனுக்குட்டி ஸ்கூலுக்குக் கிளம்பியாச்சா?” என்று செழியன் செல்லமாகக் கேட்க, “ஹம்ம்… அம்மா ஸ்கூட்டி சாவி எடுக்கப் போயிருக்காங்க” என்றாள்.

“ஓகே பை” என்றவன் சொல்ல அன்புச்செல்வியும் தன் பங்குக்கு, “பை மீனு… நம்ம ஸ்கூலில் பார்க்கலாம்” என்று பெரிய மனுஷித்தனமாக தன் தோழியிடம் சொல்லிக் கொண்டிருக்கும் போதே ஜானவி அதிரடியாக வெளியே வந்து தன் வீட்டின் வாயிலில் தடுக்கி விழப் போக,

“ஏ பார்த்து” என்று செழியன் அவள் கரத்தைப் பிடித்துக் கொண்டான்.

ஜானவி கடுகடுக்க அவனைப் பார்த்து கரத்தை உதறிவிட்டு, “என்ன நீங்க? கொஞ்சம் கூட மேனர்சே இல்லாம எப்பப்பாரு என் கையைப் பிடிக்கிறீங்க” என்றாள்.

“விழப் போறீங்கன்னுதான் கையைப் பிடிச்சேன்… இதுல மேனர்ஸ் எங்கெங்க வந்துது” என்று அவனும் கோபமாகக் கேட்க,

“அதெல்லாம் சொல்லிப் புரியாது” என்று அவள் முகத்தைத் திருப்பிக் கொண்டு, “வா மீனு போலாம்” என்றபடி அவனைக் கடந்து சென்றாள்.

“ஹலோ” என்று செழியன் அழைக்க அவள் திரும்பிப் பார்க்காமல் இறங்க, “ஜானவி” என்று மீண்டும் சத்தமாக அழைத்தான்,.

அவள் கோபமாக மீண்டும் படியேறி வந்து,  “இத பாருங்க மிஸ்டர்… என்னை இந்த மாதிரி பேர் சொல்லிக் கூப்பிடுற வேலையெல்லாம் வைச்சிக்காதீங்க… சொல்லிட்டேன்” என்று அவள் விரல் நீட்டி எச்சரிக்க,

“நான் ஹலோன்னு கூப்பிட்டேன்… நீங்கதான் திரும்பிப் பார்க்கல” என்றவன் சொல்ல,

“நீங்க ஏன் மிஸ்டர் என்னைக் கூப்பிடணும்?” என்று கடுப்பாக அவனைப் பார்த்தாள்.

“ஏன்னா… நீங்க உங்க வீட்டைப் பூட்டாமலே போறீங்க” என்று செழியன் சொன்ன பிறகே அவள் அதனைக் கவனித்தாள். தலையில் கை வைத்துக் கொண்டு உதட்டை கடித்துக் கொள்ள,

செழியன் அவள் செய்கையைப் பார்த்து சிரிக்க, இந்தக் காட்சியைப் பார்த்து அன்புச்செல்விக்கும் மீனாவிற்கும் கூட முகத்தில் புன்னகை அரும்பியது. அதன் பின் அவள் அவசரமாக வீட்டைப் பூட்டிவிட்டு அவனைக் கண்டும் காணதது போல் மகளை இழுத்துக் கொண்டு முன்னே இறங்கிச் சென்றுவிட்டாள்.

அவள் மகளைத் தன் ஸ்கூட்டியில் அமர்த்திக் கொண்டு கிளம்ப போக, “ம்மா என் பிரெண்ட் அன்புவையும் கூட்டிட்டுப் போலாமே” என்று கேட்க,

“உன்னைக் கூட்டிட்டுப் போகிறதுக்குள்ளயே எனக்குப் போதும் போதும்னு ஆகிடுது… இதுல இன்னும் ஒரு ஆளு வேற… என்னை டென்ஷன் படுத்தாம கம்னு வா மீனு” என்று வண்டியை ஆன் செய்தாள்.

“என்னங்க ஒரு நிமிஷம்” என்று செழியன் மீண்டும் அழைக்க, “இந்த ஆளு ஏன்டி என் உயிரை எடுக்கிறான்” என்று மகளிடம் சொல்லிக் கொண்டே செழியனைத் திரும்பிப் பார்த்து முறைத்தாள்.

“அதான் நான் வீட்டைப் பூட்டிட்டேன் இல்ல… இன்னும் என்ன வேணும் மிஸ்டர் உங்களுக்கு?” என்றவள் கேட்க,

“ட்ரைவ் பண்ணும் போது இவ்வளவு டென்ஷன் வேண்டாம்… அது நல்லதில்ல” என்றான்.

அவள் கடுப்பாய் அவனைப் பார்த்து, “அட்வைஸு” என்று எகத்தாளமாகக் கேட்டுவிட்டு, “நான் உங்களை அட்வைஸ் கேட்டேனா மிஸ்டர்” என்றாள் முறைப்போடு.

செழியன் முகம் மாறியது. “என்ன நீங்க… சும்மா சும்மா மிஸ்டர் மிஸ்டர்ன்னு கூப்பிடுறீங்க… என் பேர் அன்புச்செழியன்… எதாச்சும் சொல்லணும்னா அன்புன்னு கூப்பிட்டுப் பேசுங்க… ப்ளீஸ்” என்றான்.

“ஏன் செழியன்னு கூப்பிட்டா ஒத்துக்க மாட்டீங்களோ?” என்று அவனைப் பார்த்துக் கேட்டு அவள் கேலியாய் சிரித்தாள்.

“அதெல்லாம் உங்க இஷ்டம்… பட் மிஸ்டர்னு கூப்பிடாதீங்க… தட் சௌண்ட்ஸ் பேட்… அதவும் குழந்தைங்க முன்னாடி”

“தெரியாதவங்களைப் பெயரிட்டுக் கூப்பிட்டு எனக்குப் பழக்கம் இல்ல மிஸ்டர்” என்றவள் வேண்டுமென்றே அவனை அதே போல் அழைக்க செழியன் சீற்றத்தோடு, “வேண்டாம்” என்று முறைத்தான்.

“வேண்டாம் இல்ல… அதான் சொல்றேன்… இனிமே நீங்களும் என்கிட்ட பேசாதீங்க… நானும் உங்ககிட்ட பேச மாட்டேன்… அன் தட் சௌண்ட்ஸ் பெட்டர்” என்றவள் அவனை அழுத்தமாகப் பார்த்து சொல்ல,

“சரியான ஈகோ பார்டி” என்று செழியன் தன் வாய்க்குள்ளாக முனகிக் கொள்ள, “இப்ப என்ன சொன்னீங்க மிஸ்டர்?” என்று அவனைத் திமிராகப் பார்த்து அதே தொனியில் கேட்டாள்.       

“ஒன்னும் இல்ல… இன்னைக்கும் எப்பவும் போல லேட்டா போனா… அப்புறம் பிரின்சிபல் ரூம்ல நிற்கணும்… லெக்சர் கேட்கணும்… லெட்டர் எழுதிக் குடுக்கணும்” என்றவன் எள்ளலாக நகைத்துக் கொண்டே நீட்டி முழக்கிச் சொல்ல அவள் முகம் கொஞ்சம் கோபமாகவும் குழப்பமாகவும் அவனைப் பார்த்துவிட்டு, “அதெல்லாம் இன்னைக்கு லேட் ஆகாது” என்று சொல்லிவிட்டுத் தன் ஸ்கூட்டியை வேகமாக கிளப்பிக் கொண்டு சென்றுவிட்டாள்.

இதற்கிடையில் இன்னொரு முக்கியமான விஷயம் என்னவெனில் தங்கள் பெற்றோரின் வார்த்தை மோதல்களை வெகுசுவாரஸ்யமாக அந்த சின்ன வாண்டுகள் இரண்டும் பார்த்து கொண்டதுதான்.

ஜானவி பள்ளிக்கு வண்டியை செலுத்தி கொண்டே, “நம்ம ப்ரின்சிபல் ரூம் போன வரைக்கும் அந்த மனஷனுக்கு எப்படிறி தெரிஞ்சுது… எல்லாம் உன் வேலையா… ஒண்ணு விடாம நீ உன் பிரெண்ட் கிட்ட சொல்லி வைச்சிருக்கியா?” என்று கேட்க,

“உஹும்… நான் சொல்லல”

“அப்புறம் எப்படிறி அவருக்குத் தெரியும்”

“நீங்க லெட்டர் எழுதும் போது அன்புவோட அப்பா அங்கே தானே இருந்தாரு… நான் உங்ககிட்ட சொன்னனே” என்று மீனா சொல்ல, “அப்படியா?” என்று யோசனையாக கேட்டுக் கொண்டே மகளைப் பள்ளி வாசலில் இறக்கிவிட்டாள். ஒரு தெரு தள்ளிதான் பள்ளி இருந்ததால் அவர்கள் பேசிக் கொண்டே விரைவாக வந்து சேர்ந்துவிட்டனர்.

ஜானவி மகளின் பேகை மாட்டிவிட்டுக் கொண்டே, “இத பாரு மீனு… அந்த அன்பு பொண்ணு கிட்ட ஓவரா நீ பிரெண்ட்ஷிப் எல்லாம் வைச்சிக்க வேண்டாம்… எனக்கு அந்த பொண்ணோட அப்பாவைப் பார்த்தா ஒன்னும் சரியா படல” என்று சொல்ல மீனாவின் முகம் வாடிப்போனது.

“என்னடி பார்க்கிற… கிளம்பு” என்று சொல்லியவள் மகளைப் பார்வையால் எச்சரித்து வழியனுப்பிவிட்டு பெருமூச்செறிந்தாள்.  என்றும் இல்லாத திருநாளாய் அன்று சீக்கிரம் மகளைக் கொண்டு வந்து சேர்த்துவிட்டாளே! அதனால் வந்த பெருமூச்சு.

error: Content is protected !!