Thendral’s Kandharva Logaa – 35
Thendral’s Kandharva Logaa – 35
கந்தர்வ லோகா – 35
லோகாவிற்கு இது கனவு என்பது மட்டுமே தெரியும். அதற்கு பின்னால் நடந்துகொண்டிருக்கும் பயங்கரம் அவள் அறியாதது.
அழுத அவளை தேற்றி வேறு விஷயங்கள் பேச ஆரம்பித்தார் பாட்டி. அந்த இரவு நேரம் ரயிலில் அனைவரும் உறங்கியிருக்க, திடீரென அந்த இடத்தில் ஒரு மெல்லிய சப்தம். உடல் சிலிர்த்தது.
“ மியாவ்……”
அதே பூனை. உடம்பில் அதே வரிகள். ரத்தச் சிவப்பு கண்கள்.
பாட்டிக்கு புரிந்தது, அது தன்னக்கான அழைப்பு என்று.
அது பாட்டியையே இமைக்காமல் பார்த்துச் சென்றது. பாட்டிக்கு இந்தப் பயணம் தனக்கான இறுதிப் பயணம் என்பது விளங்கியது.
அதற்கு முன் தன் பேத்தியின் கவலைகளையும் அவளின் துன்பங்கங்களையும் அறவே நீக்கிவிட எண்ணினார். அதற்கான சில திட்டங்களும் அவரது மனதில் ஓடிக்கொண்டிருந்தது.
மீனாட்சி இறந்தது பற்றி அன்று குருஜி சொன்னபோது அவருக்கும் தன் பேத்தியைக் காக்க வேண்டும் என்ற எண்ணம் வேரூன்றி இருந்தது. ஆனால் எப்படியும் சமாளிக்கலாம் என்று இருந்துவிட்டார்.
இன்று விஷ்வாவும் லோகாவும் படும் கஷ்டங்களைப் பார்த்த பின்பும் அவரால் சும்மா இருந்துவிட முடியவில்லை.
தான் இப்போது செய்யவிருப்பது மிகுந்த வலி பொருந்திய ஒன்று என்பது அவருக்குத் தெரிந்து தான் இருந்தது. மீனாட்சியின் தியாகத்திற்கு முன் இது ஒன்றுமில்லை என்று தான் நினைக்கத் தோன்றியது.
‘தன் குலம் தழைக்கவும் மீனாட்சியின் குலம் தழைக்கவும் இருக்கும் ஒரே வாரிசு லோகா மட்டுமே. அவளது வாழ்வு சிறக்க இதை செய்தே ஆகவேண்டும்.’
லோகா தனக்கு ஏன் அந்தக் கனவுகள் துறத்துகிறது என்ற யோசனை! அவனுக்கும் தனக்கும் எதாவது முன் ஜென்மத் தொடர்பா.. இல்லை அவன் ஏதேனும் ஆபத்து உண்டாக்க நினைக்கிறானா! இது ஏதும் இல்லாமல் அது வெறும் கனவு தானா! அவளுக்குள் ஆயிரம் கேள்விகள் உலவியது.
‘விஷ்வா தான் தனக்கு இந்தப் பிறவியில் கணவன். அவனைத் தவிற வேறு எதுவும் தன்னை பாதிக்கக் கூடாது என்பதை மனதிற்குள் உருப்போட்ட படியே அமர்ந்திருந்தாள்.
தூக்கம் என்பது இருவருக்கும் இப்போது இல்லை. அவரவர் சிந்தனையில் மூழ்கிவிட்டனர்.
அதிகாலை வேளையை நெருங்கிக் கொண்டிருந்தது நேரம்.
அவளை இன்று தீண்டும் இன்பம் கிடைக்காமல் காத்திருந்தான் அதீந்த்ரியன். அவளைத் தழுவ கைகள் ஏங்கியது. அதைத் தடுத்துக் கொண்டிருக்கும் பாட்டியைக் கண்டு கோபம் மிகுந்தது.
இத்தனை நாள் , சிறிது நேரம் மட்டுமே அவளுடன் இருந்தாலும் அதை முழுமையாக அனுபவித்தான். ஆனால் இன்று அந்த சிறு நேரம் கூட தடைபட்டது அவனால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.
ஒரு பக்கம் விஷ்வா தனது சக்திகளை ஒன்று சேர்த்துக் கொண்டிருப்பது வேறு எரிச்சலை உண்டாக்க, லோகாவை அடைய இனி கனவுகளில் மட்டும் துரத்தினால் பத்தாது என்ற முடிவிற்கு வந்தான்.
அவன் இந்த பூமிக்கு வந்து பல ஆண்டுகள் ஓடிவிட்ட நிலையில் அவன் திரும்பும் காலமும் நெருங்கிக் கொண்டிருந்தது. அது ஒரு பக்கம் அவனை துரிதப் படுத்தியது.
வந்த வேலை முடிவுறாமல் திரும்பவும் அவனுக்கு விருப்பமில்லை. இத்தனை நாள் காத்திருந்து அவளை தொடாமல் விட்டுச் செல்வதா! அது தனக்கு இழுக்கு என்று அவன் மனம் முறுக்கிக் கொண்டது.
எப்படியும் அவளை விஷ்வா திரும்புவதற்கு முன் அடைந்துவிட வேண்டுமென முடிவு செய்தான்.
விடியற்காலை விஷ்வா எழுந்து அவனே அந்த வேரினை அரைத்து விழுங்கினான். இப்போது அதன் கசப்பு அவனுக்கு பழகிவிட்டது.
குன்றின் மீது இருவரும் அமர்ந்திருக்க , குரு அவனுக்கு அடுத்து திறக்கப் படவேண்டிய சக்கரத்தை பற்றி விளக்கினார்.
இன்று இரண்டாம் நாள்.
இன்று அவனது குறிக்கோள் நீர் சக்கரம்.
“விஷ்வா! இந்தச் சக்கரத்தை நீ நேர்படுத்த உனக்குள் இருக்கும் குற்றவுனர்வுகளை நீ களைய வேண்டும். உன்னையே நீ மன்னிக்க வேண்டும்.
முதலில் நீ உன்னை மன்னிக்கும் போது தான் அடுத்தவரை மன்னிக்கும் பண்பும் அவர்களிடம் மன்னிப்புக் கேட்கும் மனதும் உனக்கு வரும்.
செய்த குற்றங்கள் எதுவாக இருந்தாலும் , அதை மறந்து, உரியவர்களிடம் மன்னிப்புக் கேட்டுவிட வேண்டும்.
அதையே மனதில் நினைத்துக்கொண்டு உன்னுடைய மனதில் இருக்கும் குறையை போக்கிக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் அது உனக்குள் இருக்கும் நேரான எண்ணங்களையும் பாதிக்கும்.
இன்று நீ உனக்குள் இருக்கும் அனைத்து குற்றவுணர்வையும் தூக்கி எரிய வேண்டும்.” குருஜி அவனுக்கு அடுத்த நிலையை அடையும் வழி காட்டினார்.
விஷ்வா கண்ணைப் மூடி தனக்குள் இருக்கும் குற்றவுணர்வு என்ன என்பதை உணரத் தொடங்கினான்.
லோகாவை நினைத்து தான் அவனது மனம் சுற்றியது.அவளுக்குத் தான் எதுவும் செய்யாவிட்டாலும் அவளை வருத்தியது தான் நிறைய என்பதை உணர்ந்தான். தனக்கு அவள் குற்றமற்ற அன்பை பொழிந்திருக்கிறாள், பதிலுக்கு அவளுக்கு தான் கொடுத்தது திட்டும் அடியும் தான்.
இப்போது கூட அந்த கந்தர்வனுக்கு பயந்து காதலை சொல்ல முடிந்ததே தவிர , அவனாக மனம் கசிந்து சொல்லவில்லை என்பது அவனது குற்றவுணர்வாக இருந்தது.
‘அவனுக்கு பயந்து நான் முந்திக்கொண்டு சொன்னாலும் , அவள் மேல் இருக்கும் தீராத காதல் தான் அதற்குக் காரணம். அந்த கந்தர்வன் பற்றி அறிவதற்கு முன்பே என்னோட காதலை நான் சொல்லனும்னு நினச்சுட்டேன். இவன் ஒரு காரணம் தான். நான் என் மனதை அவளிடம் திறக்க எப்போதோ முடிவு செய்துவிட்டேன். அதுனால இந்த குற்றவுணர்வு எல்லாம் இனிமே வேண்டாம்.
என்னை நானே மன்னிச்சுட்டேன். நிச்சயம் லோகாவும் என்னை மன்னிப்பா. இது முதல்ல மன்னிக்கற அளவு பெரிய விஷயமில்ல.
என் செல்லத்துக்கிட்ட சொன்னா, அவ என்ன சொல்லப் போறா. ‘போடா சாமியாரே நீ சொல்லுவியோ இல்ல அதையும் நானே முன்ன வந்து சொல்லணுமோனு நினச்சேன். பரவால இப்பயாச்சும் சொன்னியே! ‘ இது தான் அவளது பதில்லாக இருக்கும்! ‘
அவன் முகம் அதை நினைத்து மலர்ந்தது. அதிலேயே புரிந்து விட்டது அவனது அடுத்த பாதை தெளிவடைந்தது என்று!
இப்போது அவன் மிகவும் நிம்மதியாக உணர்ந்தான். சிறு குற்றவுணர்வும் இல்லை அவனிடம். அவனும் அவனது லோகியும் மட்டுமே அவன் இதயத்தில் இருந்தனர்.
அவனுக்கு இந்த மகிழ்ச்சி இருந்தாலும், லோகா இப்போது என்ன செய்து கொண்டிருப்பாள்? சாப்பிட்டாளோ அல்லது காலேஜுக்கு சென்றாளோ ? அந்த கடங்காரனை நினைத்து அழுது கொண்டிருக்கிறாளோ? என்று மனம் அவளையே நினைத்தது.
ஒரு போன் செய்து கேட்கலாம் என்றாலோ , அதற்கும் தடை விதித்திருந்தார் குருஜி.
இந்த பயிற்சி போக மீதி நேரும் முழுதும் அவன் மனது நினைத்தது லோகா லோகா மட்டுமே!
“கொஞ்சம் பொறுத்துக்கோ டி என் தேவதையே! உன்னை மீட்டே தீருவேன்! “ உணவிற்காக பழங்களைப் பறித்துக் கொண்டே வாய்விட்டு புலம்பினான்.
ஊருக்குள் ரயில் வந்து நின்றது. அது ஒரு கிராமம் தான். அத்தியாவசிய தேவைகளைத் தவிற அங்கு வேறு எந்த வசதியுமில்லை.
ரயிலை விட்டு இறங்கினர் இருவரும்.
“பாட்டி இங்க நாம எங்க தங்குறது. ஒரு ஹோட்டல் கூட இருக்காது போலிருக்கே!” லோகா அந்த ஊரைப் பார்த்துக் கொண்டே கேட்க,
“ நாம ஏன் மா ஹோட்டல தங்கணும். நம்ம வீடு இருக்கு. உனக்கு அங்க எல்லா வசதியும் இருக்கு. உங்க அம்மா சின்ன வயசுல இருந்து வளர்ந்த வீடு. கண்டிப்பா உனக்கும் பிடிக்கும். வா போகலாம்!” சொந்த ஊர்க்கு வந்திறங்கியத்தில் பாட்டிக்கு முகத்தில் பிரகாசம் கூடியது.
பத்து வயது குறைந்தது போல தோன்றியது லோகாவிற்கு.
ஆம்! அணையப் போகும் விளக்கின் பிரகாசம் தான் அது! லோகாவிற்கு பாட்டியின் கதையை கேட்டதிலிருந்து அவருக்கு இங்கு ஏதேனும் ஆகிவிடுமோ என்ற பயம் இருந்து கொண்டே இருந்து.
இருவரும் பையைத் தூகிக் கொண்டு நடக்க அவர்களின் முன்னே திடீரென பாய்ந்து நடக்க ஆரம்பித்தது அந்தப் பூனை.
அது பாய்ந்த வேகம் லோகாவிற்கு பதட்டம் வந்துவிட, அதைப் பாட்டியிடமே சொன்னாள்.
“ பாட்டி! நாம ஊருக்குத் திரும்பிப் போய்டலாமா..? எனக்கு பயமா இருக்கு!” நடப்பதை நிறுத்திவிட்டு பாட்டியின் கையைப் பிடித்துக் கொண்டு சொல்ல,
பாட்டியின் முகம் இருகுவதைக் கண்டாள். அவரின் கை இரும்பைப் போல இருந்தது இப்போது. சட்டென கையை விட்டாள்.
“ பாட்டி…. “ சத்தமாகக் கத்தினாள்.
பதில் எதுவும் சொல்லாமல் பாட்டி அந்தப் பூனையை பின்தொடர்ந்து நடக்க ஆரம்பித்தார்.
பாட்டியின் நடவடிக்கை அவளுக்குச் சற்று விநோதமாகவே பட்டது. வேறு வழியின்றி , இவளும் அவரைத் தொடர்ந்து சென்றாள்.
அந்தத் தெருவில் இருந்த வீடுகளில் இவர்களின் வீடு கடைசி. அவர்கள் வீட்டோடு அந்தத் தெரு முடிவடைந்தது.
ஏற்கனவே இருவர் அங்கு சுத்தம் செய்து கொண்டிருந்தனர். லோகாவிற்கு ஆச்சரியமாக இருந்தது.
அவளின் அதிர்வைக் கண்ட பாட்டி, இப்போது சாதாரணமாகப் பேசினார்.
“ என்ன லோகா அப்படிப் பாக்கற.. நான் தான் நேத்து நாம கிளம்பறதுக்கு முன்னாடி இவங்களுக்கு போன் பண்ணிச் சுத்தம் செய்யச் சொன்னேன். வா உள்ள போகலாம்.” அவளிடம் எப்போதும் போலப் பேச, லோகாவும் மனதின் பயம் குறைந்து இப்போது உள்ளே சென்றாள்.
மிகவும் அழகான அந்தக் காலத்து வீடு. திண்ணை, முற்றம், தாழ்வாரம், ஊஞ்சல், வீட்டிற்குள் நெல் கொட்டும் கலன், அம்மி, ஆட்டுக்கல்,உரல் ,உலக்கை, மச்சு, கொல்லைப் புறம், அங்கே இருந்த வாழை, நெல்லி , வெற்றிலை , செம்பருத்தி போன்ற அனைத்து மரங்கள் செடிகள், அழகிய கிணறு, துணி துவைக்கும் கல் என அத்தனை அழகும் கொட்டிக் கிடந்தது.
வீட்டிற்குள் ஆங்காங்கே ஓடுகளில் கண்ணாடிப் பதித்து சூரிய வெளிச்சம் உள்ளே வந்தது.
உள்ளே நுழைந்ததும் பையை போட்டுவிட்டு, எங்கே என்ன இருக்கிறது என்று அப்பொழுதே பார்த்துவிடும் நோக்கில் அங்கே சுற்றிக் கொண்டிருந்தாள் லோகா. பாட்டிக்கு பேத்தியின் இந்த மகிழ்ச்சி மிகவும் பிடித்தது. இதுவே அவளுக்கு கடைசி வரை நீடிக்க வேண்டும் தன் அபிராமியை வேண்டினார்.
லோகவிற்கு பாட்டி தனியறை ஒன்றை கொடுத்தார். அங்கே தன் பெட்டியை வைத்துவிட்டு அங்கிருந்த கட்டிலில் சற்றுப் படுத்தாள்.
படுத்தவள் உறங்கியே போனாள். அவசரமாக வந்து எட்டிப் பார்த்த பாட்டி, அவள் உறங்குதைக் கண்டதும் பூஜை அறைக்குச் சென்று அன்று அந்த பூசாரி கொடுத்த குங்குமத்தை எடுத்து வந்து அவளது நெற்றியில் பூசினார்.
தன் பேத்திக்கு கனவு வரக் கூடாது என்று வேண்டிக் கொண்டு அதை வைத்தார்.
வெளியே வந்தவர் களைப்புத் தீர குளித்து விட்டு, தன் கணவரின் படத்திற்கு முன் வந்து பழைய நினைவுகளில் சிறிது நேரம் கழித்தார்.
பின்பு அந்த கிராமத்தில் விளைந்த காய்கறிகளை, வேலை செய்யும் பெண்னை வாங்கி வந்து சமைக்கச் சொன்னார்.
சற்று நேரமே தூங்கி எழுந்த லோகா , பாட்டியைத் தேட, அவரோ கொல்லைப் புறம் விறகடுப்பில் அவளுக்கு சூடாக வெண்ணீர் வைத்துக் கொண்டிருந்தார்.
அவள் அதில் ஆனதமாகக் குளித்துவிட்டு வந்ததும்,
“லோகா! நீ கொஞ்சம் வீட்டுல இரு , நான் போய் பொங்கல் வைக்க ஏற்பாடு செஞ்சுட்டு வரேன்!” அவர் அவசரமாகக் கிளம்பிச் சென்றார்.
அவர் சென்று சிறிது நேரத்தில் , அவளுக்கு போர் அடிக்க, அவளுக்கே உரிய குறும்புத்தனம் லேசாக தலை தூக்கியது.
வீட்டில் வேலை செய்யும் பெண்ணிடம் வழி கேட்டுக் கொண்டு, ஊரைச் சுற்றக் கிளம்பி விட்டாள்.
அத்தனை அழகான ஊர். பார்க்கப் பார்க்க தெவிட்டவில்லை. ரசனை ஏற்கனவே அதிகம்ம் அவளுக்கு, அதுவும் இந்தக் கிராம வாசம் அவளுக்குப் புதிதாக இருக்க, அந்தச் சிறு ஊரில் ஒவ்வொரு இடமாகச் சென்றாள்.
கால் வலியெடுக்க , அருகே இருந்த குளக்கரையில் அமர்ந்தாள்.
நீரில் காலை நனைத்து அமர்ந்திருக்க, அவளது அருகில் மீண்டும் அந்த வாசம்…
Comments Here