Thenmazhai – Episode 6 Akila Kannan

தேன் மழை அத்தியாயம் – 6

ஆதித்த கரிகாலனின் முகம் கோபத்தை வெளிப்படுத்தக் கயல்விழியை ஊடுருவிப் பார்த்தன அவன்  விழிகள். அவனுக்குச் சிறிதும் சளைக்காமல் சீற்றத்தை வெளிப்படுத்தினாள் கயல்விழி.

அப்பொழுது, “ஸ்…ஸ்…ஸ்…” என்ற சத்தத்தோடு தேனீ அருகே அவர்கள் அருகே வர… இருவரும் சுயநினைவுக்கு வந்தனர்.

“இளவரசியாரே… என் சொல் மீது உங்களுக்கு நம்பிக்கை இல்லையா? நான் சொல்வதை தாங்கள் இப்பொழுது செய்ய கூடாதா? பாண்டிய நாட்டினரால் தான் தங்கள் உயிருக்கு ஆபத்து.” என்று ஆதித்த கரிகாலன் உறுதியாகக் கூற, கரிகாலனை யோசனையோடு பார்த்தாள் கயல்விழி.

“இளவரசே நீங்கள் சொல்வதில் உண்மை இருக்கலாம். ஆனால், என் உயிருக்காக வென்றாலும் நான் என் பாண்டிய நாட்டிற்குத் துரோகம் விளைவிக்க மாட்டேன்.” என்று கயல்விழி கரிகாலன் மனம் வருந்திவிடக் கூடாது என்ற எண்ணத்தைக் கண்களில் தேக்கி கரிகாலனுக்குப் பதிலளித்தாள்.

கரிகாலன் புன்முறுவல் பூக்க,  கயல்விழி சற்று நிதானமடைய, அந்த காரிகையின் மனதில் கரிகாலன் மீதான காதலே மேலோங்க, அவள் காந்த விழிகள் அன்பை வெளிப்படுத்தக் கரிகாலன் அவள் மனமறிந்து தன் சினத்தை மறைத்துக் கொண்டான்.

“இளவரசியாரே…  நமக்குள் ஏன் வீண் வாதம். கிடைக்கும் இந்த அரிய சந்தர்ப்பத்தில் நான் உங்களின் மனம் நோகுவதைக் காண விரும்பவில்லை.” என்று கரிகாலன் கூற, “கிடைக்கும் அதே அரிய சந்தர்ப்பத்தில் தாங்கள் என் மீது சினம் கொள்வதை நானும் விரும்பவில்லை.” என்று வாடிய தன் முகத்தோடு கழுத்தை நொடிக்க, “ஹா… ஹா…” என்று பெருங்குரலில் ஏதோ பேரும் ஹாஸ்யத்தைக் கேட்டு விட்டது போல் சிரித்தான் கரிகாலன்.

“சோழ இளவரசே தாங்கள் இருப்பது பாண்டிய நாட்டு அரண்மனை என்று தங்களுக்கு மறந்து விட்டதோ?” என்று கயல்விழி கேட்க, “எங்கிருந்தால் என்ன? என் மனம் கவர்ந்த தாங்கள் அருகே இருப்பது ஆனந்தத்தை மட்டுமே அளிக்கிறது.” என்று கரிகாலன் கூற, கயல்விழியின் விழிகள் கரிகாலனை ஆரத்தழுவியது.

“இளவரசியார் என்னை  இப்படி காந்தம் போல் தங்கள் வசம் இழுத்தால், நான் இங்கிருந்து எப்படிச் செல்வது?” என்று கேட்டு கயல்விழியை தன்னோடு அணைத்துக் கொண்டு அங்கிருந்த மரத்தின் மீது சாய்ந்தான் கரிகாலன். தனித்த பூந்தோட்டம், தருண வயதுள்ள இருவர், தடுக்க யாருமில்லையென்ற துணிவு, இயற்கை அவ்விருவரையும் ஆட்கொண்டது.

நிலவொளி அவர்களை மயக்க… பூவாசம் அவர்களைத் தீண்ட…  இயற்கை அந்த காரிகையை இனிமையாய் இம்சிக்க… ஆனால் அவளை அதிகமாக இம்சித்ததோ அந்த வாலிபனின் கரங்கள்.

பக்கத்திலிருந்த மலர் கொடிகள் ஆடி, ஆடி அங்கு நடப்பதை ஆர்வமாய் பார்த்தன.  அந்த மரக்கிளிலிருந்த மைனாக்கள் தன் தூக்கத்தை விடுத்து,  கரிகாலன் புலியின் கழுத்தைக் கொய்ததை அச்சத்தோடு பார்த்தது போல், இன்று மஞ்சள் நிற மூக்கோடு தலையைத் தாழ்த்தி தாழ்த்தி கீழே நடப்பதை வெட்கத்தோடு உற்றுப் பார்த்தது.

தேனீக்கள் “ஸ்..ஸ்..ஸ்…ஸ்…” என்ற சத்தோடு அவர்களை வட்டமடித்தன.   காரிகை இருளில் தன்னவன் அருகே இருந்தும் அச்சத்தை வெளிப்படுத்தக் கரிகாலன் தன்னிலையை மீட்டுக் கொண்டு தன் கழுத்தில் உள்ள சோழ முத்திரை பதித்த மாலையை அவளுக்கு அணிவித்து, “என்னவளின் ஆசைக்கும், மதிக்கும் நான் உகுந்த மரியாதையைச் செலுத்துவேன் இளவரசியே!” என்று ஒழுக்க நெறியோடு கம்பீரமாகப் பேசினான் கரிகாலன்.

கரிகாலனின் செயலில் அவனைப் பெருமதிப்போடு பார்த்தாள் கயல்விழி.

“இளவரசியாரே… நான் விரைவில் உங்களைக் காண நற்செய்தியோடு வருவேன்.” என்று கூறி கரிகாலன் செல்ல எத்தனிக்க, கரிகாலனின் கரங்களைப் பற்றி, அவனுக்கு மோதிரம் அணிவிக்கக் கயல்விழியைக் கேள்வியாக விழி உயர்த்தி நோக்கினான் கரிகாலன்.

“நம்மைச் சுற்றி ரீங்காரமிடும் தேனீக்கள் என் மனம் தங்களோடு வருவதற்குச் சாட்சி. அதை என்றென்றும் உங்களிடம் கூறிக்கொண்டே இருக்கும் இந்த பாண்டிய நாட்டு முத்திரை மோதிரம்.” என்று உணர்ச்சிப் பொங்கக் கூறினாள் கயல்விழி.

“தங்கள் நாட்டுத் தேனீக்கள்  அத்தனை மாயாஜாலம் நிறைந்தவைகளோ?” என்று கரிகாலன் புன்னகையோடு வினவ, “தேனீக்கள் மட்டுமில்லை… இதன் தேனும் அலாதி ருசியுடவை.” என்று பெருமையாகக் கூறினாள் கயல்விழி.

“விரைவில் ருசித்துவிடுவோம் என் மனையாளோடு.” என்று உற்சாகமாகக் கூறினான் கரிகாலன்.

அவர்கள் உரையாடலில் நேரம் செல்ல செல்ல,      “இளவரசி… எந்த பிரச்சனையுமின்றி நம் விவாகம் பெரும் ஆரவாரத்தோடு நிகழும்.” என்று உறுதியளித்துக் கிளம்பினான் கரிகாலன்.

கரிகாலன் கிளம்பிச் சென்ற சில நிமிடங்களில், “ஹா… ஹா…” என்று கொடூரமாக ஒலித்தது ஓர் குரல்.

“மந்திரியாரே! தாங்கள் இங்கு என்ன செய்கிறீர்?” என்று கடுங்கோபமாகக்  கேட்டாள் கயல்விழி.

“தக்க சமயம் பார்த்துக் காத்திருந்தேன் இளவரசியாரே.” என்று ஏளனமாகக் கூறினார் மந்திரி.

“தாங்கள் இங்க வந்தது அரசருக்கும், படைத்தலைவர்க்கும் தெரிந்தால் உங்கள் உடலில் உயிர் இருக்காது.” என்று கயல்விழி கர்ஜிக்க, “ஹா… ஹா… எத்தனை காலம் நானும் இப்படியே வாழ்வது. ம்.. அரசர்… சுந்தர பாண்டியர்.. அவருக்கு வயதாகிவிட்டது. படைத்தலைவன் … ம்… அவர் தமயன்.. நெடுமாறன் ஓர் மூடன். இவர்கள் ஆட்சி  செய்வதை  விட, நான் ஆட்சி செய்தால் பாண்டிய நாடு இன்னும் செழிப்பாக இருக்கும் என்பது என் அபிப்பிராயம்.” என்று மந்திரியார் கூற, “நீங்கள் நினைப்பது ஒரு காலமும் நடக்காது.” என்று கர்ஜித்தாள் கயல்விழி.

“என்ன பேச்சு… சிறை பிடியுங்கள் இளவரசியாரை.” என்று மந்திரி ஆணையிட, நொடிப் பொழுதில் இளவரசியார் கைகள் பிணைக்கப்பட்டு சிறை பிடிக்கப்பட்டார்.

“கரிகாலா…” கயல்விழியின் சத்தம் எங்கும் எதிரொலித்தது.

அந்த சாமவேளையில் அதைக் கேட்கத்தான் அங்கு யாருமில்லை.

கரிகாலனின் மனதில் ஏதோ நெருட, அவன் வந்த வழி திரும்ப அந்த வழி அடைக்கப்பட்டிருக்க அவன் ஐயம் மேலோங்கியது.

கரிகாலன் வேகமாக அங்கிருந்து நகர்ந்தான்.

“இளவரசியாரே. நீங்கள் சத்தம் செய்து எந்த பயனுமில்லை. என் திட்டம் சரியாக நிறைவேறியது. கரிகாலன் இங்கு  வந்ததற்கு  பல சாட்சிகள் உள்ளன. நீங்களும், கரிகாலனும் ஒரே நேரத்தில் இங்கிருந்து மாயமாவீர்கள். பழி கரிகாலன் மேல். தாங்கள் இருக்கப்போவது தேன்மழையில்.” என்று மந்திரி க்ரோதமாக கூற, “தேன்மழை.” இந்த சொல்லில் கயல்விழியின் மனதில் அச்சம் ஏற்பட்டதை அவள் வெளிறிய முகம் கூறியது.

அதை நொடிப்பொழுதில் மறைத்துக் கொண்டு, “மந்திரியாரே! என்னை இந்த க்ஷணம் கொன்றுவிடுங்கள். இல்லையேல் உங்கள் மரணம் என் கையில்.” என்று சூளுரைத்தால் கயல்விழி.

“இளவரசியாரின் வீரம் தங்கள் சிறு பிராயத்திலிருந்து பார்க்கும் யான் அறியாததா? இல்லை தங்கள் நுண்ணறிவும் யான் அறியாததா? ஆனால், பாவம் காதல் உங்களைச் சற்று சறுக்கிவிட்டது. நீங்களே அனைவரையும் அகற்றி, என் திட்டத்திற்கு உதவி புரிந்துவிட்டீர். உங்கள் உயிர் தானே எனக்குத் துருப்பு. அதற்கு ஒரு நாளும் பங்கம் வராது.” என்று ஏளனமாக மந்திரி கூற, “இதற்காக நீங்கள் வரும்காலத்தில் வருத்தப்படுவீர்கள் மந்திரியாரே.” என்று அவரை கடுமையாக எச்சரித்தாள் கயல்விழி.

“இழுத்துச் செல்லுங்கள் இளவரசியாரை தேன்மழையை  நோக்கி.” என்று கட்டளையிட்டு அங்கிருந்து கரிகாலனை நோக்கி வேகமாகச் சென்றார் மந்திரி.

‘எங்கோ ஏதோ  தவறியிருக்கிறது. இளவரசியாருக்கு ஏதோ ஆபத்து. என் மனம் துடிக்கிறதே. நான் சொன்னதை அவள் நம்பவில்லையே. நான் சொன்னதை அவள் அப்பொழுதே செய்திருந்தால்…’ கரிகாலனின் மனம்   கயல்விழிக்காகத் துடிதுடித்தது.

கரிகாலனால் திரும்பிச் செல்ல இயலவில்லை. அவன் வந்த வழி அடைக்கப்பட்டிருக்க, வேறுவழியின்றி வேகமாகக் கரிகாலன் கிடைத்த வழியில்  செல்ல அவனைக் காவலர்கள் துரத்தினர்.

தேன் மழை பொழியும்…

 

error: Content is protected !!