ஸுமனச வந்தித ஸுந்தரி மாதவி
சந்திர ஸகோதரி ஹேமமயே…
பிசிறில்லாத கணீர் குரலில் பாடிக்கொண்டு வாசலில் போட்ட மனை கோலத்தை செம்மணிட்டு அழகு படுத்திக் கொண்டிருந்தார் வச்சு என்கிற வத்சலா.
மனது முழுக்க உற்சாகம். ஒரு படபடப்பு. சந்தோஷம். உள்ளே ஒரே பெருமிதம்.
அதற்கு காரணம் அவரது மூத்த மகளான அனு என்கிற அனுராதா வை இன்று பெண் பார்க்க வருகிறார்கள். உறவினர்கள் மூலம் கிடைத்த சம்மந்தம்.
அனுவின் போட்டோவைப் பார்த்ததிலிருந்தே பையனுக்குப் பிடித்துவிட்டதால் , போனிலேயே அனைத்தும் பேசி, இன்று சம்ப்ரதாயப் படி பெண் பார்ப்பது முடிவானது.
வச்சு மாமி மிகவும் ஆச்சாரம் பார்ப்பவள். அவளது பூர்வீகமும் சரி அவளது கணவனின் பூர்வீகமும் சரி , கோவிலில் கைங்கர்யம் செய்தவர்கள். அதனால் அப்படியே வளர்ந்துவிட்டாள்.
கணவன் சாரங்கபாணிக்கு கவர்ன்மென்ட்டில் வேலை. இப்போது தான் சாய்வு நாற்காலிக்கு ஆர்டர் கொடுத்திருந்தார். கூடிய சீக்கிரம் ரிட்டயர்டு வாழ்க்கையை அதிலே கழிக்கவேண்டுமென்று.
பொண்டாட்டி சொல்லே வேதம் அவருக்கு. வச்சு மாமி போடும் பில்டர் காப்பிக்கே மகுடிக்கு ஆடும் பாம்பைப் போல மயங்கி கிடப்பார். சம்பளத்தை வாங்கியதும் கவரோடு வச்சு கையில் கொடுத்து விட்டு நிம்மதியாகப் பெருமூச்சு விடுபவர்.
வச்சு தான் ஆல் இன் ஆல். அனைத்தும் பார்த்துப் பார்த்து செய்வதில் அவரை மிஞ்ச ஆள் கிடையாது. வீட்டில் மோர் மிளகாய் எப்போது தீரும், புதிதாக அப்பளம் எப்போது இட வேண்டும். ஜாடியில் போட்ட ஊறுகாய் கிளறி விடும் நேரம் கூட அத்துப்படி.
பால் காரன் முதல் கொல்லைபுறத்தை சுத்தம் செய்பவனை வேலை வாங்குவது வரை அவர் பொறுப்பு தான். கணவனையும் ஒரு குழந்தை போலவே பார்த்துக் கொண்டதால், சாரங்கனுக்கும் வச்சு இல்லாமல் எதுவும் ஓடாது.
இந்த தம்பதிக்கு அழகிய இரண்டு பெண் குழந்தைகள். முதல் குழந்தை மிகவும் பொறுப்பானவள், அம்மாவைப் போலவே ! அவள் தான் கல்யாணத்திற்கு தயாராக நிற்கும் நம்ம அனு.
” அனு , சீக்கிரம் எழுந்துக்கோ டீ. நாழி ஆறது பாரு. மள மளன்னு ஸ்நானம் பண்ணிட்டு வா. இன்னிக்கு வெள்ளிக்கிழமை! லக்ஷ்மி பூஜை பண்றதுக்கு கொல்லை லேந்து பூ பரிச்சுண்டு வந்து வை. நேக்கு திரும்மாப்படில ல நெறைய வேலை இருக்கு. அவாள்ளாம் வரத்துக்குள்ள எல்லாம் ரெடி பண்ணி வைக்கணுமோன்னோ ” படுக்கை அறையின் வெளியில் நின்றே குரல் கொடுத்தாள்.
” எழுந்துட்டேன் மா… ” போர்த்திக்கொண்ட போர்வையை மடித்தபடியே எழுந்தாள். இன்னும் தலைவரை இழுத்துப் போர்த்திக் கொண்டு படுத்திருக்கும் தங்கையை வாஞ்சையுடன் பார்த்தவள், மெல்ல அவளது போர்வையை உருவ ,
‘ஹே அனு , என்னை ஒன்பது மணிக்கு குறைஞ்சு எழுப்புனா உன்னை அணுகுண்டு வெச்சே கொன்னுடுவேன்’ என அவள் நேற்று இரவு எச்சரிக்கை விடுத்தது நினைவிற்கு வர , லேசான பயத்துடன் மீண்டும் போர்வையை சத்தமில்லாமல் அவள் மேல் போட்டுவிட்டு குளிக்கச் சென்றாள்.
தங்கை வைஷ்ணவி என்றால் அவளுக்கு உயிர். தாய் போல பார்த்துக் கொள்வாள். அனு படித்து முடித்து வேலைக்குச் செல்ல விருப்பமில்லாமல் வீட்டில் தான் இருந்தாள்.
நன்றாக சமைப்பாள். தையல் , ஓவியம் என அசத்துவாள். வைஷ்ணவிக்கு டிசைனர் அனு தான். காலேஜில் அனைவரும் வைஷுவின் உடையை பாராட்டாமல் இருந்ததே இல்லை. அதற்கு காரணம் அனுவின் கலைநயம் தான்.
அனுவிற்கு வெளி உலகம் அவ்வளவாகத் தெரியாது. ஆனால் வைஷு ஊரையே விற்று வெல்லம் தடவி சாப்பிட்டு விடுவாள்.
அக்காவிற்கு எப்போதும் அவள் தான் லீகல் அட்வைசர்.
“வீட்டு வேலை மட்டும் செஞ்சுட்டு இருந்தா உன் மாமியார் உன்ன காசில்லாத வேலைக்காரி ஆக்கிடுவா.. என்கூட வா” என தன் தோழிகளோடு வெளியே செல்லும்போது அழைத்துச் செல்வாள்.
அனு உடன் சென்றாலும் அவளுக்கு ஜனக்கூட்டத்தை கண்டாலே தலை வலி வந்துவிடும்.
எப்போதும் சாந்தமாக , அவள் உண்டு அவள் வேலை உண்டு என்று இருந்துவிடுவாள்.
வைஷ்ணவி அவளுக்கு நேர் எதிர். எப்போதும் கலகலப்பு. அம்மாவை வம்பிழுப்பது. ஒருவர் விடாமல் கிண்டல் செய்வது. எந்த இடத்தில் அவள் இருந்தாலும் அனைவருக்கும் அவளைத் தெரிந்து விடும்.
பாப்புலாரிட்டி பைத்தியம். அப்பாவின் செல்லம் வேறு .. இப்போது தான் கல்லூரி முடிந்து வேலையில் சேர்ந்திருந்தாள். ஐ டீ யில் தான் வேலை.
அங்கேயும் அணைத்து வேலைகளிலும் சுட்டி என பேர் எடுத்திருந்தாள்.
வச்சு மாமி இரு பெண்களையும் சிறு வயது முதலே அழகாகப் பராமரிப்பாள். வெள்ளிக்கிழமைகளில் கட்டாயம் நல்லெண்ணெய் வைத்து சீயக்காய் பொடி போட்டுக் குளித்தே ஆகவேண்டும்.
பயத்தமாவும் கடலைமாவும் வைத்து உடலுக்குத் தேய்த்து வந்ததால் இரு பெண்களும் மேக்கப் இல்லாமலே ஜொலிப்பர்.
சார்ங்கபாணியின் சிவந்த நிறம் இருவரிடமும் சற்று அதிகமாகவே வந்து சேர்ந்திருந்தது.
‘மாமி உங்க பொண்ணுங்க ரெண்டு பேரும் ரொம்ப லட்சணமா இருக்கா! ‘ என யாராவது சொன்னால் போதும் உடனே அழகிகள் இருவருக்கும் சுத்திப் போட்டு விடுவார் வச்சு.
“வயிற்றில் நெருப்பைக் கட்டிண்டு இருக்கேன்.. ரெண்டு பேரையும் சீக்கிரம் கல்யாணம் பண்ணி அனுப்பிடனும்” என புலம்பிக் கொண்டே இருப்பார்.
இப்போது அனுவிற்கு வரன் அமைந்தது கொஞ்சம் அவர் வயிற்றில் பால் வார்த்தது.
அனு குளித்துவிட்டு தலையில் துண்டைக் கட்டிக் கொண்டு அழகாக ஒரு காட்டன் புடவை அணிந்து வந்தாள். மலர்களை பறித்துக் கொண்டு வந்தவள் அதை மாலையாகக் கட்டி , ஸ்வாமி படங்களுக்கு மாட்டினாள்.
வச்சு மாமி வேகமாக பூஜை அறைக்குள் வந்தாள். அனு உடனே வெளியேற,
“அனு நீ போய் கொஞ்சம் வாழைக்காயை நீளமா நறுக்கி வை. ஜலத்துல போட்டு வை டீ, இல்லனா கருத்துடும். நான் பூஜை முடிஞ்சுச்சுண்டு வந்துடறேன்.” வெளியே சென்றவளை துரத்திக் கொண்டே அவர் குரலும் சென்றது.
“அனு அப்பாக்கு காபி எடுத்துண்டு போய் குடுத்துட்டு , இந்த சின்னக் கழுதையை எழுப்பிவிடு. நாளுங் கிழமையுமா நன்னா தூங்கறது..” மீண்டும் குரல் கொடுத்துவிட்டு , பூஜையில் லயித்தார்.
அனு முதலில் சாரங்கபாணிக்கு காபியைக் கொடுக்க , அவரோ
“அம்மா எங்க …?” என மூக்குக் கண்ணாடியை சரி செய்துகொண்டு சமையல்கட்டை பார்க்க,
“அம்மா பூஜை பண்ணிண்டு இருக்கா பா ..”
“சரி சரி , வேற ஏதாவது வாங்கிண்டு வரணுமா பாரு.. காத்தால போனா கறிகாய் எல்லாம் பிரெஷா வச்சின்டிருப்பான். போய் வாங்கிண்டு வரேன்” காபியை உதட்டில் படாமல் தொண்டைக்குள் நேராக சரித்துக் கொண்டார்.
“இல்லப்பா. அம்மா ஏற்கனவே பொன்னம்மா கிட்ட சொல்லி கொண்டுவர சொல்லிருக்கா.. இப்போ அவளே வந்து கொடுத்துடுவா ” அவளும் வாழைக்காய் நறுக்கச் சென்றாள்.
“நல்ல காரியம் பண்ணா. இப்போ நான் என்ன பண்றது. ஆபீசுக்கும் லீவ் போட்டுட்டேன். அவா மூணு மனிக்குத் தானே வாரா. வச்சு வந்தா தான் ஏதாவது வேலை சொல்லுவா. அதுவரை செத்த இந்த பேப்பரை படிக்கறேன். ரொம்ப நாள் ஆச்சு நிம்மதியா பேப்பர் படிச்சு ” காபியை சொட்டு விடாமல் மொத்தமாகக் குடித்துவிட்டு அந்தத் தெம்பில் பேப்பர் படிக்க வாசல் திண்ணையில் அமர்ந்தார்.
அதற்குள் பொன்னம்மாவும் காய்கறி கூடையுடன் வந்தாள்.
“கொஞ்சம் இறக்கி வை சாமி” என குரல் கொடுக்க,
“நான் பேப்பர் படிக்கறது அந்த பகவானுக்கே பிடிக்கல..” என பேப்பரை மடித்து வைத்துவிட்டு அவள் தலையில் இருந்த மூட்டையை இறக்கி வைத்தார்.
“மாமி இல்லையா சாமி?” புடவைத் தலைப்பால் முகத்தின் வியர்வையை துடைத்துக் கொண்டு கூடை அருகிலேயே தரையில் அமர்ந்தாள்.
“வருவா இரு.. ” மீண்டும் பேப்பரில் முகத்தை திணித்துக் கொண்டு அமர்ந்தார்.
ஐந்து நிமிடத்தில் வச்சு மாமியும் பூஜையை முடித்து விட்டு வெளியே வந்தார்.
அழகாக மடிசார் அணிந்து நெற்றியில் குங்குமத்துடன் லட்சணமாக இருந்தார்.
“வா மாமி. உன்ன பாத்தாலே நாள் பூரா என் வியாபாரம் நல்லா போகும் ” மனதார பொன்னம்மா சொல்ல ,
“ஏன் டீ! இப்படி சொல்லி விலை எல்லாம் அதிகமா சொல்லலான்னு பாக்கறியா.. எல்லா காயும் கொண்டு வந்திருக்கியா ?” கூடையை ஆராய்ந்த படியே கேட்க,
“அய்ய .. இன்னம்மா அப்படி சொல்லிட்ட , உனுக்கு எப்பயாச்சும் அதிகமா சொல்லிகிறேனா . எடுத்துனு போ மாமி… குடுக்கறத குடு..” சிரித்துக்கொண்டே சொல்ல,
வச்சுவும் சிரித்தாள்.
“அனு அந்த சிகப்புக் கூடையை எடுத்துண்டு வா.. ” என வீட்டுக்குள் குரல் அனுப்ப , காய்களை பார்த்து எடுத்துக் கொண்டார்.
“இந்தா மா ” அனு நீட்ட,
“பெரிய பாப்பாவை பொண்ணு பாக்க வரவங்க வேண்டானா சொல்லப் போறாங்க.. கரும்பு தின்ன கூலியா ? பெரிய பாப்பா உன் கண்ணாலத்துக்கு எனக்கு ஒரு சீல எடுத்து தந்துடு. சரியா ?” பொன்னம்மா அவளிடம் சொல்வது போல வச்சு மாமியிடம் புதுப் புடவைக்கு அப்பிளிகேஷன் போட்டாள்.
“அம்மா கண்டிப்பா வாங்கித் தருவாங்க பொன்னம்மா. கவலப் படாத” சிரித்து விட்டு தாயுடன் சேர்ந்து கறிகாயை எடுத்து வைத்தாள்.
வச்சு மாமி அவளிடம் ஐம்பது ரூபாயை கொடுக்க பொன்னம்மாவும் எதுவும் சொல்லாமல் வாங்கிச் சென்றாள்.
இன்னும் பேப்பரில் மூழ்கி இருந்த சாராங்கனை பார்த்த வச்சு மாமி,
” நான் இங்க ஒண்டியா கெடந்து அல்லாடறேன். நீங்க நிம்மதியா பேப்பரை படிச்சிண்டு இருக்கேளே! உங்க அண்ணா மன்னி க்கு போன் பண்ணி எப்போ வாரான்னு கேளுங்கோ! புள்ளையாத்துக்காரா வரப்ப அவா இருந்தா தான் நன்னா இருக்கும். இல்லனா நம்ம சைடுல ஆளே இல்லனு நெனச்சுப்பா.
நம்ம கெளரவம் போய்டும். போங்கோ உடனே போன் பண்ணுங்கோ!” விரட்டினாள்.
” நீ சொன்னா சரி டீ . உடனே பண்ணிடுறேன். நாலு தெரு தள்ளி தான இருக்க , கூப்டா உடனே வர போறா ..” அவரும் தன் செல்போனை எடுக்க,
“ஆமா.. உடனே வந்து நின்னுட போறா.. உங்க அண்ணனா தேவலாம். உங்க மன்னி இருக்காளே! விஷயமே மறந்து போச்சுன்னு முழு பூசணிக்கையா மறைக்கற மாதிரி மறச்சிப்புடுவோ.. நாம வெத்தல பாக்கு வெச்சு அவளை அழைக்கணும். பொறாமை புடிச்சதுகள். உங்க தங்கை வரமாட்டா , ஆனாலும் சொல்லி வைங்கோ. ” பொருமிக்கொண்டே உள்ளே செல்ல, வழியில் வந்த படுக்கையறையில் இன்னும் வைஷ்ணவி உறங்குவது தெரிய,
” நாங்க இங்க இவ்ளோ வேலை பண்ணிண்டிருக்கோம், அங்க ஒன்னு யாருக்கோ வந்த விருந்து மாதிரி இழுத்துப் போத்திண்டு தூங்கறது பாரு. அடியே வைஷு ..கழுத எழுந்திரு டீ.. கூட மாட வேலை பண்ணு…”
அனைவரையும் வச்சு ஆட்டி வைத்தாலும் , அவளின் புயல் காற்றுப் பேச்சுக்கு அசையாமல் இருப்பது வைஷு மட்டுமே!
வைஷு அசையாமல் படுத்திருக்க,
” பூஜையை முடிச்சுட்டேன் டீ , உள்ள வந்தா அடிச்சு தான் எழுப்புவேன். இன்னும் ஐஞ்சு நிமிஷத்துல நீ கூடத்துல இருக்கணும். ” மிரட்டி விட்டு
சமையல் வேலையை கவனிக்கச் சென்றாள்.
அனு தான் அனைத்துக்கும் உதவி செய்தாள்.
” போதும் அனு. நீ இன்னிக்கு அடுப்பு கிட்ட நீக்காத. போய் உக்காந்துக்கோ. ஏதோ பேஸ் பேக் குடுத்தாளே உன் தங்க, அதை போட்டுக்கோ. அந்த வைஷுவை நாலு தட்டு தட்டி எழுப்பு.
மொதல்ல அவளுக்கு கல்யாணத்த பண்ணி அனுப்பி வைக்கணும். அப்போ தான் எனக்கு நிம்மதி, இல்லனா என்னை கத்த விட்டே பி பி வர வெச்சு என்னை சீக்கிரம் அனுப்பிடுவா..”
“பாவம்மா அவ.. இன்னிக்கு தானே லீவ் ..கொஞ்சம் தூங்கட்டும். ஒன்னும் இப்போ வேலை இல்லையே.” தங்கைக்கு பரிந்து கொண்டு வர,
“இல்லன்னா அவ தூங்கவே மாட்டாளா.. போய் எழுப்பு போ” அதட்டினாள் வச்சு.
அதற்கு மேல் அவளும் அங்கு நிற்க வில்லை.
வைஷு எழுந்துவிட்டிருந்தாள்.
“வாடி கல்யாண பொண்ணு. ஏன் டீ நீ சுறுசுறுப்பா இருந்து என்னை திட்டுவாங்க வைக்கற. வச்சு பாரு காலைலயே வீச்சு பரோட்டா போடா ஆரம்பிச்சுடுத்து” தூக்கம் கலையாமல் எழுந்து வர,
” என்ன டீ எக்ஸாம்பிள் இது ..பரோட்டா அது இதுன்னு ..அம்மா காதுல விழுந்தா அவ்ளோ தான். ” அனு தலையில் அடித்துக் கொள்ள ,
” நான் அஞ்சா நெஞ்சி.. வச்சு க்கு பயப்பட மாட்டேன். ” பயில்வான் போல கையை உயர்த்திக் காட்டி சொல்ல,
“போதுண்டி தாயே! அந்த பேஸ் பேக் எங்க வெச்ச..?” கைகூப்பிவிட்டு அலமாரியை தேட,
“இரு நான் ப்ரஷ் பண்ணிட்டு , வச்சு கைல ஒரு காபி குடிச்சுட்டு வந்து நானே உனக்கு போட்டு விடறேன்.” அக்காவிற்கு செய்வதென்றால் அவளுக்கு குஷி தான்.
” வச்சு காபி ப்ளீஸ்” கிச்சனில் சென்று நின்றாள் வைஷு.
பழைய பாடல்களை அவளின் சிறிய ரேடியோ ஒன்றில் ஓடவிட்டுக் கொண்டே வைஷுவிற்கு காபி கொடுத்தாள் வத்சலா.
டம்ளரை கையில் வாங்கி
சிப்பினாள்.
“எச்சல் பண்ணாத. உங்க பெரிம்மா பெரிப்பா வரதுக்குள்ள குளிச்சுட்டு வா”
“போ மா. நான் அக்காக்கு பேக் போட்டுவிட்டு அப்பறம் குளிக்கறேன். அப்போ தான் அவங்க வரப்ப பிரெஷா இருக்கும். “
“உன்னையா பொண்ணு பாக்க வாரா… “
” அதுக்காக நான் அசிங்கமா வா வர முடியும். போ மா”
அனுவிற்கு அனைத்தும் செய்து அவளை தயார் படுத்தினாள்.
சாரங்கனின் அண்ணா நாராயணன், மன்னி ருக்மினி வந்துவிட,
குடும்பப் பேச்சுகள் தொடர்ந்தது.
” என்ன டி வச்சு, புள்ளையாததுக்காரா கரெக்ட்டா வந்துடுவாளோனோ?!” இளக்காரமாக ருக்கு கேட்க,
“கெளம்பரச்சே போன் பண்றதா அந்த மாமா சொல்லிருக்கார் மன்னி.” பட்டும் படாமல் பதில் சொன்னாள் வச்சு. ஏற்கனவே ருக்கு விற்கு சற்று வயிற்றெரிச்சல் , இவளது பெண்கள் இருவரும் அழகு என்று.
ருக்குவின் பெண் அவளை போன்றே சற்று மாநிறம். ஒருவழியாக அவளுக்கு கல்யாணம் செய்து வைத்து ஊட்டிக்கு அனுப்பிவிட்டாள். ஆனாலும் அவள் இவர்களை போல அழகும் இல்லை, வேறு ஏதும் கற்றுக் கொள்ளவும் இல்லை.
அனால் அனு நன்றாக வீணை வாசிப்பாள். வைஷு நன்றாகக் பாடுவாள். எந்த வீட்டிற்கு கொலுவிற்கோ அல்லது திருமணத்திற்கோ போனாலும் இவர்களைத் தான் நன்றாக கவனிப்பார்கள்.
‘அனு வீணை எடுத்துண்டு வா . வைஷு நீ பாடு ‘ என இருவரையும் வருந்தி வருந்தி அழைப்பார்கள்.
இவளுக்குப் பொறாமை தாண்டவமாடும். எப்போது சாக்கு கிடைத்தாலும் வச்சுவை மட்டம் தட்டவே காத்திருந்தாள் ருக்மிணி.
ஆனால் வெளியில் மற்றவர்கள் முன்பு காட்டிக் கொள்ள மாட்டாள்.
” என்ன பண்ணலான்னு இருக்க ? கேசரியா ? அப்புறம் பஜ்ஜி போட்டுடு” மூத்தவளாக சொன்னாள்.
“ஆமா மன்னி. கேசரி பஜ்ஜி தான வழக்கம். அவா எங்க சித்தி வழில தூரத்து சொந்தம். அதுனால சித்தி கிட்ட பேசினேன். புள்ளையாத்துலையும் கொஞ்சம் நம்மள மாதிரி மடி விழுப்பு எல்லாம் பாப்பாளாம். அதுனால எல்லாம் வழக்கப் படி செஞ்சுடலாம்.”
“உங்க சித்தி வழி சொந்தமா..” ஏதோ ஒரு சலிப்புடன் கூறி,
” கூட பொறந்தவா எத்தனை பேர்” என முடித்தாள் பத்மா.
” ரெண்டு பசங்கன்னு சொன்னா. மூத்தவன் தான் அனுக்கு பாத்திருக்கோம்” தாம்பாளத்தில் வெற்றிலை பாக்கு பழம் முதலியவற்றை அடுக்கிய படியே ருக்குவின் கேள்விக்கு பதில் கூறிக்கொண்டிருந்தால் வத்சலா.
வைஷுவும் அனுவிற்கு புடவை அதற்கு மேட்சிங் பிளவுஸ், தலைக்கு வைக்க மல்லிகைச் சாரம் முதலியவற்றை எடுத்து வைத்துக் காத்திருந்தாள்.
அனு பேஸ் பேக்கை கவிழுக் கொண்டு வந்தாள். ருக்கு அவளை எதிர்கொண்டு
” என்ன டீ இன்னும் புடவை உடுத்திக்காம இருக்க? சீக்கிரம் கெளம்பு. அவாளாம் இன்னும் ஒரு மணி நேரத்துல வந்துடுவா. நல்ல நேரத்துல பாக்கணுமோன்னோ.. எங்க இந்த வைஷு? வைஷு … அடியே … ” தொண்டை கிழிய கத்தினாள்.
“ஐயோ பெரிம்மா என்னத்துக்கு இப்படி கத்தற..?” அவளது புது புடவையை சரி செய்தபடி வந்தாள் வைஷு.
கட்டை விரலும் ஆள் கட்டி விரலையும் தாடையில் வைத்து ‘ஆ’ வென வைஷுவைப் பார்த்தாள் ருக்கு.
“ஏண்டி என்னடி கூத்து இது. நோக்கு கல்யாணமா இல்ல உங்க அக்காவுக்கா?” என்று இழுக்க,
“ஆஅஹ்ஹ்ங் … அது வர மாப்பிள்ளையை பார்த்து அப்புறம் முடிவு பண்ணிக்கலாம். உனக்கு பிடிச்சிருந்தா நீயும் பெரிப்பாவ டிவோர்ஸ் பண்ணிட்டு அவனை கல்யாணம் பண்ணிக்கிறியா?” கண்ணடித்து சிரித்தாள்.
” கொழுப்பு டீ உனக்கு. வச்சு.. இந்த வைஷு என்ன பேச்சு பேசறா பாத்தியோனோ!! முதல்ல அனு வ ரெடி பண்ணு டீ” வச்சுவிடமும் வைஷுவிடமும் மாறி மாறி பேசிவிட்டு தன் மடிசாரை சரி செய்தபடி நகர்ந்தாள்.
” என்ன டீ வைஷு..” அனு சைகையால் கேட்க,
” அட விடு அனு. பெரிம்மா இந்த குடும்பத்துக்கே மூத்தவன்னு பிகு பண்ணிக்கறா, அப்பப்ப இப்டி வாய மூடி அனுப்பனும். நம்ம அம்மா எப்பவாச்சும் அவா ஆத்து விஷயத்துல தலையிட்டுருக்காளா.. சும்மா சீன் போட வேண்டியது. நீ வா முதல்ல உன்ன அலங்காரம் பண்ணனும் ” அவளை அழைத்துச் சென்றாள்.
நீளமான தலைமுடியை தழைய பின்னலிட்டு , கீழே குஞ்சம் வைத்து கட்டினாள். அது தொடை வரை தொங்க, நெறுக்கிக் கட்டிய மல்லிகையை நான்கு சாரமாக தலையில் வைத்து ஹேர்பின் குத்தினாள்.
சிவந்த முகத்தில் மெல்லிய மேக்அப் செய்து அலங்கரித்தாள்.
அனு எப்போதும் போட்டிருக்கும் ஜிமிக்கி போதும் என்று விட , கழுத்துக்கு மட்டும் மேலும் ஒரு ஆரத்தை போட்டுவிட்டாள்.
கரும்பச்சை நிறத்தில் ஒரு பட்டுப்புடவை கட்டி வர , அவளது நிறத்திற்கு அது மேலும் அம்சமாக இருந்தது.
அக்காவை கன்னத்தோடு கன்னம் வைத்துக் கொஞ்சினாள் வைஷு.
“வரப் போறவர் குடுத்து வெச்சவர். இப்படி ஒரு அழகு சிலையை எங்காத்துலேந்து கடத்திண்டு போகப் போறாரு. ” வைஷு சொல்ல,
வெட்கத்துடன் அனு , “அட சீ..” என்றாள்.
“வெட்கப் படாத , அப்புறம் இன்னிக்கே தூக்கிண்டு போய்டப்போறாரு” வைஷு அவளது கண்ணில் இருந்த மையால் அனுவின் காதுக்கு கீழ் தெரியாமல் ஒரு த்ரிஷ்டிப் போட்டு வைத்தாள்.
மீதி மையை தன் தலையில் தடவிக் கொண்டு,
” அக்கா, இங்க பாரு மாப்பிள்ளை வந்து தனியா பேசணும்னு சொன்ன, சரி ன்னு சொல்லு. பயந்துகிட்டு அப்டியே இருந்துடாத. புரியுதா. இப்போ பேசி பாத்தா தான் , ஆள் எப்படின்னு தெரியும். இப்போ விட்டா அதுக்கப்புறம், நிச்சயம் கல்யாணம் கெட்டிமேளம் தான். சோ பீ கேர்புல் ” அறிவுரை சொல்லிக் கொண்டிருக்க,
“ஹே பொண்ணுங்களா, மாப்பிள்ளை ஆத்துக்காரா கிளம்பியாச்சாம் . நான் போய் பஜ்ஜி போடறேன். அனு ரெடி தானே? ” வச்சு வந்து எட்டிப் பார்த்தாள்.
” ம்ம்ம் அவ ரெடி தான். நானும் ரெடி” வைஷு நக்கல் செய்ய,
” நீயும் ரெடியா. இரு இரு , ரெண்டு பசங்கன்னு சொன்னா, ரெண்டாவது பையனுக்கு உன்ன பேசி முடிச்சுடறேன். ” வச்சு பதில் கொடுக்க,
” என்ன கல்யாணம் பண்ணிக்க அவனுக்கு சில குவாலிடீஸ் இருக்கணும். அப்படி எல்லாம் என்னை ஈஸியா தள்ளி விட முடியாது வச்சு.” அளந்தாள் சின்னவள்.
“வச்சு.. கேசரி ரெடி. வந்து பஜ்ஜி போடு ” கிச்சனிலிருந்து ருக்கு குரல் தர,
“உன்ன அப்பறம் பேசிக்கறேன்” என்று ஓடினாள் வச்சு.
சாரங்கனும் நாராயனும் அங்கிருந்த நாற்காலிகளை ஒழுங்கு படுத்தி, வட்ட வடிவ சிறிய மேசை ஒன்றை நடுவில் கொண்டு வந்து போட்டனர்.
ருக்கு தாம்பூல தாம்பாளத்தை எடுத்து வந்து அதில் வைத்து விட்டு,
“ஒருத்தர் வாசல்ல போய் நில்லுங்கோ. அவாளுக்கு ஆகம் தெரியணுமோன்னோ” தன் கழுத்து அட்டிகையை சரி செய்து கொண்டே சொல்லிவிட்டுச் சென்றாள்.
“அனு மாப்பிள்ளை பேர் என்ன?” பயந்திருந்த அனுவை சரி செய்ய ஏதோ பேசிக் கொண்டே இருந்தாள் வைஷு.
” ரகுராம் “
“போட்டோ வே நான் பாக்கலையே. நீ பாத்தியா?” – வைஷு
“ம்ம் ..அப்பா காட்டினா வாட்ஸாப்ப்ல” படபடப்பாகவே பதில் சொன்னாள் அனு.
“ம்ம் .. எனக்கு காட்டவே இல்ல..” புருவத்தை தூக்க
” நீ பாதி தூக்கத்துல பாத்திருப்ப..அதான் உனக்கு ஞாபகம் இல்லை” அனு சீரியஸாக பதில் சொன்னாள்.
“ஓ! ஆமா , அந்த மீசை இல்லாம மொழு மொழுனு கொழுக்கட்டை மூஞ்சி மாதிரி இருந்துச்சே!” கிண்டல் செய்தாள் வைஷு.
“ஹே ! இல்ல , மொழு மொழுன்னு லாம் இல்ல. லைட் டா மீசையை ட்ரிம் பண்ணி அழகா தான் இருந்தார்” அனு அவளது கிண்டல் பொறுக்காமல் சொல்லிவிட ,
“ஓ அழகா இருந்தாரா அனு. சொல்லவே இல்லையே!” வைஷு அவளது முகம் பார்த்து சிரிக்க ,
“போடி” வெட்கத்திலும் சிறு கோபம் கொண்டாள் அனு.
“வத்சலா, எல்லாரும் வந்தாச்சு பாரு! ” வாசலில் நின்று குரல் கொடுத்தார் சாரங்கன்.
வத்சலாவும் ருக்குவும் ஓடி வந்து அனைவரையும் வரவேற்றனர்.