ThenMazhai-Thendral

ThenMazhai-Thendral

 

                                    நீண்டு வளர்ந்து கொண்டிருந்தது அந்த ராஜபாட்டை… இருபுறமும் செழித்து வளர்ந்து நின்ற மரங்கள் அந்த காட்டிற்கு அரணாக இருக்க நடுவில் சுமங்கலி பெண்ணின் நடுவகிடு போல நேராக இருக்க … இதமான தென்றல் தவழ்ந்து வந்து அந்த புரவிகளின் மேல் பயணம் செய்து கொண்டிருந்தவர்களை தழுவியது!

 

“இளவரசே …!” சற்று தயங்கியவாறு அழைத்தவனை புரவியை மென்மையாக செலுத்தியவாறு திரும்பி பார்த்தான் அவன்!

 

என்ன ஒரு தேஜஸ் அந்த கண்களில்!

 

நிமிர்ந்து அவன் அமர்ந்திருந்த விதமே தனி கம்பீரத்தை தர, அந்த கருமை நிறத்தவனுக்கு ரசிகர் கூட்டமென்று நிறைய உண்டு!

 

மார்பை மறைக்கவென ஒரு மேலாடையும் இடுப்பில் ஒரு இறுக்கமாக கட்டியிருந்த கீழாடையும் முறுக்கிய மீசையும், முறுக்கேறிய புஜங்களும், திண்மையான மார்பும், அதிலிருந்த வடுக்களும், கூர்மையான கண்களும் அவனை மிகச்சிறந்த வீரனென கூற,

“சொல் முத்தழகா…” என்றான் ஆதித்த கரிகாலன்.

ஆம்… அருள்மொழி வர்மனுக்கு மூத்தவன்.

சோழ வரலாற்றின்  பக்கங்களிலிருந்து வலுகட்டாயமாக பறிக்கப்பட்ட ஆதித்த கரிகாலன் தான் அவன்.

 

அவனது குரல் வழக்கத்திற்கு மாறாக சற்று மென்மையாகவே ஒலித்தது. 

அவனது மனநிலை சாந்தமாக இருப்பதை உணர்ந்து , 

முத்தழகனும் மெல்ல மனதைத் தட்டிக் கொடுத்து தைரிய படுத்திக்க கொண்டான். 

 

அதுவும் அருகே சிம்மமென அருகில் வந்த ஆதித்யனிடம்  நினைத்ததைக் கேட்கத் தன்னை தயார் படுத்திக் கொண்டது. 

 

நீண்ட நேரமாக அமைதியாக புரவியில் பயணம் செய்ததால் நா சற்று வறண்டு போக , முத்தழகனின் குரல் வெளிப்படவில்லை. பின் மெல்ல குரலை சரி செய்து கொண்டு கேட்கலானான். 

 

” இளவரசே! இப்போது நிலைமை சரியில்லை என்பது தங்களுக்கு நன்றாகவே தெரியும். எப்போது வேண்டுமானாலும் போருக்கான அறிவிப்பு வரலாம்.  இந்த நேரத்தில் அதுவும் மாறுவேடத்தில் இந்தக் காட்டு வழியே செல்வதன் காரணத்தை நான் அறிந்து கொள்ளலாமா?!” 

 

இருள் கவ்வத் தொடங்கிய அந்த நேரத்திலும் ஆதித்யன் கண்கள் பளிச்சிட நகைப்பது நன்றாகவே தெரிந்தது. 

 

“இப்போது போருக்கான அறிவிப்பு வர வாய்ப்பில்லை முத்தழகா! இன்னும் இரண்டு நாட்கள் கழித்துத் தான் ஓலை வரப்போவதாக தகவல் வந்தது. ஆகவே அதை நினைத்து அஞ்சாதே! 

போருக்கு நான் செல்வதற்கு முன்னமே என் மனம் நிறைந்தவளை காணும் ஆவல் கொண்டேன். 

 

இரண்டு திங்களுக்கு முன்னர் எனக்கும் அவளுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால்  சினம் கொண்டு அவளைக் காண்பதை தவிர்த்திருந்தேன். 

ஆனால் போர் பற்றிய ஆலோசனைகள் ஆரம்பிக்கும் போதே அது பகலவனைக் கண்ட பனித்துளி எனக் காணாமல் போனது.

 

போரில் எது வேண்டுமானாலும் நடக்கலாம். அப்போது என் கண்மணியின் நிலை! கடைசியாக அவளுடன் சண்டையிட்டு அவளைக் காயப்படுத்தியது மட்டும் தான் நினைவில் இருக்கும்.

அவள் மேல் எனக்குக் கோபம் இல்லை என்பதை எப்படியாவது ஊர்ஜிதப் படுத்திவிட்டுத் தான் நான் போருக்குச் செல்வேன். என் உயிரே அவள் தான் என்று அவளுக்குச் சொல்ல வேண்டும்.

இந்த இரண்டு மாதங்களும் எனக்குள் கோபத்தையும் மீறி அவள் மேல் காதல் பெருகிக் கொண்டு தான் இருந்தது. அதையும் அவளிடம் நான் மறைக்கப் போவதில்லை.

இன்று விட்டால் அதைக் கூற பிறகு சந்தர்ப்பமே அமையாமல் போகலாம். இன்று மனதில் இருக்கும் அனைத்தையும் அவளிடம் திறந்து காட்டிவிட வேண்டும்.”

அப்போது  அவர்களை சுற்றி ஒரு  வண்டு பறந்து கொண்டே வர , முத்தழகன் அதை துரத்த நினைத்து கை வீச,

 

ஆதித்யனோ காதல் வசனம் பேசினான்..

 

” பூக்களைத் தேர்ந்து ஆராய்ந்து அதில் தேன் குடிக்கும் வண்டே! ஏழு பிறப்பிலும் என்னோடு பொருந்தக் கூடிய நட்பினைக் கொண்டவள் என் நந்தினி. மயில் போன்ற மென்மையும் , செறிவான பற்களையும் கொண்ட அவளின் கூந்தல் நீ தினமும் நாடும்  மலர்களை விட மணம் அதிகமாக வீசும். இவ்விதம் நீ அவளை அறிவாயாக! அவளிடம் சென்று என் வருகையை முன்னமே அறிவிப்பாயாக!” என அந்தக் காட்டு வண்டிடம் தூது அனுப்பினான்.

“நான் அவளைக் கண்டு வரும் வரை நீ காவலுக்கு இரு முத்தழகா..” தகவலோடு சேர்த்து அவனுக்குக் கட்டளையும் பிறப்பித்தான்.

அவன் காதலி வேறு யாருமல்ல, அனைத்து ஆண்களையும் தன் அழகால் கட்டிப்போட்டு , எவருக்கும் பணியாமல் கம்பீரமும், அறிவுக்கூர்மையும் அதிகம் உள்ள சாட்சாத் நந்தினி தேவியார் தான். 

 

அரசர் முதல் ஆண்டி வரை அவளிடம் பணிந்து போகாதவர்கள் இல்லை எனலாம். அப்படிப் பட்டவள் ஆசை கொண்டது நம் நாயகன் ஆதித்யனை கண்டு மட்டும் தான். 

 

வீரத்திலும், தனித்து செயல்படும் திறமையாலும் அவளை ஆட்கொண்டிருந்தான் ஆதித்யன்.  அதற்கு மேல் அவன் காதல் , உரிமையுடன் அவளைக் கடிந்து கொள்ளும்போதும் , உள்ளுக்குள் அதை ரசிக்கத் தான் செய்வாள். அவனுடன் வாக்குவாதம் செய்வதிலும் சரிசமமென நிற்பாள். 

 

இரண்டு மாதங்களாக தங்களுக்குள் எழுந்த வாக்குவாதத்தால் ஆதித்யன் இன்னும் அவளைக் காணாமல் இருப்பது அவளுக்கு மனவேதனையை அதிகரித்தது. 

எதைக் காணினும் வெறுப்பே மிஞ்சியது. ஊரில் இருக்கும் அனைவரும் சுகமாக இருக்க தான் மட்டும் துன்பக் கடலில் மூழ்கியது போல தோழியிடம் புலம்புவாள். 

 

” நடு இரவு இருட்டாக இருக்கின்றது. பேசுகின்ற சொல் ஒலிகளும் அடங்கிவிட்டது. வெறுப்பின்றி உலக மக்கள் நிம்மதியாக உறங்குகையில் யான் மட்டும் உறங்காமல் கண்களில் பசலை படர்ந்து தவிக்கின்றேன் தோழி! ” 

 

இப்படி உண்ணாமலும் , எதிலும் நாட்டமில்லாமலும் , வாயில் வந்ததைப் புலம்பிக் கொண்டு மெலிந்து கிடந்தாள். 

 

இந்நிலையில் போர் மூளும் அறிகுறியும் அவள் அறியாமல் இல்லை. மிகுந்த வருத்தத்துடன் நந்தினி இருப்பதைக் கண்ட தோழி , 

 

” ஓடும் புறவியென ஓடாத பனைமரக் குதிரையில் ஏறுவர், மணம் வீசும் மாலையென மொட்டு மலராத எருக்க மாலையை சூடுவர், வீதியில் பிறரால்  நகைக்கப் படுவர், இறுதியில் உயிர் விடவும் துணிந்து விடுவார் இந்த காதல் நோய் வயப்பட்டவர்கள்” என உரைத்தாள்.

 

 அன்று காலையில்தான் யாருக்கும் தெரியாமல் குறி சொல்பவளை அழைத்து ,  ஆரூடம் கேட்டிருந்தாள். 

நந்தினி தான் அணிந்திருக்கும் வெண்சங்கினால் பதமாகச் செய்யப்பட்ட வளையல்கள்  கையை விட்டு நழுவி விழும் அளவிற்கு காதல் துயரால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் வேளையில் , 

 

கட்டுவிச்சி(குறத்தி) , அவ்வளையல்கள் கீழே விழும்முன் அவளை ஆறுதல் மொழிகளால் தெறிற்றினாள்.

 

” தலைவன் வரும் பாதை இன்னும் அரை காத (பாதி தூரம் ) தூரம் மட்டுமே உள்ளது. உன்னை அணைக்க அவன் கரங்களும் துடிப்பதை நீ அறியாயோ! காதல் நோய்க்கு மருந்து கொண்டு வந்து உன்னை தேற்றும் நாள் இன்றே!

 இன்றே உன்னை மணம்புரிந்தாலும் நன்றே!

உன் மனத்தை நிறைத்த எனக்கு நீ அள்ளிக் கொடுப்பாயாக! ” என நற்செய்தி கூறி நந்தினியிடம் பொருளும் வாங்கிச் சென்றாள் அந்த 

மலைக் குறத்தி . 

 

நந்தினியின் உள்ளமும் முகமும் மலர , அவளுக்கு பொருளை வாரிக் கொடுத்து வழியனுப்பினாள். 

 

தோழி பரிகாசம் செய்ததையும் பொருட்படுத்தாமல் , தலைவன் வரவை எண்ணி காத்திருந்தாள். 

 

முத்தழகனுடன் பேச்சைக் கடத்தாமல் , விரைந்து வந்தான் ஆதித்யன்.

நந்தினியின் அரண்மனை பின் புறம் மதில் சுவர் தென்படவும் புறவியிலிருந்து கீழே குதித்தான். கூடவே முத்தழகனும் இறங்க,

 

அங்கிருந்த மாந்தோப்பில் , கிளைகள் தழைத்து வளர்ந்த அடர்ந்ததொரு மரத்தின் அருகில் சென்று புரவியை கட்டினான்.

 

” அழகா! இதுவே சரியான இடம்! இந்த காரிருள் மற்றவர் கண்களிலிருந்து எங்களை மறைய செய்யும். நான் இங்கேயே காத்திருக்கிறேன். விரைந்து சென்று நந்தினியின் தோழி மூலம் அவளுக்கு தகவல் கொடுத்து இங்கே வரச் சொல்.” அவனை விரட்டினான்.

 

நந்தினியின் மாளிகை மதில் சுவர் கண்டதிலிருந்தே அவனுக்குள்  காதல் பெருக்கெடுத்து ஓடியது. குறிப்பறிந்து முத்தழகனும் விரைந்தான்.

 

அந்த கோட்டைக்குள் செல்லும் ரகசிய பாதையை சரியாக அறிந்து வைத்திருந்தான் முத்தழகன்.

உள்ளே சென்று அந்தப் புறத்திலிருக்கும் மரங்களைத் தாவித் தாவி  , மாடத்தின் ஒரு பக்கச் சுவரைப் பிடித்துக் கொண்டான்.

 

அனைவரும் உறங்கி கொண்டிருந்த சமயம் , சிறு சத்தம் கேட்டதும், நந்தினியும் அவளது தோழியையும் பரபரப்பு தொற்றிக் கொள்ள, வெளியே வந்து எட்டிப் பார்த்தனர்.

 

மாடத்தின் விளிம்பில் முத்தழகன் மாறுவேடத்தில் இருப்பது தூண்டாவிளக்கின் வெளிச்சத்தில் அரைகுறையாகத் தெரிய,

தோழி நந்தினியை உள்ளேயே இருக்கச் சொல்லிவிட்டு வந்து எட்டிப் பார்த்தாள்.

 

அதைக் கண்ட முத்தழகன்,  ” மாந்தோப்பில் இளவரசர் காத்திருக்கிறார். விரைந்து நந்தினி தேவியார் வர வேண்டும்! பின் புற ரகசிய பாதையில் காத்திருக்கிறேன் ” சுருங்கச் சொல்லி  அங்கிருந்து விரைவாக மறைந்தான்.

நந்தியின் மனத் துயர் விரைந்து நீங்கியது அவளுக்கு மட்டற்ற மகிழ்ச்சியளிக்க , உடனே ஓடிச் சென்று நந்தினியிடம் விஷயத்தைக் கூறினாள்.

 

அவள் கழுத்தில் இருந்த முத்துமாலை தெரித்து விழும் அளவிற்குத் துள்ளி குத்தித்து எழுந்தாள் நந்தினி. பசலை படர்ந்த கண்கள் இப்போது நிலவின் ஒளியைப் போல பிரகாசமானது.

 

நிலைக் கண்ணாடியின் முன் சென்று நின்று தன் அழகைக் கண்டாள். மெலிதாக கலைந்திருந்த கேசத்தையும் தோழி சரி செய்ய , புதிய மேலாடையை மாற்றிக் கொண்டாள்.

யாரும் பார்க்கும்முன் அரை நொடியில் அங்கிருந்து கிளம்பினர் இருவரும்.

 

நந்தினியின் அறையிலிருந்தே பின் புற வாசலுக்கு செல்லும் வழி ஒன்று உள்ளது. அதில் ஒருவர் மட்டுமே செல்ல முடியும். முதலில் தோழி சிறு விளக்குடன் செல்ல,

 

அந்த வெளிச்சத்தின் துணையோடு பின்தொடர்ந்தாள் நந்தினி.

 

 

முத்தழகனை கண்டதும் ,

” நான் இங்கேயே காவலுக்கு இருக்கிறேன் தேவி! சென்று வாருங்கள்! உங்கள் உள்ளக்கிடங்கை இளவரசரிடம் தெரிவியுங்கள்.” சிரித்துக் கொண்டே வழியனுப்பினாள்.

 

மிகுந்த ஆவலுடன் முத்தழகனுடன் சென்றாள் நந்தினி. நீண்ட நாட்களுக்குப் பிறகு சந்திக்கப் போவதை நினைத்தும் படபடத்தது அவள் இதயம்.

 

மாந்தோப்பை அடைந்ததும் அதன்  வேலியோரமே நின்று கொண்டான் முத்தழகன்,

“இங்கிருந்து பத்தாவது மரத்தின் கீழ் இளவரசர் காத்திருக்கிறார் தேவி. நான் இங்கேயே காவலுக்கு நிற்கிறேன். தொடர்ந்து செல்லுங்கள்!” என்றான்.

 

சிறு தலையசைப்புடன் அங்கிருந்து ஆதித்யனை நோக்கி நடந்தாள். நந்தினி வருவதை அவளது கால் சிலம்பொலி பறைசாற்றியது.

 

ஆதித்யனனின் காதுகளில் இன்னிசையாக ஒலித்தது. அகிலின் நறுமணம் நாசியத் துளைத்து அவனை மயக்கம் கொள்ள வைத்தது.

மரத்தின் பின்னால் சாய்ந்து நின்று அந்த சுகமான நறுமணம் தன்னை நோக்கி வருவதை மெய் மறந்து சுகித்துக் கொண்டிருந்தான்.

 

நந்தினி அந்த இருட்டில் அவன் நிர்ப்பது தெரியாமல் வர, அவளின் மணம் அருகில் வந்ததை அதித்யனுக்கு உணர்த்தியதும்  பாய்ந்து அவன் கையைப் பிடித்து தன்னுடன் அணைத்துக் கொண்டான்.

 

அவனிடம் இந்த சில்மிஷங்களை எதிர்ப்பார்த்து வந்த நந்தினியோ கலக்கம் கொள்ளாமல் அவனுக்குள் பொருந்திப் போனாள்.

அவளின் வாசம் முழுதும் தனக்குள் இழுத்துக் கொள்ளும்படி அவனது புஜங்கள் அவளை அத்தனை இறுக்கமாகப் பற்றியிருந்தது.

 

நீண்ட நாட்களுக்குப் பிறகான அவனது அணைப்பில் நந்தினி மயங்க,

 

“யாரோ இன்னும் கோபம் தணியாமல் இருப்பதாகக் கேள்விப் பட்டேன். அவரைக் காணவில்லை. வரும் வழியில் நீர் பார்த்தீரோ ?!”  குறும்புடன் வினா எழுப்பினாள்.

 

“அவன் என்றோ சிறைபிடிக்கப் பட்டு நந்தினி தேவியின் இதயத்தில் ஆயுள் கைதியாக இருப்பதாகக் கேள்வி.”  சிறிதும் சளைக்காமல் ஆதித்யன் பதில் தர,

 

“ஓஹோ! அப்போது தாங்கள் யார்? வந்த நோக்கம் ?” வாள் பிடிக்கும் கையோடு தன் கரங்களை கோர்த்து நின்றாள்.

 

“நான் நந்தினி தேவியின் அந்தரங்கச் சேவகன்.” இடைவரை குனிந்து பணிய,

 

“ இளவரசே! என்ன இது ! நான் விளையாடினேன்!” அவன் செய்கை அவளை பதறச் செய்ய,

 

“தேவி! இந்த பரந்த ராஜ்ஜியத்தின் அரசனாக நான் இருக்கப் போவதை விட, உனது இல்லதரசனாக இருப்பதையே பாக்கியமாகக் கருதுகிறேன். ஒரு சாதாரணப் பிரஜை  எந்த அரசியல் கவலைகளுமின்றி வாழ்வினை ரசித்து வாழ்வது போல நானும் உன்னோடு வாழவே ஆவல் கொள்கிறேன்.” அவளை நெஞ்சோடு சாய்த்துக் கொண்டு கூற,

 

அவளும் உள்ளம் குளிர்ந்தாள்.

 

“ உங்களைப் போன்ற மாவீரன் இந்த நாட்டைக் காப்பது போல சாதாரணப் பிரஜை செய்துவிட முடியுமா! என் கணவன் இந்நாட்டின் காவலன், மக்களின் காவலன் , வெல்ல முடியாத வீரன் என்பதே எனக்குப் பெருமை தருகிறது ஐயனே!” அவனது மார்பின் தழும்புகளை கைகளால் அளந்து கொண்டு மனதில் இருக்கும் கணவன் என்ற வார்த்தயை உச்சரித்தாள்.

 

அதைச் சரியாகப்  பற்றிக் கொண்டான் ஆதித்யன்.

 

“தேவிக்கு நாம் இன்னும் களவு வாழ்வு தான் வாழ்கிறோம் என்ற நிலை மறந்துவிட்டது போலும். கணவன் இன்னும் இல்லை” அழகாக புன்னகைத்தான் அந்த வீரன்.

 

“ ஐயனே! என்று என் மனதை உங்களுக்குக் கொடுத்தேனோ அன்றே உங்களை கணவராக வரித்துக் கொண்டேன். எப்பிறப்பிலும் தாங்கள் தான் என் கணவன்” உணர்ச்சி மிக கூறினாள். கண்கள் கலங்கப் போகும் முன்,

“தேவி! எனக்கும் அப்படித் தான். உன்னைச் சேரும் நாளைத் தான் எதிர்ப்பார்க்கிறேன். அதற்குள் போர் மூளும் அறிகுறி உள்ளது. அதை நீயும் அறிவாய். வெற்றி மாலையோடு வந்து உன்னை கூட்டிச் செல்கிறேன். வருந்தாதே!” அவளை நேர் நிறுத்தி உறுதி கூறினான்.

 

“ வெற்றி நிச்சயம் உங்களுக்கே! அதில் சந்தேகமென்ன! இவ்வுலகில் தங்களை வெல்லும் ஒருவன் இன்னும் பிறக்கவில்லை.” அவனுக்கு இருக்கும் தைரியத்தை விட பல மடங்கு உறுதியாக அவள் பேசுவது அவனுக்கு பூரிப்பாக இருக்க,

 

“ ஒரு வேளை பிறந்துவிட்டால்…!” பரிகாசம் செய்தான்.

 

“ அப்படி ஒருவன் பிறப்பானாயின் , அது நம்  வாரிசாக இருக்கும்” பல்வரிசை தெரியக் கூறினாள்.

 

அவளின் பதில் அவனை மேலும் அவள் மேல் காதல் கொள்ளச் செய்தது.

 

பனிக்காற்றும் , அவளின் நயனபாஷையும் , அவளின் அழகும் அதித்யனைத் தூண்ட, நந்தினி என்னும் பேரழகை வாஞ்சையோடு அணைத்துக் கொண்டான்.

 

காதல் கூடியது. காலம் நேரம் மறந்து போகச் செய்தது.

அவன் கையிலிருக்கும் ராஜ முத்திரை மோதிரத்தை அவளுக்கு அணிவித்து காந்தர்வமனம் புரிந்தான்.

 

தென்றலும் சந்திரனும்  அங்கிருந்த இரவு நேரப் பட்சிகளும் திருமணத்தின் சாட்சியானது.

 

ஒருவருடன் ஒருவர் கலந்து விட, அன்றே அவனுக்கு நிகரான வாரிசை உருவாக்கினான் ஆதித்யன்.

 

வெற்றிமாலையோடு ஊரறிய மணமாலையும் கொண்டு வருவதாக வாக்களித்து பிரிய முடியாமல் சென்றான்.

 

 

 

.

 

 

 

 

 

 

 

error: Content is protected !!