tmn27

அத்தியாயம் 27

சிறுகச் சிறுக மயக்கமுற்று சுயநினைவை இழக்கப் போன கயலின் மனக்கண்ணில் கதிர் தோன்றினான்.அவளைப் “பாப்பு” என்று அழைத்துத் தன் வெள்ளைச் சிரிப்பை உதிர்த்தான்… எப்போதும் கயலுக்கு மயக்கத்தைக் கொடுக்கும் அவனது அந்தச் சிரிப்பு இன்று அவள் மயக்கத்தைத் தெளிவித்தது…கதிரின் முகமும் சிரிப்பும் அவள் உடலில் புது ரத்தம் பாய்ச்சி சந்திரனிடம் அவள் தன்னை இழந்துவிடக் கூடாது என்ற வைராக்கியத்தைக் கொடுத்துது…அது தந்த தெம்பில் தன் உடல் பலத்தை எல்லாம் திரட்டியவள் சந்திரனைத் தாக்க ஏதேனும் ஆயுதம் கிடைக்கின்றதா என்று கைகளால் துழாவினாள்.என்றோ யாரோ குடித்துவிட்டுப் போட்டிருந்த பெரிய மதுபான பாட்டில் அங்கே கிடந்தது.

அதைக் கண்டவளுக்கு எங்கிருந்து தான் அத்தனை பலம் வந்ததோ…கயலிடம் இருந்து எதிர்ப்பு நின்று விட்டிருந்த படியால் தன் பிடியை சற்று தளர்த்தியிருந்தவனைக் காலால் எட்டி உதைத்துத் தள்ளியவள்… அவன் சுதாரிக்கும் முன் அந்த மதுபான பாட்டிலை எடுத்து அவன் தலையில் அடித்து உடைத்து இருந்தாள்.மண்டை உடைந்து ரத்தம் பீரிட்டு வழிந்து கொண்டிருந்தவனைப் பார்த்து,

”பொறுக்கிப் பயலே…என்னை ஆருன்னு நினைச்சே…மயிலம்மை ரத்தம்டா… வெற்றிவேலு தங்கச்சி…
கெடா மாடு மாதிரி நீ உடம்பை வளர்த்து வச்சிருக்கலாம்…ஆனா எனக்கு உன்னைய விட நெஞ்சுரம் ஜாஸ்திடா… எனக்குப் புருஷனாகனும்னு நினச்ச இல்ல…தைரியம் இருந்தா இப்ப என்கிட்ட வாடா…”என்றவள்

“இந்தக் கை தான என் தாவணியக் கிழிச்சுச்சு…”என்றவள் உடைந்து போன மதுபான பாட்டிலின் கூரிய முனையால் அவன் கையில் சகட்டுமேனிக்குக் கீறி இரத்தக்களரி ஆக்கினாள்.அப்படியும் கோபம் தணியாமல் வெறிவந்தவளாய் கண்மண் தெரியாமல் “ஏண்டா இப்படிச் செஞ்ச…ஏன் இப்படிச் செஞ்ச…”என்று விடாது புலம்பியவாறு அவன் உடலில் இன்ன இடமென்று இல்லாமல் அத்தனை இடங்களிலும் குத்திக் குத்தி அவனைக் குற்றுயிர் ஆக்கினாள்.

ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் காயத்ரி தேவியும் காளி தேவியும் குடி கொண்டிருக்கின்றனர்.எவன் ஒருவன் அவள் பெண்மையைச் சீண்டுகிறானோ அவன் அவளுள் இருந்து வெளிப்படும் காளிதேவியை எதிர் கொண்டே ஆக வேண்டும்.உக்கிரம் நிறைந்த வக்கிர காளியாய் கோரத்தாண்டவமாடி அவன் சுயநினைவை இழக்க வைத்தவள் தன் கையில் இருந்த கண்ணாடித் துண்டைக் கீழே வீசி எறிந்துவிட்டு அப்படியே சரிந்து மடிந்து தரையில் விழுந்து வாய்விட்டு கதறி அழுதாள்.

“ஐயோ…ஏன்டா இப்படிச் செஞ்ச…நான் கதிர் மாமாவுக்கு மட்டும் தான்னு சொன்னேனேடா…இப்ப நான் எந்த மூஞ்சிய வச்சுக்கிட்டு ஏன் மாமாவப் பார்ப்பேன்… கடவுளே கதிர் மாமா மட்டுமே பார்க்க வேண்டிய கோலத்துல என்னைய வேற ஒருத்தன் பார்த்துட்டானே…நான் என்ன பண்ணுவேன் நான் கதிரு மாமா இல்லாம எப்படி வாழுவேன்…இந்த அசிங்கத்தை அவருகிட்ட சொல்லும்போதே என் உசுரு போயிருமே…இது வெளியே தெரிஞ்சா என் குடும்பத்துக்கு எம்புட்டு அசிங்கம்… அவமானம்…அம்மா எனக்குப் பயமாயிருக்கே…” என்று அழுது கரைந்தவள் ஒரு முடிவுக்கு வந்தவளாய் தன் கண்களைத் துடைத்துவிட்டு

“ம்ஹூம்…இத யாருகிட்டயும் நான் சொல்ல மாட்டேன்…கதிரு மாமாவக் கல்யாணம் பண்ணுற தகுதியை இழந்துட்டேன்…அவரு கூட வாழ முடியாட்டி நான் எதுக்கு உசுரு வாழனும்…அவரால தொட முடியாத இந்த உடம்பு எதுக்கு…வேணாம்…என் காதல்,நேசம், ஆசை,பாசம் எல்லாம் என்னோட மறைஞ்சு மண்ணாப் போகட்டும்…” என்று தனக்குத்தானே கூறிக் கொண்டவள்,ஒரு விரக்திச் சிரிப்போடு

“கதிர் மாமா உங்க கயல் போறா…உங்களை எல்லாம் விட்டுட்டு ஒரேதா கயல் போகப் போறா…உங்களுக்குத் தொல்லை கொடுக்க இனி இந்தக் கயல் இருக்க மாட்டா… இனிமேலாவது நீங்க நிம்மதியா இருங்க…என் உசுரு போனாலும் என் மனசு உங்களேயே தான் சுத்தி சுத்தி வரும்”என்று கூறியவள் எழுந்து தன் தாவணியைத் தேடி எடுத்துக் கிழிந்திருந்த ரவிக்கை பகுதியை மறைத்து அணிந்து கொண்டு சந்திரனைப் பார்த்தாள்.
அவன் கன்னக் கதுப்புகள் லேசாகத் துடித்ததைக் கண்டவள்”எருமைமாட்டுப் பயலே இன்னுமா நீ உசுரோட இருக்க…”என்றவள் அவளை அவன் கட்டி வைத்திருந்த நாற்காலியைத் தூக்கி அவன் மண்டையில் ஓங்கி ஒரு போடு போட்டு விட்டு திரும்பியும் பார்க்காமல் நடந்து வீடு வந்து சேர்ந்து விட்டாள்.

கயலைத் தேடும் முயற்சியில் இருந்ததால் யாருமே பின்வாசல் வழியே உள்ளே நுழைந்த அவளைக் கவனிக்கவில்லை… நேரே குளியல் அறைக்குச் சென்றவள் தீயாய் அறிந்த சந்திரன் கைபட்ட இடங்களை எல்லாம் தோல் பெயர்ந்து போகும் அளவு தேய்த்துக் குளித்தாள்.இரவு எல்லோரும் தூங்கியதும் பூச்சி மருந்தை எடுத்து குடித்து விட்டு நீட்டி நிமிர்ந்து விட்டாள்.இதையெல்லாம் கயல் மதுமதியிடம் கூறி முடித்த போது வெளியே நின்று அத்தனையும் கேட்டிருந்த கதிர் பாய்ந்து வந்து கயலை வாரி அணைத்துக் கொண்டான்.கதிர் உள்ளே நுழைந்ததுமே மதுமதி இங்கிதமாய் அறையிலிருந்து வெளியேறி விட்டாள்.

“பாப்பு…எம்புட்டு கஷ்டப்பட்டுருக்கம்மா… அவன் கிட்ட என்ன பாடெல்லாம் பட்டிருக்க… உன்னைய இப்பிடி தனியா தவிக்கவிடவா குத்துக்கல்லு மாதிரி நான் இருக்கேன்… அவனுக்குச் சாவு என் கையால தான் பாப்பு…” என்று அவளை அணைத்தவாறே கூறியவனைத் தள்ளி நிறுத்திய கயல், “என்னைய தொடாதீங்க மாமா…நீங்க தொடுற தகுதிய நான் இழந்துட்டேன்” என்று அழுகையுடன் கூறினாள்.

“இல்ல பாப்பு அதெல்லாம்…” என்று ஏதோ கூற வந்தவனை மறித்தவள்,”மாமா அவன் என்னை முழுசா ஆளலை தான்…இன்னும் நான் கன்னிதான்.ஆனா அவன் என்னைய தொடக்கூடாத இடத்தில் எல்லாம் தொட்டுட்டானே…பாக்கக் கூடாத இடத்தை எல்லாம் பாத்தட்டானே…நான் களங்கப்பட்டுப் போயிட்டேன் மாமா…சாமிக்கு எச்சிபட்டத யாரும் படைக்க மாட்டாங்க…நீங்க என் சாமி…உங்களுக்கு நான் வேண்டாம்… உங்கள கல்யாணம் பண்ணிக்கிற தகுதிய நான் இழந்திட்டேன்…நீங்க வேற யாரையாவது…” என்றவளின் வாயை இறுக மூடினான் கதிர்.

“வேணாம் பாப்பு…எதுவும் சொல்லாத…நீ புனிதமானவடா…உன் மனசு சுத்தமானது…நீ குழந்தைடா…களங்கம் அது இதுன்னு பெரிய வார்த்தை எல்லாம் சொல்லாத…அவன் உன்னைய இன்னும் வேற ஏதாவது செஞ்சுருந்தாலும் நான் அதை இதத்தான் சொல்லுவேன்…” என்றவனிடம், “இல்ல மாமா அவன் என்னைய அழுக்காக்கிட்டான்…என் உடம்பப் பாக்கும் போது சாக்கடைல விழுந்து எழுந்திரிச்ச மாதிரி எனக்கே அருவருக்குது…” என்றவளிடம்

“பாப்பு…நீ எதைச் சொல்றியோ அந்த அழகெல்லாம் இல்லாம நீ பாவடை சட்டையில திரிஞ்ச காலத்துல இருந்தே உன்னைய நேசிச்சவன்டா நான்…
என் ஊகம் சரின்னா அவன் உன்னைய தொட்டப்ப கூட உன் மனசுல நான்தான் வந்திருப்பேன்…என்ன நான் சொல்றது சரியா…”என்றான்.

அன்று அந்த நிலையிலும் தன் மனக் கண்ணில் உதித்த கதிரின் முகத்தை நினைத்துப் பார்த்தவள்.’ஆம்’ என்று தலை ஆட்டினாள்…”அது தான்டா என் கயல் தெருவில போகும்போது நாய் கடிச்சிட்டா அதுக்காகத் தெருவில் இறங்கியே போகாமலா இருந்திருவோம்… இல்லல்ல… இப்ப நாய் உன்னைக் கடிக்கக் கூட இல்ல சும்மா பிராண்டியிருக்கு…அவ்வளவுதான்… இதுக்குப் போய் இவ்வளவு வருத்திக்கலாமா…எது நடந்திருந்தாலும் கதிர் மாமா நமக்கு இருக்கான்னு நினைக்காமல் நீ பூச்சி மருந்து குடிச்சததான்டா என்னால இன்னும் தாங்கிக்க முடியல…”என்றவன் தான் நீளமாய் இத்தனை பேசியபோதும் தெளியாதவளைக் கண்டவன்,

“ பாப்பு…இவ்வளவு நாளாச்சும் என் மனச மறைச்சு அடக்கி வச்சிருந்தேன்…ஆனா எப்ப ஆஸ்பத்திரியில அந்தக் கோலத்துல பார்த்தப்ப என் மனசத் திறந்தேனோ… இனிமே அது முடியாது…நீ மட்டும் என்னை ஏத்துக்கலைன்னா பைத்தியம் புடிச்சிப் போய் ‘ங்ங்கங்கஙக’ன்னு இல்லல்ல…’பாப்புபாப்பு’ன்னு தலையில கொட்டிக்கிட்டே திரிய ஆரம்பிச்சுடுவேன்…”என்று கூறியபடியே தலையில் கொட்டியவாறு அங்குமிங்கும் நடந்து சைகை செய்தவனைப் பார்த்து சிரித்து விட்டாள் கயல்.

“ம்ம்ம்…என் கயல் எனக்குத் திரும்பக் கிடைச்சுட்டா…சரி இனிமே கல்யாணம் வேணாம்னு சொல்ல மாட்ட இல்ல…”என்றவனிடம் ‘மாட்டேன்’ என்று தலையாட்டினாள். கயலிடம் பேசிவிட்டு வெளியே வந்தவனின் முகம் கோபத்தில் கனன்று கொண்டிருந்தது.சந்திரனை துவம்சம் செய்துவிடும் வேகத்தோடு வெளியேறியவனை வண்டியைத் துவக்கி வைத்தவாறு அதன் மேல் அமர்ந்திருந்த வெற்றிவேல்,”ஏறுடா வண்டியில…இந்த வருஷம் பெரிய கருப்பனுக்குப் படையல் போடலன்னா அம்மா வருத்தப்பட்டுச்சு…அந்தச் சந்திரனோட தலையைக் கொண்டு வந்து பெரிய கருப்பனுக்கு இன்னைக்குப் படைச்சுடருவோம்…”என்று கூறி விட்டு புயல் வேகத்தில் வண்டியை செலுத்தினான் வெற்றிவேல்.மருத்துவமனையை அடைந்தவர்கள் அவன் அனுமதிக்கப்பட்டிருந்த அறைக்குள் போய்ப் புலிகளாய் நுழைந்தனர்.இவர்களைக் கண்டு எந்தப் பயமும் இல்லாமல் அமர்ந்திருந்தவனைப் பார்த்து கதிர்,

“பாருடா வெற்றி…என்ன தெனாவெட்டா உட்கார்ந்து இருக்கான்னு…இவன…”என்று கோபமாக அவனை நெருங்கியவன் அவன் கன்னத்தில் ஓங்கி அறைந்து அவனைக் கீழே தள்ளிய போதும் கூட எதுவும் பேசாமல் மிரண்டு போய் மலங்க மலங்க விழித்தபடி இருந்தான் சந்திரன்.அவனிடமிருந்து குறைந்தபட்சம் எதிர்ப்பையாவது எதிர்பார்த்திருந்தவர்களுக்கு அவனது இந்தச் செய்கை குழப்பத்தை ஏற்படுத்தியது.

அதற்குள் அறைக்குள் நுழைந்து இருந்த தருமர் “ஐயோ…கீழே விழுந்துட்டானா…” என்று பதறியவாறு ஓடிவந்து அவனைத் தூக்கி கட்டிலில் அமர வைத்தார்.”இவனுக்கு என்ன ஆச்சு” என்றான் வெற்றிவேல் இன்னுமும் தணியாத கோபத்தோடு…
“அதை ஏன் கேக்குற வெற்றி…தலையில் பலமாக அடிபட்டதால மூளை நரம்பு பாதிச்சு புத்தி சுவாதீனம் தப்பிப் போயிருச்சாம். இனிமே இவன் இப்படித்தான் இருப்பானாம். பொம்மை மாதிரி…எந்த படுபாவி அடிச்சு போட்டானோ…இவன் எதுக்கு அந்தப் பாழடைஞ்ச இடத்துக்குப் போனானோ… ஒண்ணும் புரியல…ஒண்ணுக்கு ரெண்டுக்கு எல்லாம் படுக்கையிலேயே தான் போறான்…என் காலம் இருக்கிற வரைக்கும் தாங்குவேன்… அதுக்கப்புறம்…இவன் என்ன ஆவான்”என்று சிறு குழந்தை போலத் தேம்பித் தேம்பி அழுதார் தருமர்.

இவை அனைத்திற்கும் உணர்ச்சியற்ற ஜடமாக அமர்ந்திருப்பவனைக் கண்ட இருவரும் மௌனமாய் வெளியேறினர்.”இப்படி ஆகி போயிருச்சேடா வெற்றி…அவனைக் கண்டந்துண்டமா வெட்டி போட்டுறனும் நினைச்சுத் தான் வந்தேன்டா…”
என்றவனிடம் “விடுடா அவன் இப்ப செத்த பாம்பு மாதிரி…அவனை அடிச்சு என்ன பண்ண…” என்று கூறினான் வெற்றிவேல். என்னதான் வெற்றிவேல் பேசினாலும் அவனிடம் ஒரு ஒதுக்கத்தை உணர்ந்தான் கதிர்…அது தன் மனதை அவனிடம் மறைத்ததால் வந்திருக்க வேண்டும் என்று எண்ணியவாறே வீட்டிற்கு வந்ததும்,

“வெற்றி என்னை மன்னிச்சிருடா..
அ…அது வ…ந்து கயல்… நான்”
என்றவனைக் கடுமையான முகத்துடன் ஏறிட்டான் வெற்றிவேல்.இதைக் கண்ட கதிர் உன்னால என்னை உன் தங்கச்சிக்கு புருஷனா ஏத்துக்க முடியலையா வெற்றி” என்று பரிதவிப்புடன் கேட்டான்.இதற்கும் அவனிடமிருந்து பதில் எதுவும் வராததால் இனி என்ன செய்வது என்ற சிந்தனையுடன் அங்கிருந்து நகரப் போனவனை
“டேய் நில்லுடா…” என்ற வெற்றிவேலின் குரல் தடுத்து நிறுத்தியது.திரும்பிப் பார்த்தவன் அங்கே முகம் மலர்ந்து சிரிப்புடன் நின்று கொண்டிருந்த வெற்றிவேலைக் கண்டான்.
“எப்பிடி எப்பிடி…நீங்க சொல்லாட்டி எங்களுக்குத் தெரியாதா…போடா டேய்…பத்து வருஷத்துக்கு முன்னாடியே உன் திருட்டு முழியை வெச்சே கண்டுபிடிச்சுட்டேன்…நீயா சொல்லட்டும் இருந்தேன்…கடைசி வரைக்கும் சொல்ல மாட்டேனுட்டியேடா…சரி நாமளாவது சொல்லவப்போம்னு தான் அந்த மாப்பிள்ளையைப் பத்தி உன்னைய விசாரிக்கச் சொன்னேன்…அமுக்குளிப் பயலே…அப்ப கூட நீ சொல்லலையே… டேய் என் தங்கச்சிக்கு உன்னைய விட நல்ல மாப்பிள்ளை எங்கடா கிடைப்பான்” என்றவனிடம்

“இல்லைடா வெற்றி உன் அந்தஸ்து…”என்றவனிடம் “அடப்போடா என்ன பெரிய அந்தஸ்து…என் கவலையை உன் கவலையை நினைக்கிற…என் சந்தோஷத்தை உன் சந்தோசமாகக் கொண்டாடுற அப்புறம் அந்தஸ்து மட்டும் என்ன…எல்லாம் எனக்குரியது தாண்டா உனக்கும்…ஆனா நீ என் தங்கச்சிய கட்டிக்கிறனும்னா ஒரு கண்டிஷன்” என்றவனிடம்

“ என்ன வெற்றி சொல்லு…” மில்லுல பட்டு நூல் செக்சன் தொடங்கப் போறேன்…அதுக்கு நீதான் முதலாளி” என்றான்.இதைக் கேட்ட கதிர் “இல்ல வெற்றி…இதுக்காக எல்லாம் நான் கயலக் கட்டல…”

“தெரியும்டா நீ ஒரு தன்மான சிங்கம்ன்னு எனக்குத் தெரியும்…ஆனா நான் ஒண்ணும் என் காசத் தூக்கிக் குடுக்கல…இத்தனை நாளா நீ மில்லில் வேலை பார்த்ததுக்கான சம்பளக் காசு தான் அது…என்ன புரியலையா…நான் உன்னைய மில்லுல வொர்கிங் பார்ட்னரா தான்டா காட்டியிருக்கேன். பார்ட்னருக்கு என்ன வருமானம் வருமோ அதை வச்சுத்தான் பட்டுநூல் செக்ஷன் தொடங்கப் போறேன். உனக்குக் கல்யாணம் ஆகும் போது இதைச் சொல்லலாம்னு இருந்தேன்.கயல்ன்னு இல்ல நீ யாரக் கல்யாணம் பண்ணி இருந்தாலும் இதைத்தான் நான் செஞ்சு இருப்பேன்” என்ற வெற்றிவேல் தன்னை நியாயவாதி என்று நிரூபித்தான்.

“ உனக்கு வேற வழியே இல்லடா மாப்பிள்ள… இதை ஏத்துக்கிட்டு தான் ஆகணும்”என்றவனைப் பார்த்துச் சம்மதமாய்ச் சிரித்தான் கதிர்.அதன்பின் எதிர்வந்த முகூர்த்தத்திலேயே கயல்-கதிர் திருமணம் வெகு விமர்சையாகத் தேவனூரையே ஒரு கலக்கு கலக்கி நடைபெற்றது.

அன்று முதலிரவு!மதுமதியின் கைங்கரியத்தால் நிலவென ஜொலித்த கயல் கதிரின் அறைக்குள் நுழைந்தாள். அவளைப் புன்னகையுடன் வரவேற்று அழைத்துச் சென்றவன் கட்டிலில் அமர வைத்தான்.அவளிடம் இதுவரை பேசாத பேச்சையெல்லாம் பேசி சொல்லாத காதலையெல்லாம் பகிர்ந்து கொண்டான் கதிர்.” சரி பாப்பு…ரொம்பக் களைச்சுப் போயிருக்கத் தூங்கு” என்றான்.’ஏன் இவரு நம்மள நெருங்கவே இல்லை’ கயல் துணுக்குற்றாள்.’ஒருவேளை நாம’ என்று கண்டதையும் போட்டுக் குழப்பிக் கொண்டவள் அவனிடமே அதைக் கேட்டும் விட்டாள்.அதற்குச் சத்தமாகவே சிரித்த கதிர், “ஏய் லூசு அதை நீ மறக்கவே மாட்டியா” என்று அவள் தலையை ஆட்டி வைத்தவன்

“பாப்பு நமக்கு முன்னாடியே கல்யாணம் ஆயிருச்சு வெற்றிக்கு மதுவுக்கும்.அவங்க வாழ்க்கை சந்தோஷமா இல்ல.மாறாக மேலும் மேலும் சிக்கலாகி கிட்டு இருக்கு.அவங்க ரெண்டு பேருக்குள்ளேயும் எல்லாம் சரியாகனும்.அவங்க நிம்மதியா வாழனும்.அப்பத்தான் என்னால உன்கூடச் சந்தோஷமா வாழ்க்கையை ஆரம்பிக்க முடியும்.அவங்க வருத்தத்தோட இருக்கும் போது நாம எப்படிச் சந்தோஷமாயிருக்கிறது சொல்லு”என்றவனை நெருங்கி இறுக அணைத்துக் கொண்டாள் கயல்.

“ஏய் பாப்பு…நானே ரொம்பக் கஷ்டப்பட்டு உன்கிட்ட இருந்து விலகி இருக்கிறேன்…
நீ இப்படி எல்லாம் பண்ணி என் விரதத்தைக் கெடுத்து விட்றாத…” என்றான் குறும்பாய்ச் சிரித்தவாறே.கயலும் அவனோடு சேர்ந்து சிரித்தாள்.மறுநாள் கதிரிடம் வந்த வெற்றிவேல் அவர்களின் தேனிலவுக்கு ஏற்பாடு செய்திருப்பதாகக் கூறினான்.

“டேய் வெற்றி இதெல்லாம் எதுக்குடா…” என்ற கதிரிடம் “தேனிலவு எதுக்குன்னு கேக்குற மொத ஆள் நீ தான்டா…ஒழுங்கா என் தங்கச்சிய கூட்டிட்டுப் போய்ச் சந்தோஷமா இருந்துட்டு வர்ற வழியப் பாரு” என்று உத்தரவாகவே குறிவிட்டுச் சென்றுவிட்டான்.கதிரும் கயலும் தேனிலவுக்கெனக் கோவா சென்று விடவே மிகவும் தனிமையாய் உணர்ந்தாள் மதுமதி.

அன்றைய இரவு நடந்த வாக்குவாதத்திற்குப் பின் வெற்றிவேல் மதுமதியிடம் பேசுவதில்லை.அவனுக்குத் தேவைப்படும் எதையும் அவளைச் செய்ய விடுவதும் இல்லை.அவனது ஒதுக்கம்
அவளை மிகவும் பாதித்தது.கதிர் கோவா செல்லும் முன் மதுமதியெடம் வந்தான்.

“மது நீ எனக்குக் கூடப் பிறந்த தங்கச்சி மாதிரி…அதனால சொல்றேன்…வெற்றிவேல் மேல தப்பு இருக்குன்னு நீ நினைக்கிற…ஆனா வெற்றிவேல் அன்னைக்குத் தப்புச் செஞ்சவனா சித்தரிக்கப்பட்டுடான்மா… அதுதான் உண்மை…இதுக்கு மேல நான் எது சொன்னாலும் அது நான் வெற்றிக்காகப் பரிஞ்சு பேசுற மாதிரி தான் இருக்கும். அவன புரிஞ்சுக்க முயற்சி செய்யும்மா. இப்பவும் அவன் மனசு பூரா நீ தான் இருக்க மது” என்றான்.

அன்னைக்கு என்னதான் நடந்திருக்கும் என்று குழம்பிக் கொண்டவள் ஒரு மாறுதலுக்காகத் தென்னந்தோப்பிற்குச் சென்று விட்டு வரலாம் என்று எண்ணினாள்.தோப்பிற்குச் சென்றவள் அங்கே அவள் கண்டது என்ன?

—தொடரும்

பெண் குழத்தைகள் இப்பல்லாம் குட் டச்,பேட் டச் பத்தி நல்லா தெரிஞ்சு வச்சிருக்காங்க… அதே சமயம் அவங்களுக்குத் தற்காப்புக் கலைகளையும் மன தைரியத்தையும் சொல்லிக் கொடுத்துப் பெற்றோர்கள் வளர்க்கணும்..எந்த சூழ்நிலையையும் எதிர்த்து நிக்குற மனத்திடத்தோட,போர்க் குணத்தோட பிள்ளைங்கள வளர்க்கணும்…ஏதாவது அசம்பாவிதம் நடந்துட்டாலும் முடங்கிப் போயிராம இந்த உலகத்த நிமிர்வோட எதிர்கொள்ளணும்…இதத் தான் கயல் மூலமா சொல்ல நினைச்சேன்…இது அறிவுரைலாம் இல்லை…நட்புக்களே…அறிவுரை சொல்ற அளவு நான் அப்பாடக்கர்லாம் கிடையாதுங்கோ…??சின்னப்புள்ள…சொல்லணும்னு தோணுச்சு…சொல்லிட்டேனுங்கோ…அடுத்த அத்தியாயம் இறுதி அத்தியாயம் நட்புக்களே… சென்ற அத்தியாயத்திற்கு ஆதரவு தந்த அனைத்து நட்புகளுக்கும் நன்றி…???உங்கள் கருத்துக்களை ஆவலுடன் எதிர் நோக்கும் பிரியாகுமார்…