Thithikuthey 17 & 18

Thithikuthey 17 & 18

பதினேழு

“வல்லவா என்னை வெல்லவா
கொஞ்சம் கொள்ளவா நெஞ்சை அல்லவா
வல்லவா என்னை வெல்லவா
உன்னை கண்டதே வரம் அல்லவா
பாதி கண்கள் மூடியும் பார்வை உன்னை தேடுதே
உன்னை எண்ணி எண்ணியே உள்ளம்தான் வாடுதே”

தொலைகாட்சியில் பாடல் சப்தமாக ஒலித்து கொண்டிருக்க… சமையலறையில் அதற்கேற்றார் போல கையில் கரண்டியை வைத்து கொண்டு அபிநயம் பிடித்து அந்த பாடலை பாடிக்கொண்டு சமையல் செய்து கொண்டிருந்தாள் நந்தினி… முகம் குறும்பையும் மகிழ்ச்சியையும் மீட்டெடுத்திருக்க… விட்டால் முழு நீள நடனத்தையே ஆடி விடுபவள் போல யாருமில்லா வீட்டில் கச்சேரி நடத்தி கொண்டிருந்தாள்.

முன்தினம் இருவருமாக சென்று வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி வந்திருந்தனர்… அளந்து வைத்தது போன்ற பொருட்கள்… படுக்கையறைக்கு கட்டிலும் மெத்தையும் மட்டும்… துணிகளை வைக்க அறையில் இருந்த செல்ப் போதுமென்று கூறிவிட… ஹாலுக்கோ ஒரு டிவி நான்கு சேர்கள் மட்டுமே… சமைக்க என்று இழுத்தவளை முறைத்து கொண்டு.

“நீ என்ன இப்போ சமையல் பண்ணி போடத்தான் வந்தியா? ஒழுங்கா படிக்கற வேலைய பாரு…” எப்போதும் போல அவனது ஆஸ்தான வசனத்தை எடுத்து விட.

“சமைக்க எவ்ளோ நேரம் மாமா ஆகிட போகுது? மொத்தமாவே ஒரு மணி நேரம் கூட ஆகாது… எத்தனை நாளைக்கு வெளிய வாங்கியே சாப்பிட்டுட்டு இருக்கறது? எனக்கெல்லாம் நாக்கே செத்து போச்சு…”

நந்தினிக்கு இனியும் சக்தி வெளியே சாப்பிடுவதா என்ற கவலை… உடல்நிலை கெட்டு விடுமே என்ற கவலையில் அவள் புலம்புவது போல ஓரக்கண்ணால் அவனை பார்த்து கொண்டே நடிக்க… யோசித்தான் சக்தி.

அவனுக்குமே வீட்டு சாப்பாடு கிடைத்தால் வேண்டாமென்றா சொல்லிவிட போகிறான்… வாழ்க்கையில் முதன் முறையாக தனது வீட்டில் தன் மனைவி சமைப்பது என்பது அவனுக்குமே மகிழ்ச்சி தருவதாகத்தான் இருந்தது… ஆனால் இதில் ஆழ்ந்து படிப்பை விட்டுவிடுவாளோ என்று பயந்தான்.

“ப்ளீஸ் மாமா… ப்ளீஸ்…” மூக்கை சுருக்கி கொண்டு அவனை காக்காய் பிடிக்க ஆரம்பித்தவளை கண்டு அவனால் புன்னகைக்கத்தான் முடிந்தது… எப்படியாவது சாதித்து விடுகிறாள்… திருடி! என்று மனதுக்குள் நினைத்துகொண்டான்.

“சரி… என்ன வேணும்ன்னு சொல்லு… ஆனா எதுவுமே அளவாத்தான் இருக்கணும்… உன் வீட்டுக்காரன் பர்ஸ் ஒன்னும் அவ்ளோ வெய்ட் கிடையாது… பார்த்துக்கோ…” வேண்டுமென்றே கறாராக சொல்வது போல காட்டிக்கொண்டாலும் சிறு புன்னகை அவனது இதழோரம் மலர்ந்து இருந்தது.

“பார்க்கறதா? நான் அதையேத்தான மாமா பண்ணிட்டு இருக்கேன்… ஆனா படியத்தான் மாட்டேங்குது…” என்று கண்ணடித்து விட்டு மளிகை சாமான்களை வாங்க என்று அந்த டிபார்ட்மென்ட் ஸ்டோரில் தப்பித்து போக… அவள் கூறியது அவனுக்கு ஒரு நிமிடம் கழித்தே அர்த்தம் புரிந்தது… மென் நகை பூத்தது… அவளது குறும்பை நினைத்து! நடுவில் பிரச்சனைகளால் தொலைந்து போயிருந்த அவளது பழைய குறும்பு மீண்டும் திரும்பி கொண்டிருப்பதை உணர்ந்தான்.

அவனிடம் தொனதொனத்துக்கொண்டே சமையலுக்கு தேவையான பாத்திரங்களை எடுத்தவளை மனதில் பாராட்டிக்கொண்டான்… தேவைக்கு அதிகமாக சிறு பொருளை கூட அவள் தொடவில்லை… வாங்கிய பத்திரங்களும் கூட அளவான ஆனால் தரமான பொருட்கள் தான்… சற்று விலை உயர்வாக இருந்தாலும் தரமான பொருட்களையே வாங்க.

“நந்தினி… அந்த இட்லி பாத்திரம் விலை கொஞ்சம் குறைச்சலா இருக்கு… அதையே எடுக்கலாமே…” வேண்டுமென்றே அவளிடம் விட்டு பார்க்க.

“ஒரு தடவை வாங்கினாலும் உருப்படியா வாங்கணும்… வருஷ கணக்குல நாம வெச்சு புழங்க வேண்டியது… அது பாருங்க… சுத்தமா வெய்ட் இல்ல… ஆறு மாசத்துல ஓட்டை விழுந்துடும் மாமா…” என்று அதற்கு அவள் விளக்கமளித்த போது மனதுக்குள் பாராட்டிக்கொண்டே.

“பொண்ணு தேறிடும் போல இருக்கே!” குறும்பாக மனதுக்குள் நினைத்துக்கொண்டான்.

சிறிய டேபிள் டாப் கிரைண்டர், மிக்சி என்று மிகவும் அளவாக வாங்கி கொண்டு வந்தவர்களுக்கு அன்று முழுவதும் வீட்டில் பொருட்களை பிரித்து போடுவதும் சிற்சில வேலைகளை செய்வதுமாகவே கழிய… அலைந்து திரிந்ததும் பயண களைப்புமாக இருவருக்குமே தூக்கம் கண்களை அழுத்தியது.

முதல் ஆளாக கட்டிலை நந்தினி பிடித்து கொள்ள… குளித்துவிட்டு வந்த சக்திக்கு எங்கு படுப்பது என்ற சந்தேகம் தோன்ற அறையின் நீள அகலத்தை அளக்க துவங்கினான்… கட்டிலில் படுக்கலாமா அல்லது கீழே படுப்பதா? குழப்பமான குழப்பத்தில் அவன் குழம்பி கொண்டு நின்றிருக்க… ஓரகண்ணால் கண்களை சுருக்கி அவனை பார்த்தவளின் முகத்தில் குறும்பு தாண்டவமாடியது.

“ஹலோ… என்ன நின்னுட்டு இருக்கீங்க?” அதிகாரமாக அவள் கேட்க… அவனுக்கு இருந்த தூக்கத்தில் அவளை தூக்கி கீழே போட்டுவிட்டு தான் கட்டிலை ஆக்கிரமித்து கொள்ள வேண்டும் போல இருந்தது.

“ம்ம்ம்… நீயே கட்டிலை பிடிச்சுகிட்டா… நான் எங்கடி படுப்பேன்…?” சண்டியராக நின்று கொண்டு அவன் கேட்க… அவன் புறம் திரும்பி படுத்து ஒரு கையால் தலைக்கு முட்டு கொடுத்து… கள்ளத்தனமான குரலில்.

“உங்களை ரேப் பண்ற ஐடியாவெல்லாம் எனக்கு இல்ல மிஸ்டர் சக்திவேல்… சப்போஸ் ஐடியா எதுவும் வந்துச்சுன்னா உங்க கிட்ட கண்டிப்பா சொல்லிடறேன்… அதுவரைக்கும் இங்கயே படுத்துகோங்க…” கண்ணடித்துவிட்டு அவளுக்கு பக்கத்தில் இருந்த இடத்தை காட்ட.

“அடிங்க…” என்று அடிப்பது போல பாவனை செய்துவிட்டு அருகில் படுத்தான்… அவளது சதி வேலைகளை பற்றி அறியாமல்! பெரிய கட்டிலாகத்தான் வாங்கியதே… ஆனாலும் ஒரே படுக்கையில் தன்னோடு இன்னொரு பெண்ணா என்கிற கூச்சம் அவனை ஆட்கொண்டிருக்க.

“வாலு… சரியான வாலு… இதையெல்லாம் பெத்தாங்களா? இல்ல செஞ்சாங்களா? என்னம்மா பேசுது!” என்று நினைத்து கொண்டு புன்னகையோடு உறங்க முயல.

“ஏங்க…” கெஞ்சலான குரலில் நந்தினி அழைக்க.

“என்னங்க?” என்று அவளை போலவே அழைத்து அவள் புறம் திரும்பி படுத்தான்.

“இன்னும் ரெண்டு தலைகானி வாங்கியிருக்கலாம்ல…” இவள் எதற்கு இப்படி கேட்க்கிறாள் என்று புரியாமல் அவளை பார்த்து.

“ஏன்?” என்று கேட்க.

“இல்ல… எனக்கு தூங்கும் போது அம்மா மேல கால் போட்டு தூங்கனும்… அப்படியே பழகிட்டேன்…” சிறுபிள்ளையாக அவனிடம் நந்தினி கூற… சக்திக்கு தூக்கி வாரி போட்டது.

“ஏய்… அதுக்கு என்னை என்னடி பண்ண சொல்ற?”அதிர்ந்து கேட்டது அவளுக்கு சிரிப்பை வரவைக்க.

“நீங்க ஒன்னும் பண்ண வேணாம் மாமா… ஒன்னும் பண்ணவும் மாட்டீங்க…” என்று கூறி கள்ளகுறும்புத்தனமாக சிரித்தவள்…”உங்க மேல காலை மட்டும் போட்டுகிட்டா…” அவளது குரலில் இருந்த குறும்பை உணர்ந்தவன்.

“உன் வாயை அடக்கியே வைக்க மாட்ட நந்தினி…” கோபமாக கூறுவது போல தோன்றினாலும் அவனால் கோபத்தை இழுத்து வைத்து காட்ட தெரியவில்லை… அந்த இரவு விளக்கின் வெளிச்சத்தில் அவளை பார்ப்பதே போதையை தந்து கொண்டிருந்தது எனும் போது அவளே வலிய வந்து இதுபோல அவனை வம்பிழுத்துக்கொண்டிருப்பது அவனை என்னன்னெவோ செய்ய… திண்டாடி கொண்டிருந்தான்.

“நீங்க தான் அடக்கி வைங்களேன் மாமா… என் வாய!” விடுவேனா என்று அவனை வம்பிழுத்து கொண்டிருந்தாள் நந்தினி… கண்களில் அவனை பொத்தி வைத்திருந்த கரை காணாத காதலிருக்க… உதடுகள் தேனில் ஊறிய ஆரஞ்சு சுளையாக மின்னி கொண்டிருக்க… நைட்டியில் அவளது வரிவடிவமோ அவனது மனதில் மோகத்தீயை பற்ற வைத்து கொண்டிருந்தது.

“இப்படியே பேசிட்டு இரு… ஒரு நாள் இல்ல ஒரு நாள் என் கிட்ட வாங்கி கட்ட போற…” பாதுகாப்பாக திரும்பி படுத்து கொண்டு அவன் கூற.

“எப்போ மாமா?” அநியாயத்திற்கு ஹஸ்கியான குரலில் அவள் கேட்க… விட்டால் எழுந்து ஓடி விடலாம் போல அவனுக்கு தோன்றியது… ராட்சசி பக்கத்தில் படுத்திருப்பதே படு பயங்கரமான கொடுமை என்றால் இப்படியெல்லாம் பேசினால் தன்னால் தாக்குபிடிக்க முடியுமா என்கிற சந்தேகம் வந்தது சக்திக்கு!

“இப்போ என்னதான்டி உனக்கு வேணும்?” கடுப்பாக அவன் கேட்டாலாவது அடங்குவாளா என்ற எதிர்பார்ப்பும் பொய்க்க.

“எனக்கு காலை போட்டுக்கணும்…” அவளும் கறாராக கூறுவது போல நடிக்க… தான் தலைக்கு வைத்திருந்த தலையணையை எடுத்து அவளிடம் தூக்கி எறிந்தவன்.

“புடிச்சுக்கோ… இதுல காலை போடுவியோ… இல்ல தலைய போடுவியோ… எதையோ பண்ணித்தொலை… என்னை விடு…” என்று குப்புற படுத்து கொண்டவனுக்கு.

“இந்த தலைகானி எல்லாம் எனக்கு பத்தாது சொல்லிட்டேன்… நைட் அங்க கை பட்டுச்சு இங்க கால் பட்டுச்சுன்னு சொல்ல கூடாதாக்கும்…” என்று அவள் நொடிப்பது காதில் விழுந்தாலும் நிமிர்ந்து பார்த்தால் தானே.

நேற்றைய இரவினை நினைத்து சிரிப்பு மலர்ந்தது நந்தினிக்கு.

“நந்து… கலக்கறடி… யூ ஆர் கிரேட்… இப்படித்தான் நம்ம கருவாயனை டீஸ் பண்ணனும்… பக்கி ஓவரா சீன் போட்டுட்டு இருக்கு…” தனது தோளை தட்டி கொடுத்து தனக்கு தானே பேசிக்கொண்டிருந்தாள் நந்தினி.

தொலைகாட்சியில் வல்லவன் பாடல் முடிந்து

“கருப்புத்தான் எனக்கு புடிச்ச கலரு…” என்ற பாடல் தொடங்க… சமைத்துக்கொண்டே பாடலுக்கேற்றவாறு இடுப்பை வளைத்து நெளித்து ஆடி கொண்டே அடுப்பில் கிண்டி கொண்டிருக்க.

“உன்னை பொத்தி வெச்சிருக்கும் நெஞ்சு குழி கருப்புத்தான்.

ஊரறிய பெத்துக்கணும் புள்ளை பத்து கருப்புதான்ன்ன்ன்…” பாடிக்கொண்டே திரும்பியவளுக்கு லைன் அப்படியே ஜெர்க்காக… பாடலை நிறுத்தினாள்.

சமையலறை வாசலில் சக்தி கைகளை கட்டி கொண்டு முறைத்தபடி நின்றிருந்தான்… அவன் பார்வையில் அனல் பறந்தது.

“எப்போ வந்தீங்க?” தலைகுனிந்து கொண்டு அவள் கேட்க.

“ம்ம்ம்… கச்சேரிய ஆரம்பிச்சு உனக்கு நீயே செல்பா தட்டி கொடுத்துகிட்டியே அப்போவே வந்துட்டேன்…” முறைத்தபடி அவன் கூறவும்.

அய்யயோ… இவனை கருவாயனென்று கூறியதெல்லாம் அவன் காதில் விழுந்துவிட்டதா? என்று மனதில் பயம் எழுந்தாலும்… அதை காட்டிக்கொள்ளாமல்.

“சோ வாட்… எனக்கு யாரும் அவார்ட் கொடுக்க ஆளில்லை… அதனால தான் செல்ப் சர்விஸ் பண்ண வேண்டியதா இருக்கு…” ஒன்றுமே நடவாதது போல் கூறிவிட்டு அடுப்பை கவனிக்க திரும்ப முயல… அவளது கையை முறுக்கி பின்னால் கட்டினான் சக்தி.

“ஆஆஆ ஐயோ… விடுங்க மாமா…” என்று அவள் குதிக்க.

“ஏன்டி கருவாயனா நான்? உனக்கு எவ்ளோ கொழுப்பு இருக்கும்…” முறுக்கிய கையை இன்னமும் முறுக்க.

“இப்படி மிரட்டினா மட்டும் கருவாயன வெள்ளையன்னா சொல்ல முடியும்… ஆஆஆ… வலிக்குதுடா பிசாசு…” அவளோ குதிக்க… விடாமல் முறுக்கினான்.

“இப்போ டா வேறயா… உன்னையெல்லாம் பாவம் சின்ன பொண்ணுன்னு நினைக்கவே கூடாதுடி…” சற்று முரட்டுத்தனமாக இழுத்து முறுக்கியதில் வேண்டுமென்றே அவள் நெருக்கமாகவே வர… இருவருக்கும் இடையேயான தூரம் என்பது சிலபல சென்டிமீட்டர்கள் என்று மாற… அவன் கை தளர்ந்தது.

குக்கர் விசிலடித்தது! அவளிடமிருந்து மீட்டு கொண்டவன்… அவளை முறைத்தவாறே.

“சமைச்சதெல்லாம் போதும்… ப்ரிலிம்ஸுக்கு இன்னும் ஒன் மந்த் தான் இருக்கு… ஒழுங்கா வந்து படி…” அவளது தலையில் ஒரு கொட்டு வைத்து விட்டு விரட்ட… தலையை தடவியவாறே சிறுபிள்ளை போல.

“வர்றேன்…” காலை உதைத்து கொண்டு கூற… சமையலறையிலிருந்து வெளியே வந்தவன் பிடித்து வைத்திருந்த மூச்சை வெளிவிட்டான்.

“ஷப்பா…”

பதினெட்டு

இரவு பத்துக்கு மணிக்கும் கோயம்பேடு மார்கெட் சுறுசுறுப்பாக இயங்கி கொண்டிருந்தது… கடைகளுக்கு சரக்கிறக்கும் நேரமாதலால் ஒவ்வொருவருக்கும் வேலையிருக்க… அந்த இடமே தூக்கத்தை தள்ளி வைத்து உழைத்து கொண்டிருந்தது… கோயம்பேடு உழைப்பாளர்களின் கோட்டை!… உழைப்பிருந்தால் பிழைத்து கொள்ளலாம் என்று நம்பி வருபவர்களின் சொர்க்க பூமி! ஒவ்வொருவருக்கும் வேலை தயாராக இருக்கும்… எந்த வகையிலாவது! அதிர்ஷ்டத்தை நம்பாமல் தன்னை நம்பி இறங்கினால் எவராக இருந்தாலும் பிழைத்து கொள்ள கூடிய இடம்!

“டேய் வீரா… பாசி பயிறு மூட்டைய உள்ள அடுக்குடா… இங்கயே வெச்சா உள்ள தனியா உங்க அப்பனா எடுத்துட்டு போவான்?” அந்த மளிகை மொத்த வியாபாரி வீராசாமி என்பவனை திட்டுவதொடும் இல்லாமல் அவனது தந்தையையும் இழுத்து வைத்து திட்ட… அந்த வீராச்சாமி அவரை முறைத்து விட்டு உள்ளே எடுத்து போக… அவர் அலுத்து கொண்டார்.

“இவனுங்களுக்கு பார்வைக்கொன்னும் குறைச்சல் இல்ல… ஒரு வேலைய ரெட்டையா செஞ்சா அமர்த்தி கொஞ்சுவாங்களாடே…” சுருதி குறையாமல் அவரது வட்டார மொழியில் திட்டி கொண்டிருக்க… சக்திவேல் நிமிர்ந்து பார்த்து புன்னகைத்தான்.

அவரிடம் எப்படித்தான் ஓடி ஓடி வேலை செய்தாலும் முழு மனதாக பாராட்டி விட கூடியவரில்லை… கவனமாக இறக்கி கொண்டிருந்த மூடைகளை எண்ணிக்கொண்டிருந்தவன்… அவரது அர்ச்சனை ஆரம்பமாகியதை உணர்ந்து மற்ற இறக்கு கூலிகளை கண்களால் எச்சரிக்கை செய்து விட்டு.

“விடுங்க அண்ணாச்சி… பாவம் பசங்க… நாள் முழுக்க மூட்டைய இறக்கி முதுகு உடைஞ்சிருக்கும்…” அவரை சமாதானப்படுத்த.

“நீ என்ன சக்தி… இந்த பயலுகளுக்கு சமாதானம் வாசிக்கற? இவனுங்களை உருட்டாம வேலை பார்த்துடுவானுவலா? சரி கணக்கு என்னாச்சு?” அவரது காரியத்தில் கண்ணாக இருக்க.

“பாசிபயறு ஐம்பது மூட்டை, கடலை பருப்பு ஐம்பது, மிளகாய் மூட்டை எழுபது அண்ணாச்சி…”

“சரி சக்தி… நாளைக்கு வந்து பணத்தை வாங்கிக்கயேன்…” எப்போதும் போல நழுவ பார்க்க… அவரிடம் பணத்தை விட்டுவைத்தால் திரும்ப வாங்குவதென்பது குதிரைக்கு கொம்பு முளைக்க வைப்பது போல என்பதை உணர்ந்தவன் சக்திவேல்!

“இல்ல அண்ணாச்சி… ஆளுங்களுக்கு கூலி கொடுக்கணும்… டிரைவர் சம்பளம் பேட்டா எல்லாம் நீங்க கொடுக்கறதை வெச்சுத்தான் கொடுக்கணும்… இல்லைன்னா நாளைக்கு பசங்க வேலைக்கு வர மாட்டானுங்க…” விடாப்பிடியாக பேசி பணத்தை வாங்கி கொண்டு வந்தவனை பார்த்து சிரித்தான் செந்தில்.

“அண்ணே காளை மாட்டுல பாலை கறந்துட்டீங்க போல இருக்கே…”

“என்னடா பண்றது? ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரித்தான் இருப்பாங்க… இவர் இப்படி இருக்காருன்னு விட்டுட முடியுமா? எப்படியோ சமாளிக்க வேண்டியதுதான்…”

அருப்புக்கோட்டை, விழுப்புரம், தூத்துக்குடி ஆகிய ஊர்களிலிருந்து பருப்பு வகைகளையும் அரிசி முதலானவற்றை வாங்கிவியாபாரிகளுக்கு மொத்தமாக சப்ளை செய்து கொண்டு… அதோடு பொள்ளாச்சியில் மொத்தமாக தோப்பில் குத்தகை அடிப்படையில் தேங்காய்களை சென்னையில் மொத்த வியாபாரிகளுக்கு சப்ளை செய்வது என அதிலும் கால் பதித்து இருந்தான்.

கரூரை விட்டு வர முடிவெடுத்தவுடன் ஆரம்பித்தது… கல்லூரி கல்வியாண்டு முடியும் வரை அங்கு செந்திலை விட்டு வைத்திருந்தான்… அவனை தற்போது லாரிக்கு முழு நேர டிரைவராக்கிவிட்டு வேனை விற்ற பணத்தை வியாபாரத்தில் போட்டிருந்தான்.

செந்திலிடம் அவனது சம்பளப்பணத்தை கொடுத்து விட்டு.

“நாளைக்கு பொள்ளாச்சி கிளம்பனும்டா… மீதி இருக்க மூட்டைய வீராச்சாமிய வெச்சு நம்ம குடோன்ல இறக்கிடு… சரி கிளம்பு!” என்று தேங்காய் லோடு ஏற்ற வேண்டி இருப்பதை கூறி அனுப்பினான்.

“சரிங்கண்ணா…” என்று அவன் விடைபெற… சக்தி அவனது ஸ்ப்ளண்டரில் ஏறி அமர்ந்த போது உடல் ஓய்வுக்காக கெஞ்சியது… காலை முதல் கூடவே இருந்து சரக்கு இறக்கி… ஒவ்வொரு இடமாக அலைந்ததில் உடம்பு விண்டு விடும் போல வலித்தது… ஆனாலும் மனதில் சந்தோஷம்… தன் வீட்டில் தனக்காக ஒரு ஜீவன் காத்து கொண்டிருக்கும் சந்தோஷம்!

வீட்டை அடைந்து காலிங் பெல்லை சக்தி அழுத்த தூக்கம் சுமந்த விழிகளோடு நந்தினி கதவை திறந்தாள்… அந்த தூக்க கலக்கத்தில் நலுங்கிய சேலையில் அவள் மிகவும் அழகாக இருப்பது போல தோன்றியது… மாலையில் தான் தலைக்கு குளித்திருப்பாள் போல… அலட்சியமாக விரித்து விட்டிருந்த அடர்ந்த முடி முழங்காலை தொட்டு கொண்டிருக்க ஆளை கவிழ்த்து விடும் அவளது அழகு அவனை என்னவோ செய்ய… அதற்கும் மேல் பார்க்காமல் நேராக குளிக்க சென்றான்.

உடல் கசகசப்பு தீர குளித்து வந்தவனுக்கு கபகபவென பசிக்க.

“நந்தினி டிபன் ரெடியா?” சப்தமாக குரல் கொடுத்தான்.

“இதோ வந்துட்டேன்…” அவசரமாக தட்டில் இட்லியை வைத்து கொண்டு வந்தாள்.

“ஹேய் என்ன சிக்கன் வாசம் வருது…” ஆச்சரியமாக அவன் கேட்க.

“சிக்கன் குழம்பு வெச்சா மீன் குழம்பு வாசமா வரும்?” சிரித்து கொண்டே பதில் கூற.

“உனக்கு இதெல்லாம் செய்ய தெரியுமா?” வியந்து போய் கேட்க.

“செஞ்சு பழகலைன்னா எங்க அப்பாயி என்னைய வென்னி அடுப்புல வேக வெச்சுடும்… அதுக்கு பயந்துகிட்டே நான் செஞ்சுடுவேன்…” சாதரணமாக அவள் கூற.

“உனக்கும் சிக்கன் பிடிக்குமா நந்தினி?” சிக்கன் குழம்பின் சுவையில் தன்னை மறந்து சாப்பிட்டு கொண்டிருந்தவன்… அவளை அறிந்து கொள்வதற்காக முதலடி எடுத்து வைக்கும் ஆர்வத்தில் கேட்க.

“ச்சே ச்சே… நான் சுத்த சைவம்… எங்கம்மா வீட்ல நான் வெஜ் செஞ்சா எனக்கு ரசம் கூட தனியாத்தான் வைப்பாங்க…” பெருமையாக கூறுவதை போல தன் பிரதாபத்தை எடுத்து விட.

“அப்போ ஏன் சிக்கன் செஞ்ச?” கேள்வியாக அவளை பார்த்து கேட்க… அப்போதே அவளுடைய கைமணத்தில் அவன் எப்போதும் உண்பதை விட இரு மடங்கு உண்டிருந்தான்.

“ம்ம்ம்… போன ஜென்மத்துல வெச்ச வேண்டுதல்… இப்படி ஒரு சிடுமூஞ்சிய கல்யாணம் பண்ணா வாரத்துல ரெண்டு நாள் சிக்கனும் மட்டனும் அபிஷேகம் பண்றேன்னு ஊர்ல கருப்பனுக்கு வேண்டிக்கிட்டேன்… அதான்…” இயல்பாக கூறுவது போல கூறி நக்கலடிக்க… அவனால் சிரிப்பை அடக்க முடியவில்லை!

“ஏய் யாருடி சிடுமூஞ்சி?…”

“வேற யாரு இங்க இருக்கா மாமா? சாட்சாத் நீங்களே தான்…” அவனை விடாமல் வம்பிழுக்க… அவளை மேலிருந்து கீழாக பார்த்து விட்டு.

“உனக்கு உடம்புல மொத்தமும் கொழுப்புத்தான்…” அவனும் சற்று இறங்கிய குரலில்கூற.

“என்னம்மோ பார்த்த மாதிரி தான் சொல்றது…” எப்போதும் போல விளையாட்டாக இயல்பாக கூறிவிட… ஒரு நொடி கழித்தே அதன் அர்த்தம் அவளுக்கு புரிபட… முகம் சிவக்க நாக்கை கடித்து கொண்டாள்… அவனுக்கு அவளது சிவந்த முகம் காந்தமென ஈர்க்க… அவள் கடித்த சிவந்த உதட்டை தானும் சுவைத்து பார்த்தால் என்னவென தோன்ற… பார்வை முகத்தை விட்டு கீழே இறங்க… அந்த பார்வையின் வீரியம் தாங்க முடியாமல் சமையலறைக்கு விரைந்தாள்.

அந்த நாணமும் முகச்சிவப்பும் சக்திக்கு புதியது… உணவை உண்டு முடித்தவன் தட்டை வாஷ்பேசினில் வைத்து விட்டு கையை அங்கேயே கழுவினான்… நந்தினியோ பாலை சுட வைப்பதாக பாவனை செய்து கொண்டு திரும்பாமல் இருக்க… நந்தினியின் சேலையை பற்றினான்… ஈரமாக இருந்த தன் கையை துடைக்க!

அவனது பார்வை முழுக்க நந்தினியின் செழுமையான பின்னழகை மேய்ந்து கொண்டிருக்க… சக்தி அவளது சேலையை கொண்டு கையை துடைத்த போது நந்தனி சொல்ல முடியாத உணர்வுகளால் சூழப்பட்டிருந்தாள்… அவனாலும் அந்த சேலையை விட மனமில்லை… அவளுக்குமே விட்டுவிடு என்று கூற முடியவில்லை!

வார்த்தைகள் ஏதுமில்லாத மௌனத்தின் அதீத சப்தத்தின்பால் வசப்பட்டிருந்த இருவருக்கும் அந்த சூழ்நிலை உணர்வுகளை கிளறி விட்டிருக்க… நந்தினி உடல் நடுங்க பாலை ஆற்றினாள்!

எதையும் பேசாமல் பாலை வாங்கி ஒவ்வொரு சொட்டாக ரசித்து அருந்தினாலும் பார்வை மேய்ந்து கொண்டிருந்தது நந்தினியைத்தான்… அவனால் அவனது கண்களை கட்டுபடுத்த முடியவில்லை.

“ஏன்… அவ உன் ஒய்ப் தானே…” மிஸ்டர் மனசாட்சி குரல் கொடுக்க.

“இருந்தாலும் அவ ரொம்ப சின்ன பொண்ணு… படிக்கனுமே…” அவனே அவனது மனசாட்சிக்கு பதில் கொடுக்க.

“அவ கண்ணை பாரு… அதுல தெரியற லவ்வை பாரு… நந்தினி உன்னை அவ்வளவு காதலிக்கறா…” மனசாட்சி அவளுக்கு ஆதரவாக குரல் கொடுக்க.

“எல்லாம் தெரியுது… முதல்ல அவ ஐஏஎஸ் எக்ஸாமுக்கு படிக்கட்டும்… அதுவரைக்கும் டிஸ்டர்ப் பண்ண கூடாது…” ஒரு வழியாக முடிவெடுத்தவன்… குடித்து கொண்டிருந்த டம்ளரை நந்தினியிடம் கொடுத்து விட்டு… தன் உணர்வுகளை மொத்தமாக மறைத்து கொண்டு.

“என்ன நந்தினி… இன்னைக்கு படிச்சியா? இல்ல மொத்தமா குக்கிங்ல இருந்துட்டியா?” புன்னகைத்தவாறே கேட்டு கொண்டு நிமிர்ந்தவனின்புன்னகை உறைந்தது!

அவன் அருந்தியதில் மீதமிருந்த பாலை குடித்தவள் கடைசி சொட்டையும் விடாமல் கிளாசை மேலே தூக்கி பிடித்தபடி வாயில் சரிக்க… ஏறி இறங்கிய அவளது நாபியும் அவளது அந்த எலுமிச்சை நிறத்தில் சிவந்த கழுத்தும் அவனை ஒரு வழி செய்ய… தலையை உலுக்கி கொண்டவன்… அவசரமாக அந்த இடத்தை விட்டு பெயர்ந்தான்.

ஹாலில் அமர்ந்து முதலில் தன்னை சமன் செய்து கொண்டான்… தலையை கோதி முகத்தை துடைக்க கொந்தளித்து கொண்டிருந்த உணர்வுகள் அமைதியடைந்தது… அவளுக்குமே அவளது நடுக்கத்தையும் ஏமாற்றத்தையும் மறைக்க சில நிமிடங்கள் தேவைப்பட்டது!

ஹாலில் இருந்த மியுசிக்கல் கடிகாரம் மணி பதினொன்று என்று அறிவிக்க… சமையலறையில் நந்தினி பாத்திரங்களை ஒதுக்கி வைத்து கொண்டிருந்தாள்.

ஒருவாறு தன்னை மீட்டு கொண்டு… வசூல் பணத்தை எடுத்து வந்தவன் நந்தினியை அழைத்து அவளிடம் கொடுத்தான்.

“நந்து… இந்த பணத்தை செல்ப்ல வெச்சு பூட்டிடு…” என்று கொடுக்க… தன்னிடம் அவன் இது போல முதன் முதலாக கொடுப்பது நந்தினிக்கு ஆச்சரியத்தை கொடுத்தது!

“இது என்ன பணம் மாமா?” அவளால் கேள்வி கேட்காமலிருக்க முடியவில்லை.

“இன்னைக்கு வசூல்… மொத்தம் ரெண்டு லட்சம் இருக்கு…” என்று கூறி அவளது வயிற்றில் புலியை கரைத்தான்.

“எப்படி இவ்வளவு பணம்?” அது வரை இருந்த உணர்வு மொத்தமும் மாறி, பணத்தை பார்த்து பயந்தாள்… இது நேர் வழி இல்லாமல் வேறு வழியாக இருந்துவிட்டால்? என்ன செய்வது?

“லோடு இறக்கினதுல மொத்த வசூல்மா…” அவளுக்கு ஏன் விளக்கம் கொடுத்து கொண்டிருக்கிறோம் என்பதே அவனுக்கு புரியவில்லை… விளக்கம் கொடுப்பதே பிடிக்காத ஒன்றாயிற்றே.

“அப்படி என்ன பண்றீங்க? என்கிட்டே ஒண்ணுமே சொல்ல கூடாதா? நான் என்ன வேற்று ஆளா? இது நல்ல வழில வந்ததுதானே?” சரமாரியாக அவள் கேள்வி கேட்க… அவனுக்கு என்ன சொல்வதேன்பதே தெரியவில்லை.

“விட்டா என்னை கொள்ளைக்காரன் ரேஞ்சுக்கு நினைப்ப போலிருக்கு… லூசு… பணத்தை வெச்சு லாக் பண்ணிட்டு வா… சொல்றேன்…”

அவனை ஒரு மார்கமாக பார்த்து கொண்டே அறைக்கு சென்றவள் செல்பில் வைத்து பூட்டினாள்… அவனை தேட, சக்திவேல் பால்கனியில் நின்று கொண்டு வானத்தை பார்த்திருந்தான்… அவனருகில் போய் நிற்க.

“ம்ம்ம் சொல்லுங்க…”

“என்ன சொல்றது?”

“அவ்வளவு பணம் எப்படி வந்தது? நீங்க என்ன பண்றீங்க? எனக்கு பதில் சொல்லத்தான் உங்களுக்கு பிடிக்காது ஆனா என் புருஷன் சம்பாரிக்கற பணம் நேர்வழியா இல்லையான்னு கூட தெரியாம நான் எப்படி இருக்கறது?” சரமாரியாக கேள்விகளை தொடுக்க.

“ஏன் நான் சம்பாரிக்க மாட்டேனா? உனக்கு அவ்வளவு நம்பிக்கையா என் மேல?” ஒரு மாதிரியான குரலில் அவளிடம் கேட்க… தலையை அவசரமாக ஆட்டி மறுத்தாள்.

“இல்ல… அப்படி கிடையாது… ஆனா இவ்வளவு பணம்…” அவள் தடுமாறி ஒருவாறு முடிக்க.

“நான் இப்போ என்ன பண்றேன்னு உனக்கு தெரியாது இல்லையா…” என்று இடைவெளி விட்டவன்.

“மொத்தமா பருப்பு மிளகாய் எல்லாத்தையும் தூத்துக்குடி அருப்புகோட்டை மாதிரி ஊர்மண்டில வாங்கி இங்க ஹோல்சேல் மார்கெட்ல சப்ளை பண்றேன்… அதோட தேங்காயும்… அதுக்கு தான் லாரி வாங்கினேன் செகன்ட் ஹேன்ட்ல… செந்தில் இப்போ காலேஜ் ட்ரிப் ஓட்றது இல்ல… வேனை சேல்ஸ் பண்ணியாச்சு… நம்ம லாரில தான் டிரைவரா போறான்… போதுமா?”

“அப்படியா…” என்று நிம்மதி பெருமூச்சு விட்டவள்.

“ம்ம்ம் முதல்லையே கரூர்ல சின்ன அளவுல பண்ணிட்டு இருந்ததுதான்… இங்க லார்ஜ் ஸ்கேல்ல பண்றோம்… சரியா?”

“ம்ம்ம் சரி… ஆனா அவ்வளவு பணத்தை எப்படி இன்வஸ்ட் பண்ணீங்க?” மீண்டும் சந்தேகம் தோன்ற.

“ஏய் லூசு… நான் இத்தனை வருஷமா இதே லைன்ல இருக்கேன்… என்கிட்டே அவ்வளவு கூடவா பணம் இருக்காது? முதல்ல எனக்கு தேவை அதிகம் இருந்ததில்லை… யாருக்காக செலவு பண்ண சொல்ற? இப்போ நீ இருக்க… ஏன் உங்க ஆளுங்க சொன்ன மாதிரி என்னை பிச்சைக்காரன்னே நினைச்சுட்டியா…” அவளை முறைத்தவாறே கேட்க.

பதிலுக்கு அவளும் முறைத்து விட்டு பதில் பேசாமல் உள்ளே போக முயல… சட்டென்று அவளது கைகளை இழுத்து தன் கைகளோடு சேர்த்து வைத்து கொள்ள… கோபத்தோடு கைகளை உருவ முயற்சித்த நந்தினியின் செய்கை அவனுக்கு புன்னகையை வரவழைத்தது.

“கலெக்டரம்மாவுக்கு கோபம் கூட வருமா?” சிரித்தபடி அவளை சீண்ட.

“ம்ம்ம்… ரொம்ப வரும்…” வேறு பக்கம் பார்த்தபடி அவனுக்கு பதில் கொடுக்க… அவனுக்கு அந்த கோபத்தையும் ரசிக்கவே தோன்ற… அந்த ரசனையான பார்வை அவளது கோபத்தை அதிகப்படுத்தியது.

“அப்படியா… அம்மணிக்கு கோபத்துல கன்னமெல்லாம் ரெட்டிஷ் ஆகிடுச்சே…” வேண்டுமென்றே அவளது கன்னத்தை தடவ… ஒரு நொடி அதிர்ந்தவள்… அடுத்த நொடி அவனது கையை தட்டிவிட்டாள்.

“உங்களைத்தான் கல்யாணம் பண்ணுவேன்னு சொன்னப்போ நீங்க சம்பாரிக்கறீங்களா இல்லையான்னு எனக்கு தெரியாது… நீங்க படிச்சு இருக்கீங்களா இல்லையான்னு கூட தெரியாது… உங்களை மட்டும் தான் எனக்கு தெரிந்தது… பிடிச்சது… ஆனா ஏன் இப்படி பேசறீங்க… நான் ஹாஸ்டல்ல இருந்தப்போவும் அப்படித்தான்… கண்டபடி பேசறீங்க… ரொம்ப கஷ்டமா இருக்கு மாமா…” கண்கள் கலங்கியபடி நந்தினி கூற அவளை இழுத்து அணைத்து கொள்ள நெஞ்சம் பரபரத்தது.

“அச்சச்சோ இதென்ன அமுல் பேபி அழுவறாங்க…” அவளை மீண்டும் சீண்டியவன்.

“ சாரி நந்தினி… நான் உன்னை ஹர்ட் பண்ணனும்னு நினைக்கலை… அன்னைக்கு அவனுங்க அப்படி பேசினதுல உள்ளுக்குள்ள ஒரு கோபம் இருந்துட்டே இருக்கு… அதான் உன்கிட்ட அப்பப்போ காட்டிடறேன்… சாரிம்மா…”

அவன் கூறுவதை பொறுமையாக கேட்டவளுக்கு உள்ளுக்குள் வலி படர்ந்தது… அந்த கோபத்தை தான் தன்னிடம் காட்டிக்கொண்டிருக்கிறானா? தன்னுடைய காதலும் நேசமும் அவனை எந்த விதத்திலும் பாதிக்கவில்லையா? யாருமே வேண்டாம் என்று மறுத்து தன்னவன் மட்டுமே போதுமென்று இருக்கும் தன் மனதை அவன் ஒரு பொருட்டாக நினைக்கவில்லையா? நந்தினியால் இந்த வலிகளை தாள முடியவில்லை.

ஆனால் சக்திவேல் கூறிய அர்த்தமே வேறு என்பதை நந்தினி உணரவில்லை… சொல்லாத காதலும் ஊமை பேசும் வார்த்தைதான் என்பதை சக்திவேல் உணரவில்லை.

********

இருவரும் இருந்த அப்பார்ட்மென்ட் பக்கமாகவே குடோனை பிடித்திருந்தான் சக்திவேல்… இல்லை குடோன் இருந்த பகுதியில் தான்அப்பார்ட்மென்ட்டை பார்த்திருந்தான்… அப்போதுதான் வந்திறங்கிய தேங்காய் லோடை இறக்கி கொண்டிருந்தனர்… உடன் சக்தியும் வேலை பார்த்து கொண்டிருக்க சுறுசுறுப்பாக செய்து கொண்டிருந்தனர்.

நேரம் இரவு பத்தை நெருங்கி கொண்டிருந்தது… லோடை இறக்கி தரம் பிரித்து காலையில் கோயம்பேடுக்கு அனுப்பியாக வேண்டிய கட்டாயம்… சற்றும் இடைவெளி இல்லாமல் காய்களை ஆட்களோடு சேர்ந்து பிரித்து கொண்டிருந்த சக்திக்கு சிறிது ஒய்வு தேவைப்பட்டது.

“செந்தில்… பக்கத்துல கடைக்கு போய் எல்லாருக்கும் டீ சொல்லிடு… அதோட ஆளுக்கு நாலு புரோட்டா சொல்லிடு…” என்று அவனிடம் கூறிவிட்டு

“அரை மணி நேரம் எடுத்துக்கங்க… டீ குடிச்சுட்டு புரோட்டா சாப்பிட்டுட்டு வந்துடுங்கடா…” அவனிடம் வேலை செய்து கொண்டிருந்தவர்களை பார்த்து கூறிவிட்டு ஓய்வாக வெளியே வந்தான்.

வெளியே பௌர்ணமி நிலவு காய்ந்து கொண்டிருக்க… செல்பேசியில் நந்தினியை அழைத்தான்.

“நந்து…”

“சொல்லுங்க மாமா…”

“இன்னைக்கு கொஞ்சம் லேட் ஆகும் போல தெரியுது… நீ சாப்பிட்டு கதவை பூட்டிடு… நான் கீ போட்டு திறந்துக்கறேன்…”

“ஏன் இவ்ளோ லேட்… நீங்க இன்னைக்கு சீக்கிரமாவே வருவீங்கன்னு நினைச்சேன்…”

“என்ன பண்றது… தேங்காய் லோடு பிரிக்கணும் நந்தினி… எப்போ முடியும்ன்னு சொல்ல முடியாது… சரி பேங்க்ல அமௌன்ட்ட டிபாசிட் பண்ணிட்டியா?”

வீட்டில் வைத்திருக்க வேண்டாமென்று வசூல் பணத்தை வங்கியில் கணக்கில் வரவு வைக்க சொல்லியிருந்தான்… அவளுக்கு அதன் முறைகள் எல்லாம் தெரியாது என்று மறுத்தபோதும்… பரவால்லை இதையெல்லாம் கட்டாயம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று வலுகட்டாயமாக அவளை அனுப்பி வைத்திருந்தான்… பொள்ளாச்சியிலிருந்து செல்பேசி மூலமாகவே!

“ம்ம்ம் கட்டிட்டேன்… ஆனா கைல பணமா வெச்சுருக்கும் போது பயமாவே இருந்துது… ஏன் மாமா இதையெல்லாம் நீங்களே செய்ய மாட்டீங்களா?”

“ஏங்க அம்மிணி… கலெக்டரா ஆகனும்ன்னு கனவு மட்டும் காண தெரியுது… அந்த பணத்தை பேங்க்ல டிபாசிட் பண்ண இவ்வளவு சலிச்சுக்கற… உன் கிட்ட ஒரு மாவட்டத்தையே கொடுத்தா மாவாட்ட மட்டும் தான் முடியும்ன்னு சொல்லுவ போல இருக்கே…” வேண்டுமென்றே அவளை தூண்ட.

“ம்ம்ம் அதெல்லாம் அப்போ நாங்க கரெக்டா இருப்போம்… ரொம்ப வாராதீங்க…” விட்டுகொடுக்காமல் அவளும் பேச… நந்தினியிடம் பேசியவாறே திரும்பியவனின் கண்களில் பட்டாள் ஒரு பெண்.

எங்கோ பார்த்து கொண்டு சாலையை கடக்க முயற்சி செய்ய… இரவு நேரமாதலால் டேங்கர் லாரி அதிவேகமாக வந்து கொண்டிருக்க… பித்து பிடித்தார் போல எதையும் கவனிக்காமல் நடு சாலைக்கு போய் கொண்டிருந்தாள்.

“நந்து அப்புறம் பேசுறேன்…” அவசரமாக இணைப்பை துண்டித்து விட்டு அவளை நோக்கி ஓடினான் சக்திவேல்.

டேங்கர் லாரி ஒட்டுனராலும் அந்த வேகத்தில் நிறுத்த முடியாமல்… சூழ்நிலையை எப்படி சமாளிப்பது என்று புரியாமல் ஹாரனை முழங்க விட… அந்த பெண்ணோ காது கேளாதவள் போல சாலையின் மையத்தில் நின்று கொண்டிருந்தாள்.

அவசரமாக சாலைக்கு ஓடிய சக்தி அந்த பெண்ணை இழுத்து கொள்வதற்கும் டேங்கர் லாரி க்ராஸ் செய்வதற்கும் சரியாக இருக்க… சற்று தூரத்தில் போய் ஓரமாக அந்த லாரி நின்றது… அந்த டிரைவர் கொலைவெறியோடு கீழே இறங்கி அவர்களை நோக்கி வர… தான் காப்பாற்றிய அந்த பெண்ணின் முகத்தை பார்த்தான் சக்திவேல்!

அதிர்ந்தான்.

சித்ரா! ! !

error: Content is protected !!