Thithikuthey 9 & 10

 ஒன்பது

மெளனமாக வாகனத்தை செலுத்தி கொண்டிருந்தான் சக்திவேல்… உள்ளுக்குள் கோபம் கனன்று கொண்டிருந்தாலும் அதை அந்த பெண்ணிடம் காட்ட பிரியமில்லை… கோபம் கூட காதலை போன்றதுதான்… உரிமையான கோபத்தை உரியவர்களிடம் மட்டுமே காட்ட முடியும்! நந்தினிக்கு அந்த தகுதி கூட இருப்பதாக படவில்லை சக்திவேலுக்கு!

எவ்வளவு நம்பிக்கை… ஆயிரம் தான் வேலுச்சாமி சாதி வெறி பிடித்தவராக இருந்தாலும்… காதலுக்கு எதிராக கொலையை கூட நியாயப்படுத்த கூடியவராக இருந்தாலும் அவர் தன்னை நம்பி மட்டுமே அவரது பெண்ணை வேனில் அனுப்பினார்… அவரது அந்த நம்பிக்கை மட்டுமில்லாமல் அத்தனை பெண்களின் பெற்றோர்களின் நம்பிக்கையுமல்லவா சூறையாடப்பட்டுள்ளது.

அவனால் நந்தினியின் செயலை ஜீரணிக்க முடியவில்லை… அதுவும் அவள் கடைசியாக சொன்ன பொய்! ! ! அவனால் சற்றும் ஏற்று கொள்ளமுடியாத… கனவிலும் நினைத்து பார்த்திராத பொய்!

தன்னுடைய வேனில் வருபவர்களை தன் தங்கையாகவே பாவித்த தன் மேலா இப்படி ஒரு பழியை சுமத்தினாள்? திரும்பியும் பார்க்காமல் வாகனத்தை செலுத்தி கொண்டிருந்தவனால் ஒரு கட்டத்திற்கு மேல் கட்டுபடுத்தி கொள்ள முடியாமல் போயிற்று… ஓரமாக நிறுத்தியவன்… அந்த இருளை வெறிக்க துவங்கினான்.

ஆயிற்று… அவளுடைய உயிருக்கு பயந்து அழைத்து வந்தாயிற்று… இனி என்ன? என்ற கேள்வி அவனை பயமுறுத்தியது… தங்குவதற்கு சரியான வீடு கூட இல்லாத நிலையில் இவளை எங்கு அழைத்து செல்வது? ஆண்கள் இருவருமாக மட்டும் இருப்பதால் மினி லாரியும் வேனும் நிறுத்தும் ஷெட்டே அவர்கள் இருவரின் இருப்பிடமாக இருந்து வந்தது… அங்கு ஒரு பெண்ணை தங்க வைப்பதை பற்றி கனவிலும் நினைக்க முடியாது.

இரு கைகளால் தலையை தாங்கி… ஸ்டியரிங் வீலின் மேல் கவிழ்ந்தவனுக்கு எதிர்காலத்தை குறித்த அச்சம் முதல்முறையாக வந்தது… கேட்க கூடாத சொற்களை எல்லாம் கேட்டாயிற்று… தன்னை நம்பி சொல்லவே முடியாத பொய்யை கூறியவளை அழைத்தும் வந்தாயிற்று… இனி அவளை கைவிடுவதும் ஆகாத காரியம்.

அப்படி ஒரு பழியை கிட்டத்தட்ட ஏற்று கொண்டு வந்துவிட்ட பிறகு அவளை திருமணம் செய்யாமல் தன்னுடன் வைத்திருப்பதும் மிக பெரிய அசிங்கம்… அவளை திருமணம் செய்வதா என்று மனம் ஓல குரலை எழுப்பியது… மனக்குழப்பத்தை தாங்க முடியாமல் டிரைவர் சீட்டிலுருந்து கீழே இறங்கினான்.

சில்லென்ற மார்கழி காற்று முகத்தில் அறைய… முகத்தை தேய்த்து விட்டு கொண்டான்… தெருவிளக்கு மட்டும் எரிந்து கொண்டிருக்க… சாலையில் மக்கள் நடமாட்டம் சுத்தமாக இல்லாமலிருந்தது… யாருமற்ற அந்த சாலை சூன்யத்தை விதைக்க என்னவென்று சொல்ல முடியாத உணர்வு அவனுடைய மனதை அழுத்தியது.

“அடிச்சு போட்டா ஏன்னு கேக்க நாதியில்லாத அநாதை நாயி நீ… உனக்கு எங்க வீட்டு பொண்ணு கேக்குதா?” அந்த மனிதன் கூறிய வார்த்தை அவனது மனதை அறுத்தது… எவ்வளவோ முறை கேட்ட வார்த்தைகள் தான்… மிக சிறிய வயதில் ஆஸ்ரமத்தில் பசிக்கு சரியான உணவில்லாத போது கிடைத்த உணவு பற்றியிராமல் மீண்டும் தட்டை ஏந்தும் போது.

“டேய் அநாதை பயலே இன்னும் எத்தனை தட்டு சோறுடா கேப்ப?” என்று அந்த ஆஸ்ரமத்தில் வேலை செய்த மனிதர் கேட்ட கேள்விக்கு அர்த்தம் அப்போது புரியவில்லை… ஆனால் புரிந்த வயதில் ரத்தம் கொதித்தது… எதிர்த்து கேள்வி கேட்க வைத்தது… எதிர்த்து நின்றால் மட்டுமே பிழைக்க முடியும் என்ற எண்ணத்தையும் அவனுள் விதைத்தது.

உறவுகளை இழந்து நின்றது அவனது தவறில்லையே… இறைவனின் எண்ணம் அதுவாக இருந்திருக்கிறதே! ஆனால் இறக்கும் போது உறவில்லாமல் இறக்க கூடாது… அது பாவம்… மிகப்பெரிய பாவம்… யாரோ ஒருவர் கூறிவிட்டு சென்றது அவனது காதில் ஒலித்தது.

“சம்பாதிப்பது என்பது பணத்தை அல்ல… மனிதர்களை…

அவனும் நினைத்து கொள்வான்… தான் இறக்கும் போது தன்னை தூக்குவதற்காவது நான்கு பேரை அதுவும் உண்மையான மனிதர்களை சம்பாதிக்க வேண்டும் என நினைப்பான்.

கைகளை கட்டி கொண்டு இருளில் சூனியத்தை வெறித்தவனது மனம் எதை எதையோ எண்ணி புண்ணாகிக்கொண்டிருந்தது!

“ச… சக்தி… நந்தினியின் மெல்லிய குரல் பின்னாலிருந்து கேட்க… திரும்பி பார்க்க பிடிக்கவில்லை.

“சக்தி… சற்று சப்தமாக அவள் அழைக்க… ஒரு பெருமூச்சோடு திரும்பி பார்த்தான்!

“என்ன… எந்த உணர்வையும் காட்டாமல் அவன் கேட்க.

“நைட் நேரம்… இருட்டுல… தனியா இருக்க… பயமா இருக்கு… தயங்கி தயங்கி அவள் கூற… மெலிதான அந்த வெளிச்சத்தில் அவளை கூர்ந்து பார்த்தான்… கண்ணீர் காய்ந்து கண்கள் சிவந்து முகம் களைத்து போயிருந்தது… அவனை நேராக பார்க்காமல் நிலம் பார்த்தது அவளது விழிகள்.

“அதுக்கு என்ன பண்ணலாம்ன்னு சொல்ற?” கோபத்தை அடக்கிய குரலில் அவன் கேட்க.

“வீ… வீட்டுக்கு… உங்க வீட்டுக்கு… போ… போலாம்… திக்கி திணறி அவள் கூற.

“வீடா… அப்படீன்னா… அப்படியொன்னு எனக்கு இருக்கா?” இயல்பாக கூற வந்து குத்தலாக முடிக்க… நிமிர்ந்து அவனை பார்த்தாள் நந்தினி!

அவளுக்கும் எதிர்காலத்தை நினைத்து பயம் இருந்தாலும் சக்தி தன்னை ஒருக்காலும் கை விட்டுவிட மாட்டான் என்ற நம்பிக்கை மிகவும் இருந்தது… ஆனாலும் இன்னொரு மனமோ… காதலிப்பவர்கள் அந்த நம்பிக்கையை கொள்ள முடியும் ஆனால் காதலே இல்லாமல் அவளை கடமைக்காக அழைத்து வந்தவனிடம் எதை எதிர்பார்க்க என்றும் மருகியது.

நிற்பது நடு தெரு என்பது உரைத்தாலும் எப்படியும் சக்தி ஏதாவது செய்வான் என்று மனதில் உரு போட்டு கொண்டாள்! மனதின் மூலையில் சிறு நப்பாசை ஒட்டி கொண்டு இருந்தது… தன்னை பிடித்து அழைத்து வந்திருப்பானோ என்று.

அவளது எண்ணம் அதிகம் தான்… ஆனால் பதின்ம வயதை கடந்து இரு வருடமேயான அந்த பேதையின் மனம் இப்படியும் இருக்க கூடாதா என்று ஏங்கியது!

“நீ… நீங்க… இல்ல… உ… உங்களுக்கு… எ… எ… என்னை பிடிக்கவே இல்லையா?” அவளது உயிரை கண்களில் தேக்கி அவனை ஏக்கமாக பார்த்து அவள் அந்த கேள்வியை கேட்க… சக்திவேல் அவளை வெறித்து வெறுத்து பார்த்தான்.

“ஆஹா எவ்வளவு சீக்கிரமா கேட்டுட்ட… குத்தல் மாறாமல் கூறிவிட்டு…நல்லா யோசிச்சு சொல்லும்மா… நான் என்னைக்காவது ஒரு வார்த்தை உன்கிட்ட தப்பா பேசியிருக்கேனா?” வலியில் தோய்ந்த வார்த்தைகளை கொண்டு அவளை வலிக்க வைத்தான்.

“இல்லை… கண்கள் நிலம் பார்க்க… இடம் வலமாக தலையசைத்து மெல்லிய குரலில் அவள் கூறினாள்.

“தப்பா பார்த்து இருக்கேனா?” மீண்டும் அவளுக்கு வலித்தது… கண்களில் கண்ணீர் சூழ அவனை நிமிர்ந்து பாராமல் இல்லையென்று தலையசைத்தாள்.

“அப்புறம் ஏன்டி அப்படி ஒரு பொய்யை சொன்ன?” அதுவரையில் இருந்த தொனி மாறி மிகுந்த கோபத்தோடு டி என்று அவளை விளித்து கேட்க… அவளது உடல் பயத்தில்… நடுக்கத்தில்… தூக்கி வாரி போட்டது! பதில் கூற முடியாமல் உடல் நடுங்க… அவனை நிமிர்ந்து பார்க்க பயந்து… குனிந்து இருந்தவளின் கண்களிலிருந்து கண்ணீர் தாரை தாரையாக கொட்ட.

“சொல்லுடி… ஏன் அப்படி சொன்ன?” மற்றவர்களிடம் அவன் கோபம் கொண்டு பார்த்திருக்கிறாள்… ஆனால் அவளிடம் கண்ணியமான பேச்சை தான்டி இது வரை வராததால் அவனது அந்த கோபமுகம் அவளுக்குள் கிலியை ஏற்படுத்தியது.

“எனக்கு வேற வழி தெரியல… தேம்பி கொண்டு அவள் கூற.

“உஷ்… அழுகைய நிறுத்து… அவன் சற்று சப்தமாக கூறவும் அதிர்ந்து வாயை மூடினாள்.

“ஆன்னா ஊன்னா அழுக மட்டும் நல்லா தெரியும்… என்ன அழுது என்னை கரைக்கலாம்ன்னு நினைச்சுக்கிட்டியா?” வம்படியாக அவளை திட்டி தீர்த்து கொண்டிருந்தான்.

தேம்பல் நிற்காமல் தொடர… அவனுக்கே ஒரு கட்டத்தில் பாவமாக இருந்தது… அங்கும் அடியும் உதையும் வாங்கி தன்னிடமும் திட்டுக்களை இவள் வாங்கி கொண்டிருப்பது எதற்காக? படிப்பின் மேல் உள்ள ஆசையினால் தானே… அந்த ஒரு காரணம் மட்டுமே அவனை இளக்கியது.

“சரி நீ ஆசைப்பட்ட மாதிரியே படிக்கலாம்… ஆனா அதுக்கு மேல என்கிட்டே இருந்து ஒன்னையும் எதிர்பார்க்காத… உன்னை பார்த்தாலே நீ சொன்ன பொய் தான் ஞாபகத்துக்கு வரும்… என் கடைசி மூச்சு இருக்க வரைக்கும்…

அவளை பார்க்காமல் உரைத்துவிட்டு செல்பேசியை எடுத்தான்… மணி இரவு பதினொன்றை தான்டி இருந்தது… மார்கழி குளிர் ஊசி போல துளைக்க… அவளது உடல் நடுக்கம் அதிகமாயிற்று… இவளுக்கு இந்த கஷ்டம் தேவையா என்று அவனுக்கு பாவமாகத்தான் இருந்தது.

உறங்க கிடைக்கும் எந்த இடமும் அவனுக்கு சொர்கமே… குளிரோ வெயிலோ பனியோ மழையோ… அவனை எதுவும் பாதிப்பதில்லை… கிடைக்கும் இடத்தில் தூங்கி பழக்கப்பட்டவன்.

ஆனால் நந்தினி? பார்த்து பார்த்து வளர்க்கப்பட்ட வீட்டு மரம்… இந்த சிறு குளிரையே தாங்க முடியாதவள் தன்னுடைய வாழ்க்கைமுறைக்கு எப்படி ஒத்துவருவாள்? ஆனால் அவள் தான் தன் மனைவி என்பது தீர்மானமாகிவிட்ட ஒன்று… முன் வைத்த காலை பின் வைப்பதற்கும் இல்லை.

“உள்ள போய் உட்க்காரு… நாய் நரியெல்லாம் சுத்தற நேரம்… சற்று இறங்கி வந்த குரலில் கூறியவனை பார்த்து… நடுக்கத்தோடு.

“அப்போ நீங்க… உங்களுக்கு குளிரலையா?” நிமிர்ந்து அவளை பார்த்தவனின் உள்ளத்தில் என்ன இருக்கிறது என்று அவளுக்கு புரியவில்லை… அவனது கூர்மையான பார்வையை தாங்க முடியாமல் தலை குனிய.

“எனக்கு இதெல்லாம் பெரிய விஷயமில்ல… என்று கூறிவிட்டு வெற்றியின் எண்ணை அழுத்தினான்… சிறிது தயக்கத்தோடு.

“அண்ணா… வீட்ல இருக்கீங்களா இல்ல வெளியவா?” தயங்கியபடியே கேட்க

“ஏன் சக்தி… வீட்ல தான்டா இருக்கேன்… சொல்லு சக்தி…

“இல்லைண்ணா… ஒரு ஹெல்ப் வேணும்… இன்னமும் தயங்க.

“அட சொல்லுடா… என்ன வேணும்… இப்படி தயங்கற? பணம் எதாச்சும் பிரச்சனையா?”

“இல்லண்ணா… எனக்கு தெரிஞ்ச பொண்ணு… கொஞ்சம் பிரச்சனை… இந்த நைட்ல எங்க தங்க வைக்கறதுன்னு தெரியல… அதான்… சற்று தடுமாறியபடி சக்திவேல் கூறுவதை கேட்ட வெற்றி ஒரு நொடி யோசித்து.

“சக்தி… தயக்கமே இல்லாம இங்க கூட்டிகிட்டு வா… என் தம்பி கண்டிப்பா தப்பு வேலைக்கு போக மாட்டான்டா… என்று தீர்மானமாக கூறிய வெற்றியின் தொனியில் உள்ளம் நெகிழ்ந்தது.

“தேங்க்ஸ்ண்ணா… ரொம்ப தேங்க்ஸ்… இந்த நைட்ல அந்த பொண்ணை எங்க தங்க வைக்கறதுன்னு தவிச்சுட்டு இருந்தேன்… ரொம்ப தேங்க்ஸ்ண்ணா…

“டேய் தேங்க்ஸ் சொன்ன உதைப்பேன் படவா… வாடான்னா… என்று வெற்றி மிரட்ட ஆரம்பிக்க சிரித்து கொண்டே சரியென்று வைத்தான்… நந்தினியை தங்க வைக்க இடம் கிடைத்த சந்தோஷத்தில் புதிய சக்தியோடு டிரைவர் சீட்டில் அமர்ந்து வேனை உயிர்ப்பித்தான்!

*******

வேனை வெற்றியின் வீட்டில் நிறுத்தியபோது தேவசேனா ஆவலாக வாசலுக்கு வந்தாள்… வெற்றியும் பின்னே வர… இருவரும் அவனுக்காக காத்து கொண்டிருந்திருப்பார்கள் போலும்… தயங்கியபடியே சுற்றியும் பார்த்தபடி இறங்கிய நந்தினியை பார்த்து மலைத்தாள் தேவசேனா… சக்தியின் அருகில் வந்து நின்று.

“டேய் சக்தி… என்னடா பொண்ணு இவ்ளோ அழகா இருக்கு…

வாடிய பூவாக கசங்கி போயிருந்தவளின் தோற்றத்தை வியந்து அவள் பார்க்க… அப்போதுதான் அவளது தோற்றத்தை ஊன்றி பார்த்தான்.

தலைமுடி கலைந்து இருந்தாலும் அதுவும் அவளுக்கு அழகை தர… அவளது வழவழப்பான தந்த நிறம் இரவு விளக்கு வெளிச்சத்தில் பளீரென்றது… பிறை நெற்றியும் வில்லாக வளைந்த புருவங்களும் பெரிய கண்களும் ஆரஞ்சு பழ உதடுகளும் செழிப்பான கன்னமும் சங்கு கழுத்தும் அதற்கும் கீழ்.

“ச்சே… தலையை உலுக்கிக்கொண்டு பார்வையை வலுகட்டாயமாக அவளிடமிருந்து பிரித்தான்.

“சக்தி… எனக்கொரு ஹெல்ப் பண்றியா?”விடாமல் அவனிடம் கிசுகிசுத்தாள் தேவசேனா.

“என்னக்கா…

“அந்த பொண்ணு என்ன சோப்பு யூஸ் பண்ணுதுன்னு கேட்டு சொல்றா… அப்பாவியாக அவனிடம் கேட்டவளை திரும்பி பார்த்தவனின் முகத்தில் இருந்த கேலியை வைத்து அவனது எண்ணத்தை புரிந்து கொண்டவள்.

“ப்ளீஸ்டா… கெஞ்ச ஆரம்பிக்க.

“எக்கா… ஏன்க்கா… அவனால் சிரிப்பை அடக்க முடியவில்லை… அவர்களுக்குள்ளாக ரகசியம் பேசியபடி இருந்தவர்களை திட்டிக்கொண்டே நந்தினியை உள்ளே அழைத்தார் வெற்றி.

“வந்தபுள்ளைய உள்ள வான்னு கூப்பிடாம ஒடம்பொறப்பை மட்டும் கொஞ்சிட்டு இருக்கா பார்த்தியாம்மா… சிரித்து கொண்டே வெற்றி தேவசேனாவை வார.

“அச்சோ… சாரிம்மா… உள்ள வாம்மா… நந்தினியை அழைத்தாள்… அவளை முன்னே விட்டு தேவசேனாவும் சக்திவேலும் பின்னே செல்ல… மீண்டும் அவனை நச்சரிக்க ஆரம்பித்தாள்.

“டேய் தம்பி… அந்த பொண்ணு என்ன ஷாம்பு போடுதுடா? ப்ளீஸ் கேட்டு சொல்றியா?” மீண்டும் அவளது கெஞ்சல் படலத்தை ஆரம்பிக்க

“ஏன்கா… சிரித்து கொண்டே கேட்டவனை.

“எவ்ளோ நீள முடிடா… வெள்ளந்தியாக வியந்தவளை பார்த்து சிரித்தான்… இருவரையும் அமர செய்த வெற்றி.

“சொல்லுடா… என்ன பிரச்சனை… என்று கேட்க… நந்தினியை முறைத்தான் சக்திவேல்… அவனது பார்வையை தவிர்க்க நிலம் பார்த்தாள் நந்தினி.

“அங்கென்னடா முறைப்பு வேண்டி கிடக்கு… விஷயத்த சொல்லு… என்று வெற்றி மீண்டும் கேட்க நடந்ததை முழுவதுமாக கூறினான்… வெகு சிரத்தையாக கேட்ட வெற்றி.

“ஏன்மா நந்தினி அப்படி சொன்ன? நம்ம சக்தி அப்படிபட்ட பையனே கிடையாதேம்மா… என்று வருத்தப்பட.

“பரவால்லண்ணா விடுங்க… நடந்ததை மாத்த முடியாது… அவளுக்கு பதிலாக இவன் கூற… சக்திவேலை நிமிர்ந்து ஒரு முறை பார்த்த நந்தினி மெலிதான குரலில் கூறினாள்.

“எனக்கு வேற வழி தெரியலை… அந்த சந்தர்ப்பத்தை விட்டா எனக்கு வேற சந்தர்ப்பம் கிடைக்காது… நிமிர்ந்து பார்க்காமல் அவள் கூறிய பதிலில் உச்சி குளிர்ந்து போன தேவசேனா.

“டேய் தம்பி… அவ்ளோ லவ் பண்ணுதுடா பொண்ணு உன்னை… சிரித்து கொண்டே சொன்ன தனது இஷ்ட தெய்வத்தை பார்க்கும் போது சுவற்றில் முட்டி கொள்ளலாம் போல இருந்தது அவனுக்கு.

“தெய்வாக்கா… பல்லை கடித்து கொண்டு அடங்கு அடங்கு என்று மறைமுகமாக சக்திவேல் கூற.

“சரி ரெண்டு பேரும் சாப்பிட்டீங்களா?” என்று தேவசேனா கேட்டபோது தான் இருவருக்குமே வயிறு என்ற ஒன்றும் அது இட்டுகொண்டிருந்த சப்தமும் உரைத்தது… மாலை முதலே தன்னோடு இருந்தவள் அவள் மட்டுமாகவா உண்டிருப்பாள்?

“அட இல்லக்கா… புரோட்டா கிடைக்குதான்னு பார்த்துட்டு வரேன்” என்று கிளம்பியவனை.

“ஒழுங்கா உக்காரு சொல்லிட்டேன்… சட்னி அரைச்சு நாலு தோசை ஊத்தினா முடிஞ்சுது… என்று தேவசேனா உள்ளே போக… இதுதான் தெய்வாக்கா என்று நினைத்து கொண்டான்… இந்த இரண்டு நல்ல உள்ளங்களை சேகரித்து வைத்திருக்கிறோம் என்ற பெருமையில்!

“சரி அடுத்தது என்ன பண்ண போறீங்க?” தோசையை உண்டு விட்டு கைகழுவிய பின் அமர வைத்து வெற்றி கேட்க… சக்திவேல் ஆழ்ந்து யோசித்து தீர்க்கமாக முடிவெடுத்தவன்… உறுதியாக கூறினான்.

“இன்னைக்கு நைட் மட்டும் இங்க தங்கியிருக்கட்டும்ண்ணா… நாளைக்கு இவங்க காலேஜ்ல பேசணும்… ஹாஸ்டல்ல சேர்த்து விடனும்…

தன்னை சக்தி ஏற்று கொள்ளவே போவதில்லை என்று அவளாக அவளறிந்தஉண்மை முகத்தில் அறைய… ஏமாற்றத்தோடு அமர்ந்திருந்தாள்… கண்கள் கலங்கியது… கண்களில் இருந்து உருண்டு விழுந்த கண்ணீர் அவளது மடியில் கோர்த்து பிடித்திருந்த கைகளில் பட்டு தெறித்தது!

 பத்து

ஜன்னலின் அருகில் நின்று கொண்டு வெளியில் தெரிந்த இருண்ட வானத்தை வெறித்து கொண்டிருந்தாள் நந்தினி… ஒரே நாளின் நிகழ்வுகள் அவளை தலைகீழாக புரட்டி போட்டிருந்தது… எல்லாவற்றையும் மீறி அவளை அதிர்ச்சிக்குள்ளாக்கியது அவளது தந்தையின் ஜாதி வெறி… அதற்காக எதற்கும் துணிய முடியுமா?

அவர்களிடம் வாதாடும் போது சக்தி கூறினானே… கௌரவத்திற்காக காதலித்து திருமணம் முடித்த பெண்ணை விஷம் வைத்து கொன்றதாக… யாரை? புனிதாவையா? ஆனால் புனிதா அவளாகத்தானே விஷத்தை குடித்ததாக கூறினார்கள்?... காதல் கை கூடாததால் தற்கொலை செய்து கொண்டதாக தன் தாய் கூறியது நினைவில் வந்தது.

வீட்டை தவிர எதையும் அறியாத பேதையாக இருந்தவள் தான் நந்தினி… அவளது தைரியமும் துடுக்கு பேச்சும் இயல்பாக உடன் பிறந்த ஒன்று… கிராமங்களில் ஒரு பழமொழி சொல்வார்கள்… ‘ஆசை இருக்கு அம்பாரிஏற… அம்சம் இருக்கு கழுதை மேய்க்க… என்று… அது போலத்தான்… ஆசை பெரியதாக இருந்தாலும் நன்றாக படிக்க கூடியவளாக இருந்தாலும் பெரிதாக உலக அனுபவம் இல்லாத சிறு பெண் என்பதை அடிக்கடி நிருபித்து கொண்டே இருப்பவள்.

அது போல புனிதாவின் இறப்பு எதனால் என்று கூட அறியாதவளாக… தனது சமூகத்தின் சாதி வெறியை பற்றி முழுமையாக தெரியாதவளாகத்தான் சக்தியை காதலிப்பதாக அந்த சபையில் கூறியது… ஆனால் அதன் தாக்கத்தை முற்றிலும் அறிந்தவன் சக்தி… வேறு வழியில்லாமல் உடன் அழைத்து வந்துவிட்டான்… அவளுக்கு அவளது தந்தையை பற்றி புரிந்தபோதோ மனம் அதிகபட்ச அதிர்ச்சியை உள்வாங்கியது.

கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது… கண்களை துடைத்து கொண்டு உறங்கி கொண்டிருந்த தேவசேனாவை பார்த்தாள்… நந்தினியின் துணைக்கு அவள் படுத்திருந்தாள்… வெற்றி எவ்வளவு சொல்லியும் சக்தி வேனில் படுத்து கொள்வதாக பிடிவாதமாக போய்விட்டான்.

“பிடிவாதம் பிடிச்சான்னா அவ்வளவுதான் நந்தினி… மாத்தவே முடியாது… தேவசேனா கடிந்து கொண்டு உறங்கியும் இருந்தாள்.

புனிதாவின் விஷயத்தில் என்னவாகி இருக்கும் என தெளிவாக தெரிந்து கொண்டாக வேண்டும் அவளுக்கு… அதுவும் இல்லாமல் அவனிடம் தெளிவாக்கி கொள்ள சில விஷயங்களும் இருந்தன… தேவசேனாவை மென்மையாக எழுப்பினாள்.

“அக்கா… அக்கா…

“மொறைய மாத்தாத நந்தினி… அண்ணி… தூக்கத்திலேயே உளற… சிறுபுன்னகை நந்தினியின் இதழில்!

“சரி அண்ணி… கொஞ்சம் வெளிய போய் அவங்க கிட்ட பேசிட்டு வரட்டா… என்று கேட்டவளிடம் தூக்கத்திலேயே உளறினாள் தேவசேனா.

“சரி நந்தினி… ஜாக்கிரதை… என்று கூற… கதவை திறந்து கொண்டு வெளியே வந்தாள்… மணி இரண்டுக்கு மேலாகி இருந்தது… குளிர் இன்னமும் அதிகமாக இருக்க… வெளியில் சிட் அவுட்டில் நீளமான பெஞ்சில் அமர்ந்து தலையில் கைவைத்தவாறு யோசித்து கொண்டிருந்தான் சக்திவேல்! அவள் வரும் அரவம் கேட்டு நிமிர்ந்தவன்.

“என்ன பண்ற… போய் தூங்கு… கடுமையான குரலில் கூறியவனை கூர்ந்து பார்த்தாள்… அவனை கண்டு பயந்ததேல்லாம் சற்று மாறியிருந்தது நந்தினிக்கு… பழைய நந்தினியாக அவன் முன் வந்து நின்றாள்.

“எனக்கு ஒரு விஷயம் தெரியனும்… உணர்வை வெளிக்காட்டாத குரலில் அவள் கேட்க… என்னவென்பது போல பார்த்தான்.

“என்ன… அதே கடுமையோடு கேட்க

“புனிதாக்காவுக்கு என்னாச்சு?”

“உனக்கு தெரியாதா?” முறைப்பது போல பார்க்க… முகத்தை திருப்பி கொண்டாள்.

“உங்களுக்கு தெரிஞ்சது எனக்கு தெரியாது… எங்கோ பார்த்தபடி அவள் கூற… ஒரு நெடு மூச்சை விட்டபடி கூறினான்.

“அந்த பொண்ணுக்கு வெஷத்தை குடுத்து கொன்னாங்க… அந்த பையனை அடிச்சு ஆத்துல வீசிட்டங்க… கடுமை மாறாமல் சுருக்கமாக அவன் கூற… அதை கேட்ட நந்தினி முகம் வெளிறி போய் அவனை பார்த்தாள்… கல் போல மாறியிருந்த அவனது முகத்தோடு… அவன் கூறியது அவளது மனதில் கிலியை பரவ செய்தது… மனதை ஆசுவாசப்படுத்தி கொண்டு கேட்டாள்.

“யாருமே ஒன்னும் சொல்லலையா?” சந்தேகமாக அவள் கேட்க.

“யாரு சொல்வாங்க… காலம் காலமா இதுதான் நடக்குது… அன்னைக்கு அந்த பொண்ணு அதுக்கு முன்னாடி இன்னொரு பொண்ணு… அவங்க கௌரவத்தை காப்பாத்தறாங்களாம்… ச்சை… இதுங்கல்லாம் மனுஷ கூட்டமா?” அவளை வெறுப்பாக பார்த்து கூற… அவளுக்கு அந்த கூட்டத்தில் இருந்து வந்தவள் தானே நீயும் என்று அவன் கூறுவது போல இருந்தது… மனம் கனத்தது.

“இதுவரைக்கும் வீட்ல இந்த மாதிரி பேசி நான் பார்த்ததில்ல… ஆனா காதலிச்சு கல்யாணம் செய்யறதை அனுமதிக்கறது இல்லைன்னு மட்டும் தான் தெரியும் சக்தி எங்களுக்கு… அதுக்கு பின்னாடி இப்படியெல்லாம் நடந்துட்டு இருக்குன்னு நினைச்சாலே… மனசு நடுங்குது…

கண்களில் கண்ணீர் சூழ அவள் முகத்தை மூடி கொண்டு அவனை விட்டு சற்று தள்ளி அமர்ந்தாள்… முதுகு குலுங்கியதை வைத்து அழுகிறாள் என்பதை கண்டுகொண்டான.

“எல்லாருக்கும் தெரிஞ்சு தான் நடக்குது… அன்னைக்கு சித்ரா வீட்ல பிரச்சனை நடந்தப்போ உங்க அப்பா சொன்னார்… மிச்ச மீதிய நாளைக்கு பார்த்துக்கலாம்ன்னு அதோட அர்த்தம் அடுத்த நாள் தான் எனக்கு தெரிஞ்சுது… அதே மாதிரி உனக்கும் சொன்னப்போ என்னால அப்படியே விட்டுட்டு வர முடியல… அழுது கொண்டிருந்தவள் கண்ணீரோடு நிமிர்ந்து பார்த்தாள்.

“அதனால தான் என்னை நீங்க உங்க கூட கூட்டிட்டு வந்தீங்களா?”

“ஆமா… உணர்வை துடைத்து அவன் கூறியது நந்தினிக்கு வலித்தது.

ஒரு புறம் அவளை பெற்ற தந்தையை நினைத்து வெறுத்தாள் மறுபுறம் சக்தியின் காதலுக்காக ஏங்கினாள்… ஆனால் இரண்டுக்கும் நடுவில் அவளது மனம் தன் படிப்பு என்னாகுமோ? கனவு நிறைவேறுமா என்று துடித்து கொண்டிருந்தது.

“என் மேல வேற அபிப்ராயமே இல்லையா?” ஏக்கமாக அவள் கேட்டது அவனுக்கு புரிந்தாலும் அவனது மனம் அப்போது நிர்தாட்சண்யமாக மறுத்தது… அவை வார்த்தைகளாகவும் வெளிவந்தன.

“இல்லை… இப்போ வரைக்கும் இல்ல…

“அப்போ எதிர்காலத்துல வர்றதுக்கு சான்ஸ் இருக்கா?”

“தெரியாது… உணர்வை துடைத்து பாறையாக இறுகிய குரலில் அவன் கூறிய பதிலை கேட்டு மனம் தளர்ந்தாள்… மெளனமான அவளது பார்வையில் அவன் பேச ஆரம்பித்தான்.

“ நீ சொன்ன பொய் நான் கனவில கூட நினைச்சு பார்க்காத பொய்… ஆனா அந்த பொய்ய துணிஞ்சு நீயும் சொல்லியிருக்க… உன் உயிரை காப்பாத்த வேண்டி… கிட்டத்தட்ட அக்செப்ட் பண்ணிட்டு தான் உன்னை கூட்டிட்டு வந்திருக்கேன்… வேற வழியும் எனக்கு தெரியல… சும்மா உன்னை கூட வெச்சுருந்தா அசிங்கம்… அதுக்கு பேர் வேற கட்டி விட்டுடுவாங்க… சோ நாளைக்கு நமக்கு கல்யாணம்… என்று கூறிவிட்டு நிறுத்த… அவளது முகம் மலர்ந்தது.

“ஆனா அதுக்கு மேல எதையும் எதிர்பார்க்காத… ஹாஸ்டல்ல சேர்த்து விட்டுடறேன்… படிச்சுக்கோ… எவ்வளவு வேணுமோ படி… நீ ரேங்க் ஸ்டுடென்ட் வேற… அந்த ஒரு ரீசன் தான்… உன் படிப்பு கெட்டு போய்ட கூடாதுன்னு இவ்வளவு காம்ப்ரமைஸ் பண்ணிருக்கேன்… ஆனா நீ சொன்ன பொய்ய டைஜஸ்ட் பண்ணி உன்னையே லவ் பண்ணியாகனும்ன்னு என்னை போர்ஸ் பண்ணாத… என்னால கண்டிப்பா முடியாது… பிகாஸ் ஐ டூ ஹேவ் பீலிங்க்ஸ்… நான் ஒன்னும் ரோபோ இல்ல… திடீர்னு ப்ரோக்ராம் மாத்தி எழுதுனா அதை அக்செப்ட் பண்ணிக்க…

அவன் கூறியதை அவனை போலவே உணர்வை துடைத்து கேட்டு கொண்டிருந்தவள்.

“நீங்க என்ன படிச்சு இருக்கீங்கன்னு இன்னும் சொல்ல மாட்டீங்களா?”

“இப்படி என்னை பத்தி எதுவுமே தெரியாம எப்படி அப்படி ஒரு டெசிஷன் எடுத்த?” கேள்வியாக அவளை பார்க்க.

“என் மனசு சொல்லுச்சு சக்தி… நீங்க நல்லவர்ன்னு…

“ஹா… இந்த சினிமா டைலாக் எல்லாம் வாழ்க்கைக்கு ஒத்து வராது… ஏன் அதே மனசு முன்னாடி எல்லாம் சொல்லலையா? நானும் உன்னை வருஷக்கணக்கா தானே பார்க்கறேன்…

“அதெல்லாம் உங்களுக்கு புரியாது… எங்களை மாதிரி நல்ல ஹியுமன் பீயிங்ஸ்க்கு தான் அந்த லவ்ங்கற பீலிங் வரும்… அதுவும் வர போறேன்னு லட்டர் போட்டுட்டு… நாள் நட்சத்திரம் எல்லாம் பார்த்துட்டு வராது… அவளது பழைய குறும்பு மீண்டிருக்க… அவனை குறும்பாக பார்த்து கண்ணடித்தாள்.

“அப்படீன்னா… நாங்க யாருங்க மேடம்?... ஹியுமன் பீயிங் இல்லாம… அவளுடைய நக்கலை நினைத்து உள்ளுக்குள் சிரித்தாலும் வெளிகாட்டி கொள்ளாமல் அவன் கேட்க.

“உங்களை எல்லாம் யார் ஹியுமன்னு சொன்னா? நீங்க எல்லாம் இந்த கல்லு மண்ணு மாதிரி… அப்புறம் இதோ நிற்குதே உங்க அழகு ஓட்டை வேன்… அது மாதிரி ஒரு ப்ரொடக்ட்… உங்களுக்கு பீலிங்க்ஸ்எல்லாம் தேவையேஇல்ல… என்று கூறிவிட்டு உதட்டை சுளித்தபடி எழ.

“இங்க பாரும்மா… இப்படியே ஓவரா வாயாடிகிட்டு இருந்த,... பல்ல தட்டி கைல குடுத்துடுவேன்… ஒழுங்கா படிக்கற வேலைய மட்டும் பார்த்துட்டு போ”என்றபடி அவனும் எழ… அவள் திரும்பி சக்தியை பார்த்து அவனருகில் வந்தாள்.

“எதை தட்டுவீங்க? பல்லையா? தட்டிக்கோங்க… என்றபடி அவனுக்கு நெருக்கமாக முகத்தை காட்ட… அவனுக்கு திக்கென்றது… வெகு அருகில் அவளது முகம்… அவனது பதட்டத்தை ரசித்து பார்த்தவள் அவனை இன்னும் கொஞ்சம் வம்புக்கிழுக்க வேண்டி.

“மாமா ஒண்ணா… ரெண்டா?” அப்பாவியாக அவள் கேட்க… சக்தி திடுக்கிட்டு

“என்ன்ன்ன்ன…?” என்று கேட்க

“இல்ல மாமா… நீங்க தட்டுறேன்னு சொன்ன பல்லைத்தான்… என்று சிரித்து வைக்க… அவளை கடுப்பாக ஒரு பார்வை பார்த்து வைத்து… முகத்தையும் கடுமையாகவே வைத்து கொண்டு.

“இப்போதான் ரெண்டு பேய் சுத்தறதை பார்த்தேன்… அதுங்க கிட்ட வேணும்னா கேட்டு உனக்கு பதிலை சொல்றேன்… சிரிக்காமல் அவன் கூற.

“ஐயோ பேயா… நீங்க பார்த்தீங்களா?”என்று அலற… அவனுக்கு சிரிப்பு வந்தாலும் அதை கட்டுபடுத்தி கொண்டு.

“ஏன் நீ பார்க்கலையா? இங்கவே தான் இருந்துதுங்க… இரு கூப்பிடறேன்… என்று அவன் சுற்றியும் பார்க்க… அவள் நிஜமாகவே பயந்து கொண்டு.

“உங்களுக்கு பயமா இல்லையா?” என்று கேட்க.

“பயமா… எனக்கா… கிழிஞ்சுது… இந்நேரம் வரைக்கும் அது கூடத்தானே பேசிட்டு இருக்கேன்… அதையும் சிரிக்காமல் கூற… அவனது கேலி புரியும் வரை பரிதாபமாக பார்த்தவள்… புரிந்தவுடன்.

“அடப்பாவி… நானா பேய்?” அவனை கடுப்பாக கேட்க.

“பின்ன… நீயும் தூங்காம என்னையும் தூங்க விடாம அறுத்து தள்ளிட்டு இருந்தா… மரியாதையா போய் படுத்து தூங்கு… என்றபடி அவன் திண்ணையிலேயே படுக்க… உதட்டை சுளித்து பழித்து விட்டு உள்ளே சென்றாள்.

********

மத்தள மேளம் முரசொலிக்க

வரிசங்கம் நின்றாங்கே ஒலியிசைக்க

கைத்தலம் நான் பற்ற கனவு கண்டேன்

அந்த கனவுகள் நனவாக உறவு தந்தாய்!

அன்று காலையில் அவசரமாக எடுத்த பருத்தி கூரைப்புடவையில் நந்தினி அமர்ந்திருக்க… அருகில் தூய பருத்தி வேஷ்டி சட்டையில் சக்திவேல் அமர்ந்திருந்தார… கல்யாண பசுபதீஸ்வரர் திருக்கோயிலில் சைவ நெறி முறைப்படி தேவார திருவாசகங்களை ஓதுவார் ஓத… அம்மையும் அப்பனும் அருள்பாலிக்க திருத்தாலியை நந்தினியின் கழுத்தில் அணிவித்து தன் இல்லாளாக்கி கொண்டான் சக்திவேல்… வெகு எளிமையாக நடந்த அந்த திருமண நிகழ்வில் கலந்து கொண்டு வாழ்த்தியவர்கள் வெற்றி, தேவசேனா, செந்தில் இன்னும் சில நண்பர்கள் மட்டுமே.

“சக்தி… என்னோட புதுப்பட்டுசேலையே இருக்குடா… அதையாவது நந்துக்கு கொடு… அரை மணி நேரத்துல நானே ப்ளவுஸ் தச்சுடறேன்… தெய்வா கெஞ்சினாலும் சற்றும் செவி சாய்க்காமல்.

“அக்கா… இப்போ என்னோட வசதி இவ்வளவுதான்… என்னோட வசதிக்கு தான் அவங்க பழக்கபடுத்திக்கணும்… பின்னாடி வசதி வந்தா கூட பட்டு சேலையெல்லாம் கட்டறதுல எனக்கு உடன்பாடு இல்ல… அந்த காசுக்கு ஐநூறு பிள்ளைங்க ஒரு நேரம் வயிறு நெறைய சாப்பிடலாங்க்கா…

பிடிவாதமாக முடித்து விட்டவனை பார்த்தபோது நந்தினிக்கு மனதின் ஓரத்தில் சிறிது பயம் வந்தது… அவனது பிடிவாதங்களை பார்த்து… இதே பிடிவாதத்தை அவளது காதல் விஷயத்திலும் அவன் காட்டிக்கொண்டே இருந்தால்? மனம் ஒரு பக்கம் சோர்ந்தாலும் மறுப்பக்கம்.

“டேய் ஹிட்லர்… வைக்கிறேன்டா உனக்கு ஆப்பு… லவ்வா பண்ண மாட்ட லவ்வு… நான் உன்னைய படுத்தற படுத்துல நந்து ஐ லவ் யூ ன்னு நீ ஓடியாரனுமாக்கும்…என்று சூளுரைக்கவும் மறக்கவில்லை… எப்படியிருந்தாலும் இந்த மூன்று மாதம் ஹாஸ்டல் வாசம் தான் என்று முடிவாகிவிட்டதால்.

“இந்த மூணு மாசம் ப்ரீயா இருந்துக்கடா ஹிட்லர்… அப்புறம் இருக்கு உனக்கு… மனதிற்குள் அவனை வறுத்து எடுத்து கொண்டிருந்தாள்.

முகம் முழுக்க புன்னகையோடும் பூரிப்போடும் நிமிர்ந்த நந்தினி தாலியை அணிவித்து நிமிர்ந்தவனை பார்த்து காதலோடு புன்னகைக்க… மனம் முழுக்க அவள் மேல் கோபத்தில் இருந்த சக்திவேலோ அவளை எரிக்காதது ஒன்று மட்டுமே குறையாக இருந்தது.

அப்பொழுதே திருமணத்தை பதிவு செய்ய கோரும் விண்ணப்பத்தில் இருவரும் கையெழுத்திட… அந்த திருக்கோயிலின் திருமண பதிவாளர்,

“இன்னும் பதினஞ்சு நாள் கழிச்சு ஒரு சைன் மட்டும் வந்து பண்ணிடுங்க… கல்யாணம் லீகலா ரெஜிஸ்டராகிடும்…

என்று கூறிவிட்டு போக… அனைவரோடும் சுவாமி தரிசனம் செய்ய சென்றான்.

காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி

ஓதுவார்த்தமை நன்னெரிக்குயிப்பது

வேதம் நான்கிலும் மெய்பொருளாவது

நாதன் நாமம் நமச்சிவாயமே!

ஓதுவார் கணீரென்ற குரலில் அப்பன் முன்னின்று பாட… கண்ணீர் மல்கியது நந்தினி!

“ஈஸ்வரா… இனிமே எனக்கு வாழ்க்கைல சக்தியை தவிர வேற துணையில்லை… எனக்கு படிப்பும் வேணும், என் சக்தியோட ஆத்மார்த்தமான காதலும் வேணும்… எங்களுக்கு என்ன கஷ்டம் வந்தாலும் அதை சமாளிக்கற தைரியத்தை மட்டும் கொடு ஆண்டவா…

அவளையும் அறியாமல் கண்ணீர் உருண்டு விழுந்தது!