Kaalangalil aval vasantham 6 (2)

கார் விமானநிலையத்தினுள் நுழைந்தது. அது உள்நாட்டு விமான முனையம். ஆக, எங்கேயோ பக்கம் தான் என்று முடிவு செய்து கொண்டாள். அவனோ கார் பார்க்கிங்கை நோக்கி செலுத்திக் கொண்டே,

“வயித்துக்கு ஒன்னும் குடுக்காதப்பவே இத்தனை பேசினா, உள்ள போச்சுன்னா என்ன பேச்சு பேசுவ… இதுல வேற உடம்பு சரியில்லன்னு ஒரு சாக்கு வேற…” என்று அவளது தலையிலேயே கொட்ட,

அவனை முறைத்துப் பார்த்தபடியே கீழே இறங்கினாள். அவன் பார்க்கிங்கில் நிறுத்திவிட்டு வரும் வரை அங்கேயே பராக்குப் பார்த்துக் கொண்டிருப்பாள். அதுவரை உணராத உடல் சோர்வும், பசியும் சேர்ந்து கொள்ள, அப்படியே அமர்ந்து விட்டாள்.

நிஜமாகவே பறப்பது போலத்தான் இருந்தது!

செல்பேசி அழைத்தது!

தாயின் எண் ஒளிர, எடுத்தாள்!

“சொல்லும்மா…”

“ப்ரீத்தி…” என்று இழுத்தார் சீதாலக்ஷ்மி.

“சொல்லும்மா… என்ன விஷயம்?” கொஞ்சம் பதட்டமாக இருந்தது. பொதுவாக அவர் காலையில் அழைக்க மாட்டார், காலையில் அவளுக்கிருக்கும் வேலைப்பளுவைப் பற்றி அவருக்கு தெரியும். அதுவும் இத்தனை காலையிலேயே அழைக்கவே மாட்டாரே!

“உங்க அப்பாவ நினைச்சா பயமா இருக்கு கண்ணு…” என்று குரல் நடுங்க கூற,

“என்னாச்சு?” கூர்மையாகக் கேட்டாள். இனியும் என்ன செய்து வைக்கப் போகிறாரோ என்ற பயம்!

“நைட்டெல்லாம் ஒரே பினாத்தல் தான். மானம் போச்சு மரியாதை போச்சுன்னு…”

“ஏனாம்?” பல்லைக் கடித்துக் கொண்டு கேட்க,

“பஞ்சாயத்து பேச போன இடத்துல அந்த நடேசன் உங்கப்பா சட்டையை புடிச்சிட்டான் போல இருக்குடா. தூக்குல தொங்கப் போறேன், அது பண்ண போறேன், இது பண்ணப் போறேன்னு ஏக ரகளை பண்ணிட்டு இருக்காங்க…”

சீதாலக்ஷ்மியின் குரலில் ஏக பயம். கணவன் எதையாவது செய்து வைத்துக் கொள்வானோ என்று!

“இதெல்லாம் வெத்து சீனு. நீ கிடந்து பயப்படாத…” என்றாள் படு கோபமாக!

அதென்ன பயமுறுத்துவது? வாங்கி செலவு செய்யும் வரை ஒன்றும் தெரியவில்லையாமா? இப்போது மட்டும் மானம் கப்பலேறுகிறதா?

“அது வெத்து சீனோ, இந்தாள் வெத்து மனுஷனோ… பேருக்கு உங்கப்பான்னு இருக்கான். எதையாவது பண்ணி வெச்சுகிட்டா உங்க ரெண்டு பேரையும் நான் எப்படி கரையேத்துவேன்?” அவருக்கும் கோபம்! அதை யாரிடம் காட்டுவதென்று தான் தெரியவில்லை. மகளிடம் கோபப்பட்டு என்னாக போகிறது? அவள் தான் இப்போது வரை குடும்பத்தை காப்பாற்றுகிறாள் என்பது புரியாமலில்லை. ஆனாலும் அவருக்கு கோபத்தை எங்கு காட்டுவது என்ற குழப்பத்தில் இவளிடம் எரிந்து விழுந்தார்.

“நான் பார்த்துக்கறேன்…” என்று முடிக்க பார்க்க, அவரோ,

“நீ இழுத்துப் போட்டுக்காத ப்ரீத்தி…” என்றும் கூறினார். இவர் என்னதான் கூற வருகிறார் என்று அவளுக்கே பிடிபடவில்லை.

“இப்ப என்னதான் சொல்ல வர்றமா? இழுத்துப் போட்டுக்காதன்னா, உன் புருஷன் அடைக்கறாராமா?” குத்தலாக இவள் கேட்க,

“அந்த மனுஷனுக்கு அவ்வளவு திறமை இருந்தா நான் ஏன் இப்படி இருக்கப் போறேன்?” என்றவருக்கு என்ன சொல்வது என்றே புரியவில்லை.

“அவருக்கும் திறமை இல்லைங்கற… என்னையும் இழுத்துப் போட்டுக்காதன்னு சொல்ற. இப்ப என்ன தான் சொல்ல வர்ற?” கடினமான குரலில் கேட்டவளுக்கு என்ன சொல்வது?

அவள் திருமணம் வரைதான் அவளுடைய சம்பாத்தியத்தை தாங்கள் உரிமை கொண்டாட முடியும் என்ற உண்மை வேறு அவரது முகத்தில் அறைந்து கொண்டிருந்தது. அவள் போய்விட்டால், இந்த மனிதனை வைத்து எப்படி குடும்பம் நடத்துவது என்ற கேள்வி வேறு இரவு முதலாக!

“ஒன்னும் சொல்லல. நாங்க இருந்தா தானே இந்த ஈனப் பிழைப்பு! அதுக்கு பேசாம போய் சேர்ந்துடலாம்.” என்றவருக்கு துக்கம் தொண்டையை அடைத்தது.

அப்போதும் கூட நாங்கள் என்று தான் வாய் வருகிறது என்பது அவளுக்கு எங்கோ அடி வாங்கியதை போல இருந்தது. அந்த நாங்களில் ‘நான்’ இல்லையா? கலங்கப் பார்த்தக் கண்களை இமை கொட்டி விழித்து, ஆழமாக மூச்சை இழுத்துவிட்டு என்று எப்படி எப்படியோ போராடி அணை போட்டாள்.

இது பொது இடம்! உணர்வுகளை விற்க இது இடமல்ல!

“நான் பாத்துக்கறேன்… கவலைப்படாத…” என்று உறுதி கொடுத்தவள், செல்பேசியை அவர் வைத்தப்பின்னும் அதை காதிலேயே வைத்திருந்தாள்.

வைக்கத் தோன்றவில்லை.

அவள் தனி என்ற உணர்வு வந்தபோது நெஞ்சுக்குள் ஏதோவொன்று அடைப்பதைப் போலிருந்தது.

சுற்றிலும் மனிதர்கள் இருக்கிறார்கள், எப்போது வேண்டுமானாலும் சஷாங்கன் வந்துவிடுவான் என்ற உணர்வு மட்டும் இல்லையென்றால் அங்கேயே சிலையாகி விட்டிருப்பாள்.

குடும்பம் குடும்பம் என்று அதற்காகவே இத்தனை ஆண்டுகளாக உழைத்தும் அந்த ‘நாங்களில்’ அவள் இல்லையென்ற கொடூர உண்மையை அவளால் ஏற்க முடியவில்லை.

முகத்தை அழுத்தமாக துடைத்தவளை கலைத்தது சஷாங்கனின் குரல்.

“ப்ரீத்…” என்றவனை நிமிர்ந்து பார்த்தாள்.

லேசாக கலங்கியிருந்த அந்த கண்கள் அவனை ஏதோ செய்தன. அந்த கண்களில் கண்ணீரை பார்க்கவே கூடாதென்ற அவனது பிடிவாதம் இன்னும் இறுகியது.

“எழுந்திரிடா! ஏன் இங்க கீழ உட்கார்ந்துட்ட? உள்ள வெய்ட்டிங் ஹால்ல உட்காரலாம்ல…” என்று கேட்க, அவளது உணர்வுகளை சடுதியில் மறைத்துக் கொண்டு,

“என்னைக் காணோம்ன்னு நீங்க தேடக் கூடாதில்ல பாஸ்…” என்று சிரிக்க, அந்த சிரிப்பு அவள் கண்களை அடையவில்லை.

“உன்னை நான் எப்பவும் அப்படி மிஸ் பண்ணிற மாட்டேன். சோ டோன்ட் ஒர்ரி…” என்றவன், அவளது கையைப் பிடித்து எழுப்பி விட, பிடித்த கையை அவள் விடவில்லை.

அந்த வெம்மை அவளுக்குத் தேவையாக இருந்தது.

அவளது உடல் சோர்வை காட்டிலும், இப்போது மனம் மிக மோசமாக சோர்வடைந்து இருந்தது.

அவளது கையை பிடித்தபடியே விடாமல் நடந்தவன், செக் இன் கவுண்ட்டரை அடைந்து செக் இன் செய்தான்.

போவது திருச்சிக்குத்தான்!

சிறு புன்னகையோடு அவனைத் திரும்பிப் பார்க்க, “அங்க ஒரு ப்ராஜக்ட் பண்ணலாம்ன்னு ப்ளான். ரொம்ப நாளா உள்ள ஓடிட்டு இருந்தது. ஒரு நாலஞ்சு சைட் சொல்லி இருக்காங்க. போய் பார்க்கலாம். ஓகேன்னா செய்யலாம்…” என்று விளக்கியவனை அதே புன்னகையோடு தொடர்ந்து பார்த்துக் கொண்டே இருந்தாள்.

என்னதான் இருந்தாலும் திருச்சிக்கு போவதென்றால் அவளுக்குக் குஷி தான் என்பதை அவன் அறியாதவனா என்ன?

ப்ரீத்தி பதில் எதுவும் பேசவில்லை.

அவனும் அவளது பதிலை எதிர்பார்க்கவில்லை. அவள் பேசிக்கொண்டிருந்தபோதே வந்துவிட்டான். அவள் வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருந்ததை பார்த்துக் கொண்டுதான் இருந்தான். ஏதோ பெரிய பிரச்சனை என்று மட்டும் புரிந்தது. ஆனால் என்னவென்று தான் புரியவில்லை. அவனும் எப்படியெல்லாமோ, அவளிடம் வாங்கிவிடலாம் என்றுதான் பார்த்தான். பேசும் நேரத்தில் எப்படியாவது அவள் சொல்லிவிடுவாள் என்று ரொம்பவும் எதிர்பார்த்தான்.

ஆனால் பிடிவாதமாக அவள் என்ன பிரச்சனை என்றும் சொல்லவில்லை. எதற்காக கோவிலில் தந்தையையும் தமக்கையையும் சந்தித்தாள் என்பதையும் சொல்லவில்லை.

இதற்கு நடுவில் ஏதேனும் கோடு இருக்கிறதா என்பதும் அவனுக்கு தெரியவில்லை.

ஆனால் ப்ரீத்தா தன்னை விட்டுக் கொடுத்துவிட மாட்டாள் என்பது மட்டும் திண்ணம்!

அதை நினைத்தபோது அவனையும் அறியாமல், அவன் பிடித்திருந்த ப்ரீத்தியின் கரத்தை இறுக்கமாகப் பிடித்தான்.

அவனுக்கு ஏனோ ப்ரீத்தியை யாரோ குறி வைத்து விட்டார்கள் என்றுதான் தோன்றியது. அதுவும் இல்லாமல், மெனக்கெட்டு ஸ்வேதா இப்போது அழைத்து உனது தோழியின் வண்டவாளத்தைப் பார் என்று ஏன் விளம்ப வேண்டும்?

வண்டவாளம் என்பதெல்லாம் பெரிய வார்த்தை என்பதை அவளுக்கு எப்படி புரிய வைப்பது?

ப்ரீத்தவை அழைத்துக் கொண்டு, செக் இன் வேலைகளை எல்லாம் முடித்துக் கொண்டு அவர்களது கேட் டுக்கு வந்தபோது அவனுக்குமே பசி!

நேராக கேட் காம்ப்ளெக்சில் இருந்த இட்லி கடையை தஞ்சமடைந்தான்!

சூடாக இட்லியும் அதை விட சூடாக பில்டர் காபியும் உள்ளே போனபின் தான் ப்ரீத்திக்கு சற்று தெம்பு வந்தது.

“இன்னொரு காபி வாங்கறேன்…” என்றவன் அவளது பதிலை எதிர்பார்க்காமல், வாங்கி வர, காபி தேவாம்ருதமாக இருந்தது.

அவள் குடிக்கும் போதே அவளது முதுகைத் தடவிக் கொடுத்தவன், “எதையுமே சொல்லிடாத ப்ரீத். சொன்னா உன்னோட ப்ரைவசி என்னாகறது?” என்று முகத்தைக் கடினமாக வைத்துக் கொண்டு கூற, அவள் பதில் கூறாமல் காபியை விழுங்கிக் கொண்டிருந்தாள், கூடவே கண்களை மீறத் துடித்தக் கண்ணீரையும்!

“சொன்னாதானே தெரியும்? என்ன என்னன்னு நானும் கரடியா கேட்டுட்டேன். ஏன் இப்படி பண்ற?” அவனது கோபத்தை எங்கு கொட்டுவது?

அப்போதும் அவள் பதிலேதும் பேசாமல் காபியை குடிக்க, அவன் எழ, சட்டென அவனது கையைப் பிடித்து அமர வைத்தாள், ஆனால் பேசவில்லை.

அவளது சிக்கலான மனநிலையை அவனால் உணர முடிந்தாலும், அவனால் எதையும் செய்யமுடியவில்லையே என்ற கோபம் தான் அவனுக்கும்! அதை அவளும் அறிவாள்!

மென்மையாக அவன் முதுகை தடவிக் கொடுக்க, அந்த வருடல் அவ்வளவு இதமாக இருந்தது!

வேறெந்த விஷயத்தைப் பேசினாலும் பேசுபவள், என்ன பிரச்சனை என்று கேட்டால் மட்டும் மௌனமாகிக் கொண்டிருந்தது அவனுக்கு இன்னமும் கோபத்தைத்தான் ஏற்படுத்தியது.

விமானப் பயணம் முடியும் வரை கூட அப்படியேத்தான் இருந்தாள்.

திருச்சியில் செக் அவுட் செய்துவிட்டு வெளியே வந்தவுடன் அவனது செல்பேசி அழைத்தது!

பாக்கெட்டில் வைத்திருந்த செல்பேசியை எடுத்து, பார்க்க, அழைத்தது, அவனது தமக்கை!

“ம்ம்ம்…” என்றவனை எதைக் கொண்டு அடிப்பதுன்று தெரியவில்லை வைஷ்ணவிக்கு!

“எங்க இருக்க ஷான்?”

“நீ விஷயத்த சொல்லு…” என்றான் அவளிடம் சிக்க விரும்பாமல்!

“ஆத்துல போட்டாலும் அளந்து போடணும் ஷான்…” என்று குத்த, அந்த தொனி அவனுக்கு எரிச்சலைக் கொடுத்தது.

“சொல்ல வந்ததை சொல்லு…”

“இன்டர்னல் ஆடிட்டை தடுத்து நிறுத்திட்டா எங்களால எதுவும் கண்டுபிடிக்க முடியாதுன்னு நினைச்சுகிட்டயா?” என்றவள், “எல்லாத்துக்குமே ஒரு விலை இருக்குடா தம்பி…” என்றாள் விளையாட்டாக!

“இப்ப சொல்றியா இல்ல போனை வைக்கட்டா?” என்று இவன் கேட்க,

“ஒரு பிளாட் ரேட் நாலு கோடி. அதுல ரெண்டு பிளாட்டை அந்த மாயாஜாலக்காரிக்கு எழுதி வெச்சிருக்க… இதெல்லாம் உனக்கே தப்பா தெரியல?”

“நான் என்ன பண்ணா உனக்கென்ன வைஷு? உன்னோடதை எடுத்தா கொடுத்தேன்?” என்று கேட்டவனின் கேள்விக்கு அவளால் பதில் கொடுக்கமுடியவில்லை.

“எதை எடுத்துக் கொடுத்தா என்ன? கொடுத்தல்ல?”

“மைன்ட் யுவர் பிசினஸ் வைஷு…” என்றவனை கொஞ்சமும் சட்டை செய்யவில்லை அவள்!

“எட்டு கோடி ருபாய் உனக்கு சாதரணமா தெரியுதா ஷான்?” என்று விடாமல் அவள் கேட்க, அவனுக்கு எரிச்சலாக இருந்தது.

“உனக்கு யார் சொன்னது?” அதே எரிச்சலோடு இவன் கேட்க,

“யாரா இருந்தா என்ன? உண்மைய தானே சொல்லி இருக்காங்க…” என்றவள், “அசிங்கமா இருக்குடா… இங்க எப்படியெல்லாம் பேசறாங்க தெரியுமா? தொங்கிடலாம் போல இருக்கு. உனக்கு எதை பத்தியுமே கவலை இல்லையா?” என்று சரமாரியாக கேட்க, எதுவும் பேசாமல் காலை கட் செய்தான்.

பேசினால் தானே பிரச்சனை!

ஆனால் அப்படி விட்டுவிட மாட்டேன் என்று மீண்டும் வைஷ்ணவி அழைக்க, பேசியை ஆப் செய்து பாக்கெட்டில் போட்டபடி நடந்தான்.

அவனது வாக்குவாதம் காதில் விழுந்தாலும் அதை பற்றி என்னவென்று கேட்கவில்லை அவள்!

விமான நிலையத்திலிருந்து வெளியே வந்தவன், எதுவும் பேசாமல் டாக்சியை பிடித்தான். ப்ரீத்தியை ஏற சொல்லி,

“கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு சங்கம் வந்துடு ப்ரீத்…” என்று கூற,

“நீங்களும் வாங்க பாஸ். ஒன்னாவே போலாம். சங்கத்துல இருந்து நான் போய்க்கறேன்…” என்று ப்ரீத்தா கூற, சற்று யோசித்தவன், அதே யோசனையோடு டேக்ஸியில் அமர்ந்தான்.

அவனது இறுகிய முகத்தைப் பார்த்தவள், “ஏதாவது புது பிரச்சனையா பாஸ்?” என்று கேட்க,

“ம்ம்ம்… நீ சொல்ற மாதிரி நத்திங்…” தட்டையாக இவன் முடிக்க,

“எல்லாம் நேரக்கொடுமை முருகேசா…”

அவளைத் திரும்பிப் பார்த்தவனின் முகத்தில் புன்னகை! அவனை சங்கத்தில் விட்டுவிட்டு, அதே டேக்ஸியில் இவளது வீட்டை நோக்கிப் போனாள் ப்ரீத்தா.

எல்லாம் சரியாகத்தான் போய்க் கொண்டிருந்தது.

வைஷ்ணவியின் அக்கௌன்ட்டிலிருந்து ப்ரீத்தியின் தகப்பனாரின் அக்கௌன்ட்டுக்கு பத்து லட்ச ரூபாய் போனதை ஆதாரத்துடன் கூறிய அந்த புகைப்படம் அவனது செல்பேசியை அடையும் வரை!

அடைந்த பின்?!