TholilSaayaVaa1

TholilSaayaVaa1

1

 

மழைமேகம் சூழ்ந்திருக்கச் சென்னை மாநகரமே ரம்மியமாகக் காட்சியளித்துக் கொண்டிருந்தது. நின்று கவனிக்க நேரமின்றி மக்கள் காலில் ரெக்கை கட்டி பறந்துகொண்டிருந்தனர்.

ஒரே மாதிரியான தனித் தனி வீடுகளைக் கொண்ட அந்தக் காலனியில் காலை அலுவலுக்காக ஒவ்வொரு வீடும் அல்லோலகல்லோல பட்டுக்கொண்டிருக்க. அக்காலனியில் கடைக்கோடி வீட்டில் ஒருத்தியோ கழுத்துவரை இழுத்துப் போர்த்திக்கொண்டு உறங்கிக்கொண்டிருந்தாள்.

“ஹேய் எங்கேயோ போகணும் எழுப்புன்னு சொன்னே, எந்திரிடி சோம்பேறி” சமையல் அறையிலிருந்து அவள் அம்மா கீதா தொண்டை கிழியக் கத்த.

“அடியே எருமை மாடு! கதவைத் திறடி. என் லேப்டாப்பை எங்கடி வச்சு தொலைச்சே? எனக்கு கம்பனிக்கு லேட் ஆயிடும் மீட்டிங் இருக்குடி” அவள் அண்ணன் மாதவன் அவள் அறையின் வெளியே நின்று மூடிய கதவை உடைப்பதுபோல் தட்டிக் கொண்டு இருக்க

“ஆண்டாவா! ஒருத்தி நிம்மதியா தூங்கக் கூடாதே?” புலம்பியபடி மெல்லப் போர்வையை உதறித்தள்ளி எழுந்து, சோம்பல் கலையாமல் தள்ளாடிய படியே கதவைத் திறந்தாள்

“டேய் ஏன்டா தூங்க விடாம வதைக்கிற?” அண்ணனை முறைத்தவாறே அவனைத் தன் அறைக்குள் வரும்படி செய்கை செய்தவள்

“டைம் என்னடா?” தள்ளாடியபடியே கேட்க,

“ஏழு, என் லேப்டாப் எடுக்காதான்னு சொன்னா கேக்கறியா?”

“என்ன ஏழா?” முனகியபடி கட்டிலில் அமர்ந்தவள், “நான் ஒன்பது மணிக்குத் தானே எழுப்ப சொன்னேன். தூக்கமா வருதுடா” என்று கண்கள் சொருக அண்ணனைப் பார்க்க, மாதவனோ சிரித்தபடி,

“அம்மா நாம சொல்ற நேரத்துக்குக் குறைந்தபட்சம் ஒரு மணிநேரம் முன்னாடியே எழுப்புவான்னு தெரிஞ்சும் எதுக்கு அம்மாகிட்ட சொன்ன? அலாரம் வச்சுக்குறதுக்கு என்ன”

மறுபடி பெற்றவள் கத்தல் கேட்க,

“மா கத்தாதே ஏந்துட்டேன்!” உரக்கப் பதில் தந்தவள், மாதவனிடம்,

“போற வழில என் ஸ்கூட்டி ரெடியானு அந்த மெக்கானிக் கிட்ட கேட்டுட்டு எனக்கு மெசேஜ் பண்ணுடா”

“எனக்கு வேலை இருக்குடி, என்னால முடியாது, நீ வெட்டி ஆபிஸ்ர் தானே போய் கேட்டுக்கோ”

“யார் வெட்டி? அடுத்த வாரத்துலேந்து நானும் வேலைக்குப் போறேன் தெரியும்ல?” மிடுக்காய் சொன்னவள், மறுபடி படுத்துக்கொண்டு போர்வையைப் போர்த்திக்கொள்ள.

அவள் போர்வையை உருவி வீசியவன்,

“மா எருமை மறுபடி தூங்கறா…” உரக்கச் சொல்லிவிட்டு, “உனக்குப்போய் எந்த லூசுடி கேம்பஸ் இன்டெர்வியுல வேலை கொடுத்தது? பாவம் அந்த கம்பெனிய இனி யார் காப்பாத்த போறாங்களோ ?”

தங்கையை வம்பிழுத்தவன், அவள் கட்டிலிலிருந்த தன் மடிக்கணினியை எடுத்துக்கொண்டு வெளியேறினான்.

‘அடபோடா’ மீண்டும் அவள் தூங்க முற்பட,

“கண்ணா எழுந்துக்கோ! அம்மாவைக் கத்த வைக்காதே” கிருஷ்ணன் குரல் கொடுத்தார்.

“நான் தூங்கவே இல்ல!” கோவமாக எழுந்தவள், காலைக்கடனை முடித்துக்கொண்டு, மாடிப்படி கைப்பிடியில் ‘சொய்……ங்’ என்று கத்திக்கொண்டே சறுக்கியபடி இறங்க

“கழுதை என்னிக்கோ விழுந்து வாரப்போற, அப்போ இருக்கு” அவளை முதுகில் அடித்த மாதவன், “வரேன் மா…வரேன்டி…வாப்பா…” தந்தை கிருஷ்ணனுடன் கிளம்பினான்.

கிருஷ்னனும் மாதவனும் கோகோ ஊட்டச்சத்து பானங்களைத் தயாரிக்கும் நிறுவனத்தை நடத்திவருகின்றனர்.

ஆரம்பத்தில் ஆப்பிரிக்காவிலிருந்து கோகோ கொட்டைகளை வாங்கி தொழிலைத் துவங்கிய கிருஷ்ணனின் அப்பா மாதவன், பின் அறுபதுகளில் இந்தியாவிலேயே கோகோ கொட்டைகளைப் பயிரிடத் துவங்கியதிலிருந்து தமிழ்நாட்டிலும் ஆந்திராவிலும் அவைகளைக் கொள்முதல் செய்து தொழிலை நடத்தினார். கிருஷ்ணன் அவர் அப்பாவின் தொழிலை மேலும் நவீனப்படுத்தி வளர்த்தார். இப்பொழுது முதுநிலை வணிக நிர்வாகம் (MBA) முடித்த மாதவன் தந்தையுடன் இணைந்து கொண்டிருக்கிறான்.

தன் மகள் மாயாவும் தன் தொழிலில் இணைவாள் என்று அவர் எதிர்பார்க்க அவளோ சம்மதமே இல்லாமல் அனிமேஷன் கோர்ஸ் முடித்துக் கேம்பஸ் இன்டெர்வியு வாயிலாக அனிமேஷன் மற்றும் கிராபிக்ஸ் செய்யும் ஐடி நிறுவனத்தில் வேலையில் சேரப் போகிறாள்.

மாயா “மா பசிக்குது சாப்பிட தா” என்றபடியே சோஃபாவில் அமர்ந்துகொள்ள

“குளிச்சியா?” கீதா கேட்க

மாயாவோ கைப்பேசியை நோண்டிக்கொண்டே“அப்புறம் குளிச்சுக்குறேன் முதலில் எனக்கு ஏதான போடு”

“செருப்பு இருக்கு வேணுமா?” கோவாமாக கீதா கேட்க

“நோ தேங்க்ஸ்!” தோளைக் குலுக்கினாள்

“வெள்ளிக்கிழமை அதுவுமா குளிக்காம. போய்க் குளிடி”

“ஆடு, மாடு, கோழிலாம் குளிக்குதா என்ன? மனுஷன் மட்டும் எதுக்கு குளிக்கணும்?”

கீதாவின் குரலில் கோவம் தலை தூக்க “ஆடுமாடெல்லாம் புல்லு புண்ணாக்குன்னு தின்னுது, நீ தின்றியா?”

“நீ பண்ற சமையலே அப்படிதான் இருக்கு. இதுல தனியா ஏன் நான் புண்ணாக்கத் திண்ணனும்?” அவள் சொன்னவுடன், கோவமாகச் சமையலறையிலிருந்து வந்தவர் கையிலிருந்த உருளைக்கிழங்கைத் தூக்கி அவள்மேல் ஏறிய, அதிலிருந்து தப்பித்தவள்

“ஜஸ்ட் மிஸ் ! அடிக்கிறது தான் அடிக்கிற வேகவைச்ச கிழங்கால அடிச்சுருந்தா தின்னவாது செய்வேன்” அவள் பேசப் பேச அவளைக் கொலைவெறியோடு நெருங்கிய அன்னையின் கையில் அகப்படாமல் குளிக்கத் தன் அறைக்கு ஓடிவிட்டாள்.

ஒரு வழியாகத் தயாராகிவந்து பொங்கலை மொசுக்கிவிட்டு, ஏப்பம் விட்டபடியே கிளம்பிய மாயா,

“சரி டார்லிங் நான் ஷாப்பிங் போறேன். உனக்கு ஏதாவது வேணுமா?”

கையில் தபால் உறையுடன் வந்த கீதா, “எனக்கு எதுவும் வேண்டாம், இந்த கவர போற வழியில போஸ்ட் பண்ணிடு”

“யாருக்குமா?” தபாலிலிருந்த பெயரைப் பார்த்தவள், “பாட்டிக்கா? அதான் எப்போவும் ஃபோன் பேசுறியே எதுக்கு லெட்டர்?”

“போஸ்ட் பண்ணுனா பண்ணு” என்றுகொண்டே அவர் தன் வேலைகளைத் தொடர

“சரி பண்றேன், இதுக்கு லஞ்சமா ஈவினிங் உருளைக்கிழங்கு போண்டா போட்டுவை” என்றுகொண்டே அவள் கிளம்ப

“தின்னு தின்னு நீயே உருளைக்கிழங்கு மாதிரித்தான் இருக்கே” என்றவர் மகளின் முறைப்படி பார்த்துச் சிரித்தபடி,
“சரி பண்ணிவைக்கறேன் கிளம்பு, உங்க எல்லாரையும் கிளப்பினாதான் நான் நிம்மதியா கொஞ்சம் ரெஸ்ட் எடுக்க முடியும்”

“சரி சரி என்சாய் என்சாய் ம்ம் ம்ம்” புறப்பட்டாள் மாயா

தபால் அலுவலகத்தில் கடிதத்தைப் போஸ்ட் செய்துவிட்டு சாலையைக் கடக்கச் சிக்கெனலில் அவள் நின்றபொழுது, 80 வயது மதிக்கத் தக்க மெலிந்த மூதாட்டி,

“கண்ணு எனக்கு ரோடு கிராஸ் பண்ண உதவி செய்யிறியா? பஸ் காரன் இந்த பக்கம் இறக்கி விட்டுட்டான். அந்த பக்கம் போனா ஆட்டோ பிடிச்சு வீட்டுக்குப் போவேன். கண்ணு கொஞ்சம் மங்கலாதெரியுது. அதான்” என்று கேட்க

“அதுக்கென்ன பாட்டி, வாங்க” அவரின் கையை பற்றி சாலையைக் கடக்கத் துவங்கினாள்.

‘சுத்தம்! இவளோ மெதுவா நடக்குறாங்களே, எந்தக்காலத்துக்கு ரோட கிராஸ் பண்றது?’ அவள் யோசிக்கும் பொழுதே சிக்கெனலில் பச்சை வண்ணம் மாறி சிகப்பு விழ.

சாலையின் நடுவே ஆமை வேகத்தில் நடக்கும் பாட்டியைப் பிடித்துக்கொண்டு செய்வதறியாது மாயா விழிக்க, வாகனங்கள் வானைப் பிளப்பதுபோல் ஹார்ன் அடிக்கத் துவங்கின.

அவள் திரும்பி வாகன ஓட்டிகளிடம் கெஞ்சும்முன், கையிருந்த பாட்டியின் கைகள் மேலேறி முன்னேற, “பாட்டி…” அவள் திரும்ப, மூதாட்டியை கைகளில் ஏந்தி ஒருவன் “வா சீக்கிரம்!” என்ற படியே வேகமாக மீதி சாலையைக் கடக்க அவளும் அவனைப் பின்தொடர்ந்து ஓடினாள்.

மூதாட்டியை மெதுவாக இருங்கிவிட்டவன், மாயாவை நோக்கி கோவமாக,

“அறிவில்ல? வயசானவங்களை இப்படியா கூட்டிகிட்டு வருவே ?” என்று கேட்க,

“அவங்கதான் கிராஸ் பண்ணிட்டு ஆட்டோ பிடிக்கலாம்னு சொன்னாங்க அதான்…”

“உன்ன பாத்தா காசை மிச்சம் பிடிக்கிறமாதிரி தெரியலையே!” நக்கலாகச் சொன்னவன், அவளைத் தலைமுதல் கால்வரை மின்னல் வேகத்தில் பார்த்து, ஏளனமாகக் குரலில், “பிராண்டட் ஜீன்ஸ்… டாப்ஸ்… கைல புது மாடல் ஸ்மார்ட்போன்… கால்ல பிராண்டட் ஷூஸ். இதுல மிச்சம் பிடிக்காத கசையா ஆட்டோல பிடிக்கப் போறே?” குற்றம்சாட்டினான்.

அவன் தன்னை ஏளனமாக கேட்கவும் கடுப்பானவள், “அந்த பாட்டி ஆட்டோல போறதுக்கும் என் ட்ரெஸ்ஸுக்கும் ஃபோனுக்கும் என்ன சம்மந்தம்? யாரோ ஒரு பாட்டி ஆட்டோல போக நான் ஏன் மிச்சம் பிடிக்கணும்? கேனத்தனமால்ல இருக்கு” என்று முறைக்க,

‘யாரோ பாட்டி’ என்று அவள் சொன்னதைக் காதில் போட்டுக்கொள்ளாதவன், கடைசியாக அவள் சொன்ன ‘கேனத்தமால்ல இருக்கு’ என்பதைப் பிடித்துக்கொண்டான்.

“யாரு கேனை? ஆழாக்கு மாதிரி இருந்துகிட்டு மரியாதை இல்லாம பேசற? வயசானவங்கள எப்படி கையாளுனும்ன்ற அடிப்படை அறிவு கூட இல்ல…என்ன சொல்ல வந்துட்டா” அவன் சொன்னதுதான் தாமதம்

“யாரு ஆழாக்கு நானா?”அவன் உயரத்திற்கு அண்ணாந்து அவள் முறைக்க,

அப்பொழுது க்ரீ….ச் என்ற பலத்த சத்தத்துடன் அவன் பின்னே கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று, அந்த சாலையைத் தேய்த்துக்கொண்டு சாலை தடுப்பில் மோதி நிற்க. சாலை எங்கும் புழுதியும் புகையும் பறக்க. கணநேரத்தில் அவன் கையைப் பிடித்து அவள் இழுக்க, நிலைதடுமாறி அவனுடன் ஓரத்தில் விழுந்து கிடந்தாள் மாயா.

“சார்! சார்! உங்களுக்கு ஒன்னும் ஆகலேயே ? அடி ஏதேனும் பட்டுருக்கா? சார்! “ என்று குப்புற விழுந்திருந்தவனைத் திருப்ப

“ம்ம் ஒன்னும்மில்ல” மெதுவாக எழுந்தவன் அவளுக்கும் கை கொடுத்துத் தூக்கியபடி “உனக்கொண்ணும் ஆகலேயே ஆழாக்கு?” என்றான் பதட்டமாக

“இல்லை” தன் மேலிருந்த மண்ணை தட்டிக்கொண்டே பதில்தந்தாள்.

நடந்ததை உள்வாங்க இருவருக்கும் சிலநொடிகள் ஆனது. எதோ உணர்ந்தவள், “ஐயோ அந்த பாட்டி!” என்று பதற, இதுவரை இருவரும் மூதாட்டியை மறந்ததை நினைத்து தலையில் அடித்துக்கொண்டு அவனும் தேட,

அங்கிருந்த டடீக்கடைகாரரோ, “அந்த பாட்டியையா தேடுரீங்க? நீங்க ரெண்டு பேரும் சண்டை புடிக்கும் பொழுதே அது ஆட்டோ பிடிச்சு போயிடுச்சே” என்றார்.

“ஆழாக்கு…அப்போ அது உன் பாட்டி இல்ல?” அவன் புருவம் விரிய

“அதைத்தானே அப்போலேந்து சொல்லிக்கிட்டு இருக்கேன்?” என்று முறைத்தவள், “என் பேர் ஒன்னும் ஆழாக்கு இல்ல. நான் மாயா” என்று பெருமையாகச் சொல்ல

“ஹாஹா பெரிய வித்தியாசம்? குட்டியா கண்ணுக்கே தெரியாம மாயமாத்தான இருக்க? எங்கிருந்துடா குரல் வருதுன்னு குனிஞ்சு தேடவேண்டியதா இருக்கே!”அவன் கிண்டல்செய்ய, ஆத்திரத்தில் மாயா பல்லைக் கடிக்க,

அவனோ, “எனிவே தேங்க்ஸ்மா! நீ என்னை இழுக்காட்டி நாம ரெண்டு பேரும் இந்த ரோடோட ரோடா ஈஷிக்கிட்டு போயிருப்போம், உனக்கேத்த மாதிரி சொல்லனும்னா மாயமா போயிருப்போம்” புன்னகைத்தவன் மறுபடி நன்றி சொன்னான்.

புன்னகையுடன் “இருக்கட்டும் சார். எனக்கு நேரமாச்சு. பை” என்றவள் அவன் பதிலுக்குக் காத்திராமல் கிளம்பிவிட்டாள்.

தனக்குள்ளே சிரித்துக்கொண்டவன் “நீ மாயமோ மந்திரமோ! என் உயிரை காப்பாத்தின நீ எப்போவுமே எனக்கு ஆழாக்கு தான்” முணுமுணுத்தபடி அங்கிருந்த வணிக வளாகத்திற்குள் நுழைந்தான்.

மாலை வீடு திரும்பிய போதும் “ஹே ஆழாக்கு!” என்று அவன் அழைத்தது அவள் காதில் ஒலித்துக்கொண்டே இருந்தது.

தாயிடம், “கீது நீ வேஸ்ட்! ஒழுங்கா உனக்கு ஒரே மாதிரிக் குழந்தை பண்ணத் தெரியாதா?

மாதவனை மட்டும் இப்படி ஏணி மாதிரி பெத்துவச்சுருக்கே என்னை மட்டும் இப்படி ஆழாக்காட்டும் செஞ்சு வச்சுருக்கே ?” என்று குறைசொல்லிய படியே ஹாலில் தன் தந்தையின் அருகில் அமர்ந்தவள்

“நீயும் வேஸ்ட் கிச்சா. நீயும்தானே ஈகுவலி ரெஸ்பான்சிபிள் என்னைச் செஞ்சதுல ?” என்று தந்தையை முறைக்க

அவரோ சிரிப்புடன் “ஏண்டி நீ உயரமா வளராம நிற்கிறதுக்கு நானும் உங்கம்மாவும் என்ன செய்ய முடியும் ?” என்று கேட்க

மாதவனோ, “அதானே நீ என்ன அம்மா பண்ற இந்த காரா சேவா? நீட்டமா குட்டையான்னு பாத்துபாத்து செய்ய. ஒழுங்கா தின்னு உழைச்சு வளர்ந்தா தானா உசரம் வரபோகுது தின்னுட்டு தின்னுட்டு சதா கம்ப்யூட்டரே கதின்னு இருந்தா இப்படித்தான்” வம்பிழுத்தான்.

“போடா” கோவமாக சென்றவள் நேராக சென்று நின்றது தன் அறையிலிருந்த நிலைக்கண்ணாடியின் முன்னேதான். தன்னைத்தானே கண்ணாடியில் சுயபரிசோதனை செய்துகொண்டு இருந்தாள் மாயா.

‘நான் ஒன்னும் அவளோ குட்டை இல்லையே…ஐந்தடி இருப்பேனே. காமு பாட்டி நாலரை அடித்தானே’ எங்கோ ஊரில் இருக்கும் தாய் வழி பாட்டியின் உயரத்துடன் தன்னை இணைத்து தன்னை சமாதானம் செய்துகொண்டாள்.

ஒருவாரம் கழித்து முதல் முதலாகத் தான் வேலைக்குச் செல்லவேண்டிய நாளும் வர, அன்றும் எப்பொழுதும் போல வீடே சேர்ந்து எழுப்பிவிடும் வரை மாயா துயிலெழவில்லை.

8 30 மணிக்கு அங்கு இருந்தே தீர வேண்டும் என்ற மின்னஞ்சல் நினைவு வந்த பொழுதே கடிகாரம் 7 30 தாண்டி இருக்க. அரக்கப்பரக்கக் கிளம்பினாள்.

‘பிஸேல்ஸ் ஸ்டுடியோஸ் (Pixels Studios) வானைப்பிளந்துகொண்டு உயர்ந்து நின்ற அந்த பிரமாண்டமான கட்டிடத்தின் வாயிலில், ஒருநொடி கண்களைமூடி கடவுளை பிரார்த்தித்து கொண்டு வலதுகாலை எடுத்துவைத்து நுழைத்தாள் மாயா.

புதிய பணியாளர்களுக்கான சம்பிரதாயங்களை முடித்தபின் தனது ஐடி கார்டை வாங்கிக்கொண்டு, செக்யூரிட்டியை கடந்து உள்ளே நுழையும்பொழுது, தாமதமானதை உணர்ந்தவள், மூடிக்கொண்டிருந்த லிஃப்ட்டை நோக்கி ஒட்டியபடி,

“ஸ்டாப்! ஸ்டாப்…” என்று அவள் அலறிய அலறலில், லிஃப்ட்டின் கதவுகள் மீண்டும் திறக்க, லிஃப்ட்டிற்குள் நுழைந்தவள் மூச்சுவாங்கிய படி நின்றாள்.

“எந்த ஃபுளோர்?” என்ற குரல் வர,

“தெரியாதே…” என்றபடி அவள் நிமிர, சில நொடி அவனைப் பார்த்தவள், கண்கள் விரிய ஆச்சர்யமாக,

“சார் நீங்களா ? இங்கேயா வேலை செய்றீங்க? நான் இன்னிக்கிதான் வேளைக்குச் சேர்ந்தேன்“

அங்கிருந்த நெடியவனும் அதே ஆச்சர்ய புன்னகையுடன், “ஹேய் ஆழாக்கு எந்த புளோர்ன்னு கூடத் தெரிஞ்சுக்க மாட்டியா?” வினவினான்.

“அவசரத்துல கேட்டுக்கல. 8 30க்கு அங்க இருக்கணுமாம். எதோ ஓரியண்டேஷனாம்” என்று அவள் மூச்சு வாங்க

அந்த நெடியவனின் கண்களோ தன் கழுத்திற்குக் கீழே செல்வதைக் கண்டவள் “சார்!” என்று கைகளால் மூடிக்கொண்டாள்

அவள் செயலில் கோபமடைந்தவன், “ஹே சீ கைய எடு!”என்றபடி அவள் கழுத்திலிருந்த ஐடி கார்டை பார்த்துவிட்டு. ஏழாவது தளத்திற்குச் செல்ல லிஃப்ட்டில் பொத்தானை அழுத்தினான்.

தன் மடமையை உணர்ந்தவள், “மன்னிச்சுடுங்க” என்றவள் உடனே,

“ஆமா நீங்க எந்த டிபார்ட்மென்ட்? என்னவா வேலை செயிரீங்க ? எவளோ நாளா இந்த கம்பெனில இருக்கீங்க? நல்ல கம்பெனியா?

ஒழுங்கா சம்பளம் தருவாங்களா? இங்க லஞ்ச் அவங்களே தருவங்களாமே ! நம்மவூரு சாப்பாடா இல்ல எல்லாமே இருக்குமா?

புது இடமாச்சேன்னு பயந்தேன், அப்பாடா தெரிஞ்ச நீங்க இருக்கீங்க, ஆமா நீங்க இங்க வேலைபாக்றீங்க தானே? ஐடி கார்டு கண்ல படலயே அதான் கேட்டேன்” என்று கேள்விகளை அடுக்கிக் கொண்டே போக

அவளை ப்ரம்மிப்பாக கண்கொட்டாது பார்த்துக் கொண்டிருந்தவனோ,

“மை காட்! மழைபெஞ்சு ஓஞ்சு மாதிரி இருக்கு. ஒரு செகண்ட் உன்னால அமைதியா இருக்க முடியாதா? சான்ஸே இல்லை , தகர டப்பால கல்லைப்போட்டு உருட்டுற மாதிரி லொட லொட லொடன்னு” என்று நெற்றியைப் பிடித்துக்கொண்டு ஆரம்பித்தவன் முடிக்கும் முன்பே 7வது தளம் வர, லிஃப்ட்டை விட்டு வெளியேறிய மாயா கோவமாக,

“நான் இப்படித்தான் சார் !” என்று முறைக்க,

அவனும் லிஃப்ட்டை விட்டு வெளியே வந்ததைப் பார்த்து,

“இப்போ எதற்கு நீங்க இந்த புளோர்க்கு வரீங்க? சண்டை போடப் பின்னாடியே வாறீங்களோ?” குற்றம்சாட்டினாள்.

அவளை அதிசயமாகப் பார்த்தவனோ அவளைக் கடந்து நடந்தபடி, “இந்த புளோர் உனக்குன்னு எழுதி வச்சுருக்கா ? நீ இப்போ உள்ள வரியா இல்ல இங்கயே நின்னு லிஃப்ட்டை விட்டு வரவங்க எல்லார்கிட்டயும் வம்பிழுக்க போறியா?” நக்கலாய் கேட்டுக்கொண்டே தன் அடையாள அட்டையை கதவிலிருந்த மெஷினில் காட்டி கதவைத் திறந்து உள்ளே நுழைந்தான்.

அவனுடனே வலது காலை எடுத்துவைத்து உள்ளே நுழைந்தாள் மாயா. உள்ளே நுழைந்தவள் நகராமல் இருப்பதை உணர்ந்து அவள் புறம் திரும்பியவன் ஒரு நிமிடம் ஸ்தம்பித்தான்.

பொம்மை கடையில் நுழைந்த குழந்தை எதை முதலில் எடுப்பது? எங்கே முதலில் போவது? என்று சந்தோஷத்தில் குழம்புவது போலத் தன் சிறிய கண்களைத் தன்னால் முடிந்தவரை அகல விரித்து அந்த தளத்தை வியந்து வாய்பிளந்து பார்த்துக்கொண்டிருந்தாள்.

“பார்த்து, உள்ள கொசு போய்ட போகுது” அவன் கேலியாகச் சொல்ல

அப்பொழுதுதான் இவ்வுலகத்திற்கு வந்தது போல அவனைப் பார்த்து “இங்க ஆபீஸ்ல கொசு இருக்கா?” அப்பாவியாய் கேட்டாள்

அவனோ சிரிப்பை அடக்கிக்கொண்டு,

“இவளோ நாளா இல்லை இப்போதுதான் ஒரு குள்ள கொசு வந்துருக்கு. அது வாய திறந்தா மூடாது, கடிச்சு வச்சுரும்!” பல்லைக் காட்டி கடிப்பது போல் பாவலா செய்தவன், சென்றுவிட்டான்.

‘அடப்பாவி நான் கொசுவா அதுவும் குள்ள கொசுவா? இருடா இங்கதான வேலை செய்றே வச்சுக்குறேன்’

கருவி கொண்டே அங்கிருந்த தள வரைபடத்தைப் பார்த்துத் தேடித் துழாவி ஒரு வழியாகத் தான் செல்லவேண்டிய அறைக்குச் செல்வதற்குள் நேரம் ஆகிவிட்டது.

“மே ஐ ?”தயங்கி அறையினுள் நுழைந்தவள், “ஓரியன்டேஷன்…” என்று இழுக்க, அந்த பெரிய அறையில் அமர்ந்திருந்தவர்,

“மாயா கிருஷ்ணன்?” என்று கேட்க

மாயா “எஸ்! சாரி லிஃப்ட்… கொஞ்சம் லேட்” விளக்கம் தர,

அவரோ கோப்புகளை புரட்டையடி, “நீங்க லேட்டுன்னு சொல்லுங்க மாயா, லிஃப்ட் லேட்டில்லை!”

‘கண்டுபிடிப்பு !’

“சாரி”

அவளை அமரச் செய்தவர், அந்த நிறுவனத்தைப் பற்றியும், அவள் செய்யவேண்டிய வேலைப் பற்றியும், அங்குள்ள விதிமுறைகள் பற்றியும் அவளுக்குப் பொறுமையாக விளக்கி, இறுதியாக

“எங்களுக்கு நேரம் தவறாமை ரொம்ப முக்கியம் மிஸ் மாயா கிருஷ்னன்! முதல் நாளுன்றதால மன்னித்து விடறேன். இனி இப்படி ஆகக் கூடாது. ஒழுங்கான நேரத்துக்கு வரணும் புரியுதா?” இராணுவ அதிகாரியின் பாணியில் அவர் சொல்ல

“எஸ் சார்” அவளும் ஆர்மி ஆபீசர் போல் ஆர்வக்கோளாறில் சல்லியுட் வைக்க, அவர் முறைத்துக்கொண்டே எழுந்தவர்,

“வாங்க உங்க டீமை(குழு) அறிமுக படுத்தறேன்” என்று கடுகடுத்துவிட்டு,

“இந்த காலத்து பசங்கக்கிட்ட இதான் ப்ராப்ளம்! எல்லாம் அராத்துகள். இதுங்கள எல்லாம் என் தலையில் கட்டி விட்டு உயிரை வாங்க வேண்டியது” முணுமுணுத்துக்கொண்டே முன்னே நடக்க

நாக்கை துருத்தி அவருக்குப் பின்னால் அழகு காட்டிக் கொண்டே பின்தொடர்ந்த மாயா, ஒரு நொடி பேச்சின்றி உறைந்து நின்றாள்.

‘ஐயோ நெகோ பாத்துருச்சே, வத்தி வச்சுருமோ ?‘ தலையை குனிந்து கொண்டவள், கண்களை மட்டும் உயர்த்தி அவனை கெஞ்சுதலாய் பார்க்க,

அவனோ அவளைத் தெரிந்ததைப் போல் காட்டிக்கொள்ளாமல், “என்ன ராபர்ட் சார் புது அட்மிஷனா?” கேட்டபடியே அவளை ஒற்றை புருவம் உயர்த்தி முறைத்துவிட்டுக் கடந்து சென்றான்.

‘இந்த ஆஃபிஸில் எல்லாம் சிடுமூஞ்சியோ? ஐயோ எக்குத்தப்பா சிக்கிட்டியோ மாயா?”

அவளை அந்த தளத்தின் கடைக்கோடியிலிருந்த கண்ணாடி அறைக்கு அழைத்துச் சென்றார்,

அந்த சிறிய கண்ணாடி அறையில், மூவர் மட்டுமே அமர்ந்திருந்தார், அவர்கள் அருகே சென்ற ராபர்ட்.

“இதான் உங்க டீம். இவங்க பத்மா, அவர் வெங்கட், வினோத். இவங்க மாயா, உங்க புது கிரியேட்டிவ் டிசைனர்” அறிமுகம் செய்துவிட்டு, விட்டால் போதும் என்பதுபோல் விறுவிறுவெனப் பறந்து விட்டார்.

“ஹாய் ! மாயா வெல்கம், இந்த சிடுமூஞ்சிதான் உனக்கு ஓரியன்டேஷன் கொடுத்தாரா?” என்று வெகுநாள் பழகிய தொழி போல் பேசத் துவங்கினாள் பத்மா.

பதிலாக மாயா புன்னகையுடன் தலையசைக்க,

வினோத், “ஆனா எங்க அளவுக்கு ஜாலியா எந்த டீமும் இல்லை” என்று பறைசாற்றினான்.

வெங்கட்டோ வினோத்திடம், “நாம தான் சொல்லிக்கணும். ஒருபய நம்ம மதிக்கிறானா? போடா நீவேற, இல்லாத கெத்த காட்ட ஓவரா ட்ரை பண்றே” என்றவன்,

மாயாவை நோக்கி, “இவன் புழுக்கறான் மா. அதெல்லாம் ஒண்ணுமில்ல, நாம நாலு பேரும் இங்க தீண்டதகாதவங்க. நம்ம கூட யாரும் அன்னம் தண்ணி புழங்க மாட்டாங்கபோகப் போகத் தெரியும்” அலுத்துக்கொண்டான்.

பத்மாவோ “ஏன்டா அவளை பயமுடுத்தறே? அதெல்லாம் இல்லடா சிலபேருக்கு நம்ம டீமை பிடிக்காது” வெங்கட்டை பார்த்து எதோ கண்ஜாடை செய்ய,

சிரித்தபடி வினோத், “சிலபேருக்கு மட்டுமா?” என்று பத்மாவை வம்பிழுக்க, அவனை முறைத்தவள், மாயாவிடம் “நீ வாடா. என் பக்கத்துல தான் உனக்கு ஒர்க் ஸ்டேஷன்” அவளை தனக்கும் வினோத்திற்கும் மத்தியில் அமரச்செய்தாள்.

முதல் நாள் என்பதால் வேலையென்று எதுவும் இல்லை, மீதி மூவரும் செய்யும் வேலையை ஆர்வமாகப் பார்ப்பது, அந்த தளத்தை சுற்றிப்பார்பதென்று அன்றைய பொழுதைக் கழித்தாள்.

அன்றிரவு கண்ணாடியின் முன்னே நின்றவள் மீண்டும் தன் உயரத்தை எண்ணி வருந்தினாள்.

“ச்சே கொஞ்சூண்டு வளந்திருக்கலாம்”

பத்மா, வினோத், வெங்கட் மூவருமே உயரம்தான், பத்மாவும் வினோத்தும் கிட்டதட்ட ஐந்தே முக்கால் அடி என்றால் வெங்கட்டோ ஆறடிக்கு மேல் இருந்தான். அந்த நெடியவன் போல்.

‘ஆகமொத்தம் எங்க போனாலும் நான் தான் குள்ளமா? நாளைலேந்து பாலா குடிக்கிறோம், வளர்றோம்!’ உறுதியுடன் உறங்கச்சென்றாள்.

எந்த தயக்கமுமின்றி பழகிய பத்மா, வினோத், வெங்கட் அவளை மிகவும் இயல்பாக உணரவைத்தனர். வேலைகளைக் கொஞ்சம் கொஞ்சமாக மூவரிடமிருந்து கற்றுக்கொண்டு இரண்டு மூன்று மாதத்திற்குள் நன்கு தேரிவிட்டாள்.

error: Content is protected !!