TholilSaayavaa10

10

 

அதுவரை காரில் அமர்ந்து மாயாவை பார்த்துக்கொண்டிருந்த பைரவ், 

மாதவன் அவளை அறைந்ததை பார்த்த மறுநொடி காரை விட்டு வெளியேறி, மாதவனுக்கு முன் அதிர்ந்து நின்றிருந்த மாயாவை இழுத்து அணைத்துக்கொண்டான்.

 

“நீ நகரு பைரவ், இதுக்கு பயம் விட்டுப்போச்சு, ஒண்ணுகெடக்க ஒன்னு ஆகியிருந்தா? ஏண்டி?. உன்ன…” 

 

மாயாவை ஒரு கையால் அணைத்து, அவர்களை வேகமாக நெருங்கிய மாதவனை மறு கையால் தடுத்தபடி, 

 

“வேணாம் மறுபடி கையை ஓங்கினா, ஐ வோண்ட் ஸ்பேர் யூ! (உன்னை சும்மா விட மாட்டேன்!)” எச்சரித்தான். 

 

அவனிடமிருந்து வேகமாக விலகிய மாயாவோ, “அப்போ என்னை அறைஞ்சதுக்கு இவனை நீ ஒன்னும் சொல்லமாட்டே அதானே? உன்னை நம்பி வேலைக்கு ஆகாது” அவனை விட்டு மாதவனை நோக்கி முன்னேறியவள், 

 

மாதவனை அடிக்க துவங்க, பைரவ் திகைத்து, “மாயா! நிறுத்து” அவளை அடக்க முயன்றான்.

 

“இதான் சாக்குன்னு அடிச்சேல்ல மவனே” மீண்டும் மாதவனை அடிக்க கையை ஓங்க, மாதவனோ அவளை தன் மார்போடு சேர்த்து அணைத்துக்கொண்டான்.

 

தங்கையின் உச்சியில் முத்தமிட்டவன், “எவ்ளோ துடிச்சு போனேன் தெரியுமா? பைத்தியமா நீ? ஒரு ஃபோன்…” அவன் கோவம் மறைந்து, ஆதங்கத்தை வெளிப்படுத்த, மாயா அவனை சமாதானம் செய்ய, 

 

புண் முறுவலோடு இருவரையும் பார்த்துக்கொண்டிருந்தான் பைரவ்.

 

ஒருவழியாக சமாதானமான அன்னனனும் தங்கையும், பைரவை பார்க்க,

 

அவனோ “என் ஞாபகம் வந்துருச்சா?” நக்கலாக கேட்க, மாதவனும் மாயாவும் இளிக்க, 

 

மாயா, “ஆமா எங்கடா நம்மை பெற்ற தெய்வங்கள்?” 

நியாயமாக இந்நேரம் கிருஷ்ணன் கோவமாக, கீதா அதே கோபத்துடன் கையில் கரண்டியுடன் கண்ணீருடன் ஆவேசமாக வந்திருக்க வேண்டுமே

 

“தெய்வங்கள் தெய்வத்தை பார்க்க போயிருக்காங்க. வர ரெண்டுநாள் ஆகும்.  மத்தியானம் கோவில் கிளம்பினாங்க, சொல்ல மறந்துட்டேன்”

 

பைரவோ “ஒஹ் காட்!  அங்கிள்க்கு ஃபோன் பண்ணி அவரை டென்ஷன் பண்ணிட்டேனா?”

 

“ஐயோ , நான் அவங்ககிட்ட சொல்லலை, வெயிட் பண்ணி சொல்லிக்கலாம்னு…ஆமா என்ன சொன்ன?” 

 

“நான் மாயாவை வீட்டுல விடப்போறேன்னு சொன்னேன், வேற எதுவும் சொல்லலை” 

 

மாதவன் கிருஷ்ணனுக்கு கால் செய்து மாயா வீடு வந்து சேர்ந்ததை தெரிவித்தான்.

 

“நல்லவேளை நீ சொல்லல, இல்ல அம்மா என்னை என்ன பண்ணி இருப்பானே தெரியாது” மாயா மறுப்பாக தலையை ஆட்டியபடி வீட்டை நோக்கி செல்ல

 

“எங்க போறீங்க மேடம்?” மாதவன் கேட்க

 

“வீட்டுக்கு”

 

“சாவி தா” மாதவன் கேட்க

 

“உன்கிட்ட இல்ல?” மாயா விழிக்க

 

“அம்மா எப்போவும் போல சாவியை தொலைச்சதால, என் சாவிய கொடுத்தேன். அப்படியே வீட்டை பூட்டிக்கிட்டு கிளம்பிட்டாங்க. சரி உன்கிட்டத்தான் சாவி இருக்கே அதைவச்சு திறந்துக்கறேன்னு சொன்னேன். உன் சாவி தா டி” 

 

“என்கிட்டே எங்க இருக்கு? நான் வேற பேக்ல சாவியை வச்சுருக்கேன். என் ரூம்ல இருக்கு” 

 

“ஹே! சாவியை ஏண்டி…”

 

“டேய் நீ தான்…” வீட்டு வாசலில் அண்ணன் தங்கை இருவரும் சண்டையை துவங்க

 

“ஓ ஓ ஓ….கூல்” பைரவ் இருவரையும் விலக்கி, பொறுமையாக விவரத்தை தெரிந்து கொண்டான்

 

“சரி வா பக்கத்துல பாமா அத்தை வீட்டுக்கு போகலாம்” மாயா சொல்ல

 

“அவங்க கூடத்தான் அப்பா அம்மா போயிருக்காங்க!” மாதவன் அலுப்பாய் வாசற் படியில் அமர்ந்துவிட

 

“என்னடா என்ன சொன்னாலும் கேட்டை போடறே? இப்போ எதுக்கு போனாங்க?” 

 

“அத்தைக்கு கோயிலுக்கு போகணும்னா அப்பாவைதானே கூப்பிடுவா, இப்போ உன் கல்யாணம் தடை பட எதோ தோஷம் காரணம்னு கிளப்பி விட்டா, ஒடனே அம்மா ஒரே அடமாம் இப்போவே கிளம்பனும்னு. சரின்னு அப்பா எனக்கு சொல்லிட்டு கிளம்பினார்.  உனக்கு போன் பண்ண மறந்துட்டேன்.”

 

“இப்போ என்னடா பண்றது?” மாயா மாதவனை கேள்வியாய் பார்க்க

 

“என் கூட வீட்டுக்கு வரது!” பைரவ் சொல்ல

 

“இல்ல. உனக்கு சிரமம் வேண்டாம். நாங்க பக்கத்துல எங்கயான பிரென்ட் வீடு,, ஹோட்டல்..” மாதவன் துவங்க,

 

“அப்போ நான் உங்க பிரென்ட் இல்லையா?” 

 

“ஆண்டி ஏதாவது நினைப்பாங்கன்னு தயங்கறான், அதானேடா?” அண்ணனை கேட்ட்டவள், “ஆண்டி ஒன்னும் நினைக்க மாட்டாங்க வா போகலாம்” 

 

அவளே பதிலும் சொல்லிக்கொண்டு, ஆண்கள் இருவருக்காகவும் நில்லாது பைரவ் கரை நோக்கி நடந்தாள்

 

பைரவ், “இட்ஸ் ஓகே. அம்மா ஒன்னும் சொல்ல மாட்டாங்க. வா” மாதவனை அழைத்துக்கொண்டு தன் காரில் மாயாவுடன் புறப்பட்டான். மாதவன் தன் பைக்கில் பின் தொடர்ந்தான்.

 

மாதவனுக்கு கொஞ்சம் தயக்கம் இருக்கத்தான் செய்தது, தங்கையின் பாதுகாப்பை கருதி பைரவின் வீட்டிற்கு செல்ல சம்மதித்திருந்தான்.

 

வாணி பாசமாக அவர்களை வரவேற்று, அவர்களுக்கு அறைகளை காட்டிவிட்டு,

“ஃப்ரெஷ் பண்ணிக்கோங்க நான் டின்னர் எடுத்து வைக்கிறேன்” என்று சென்றுவிட,

 

மாயா, மாதவனிடம், பைரவ் மாயா தொலைந்ததையோ கிடைத்ததையோ வாணியிடம் சொல்லவில்லை என்பதை தெரிவித்தான்.

 

“அப்போ நீ வீட்டுக்கு வந்து, மறுபடி கிளம்பும் போது ஆண்டி கேட்கல?”  

 

“மாதவன் கால் பண்ணும்போது நான் வீட்ல இல்லையே”

 

“அப்போ எங்க இருந்தே? அப்போவே கிளம்பினீயே?” மாயா கேட்க, 

 

பேச்சை மாற்றியவன், “போங்க போய் டிரஸ் சேஞ் பண்ணிக்கோங்க நானும் சேஞ் பண்ணிக்கிறேன்” என்று நகர

 

“டிரஸ்லாம் எங்க இருக்கு? நாங்க என்ன டூரா வந்துருக்கோம்?” மாயாவின் கேள்வியில், உணர்ந்தவன்,

 

“சாரி, மறந்துட்டேன் வா என் டிரஸ் உனக்கு சரியா இருக்கும்” மாதவனை அழைத்து சென்றான்

 

மாயாவோ பின்னாலிருந்து, “ஏய்! அப்போ என்னக்கு?” அவர்கள் பின்னாலேயே செல்ல

 

“மேடம் உங்க சைசுக்கு இங்க டிரஸ் இல்லை!” பைரவ் நக்கலாக பார்க்க

 

மாதவனும், “ஆண்டி உன்னைவிட உயரம், ஒல்லி. பேசாம ரெண்டு நாளும் இதே டிரஸ்ல இரு. குளிக்காம சுத்துறது உனக்கொண்ணும் புதுசு இல்லையே” வம்பிழுக்க

 

“என்னங்கடா? கூட்டு சேரரீங்களா?” இருவரையும் அண்ணாந்து முறைத்தவள், “அதெல்லாம் சரி வராது இப்போவே எனக்கு டிரஸ் வேணும்” தர்க்கம் செய்ய

 

“லூசு” மாதவன் கடிந்துகொள்ள

 

“ஐடியா1” என்ற பைரவ் தன் அறைக்குள் விரைந்தான்.

 

கையில் ஒரு வேஷ்டி ஷர்டுடன் வந்தவன், “இந்தா நான் ஸ்கூல் படிக்கும் போது வாங்கினது, முதல் வேஷ்டி சென்டிமெண்டா வச்சுருக்கேன். இந்த சட்டை பத்தும்னு நெனைக்கிறேன்” அவளிடம் நீட்டினான்

 

“என்ன நக்கலா? நான் எப்படி வேஷ்டி?” மாயா முறைக்க

 

“இதான் இருக்கு” பைரவ் தோளை குலுக்க, 

 

“உனக்கு வேஷ்டி அருமையா இருக்கும்” மாதவன் சிரிக்க

 

“போங்கடா” இருவரையும் முறைத்தவள் வேஷ்டி சட்டையை எடுத்துக்கொண்டு அவளுக்காக வாணி காட்டிய அறைக்குள் நுழைந்து கதவை சாத்தினாள். 

 

பைரவ் மாதவன் இருவரும் கிட்டத்தட்ட ஒரே உயரம்,  ஒரு உடலமைப்பு என்பதால் பைரவின் இரவு உடை மாதவனுக்கு கனகச்சிதமாக இருந்தது.

 

வாணி, பிள்ளைகள் இருவருக்கும் பரிமாறிக்கொண்டே, “மாயா எங்க? இவ்ளோ நேரமா கீழே வரல” 

 

எதோ தோன்ற பைரவ், “கூட்டிகிட்டு வரேன்” விறுவிறுவென மேல் தளத்திற்கு சென்றான்.

 

கதவை தட்டியவன், “ஆழாக்கு! என்ன பண்றே? வா சாப்படலாம்”

 

“நீ போ நான் வரல” உள்ளிருந்து குரல் கொடுத்தாள்

 

“வாடா பசிக்குது. வெங்காய ஊத்தப்பம்., வேர்க்கடலை சட்னி..” சொல்லி முடிக்கவில்லை

 

கதவை திறந்தவள், அதை முழுவதும் திறவாது தலையை மட்டும் நீட்டி, “வாவ்! நீ கொண்டுவரியா?” 

 

“ஏன் மேடம் வர மாட்டாங்களோ?” பைரவ் புருவம் உயர்த்த

 

“வருவேன் ஆனா நீங்க மூணுபேரும் நெஞ்சை பிடிச்சுகிட்டா நான் பொறுப்பில்லை!” 

 

“என்ன பயம் காட்டறியா?” என்றவன், “ஹே ஹே வேஷ்டி கட்டிட்டியா காட்டு” கதவை திறக்க

 

‘வீல்!’ என்று அலறி அவனை உள்ளே வரவிடாமல் தடுத்தபடி கதவை பிடித்தவள்

 

“வந்து தொலைக்காத!” பதற

 

“நான் சிரிக்க மாட்டேன்” என்றவன் முகமெங்கும் சிரிப்பு

 

“வேணாம்! ஷர்ட் மட்டும் தான் பத்திச்சு. வேஷ்டி கட்ட வரலை, இடுப்புல நிக்காம கிழண்டு விழுது” முகம் சுருங்க

 

அதுவரை கதவை திறக்க முயன்று கொண்டிருந்தவன், விருட்டென கைப்பிடியிலிருந்து கையை எடுத்து, “சாரி. நீ உன் டிரஸ் மதிக்கோ”

 

“முடியாதே!”

 

“ஏன்?”

 

“நாளைக்கு போட்டுக்க வேணும்னு அலசி பால்கனில உலர்த்தினேன்” அசடு வழிய

 

பைரவோ நெற்றியை பிடித்துக்கொண்டான்.

 

“இரு அம்மாவை வர சொல்றேன்” 

 

“ஐயோ கூச்சமா இருக்கும் வேணாம்”

 

“என்னதான் செய்யறது?”

 

“பெல்ட் இருக்கா?” மாயா தயங்க

 

விரைந்து சென்று அவன் பெல்ட்டில் கனமில்லாத ஒன்றை எடுத்துவந்தான்.

 

“பாரு இல்லைனா சொல்லு அம்மாவை கூப்பிடறேன்”

 

சில நிமிடங்கள் கழித்து, மெல்ல வெளிவந்த மாயாவை பார்த்தவன் வயிற்றை பிடித்துக்கொண்டு சிரிக்க

 

அவனை முதலில் முறைத்தவள், பின்பு முகம் சிவந்து மெதுவாக கீழே இறங்கி செல்ல

 

“ஹே பாத்து தடுக்க போகுது” சிரித்தபடி வந்த பைரவ் அவள் கையை பிடித்தபடி அழைத்துச்சென்றான், அவன் சிரிப்பு ஓய்ந்தபாடில்லை

 

மாயாவின் கோலம் கண்டு பிரமித்த வாணி சிரிக்க, திரும்பி தங்கையை பார்த்த மாதவனும் சிரிக்க

 

மாயாவோ கோவமாக சென்று டைனிங் டேபிள் நாற்காலியில் அமர்ந்துகொண்டாள்.

 

“ஓஹ் மை காட்! என் தங்கையா இவ்ளோ நாள் நடிச்சது, என் தம்பியா?” மாதவன் போலியாய் அதிர்ச்சி அடைய

 

“அதான் பாரேன் என் கேர்ள் பிரெண்டுனு ஆபீஸ்ல சொல்றவங்களுக்கு தெரியலை இது என் பாய் பிரெண்டுன்னு” பைரவ் சிரிக்க

 

“பைரவா அன்னிக்கி, இத பொண்ணுபாக்க வரும்போது, புடவையை பிடிச்சுக்கிட்டு இவ நடந்து வந்த போதே சொன்னேன்ல,  

 

வேஷ்டியோ லுங்கியோ கட்டிக்கிட்டு கைல கத்தியும் கழுத்துல கர்சீப்பும் கட்டிவிட்டா , பேட்டை ரவுடி மாதிரியே இருப்பான்னு” மாதவன் சொல்ல

 

“மவனே” மாயா முறைக்க

 

“ஆமா மாதவா பாரேன், உதட்டை கடிச்சுக்கிட்டு கையை ஓங்கி , அடஅடஅட, பேட்டை ரவுடி தோத்தான்.” பைரவ் கலாய்க்க,

 

“போங்கடா தடியன்களா!” முறைத்த மாயா, வாணியிடம், “ஆண்டி!” கண்களால் துணைக்கு அழைக்க

 

சிரிப்பை கட்டுப்படுத்திக்கொண்டு வாணி, “அவளுக்கு கொடுக்க வேஷ்டி சட்டைதான் கிடைச்சுதா ? என்கிட்டே கேட்டிருந்தா என் டிரஸ் கொடுத்திருப்பேன்ல” மகனை கடிந்து கொண்டார்

 

“வாணிமா உன் ட்ரஸ்லாம் இதுக்கு பத்தும்மா? சும்மா விளையாடாத” பைரவ் சொல்ல, அதுவரை அதை யோசிக்காத வாணி, மாயாவை கவனித்தார்.

 

தனக்கு தோள்வரை வரும் உயரம் (வாணி ஐந்தே முக்கால் அடி உயரம்), சற்று பூசினாற்போல தேகம், சற்று பெரிய ஹவர்க்ளாஸ் வடிவம். நிச்சயம் தன் உடை மாயாவிற்கு பத்த வாய்ப்பே இல்லை. 

 

வட்ட முகம், மாநிறம், துறுதுறு கண்கள், மெல்லிய உதடுகள்,, இடைக்கு கொஞ்சம் மேல் வரை நீண்ட கருங்கூந்தல் சுமாரான அழகென்றாலும் களையான முகம். மாயாவை முதல்முறை பார்பாதைபோல் பார்த்திருந்தார் வாணி. 

 

இப்பொழுது பைரவின் சட்டை மாயாவின் கால் முட்டிவரை நீண்டிருக்க, அதற்குள்ளே மடித்து காட்டியிருந்த வெள்ளை வேஷ்டியும் முட்டிவரை இருக்க, சட்டைக்கு மேல் பெல்ட், தர்மத்திற்கு இடையிலிருந்த வேஷ்டியின் நுனியை அரும்பாடுபட்டு பிடித்துவைத்துருப்பது அப்பட்டமாக தெரிந்தது.

 

சிரித்துக்கொண்டவர், “சாப்பிடு, நான் ஏதாவது என் டிரஸ் சரிவருதான்னு பாக்கறேன்” புன்னகையுடன் சுட சுட ஊத்தப்பத்தை மாயாவின் தட்டில் வைக்க, அதை ஆசையாய் சாப்பிட்ட மாயாவை எனோ இன்று இன்னும் பிடித்துப்போனது.

 

உணவு இடைவேளைக்கு பிறகும் ஆண்கள் அவளை கிண்டல் செய்வதை நிறுத்துவதாக இல்லை.

 

வாணி தன் அறையில் எதோ வேலையாக இருந்தார்,

 

“ஆண்டி!” மாயாவின் குரலில் திரும்பியவர், 

 

“வாடா” 

 

“அவங்க என்னை சும்மா சும்மா ஓட்றாங்க. பப்ளீஸ் ஏதாவது டிரஸ் இருந்தா…” தயங்கினாள், கண்களில் கொஞ்சம் நீர் தேங்கி இருக்க, புகார் வாசித்துக் கொண்டு தன் அறைக்குள் வந்த மாயாவை பார்க்கையில்,

 

“வாணிமா! அந்த அருண் அண்ணா என்னை அடிச்சுட்டான்!” பெரியப்பா பையன் அடித்ததை கண்களில் நீருடன் சொல்லிக்கொண்டு தன்னை நோக்கி வந்த பைரவின் சிறுவயது நினைவு வந்தது.

 

“நீ வாடா, ஆன்ட்டிகிட்ட வா. என்னாச்சு? கண்ணை துடை. நான் அவனை கேக்கறேன்” வாஞ்சையாய் அவளை வருடிக்கொடுத்து சமாதானம் செய்தவர்,

 

“மாயா அவன் சொல்றது தப்பு இல்லைடா”

 

“நான் அவனை ஒன்னும் சொல்லல ஆனா நான் என்ன பண்ண, எனக்கு மாத்திக்க டிரஸ் இல்ல”

 

“இருடா” அலமாரியின் மேலே இருந்த சூட்கேஸிலிருந்து ஒரு பைஜாமா பேண்ட்டை எடுத்து கொடுத்தார்.

 

“இது நான் கர்பமா இருந்தப்போ வாங்கினது” 

 

“ஹை ! அப்போ இந்த பேண்ட் நீங்க போட்டப்போ உங்க வயத்துல பைரவா?” ஆசையாய் அந்த பைஜாமாவை வருடியவள், தயகத்துடன் “உங்களுக்கு ஒன்னும்…”

 

“இல்ல மா. நீ மாத்திக்கோ” அங்கிருந்த பாத்ரூம் கதவை காட்டினார்.

 

சில நிமிடங்களில் வந்தவளுக்கு அந்த பைஜாமா பேண்ட் நன்றாவே பொருந்தியிருந்தது.

 

“இது ஓகேவா? அவனுங்க ஓட்டுவாங்களா?” அவள் பயம் குறைந்த பாடில்லை.

 

ஹாலில் மாதவன், “சாரி பைரவ். அவ இன்னும் கொஞ்சம் மெச்சூர்ட்டா ஆகணும்…” அவன்  குரலில் ஆதங்கம். 

 

“நோ! என் மாயாவை  நான் தப்பா  நெனைப்பேனா?” சிரித்துக்கொண்டான். 

 

பைரவ் போல் அனைவரும் இருக்க வாய்ப்பில்லை,  எவராவது மாயாவின் அறியாமையை பயன் படுத்திக்கொண்டால்? நினைத்தாலே மாதவனின் உடல் சில்லிட்டது.

 

பைரவ் மனமோ வேறு விதத்தில் தவித்தது, 

 

‘அவ குழந்தைத்தனமான கட்டி பிடிச்சுருப்பேன்னு சொன்னதை தப்பா நினைச்சவன் தானே நீ? இப்போ எந்த முகத்தோட மாதவன் கிட்ட என் மாயாவை தப்பா நினைப்பேனான்னு கேட்ட? 

 

பெரிய இவனாட்டும் அவ உன்னை காதலிக்கிறான்னு நெனச்சு இன்னிக்கி அவளை தவிர்த்தே, பாரு அந்த எண்ணம் எங்க கொண்டுபோய் விட்டது? நீ போக லேட் ஆகியிருந்தா? அந்த பைக்காரன் அவகிட்ட தவறா நடக்க முயற்சித்திருந்தா?’ மனம் தாறுமாறாக அடித்துக்கொண்டது. 

 

‘இனி மாயாவை விலக்கி வைக்க மாட்டேன். அவ என்னை அப்படியே காதலிச்சாலும் என்ன தப்பு? அவளுக்கு இல்லாத உரிமையா? நான் அவளை காதலிக்கலைன்னாலும் அவ என்னை காதலிச்சா தடுக்க போறதில்லை. 

 

காதலும் ஒருவித அன்பு தான். அவ என்னை என்னவா நினைச்சாலும் அவளுக்கு அந்த உரிமை இருக்கு! அவளுக்கு மட்டுமே!’ அவன் என்ன ஓட்டத்தை கலைத்தது மாயாவின் குரல். 

 

“டேய் அண்ணா ! திரும்புடா” மாதவனை மிரட்டிக்கொண்டிருந்தாள். 

 

தொளதொளவென ஒரு நயிட் பேண்ட், மேலே பைரவின் சட்டை கால் முட்டிவரை ஒரு மார்க்கமாய் நின்றிந்தவளை கண்ட பைரவ் அதுவரை இருந்த குழப்பம் மறந்து சிரிக்க, 

 

மாதவனோ, “ரவுடி தம்பி போய், இப்போ சோளக்கொல பொம்மையா நிக்குறே?” சிரிக்க, 

 

“நான் தான் என் மெட்டர்னிட்டி(கர்ப்பகால) பேண்ட் கொடுத்தேன்.” வாணி மாயாவிற்கு பரிந்து கொண்டு வர,

 

தன் தாயின் இரவு உடை பேன்டை அணிந்துகொண்டு, உயரத்தை குறைக்க பேண்ட்டை பலமுறை மடித்துவிட்டுக்கொண்டு, மாதவனை பாவமாக பார்த்திருந்த மாயாவை பார்க்க பார்க்க, 

 

‘தம்மாதூண்டு இருந்துகிட்டு என் மண்டைக்குள்ள இப்படி குடைச்சல் கொடுக்க உன்னலமட்டுமே முடியும்’  கண்களை விலக்கமுடியாமல் நின்றிருந்தான் பைரவ்.

 

நடுஇரவில் எப்பொழுதும் போல விஸ்வநாத்திடம் பேசிக்கொண்டிருந்தார் வாணி. 

 

“அவன் கண்ல தெரியறது என்னவிதமான உணர்ச்சின்னே எனக்கு புரியலை விஷ்வா! அதுல இருக்கறது அன்பா, காதலா, நட்பா, வியப்பா கிளியரா எனக்கு நிஜமா புரியலை.

 

மாயாவை எனக்கு பிடிச்சுருக்கு, பாசமான பொண்ணா இருக்கா, சூதுவாது தெரியல. ஆனா அதுக்குன்னு அவனை கல்யாணம் பண்ணிக்க சொல்லமுடியாது. ஒருவாட்டி அவனை கஷ்டப்படுத்திட்டேன் இனிமே கவனமா இருக்கணும்.

 

நீ ஏன் விஷ்வா இப்படி சீக்கிரம் கிளம்பினே? எனக்கு பயமா இருக்கு இத்தனை வருஷம் இல்லாத பயம்…

 

நான் உன்கிட்ட வரும்போது நிம்மதியா, கில்ட் (குற்றவுணர்வு) இல்லாம வரணும், அதுக்கு அவன் குடும்பம் குழந்தைகள்னு செட்டில் ஆகணும். ஹெல்ப் மீ விஷ்வா!” 

 

மறுநாள் மாதவன் சீக்கிரமே எழுந்திருந்தான், அவனுக்கு இன்னும் பைரவ் வீட்டில் தங்கியிருப்பது தயக்கமாகவே இருந்தது.

 

பைரவ் , மாதவன் காபி குடித்துக்கொண்டிருக்க, வாணி பேப்பர் படித்துக் கொண்டிருக்க, கீழே வந்த மாயா வாணியிடம், சென்று அமர்ந்தாள்.

 

“ஒரு டூ மினிட்ஸ் மா. காபி தரேன்” 

 

“இல்லை ஆண்டி நானே போட்டுக்கறேன், நீங்க சிரம படாதீங்க.” என்றவள் சில நிமிடங்களில் மாதவனுடன் பேசிவிட்டு, சமயலறைக்கு செல்ல, 

 

“அவளுக்கு எங்க எது இருக்குன்னு காட்டுபா” வாணி சொல்ல, தலை அசைத்த பைரவ் மாயாவை பின் தொடர்ந்தான்.

 

“பாஸ் நானே பாத்துக்கறேன். பால்தான் குடிக்க போறேன்” என்றபடி பாலை சூடு செய்தவள், அதை டம்பளரில் ஊற்ற துவங்கினாள். 

 

“இந்தா” என்றபடி மேடையில் ஒரு டப்பாவை வைத்தான்

 

“என்ன?” 

 

“உங்க கொக்கோ குடி” புன்னகைத்தான். 

 

“எப்படி?” முகம் மலர்ந்தவள், பானத்தை கலக்க, 

 

“நீ வந்தா யூஸ் ஆகும்னு வாங்க சொன்னேன்”

 

“சோ ஸ்வீட்” அவன் கன்னங்களை பிடிக்க செல்ல, அவனோ அவள் கையில் அகப்படாமல் எம்பி போக்கு காட்ட, கடுப்பானவள், நொடியில் கிச்சன் மேடையில் ஏறி நின்றாள். 

 

“ஹே கொரங்காடா நீ?” சிரித்தவன்,

 

“மரியாதையா கிட்ட வா” 

 

அவள் மிரட்டலில் சிரித்தபடி அவளை நெருங்கி நின்றான், “வந்துட்டேன்” 

 

“மவனே நேத்து எனக்கு சப்போர்ட் பண்ணாம கிண்டலா பண்றே?” அவன் கன்னத்தை கிள்ள முனைந்தவள், கையை இழுத்துக் கொண்டாள்.

 

“ஸ்ஸ்ஸ்…தாடி குத்துது” கையை தேய்த்துக்கொண்டவள், “கிள்ளி எடுக்க எங்க இருக்கு சதை? என்ன இவ்ளோ இறுக்கமா இருக்கு உன் சீக்ஸ்? (கன்னம்)” அலுத்துக்கொள்ள, 

 

“முந்தா நேத்து தானே ஷேவ் பண்ணேன்?” கேள்வியாய் தன் கன்னங்களை தடவி பார்த்தவன், 

 

“கொஞ்சம் தாண்டி வந்துருக்கு, இதுக்கா இப்படி? என் சீக்ஸ் இப்படி இருந்தாதான் எனக்கு பிடிக்கும், 

 

உன்னாட்டும் பொண்ணுங்களுக்கு தான் கொழுகொழு கன்னம் அழகு” அவன் கொஞ்சி கொண்டிருக்கையில் அங்கே வந்த மாதவன், 

 

“என்ன நடக்குது இங்க?” அவன் குரலில் திரும்பிய பைரவ், 

 

“என் செல்லத்தை கொஞ்சுறேன், வாயேன் ரெண்டு பேருமே கொஞ்சுவோம்” மாதவனை பார்த்து பைரவ் கண்ணடிக்க, சிரித்தபடி வந்த மாதவன்,

 

“கொஞ்சலாமே!” தங்கையை நெருங்க , மாதவன் கொஞ்சல் எப்படி என்று சிறுவயதிலிருந்து நன்கு பழகியவள் மனதில்,

 

மாயா குழந்தையாக இருந்தது முதல், “அம்மா பாப்பாவை கொஞ்சறேன்” வலிக்கும்படி கன்னங்களை கிள்ளிவைப்பான்,

 

“பாப்பா கை ஸ்மூத்தா இருக்கு” கையை முறுக்குவான்,

 

“பாப்பாக்கு முத்தா தரேன்” கடித்துவைப்பான். அந்த பயம் இன்றும் தெளிந்தபாடில்லை. 

 

“ஏன் உனக்கிந்த வேலை?” பைரவை முறைத்தாள், 

 

மாதவன் “செல்ல குட்டிய கொஞ்சி எவ்ளோ நாளாச்சு” என்று நெருங்க, 

 

“ஐயோ வேணாம்” பதறியவள் கீழே குதித்து இருவரையும் தள்ளி கொண்டு சமையலறையை விட்டு ஓடினாள்.

 

“உங்களுக்கு வீட்ல நல்லா பொழுது போகும்ல” 

 

புன்னகையுடன் சொன்னாலும் பைரவ் மனதில், ஒற்றை பிள்ளையாய் வளர்ந்ததால் சகோதர பாசம் அனுபவிக்காத ஏக்கம் என்றுமே இருந்தது. 

 

தன்னை வளர்க்கவே வாணி தனியாளாய் பட்ட இன்னல்களை பார்த்து உணர்ந்தவன், விவரம் தெரிந்தபின் மெல்ல மெல்ல தன் ஏக்கத்தை மறைத்துக்கொண்டான். 

 

“வச்சுட்டா…” அவள் கலந்து வைத்திருந்த பணத்தை மாதவனிடம் கொடுத்தான்.

 

“அது அப்படிதான்” புன்னகைத்தபடி அதை எடுத்து சென்றான்.

 

மௌனமாய் சமையலறை ஜன்னல் வழியே சில நிமிடங்கள் வெளியே தெரிந்த தோட்டத்தை வெறித்தபடி நின்றான் பைரவ்.

 

அன்று பைரவுடன் காரில் அலுவலகம் சென்று கொண்டிருந்த மாயா,

 

“பாஸ்!”

 

“ம்ம்?

 

“என் வண்டி?”

 

“அது வந்துரும்” என்றவன் சாலையிலிருந்து பார்வையை விலக்கவில்லை 

 

“எப்படி?”

 

“நேத்தே அந்த கடைக்காரர் கிட்ட சொல்லிட்டேன்” 

 

“அதுக்குதான் அவருக்கு பணம் கொடுத்தியா?”

 

“ஹ்ம்ம், அவர் பையனை விட்டு பெட்ரோல் போட்டு, வண்டியை விட்டுட்டு,  சாவி என்கிட்டே கொடுக்க  சொல்லிட்டேன்” 

 

“ஓஹோ”

 

“மாயா…”

 

“எஸ் பாஸ்”

 

“இனிமே இப்படி பண்ணாத ப்ளீஸ். எனக்காக” அவன் குரலில் இருந்த ஆதங்கம் தாங்கமுடியாமல்,

 

“பிராமிஸ், இனி, கவனமா இருக்கேன்” வாக்களித்தாள்.

 

அன்று டெமோ முடிந்து மாயா பைரவ் இருவரின் கூட்டு முயற்சியில் உருவான கதாபாத்திரத்தை பார்த்த உடனே அந்த தயாரிப்பு நிறுவனத்திற்கு பிடித்துவிட, 

 

கூச்சத்தில் மாயா நெளியும்வரை பாராட்டி தள்ளினர்,

 

“கிரெடிட் கோஸ் டு அவர் CEO பைரவ் விஸ்வநாத்” ( இந்த பாராட்டு எங்கள் CEO பைரவை சேரும்.)” என்றவள், அவர்களின் அடுத்தகட்ட தேவையை குறித்துக்கொண்டாள்.

 

வெங்கட் அடைந்த நிம்மதியை விட, அவன் வாயில் அகப்படாமல் இனி தப்பித்தோம் என்று மற்ற மூவரும் அடைந்த நிம்மதி, அன்று மதிய உணவு இடைவேளையில் தெரிந்தது

 

“இன்னிக்கி தான் அப்பாடான்னு இருக்கு” பத்மா பெருமூச்சு விட

 

வினோத், “ நீ ஏண்டி அலுத்துக்குறே? மாயாதான் மண்டை காஞ்சா, இவன் பண்ண ரகளைல பைரவே இறங்கி டிசைன் பண்ணியிருக்கார்.” வெங்கட்டை பார்த்து கிண்டலாக சொல்ல

 

“ஏண்டா ஒரு டீம் லீடரா, வேலைய பாருங்கடானு சொன்னா தப்பா?” வெங்கட் வினோத்தை முறைக்க

 

சாம்பார் சாதத்தில் மூழ்கி இருந்த மாயா, “விடுங்க பா, அதான் டெமோ நல்லபடியா ஆச்சு, அவங்க கேட்ட சேஞ்சஸ் பண்ணிகொடுத்தா போதும்.  அடுத்த ப்ராஜெக்ட் வரவரை ஃபிரீ. இனிமே யோசிக்காதீங்க” என்றவள்

 

வினோத்திடம், “டேய் நம்ம ஆஃபீஸ்ல இன்னிக்கி சாம்பார் சாதம் நல்லா இருக்கு, நாளைக்கும் இதையே போட சொல்லலாம்ல” என்று கேட்க

 

“நீ கேட்ட தினமும் போடுவாங்க. மேடம் கம்பெனியையே ஆட்டிவைக்க பிளான் போட்டாச்சு. சாம்பார் சாதமா பிரமாதம்?” வேதாவின் குரலில் நால்வரும் நிமிர்ந்தனர்.

 

“வேதா வில் யூ..” வெங்கட் கோவமாக எழ, அவன் கையை பிடித்து அடக்கிய மாயா

 

வேதாவை மேலிருந்து கீழ் பார்த்து, “நீ ஃபிரியா இருக்கியா?” முகத்தை சீரியஸாக வைத்துக்கொண்டு கேட்க,

 

“ஏன்?” வேதா கேட்க

 

“இல்ல எப்போ பாத்தாலும் எங்களையே வேவு பாக்கரியே, வேலை வெட்டின்னு ஒன்னும் இல்லைபோல, அதான்” 

 

“உன்னை மாதிரி வருமா? உன் வேலையையும் சேர்த்து பைரவ் செய்யறாறே!” வேதாவின் முகத்தில் பொறாமையும் வெறுப்பும் அப்பட்டமாக தெரிந்தது.

 

வெங்கட், “தேவை இல்லாம பேசாத வேதா. மாயா எவ்ளோ உழைச்சானு எங்களுக்கு தெரியும்” கடிந்து கொண்டான்

 

“எல்லாம் தெரியும் உங்க மாயா அழகு” பழித்தவள், விறுவிறுவென சென்றுவிட்டாள்