6
அலுவலக நேரம் முடிந்து ஒவ்வொருவராய் கிளம்பிக்கொண்டிருக்க, கிளம்ப மனமின்றி யோசனையாய் அமர்ந்திருந்தாள் மாயா.
கைப்பேசியில் அழைப்பை ஏற்றவள், அழைத்தது பைரவ் என்று உணரவில்லை.
“ஹலோ சொல்லுங்க ” என்றாள் கவனம் எங்கோயிருப்பது குரலில் வெளிப்பட்டது
ஒருமுறை அவன் அழைத்தது, மாயவைத்தானா என்று சரிபார்த்துக் கொண்டான்
“ஏய் ஆழாக்கு என்ன?”
அவன் குரலில் தெளிந்தவள், “சொல்லு பாஸ்”
“என்ன பாஸ்? இன்னிக்கி சினிமாக்கு போலாம்னு நேத்து சொன்னேனே இன்னும் கீழவராம என்ன பண்றே? வா பார்க்கிங்ல இருக்கேன்” அழைப்பைத் துண்டித்தான்.
அவளிருந்த குழப்பத்தில் இதை மறந்தே போயிருந்தாள்.
பார்க்கிங் தளத்தின் லிப்ட் திறக்க வெளியேறியவள், கண்களை ஒருமுறை துடைத்துக்கொண்டு பார்க்க,
‘இவன் இங்க என்ன பன்றான்?’ அவள் பார்வை பைரவின் கார் அருகில் அவனுடன் பேசிக்கொண்டிருந்த மாதவன் மீதே இருந்தது.
“இங்க என்னடா பண்றே?” புன்னகையுடன் அண்ணனைப் பக்கவாட்டில் அணைத்துக்கொண்டவள் கேட்க,
“பைரவ பாக்க வந்தேன் மா, கெளம்பிகிட்டே இருக்கேன், சரி நீங்க கிளம்புங்க”
“மாதவன் நீயும் வாயேன், ஏ ஆழாக்கு கூப்டு”
“ஆமா நீயும் வாயேன்!”
“நோ! பேய் படத்துக்கும் எனக்கும் ரொம்ப தூரம். நீயும் உன் தோஸ்த்தும் போங்க. எனக்கு சரிப்படாது” மாதவன் கிளம்ப
“நான் சோகமா இருக்கக்கூடாதுனு அவன் என்கூட வரான், உனக்கு அந்த எண்ணம் இல்ல போல” சோகமாக முகத்தை வைத்துக்கொண்டவள் அறிவாள் தன் அண்ணனை.
“என்னடா சொல்றே? என்ன சோகம்? யார் என்ன சொன்னா?” மாதவன் பதற
“எனக்கும் கல்யாணம் பிக்ஸ் ஆகும், நானும் என் ஆளுகூட ஊர் சுத்தலாம்னு நெனச்சேன், என் கிரகம், இவன் கூடவே சுத்தணும்னு இருக்கு, ஒரு மாறுதலுக்கு நீ வருவேன்னு பார்த்தா…” அலுத்துக்கொண்டாள்.
“என்ன ஒரு வில்லத்தனம்! ஆள் கெடைச்சவுடனே என்னை கழற்றிவிட பாத்துருக்கே…ம்ம்ம்… அந்த கடவுளுக்கே பொறுக்காமத்தான் உனக்கு பெரிய பல்பா கொடுத்திருக்கார். என்ன மாதவா நான் சொல்றது ?” அவளை வம்பிழுத்தவன் மாதவனை பார்க்க, அவனோ புன்னகைத்துக்கொண்டே,
“உங்க நடுல பஞ்சாயத்துக்கு என்ன இழுக்காதீங்க, சரி கிளம்புங்க நானும் களம்பறேன்”
“அவன் கெடக்கான், நீயும் வா ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ்” மாயா மாதவனின் கையைப் பற்றிக்கொண்டு அடம்பிடிக்க, பைரவ் சிரித்தபடி மாதவனை மறுபடி அழைக்க, ஒரு வழியாகச் சம்மதித்தவன் அவர்களோடு திரைப்படத்திற்குச் சென்றான்.
வழக்கமாகப் பேய் படங்களென்றால் மிக ஆர்வமாகப் பார்க்கும் தோழி, இன்று ஈடுபாடே இல்லாமல் அவ்வப்போது சீட்டில் சாய்ந்தவாறு கண்களை மூடிக்கொள்வதைக் கவனித்த பைரவ், மாதவன் எதிரில் எதுவும் கேக்க வேண்டாமென்று மௌனமாகவே இருந்தான்.
அவர்கள் இருவரும் தங்கள் வீட்டிற்குச் சென்றுவிட, காரை ஓடிக்கொண்டிருந்த பைரவின் கவனம் முழுவதும் தோழியின் மீதே இருந்தது.
ஒருவேளை அவள் மிகவும் எதிர்பார்த்த திருமணம் தடைப்பட்டது, அவளை வருத்துகிறது என்று எண்ணியவன், அவளை அழைத்தான்,
கைப்பேசியை எடுத்த கீதா, மாயாவிடம் அதைக் கொடுத்துவிட்டு, “எப்போவும் என்னத்த தான் பேசுனவீங்களோ, போறே அடிக்காதா?” புலம்பியபடியே செல்ல, கைப்பேசியைக் காதில் வைத்தவள்.
“ஹலோ”
“என்ன அம்மா திட்டுறாங்களா?” அவன் குரலில் ஆதங்கம்
“ஆமா”
“பரவால்ல இருக்கட்டும், என்னால திட்ட முடியால அவர்களாவது நல்லா திட்டட்டும்!” அவன் குரலில் ஆதங்கம் மறைந்து குறும்பு வெளிப்பட
“ஏன்? இல்ல ஏன்னு கேக்குறேன். எதுக்கு உனக்கிந்த நல்ல எண்ணம்? நான் உன்ன என்ன பண்ணேன்?”
“பின்ன வேலையெல்லாம் விட்டுட்டு சினிமாக்கு கூட்டிகிட்டு போனா…நீ என்ன பண்ணே? கண்ணைமூடி சீட்ல சாஞ்சுருக்கே. அங்கேயே தலைல நாலு போட்டிருப்பேன். மாதவன் இருந்தானோ நீ பொழைச்சியோ”
“…”
“இருக்கியா? தூங்கிட்டியா?”
“ம்ம்”
“என்ன ம்ம்?”
“சொல்லு”
“என்னடா ஆச்சு? ஹே ஃபீல் பன்றியா?”
விழிகள் விரிந்தவள், அவன் அன்று காவல் நிலையத்திற்குச் சென்று வந்ததை பற்றிப் பேசுகிறான் என்று நினைத்து,
“எவளோ மனசு கஷ்டமா இருக்கு தெரியுமா, வேலையே ஓடலை” குரல் தழுதழுத்தது
அவளை அவினாஷ் வேண்டாமென்று சொன்னதால், வருந்துகிறாளென்று நினைத்த பைரவோ,
“நீ இவளோ ஃபீல் பண்ண என்ன இருக்கு? நீ என்ன உறவா? யாரோ தானே, எதோ நெருங்கிப் பழகின மாதிரி இந்த அளவுக்கு வருத்தப்படறே?” அவள் வருத்தவே, கோவம் அவனுக்கு
அவன் கேட்டதில் அதிர்ந்தவள், எதுவும் சொல்லாமல் அழைப்பைத் துண்டித்துவிட்டு, கோவமாகக் கைப்பேசியையும் அனைத்துவிட்டாள்.
ஒருமுறை கூடப் பார்த்திராத, அதுவும் அவளைப் பற்றி அவதூறாய் பேசிய ஒருவனுக்காக மாயா வருந்தியதை பைரவால் ஜீரணிக்கவே முடியவில்லை.
அவள் அழைப்பைத் துண்டித்ததில் இவனும் கோவமாக இருக்கவே, மீண்டும் அவளை அழைக்கவில்லை.
நடந்ததைத் தாயிடம் கொட்டியவன்,
“அவனுக்காக பீல் பண்ரா மா! அதுவும் அவன் என்ன பேச்சு பேசினான் தெரியுமா? திட்டத்தான் போனேன் அவன் பேசினது கேட்டு கண்ட்ரோல் பண்ண முடியாமத்தான் வாய நெஜம்மா ஓடச்சேன்! இவ என்னடான்னா…” பொரிந்து தந்தள்ளினான்.
கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் இதையே பேசி பேசி மகன் வருந்துவதைக் காண சகியாதவர், மாயாவிற்கு தன் கைப்பேசியிலிருந்து கால் செய்ய
அவனோ “அவ தான் ஆஃப் பண்ணிவச்சுருக்கான்னு சொல்றேன்ல? எங்க நீ தான் நான் சொல்றதை கவனிக்கவே இல்லையே! உன்கிட்ட சொன்னதுக்கு இந்த சவுத்துக்கிட்ட சொல்லி இருக்கலாம்” கோவமாக கைகளைக் கட்டிக்கொண்டு நாற்காலியில் அமர்ந்துவிடான்.
“கொஞ்சம் பொறுமையா இருடா…” புன்னகைத்தபடி மாயாவின் அன்னை கீதாவை அழைத்தார் வாணி,
நலம் விசாரித்தவர், பிள்ளைகள் நடுவில் நடந்த சண்டையைச் சொல்லி மாயாவை அழைக்கச் சொல்ல,
“அதை ஏன் கேக்குறீங்க பா, இங்கயும் அதே கதைதான், ஓயாம இதையே தொணதொணக்குறா, வேலை இருக்குன்னு சொல்லி தப்பிச்சு சமையற்கட்டுக்குள்ள வந்துட்டேன், அவர்தான் இப்போ சிக்கிருக்கார்” சிரித்த கீதா
“லைன்ல இருங்கப்பா நான் அவகிட்ட கொடுக்கிறேன்” மாயாவிடம் கைப்பேசியைக் கொடுத்தார்
“யாருமா?” கோவமாக வாங்கியவள்
“ஹலோ” அதுவும் கோவமாகவே வர
கோவமாக அமர்ந்திருந்த மகனின் கையில், கைப்பேசியை வாணி திணிக்க,
முறைப்புடன் வாங்கிக்கொண்ட பைரவ், கோவமாக
“ம்ம் சொல்லு” என்றான்
அவன் குரலைக் கேட்டதும் என்னவானதோ, “என்ன ம்ம்? நான் தான் உனக்கு யாரோ வாச்சே! உறவு இல்லையே! என்கிட்டே பேச உனக்கு என்ன இருக்கு?” பொரிந்து தள்ளினாள்
அவனோ “நான் எப்போடா அப்படி சொன்னேன்?”
“அதான் கேட்டியே, நீ என்ன உறவா அது இதுன்னு…உனக்கு நான் யாரோன்னா எதுக்கு அந்த பன்னாடை பல்ல ஒடைச்சுட்டு போலீஸ் ஸ்டேஷன் போனே? உனக்காக உன்னைப்பத்தி நான் கவலை படக்கூடாதா?” கோவமும் ஆதங்கமும் ஒன்று சேர கேட்டவள் விடாது திட்டிக்கொண்டே இருக்க
‘ஆடலூசே நான் சொன்னதை அப்படி புரிஞ்சுக்கிட்டியா? நான் வேற மாதிரி புரிஞ்சுக்கிட்டேன்’ கைப்பேசியால் நெற்றியில் அடித்துக்கொண்டவன்,
“ஹே சீ நிறுத்து. எனக்கு இப்போ புரிஞ்சுபோச்சு. இவ்ளோநேரம் நேரம் நீ திட்டினதை வாங்கிக்கிட்டேன்ல, இப்போ நீ மூடிக்கிட்டு நான் சொல்றத கேளு…”
அவர்களுள் நடந்த குழப்பத்தை வெகுநேரம் பேசி தெளிய வைத்தான்.
“சாரி பாஸ்”
“விடு நானும் சாரி”
“என்னாலதான் நீ…பேசாம என்கூட பேசறத நிறுத்திடு அதான் உனக்கு நல்லது…”
“நீ இதைத்தான் தேஞ்ச ரெகார்ட் மாதிரி சொல்லபோறேன்னா எனக்கு தூக்கம் வருது குட்நைட்” அழைப்பைத் துண்டித்தவன், கோவமாக தன் அறைக்குச் சென்றுவிட்டான்.
‘நான் ஏன் சொல்றேண்ணே புரிஞ்சுக்க மாட்டேங்குறானே’
மாயாவின் ஆதங்கம் அவளுக்கு, தன்னை விலகச் சொல்கிறாளே என்ற கோவம் அவனுக்கு. காதலுக்கு ஊடல் அழகென்றால், தோழமையிலும் சிறுசிறு சண்டைகள் அழகே.
மறுநாள் இருவரும் ஒருவரை ஒருவர் தொடர்புகொள்ளவே இல்லை, ஆனால் ஒருநாளுக்கு மேல் அவர்கள் கோபமும் நிலைக்கவில்லை.
***
சிலமாதங்கள் கடந்திருக்க வெளிநாட்டில் புகழ்பெற்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் பிரம்மாண்ட திரைப்படத்திற்கு வேலைசெய்யும் வாய்ப்பு பைரவின் ‘பிக்ஸெல்ஸ்’ நிறுவனத்திற்குக் கிடைத்தது.
அதற்காக அவன் அன்னை வாணியுடன் வெளிநாடு சென்றிருந்தான்.
இந்தியாவிற்கும் அவன் இருக்கும் இடத்திற்கும் கிட்டத்தட்ட 12 மணிநேரம் வித்தியாசம் என்பதால், அவன் மாயாவுடன் பேசிக்கொள்வதும் வெகுவாக குறைந்தது.
ஆனால் தினம் நடப்பவற்றை ஒருவருக்கொருவர், குறுஞ்செய்திகளாகப் பகிர்ந்துகொண்டனர்.
அப்படி ஒருநாள் பைரவிடமிருந்து வந்த குறுஞ்செய்தியைப் பார்த்த மாயா, “ஹை! ஹை! ஹை!” என்று குதித்துக்கொண்டே மாதவன் அறைக்குச் சென்றாள்.
ஏதோ வேலையாக இருந்தவன், இவள் சத்தத்தில் கவனம் சிதற,
“என்ன இவளோ குஷி மேடம்?” என்று லேப்டாப்பை எடுத்துவைத்து, தங்கையை அருகில் அழைத்தான்
“டேய் டேய் டேய்” அவள் சந்தோஷத்தில் அவன் கையை பற்றிக் குதிக்க,
“சொன்னா நானும் குதிப்பேன், என்ன விஷயம்?”
“பைராவுக்கு கல்யாணம்! ஹாஹை! ஹாஹாய்!” அவள் குதித்துக்கொண்டே இருக்க,
“ஹேய் வாவ்!” தங்கையின் சந்தோஷம் அவனையும் தொற்றிக்கொண்டது.
“சரி சரி விஷயத்தை சொல்லு”
“அங்க ஒரு பொண்ணு அவனை பிடிச்சுருக்குனு சொன்னாளாம், வாணி ஆண்டி அந்த பொண்ணு அப்பாகிட்ட பேசினங்களாம். அடுத்த மாசம் நிச்சயமாம்! சூப்பர்ல?” குதித்தவள்,
“ஐயோ எனக்கு தலைகால் புரியலையே. ஜாலி எங்க ரெண்டு பேருகூட இன்னொருத்தி சேரப்போறா. இரு அம்மா அப்பாகிட்ட சொல்லிட்டு வரேன்” துள்ளிக்குதித்துச் சென்ற தங்கையைப் பார்த்து சந்தோஷ படுவதா, வருந்துவதா என்று மாதவனுக்குப் புரியவில்லை.
தன் தங்கைக்கும் நல்ல வரன் அமைந்தால் நல்லதென்று நினைத்த மாதவன், ஏனோ தீவிரமாக அவளுக்கு நல்ல வரனைத் தேடவேண்டுமென்று பெற்றோர்களை வற்புறுத்தத் துவங்கினான்.
அவனை முதலில் திருமணம் செய்துகொள்ள அவர்கள் கேட்டுக்கொண்ட போதும், தங்கையின் திருமணம் முடிந்தபின்னரே தன் திருமணமென்று அவன் உறுதியாக மறுத்துவிட, பெற்றோர்களும் வேறுவழியின்றி தீவிரமாக மாயாவிற்கு மாப்பிள்ளை தேட துவங்கினர்.
இரண்டு வாரங்களுக்குப் பின்னர் இந்தியா வந்த பைரவ், மாயாவைப் பார்க்க வீட்டிற்குச் சென்றான்.
மாயாவின் பெற்றோர்களிடத்தில் தன் வருங்கால மனைவி மற்றும் மாமனார் பற்றிய விவரங்களைச் சொன்னவன், மாயாவுடன் தனிமையில் பேச அவள் அறைக்குச் சென்றான்.
“உன்ன எவளோ மிஸ் பண்ணேன் தெரியுமா? ஹ்ம்ம் இனி சார் பிசி தான்” அலுத்துக்கொண்டாள்
“நானும் தான் ரொம்ப மிஸ் பண்ணேன். நீ சொல்லிட்டே இருந்த, நான் சொல்லல, அவளோதான்!”
ஏனோ இருவருக்குள்ளும் அமைதி நிலவ, பேச்சைத் துவங்கினாள் மாயா.
“ஹேய் உன் லவ் ஸ்டோரி சொல்லேன்” ஆர்வமாக அவள் கேட்க
“லவ் இல்லடா. எத்தனை வாட்டி சொல்றது? சொல்லி சொல்லி எனக்கே போர் அடிச்சுப்போச்சு” அலுத்துக்கொண்டான்
“எதோ ஒன்னு. ஃபோன்ல சொன்னே, இப்போ முகத்தைப் பார்த்து சொல்லு ப்ளீஸ்” கெஞ்சினாள்
“சரி சரி…ஸ்டூடியோ பார்ட்டிக்கு போனோமா, அங்க எங்க பக்கத்துக்கு டேபிள்ல் பவித்ரா இருந்தாளா…”
“ஸ்டாப் ! ஒரு ரொமான்டிக் பீலோட சொல்லு”
“ரொமான்சே இல்லைங்கிறேன் நீ இதுல ரொமான்டிக்கா சொல்ல சொல்றே ?”
“கொஞ்சம் இன்டெரெஸ்டிங்கா சொல்லுங்க பாஸ், வந்தேனா போனேனான்ன்னு போர் அடிக்கிது கேட்க” அவள் அடம்பிடிக்க,
“எனக்கு எப்படி வருமோ அப்படிதான் சொல்ல முடியும்” முறைத்தபடி அவள் கட்டிலில் அமர்ந்துகொண்டான்
“வந்ததும் வராததுமா உன்ன பாக்க வந்தா, எவளோ தூக்கம் சொக்கறது தெரியுமா? உன்னை பாத்துட்டு போய் தூங்கணும். ஜெட் லேக் போகவேலல்ல”
அவன் கண்களிலிருந்த சோர்வை உணர்ந்தவள்,
“சரி சரி, சீக்கிரம் சொல்லிட்டு கடைய சாத்து”
“ சரி…அந்த பார்ட்டி நடுவுல அவளே வந்து தன்னை அறிமுகம் செஞ்சுக்கிட்டா, பேச்செல்லாம் எங்கம்மா கிட்ட ஆனா பார்வைலாம் என்மேல. எனக்கும் சொல்லத்தெரியாத ஒரு ஈர்ப்பு அவமேல.
அப்புறம் ஒருநாள் நாங்களும், அவளும் அவ அப்பாவும் லஞ்சுக்கு போனோம். அங்க பவிக்கு என்னை பிடிச்சுருக்கார்த்தவும், எங்களுக்கு சம்மதம்னா கல்யாண பேச்சை ஸ்டார்ட் பன்னலாம்னும் சொன்னார்” கண்களை மூடி தலையணையை அணைத்துக்கொண்டவன்,
“அம்மாக்கு பிடிச்சுருக்கு அதுனால எனக்கும் பிடிச்சுருக்கு.
நம்பவே முடியலடா…காலேஜ்ல சில பேர் ப்ரொபோஸ் பன்னிருக்காங்க ஆனா எனக்கு ஆர்வம் இருக்கல.
பவி மேல காதலான்னு கேட்டா இல்லன்னுதான் சொல்லுவேன். என்னமோ சொல்ல தெரியல” அவன் கண்களில் தெரிந்த மகிழ்ச்சி மாயாவையும் தொற்றிக்கொண்டது.
மாயா கண்களில் ஆர்வம் பொங்க “இதெல்லாம் கேட்கும்போது எனக்கும் ஆசையா இருக்கு பாஸ். இதுமாதிரி உணர்வெல்லாம் எனக்கும் வருமா?”
“கண்டிப்பா வரும்டா” அவள் தலையைக் கலைத்தவன்,
“உனக்குன்னு ஒருத்தன் இருக்கான், வருவான் வந்து அப்படியே அள்ளிக்கிட்டு போவான்.
உன்னை தூக்குறது கொஞ்சம் கஷ்டம் தான்…இருந்தாலும் நம்புவோம்! பாத்துட்டே இரு” அவன் கிண்டலாகக் கொஞ்ச
“கொழுப்பு கொழுப்பு ! என்னை தூக்கினாத்தான் கல்யாணம் !”
“நீ என்ன இளவட்ட கல்லா? கல்லை கூடத் தூக்கிடலாம்டா, ஆனா இந்த ஆழாக்க துக்கறது கஷ்டம். ஏன் இந்த விபரீத ஆசை?”
“பிச்சு பிச்சு !” ஒற்றை விரலை ஆட்டி மிரட்டியவள் “எவன் என்னை தூக்குறானோ அவனைத்தான் கல்யாணம் செஞ்சுப்பேன் இல்லை ரிஜெக்ட்டட்”
“கிழிஞ்சுது! உனக்கு எங்கன்னு மாப்பிள்ளை தேடுறது?”
“பார்ப்போம் பாஸ். வீட்ல தேடுதல் வேட்டையில்தான் இருக்காங்க. அவன் என்ன தூக்குறானோ இல்ல, அவனை நான் தூக்கணுமோ” அவள் சிரிக்க
“ஒன்னு கேக்கவாடா?”
“கேளு பாஸ்”
“நம்ம கம்பெனிலேயே நிறைய பசங்க இருக்காங்க, ஒருத்தரையும் பிடிக்கலையா? லவ்? ஒரு சின்ன அட்ரேக்க்ஷன்? எதுவுமே வரலையா?” அவன் ஆர்வமாகக் கேட்க
சிறிதுநேரம் யோசித்தவள், “இல்லையே! ஒன்னு எனக்கு யாரையும் பார்த்து அப்படி தோணல, இன்னொன்னு இந்த காதல் கத்தரிக்காய் எல்லாம் செய்ய ரொம்ப ரொம்ப பொறுமை வேணும். தினம் கடலைப் போடணும், கொஞ்சமும், டேட்டிங் போகணும், அவனே பொறாமை பிடிச்சவனா இருந்தா அதை வேற சமாளிக்கணும். அய்யா சாமி! எனக்கு இதெல்லாம் செட்டே ஆகாது.
அதான் வீட்ல மூணு பேரு, நீ எல்லாரும் வெட்டியா தானே இருக்கீங்க? எல்லாருமா தேடி எவனையாவது பிடிச்சுட்டு வாங்க, நான் அப்புறமா அவனை ஆற அமர லவ் பண்ணிக்கிறேன்” அவள் சிரித்தபடி சொல்ல, சிரித்துவிட்ட பைரவ்,
“சோம்பேறில கண்டஞ்செடுத்த சோம்பேறி டா நீ” தோழியைக் கொஞ்சியவன்
“சரி நான் களம்பறேன், தூக்கமா வருதுடா. நான் நாளைக்கு லீவ், ரெஸ்ட் வேணும். நாளான்னிக்கு பாப்போம்டா! ” விடைபெற்றான்.
***
பைரவ் பவித்ரா நிச்சயதார்த்தம் கல்யாண வைபவம் போல வெகு பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
குடும்பத்துடன் நிச்சயத்தில் கலந்துகொண்ட மாயா, விழாவில் பைரவ் அறிமுகம் செய்துவைக்க ஒருமுறை பவித்ராவுடன் பேசியதோடு சரி.
வீட்டிற்கு வந்தவள் மனம் ஏனோ நிலைகொள்ளாது தவித்தது, நண்பனின் வருங்கால மனைவியை முதல் முறை ஆர்வமாக பார்க்கக் காத்திருந்தவளுக்கு ஏமாற்றமே!
அன்போடு கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்த, மாயாவிற்கு பவித்ரா தந்தது, வேண்டா வெறுப்பான போலிப்புன்னகையும், கண்களில் தெரிந்த ஏளனப் பார்வையும்தான்.
“மாதவா…அவளை பார்த்தா ஏனோ எனக்கு நல்ல அபிப்பிராயம் வரலையா. மனசுக்கு உறுத்தலா இருக்கு.”
“நீயேன் வேண்டாததை யோசிக்கிற? சொல்லப்போனா எனக்கும் அவளை பிடிக்கலை. அவளுக்கு நம்ம யாரையும் பிடிக்கலைனும் தெரியுது. ஆனா பைரவுக்கு பிடிச்சுருக்கு. வேற என்ன வேணும்?” மாதவன் கேட்கவும்
“அப்படி இல்லைடா. அவனை என்னக்கு தெரியும், சத்தியமா பவித்ரா அவனுக்க்கானவ இல்ல. அவன் கிட்ட சொல்லவுமுடியாம மறைக்கவும் முடியாம அவஸ்தையா இருக்கு”
தங்கையின் கண்களில் தெரிந்த ஆதங்கம், மாதவனையும் வருத்தியது,
“நோ அவன்கிட்ட எதுவும் சொல்லாதே! உனக்கும் எனக்கும் அவளை பிடிக்கணும்னு இல்லை. பைரவுக்கு பிடிச்சிருந்தா போதும்.”
“ஆனா எனக்கு அவளை பார்த்தா நிறைய எதிர்மறையான உணர்வுதான் வருது. மாதவா… அவன் சந்தோஷமா இருப்பானா?” அவள் மனது அமைதியின்றி தவித்தது.
“நம்புவோம்” தங்கைக்குச் சமாதானம் சொன்னான்.
***
நிச்சயதார்த்தம் வரை இருவருமே பிசியாக இருந்ததால், முதல்முறை நிதானமாகப் பேச பவித்ராவை அழைத்திருந்தான் பைரவ்.
“உனக்கு தெரியுமா பவி ரொம்ப நாளுக்கு அப்புறம் இன்னிக்கி என்னோட பழைய ஸ்கூலுக்கு போனேன். ரொம்ப மனசுக்கு…”
“பைரவ். இட்ஸ் போரிங். நீங்க என்ன பண்ணீங்க, என்ன பண்ண போறீங்க இதெல்லாம் எனக்கெதுக்கு?” அவன் பேச்சைப் பாதியிலேயே நிறுத்தியவள்,
“இதுல எனக்கு இன்டெரெஸ்ட் இல்ல” என்று சொல்லவும்,
“அப்போ எதுல இண்டேரெஸ்ட்?”
“கம்பெனி, பிசினெஸ், ப்ராஜெக்ட், ஷேர்ஸ்…”
பைரவோ உரக்கச் சிரித்துவிட்டு,
“பவி நீயும் நானும் பிசினெஸ் பார்ட்னெர்ஸா? நம்ம எதிர்காலத்தைப் பத்தி பேசினாகூட நியாயம் இருக்கு. சரி சொல்லு உனக்கு என்ன பிடிக்கும், ஹனிமூன் எங்க போலாம். உனக்குன்னு என்ன ஆசை இருக்கு?” ஆசையாக கேட்டான்.
அவளோ “இந்த அல்ப விஷயமெல்லாம் எதுக்கு பேசணும்? என் ஆசை நிறைவேத்தணும்னா என்னை உங்க கம்பெனி பார்ட்னர் ஆக்கு.
எனக்கு வேண்டியதெல்லாம் என் பிஸ்னஸ் வளரனும், உன்னைமாதிரி திறமையானவன் என் கண்ணசைவில் இருந்தா நான் ஈஸியா பினேசஸ்ல என் கனவை சாதிப்பேன்”
ஏனோ அவள் பேசியதில் எழுந்த கோவத்தை மறைக்க, நிதானமாக, “இப்போ மொதல்ல நமக்கு ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுக்கனும். உன்னை பத்தி எனக்கு எதுவுமே தெரியாது, என்னை பத்தி உனக்கு தெரியாது”
“உன்னை பத்தி தெரிஞ்சுக்க வேண்டியது எல்லாமே எனக்கு எப்போவோ தெரியும் பைரவ்!”
“அப்படியா சொல்லு பாப்போம்!”
“நீ உங்க அம்மாக்கு ஒரே பையன், அம்மா பைத்தியம். எல்லாத்துக்கும் அம்மா வேணும், ஷார்ட் டெம்பெர்ட், உங்கப்பா நீ 5த் படிக்கும்போது அட்டேக்ல இறந்துட்டார்.
பெரிய சொந்தக்கார கூட்டம் ஆனா யாரையும் கிட்ட சேர்க்கலை . சொந்தத்துல 5 முறை பொண்ணுங்க இருக்காங்க அதுல கல்யாண வயசு 3 பொண்ணுங்க.
ஸ்கூல் காலேஜ்ல யாரையும் லவ் பண்ணலை, இப்போ ஆஃபீஸ்ல மாயான்னு ஒரு கேர்ள் பிரென்ட், அன்னிக்கி நம்ம எங்கேஜிமெண்ட்டுக்கு வந்தவ.
சொந்தவீடு, வீட்ல டிரைவர் சமையல் காரங்க யாரும் கெடயாது, ஒரு வாட்ச்மேன், வந்து போற மெய்டும் தோட்டக்காரனும்.
நீயும் உங்கம்மாவும் போர் அடிச்சா ஃபாரீன் டூர் போகாம லூசுத்தனமா உங்க கிராமத்துக்கு போய் பூர்வீக வீட்டுக்கு போவீங்க.
உனக்கு…”
“போதும் போதும்! என்ன இது? நீ என்ன டிடெக்ட்டிவா? வீட்டு தோட்டக்காரர் வரை சொல்ற?” அவள் பேசப் பேச வியப்பாக உணர்ந்தவன் மேலும் ,
“நீ சொன்ன எல்லாமே சரி, ஒன்னு தவிர! மாயா என் பெஸ்ட் பிரென்ட்! கேர்ள் பிரென்ட் இல்ல. ஆமா எப்படி இவ்ளோ விஷயம் என்னைப்பத்தி உனக்கு தெரியும்?”
“எனக்கு எங்க தட்டினா என்ன தகவல் கிடைக்கும்னு தெரியும்” மிடுக்காகச் சொன்னவள்,
“எனிவே, எனக்கு உன் ஸ்டுடியோல பங்கு வேணும், அந்த யூஎஸ் ப்ராஜெக்ட் என் ட்ரீம், எங்களுக்கு கொடுக்காம, உங்க கம்பெனிக்கு போய் அதை கொடுப்பாங்கன்னு நான் நினைக்கல”
அவள் குரலில் கோவமோ? ஆதங்கமோ? அகங்காரமோ ? பைரவருக்குப் புரியவில்லை. இருந்தும் தன்னை சமன் செய்துகொண்டவன்,
“எனக்கு அந்த உரிமை இல்லை பவி. எங்கம்மாதான் எல்லாத்துக்கும் உரிமையானவங்க. இதெல்லாமே அவங்க உழைப்பு!
எப்படி பார்த்தாலும் கல்யாணத்துக்கு அப்புறம் என்கிட்டே இருக்க எல்லாமே உணக்குதானே பவி. அப்புறம் என்ன? எங்கம்மாக்கு அப்புறம் எனக்கு எல்லாமும் நீயா தானே ஆகப்போரே?”
‘அம்மாவிற்கு அப்புறம்’ என்று அவன் சொன்ன வார்த்தை பவித்ராவை தூண்ட,
கோவமாக “பைரவ், உனக்கு நான் முதலா? உங்கம்மா முதலா?” என்று அவள் கேட்க, அதை தன் மேல் கொண்ட அன்பினால், உரிமையாகக் கேட்கிறாளென்று தவறாக நினைத்தவன்,
“அம்மா ஒரு கண்ணுனா கல்யாணத்துக்கு அப்புறம் என் மனைவிதானே எனக்கு இன்னொரு கண்ணு” புன்னகையுடன் சொல்லவும், அதிர்ந்த பவித்ரா,
“வாட் ? உங்கம்மாவும் நானும் ஒண்ணா?”
“என்ன பவி குழந்தை மாதிரி? அவ்ளோ லவ்வா என் மேல?” குறுகிய காலத்தில் இத்தனை அன்பு சாத்தியமா வியந்தான்.
“லவ்? நான்சென்ஸ்!” ஏளனமாகச் சிரித்தவளோ,
“நீ தப்பா புரிஞ்சுகிட்டு இருக்கே பைரவ். எனக்கு உன்மேல காதல்லாம் இல்ல, எனக்கு லவ்னா அது பிசினெஸ் மேல மட்டுமே. எனக்கு லைஃப் பார்ட்னரா திறமையான பிசினெஸ் மேனை தேடினேன்,
உன்னை பார்த்தேன், எனக்கு ஈகுவலா இருப்பேன்னு தோணிச்சு, உன்னை பத்தி தெரிஞ்சுகிட்டேன், அப்பாகிட்ட சொன்னேன் அவளோதான். ஐ லவ் பவர்! வேற எது மேலயும் எனக்கு ஈர்ப்பே இல்ல” என்றவள் குரலில் அவ்வளவு ஏளனம், ஒரு பிசினெஸ் டீல் பேசும் தொனி.
அவள் பேசப் பேச ஏனோ சொல்லத்தெரியாத கோவம் தலைக்கேற, தன்னை கட்டுப்படுத்திக்கொண்டான்.
“அன்சார் மீ ! நானும் உங்கம்மாவும் சமமா?”
“என்னைக் கல்யாணம் செய்துக்க போற பொண்ணு யாரா இருந்தாலும், அவளை எங்கம்மாக்கு சமமா நான் நேசிப்பேன்” தீர்க்கமாகச் சொன்னவனின் குரலில் கோவம் எட்டிப் பார்த்தது.
“நான்சென்ஸ்! நான் யாருக்கும் ரெண்டாம் பக்க்ஷம் இல்ல! உனக்கு எப்போவும் நான்தான் முதல்ல இருக்கணும்! அதுவும் அந்த ஓல்ட் லேடிய எனக்கு சமமா சொல்றே? ”
“தப்புதான்! உன்னை எங்கம்மாக்கு சமமா வச்சது தப்புதான்!” என்றவன் அழைப்பைத் துண்டித்துவிட்டு கைப்பேசியைக் கீழே விட்டெறிந்து, வாணியின் அறைக்குச் சென்றான்.
“அம்மா எனக்கு பவித்ரா சரியான துணையா இருப்பான்னு தோணலை. எங்களுக்குள்ள எதுவுமே மேட்ச் ஆகலை. இத்தனை நாளா அவ வேலை வேலைனு இருந்ததால ஒழுங்கா பேசிப் பழக முடியலை, நல்லவேளை இன்னிக்கி பேசினேன்.
நாளைக்கு சரிபடாதுனு சொல்லிக் கல்யாணத்தை நிறுத்திடு மா!”
மகனின் பேச்சில் அதிர்ந்தவர், “டேய் என்னடா, இப்படி எடுத்தோம் கவுத்தோம்னு செய்ற காரியமா இது?”
“இந்த கல்யாணத்தை நானே நிறுத்திருப்பேன், நீ வாக்கு கொடுத்துட்டேன்னு உன்கிட்ட கேட்கறேன்”
“அவசரப்படாதே எனக்காகக் கொஞ்சம் பொறுமையா இருடா”
“எனக்கு அவளை பிடிக்கலைமா…பிடிக்காம கல்யாணம் பண்ணிக்கிட்டு, பிரியர்த்துக்கு இப்போவே தெளிவா முடிவெடுத்தா பெட்டர்!”
“நான் இல்லைனு சொல்லலை, ஆனா நிச்சயம் ஆனதுக்கு அப்புறமா வேண்டாம்னு சொன்னா, அந்த பொண்ணு வாழ்க்கை என்ன ஆகும்னும் யோசிக்கணும்ல?”
“மா என்னை வற்புறுத்தாதே”
“எனக்காக மறுபடி அவகிட்ட பேசு. அவ ஏதாவது மூட் அவுட்ல இருந்திருக்கலாம்”
வாதம் நீண்டுகொண்டே போக வாணியின் கண்கள் மெல்ல கலங்கி, சோகத்தில் முகம் இறுக்கியதை பொறுக்க முடியாதவன் அவருக்காக, அரைமனதாய் மீண்டும் யோசிக்க ஒப்புக்கொண்டான்.
ஆனால் அதுவரை பைரவ் மனதிலிருந்த ஆர்வமும் எதிர்பார்ப்பும் காணாமலே போயிருந்தது.
சிறு இடைவேளை விட்டுப் பின்பு பவித்ராவிடம் பேசிக்கொள்ளலாம் என்று நினைத்தவன் கவனத்தைத் திசைதிருப்ப வேலையில் தன்னை மூழ்கடித்துக் கொண்டான்.