Tholondru Thelanathu 15

Tholondru Thelanathu 15

தோளொன்று தேளானது! 15

     

          ஜேப்பியின் மச்சிலிபட்டின வீடு இருக்கும் பகுதிக்கு அப்பால் ஆங்காங்கு, அவனால் நியமிக்கப்பட்டிருந்தவர்களிடமிருந்து வந்த செய்தி, மற்றும் ப்ருத்வியை அடைத்து வைத்திருக்குமிடத்தைச் சுற்றியிலும் சந்தேகம் கொள்ளும்படியான விசயங்கள் நடந்ததையும், பணியில் இருக்கும் நபர்களிடமிருந்த தனித் தனி மெயிலாக சூம் நிறுவனத்திற்கு எழுத்து வழியே பகிரப்பட்டிருந்ததை, சாந்தன் படித்துவிட்டு அப்படியே அதனை ஜேப்பிக்கு அனுப்பியிருந்தான்.

          அதில், தற்போது சில நாள்களாகவே சந்தேகப்படும்படியான ஒரு குறிப்பிட்ட மொழி பேசும் நபர்கள் மச்சிலிபட்டினம் பகுதி வரை வந்து கண்காணிப்பதாகவும், கேட்டால் சரியான தெளிவான பதில் அவர்களிடம் இல்லை என்பதையும், அதுசார்ந்த இன்ன பிற விசயங்களும் அதில் பகிரப்பட்டிருந்தது.

          ப்ருத்வி இருக்குமிடத்திற்கு அருகே பகலில் ஒருசாரரும், இரவில் வேறு நபருமாக கண்காணித்ததையும் சிசிடிவி ஃபுட்டேஜ்ஜூடன் அனுப்பியிருந்ததையும் பார்வையிட்டான்.

          மெயிலின் வழியே பெறப்பட்டிருந்த செய்தியைப் படித்தவன், சாந்தனுக்கு அழைத்து, “ப்ருத்விய இனி ஒரே இடத்தில வைக்காத.  நம்ம கண்டெய்னர் டைப் ஹவுஸ்கு அப்போப்போ ஷிப்ட் பண்ணு.  யாரும் கெஸ் பண்ணவே முடியாதபடி அவனை மாத்திட்டே இரு” என்றவன்

          அடுத்து தனது வீட்டைச் சுற்றி காவலுக்கும், இதர பாதுகாப்பு பணிக்கும் நியமித்திருந்த தலைமைப் பொறுப்பாளனான வீரேந்திரனுக்கு அழைத்தான் ஜேப்பி.

          “வீட்டுக்கு எதாவது டாக்டர்ஸ், இல்லை யாரு வேலைன்னு வந்தாலும், ஃபுல்லா செக் பண்ணிட்டு உள்ளே அனுப்பணும்.  ஷ்யாம் ஸ்கூலுக்கு போற வழியில எந்த இடமெல்லாம் டவுட்டா இருக்கோ, அங்க எல்லாம் எக்ஸ்ட்ரா ஆள் போட்டு வாட்ச் பண்ணு.  டவுட்டா யாரு உள்ளே வந்தாலும், என்ன ஏதுன்னு கேக்காத.  முடிச்சிரு.  பின்னாடி பாத்துக்கலாம்” முழு சுதந்திரம் வழங்கியதோடு,

“இனி ஷ்யாமைத் தனியாவே ஸ்கூலுக்கு அனுப்ப ஏற்பாடு செய்யணும்” என்றவன், அடுத்து சுமியிடமும் அதையே கூற,

சுமியோ, “ரொம்ப நேரம் தனியா டிராவல் பண்றது அவனுக்கு போரா இருக்குங்கறான் ஜேப்பி.  எனக்கும் வீட்டுக்குள்ளயே அடைஞ்சி இருக்கறதுக்கு பதிலா, இப்டி வெளியில போயிட்டு வரது நல்லா இருக்கும்னு இப்ப கொஞ்ச நாளாத்தான் அவங்கூடப் போறேன்” என்றிட, அதற்குமேல் சுமியிடம் வாக்குவாதம் செய்தை விட்டுவிட்டு, வீரேந்திரனுக்கு அழைத்து, என்ன செய்ய வேண்டும் என்பதையும் பகிர்ந்து கொண்டிருந்தான் ஜேப்பி.

***

திருமணமாகி ஏறத்தாழ இரண்டரை மாதங்களுக்குமேல் ஆகியிருந்தது.  திருமணமாகி சில நாள்கள் மனைவியோடு இருந்துவிட்டு, பணியின் பின்னே சென்றதோடு, வீட்டை நினைத்தாலும் வர முடியாமல் பணிப்பளு இழுத்துக் கொண்டிருந்தது ஜேப்பியை.

          சுமித்ராவும், சில நேரங்களில் ஜேப்பி பேசும்போது வெட்கத்தைவிட்டு, “வந்துட்டுப் போ ஜேப்பி.  ரொம்ப லோன்லியா ஃபீல் ஆகுது.  முன்னல்லாம் பிரிஞ்சிருக்கறது கஷ்டமாயில்லை.  ஆனா, இப்ப  என்னால உன்னைப் பாக்காம இருக்கறதே நரக வேதனையா இருக்கு” என்று கூறவும் செய்திருந்தாள்.

          அதைக் கேட்டாலும், மனைவியிடம் உருகிக் கரையவோ, அவளை தேறுதல் செய்யவோ விழையாமல், “வெளிய வேலைன்னு கிளம்பிட்டா, திரும்பி வரவரை எனக்கே அங்க எப்ப வர முடியும்னு தெரியலைடீ.  வேணுன்னு யாராவது இப்டி இருப்பாங்களா. புரிஞ்சிக்கோ.  ரொம்ப வர்க் லோடு. 

ஒரு பிரான்ஞ் பாத்துட்டு, அடுத்த பிரான்ஞ் போனதுமே, முடிச்ச பிராஞ்ல இருந்து எதாவது அடுத்த வேலைன்னு சொல்லிக் கூப்பிடும்போது, அப்டியே விட்டுட்டு எனக்கென்னானு வரமுடியறதில்ல சுமி.  உனக்கு இந்த ஃபீல்ட் பத்தி புரியாதது ஒன்னுமில்லை” என்றவன்,

“கொஞ்ச நேரங்கிடைச்சாலும், அந்தப் பக்கம் வந்துட்டு வர ட்ரைப் பண்ணறேன்” என்று உறுதிகூறி சமாளித்திருந்தான் ஜேப்பி.

மறந்தும் ஷ்யாமைப் பற்றி விசாரிப்பதில்லை ஜேப்பி என்பதை நினைவு கூர்ந்தவளுக்கு வருத்தம்தான்.  இப்போதுபோலவே இறுதிவரை இருந்தால், ஷ்யாம் வளர்ந்ததும் நிறைய விசயங்களை தான் சமாளிக்க நேரிடும் என்பதை யோசித்து, ‘இதுக்கு விடிவுகாலமே பொறக்காது போலயே’ தனக்குள் புலம்பித் தீர்த்தாள் சுமி.

ஷ்யாம் சில நேரங்களில், “மீம்மா.  நீ என்னை எங்கேயும் ஷாப்பிங்கு கூத்தித்தே போக மாத்துற. வீத்துலயும், ஸ்கூலுக்கும் மத்தும் போயி, போயி தொம்ப போதா இதுக்கு” தனது எண்ணத்தை பகிர்ந்து கொள்ள,

“டாடி வந்ததும் ஷ்யாம் கண்ணாவை கண்டிப்பா வெளிய கூட்டிட்டுப் போவேனாம்” சுமியின் வார்த்தைகளைக் கேட்ட ஷ்யாமிற்கு ஏதோ புரிய,

“இது புது இதம்னால உனக்கு வழி தெதியாம, என்னைக் கூத்தித்துப் போக மாத்திதியா” ஷ்யாமிடமிருந்து தப்பிக்க வேறு வழி தெரியாமல், சுமியும் அதனையே ஆமோதித்து,

“ஆமா கண்ணா, இங்க அம்மாவுக்கு யாரு பேசுறதும் புரியலை.  அம்மா பேசற தமிழும், இங்கிலீஷ் இங்க உள்ளவங்களுக்குப் புரியலை.  நாம வழி கேட்டாலும், இங்க நாம பேசறது புரியாததால, நமக்குத்தான கஷ்டம்” விளக்க, அதன்பின் ஷ்யாமும் சுமியை தொந்திரவு செய்தானில்லை.

நாள்கள் கடக்கவே, சுமிக்கு ஏதோ உடல்நிலையில் வித்தியாசமாக உணர்ந்தாள்.  உணவின்மேல் ஈடுபாடு இல்லாமல் போயிருந்தது.  எதைப் பார்த்தாலும் குமட்டியது. தலையைச் சுற்றிக் கொண்டு வந்தது.  சுமிக்கு மருத்துவமனை செல்ல வேண்டும் என்று தோன்ற, அதனை தேவியிடம் கூறினாள்.

தனக்கு எதனால் இதுபோன்று இருக்கிறது என்பதே தெரியவில்லை.  இதுவரை விவரமறிந்த நாள் முதலாய் இப்படி இருந்ததில்லை என்று கூற, தேவி விளக்கமாய் இறுதியாக மாதவிடாய் எடுத்த நாளைப்பற்றி விசாரிக்க, இன்னும் இதுபற்றிய சில பேச்சுகளுக்குப்பின், குழந்தையாக இருக்கக்கூடும் என ஒருவாராக முடிவு செய்யப்பட்டது.

காலை பதினோடு மணியளவில் தேவியிடம் பேசிவிட்டு, மதிய உணவை மறுத்துவிட்டு தனதறைக்கு திரும்பியவளுக்கு ஜேப்பி அழைத்திருந்தான்.

ஜேப்பியிடம் துவக்கத்திலேயே, “பேருக்குத்தான் சுதந்திரமா வச்சிருக்கன்னு இப்போவாவது நம்புறியா?” சண்டைக்கு வந்தவளிடம்,

“டென்சன் இல்லாம ஃப்ரீ மைண்ட்டா இரு சுமீ.  லேடி டாக்டர் ஈவினிங் வருவாங்க” என்றவன், சில வார்த்தைகளுக்குப்பின், “உடம்பை நல்லா கவனிச்சிக்கோ” என வைத்திருந்தான்.

‘எப்பப் பாத்தாலும், பிஸினெஸ் பின்னாடியே திரியறவனுக்கு எதுக்குப் பொண்டாட்டி,  இப்போ புள்ளை வேற.  என்ன பாவம் பண்ணேனோ நான் வந்து மாட்டிகிட்டேன். இனி பொறக்கப்போற புள்ளையும் எங்கூட சேந்து கஷ்டப்படணுமா?’ மனம் சலித்தது.

‘ஒரு வேலைக்காரிக்கு இருக்கற சுதந்திரங்கூட இந்த வீட்ல எனக்கு இல்லை.  ஏறத்தாழ ஜெயில் மாதிரிதான் இது’ நொந்தபடியே, வந்த மருத்துவரிடம் தனது உடல்நிலையைப் பற்றி விவாதித்ததோடு, கர்ப்பம் என்பதையும் உறுதி செய்திருந்தாள் சுமீ.

ஷ்யாமைத் தான் தனது பொறுப்பாக ஏற்றுக் கொண்ட தினத்தின்போது கிடைத்த சந்தோசம்கூட தற்போது தன்னிடம் இல்லை என்பதை உணர்ந்தபடியே, விரக்தியான மனநிலையோடு அன்று உறங்கச் சென்றாள் சுமீ.

தனது மனம் விரும்பியவனை மணமுடித்து, தங்களின் குழந்தை இன்னும் ஏழு மாதத்தில் கைகளில் தவழப்போவதை ஏனோ கொண்டாட முடியாமல் சுமியின் மனம் தடுமாற்றத்தில் இருந்தது.

ஷ்யாமிற்கு ஏதோ புதிய வரவாக குழந்தை வரவிருப்பதைத் தெரிந்து கொண்டவன், “நமக்கு இப்ப தம்பிப் பாப்பா மத்தும் போதும்மா. அப்புதம் தங்கச்சி பாப்பா வேணுமானு யோசிப்போம்” ஆவலோடு கூறியவனை, தன்னோடு இழுத்தணைத்து நெற்றியில் இதழ் பதித்தவள்,

“இப்ப தம்பிப் பாப்பா இல்லாம, தங்கச்சி பாப்பா பிறந்தா ஷ்யாம் என்ன செய்வீங்க?” என்றிட

சற்று நேரம் யோசித்தவன், “எதுனாலும் ஓகேதான்.  ஆனா தம்பிப் பாப்பாதான் இப்ப எனக்கு வேணும்” திடமாக உரைத்தவனை, மனதில் கவலையோடு பார்த்தாள் சுமீ.

உறங்கச் சென்றபோது எதையோ நினைத்தபடியே நிலைத்த பார்வையோடு படுக்கையில் இருந்த தாயை அணைத்தபடியே தட்டிக் கொடுத்தான் ஷ்யாம்.

அவனது செயலில் சுமிக்கு அழுகை வர, அதனை அடக்கிக் கொண்டு கண்களை மூடியவளுக்கு, மூடிய இமைகளுக்கிடையே பீறிட்டு வெளிவந்த நீர் அவளின் தலையணையை நனைத்தது.

***

தான் சேகரித்த தகவல்களை பார்வையிட்ட சிவபிரகாசம், ‘நாம எட்டடி பாஞ்சா, பய இருவத்து நாலடிக்கு மேலல்ல பாயுறான்’ என தனக்குத்தானே சிரித்துக் கொண்டவர், எதிரில் புகையிலையோடு கூடிய வெற்றிலையைக் குதப்பியவாறு அமர்ந்திருந்த ஆதிகேசவராவை நோக்கிப் பேசத் துவங்கினார்.

ப்ருத்வியின் படத்தைக் காட்டி, “இந்தப் பயலை முதல்ல அவங் கஷ்டடியில இருந்து நம்ம கஷ்டடிக்கு கொண்டு வரணும்.  அப்புறம், மிச்ச ரெண்டு டிக்கட்டையும், அங்க உள்ள ஆளுங்களை வச்சே எந்த சுவடும் தெரியாம முடிச்சிற வேண்டியதுதான் உங்க வேலை” எதிரில் அமர்ந்திருந்தவனிடம் பேசினார் எஸ்ப்பி.

“முடிக்கிறது பெரிய வேலை இல்லைஜி.  அத்தோட, உங்க பேரன் அவரோட விவேகமான விளையாட்டை ஆரம்பிச்சா, ரெண்டு பக்கமும் நிறைய உயிர் சேதம் ஆகுமே?” அரைகுறை ஆங்கிலத்தில் சில தெலுங்கு வார்த்தைகளை சேர்த்துப் பேசி கேள்வியோடு நிறுத்தினார்.

“எங்க ஊரு ஆளுகளையோ, உங்க ஆளுகளையோ இதுல நேரடியா இறக்காம, கூலிக்கு வர வேற மாநில ஆளுங்களை வச்சி முடிங்க.  அப்பத்தான் அவன் தோண்டித் துருவி, விசயம் வெளிய வரதுக்குள்ள வருசம் ஓடிரும்.  வேகங் குறைஞ்சிட்டா, அவனை சமாளிக்கறது நமக்கு ஈசி” மிகவும் கூலாகக் கூறினார் எஸ்ப்பி.

“தெலுங்கானாவுக்குள்ள நீங்க அனுப்பின மக்களை வச்சி, தேவையான எல்லாத்தையும் பத்தே நாளுக்குள்ள வாங்கியாச்சி. அம்பது ஏக்கருக்கு மேல இடத்தை வளைச்சி, அதுக்குள்ள வீடு இருக்கு.

வீட்டுக்குள்ள போகவோ, அவனோட எல்லையைத் தொடவோ செய்யாம, அங்க இருந்து வெளிய சின்னப் பயலை ஸ்கூலுக்கு அனுப்பற வழியில வச்சி, எதேச்சையா நடந்த மாதிரி முடிக்கணும்.  தனித்தனியா செய்யாம, ரெண்டு பேரும் ஒன்னா வரும்போது வேலைய சுளுவமா சந்தேகம் வராம முடிக்கறமாதிரிப் பாத்துக்கணும்” என்றவர்,

“ப்ருத்விங்கறவன நேருல பாத்துப் பேசின பின்னதான் அவங் கணக்கைத் தீக்கணும். அதனால, உயிருக்கு எந்த சேதாரமும் இல்லாமக் கொண்டு வந்து எங்கையில ஒப்படைச்சிருங்க” வேண்டிக் கொண்டார் எஸ்ப்பி.

பிறகு, அவனை எங்கு அடைத்து வைத்திருப்பதற்கான வாய்ப்பு உள்ளது என்பதையும், படத்தோடு கையில் ஒப்படைத்திருந்தார் எஸ்ப்பி.

எஸ்ப்பியின் திட்டங்கள் ஓரளவு கண்காணிக்கப்பட்டு, ஜேப்பியின் பார்வைக்கு வந்தது தெரியாமல் தனது திட்டம் வெற்றியடையும் என எண்ணி நம்பிக்கையோடு தனது வேலையைத் துவங்கியிருந்தார்.

***

          நான்கரை மணிக்கு உறக்கம் கலைந்தவளுக்கு, தனது தோள்பட்டையின் மீதிருந்த கையின் கனத்தை வித்தியாசமாக உணர்ந்தவள், ‘ஷ்யாமோட கையி இவ்ளோ வெயிட்டா இருக்காதே’ எண்ணியவாறே கண்விழித்துப் பார்க்க, அறையின் வித்தியாசத்தில் பதறி எழுந்தாள் சுமீ.

          “ப்ச்சு.  பேசாம படு சுமீ” என அதட்டியவாறு தன்னோடு இழுத்து பழையபடி படுக்க வைத்து அணைத்துக் கொண்டவனைக் கண்டு, இது தனது அறையல்ல என்பதும், இது வேறு இடம். அனேகமாக ஜேப்பியின் அறையாக இருக்கலாம் என யூகித்தவள்,

“ஏய்,  எப்டிடா நான் இங்க வந்தேன்.  நீ எப்ப வந்த?” என அதேநிலையில் படுத்தவாறே ஜேப்பியிடம் கேட்டாள் சுமீ.

          “இதல்லாம் இப்ப எதுக்கு.  பேசாம படு” அவளை இன்னும் தன்னோடு இழுத்து அணைத்துக் கொண்டான்.

          முந்தைய தினம் தான் பேசியபோதுகூட, தன்னிடம் இதைப்பற்றிப் பேசாதவன், தற்போது வந்திருப்பது, அவனது கைகளுக்குள் தான் இருப்பது, இந்த கணம் சுமிக்கு நிச்சயமாக அளவற்ற மகிழ்ச்சிதான்.

ஆனால், பாரா முகமாய் இருந்த கணவனது இதேநிலை நீடித்தால் வரக்கூடிய தினங்கள் மிகவும் வருந்தத் தக்கதாகவே அமையும் என்பது புரிய, அவனிடம் சில விசயங்களைப் பேசி புரிய வைக்கும் முயற்சியில் இறங்க எண்ணி, “எப்போ நீ எழுந்துப்ப?” என்றாள்.

அவளின் உதடுகளில் தனது விரல் கொண்டு வீணை மீட்டியவனது கைகளைப் பிடித்துக் கொண்டு, “சொல்லு முதல்ல” என்றாள். அவனிடமிருந்து எந்த பதிலும் இல்லை.  அவனை நோக்கித் திரும்பியவள், மூடிய விழிகளுக்குள் அவனது கண்பாவைகள் அசைவதைக் கண்டாள்.

          “தூங்குற மாதிரி நீ நடிச்சாலும், உன்னோட கண்ணும், விரலும் நீ தூங்கலைனு காட்டிக் குடுத்துருச்சே ஜேப்பி.  வாயத் திறந்துதான் பேசேன்” என்றாள் சுமி.

          இறுகிக் கிடந்தன ஜேப்பியின் புகை பிடித்த உதடுகள். கண் திறவாமலேயே, “பெரிய கண்டுபிடிப்பு” என்ற ஜேப்பியிடம், “இப்பல்லாம் ரொம்ப தம்மு வாசிக்கறபோல” உதடுகளைப் பார்த்து குறி சொன்னாள் சுமி.

          “முன்ன மாதிரியில்ல, இப்ப நிறையக் குறைச்சிட்டேன்” கண் திறவாமலேயே பதில் கூறினான் ஜேப்பி.

          “அதுவே இந்த லட்சணத்துல இருக்கா.  அப்ப இதுக்கு முன்ன, முழுநேரமா அதத்தான் பண்ணியா?” சுமி.

          கண்ணைத் திறந்தவன், “எதுக்குடீ இப்ப இந்த வேண்டாத ஆராய்ச்சி எல்லாம்” என்றதோடு, “பசிக்கிதுடீ” ஒட்டியிருந்த வயிற்றைப் பிடித்தபடி கூறினான்.

உண்மையில் பசிதான்போல என எண்ணி படுக்கையைவிட்டு அவசரமாக எழப் போனவளை, “எங்க போற?” என்றான் ஜேப்பி.

“நீதான் பசிக்கிதுன்னு பாவம்போல வயித்தைப் புடிச்சிட்டுச் சொன்ன.  அதான் சாப்பிட எதாவது எடுத்துட்டு வரலாம்னு எழுந்தேன்” கர்மசிரத்தையோடு பதில் கூறினாள் கணவனுக்கு.

“இது வேற பசி” என்று கண்ணைச் சிமிட்டிச் சிரித்தவன், “உருப்படியா வேற வேலை பாப்போம் வா” சுமியை மெதுவாக தனதருகே இழுத்தவன்,

“ஒரு மனுசன், மாசக்கணக்கா பட்டினியா இருந்து, பெரும் பசியோட வந்திருக்கானே.  அவனுக்கு சாப்பாடைப் போட்டு பசியாத்துவோம்னு உனக்காத் தோணலை.  நான் கேட்டா, கிச்சனைத் தேடிப் போற.  உன்னையெல்லாம் வச்சிக்கிட்டு, நான் ரொம்பப் பாவம்டீ” எனத் தனக்குத்தானே வருந்திக்கொண்டு, மனைவின் முறைப்பைக் கண்டு கொள்ளாமல் தனது தேவையைத் தீர்க்கும் நோக்கத்தில் செயல்படத் துவங்கினான் ஜேப்பி.

          தனது முறைப்பை கருத்தில் கொண்டு விலகுவான் என எண்ணியவளுக்கு ஏமாற்றமே கிட்ட, கணவனது தாபத்தோடுடனான முன்னேற்றச் செயலைக் கண்டு பதறியவள், “ஜேப்பி.  இப்போலாம் உனக்கு சாப்பாடு போடலாமா வேணாமான்னு டாக்டர்கிட்ட கேட்டுட்டு, அப்புறம் பாத்துக்கலாம்.  இப்ப என்னை விடு” சுமீ அலறினாள்.

          “இப்டி விடறதுக்கா இவ்ளோ தூரம் மெனக்கெட்டு வந்தேன்” என்றவன், அவளுக்குள் மூழ்க, “ஜேப்பி, இதுலலாம் என்ன விளையாட்டு” கண்டிப்பாக சுமி பேச,

          “என் பையனை தொந்திரவு பண்ணாம வேண்டியதை எடுத்துக்குவேன்.  நீ டென்சனாகாம, அமைதியா மட்டும் இரு” என மனைவியை அடக்கியவன் முன்னேற, ஒரு பக்கம் பயம், இன்னொரு பக்கம் கணவனை நினைத்து பரிதாபம் வேறு சுமிக்கு.

தனது பயத்தைக் காட்டிலும், கணவனின் மீதான பரிதாபம் வென்றிட, சுமி பயந்தது தேவையில்லாதது என யோசிக்குமளவிற்கு மனைவிக்கும் நோகாமல், பிறக்கப் போகும் குழந்தைக்கும் தொந்திரவு என்றில்லாமல் பொறுமையோடும், சிரத்தையோடும் தனது தேவையை நிறைவேற்றிக் கொண்டிருந்தான் ஜேப்பி. 

சுமி பட்டினி போட எண்ணியிருக்க, ஜேப்பிக்கோ ஃபுல் மீல்ஸ் என்றாகிப் போயிருந்தது.

சற்று நேரம் பேசிக் கொண்டிருந்தவர்கள், விடியலில் உறங்கிப் போயினர். ஷ்யாம் எழுந்தது முதல் சுமியைத் தேட, தேவி அவனைப் பள்ளிக்கு கிளப்பினாள்.

இடையில் ஜேப்பி, தேவிக்கு அழைத்து, “அவ தூங்கறா.  இன்னைக்கு அவனை ஸ்கூல்ல கொண்டு போயி நீயே விட்டுட்டு வந்திரு தேவி” என்றதும், ஷ்யாமைச் சமாளித்து அழைத்துச் சென்றிருந்தாள் தேவி.

ஜேப்பியின் பேச்சைக் கேட்டு எழுந்த சுமி, “அவளை எதுக்கு போகச் சொல்லுற.  நானே எப்பவும்போல போயிட்டு வந்திறேன்” கிளம்பியவளை விடாமல் தன்னோடு வலுக்கட்டாயமாக இறுத்திக் கொண்டிருந்தான் ஜேப்பி.

பள்ளிக்குச் சென்ற வாகனத்தின் டீசல் டாங்கை நோக்கி விட்டெறிந்த தீப்பந்தத்தால், வாகனமே தீப்பற்றி எறிந்து சாம்பலான செய்தி, அடுத்து வந்த ஒரு மணி நேரத்திற்குப்பின் ஜேப்பிக்கு எட்ட, தான் மட்டும் சம்பவ இடத்தை நோக்கி இறுகிய முகத்தோடு அவசரமாகக் கிளம்பிச் சென்றிருந்தான் ஜேப்பி.

இதை மாலையில் அறிய நேர்ந்த சுமியின் நிலை?

***

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!