tik 9

மல்லி கண் விழித்துப் பார்ப்பதற்குள் மூன்று நாட்கள் கடந்திருந்தது…

இடது காலில் பலத்த எலும்பு முறிவு ஏற்பட்டிருந்தது… உடலில் ஆங்காங்கே… காயங்கள் ஏற்பட்டிருந்தன… அவளது தலை தரையில் மோதியிருக்க… வெளிப்படையாகப் பெரிய காயம் இல்லையென்றாலும்… உள்ளே ஏற்பட்ட அதிர்வினால் பாதிப்பு இருந்தது… தொடர் மருத்துவ சிகிச்சைக்குப் பிறகே… கண்விழித்தாள் மல்லி…

அவளுக்கு விபத்து நடந்த, அந்த இடத்துக்கு மிக அருகில் இருந்த… மருத்துவக் கல்லூரியுடன் இணைத்த மருத்துவ மனை ஒன்றில் அவளை… முதல் கட்ட மருத்துவ உதவிக்காகச் சேர்த்திருந்தான் தேவா… உடன் சுமானாவும் இருந்தாள்.

அனுமதிக்கப்பட்ட சில நிமிடங்களில் பரிமளாவிற்கு தகவல் கொடுக்கப்பட… ஜெகனுடன் அவர் அங்கு வந்து சேர்த்திருந்தார்…

சுமா நடந்த சம்பவத்தைப் பற்றி அவர்களிடம் விளக்க… கோபம் கொண்ட பரிமளா… அந்த நேரத்தில் அவளை அலுவலகத்திலிருந்து அழைத்திருக்கத் தேவையில்லையே… என வெகுவாக… தேவாவைக் கடிந்து கொள்ள… அவரைச் சமாதானப்படுத்திய சுமா… மல்லி இருந்த அவசர சிகிச்சை பிரிவிற்கு அவர்களை அழைத்துச் சென்றாள்.

மகளின் நிலையைக் கண்டு கதறிய, அந்தப் பெற்றோரைக் காண… மிகவும் வேதனையாய் இருந்தது தேவாவிற்கு… இப்படி ஆகும் என அவன் கொஞ்சமும் எதிர்பார்த்திருக்கவில்லை…

மல்லியின் அவசர செயலால் வந்ததுதான் என்றாலும்… அவன் அவளிடம் பேசிக்கொண்டிருந்த விஷயம் … அவ்வளவு நுட்பமானதாக இருந்ததால்… அதை இன்னும் கொஞ்சம் கவனமாகக் கையாண்டிருக்கலாமோ என்ற எண்ணம் அவனை வெகுவாக கொன்று கொண்டிருந்தது.

தனது குற்ற உணர்ச்சியால்… அவர்களை நெருங்கவே அவனுக்கு அவ்வளவு தயக்கமாக இருந்தது… அதனால் அவர்கள் அங்கே வந்த பிறகு அவன்  மல்லியின் அருகே செல்லவே இல்லை… எல்லாவற்றையும் சுமாயா மூலமாகவே செய்துகொண்டிருந்தான்.

அவளை “கேர் ஃபார் லைஃப்” மருத்துவமனைக்கு மாற்ற… தேவா… சுமாயா மூலமாகக் கேட்ட பொழுது… அந்த மருத்துவமனை அவர்களுக்கு ராசியாக இருப்பதாக நினைக்கவே, பரிமளா அதற்குக் கொஞ்சமும் சம்மதிக்கவில்லை…

வசதி குறைவான மக்களுக்காக… குறைந்த செலவில் மருத்துவ உதவிகள் செய்து வருவதால், இதே மருத்துவன்மனையில்தான், ஜெகன் உடல்நிலை மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட சமயம்… அவரைச் சேர்த்திருந்தார் பரிமளா.

தொடர்ந்து அவரது மருத்துவ பரிசோதனைகளையும் அங்கேதான் செய்துகொண்டிருக்கிறார்கள். அவர் உடல் நலம் தேறி… நடமாடிக் கொண்டிருப்பதே… அங்கே இருந்த மருத்துவர்களின் திறமையால்தான் என்று அவர் முழு மனதாக நம்பினார்…

அவர்களுக்கு நன்கு பழக்கமான மருத்துவர்களும் அங்கே இருந்ததால்… அவருக்கு அங்கேயே திருப்தியாக இருக்கவும்… அந்த மருத்துவமனையிலேயே சிகிச்சையை தொடர விரும்பினார் பரிமளா…

அதற்கு மேல்… சுமாவால் அவரை வற்புறுத்த முடியவில்லை.

தன்னாலான உதவிகளை அருகில் இருந்து செய்யத் தொடங்கினாள்… அவ்வளவே…

அவளது பெற்றோரையும், தீபனையும் தாண்டி… மல்லியை நெருங்க முடியாமல் தவித்துத்தான் போனான் தேவா… அவள் இல்லாமல் ஒரு வாழ்க்கையை நினைத்துப் பார்க்கவே அவ்வளவு பயமாக இருந்தது அவனுக்கு… அவள் கண்விழிக்கும் வரை… ஒவ்வொரு நொடியும்… அவ்வளவு பயங்கரமானதாக இருந்தது…

அவள் கண் விழித்து… அவளுக்கு எந்தவித ஆபத்தும் இல்லை என மருத்துவர்கள் சொன்ன பிறகுதான் அவனுக்கு தன்னைப் பற்றிய உணர்வே வந்தது எனலாம்… அதுவரை, எந்த ஒரு வேலையிலும்… முழு மனதுடன் அவனால் ஈடுபட முடியவில்லை… அதனால் சிற்சில சறுக்கல்களை… அந்த ஓரிரு நாட்களிலேயே அவன் சந்தித்துவிட்டான்…

அவனது மிகப்பெரிய பலகீனமாக மல்லி இப்படி மாறிப்போனது… பெரும் வியப்பாகவும்… அதே சமயம் தனது நிலை குறித்து வெட்கமாகவும் இருந்தது அவனுக்கு…

அவனது இந்தப் பலகீனம் அவனுடைய வளர்ச்சியை எந்த அளவிற்குப் பாதிக்கும் என்பதை நன்று உணர்ந்தவனாக ஒரு முடிவுக்கு வந்திருந்தான் தேவா… அது மல்லிக்கு மகிழ்ச்சியைக் கொடுக்குமா? இல்லை துன்பத்தைக் கொடுக்குமா? விடை காலத்தின் கைகளில்!!!

****************

மல்லியை… ஐ.சி.யூவிலிருந்து… ஜெனரல் வார்டிற்கு மாற்றிய பிறகு… பூவரசந்தாங்கலில் இருந்து… அவர்களுடைய உறவினர்கள் ஒவ்வொருவராக வந்து அவளை நலம் விசாரித்துவிட்டுச் சென்றனர்… அவர்கள் ஒன்றும் பெரிதாக வசதி படைத்த மக்களெல்லாம் கிடையாது… ஆனாலும்… மற்றவரிடம் அளவற்ற அன்பும், அக்கறையும் நிறைந்தவர்கள். பெரும்பாலானோர்… குரு விவசாயிகள்… விவசாயக் கூலி வேலை செய்பவர்கள்… சமீபமாக விவசாயம் பெரிதும் பாதிக்கப் பட்டிருப்பதால்… சிலர் தினக் கூலிக்கு கட்டிட வேலைக்குச் செல்லத் தொடங்கியிருந்தனர்…

அப்படிதான் அவளைப் பார்க்க வந்திருந்தனர் ஜெகனின் நண்பர் கிட்டுவும் அவரது மனைவி தேவிகாவும்…

தேவிகா… “நீ உன்னோட நல்ல மனசுக்கு ரொம்ப நல்லா இருக்கணும்னு நான் அந்த காஞ்சிப் பேரருளாளனை வேண்டாத நாளே இல்லை… உனக்குப் போய் இப்படி ஆகிவிட்டதே ராசாத்தி… நீ நல்லா குணமாகி ஊருக்கு வா கண்ணு… உன்னோட அம்மாக்காரி நிம்மதியா வேலைக்குப் போகட்டும்… என்ன பெத்த தயாட்டமா… நான் உன்ன நல்லா பாத்துக்கறேன்…” என்று மல்லியின் கரங்களை பிடித்துக்கொண்டு அழுதே விட்டார்…

மல்லியின் மீதான அவரது அன்பைப் பார்த்து… அங்கே மல்லிக்குத் துணையாக இருந்த சுமாதான் அதிசயித்துப் போனாள்.

உடல்நிலை ஓரளவிற்கு முன்னேறி… மல்லி வீடு திரும்ப பத்து நாட்கள் ஆனது… அவளை மருத்துவ மனையில் அனுமதித்ததோடு சரி… அதன் பிறகு தேவா அவளை வந்து பார்க்கவே இல்லை.

மனம் வருந்தினாள் மல்லி…

ஒவ்வொரு நொடியும் அவன் தன்னை வந்து பார்ப்பான் என எதிர்பார்த்து… ஏமாந்து போயிருந்தாள்…

எங்கே அவனிடம் இன்னும் கொஞ்ச நேரம் நின்று பேசிக் கொண்டிருந்தால்… தன் மனதில் இருப்பது வெளிப்பட்டுவிடுமோ என்ற பயத்தில்தான் அவ்வளவு வேகமாக… அந்த ஹோட்டலிலிருந்து, அன்று அவள் வெளியேறியது…

அம்மு சொல்லாமல், தேவாவை அவளால் மணக்க முடியாது…

அறியாத வயதில் விளையாட்டாகச் செய்த அந்தச் சத்தியத்தை மீர முடியாமல் தவித்தாள் மல்லி… மனசாட்சிப் படி உண்மையாக வாழும் மல்லியைப் பொறுத்தவரை… விளையாட்டாகச் செய்தலும் சத்தியம்… சத்தியமே!!!

அவள் அடிப்பட்டு விழுந்த அந்த நேரம்… “உன்னை விடவே மாட்டேன் என்பதைப் போல… தன்னை இறுகப் பற்றியிருந்த தேவாவின் கரங்களை நன்றாக உணர்ந்தாள்தான் மல்லி… மயக்க நிலைக்குப் போய்க் கொண்டிருந்ந அந்த நொடியில் அவளது உணர்வுகள் சொன்ன செய்தியில்… உயிர் உருகித்தான் போனாள் அவள்…

முதல் முறை அங்கே வந்த பொழுது… அந்த நீச்சல் குளத்தின் அருகினில் மயங்கிய அவளைத் தாங்கிப் பிடித்ததும் இதே கரங்கள்தான்!!! தேவாவேதான்!!! சந்தேகமே இல்லை…

அவளேதான் அவன் வேண்டாம் என்று சொல்லிவிட்டு வந்தாள்… இப்பொழுது அவளேதான் அவன் நினைவுகளில் ஏங்கிக் கொண்டிருக்கிறாள்…

தேவாவைக் கைப்பேசியில் தொடர்புகொள்ள முயன்ற பொழுது… அந்த எண் உபயோகத்தில் இல்லை என்று வந்துவிட்டது… அவனைப் பற்றி சுமாவிடம் விசாரிக்கவும், அவளுக்குத் தயக்கமாக இருந்தது… எழுந்து ஒரு அடி வைக்கவேண்டும் என்றாலும்… அடுத்தவர் துணையை எதிர்பார்க்கும் நிலையில் இருக்கிறாள் அவள்… தனியே சென்று அவனை எப்படிப் பார்ப்பது?

தீபனுக்கு பொதுத் தேர்வுகள் தொடங்கியிருந்தது…. அதுவரை மருத்துவமனை… வீடு… பள்ளிக்கூடம் என மாற்றி மாற்றி அலைந்து கொண்டிருந்தவன்… முழுமையாகப் படிப்பதில் கவனம் செலுத்திக் கொண்டிருந்தான்…

அவளது அம்மாவும் விடுப்பு எடுக்க இயலாது… அவர் வேலை செய்யும் தனியார் பள்ளிக்கு சென்றாக வேண்டிய சூழ்நிலையில் இருந்தார்…

அவளது அப்பா மட்டும் அவளுக்குத் துணையாக வீட்டில் இருப்பார்… மகள் மேல் அளவுகடந்த பாசமும் அக்கறையும் இருந்தாலும்… அவரால் அதை வெளிக்காட்ட இயலவில்லை. மேலும், அவரால் சரிவர பேச இயலாத காரணத்தால்… புத்தகமும் கையுமாகவே இருப்பார்… மாலை பரிமளா வேலை முடிந்து வந்தவுடன்… அவர் நூலகம் சென்றுவிடுவார்.

பேச்சுத்துணைக்குக்கூட ஆளில்லாமல் தவித்த மல்லிக்குத் துணையாக அங்கே வந்து சேர்ந்தாள் சுபர்ணா… சுமாயாவின் நாத்தனார்… பூனாவில், பொறியியல் படித்துக் கொண்டிருப்பவள். விடுமுறையைக் கழிப்பதற்காக அண்ணனின் வீட்டிற்கு வந்திருந்தாள் அவள்.

சுமாவும்… விஜித்தும்… அலுவலகம் சென்றுவிடுவதால், வீட்டில் தனியாக இருக்கப் பிடிக்காமல் மல்லியுடனேயே, பகல் முழுதும் இருப்பாள் அந்த சுபர்ணா… அலட்டல் இன்றி… இயல்பாகப் பழகுவதால்… அவள் மல்லிக்கு ஒரு நல்ல தோழியாக ஆகிப்போனாள்.

*******************

லப் டப் என்ற இதயத்தின் ஒலி போன்று… தறியில் புடவை நெய்யும் ஓசை மட்டுமே இதமாக ஒலித்துக்கொண்டிருக்க, நிசப்தமாக இருந்தது மல்லியின் கிராமத்தில் அவர்களுக்குச் சொந்தமாக இருந்த அந்த வீடு…

அங்கே நிலவிய ரம்மியமான சூழ்நிலையை கலைப்பது போல அமானுஷ்ய குரலில்… “மல்லி! ஏய் மல்லி!” என்றவாறே அங்கே வந்த அம்மு… அங்கே புடவை நெசவு செய்து கொண்டிருந்த ஒருவனைச் சுட்டிக் காட்டி… அங்கே பார்… அவங்கதான் என்னோட ராஜா அண்ணா… அவங்ககிட்ட உன் தாத்தாவோட நோட் புக்கை கேளு…” என்று சொல்ல… அந்த திசையில் பார்த்தாள் மல்லி… நல்ல உயரமாக… முறுக்கேறிய தோள்களுடன்… கம்பீரமாக அங்கே ஒருவன் தறியில், நெய்து கொண்டிருக்க… அவனது முகம் மட்டும்… இருளில் இருப்பது போல்… அவளுக்கு சரியாகத் தெரியவில்லை… அவனது கண்கள் இரண்டும் வைரமென ஒளிர… அந்த முகம் கொஞ்சம் கொஞ்சமாக அம்முவின் முகமாக மாறிப்போனது…”

திடுக்கிட்டு எழுந்து உட்கார்ந்தாள்… மல்லி… விடியற்காலை மூன்று மணிதான் ஆகியிருந்தது… அருகில் தூங்கி கொண்டிருந்த அன்னையைப் பார்த்தவள்… நாள் முழுதும் உழைத்துக் களைத்திருக்கும் அவரைத் தொந்தரவு செய்ய மனமின்றி… விடியும் வரை அப்படியே அமர்ந்திருந்தாள்…

ஆம் சிறிது நாட்களாக அவளுக்குத் தோன்றாமல் இருந்த அம்முவைப் பற்றிய கனவுகள்… மறுபடி அவளை இம்சிக்கத் தொடங்கியிருந்தது… அதுவும் அன்றைக்கு இரவு அவளுக்கு வந்த அந்தக் கனவு… நன்றாகவே மனதில் பதிந்துபோனது.

***************************

அவளது காலில் ஏற்பட்ட எலும்பு முறிவு கொஞ்சம் கொஞ்சமாக சரியாகிக் கொண்டிருந்தாலும்… நன்றாக நடமாட முடியாமல்… தேவாவின் நினைவுகளுடன் துன்பமாக நகர்ந்தன அவளது நாட்கள்…

மேலும் துன்பம் சேர்க்கவென… அவளது அலுவலகத்திலிருந்து வந்திருந்தது அந்த மின்னஞ்சல்… அவள் வேலையில் நிரந்தரம் செய்யப்படவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்திருந்தனர்….

மிகவும் உடைந்துதான் போனாள் மல்லி…

மாலை சுமானா வீடு திரும்பிய பிறகு அவளை அழைத்த மல்லி… “என்ன சுமா… இப்படி ஒரு மெயில் அனுப்பியிருக்காங்க… உங்களுக்கு எதாவது தெரியுமா?” என்று கேட்க..

முதலில் என்ன சொல்லுவது என்று திகைத்த சுமா… பிறகு…”எனக்கு சரியாகத் தெரியல… மல்லி… ஆனால்… புதிதாக சிலரை வேலைக்கு அப்பாயிண்ட் செய்திருக்கிறார்கள்…” என்க…

தேவாவைப் பற்றி அறிந்து கொள்ளும் ஆர்வம் மேலிடக் கேட்டாள் மல்லி…”தேவா எப்படி இருக்கார்… சுமா? என்று…

அதற்கு ஒரு நொடி திகைத்தவள்… “தேவா இப்பொழுது அங்கே வேலை செய்யவில்லை. மற்றபடி அவரைப் பற்றி இனிமேல் என்னிடம் எதுவும் கேட்காதே…” என்று முடுத்துவிட்டாள் சுமா…

ஆடித்தான் போனாள் மல்லி…

அம்முவைப் பிரிந்து அவள் படும் துயரைத்தைக் காட்டிலும், நூறு மடங்கு துயரம் அவள் மனதை அழுத்த… சுமாவின் முன்னால் அழுதுவிடக் கூடாது என அவளது கண்ணீரை கட்டுப் படுத்த… போராடித்தான் போனாள் அவள். அதற்குமேல் சுமாவிடம் அவள் ஏதும் கேட்கவில்லை…

ஆனால் சுமாவே… “நானும் இனிமேல் அங்கே வேலை செய்யப் போவதில்லை… என்னை ராயல் அமிர்தாசிற்கு மாற்றி இருக்கிறார்கள்”… என்றுவிட்டு அங்கிருந்து சென்றாள்…

*******************

அடுத்த நாள் அவளது முத்துராமன் பெரியப்பா… தம்பியின் மகளுடைய உடல் நலத்தைப் பற்றி விசாரிக்கவென அங்கே வந்திருந்தார்… அவருக்கு நேரம் கிடைக்கும்போதெல்லாம் தவறாமல் வந்து அவளைப் பார்த்துச் செல்வார் அவர்.

ஆனால் இந்த முறை முக்கியமாக அவர் வந்திருப்பது அவளது திருமணத்தைப் பற்றிப் பேசத்தான் என்பது பிறகுதான் அவர்களுக்குத் தெரிந்தது…

முத்துராமன்தான் ஆரம்பித்தார்… “ஜகா… இந்த மல்லி பெண்ணுக்கு எப்பதான் கல்யாணம் பண்ணலாம்னு இருக்க?” என்று அவர் கேட்கவும்…

குளறலாக “பண்ணனும் ணா… உங்களுக்குத் தெரியாதா… என்னோட நிலைமை… இருப்பதை வைத்து செய்து கொடுக்கணும்” என்று ஜெகன் பதில் அளிக்க… அதற்கு மேல் அவர் பேசுவது சரியாகப் புரியாததால்…

தொடர்ந்த பரிமளா… “எங்க நிலைமைக்கு ஏற்ற மாதிரி எதாவது இடம் இருந்தால் நீங்களே பார்த்து சொல்லுங்கள் பெரியத்தான்… என்னோட பெரியப்பாவின் பேரனுக்கு இவளை எதிர் பார்க்கறாங்க… அனால் கொஞ்சம் நிறைய செய்து கொடுக்க வேண்டியதாய் இருக்கும்… அசலில் பார்த்தாலும் பிரச்சினை செய்வாங்களோன்னு பயமா இருக்கு…” என்று முடிதார்.

அதற்கு அவர்… “நம்ம மல்லிக்கு என்னம்மா… அவளோட பெருக்குத் தகுந்த மாதிரி அவள் மரகதமே தான்… அவளுக்குனு ஒரு நல்ல வரன்… அவங்களா கேட்டு வந்திருக்காங்க…” என்று சொல்ல…

அதில் அதிசயித்த பரிமளா… “அப்படியா… யாரு அத்தான் அவங்க? நம்ம சொந்தத்திலயா?” என்று கேள்விகளை அடுக்க…

“உங்கக்கா வசந்தாவோட பிறந்த வீட்டு வழியில தூரத்து சொந்தம்… நம்ம பக்கம்தான் மா… யாருன்னு கேட்டா நீங்க ஆடிப் போய்டுவீங்கமா…” என்க…

அதே நேரம் வாக்கர் உதவியுடன் தண்ணீர் குடிப்பதற்காக அங்கே வந்த மல்லி… “என்ன ஓவர் பில்ட் அப்பாக இருக்கே” என்று எண்ணிக் கொண்டாள் முழுவதையும் அவள் கவனிக்கவில்லை.

பெரியவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போது அங்கே இருக்கக்கூடாது என்பது அவர்களது பழக்கம்… அதனால் அங்கிருந்து சென்றுவிட்டாள்..

“ஐயோ! நீங்க சொல்வதை பார்த்தால் அவங்க ரொம்பப் பெரிய இடம் போலத் தோன்றுகிறதே… பையன் எதாவது சாப்ட்வேர் கம்பெனில வேலை செய்யறாரா என்ன?” என்று பரிமளா அதிர…

“நீ வேறம்மா… காஞ்சிபுரத்துல அருள்பரமேஸ்வரி கடை வச்சிருக்காங்கல்ல… அவங்க குடும்பம்…” என்க…

“அண்ணா!”

“அத்தான்”

ஒரு சேர அதிர்ந்தனர் ஜெகனும் பரிமளாவும்.

பரிமளாதான் தொடர்ந்தார்… “அவர்களையெல்லாம் இவருக்கத் தெரியுமே..கூட்டுறவு சொசைட்டியில பழக்கம்தான்… ரொம்ப பெரிய இடமாச்சே?”

“கொஞ்சம் மூச்சு விட்டுக்கோமா… அவங்க வீட்டு பெரிய மகன் வரதனோட பிள்ளைக்குத் தான் நம்ம மல்லியை கேட்கறாங்க… மாப்பிள்ளை பையன் யாருன்னு தெரியுமில்ல… ஊரு மொத்தம் ஜவுளி கடை வச்சிருக்காங்களே… அதோட ஓனர் ஆதி.. அவர்தான்” என்று முத்துராமன் முடிக்க… உண்மையிலேயே மூச்சு முட்டிதான் போனது பரிமளாவிற்கு…

“விளையாடாதீங்க அத்தான்… அவங்க கம்பனிலதான் நம்ம மல்லி… சம்பளத்துக்கு வேலைக்கு போகுது… அவங்க போய் மல்லியை கேக்கறாங்களா” என்கவும்…

நான்கு புறமும் மஞ்சள் தடவிய தாளை ஜகனிடம் கொடுத்த முத்துராமன்… “நன்றாகப் பார்… பையனோட ஜாதகம்… மல்லி ஜாதகத்தை அவர்களிடம் கொடுத்து விட்டேன்… நன்றாகப் பொருந்தி இருப்பதாகச் சொன்னார்கள்…

ஐந்து வருடமாகக் கல்யாணமே செய்து கொள்ள மாட்டேன் என்று பிடிவாதமாய் இருந்தவர்… மல்லியை எங்கேயோ பார்த்து பிடித்துப் போக… அவளைத்தான் கல்யாணம் செய்துகொள்வேன் என்று சொல்லிவிட்டாராம்…

 அவரோட அம்மா அப்பாவிற்கு… அவ்வளவு சந்தோசம்… நம்ம ஊர்த் தலைவர் மூலம் என்னிடம் வந்து பேசினாங்க… இதைவிட ஒரு நல்ல சம்பந்தம் மல்லிக்குக் கிடைக்கவே கிடைக்காது… இதைப் பேசி முடித்தால் ஒருவர் கூட உங்களிடம் பிரச்சினைக்கு வரமாட்டார்கள் ” என்று அடுக்கிக் கொண்டே போனார்…

அந்த ஜாதகத்தை பிரித்துப் பார்த்தார் ஜெகன்… (மணமகனின்) பெயர் என்ற இடத்திற்கு நேராக “தேவாதிராஜன்” என்று முத்து முத்தான அழகிய கையெழுத்தில் எழுதப்பட்டிருந்தது…