tik Final 1

புதுப்பிக்கப் பட்டு… அழகிய பொலிவுடன் திகழ்ந்த… மல்லியின் கிராமத்து வீட்டிற்கு அவளை அழைத்து வந்திருந்தான் ஆதி…

வீட்டின் உள்ளே… அடியெடுத்து வைத்ததும்… ஜிவ்வென்ற ஒரு உணர்வு மனதில் எழ… உடல் சிலிர்த்தது மல்லிக்கு… மகிழ்ச்சியில் கண்களில் நீர் கோர்க்க… ஆதியின் முகத்தைப் பார்த்தாள் மல்லி…

விரிந்த புன்னகையூடே… புருவத்தைத் தூக்கி… “எப்படி!” என்பது போல் அவன் அவளைப் பார்க்க…

“மாம்ஸ்!” என்றவாறு… அவனது கையில்… நெற்றியால் முட்டியவள்… அவளது கண்ணீரை அவனது சட்டையிலேயே துடைக்க… அதில்… அவளுடைய கண்ணீருடன் சேர்ந்து… வகிட்டில் வைத்திருந்த குங்குமமும்… அவனது சட்டையில் படிய…

“ஏய்! ஏண்டி இப்படி சட்டையை கறையாக்கற…  இதுதான் நீ எனக்குக் கொடுக்கும் ரிட்டன் கிஃப்ட்டா… நான் வேற இல்ல எதிர்பார்த்தேன்…” என்று மெல்லிய குரலில் ஆதி சொல்லிக்கொண்டிருக்கும்போதே…

வீட்டின்… “ரேழி” எனப்படும் பகுதியில் நின்றுகொண்டிருந்த… அவர்களை நோக்கி ஓடிவந்த  தீபன்… மல்லியை இடித்துத் தள்ளிக்கொண்டு…

“தாங்…யூ… மாம்ஸ்!”  என்றவாறு ஆதியை அணைத்துக்கொள்ள… மல்லியின் காதுகளில் புகை வரவில்லை அவ்வளவுதான்…

“அடப்பாவி! தீபா! இங்க ஒருத்தி நிக்கறது உன் கண்ணுக்கு தெரியல… இவங்கள போய் கட்டி பிடிச்சுக்கற… இது டூ மச்…”

“இவங்க எனக்கு மட்டும்தான் மாம்ஸ்! இனிமேல் நீ இவங்கள… அத்தான்…னே… கூப்பிடு…” என்று தீபனிடம் சீற…

“பாருங்க மாம்ஸ்… எங்க அக்காவுக்கு… எவ்வளவு பொறாமை!” என்ற தீபன்… மல்லியிடம் திரும்பி…

“நீ போ… அம்மா உனக்காக காத்துட்டு இருக்காங்க… நான் மாமா கிட்ட கொஞ்சம் பேசணும்… நீங்க திரும்ப போற வரைக்கும் நான் மாமா கூடவேதான் இருப்பேன் ” என்று மேலும் அவளை வெறுப்பேற்றுவதுபோல் சொல்லிவிட்டு… ஆதியின் கையை பிடித்து இழுக்க… அவனால்… ஆதியை அசைக்கக்கூட முடியவில்லை…

முறைத்துக் கொண்டு நின்றிருந்த மல்லியைப் பார்த்து… சிரிப்பை அடக்கவே முடியாமல்… “வா மல்லி… உள்ளே போகலாம்…” என்றவாறு அவளது கையுடன் தனது கையை கோர்த்துக்கொண்டு… மற்றொரு கையை… தீபனின் தோளில் போட்டவாறு… உள்ளே நுழைத்த ஆதியை… முற்றத்தில் நின்றவாறு பார்த்துக்கொண்டிருந்த… ஜெகனின் கண்கள் பணித்தது…

சில தினங்களுக்கு முன்புதான்… முத்துராமன் மூலமாக… அந்த வீட்டையும்… அவர்களது நிலங்களையும்… தீபனின் பெயரில்… வாங்கியிருந்தான் ஆதி…

மறுக்கவே வழியில்லாமல்… அவர்கள் நிரந்தரமாக அங்கேயே வந்துவிடவும் ஏற்பாடு செய்திருந்தான்… அனைத்தும் மல்லிக்குத் தெரியாமலேயே…

தீபனை முறைத்துக்கொண்டே மல்லி… உள்ளே செல்ல… வீடே பரிமளாவின் கைமணத்தில்… கமகமற்றுக் கொண்டிருந்தது… உடன்… அவளது வசந்தா பெரியம்மாவும்… இன்னும் சில பெண்களும் உதவிக்கு இருந்தனர்…

மகளின் மறுவீடு சடங்குடன் சேர்த்து… அவர்கள் அங்கே குடிவந்ததற்காகவும்… நெருங்கிய உறவினர்களுக்கு… சிறிய அளவில் விருந்திற்கு ஏற்பாடு செய்திருந்தார் பரிமளா…

அடுத்த நாள் அம்முவின் திதி என்பதனால்… லட்சுமி… வரதன் இருவரும் அங்கே வரவில்லை…

உள்ளே மல்லி நுழையவும்… அவளிடம் நலம் விசாரித்த பரிமளா… காஃபியை அவளிடம் கொடுத்து… ஆதிக்கு கொடுக்கச் சொல்லவும்… அதை எடுத்துக்கொண்டு… மல்லி கூடத்தில் உட்கார்ந்திருந்த… ஆதியை நோக்கிச் செல்ல… அங்கே தீபன் பேசுவது அவளுக்குத் தெளிவாக கேட்டது…

“ப்சு… இல்ல மாம்ஸ்… இந்த வீட்டை… நீங்க அக்காவின் பேரிலேயே வாங்கியிருக்கலாம்… பணத்துக்காகத்தான் அக்காவை உங்களுக்குக் கல்யாணம் செஞ்சு கொடுத்ததா… தப்பான பேச்செல்லாம் வரும் மாம்ஸ்! அப்பா… அம்மா ரொம்பவே பயப்படுறாங்க” என்று கவலைத் தோய்ந்த குரலில் சொல்லிக்கொண்டிருந்தான் தீபன்…

“ரொம்ப பெரிய மனுஷன் மாதிரி பேசற தீபன்…” என்று சிரித்துக்கொண்டே சொன்ன ஆதி… தொடர்ந்து… “இது நீ ப்ளஸ் டூ வில் நல்ல மார்க்குடன் பாஸ் பண்ணதுக்கு… என்னோட கிஃப்ட்னு வச்சிக்கோ…” என்கவும்…

“இல்ல மாம்ஸ்… இவ்ளோ பெரிய கிஃப்ட் எல்லாம் எனக்கு வேண்டாம்… ப்ளீஸ்! புரிஞ்சிக்கோங்க…”  என அவன் மறுக்க…

“உன் பெயரில் இந்தச் சொத்துக்களை நான் வாங்கினதுக்கு… முக்கியமான காரணம் இருக்குப்பா… மத்தவங்க பேசுவதை பற்றி கவலைப் படுவதை விட்டுட்டு… நீதான் அதைச் சரியா புரிஞ்சிக்கணும்…”

“உனக்கு எப்படியும் மெடிக்கல் சீட்… கிடைக்கும்னு எனக்குத் தெரியும் தீபா! அதுக்கு பிறகு… நீ அந்தப் படிப்பை… பணம் சம்பாதிக்க பயன் படுத்துவியா… இல்லை சேவையாக செய்வியா?” என்று ஆதி கேட்க…

ஒரு நொடி திகைத்தவன்… கண்டிப்பா சேவையாத்தான் செய்வேன் மாம்ஸ்” என்று தீபன் சொல்லவும்…

“அப்ப பணம் சம்பாதிக்க… என்ன செய்வ? தினசரி தேவையை கவனிக்கன்னு ஆரம்பிச்சு… பிறகு தேவை வளர்ந்துட்டே போகுமே!”

“அதனால… உன்னோட அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்யவே… இதையெல்லாம் உனக்குக் கொடுக்க முடிவு செய்தேன்…ப்பா…”

“அதனாலதான் சொத்துக்களை… உங்க அப்பா பெயரில் கூட வாங்காமல்… உன் பெயரில் வாங்கினேன்…”

“என் தங்கையின் லட்சியம்… ஒரு நல்ல பீடியாட்ரிசியன் ஆகணும்… இங்கே சுத்தி இருக்கற கிராமத்துல எல்லாம் சேவை செய்யணும் என்பதுதான்… அவளோட ஆசை நிறைவேறாமலே போயிடிச்சு… அதனால நீயாவது அதை செய்யணும்னுதான் நான் இதை செய்தேன்” என்று முடித்தான் ஆதி…

மறுத்து… எதோ சொல்லவந்த தீபனை தடுத்த மல்லி… “அதுதான் அத்தான் சொல்றாங்க இல்ல… இனிமேல் எதுவும் பேசாம… ஒழுங்கா படிக்கற வழியை பாரு” என அவனை மிரட்ட…

“அக்கா… ஓகே கா… நீங்க சொன்னா சரிக்கா…” என அவளை வாரினான் தீபன்…

“போ… போய்…  இந்த காஃபியை அம்மாகிட்ட சொல்லி சூடு பண்ணி எடுத்துட்டு வா” என்று அவனை அங்கிருந்து விரட்டியவள்…

“எதுக்காக மாம்ஸ்… இவ்ளோ செய்யறீங்க… நான் உங்களுக்கு என்ன செஞ்சேன்… எப்படி உங்களுக்கு என் மேலே லவ் வந்தது… நீங்க இப்படியெல்லாம் செய்யற அளவுக்கு… எனக்கு என்ன தகுதி இருக்குன்னே எனக்கு புரியல!” என மல்லி அடுக்கிக்கொண்டே போக…

அதில் கோபம் வரப்பெற்றவனாக… “ஒண்ணு மட்டும் புரிஞ்சிக்கோ மல்லி! எல்லாருமே பிறக்கும்போது… கையில் ஒண்ணும் கொண்டுவருவதில்லை… ஆனால் சில விஷயங்கள் அவங்க… மரபணுக்களிலேயே இருக்கும்… ‘குல வித்தை… கல்லாமல் பாகம் படும்’ னு கேள்விப்பட்டிருக்கியா?” (இங்கே குலம் என்பது ஜாதி எனப் பொருள் படாது… குடும்பம் என எடுத்துக்கொள்ளலாம்)

“பாட்டு… பரதம்… போல் நெசவு… விவசாயம் இதெல்லாம் கூட கலைகள்தான்… அது வழிவழியாக நம்ம ரத்தத்திலேயே கலந்திருக்கும்… அதுதான் உன்னுடைய இந்தப் பட்டு நெசவு ஆர்வத்திற்கும் காரணம்… நீ முதல் முதலில் டிசைன் செய்த புடவைக்கு… இப்ப என்ன வரவேற்புன்னு… உனக்குத் தெரியுமா?”

“அதனால் தேவை இல்லாமல்… தாழ்வு மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளாதே!” எனச் சொன்னவன்…

“எல்லாத்துக்கும் மேல… உன்னிடம் இருக்கும் மனித நேயம்… என்னை ரொம்பவே… உன் பக்கம் இழுத்துடிச்சு மல்லி… அதைவிட…  நீ என் வாழ்க்கையில் வராமல் போயிருந்தால்… என் மனதில் எரிஞ்சிட்டிருந்த தீ… என்னை முழுசா கொன்றிருக்கும் மல்லி… புரிஞ்சிக்கோடி… இனிமேல் இப்படி லூசுத்தனமா பேசாதே…” என மல்லியிடம் பொறுமையாக எடுத்துச் சொன்னான் ஆதி…

அவன் சொன்னவற்றை கேட்டுக்கொண்டு… கண்களில் நீர் கோர்க்க நின்றிருந்தவளை… “அக்கா! அம்மா உன்னை கூப்பிடுறாங்க…” என்ற தீபனின் குரல் கலைக்க…

அவசரமாகச் சுற்றும் முற்றும் பார்த்தவள்… ஆதியின் உயரத்திற்கு… எழும்பி… அவனது கன்னத்தில் அழுந்த… தனது இதழ் பதித்து… அங்கிருந்து ஓடிப்போனாள் மல்லி…

அவளது செயலில் அதிர்ந்தவன்… அவளைப் பின்தொடர்ந்து உள்ளே சென்றான்… ஆதி…

உறவினர்கள் ஒவ்வொருவராய்… வந்து சேரவும்… அனைவரின் நலம் விசாரிப்பு… அரட்டை என நேரம் செல்லவும்…

அவளுடைய பெரியம்மா… அத்தைகள்… மற்ற தோழிகள் புடைசூழ… புன்னகை முகமாக வீட்டையே இரண்டு படுத்திக்கொண்டிருந்த மல்லியை விட்டு… அவனது கண்களை விலக்கமுடியாமலும்… காதலில் கட்டுண்டு தவிக்கும் தன் நிலையை அவளிடம் விளக்கமுடியாமலும்… தவித்துத்தான் போனான் ஆதி…

பின்பு விருந்து முடிந்து… அன்று மாலையே வீடுதிரும்பினார் ஆதி… மல்லி… இருவரும்…

அடுத்த நாள்… அம்முவிற்கு… படையலுடன் திதி கொடுத்தனர்… வழக்கம் போல… ஆதியின் சித்தப்பா குடும்பமும்… அத்தையின் குடும்பமும் அங்கே வந்து… திதியை முடித்துவிட்டுச் சென்றனர்…

திருமணம் ஆகாமல்… பெண்கள் இறந்துபோனால்… புத்தாடை ஒன்றைப் படைத்தது… அவர்களுடைய வயதில் இருக்கும் யாராவது ஒரு பெண்ணிற்கு… கொடுப்பது… அவர்களது குடும்ப வழக்கம்…

ஆனால்… அதற்கு மேலும்… அன்றைய தினத்தில்… அம்முவின் பெயரில் நடத்தி வரும் ட்ரஸ்ட்டின் மூலம்… வறுமை நிலையில் இருக்கும் பெண்களின் படிப்பிற்கென… உதவி செய்வதை… லட்சுமி வழக்கமாக்கியிருந்தார்…

அதன் படி அந்த வருடம்… திலகாவிற்கு செவிலியர் படிப்பிற்கும்… வனிதாவுக்கு… பிசியோதெரப்பி… படிக்கவும்… ஏற்பாடு செய்திருந்தான் ஆதி… மேலும் பலருக்கும் உதவிகள் செய்திருந்தனர்…

இது அனைத்தும்… மல்லி கொஞ்சமும் எதிர்பாராதவை… மொத்தமாக உருகிக் கரைந்து … கண்ணனிடம் பித்தான ஆண்டாளின் நிலையில் இருந்தாள் மல்லி…

அடுத்து வந்த நாட்களில்… ஆதியின் சித்தப்பா… மற்றும் அத்தை என… ஒவ்வொருவர் வீட்டிலும்… விருந்துக்கு என அழைக்கவும்… வரதனுக்காக… ஆதி… மல்லி… இருவரும் செல்லவேண்டியதாக ஆகிப்போனது…

மேலும் மல்லியின் உறவினர்கள் வேறு… அவர்களை விருந்துக்கு அழைத்திருந்தனர்…

லட்சுமியின் வற்புறுத்தலால்… சிலதினங்கள்… முழுமையாக விடுமுறை எடுத்துக்கொண்டு… அய்யங்கார்குளம் வீட்டில் தங்கியிருந்தவாறு…  எல்லோர் வீட்டிற்கும் விருந்திற்கென சென்றுவந்தனர் ஆதியும்… மல்லியும்…

ஒரு நாள் மாலை… வானம் மெல்லிய மழைத் தூறல்களை வாரி இறைத்துக்கொண்டிருக்க… விண்ணில் வானவில் தோன்றி மனதைப் பறித்தது…

வாயில் திண்ணையில்… அதில் இருந்த தூணை… கட்டிப்பிடித்தவாறு அமர்ந்து… அந்த மழையில் லயித்திருந்த மல்லியின் அருகில்… அவளை உரசியவாறு… நெருங்கி வந்து… ஆதி உட்காரவும்…

கூச்சத்தில் நெளிந்தவாறு மல்லி… “இது… உங்க சீ ஷோர் பங்களா இல்ல… கிராமம்… யாராவது பார்த்தால்… முகத்துக்கு நேராகவே பேசி… நம்மை ஒரு வழி செஞ்சிருவாங்க…!” என்றவாறு… அங்கிருந்து நழுவ முயல…

அவளால் அங்கிருந்து செல்ல இயலாதவாறு ஆவது கையை இறுகப் பிடித்தவன்… “இருட்ட ஆரம்பிச்சுடுச்சு மல்லி… தூறல் வேற போடுது… இனிமேல் ஒரு ஈ… காக்காய் கூட இங்கே வராது…’ என்று சொல்லி… ஆதி விஷமமாகச் சிரிக்கவும்…

பய பந்து அவளது மனதில் உருள… பேச்சை மாற்ற எண்ணி… “நாளைக்கு உங்க பர்த்டே இல்ல மாம்ஸ்? பழசையெலாம் மறந்து… இனிமேலாவது நாம அதைக் கொண்டாடலாமா?” என்று மல்லி கேட்கவும்…

“சரி… கொண்டாடலாம்… ஆனால் நீ எனக்கு என்ன கிஃப்ட் கொடுக்க போற?” தீவிரமாய் ஆதி கேட்க…

“என்ன வேணாலும் கொடுக்கறேன்… உங்களுக்கு என்ன பிடிக்கும் சொல்லுங்க?” என்று அவள் அப்பாவியாய் சொல்லிவிட…

“அதைத்தான் சொன்னேன்… எனக்கு என்ன பிடிக்கும்னு… உன்னைக் கேட்டல் குடுப்பியா மல்லி…” என ஆதி சொல்லவும்…

அதில் இருந்த உள்குத்து புரியாமல் மல்லி… “நிச்சயமா கொடுப்பேன் மாம்ஸ்!” என்க…

அவன் அடக்கப்பட்ட சிரிப்புடன்… “அப்படியா… நிஜமாவே உன்னைக் கேட்டல்?” என அவன் விடாமல் அவளை வம்பிழுக்க…

அவன் சொன்னதன் அர்த்தம் புரிந்து… பேச்சற்றுப் போனாள் மல்லி…

அந்த சமயம் பூ விற்கும் பெண்… அங்கே வரவும்… மல்லியை விட்டு விலகி உட்கார்ந்தான் ஆதி…

எதிர் புறம் இருந்த சிறிய திண்ணையில்… தனது பூ கூடையை வைத்தவள்… மல்லியை நோக்கி…

“அக்கா… மழை வலுக்கும் போல இருக்கு… நான் இங்கே நின்னுக்கட்டுமா…” என்று கேட்க…

“அதனால என்ன… மழை விட்டதும் போம்மா… பரவாயில்லை!” என மல்லி சொல்ல…

“தேங்க்ஸ் கா” என்றவள்… “ப்சு… இன்னும் நிறைய பூ இருக்கு… இதுக்கு மேலே யாரு வாங்குவாங்கனே தெரியல… சீக்கிரம் போய்… நாளைக்கு டெஸ்டுக்கு படிக்கணும் வேறே…” என அந்தப் பெண் புலம்ப…

ஆதி… மல்லியிடம்.. “நீ வேணா கொஞ்சம் பூ வாங்கிக்கோ மல்லி” என்க…

“ஜாதி பூ இருக்கா…” என மல்லி இழுக்கவும்…

“அனு… அதுதான்…க்கா… என் பேரு” என்றாள் அவள்…

புரை ஏறியது ஆதிக்கு… மல்லி அவனை எரிக்கும் பார்வை பார்த்துவிட்டு… பூ கூடையைப் பார்க்க… அதில் மல்லிகைப் பூ மட்டுமே இருக்கவும்…

“மல்லிப்பூ மட்டும் தான் இருக்கா?” என மல்லி கேட்க…

“ஆமாம் கா… மல்லி மட்டும்தான் கொண்டுவந்தேன்” என்றாள் அந்த அனு…

“மொத்தமா… எவ்ளோ பூ இருக்கும்?” என ஆதி கேட்கவும்…

“பத்து… பதினோரு முழம் இருக்கும் ணா” என அவள் சொல்ல…

“முறையையே மத்தறியேம்மா அனு.. அவ உனக்கு அக்கா…னா நான் அண்ணாவா?” என அவன் கேட்கவும்…

அதற்கு… “அப்ப… நான் உங்களை மாமான்னு கூப்பிடவா” என அனு கேட்ட அடுத்த நொடி…

“இல்ல… நீ என்னை அண்ணின்னு கூப்பிடு…” என்றுவிட்டு… மல்லி ஆதியை நோக்கி கண் சிமிட்ட… “அடிப்பாவி” எனச் சத்தம் வராமல் உதட்டசைவில் சொன்ன ஆதி “மொத்த பூவும் எவ்ளோன்னு சொல்லு” என்று அணுவைக் கேட்க…

ஆச்சரியத்தில் விழி விரித்த அனு…  “அண்ணா…மல்லியை மொத்தமா… நீங்களே எடுத்துக்கப் போறிங்களா என்ன?” என்று கேட்கவும்…

மல்லியைப் பார்த்துக்கொண்டே… “ஆமாம்… இன்றைக்கே மல்லியை மொத்தமா எடுத்துக்கலாம்னுதான் பாக்கறேன்” என்று  இரு பொருள்பட ஆதி சொல்ல… மல்லியின் முகம் அந்தி வானம் போன்று சிவந்துபோனது…

அதற்குள் மழை நின்றிருக்க… அந்தப் பூவிற்கு உண்டான விலையைக் கொடுத்து… ஆதி பூவை வாங்கவும்… அந்த அனு அங்கிருந்து சென்றுவிட…

ஆதி சொன்னதுபோலவே… மல்லியை கைகளில் அள்ளிக்கொண்டவன்… உயிரென அவளை மொத்தமாக தனக்குள் எடுத்துக்கொண்டான்…

வாழ்க்கை… புதிய பரிணாமத்தில்… அவர்களுக்காக அழகான தொடக்கத்தை கொடுத்திருந்தது…