TK 41

TK 41

அத்தியாயம் – 41

மறுநாள் காலைபொழுது அழகாக விடிந்தது..

கிழக்கே கதிரவன் தன்னுடைய பயணத்தைத் துவங்கிட அந்த வீட்டின் தோட்டத்தில் நடை பயின்று கொண்டிருந்தாள் மினி. வயிறு நன்றாக மேடிட்டு இருக்க, “பேபிமா காபி குடிக்க வா..” என்று வீட்டின் உள்ளிருந்து குரல் கேட்டது..

“ம்ம் இதோ வரேன்..” என்று மெல்ல நடந்து ஹாலில் போய் அமர்ந்தவள், “இன்னும் என்ன பண்ற..” சிணுங்கலுடன் கேட்க, “ம்ம் வந்துட்டேன் வந்துட்டேன்..” என்று சமையலறைக்குள் இருந்து வெளிப்பட்டான் மதன்.

அவன் கையில் காபி கப்புடன் வரவே, “மதன் நீ ரொம்ப அழகாக இருக்கிற..” அவனைப் பார்த்து குறும்புடன் கண்ணடித்தாள் மினி.

“தேங்க்ஸ் பேபிமா..” என்றவன் “என்னோட பேபி சமத்தாக காபி குடிச்சிட்டு போய் ரெடியாகி வருவீங்களாம், நம்ம இருவரும் சேர்ந்து ஹாஸ்பிடல் போவோமாம்..” என்றதும் அவன் நீட்டிய காபியை எடுத்து குடித்தாள்

“சாப்பாடு ரெடி ஆகிருச்சு பேபி.. நீ சீக்கிரம் குடிச்சிட்டு கிளம்பு..” அவன் அதட்டல் போட, “ப்ளீஸ்டா காபி குடிக்க விடு..” அவனின் தாடையைப் பிடித்து அவள் செல்லம் கொஞ்சினாள்..

“இந்த மாதிரி நேரத்தில் என்னோட அம்மா இருந்தால் உன்னை எவ்வளவு பத்திரமாக பார்த்துப்பாங்க தெரியுமா?” தாயின் நினைவில் நின்றவனின் கையை பிடித்தாள் மினி..

அவன் திரும்பி அவளின் முகம் பார்க்க, “உன்னைவிட என்னை யாரும் இந்தளவுக்கு பாதுக்காப்பாக பார்த்து கொள்ள முடியாதுடா..” என்றவள் புன்னகைக்க அவளின் நெற்றியில் இதழ் முத்தமிட்டான்.

“சரி மதன் நீ சீக்கிரம் கிளம்பு.  உனக்கு டாக்டர் கிட்ட செக் பண்ணும் இல்ல. பேபி வேற பையனா? பொண்ணா? என்று தெரியல.” சீரியஸாக முகத்தை வைத்துகொண்டு சொன்ன மனைவியை முறைத்த மதன், “போக்கிரி”  திட்டிவிட்டு எழுந்துகொள்ள உதவி செய்தவன்,

“சீக்கிரம் கிளம்புடா. டாக்டர் கிட்ட பத்து மணிக்கு அப்பாயின்மென்ட்.” என்றவன் சொல்ல, “ம்ம்” என்றவள் அறைக்குள் சென்று மறைந்தாள்.

மதனுக்கு – மினிக்கும் திருமணம் நடந்து முடிந்தது. அவளுக்கு இது ஏழாவது மாசம். அவன் தோளில் முன்னேறினாலும் அவனுக்கு என்று இருக்கும் ஒரே உறவு மினி மட்டுமே. அவளை சுற்றி தன்னுடைய வாழ்க்கை வட்டத்தை மாற்றிக்கொண்டான் மதன்.

இருவரும் மனமார காதலித்து திருமணம் செய்ததாலோ அல்லது மதனின் வாழ்க்கை முன்னாடியே தடுமாறி சென்றதுதான் இப்பொழுது அவனின் வாழ்க்கை நன்றாக அமைந்ததோ இந்த கேள்விக்கு இறைவன் மட்டுமே பதில் சொல்ல வேண்டும்.

மினிக்கும் அவளை தவிர வேறு யாரையும் தெரியாது. அவனுக்கும் அவள் மட்டுமே உலகம். இருமனம் ஒன்றிணைந்த பின்னால் அவர்களின் வாழ்க்கை தெளிந்த நீரோடை போல சென்றது. இன்றைக்கு மினிக்கு செக்கப் நாள் அதற்கு அவளை அழைத்து செல்வது பற்றிதான் இதுவரை மதன் பேசிக் கொண்டிருந்தான்.

அவள் சீக்கிரம் தயாராகி வரவே இருவரும் சேர்ந்து ஹாஸ்பிடல் சென்றனர். மினிக்கு செக் பண்ணி முடித்துவிட்டு வெளியே வரும் பொழுதுதான் அவளின் கையிலிருந்த ஃபைலை கவனித்தவன், “இந்த ஃபைல் எதற்கு எடுத்துட்டு வந்த?” கோபத்துடன் அவளை முறைத்தான் மதன்.

அவனை கொஞ்சும் பார்வை பார்த்த மினியோ, “நான் வேண்டும் என்று எடுத்துட்டு வரல மதன். ” என்றதும், “சரி விடு..” என்றவன் காரில் ஏறினான்.

“மதன் ஒரு புக் வாங்கணும். வா மதன் மாலுக்கு போய் வாங்கிட்டு போகலாம்” என்றழைக்க “ம்ம் சரி போலாம்..” என்று இருவரும் மாலுக்குள் நுழைந்தனர். 

அவள் தேடிய புத்தகத்தை வாங்கிட்டு, “மினி ஜூஸ் குடிச்சிட்டு வீட்டுக்குள் போலாம்..” என்றதும் அவள் சரியென தலையசைத்தாள். 

அவளுக்கு ஜூஸ் வாங்கிக் கொடுத்தவனின் கைபேசி சிணுங்கிட, “இருடா ஒரு முக்கியமான போன் பேசிட்டு வரேன்” என்று ஜூஸ் கடையைவிட்டு வெளியே சென்றவன் போன் பேசி கொண்டிருந்தான்

கிட்டத்தட்ட மூன்று மணிநேரம் பயணத்திற்கு பிறகு டெல்லி சென்றடைந்தனர். மறுபடியும் ஏர்போர்ட்டில் செக்கிங் எல்லாம் முடித்துவிட்டு ஹோட்டல் ரூமிற்கு வந்து சேர்ந்தனர்..

ஹோட்டலுக்குள் நுழைந்தும் மீண்டும் படுக்கையில் விழுந்த ஜெயா ஆழ்ந்த உறக்கத்திற்கு செல்ல அவளை இமைக்காமல் பார்த்துக்கொண்டே அவளின் அருகில் அமர்ந்திருந்தான் பிரபா..

இந்த மூன்று வாரத்தில் அவளிடம் அதிகமான மாற்றங்கள். எதற்கும் கலங்காத பெண்ணாகவே அவளை பார்த்திருக்கிறான் பிரபா. அன்று அவனிடம் எதற்காகவும் கலங்கமாட்டேன் என்று சொன்ன ஜெயா அன்று அவனின்  தோள் சாய்ந்து அழுதது அவனின் மனதை கொஞ்சம் மாற்றியது..

அதுவரை அவளின் மனம் மாறவேண்டும் என்று காத்திருந்தான் பிரபா. அவளின் மனமாற்றம் அவளின் கண்ணீர் வழியாக உணர்ந்தவனுக்கு ஒரு விஷயம் மட்டும் தெளிவாக புரியவில்லை. அவள் ஏன் அழுதாள்? என்ற கேள்விக்கு அவனிடம் விடையில்லை..

அவனின் மனதில் இருந்த கேள்வியை அவன் கேட்ட கேள்விக்கு அவள் உடனே பதில் சொல்லிவிட அவனின் மனதில் இருந்த கலக்கம் தேவையற்றது என்று உணர்ந்தான். அதன்பிறகு வந்த நாட்களும் அவர்களுக்கு இனிமையை பரிசளிக்க இதயம் லேசாக இருப்பது போல உணர்ந்தான்.

அவளுக்காக நேரம் ஒதுக்க வேண்டும் என்ற முடிவு செய்து இந்த ஒருவாரமாக இரவு பகலும் கண்முழித்து வேலை பார்த்தான். அந்த நேரத்தில் ஒரு முக்கியமான ப்ராஜெக்ட் சைன் பண்ண டெல்லி போகவேண்டிய கட்டாயம் ஏற்படவே அவளை தனித்து விட மனம் இல்லாமல், மாமாவிடம் சொல்லிவிட்டு அவளையும் உடன் அழைத்து வந்துவிட்டான்.

தன்னிடம் எந்த விளக்கமும் கேட்காமல் தன்னுடன் இவ்வளவு தூரம் வந்த பொழுதே அவளின் மன மாற்றத்தை புரிந்து கொண்ட பிரபா, ‘இந்த ப்ராஜெக்ட் சைன் பண்ணிட்டு அவளை வெளியே கூட்டிட்டு போகணும்.’ என்று முடிவெடுத்தான்..

தன்னருகே குழந்தை போல தூங்கும் மனைவியை பார்த்துக்கொண்டே இருந்தவன் பிறகு எழுந்து குளிக்க சென்றான்.. அதற்குள் பொழுது நன்றாக விடிந்துவிட தூக்கம் களைந்து எழுந்தாள் ஜெயா. 

அவள் எழும் பொழுது பிரபா மீண்டும் வெளியே கிளம்பிக் கொண்டிருக்க, “பிரபா இப்போ எங்கே கிளம்பிட்ட..” என்றவள் தூக்க கலக்கத்துடன்.

“மொசக்குட்டி டைம் இல்ல. நான் இங்கே ஒரு ப்ராஜெக்ட் சைன் பண்ண வந்தேன். அந்த மீட்டிங்க்கு நான் கிளம்பிட்டு இருக்கேன்..” விளக்கம் கொடுக்க, “நீ சைன் பண்ண போற.. அப்புறம் நான் எதற்கு உன்கூட” என்றவள் கேள்வியாக புருவம் உயர்த்தினாள்.

“ம்ம் பிரபாவுக்கு லூஸ் கிளம்பிருச்சு.. அதன் உன்னையும் சேர்த்து இழுத்துட்டு வந்தேன்..” அவன் சிரிக்காமல் சொல்ல அவனை முறைத்தாள் அவள்..

“சரி அதை விடு..” என்றவன் “சீக்கிரம் எழுந்து குளிச்சிட்டு இங்கே இருக்கிற மாலுக்கு போய் பர்சேஸ் முடித்துவிடு மலர். நான் மீட்டிங் முடிச்சிட்டு வரும் பொழுது மறக்காமல் மாலுக்கு  வந்து உன்னைப் பிக்கப் பண்ணிக்கிறேன்..” என்றான் அவளுக்கு வேலை கொடுத்தான்..

அவனையே இமைக்காமல் பார்த்தவளோ, “என்ன ஊர் தெரியாத ஊரில் கொண்டுவந்து விட்டுட்டு பர்சேஸ் பண்ணுன்னு சொல்ற.. ஆமா நான் என்ன பர்சேஸ் பண்றது..” என்று அவனை முறைத்துக்கொண்டே விளக்கம்  கேட்டாள்..

“எனக்கு பேண்ட் சர்ட், உனக்கு ஜீன்ஸ், டாப்ஸ், குர்தீஸ் எல்லாம் வாங்கிட்டு எனக்கு போன் பண்ணுங்க மேடம்..” என்றவன் குறும்புடன் கண்ணடித்தான்..

அவனின் குறும்பு மின்னும் புன்னகை அவளை கவர, “நீ என்ன நாடுவிட்டு நாடு கடத்த பார்க்கிற..” மணிப்புறா போல தலையை சரித்து குறும்புடன் கேட்க, “அந்த ஐடியா இது மாதிரி இல்ல. இனிமேல் கொஞ்சம் யோசிக்கணும்..” சிந்தனையுடன் கூறினான்

அவனின் சிந்தனை முகத்தைக் கவனித்தவள், “ஏய் கேடி நீ செய்தாலும் செய்வ..” என்றவள் எழுந்து குளியலறைக்குள் சென்று மறைந்தாள்.. அவள் தயாராகி வர, “மலர் போலாமா?” என்றவன் கேட்க, “ம்ம்..” அவனுடன் கிளம்பிவிட்டாள். 

அவன் ஆபீஸ் செல்லும் வழியில் அவளை அங்கிருந்த பெரிய மால் முன்னே இறக்கிவிட, “நான் பர்சேஸ் முடிச்சிட்டு போன் பண்றேன் பிரபா..” என்றவள் சொல்ல, “கொஞ்சம் கேர்ஃபுல் மலர். தெரியாத ஊர். கொஞ்சம் கவனமாக இரு..” அவன் அக்கறையுடன் சொல்ல, “ம்ம்..” என்று புன்னகைத்தாள் ஜெயா..

அவன் சென்ற பின் மாலுக்குள் நுழைந்த அங்கிருந்த துணி கடைக்குள் நுழைந்தவள் பிரபாவின் நிறத்திற்கு தகுந்தார்போல் சர்ட் தேர்வு செய்து கொண்டிருக்க அந்த கடைக்கு வெளியே வரண்டாவில்  நின்று போன் பேசிக்கொண்டிருந்தான் மதன். 

அவன் போன் பேசிவிட்டு திரும்ப எதிரே வந்த பெண்ணைப் பார்த்ததும் சிலையென நின்றுவிட, “மதன்..” என்ற அழைப்புடன் ஜூஸ் கடையைவிட்டு வெளியே வந்தாள் மினி.

அவன் சிலையென நின்றிருப்பதைக் கவனித்தவளோ அவன் பார்வை சென்ற திசையில் தன் பார்வையை செலுத்தினாள். அங்கே நின்றிருந்த பெண்ணைப் பார்த்ததும், “மதன் இவங்க யாரு?” அவனிடமே கேட்டான்.

அவனைப் பார்த்த அந்த பெண்ணோ அவனை நெருங்கி வந்தவளின் பார்வை அவன் மீது நிலைக்க மினியின் பார்வையோ அவளின் மீது கேள்வியாக படிந்தது.  அவளை அடையாளம் கண்டு கொண்டாள் மினி..

 ‘மதன் எதற்கு சிலையாகி நிற்கிறான்?’ என்று புரியாமல் அவள் நின்றிருக்க, அவளின் குரல்கேட்டு நடப்பிற்கு வந்த மதன், “என்னோட முதல் மனைவி இந்துமதி” அவளை அவன் மினிக்கு அறிமுகம் செய்துதான் தாமதம், 

“வாவ்..” சந்தோஷத்தை வெளிபடுத்தியவள் அந்த பெண்ணை நோக்கி செல்ல, “மினி எங்கே போற..” அவளின் பின்னோடு சென்றான் மதன்.

இந்துமதி மினியை புரியாத பார்வை பார்க்க, “ஹாய் இந்துமதி. நான் மின்மினி. மதனோட  மனைவி..” என்றவள் குறும்புடன் கண்சிமிட்டிவிட்டு மதனின் தோள் சாய்ந்தாள்.

அவள் சொன்னதைக்கேட்ட இந்துமதி மதனைப் பார்த்துவிட்டு பதில் பேசாமல் தலைகுனிந்து நிற்க, “உங்களோட லைப் எப்படி இருக்கிறது?” அக்கறையுடன் மினி அவளை விசாரிக்க மதன் மெளனமாக இருந்தான்.

“ம்ம் நல்ல இருக்கு..” என்று சொல்லும் பொழுதே அவளின் கண்கள் கலங்க அது மினியின் கண்களுக்குத் தப்பவில்லை..

“என்னங்க உங்களோட காதலனும் உங்களை கைவிட்டுவிட்டானா? இல்ல நீங்க அவரை பிடிக்கல என்று டைவர்ஸ் பண்ணிட்டு வந்துட்டீங்களா?” என்றவளின் கேள்விக்கு அவளிடம் பதில் இல்லை. 

அவள் கண்களில் கண்ணீர் தேங்கி நிற்க அவளைப் பார்க்கவே பாவமாக இருந்தது மினிக்கு. ஆனால் அவள் யாருக்கு தண்டனை கொடுத்துவிட்டு சென்றாள் என்று நினைக்கும் பொழுது அவளின் உள்ளம் கொதித்தது.

“மினி..” அவன் அவளை அதட்ட, “நீ சும்மா இரு. நான் இன்னைக்கு பேசணும். இவள் எதனால் உன்னை விட்டுவிட்டு போனாள் என்று எனக்கு தெரியனும்..” என்றவள் இந்துமதியின் பக்கம் திரும்பினாள்.

“எந்த தவறும் செய்யாத இவர் கொடுக்கிற ஜீவனாம்சம் எல்லாம் வைத்து நீ சந்தோஷமாக வாழ நினைத்தாய் இல்ல. இப்போ என்ன ஆச்சு? எல்லாம் ஒட்டுமொத்தமாக போச்சா?” கோபத்துடன் கேட்டாள்.

அப்பொழுது எதர்ச்சியாக கண்ணாடி திரும்பிய ஜெயா அங்கே நின்றிருந்த மினியைப் பார்த்ததும் திடுக்கிட்டாள்.. அவள் நிறைமாத கர்ப்பிணியாக நின்றிருப்பதை கண்டதும் அவளின் உலகமே தலைகீழாக மாறியது.

‘மினிக்கா மாசமாக இருக்காங்க..’ என்ற அதிர்வுடன் அவள் கடையைவிட்டு வேகமாக வெளியே வந்தாள். அழகாக சேலை கட்டி நெற்றியில் குங்குமம், கழுத்தில் பொன்தாலி மின்ன நின்றவளை பார்த்தும், ‘இவங்களுக்கு திருமணம் ஆகிவிட்டதா?’ அவள் மீண்டும் அதிர்ந்து நின்றாள்.

அங்கே நின்றிருந்த ஜெயாவை மதனோ மினியோ கவனிக்கவே இல்லை. அதே நேரத்தில் அக்காவை தேடிக்கொண்டு சங்கவி மற்றும் தர்மனும் அருகில் இருந்த போன் கடையிலிருந்து வெளியே வந்தனர்.. 

மதன் நிற்பதை முதலில் பார்த்த சங்கவி, “அப்பா அத்தான்..” என்றாள் புன்னகையுடன் சொல்ல, “என்னது மாப்பிள்ளையா?” என்றவர் வேகமாக திரும்பிப் பார்த்தார். ஆனால் அவரின் கண்ணில் முதல் விழுந்தது மினிதான்..

“சங்கவி உன்னோட மின்மினி அக்கா எங்கே நிற்கிற பாரு..” என்றவர் தன்னுடைய சின்ன மகளை அழைத்துக்கொண்டு அவர்களின் அருகில் சென்றார்..

அவள் சொல்வது போலவே இந்துமதியின் வாழ்க்கை சின்னாபின்னமாகி இப்பொழுதுதான் பழையது எல்லாம் மறந்து கொஞ்சம் நடமாட ஆரம்பித்து இருக்கிறாள். அவள் விரும்பிய காதலன் அவளை தேவைக்கு மட்டும் யூஸ் பண்ணிவிட்டு வேறு ஒரு பெண்ணைப் பார்த்து திருமணம் செய்து கொண்டான்.

கடைசியில் சொந்தம் பந்தம் எல்லாம் தொலைத்து தனிமரமாக மீண்டும் வீடு திரும்பிய மகளை இந்த அளவிற்கு தேற்றி கொண்டு வந்ததே அவளின் அப்பா தர்மன் மற்றும் தங்கை சங்கவிதான் அதையெல்லாம் நினைத்தவளின் கண்கள் கலங்கியது..

“யாருக்குமே கெடுதல் நினைக்காத என்னோட மதனை நீ வேண்டாம் என்று சொல்லி இருக்கிற.” என்றதும் அவள் தலைகுனிந்து நிற்க, “பட் நீ வேண்டாம் என்று சொன்னதால் தான் என்னோட மதன் எனக்கு கிடைத்தார். அதுக்கு நான் உனக்கு பெரிய தேங்க்ஸ் சொல்லணும் இந்துமதி..” மதனின் கரங்களுடன் தன் கரங்களைக் கோர்த்துக் கொண்டாள்.

அதை கவனித்த இந்துமதி மெளனமாக நிற்க, “விவாகரத்து என்ற முடிவு எப்பொழுது எடுக்கணும் தெரியுமா?” மினியின் குரல் அவரின் காதில் விழ, “இங்கேயே நில்லு.. அவள் பேசி முடிக்கட்டும்..” என்று சின்ன மகளை அவர் தடுக்க, “அப்பா அக்கா..” என்றாள் சங்கவி

“உங்க அக்காவிற்குதான் அவள் புத்திமதி சொல்ற..” மகளைக் கடிந்துகொண்டவர் தூரத்தில் நின்று மினி பேசுவதை கவனித்தார்.

“இனிமேல் இவனோடு வாழவே முடியாது என்ற கட்டத்தில் தான் ஒருவர் அந்த முடிவிற்கு வரணும்.. தன்னோட சுயநலத்திற்காக தெரிந்தே மற்றவரின் நிம்மதியைக் கெடுக்கக்கூடாது..” என்றவள் எதையோ நினைத்துவிட்டு மீண்டும் தொடர்ந்தாள்

“உன்னை மாதிரியே ஜெயாவும் இருந்திருந்தால் இன்னைக்கு பிரபாவோட வாழ்க்கையே திசை மாறி போயிருக்கும்.. அதிர்விலிருந்து வெளியே வந்த ஜெயா அவள் பேசுவதைக் கவனித்தாள்.

“கணவன் தவறு செய்துவிட்டேன் என்று அவனே சொன்னபிறகும் விவாகரத்து பற்றி யோசிக்காமல் மற்றவர் நிம்மதிக்காக அமைதியாக இருந்தாள் ஜெயா. அவளோட கண்ணோடத்தில் அவன் செய்தது மன்னிக்க முடியாத குற்றம் தான். ஆனால் அதற்காக அவள் விவாகரத்து வரை போகவே இல்ல ”  என்றதும் ஜெயாவிற்கு எங்கோ பொறி தட்டியது..

‘நான் அவரோடு சேர்ந்து வாழும் விஷயம் இங்கே இருக்கும் மினிக்கு எப்படி தெரியும்?’ தீவிரமாக அவள் சிந்தித்தாள். அப்பொழுது அவளின் மனகண்ணில் மின்னி மறைந்தார் கோபிநாத்.

 “இதைவிட அது பேஸ்ட் என்று அவள் நினைத்திருந்தால் இன்னைக்கு அவளோட நிலையும் இதுதான். ஆனால் அவள் அப்படி யோசிக்கல. அதனால்தான் அவளை எனக்கு ரொம்ப பிடிக்கும்..” என்றாள் மின்மினி..

ஜெயா அங்கே இருப்பது தெரியாமல் அவள் பேசிக்கொண்டே செல்ல, “மதன் எனக்கு கிடைத்த நல்ல காதலன் மற்றும் நல்ல கணவன். இதை நான் பெருமையாக சொல்வேன். எங்க அன்பிற்கு சாட்சியாக சீக்கிரமே ஒரு குட்டி தேவதை இந்த உலகிற்கு வர போகிறாள்..” விழிகள் மின்ன கூறிய மனைவியை ரசித்தான் மதன்.

அவனின் பார்வையில் தெரியும் காதலும் அவளின் வார்த்தைகளில் வெளிப்படும் அன்புமே அவர்கள் எத்தகைய வாழ்க்கை வாழ்கிறார்கள் என்று அவளுக்கு படம்பிடித்து காட்டிட,  ‘நல்ல வாழ்க்கையை தவறவிட்டவள் நான்தான் மினி..’ என்று மனதிற்குள் நினைத்தாள்.

“அப்பாவோட வயிற்று எரிச்சலை வாங்கிட்டு போனாய்.. அது அப்படியே பலித்துவிட்டது அதைத்தான் சொன்னேன் பெற்றவங்க சாபத்தை வாங்கவே கூடாது இந்துமதி..” என்றவளின் அருகில் வந்தனர் தர்மன் மற்றும் சங்கவி.

அவர்களைக் கண்டவுடன் மினி “அப்பா..” என்று அழைக்க, “அக்கா..” என்று அவளை பாசத்துடன் அணைத்துக் கொண்டாள் சங்கவி.. 

“எப்படி இருக்கிற சங்கவி..” மினி அவளை விசாரிக்க, “நல்ல இருக்கிறேன் அக்கா..” என்றவள் புன்னகைக்க அவரை அங்கே எதிர்பார்க்காத மதன், “மாமா” என்று கொஞ்சம் தடுமாறினான்

அவனின் தடுமாற்றத்தை புரிந்து கொண்டவர், “இவளும் என்னோட மகள்தான் மதன்.. நீ தயங்கவே வேண்டாம்.. உன்னோட வாழ்க்கையை அழகாக தேர்வு பண்ணிருக்கிற..” என்றவர் சொல்ல இருவரும் அவரின் காலில் விழ போக, “என்னோட ஆசிர்வாதம் உங்களுக்கு எப்பொழுதும் உண்டு” என்றதும் அவர்களின் மனம் நிறைந்தது..

மினியை நிறைமாத கர்ப்பிணியாக பார்த்தவர், “உன்னோட நல்ல மனசுக்கு உனக்கு கெடுதல் வராதும்மா..” அவளின் தலையை பாசத்துடன் வருடிய தர்மனின் கண்கள் அவரையும் மீறி கலங்கியது..

இந்துமதி மட்டும் விலகி நிற்க, “மாப்பிள்ளை குழந்தை பிறந்த எனக்கு சொல்லுங்க..” என்றதும் சரியென தலையசைத்தான் மதன்.  இரண்டு மகளையும் அழைத்துக்கொண்டு அவர் செல்ல, “வா மினி..” மனைவியுடன் அங்கிருந்து கிளம்பினான் மதன். 

அவள் பேசுவதை கவனித்த ஜெயாவின் கண்கள் கூட கலங்க, ‘என்னோட கணவன் தவறு செய்யவில்லையா?’ என்ற கேள்வியுடன் அவள் நின்றிருக்க, “மேடம் இந்த பைல் உங்களோடதா?”  அவனின் குரல்கேட்டு நிமிர்ந்தாள். 

‘மினிக்கா ஃபைலை மறந்து விட்டுவிட்டு போயிட்டங்களோ?’ என்ற நினைவில், “இது என்னோடது..” என்று அவனிடமிருந்து பைலை கையில் வாங்கியவள் அது மினியின் ஃபைல்தானா? என்ற சந்தேகத்தில் பைலை திறந்து படித்தாள்.

 அவளின் விழியிரண்டும் வியப்பில் விரிந்திட அதுவரை மனதிலிருந்த கலக்கம் அவளைவிட்டு விடைபெற்று செல்ல, அவளின் கண்களில் கண்ணீர் ஊற்றேடுத்தது. அவளின் மனமோ சந்தோஷத்தில் துள்ளியது..

அவளின் மகிழ்ச்சிக்கு காரணம் என்னவோ?! 

 

error: Content is protected !!