அத்தியாயம் 28
தோப்பைச் சுற்றிவந்த மதுமதி தோப்பு வீட்டின் சாளரம் வழியாகப் பேச்சுக் குரல்கள் கேட்கவே நிதானித்தாள்.அங்கே ராஜாவும் அவன் நண்பன் முத்துவும் மதுபானத்தை அருந்தியவாறு ஏதோ உளறிக் கொண்டு இருந்தார்கள்.அந்த நெடி மூக்கைத் தாண்டி மூளையையும் தாக்கவே முகத்தைச் சுளித்தவாறு, ”ச்சே…இவன் திருந்தவேமாட்டானா…இடியட்…எவ்வளவு அழகான வீடு…அதை இப்படி நாஸ்தி பண்றானே…” என்று வசைபாடியபடி அங்கு நிற்கவும் விரும்பாதவளாய் நகரப் போனவளின் காதுகளில் முத்து அவள் பெயரைச் சொல்லி ஏதோ சொல்வது கேட்கவே நின்றாள்.
“எனக்கு ரொம்ப நாளா ஒண்ணு புரியல மச்சி…நீ தான் அந்த மதுவை விரும்பினயில்ல…அப்புறம் ஏண்டா அவளக் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொல்லிட்ட…” என்றான் முத்து.
‘என்ன ராஜா என்னை விரும்பினானா’ என்று அதிர்ந்தவளை அடுத்தடுத்த அவர்களின் பேச்சு மேலும் மேலும் அதிர வைத்தது.
“யூ ஆர் கரெக்ட் மச்சி…நான் அவளை விரும்புனேன்…அவளை மொத தடவை பார்க்கும் போது அவள் அழகு என்னை அப்படியே சுண்டி இழுத்துச்சு… அதனாலதான் அவகூடப் பழகுனேன்…ஆனா போகப்போக அவள எனக்குப் பிடிக்காம போயிருச்சு…எதுக்கெடுத்தாலும் ரூல்ஸ் பேசிக்கிட்டிருந்தா யாருக்குடா பிடிக்கும்… கொஞ்ச நாள்ல மதுரைக்குப் போயிரப் போறவதானேன்னு நெனச்சா அவ இந்தச் சிங்கத்தைச் சீண்டிப் பார்த்துட்டாடா… என்னைய…இந்த ராஜாவ…அவ கிட்ட கெஞ்ச விட்டுட்டா மச்சி…”
“அடப்பாவமே…என்ன சொல்லுற மச்சி”
“ஆமாண்டா அந்தச் சபரிப்பய கூட அன்னைக்குத் தண்ணிய போட்டுட்டு பண்ணுன சலம்பலுல அவனுக்குக் கால் உடைஞ்சு போச்சு.அவன் போலீஸ்க்கு போவேன்னு குதிச்சான்.நம்ம பெருமாளண்ணே தான் மத்தியஸ்தம் பண்ணி அவனுக்கு 25 ஆயிரத்தை நஷ்ட ஈடா கொடுக்கச் சொல்லுச்சு. அதுக்காக நான் அலமாரியில் இருந்து காசு எடுக்கப் போனேன்.அது அந்தக் கழுத பாத்துட்டா…ஏன் மச்சி நான் தெரியாமதான் கேக்குறேன்…என் வீட்டுக் காச நான் எடுத்துட்டுப் போகத் தடை சொல்ல இவ யாருடா…எனக்குன்னா கோபம் கூரைய பிச்சுக்கிட்டுக் கெளம்பிருச்சு…இருந்தாலும் வேற வழி இல்லாம அவ கையைப் பிடிச்சுக்கிட்டுக் கெஞ்சுனேன் மச்சி…ஆனாலும் அவ என்னைய காசு எடுத்துட்டு போக விடவே இல்லை… அன்னைக்குப் போட்டேன் மச்சி அவளுக்கு ஸ்கெட்ச்சு…’இருடி உன்னைய கதற விடுறேன்’னு அன்னைக்கு அவ மேல வம்மை(வன்மம்)வெச்சேன்…திட்டம் போட்டுக் கட்டம் கட்டி தூக்க நேரம் பார்த்து காத்திருந்தப்போ தான் என் அண்ணன் காரன் அவளை டாவடிக்க ஆரம்பிச்சான்… இவளும் அவன்கிட்ட பல்லைக் காட்டினா… சின்ன வயசுல இருந்தே வெற்றிய பாரு எவ்வளவு பொறுப்பா இருக்கான்… வெற்றிய பாரு எவ்வளவு பருப்பா இருக்கான்னு அவனக் காட்டியே என்னைய கொறை சொல்லி எல்லாப் பயபுள்ளைகளும் என்னையே வெறியேத்துனானுங்க…அதனாலேயே அந்த வெற்றி விரும்பின எதையும் அவன அனுபவிக்க விடாமல் அவன் கிட்ட இருந்து பிடுங்கிக்குவேன்…இப்ப இந்த மதுவை மட்டும் அவனுக்குக் கிடைக்க விட்டுருவேனா…அதனாலதான் அவன் அன்னைக்கு வாழைத் தோப்புக்கு நிச்சயதார்த்தத்துக்கு முன்னாடி வருவான்னு தெரிஞ்சுக்கிட்டு நம்ம மூர்த்தியையும் வரச் சொல்லி நானும் அவளும் காதலிக்கிற மாதிரியும் அந்த மது வேண்டாவெறுப்பாய் இவன் கூட நடக்குற நிச்சயத்துக்குச் சம்மதிக்கிற மாதிரியும் நான் என்னமோ அவ கிடைக்காததால தற்கொலை பண்ணிக்கப் போற மாதிரியும் நாடகமாடினேன்…அதத் தோப்புக்கு வந்த அந்தக் கேனப்பயபுள்ள வெற்றியும் நம்பிக்கிட்டு போயி நிச்சயத்தை நிறுத்திட்டான்…”
“இதுல ஒரு பியூட்டி என்னன்னா ஒருநாள் அந்த மது கிட்ட சும்மா பேச்சு கொடுத்துக்கிட்டு இருந்தப்ப அந்தப் பைத்தியக்காரி “கெடா வெட்டுறதுல எனக்கு விருப்பமே இல்லை… பெரியவங்க விருப்பத்துக்காகத் தான் ஒத்துக்கிட்டேன்னு சொன்னா…அதை என் அண்ணங்காரன் அறையுங்ககொறையுமா கேட்டுட்டான்.இதை நானும் பார்த்துட்டேன்… அந்த மடப்பய கேட்டதுதான் கேட்டான் உருப்படியா என்ன ஏதுன்னு விசாரிக்க வேணாமா…”
“அவன் பாட்டுக்கு செல்லைக் காதுக்குக் கொடுத்துட்டு எனக்கென்னான்னு போயிட்டான்…நான் அத வெச்சி விளையாடிட்டேன்…அவன் அந்த மதுகூட நடக்க இருந்த நிச்சயத்தை நிறுத்தி என்னைய அந்த மதுவை கல்யாணம் பண்ணிக்கச் சொல்லவும்,நான் அவகூட அந்த எண்ணத்துல பழகவேயில்லனு சொன்னேனே பாக்கணும்…அவன் முகத்துல ஈயாடல…அதப் பாத்தப்ப எனக்கு ஒரு பாட்டில் கூலிங் பீர் அடிச்ச மாதிரி சும்மா ஜிவ்வுன்னு இருந்துச்சுடா…
“அப்புறம் எவ்வளவு முடியுமோ அவ்வளவு அந்த மதுவை வார்த்தையாலேயே குத்தித் துன்புறுத்தினேன்…அவ கதறி அழகுறதப் பார்க்க பார்க்க ‘ஆஹா அது தான்டா சொர்க்கம்’…என்ன எங்கத்தகாரி தான் என்னைய காரி துப்பிட்டுப் போயிட்டா… அவளுக்கு இருக்குடா ஒரு நாளு…”
“இது மூலமா ஒரே நேரத்துல எனக்குப் பிடிக்காத ரெண்டு பேரையும் பழி வாங்கிட்டேன்…”
“ஒரே கல்லுல ரெண்டு மாங்கா அடிச்சிட்டன்னு சொல்லு…”
“ம்ஹூம்…ஒரே கல்லுல மூணு மாங்காய் அடிச்சிட்டேன்…எல்லாரும் போன அப்புறம் அந்த வெற்றிபபய ஏன்டா இப்படிப் பண்ணினேன்னு என்னை அடிச்சுப் போட்டுட்டான்…அதைப் பாத்துட்டு எங்க அம்மா சும்மா இருக்குமா… பொங்கிருச்சு…ரொம்ப நாளா நான் ஆசைப்பட்ட மாதிரி நாங்க தனியா வந்துட்டோம்…இப்பதாண்டா நான் நிம்மதியா இருக்கேன்…எல்லாம் நான் நினைச்ச மாதிரி தான்டா நடந்துச்சு…ஆனா இந்தக் கிழவி மண்டையப் போடும் போது தான் அந்த வெற்றியையும் மதுவையும் சேர்த்து வச்சுட்டு போயிருச்சு…ஆனாலும் அங்க ஒண்ணும் நடக்கல…எப்படி நடக்கும்… இவன் ஒரு முசுடு…அவ ஒரு ராங்கி ரெண்டும் கடைசி வரைக்கும் என்னையவும் பாரு என் மூஞ்சியவும் பாருன்னு முட்டிக்கிட்டே சாக வேண்டியது தான்…”என்று கூறிக் கொண்டிருந்தவனை
“ஒழிஞ்சு போடா…என் குடும்பத்தைக் கெடுக்க வந்த கோடாரிக் காம்பே…”என்று பின்னாலிருந்து எத்தித் தள்ளினார் அதுவரை மறைந்திருந்து அத்தனையும் கேட்டிருந்த மகேந்திர பாண்டியன்…ஏழு குட்டிக்கரணம் போட்டுக் கீழே உருண்டு போய் விழுந்தான் ராஜா…அத்தனை நேரமும் கூட அமர்ந்திருந்த முத்து நாலுகால் பாய்ச்சலில் அலறியடித்து ஓடி விட்டான்…
கீழே விழுந்து கிடந்த ராஜாவின் முடியைப் பற்றி இழுத்தவர் “ஏன்டா…அனாதை நாயே… உன்னை வளர்த்து ஆளாக்குனதுக்கு எங்க குடும்பத்துக்குச் செய்ற நல்லதாடா இது…”என்றவரிடம் “அனாதையா…நானா…” என்றவன் “இல்ல…இத நான் நம்ப மாட்டேன்” என்றான் அதிர்ச்சியோடு.
“ஆமாம்டா…நீ அப்பன் ஆத்தா பேரு தெரியாத அனாதை தான்…அழகம்மைக்குப் பிரசவத்துல சிக்கலாகிப் போய் எங்க குழந்தை செத்தே பொறந்துச்சு…அதோட அவளுக்கு இன்னொரு குழந்தையைச் சுமக்குற தெம்பும் இல்லனு சொல்லிப்புட்டாக…இது அழகம்மைக்குத் தெரிஞ்சா உசுரையே விட்டுருவாளேன்னு கவலையோட வெளிய வந்தப்ப தான் நீ ஆசுபத்திரி வாசல்ல கெடந்த…உன்னைய பெத்தவ ஒரு துணில சுத்தி ஆஸ்பத்திரி வாசலில் உன்னைய போட்டுட்டு போயிட்டா..மழையில நனைஞ்சு போயி அழுதுகிட்டு இருந்த உன்னைய நான் தூக்கிட்டு வந்து அழகம்மைகிட்ட அவ மயக்கம் தெளிஞ்சதும் நம்ம புள்ளண்டு கொடுத்தேன்…அன்னையில இருந்து உன்னையே எங்குப் புள்ளையாத்தான் வளர்த்துக்கிட்டு வாரோம்…”
“ஆனா நீ என் வீட்டுக்குத் துரோகம் பண்ணியிருக்க…நீ என் ரத்தமாய் இருந்தாத் தானடா பெரிய மனசோட இருந்துருப்ப…நீ யார் வீட்டு விதையோ…இந்தாரு…நீ எனக்குப் பிறந்த பிள்ளை இல்லைன்னு அழகம்மையத் தவிர வீட்டுல எல்லாப் பெரியவுகளுக்கும் தெரியும்… இதுவரைக்கும் யாராவது உன்னைய என்னைக்காவது வேத்தாளா பாத்துருப்பாகளா…அவங்க எல்லாம் சாமிகடா…உனக்காக அவகளை எல்லாம் விட்டுட்டு வந்தேனே…அவங்க காலக் கழுவி அந்தத் தண்ணிய என் தலையில தெளிச்சாலும் என் பாவம் போகாது…நீ என்ன செய்வியோ…ஏது செய்வியோ…இனிமேலும் நீ என் புள்ளையாவே இருக்கணும்டா அழகம்மைக்கிட்ட போயி நீ செஞ்ச தில்லுமுல்லு எல்லாம் சொல்லி உன்னால பிரிஞ்சு நிக்கிற என் குடும்பத்தை நீயே சேர்த்து வைக்குற…இல்ல… நான் பாசத்தக் காமிச்சுத்தேன் நீ பாத்துருக்கக் கோவத்தக் காமிச்சு பாத்ததில்லையில்ல… பாத்துராத…”என்று கர்ஜித்தார்.
இதையெல்லாம் கேட்ட ராஜா நொந்து நூலாகிப் போனான்…தேவனூருக்கே தன்னை ராஜா என்று நினைத்துக் கொண்டு இறுமாந்திருந்த அவனின் அகங்காரம் சீட்டுக்கட்டு மாளிகையாய் சரிந்து ஒன்றும் இல்லாமல் போனது… அவனும் மனிதன் தானே…அவர்கள் வீட்டு வேலையாளாக இருக்கக் கூடத் தகுதி இல்லாதவனைப் போற்றி வளர்த்தவர்களின் பெரிய மனதை எண்ணி பிரமித்துப் போனான்…அவர்கள் யாரையுமே இன்றுவரை என்றுமே மதித்திராத தன் திமிர்த்தனத்தை எண்ணிக் குன்றிப் போனான்.அதிலும் வெற்றிவேலுக்குத் தான் செய்த துரோகங்களை எண்ணி வெட்கிப் போனான்.குற்ற உணர்ச்சி அவனைக் குத்தி குதறியது…இத்தனை நாள் அவனிடமிருந்த மிதர்ப்பான சுபாவம் தூள் தூளாகி தரைமட்டமானது…
எதையெல்லாம் அவனுக்கு உரிமை பட்டது என்றிருந்தானோ அவையெல்லாம் இன்று அவனுக்கு எட்டாக்கனியாய் இருந்தது…சென்ற நிமிடம் வரை எதெல்லாம் அவனுடையதாய் இருந்ததோ இப்போது அவை எதுவுமே அவனுடையது இல்லை என்ற உண்மை அவனுக்கு விளங்கியது…இது தான் வாழ்க்கையோ…நிலையற்ற இந்த இந்த வாழ்வில் எதுவுமே நிரந்தரமில்லை…உண்மையான அன்பைத் தவிர…என்ற வாழ்க்கையின் தத்துவம் அவனுக்குப் புரிந்தது…அவன் கண்களில் நீர் பெருகியது…அதோடு சேர்ந்து அவனிடமிருந்த ஆணவமும் சேர்ந்தே வடிந்து போனது…
அதற்கு மேல் தாள மாட்டாதவனாய்…”அப்பா என்னை மன்னிச்சிடுங்கப்பா…தப்பு பண்ணிட்டேன்பா…பெரிய பாவம் பண்ணிட்டேன்பா…நான் மனுசனே இல்லப்பா…என்னைய சோறு போட்டு வளத்து உங்க கையாலேயே கொன்னு போட்டுருங்கப்பா…” என்று மகேந்திரனின் காலில் விழுந்து புரண்டு அழுதான் ராஜா. தன் தவறை எண்ணிக் கதறினான்…வனாந்திரத்தில் தனித்து விடப்பட்ட சிறு குழந்தையைப் போலத் துடித்தான்…தனக்கு சொந்தமில்லாத இடத்தில் தான் இத்தனை நாள் ஆடிய ஆட்டங்களையும் அலப்பரைகளையும் எண்ணிக் குன்றினான்…இனிமேல் தனக்கென்று இவ்வுலகில் யாருமே இல்லையோ என்று அஞ்சியவன்,”ஐயோ நான் உங்களை இனிமே அப்பானு கூப்பிடலாமாங்கய்யா…”என்று குழந்தை போல் கேட்டான்.
அவனைப் பார்த்து அவருக்கும் மனம் கலங்கியது…’இவனும் என்னதான் செய்வான்…வராது வந்த மாமணி என்று தன் பிள்ளைக்கு அதீத செல்லம் கொடுத்து அவன் செய்யும் தவறுக்கெல்லாம் அவனை ஆதரித்துப் பேசி கெடுத்து வைத்து விட்டார் அழகம்மை…ஒரு தட்டில் உணவுண்டிருந்தாலும் வெற்றிவேலுக்கு இருக்கும் பண்பு இவனிடம் இல்லாமல் போனதற்கு அதுவே காரணம்…இதில் தன் பங்கு தவறும் இருக்கிறது…சிறு வயதில் அவன் செய்த தவறுகளைக் கண்டும் காணாமலும் இருந்ததால் தானே இவன் இப்படியாகி விட்டான்…அப்போதே அவனைக் கண்டித்த்திருந்தால் அவனும் ஒழுக்கச் சீலனாகவே இருந்திருப்பான்…’
இப்போது தன் தவறை உணர்ந்து மன்னிப்புக் கேட்டு அழுபவனை ஒதுக்க அவருக்கு மனம் வரவில்லை.தன் கால்களில் முகம் புதைத்து அழுபவனைத் தூக்கி அணைத்துக் கொண்டார் மகேந்திரன்.பெறாவிட்டாலும் பாசத்தைக் கொட்டி வளர்த்தவரல்லவா…
“என்னைய அப்பாண்டு கூப்புடாம ஆரக் கூப்பபுடப் போறடா…நான் பெறாட்டாலும் நீ எனக்கு மவன்தேன்…செஞ்ச தப்ப ஒணர்ந்து மனந்திருந்திப்புட்டன்னா அதுவே எனக்குப் போதும்…” என்றவர் இன்னும் தேம்பிக் கொண்டிருந்தவனைப் பார்த்து,இதுவரை அழுதே அறிந்திராதவன் என்ற நினைவோடு,
“சரி விடுடா ராஜா…நீ பண்ணுனது ரொம்பப் பெரிய தப்பு தான்… என்னமோ நேரகாலம் குடும்பத்தை உன் மூலமா பிரிச்சிருச்சு… வெற்றினக்கண்டு பொறுத்து போயிருக்கான்…வேற ஒருத்தனா இருந்தா வகுந்துருப்பான் வகுந்து…நீ அவன் கிட்டயும் மன்னிப்புக் கேட்டு இனி மேலாவது திருந்தி வாழ பாரு…இப்ப நான் உன்கிட்ட சொன்ன உண்மை நமக்குள்ளேயே இருக்கட்டும் அழகம்மைக்குமத் தெரிய வேணாம்…அவ தாங்க மாட்டா…”என்றவரிடம்
“சரிப்பா நீங்க சொன்ன மாதிரியே நடந்துக்குறேன்…”என்று முதன்முறையாய் அவரை மரியாதையாய் அழைத்தான் ராஜா.
இவை அனைத்தையும் கேட்ட மதுமதி எப்படி வீடு வந்து சேர்ந்தாள் என்பது அந்தக் கடவுளுக்கே வெளிச்சம்…தன் காதலனை தன்னைப் பழி வாங்கிட எண்ணவில்லை…மாறாகத் தனக்கு நன்மையே நினைத்திருக்கிறான் என்ற எண்ணமே அவளுக்கு மகிழ்ச்சியையும் நிம்மதியையும்…வெகு தூரம் ஓடிக் களைத்த பின் இருப்பிடம் சேரும் அமைதியையும் ஆசுவாசத்தையும் அடைந்தாள்.வெற்றிவேலின் மேல் ஏற்பட்டிருந்த கோபத்திரை கிழிந்து ஒன்றுமில்லாமல் போனது…வீட்டிற்குவந்ததும் அஞ்சுகத்திடம் தான் கண்டதை எல்லாம் சொல்லி அழுதாள்.”அத்த அவர் நல்லவர்தான்…எல்லா தப்பும் அந்த ராஜாதான் பண்ணியிருக்கான் “என்றவள் அனைத்தையும் சொல்லி முடித்தாள்.
அவள் கூறியதை எல்லாம் கேட்ட அஞ்சுகம் “பார்த்தியாம்மா நான் சொன்னேன்ல என் புள்ள ஒரு காரியம் செஞ்சா அதுல நியாயம் இருக்கும்ன்னு…”என்றவரிடம் ஆமோதிப்பாய் தலையசைத்தாள். அவளுக்கு வெற்றிவேலின் மீதான காதல் காட்டாற்று வெள்ளம் போலப் பொங்கி வழிந்தது.அவனை அப்போதே காண வேண்டும் என்ற ஆசை அவளிடம் தலை தூக்கியது.மதிய உணவிற்கான அவன் வருகையை ஆவலுடன் எதிர்பார்த்து இருந்தாள்.நேரம்தான் சென்றதே தவிர அவன் வந்தபாடில்லை.மாறாக அவனிடம் இருந்து தொலைபேசி அழைப்பு தான் வந்தது.நூற்பாலை சங்க உரிமையாளர்கள் கூட்டத்திற்காக வெளியூர் செல்வதாகவும் மறுநாள் தான் வீட்டிற்கு வர முடியும் என்றும் தெரிவித்தான்.தன்னிடம் கண்ணாமூச்சி ஆடிக் கொண்டிருக்கும் வெற்றிவேலின் மீது கோபம் கோபமாய் வந்தது மதுமதிக்கு…
‘நீ மட்டும் என்ன ஒழுங்கா அவர் பேச வரும் போது அவர் சொல்ல வந்ததைக் கொஞ்சம் பொறுமையாக் காது கொடுத்துக் கேட்டியா… அவ்வளவு ஏன் அவர் “என்னைப் பிடிச்சிருக்கா”ன்னு கேட்டப்ப பிடிச்சிருக்குன்னு ஒரு வார்த்தை சொல்லி இருந்தா இந்தப் பிரிவே வந்திருக்காதுல்ல’ என்று இடித்துரைத்தது அவள் மனசாட்சி… நாளை கண்டிப்பாகத் தனது காதலை அவனிடம் சொல்லி விட வேண்டும் என்று எண்ணியபடி அவன் நினைவுகளில் உழன்ற மதுமதி அன்றைய இரவையெல்லாம் தூங்காமல் கழித்தாள்.
விடிவதற்கு முன்பே விரைவாக எழுந்து வந்துவிட்ட மருமகளைக் கண்டவர் மனதிற்குள் சிரித்துக் கொண்டார்.அவரும் அவள் வயதை கடந்து வந்தவர் தானே…நேரம் செல்லச்செல்ல நிலை கொள்ளாமல் தவித்தவளைத் தான் நேராக மில்லுக்குச் செல்லப் போவதாகக் கூறி மேலும் சோதித்தான் வெற்றிவேல்.சோர்ந்து போய்த் தொப்பென்று சோபாவில் அமர்ந்தவள்…”யோவ் வீரபாகு வேண்டாம்யா…வலிக்குது…அழுதுருவேன்”என்று புலம்பியவளின் காதுகளில்
“அன்புள்ள மன்னவனே…
ஆசை காதலனே…
என் இதயம் புரியாதா….
என் முகவரி தெரியாதா….
கிளியே கிளியே போ…
தலைவனைத் தேடிப் போ….”
என்று திரையிசைப்பாடல் தொலைக்காட்சியின் திரையில் ஓடி அவள் கவனத்தை ஈர்த்தது…அதனைக் கண்ணுற்றவள் ‘அந்தக் கதாநாயகியைப் போல நாமும் கிளியிடம் தூதுச்சீட்டு அனுப்பி விடலாமா’என்று கூட எண்ணினாள்.
பின்னர் இங்குக் கிளியும் இல்லை…அப்படியே இருந்தாலும் மில்லுக்குள் இருப்பவனிடம் கொண்டு போய்ச் சேர்க்க கிளிக்கு வழியும் இல்லை என்பதை உணர்ந்தவள் அந்த எண்ணத்தைக் கைவிட்டுச் செல்பேசியில் தன் ஏக்கத்தைக் குறுஞ்செய்தியாகத் தூது விட எண்ணி அதைக் கையில் எடுத்தாள்…அப்போது அவள் வீட்டில் இருந்த தொலைபேசியில் அழைப்பு மணி அடித்தது…எடுத்துப் பேசியவளுக்கு இந்த உலகமே தட்டாமாலையாகச் சுழல்வது போலிருந்தது…
“ ஹலோ ஹலோ”என்று கூவியவளுக்குத் தொடர்பு துண்டிக்கப்பட்டு விட்டது என்ற செய்தியை கிடைத்தது.மீண்டும் மீண்டும் முயற்சி செய்தவள் தோல்வியே அடைந்தாள்.
“ஐயோ அத்தை…”என்று அலறினாள் மதுமதி…அவள் குரல் கேட்டு ஓடி வந்த அஞ்சுகத்திடம் “அத்த மில்லுல தீப்பிடிச்சுருச்சாம்….வெற்றி மாமாவும் அங்க தான இருக்காங்க அத்த…எனக்கு பயமா இருக்கு என்று கூறி அழுதவளிடம்…
”இரும்மா பதறாத…கடவுளே…இந்தக் கதிரும் இங்க இல்லையே…மாமாகிட்டச் சொல்லி என்னா ஏதுன்னு பார்க்கச் சொல்லுவோம்…அவருக்குப் போன் பண்ணுறேன்” என்று தொலை பேசியில் கணவரை அவர் தொடர்பு கொள்ள முயற்சித்துக் கொண்டிருக்கும் போதே திடீரென்று எழுந்து வேகமாக வீட்டை விட்டு வெளியேறி வேலையாள் முருகனைக் காரை எடுக்கச் சொல்லி மில்லை அடைந்தாள் மதுமதி.
அங்குமிங்கும் தொழிலாளர்கள் ஓடிக் கொண்டிருந்தனர்.தீயணைப்பு வண்டி மில்லின் முகப்பில் நின்றிருக்க அதில் இருந்த தீயணைப்பு வீரர்கள் மும்முரமாக வேலையில் ஈடுபட்டிருந்தனர். தொழிலாளிகளின் கூச்சல் ஒரு புறம், விண்ணை நோக்கி திரண்டெழுந்த கரும்புகை ஒருபுறம் என அந்த இடமே கலவர பூமி போல் காட்சி அளித்தது.சிலர் தீக்காயத்துடன் அவசர ஊர்தியில் ஏற்றப்பட்டுக் கொண்டிருந்தனர்.யாரிடம் கேட்பது என்று புரியாதவளாய் நின்றவள் மில்லுக்குள் ஓடினாள். ஒவ்வொரு பகுதியாக வெற்றிவேலைத் தேடி அலைந்தாள்.இறுதியில் அவளுக்கு முதுகு காட்டி நின்று யாருடனோ பேசிக் கொண்டிருந்த வெற்றிவேலைக் கண்டவளுக்குப் போன உயிர் திரும்பி வந்தது.
ஆழ்ந்த மூச்செடுத்துத் தன்னை நிலைப்படுத்திக் கொண்டவள் சுற்றுப்புறம் மறந்து “வெற்றி மாமா” என்று கூவியவாறு அவனை இறுகக் கட்டிக் கொண்டாள். திடீரென்ற அவளது இச்செய்கையாலும் ‘இவள் எங்கே இங்கே’ என்று மனதில் உதித்த கேள்வியாலும் குழம்பியவனின் உடலில் ஏதேனும் காயம் இருக்கிறதா என்று ஆராய்ந்து விட்டு மேலும் அவன் மேல் அப்பிக் கொண்டு அழ ஆரம்பித்துவிட்டாள்.
ஒருகணம் திகைத்தவன் பின்பு சூழலை உணர்ந்து அவளைத் தன்னிடமிருந்து பிரித்து எடுத்து “என்ன மது…ஏன் அழுகுற…நீ இப்படி இங்க” என்றவனிடம் “அது… இங்கே ஃபயர் ஆக்சிடென்ட்னு போன் வந்துச்சு” என்று திணறியவளை தன் அறைக்குக் கூட்டிச் சென்று அமர வைத்து ஆசுவாசப்படுத்தினான்.
“ நான் உங்களுக்கு என்னவோ ஏதோன்னு நினைச்சு பயந்து போயிட்டேன்…”என்று கண்ணீர் சிந்தியவளிடம்,
”எனக்கு ஒண்ணும் இல்ல மது…பஞ்சில் இருந்த கல்லு மெஷின்ல உராய்ஞசதால தீப்பொறி உருவாகி பஞ்சுல பத்திக்கிச்சு போல…முதல்லயே கவனிச்சுருந்தா இதைத் தவிர்த்திருக்கலாம்…இன்ஷுர் பண்ணி இருக்கிறதால பெருசா நஷ்டம் இல்ல…என்ன…ஒர்க்கர்ஸ் கொஞ்சம் பேருக்குக் காயம் ஆயிருச்சு….அதுவும் சின்னச் சின்னக் காயம் தான்…”என்று சமாதானப்படுத்திப் பின்பு அவளைப் பத்திரமாக வீட்டிற்கு அனுப்பி வைத்தான்.
அன்று இரவு அவளது வரவிற்காய் தன் அறையில் காத்திருந்தான் வெற்றிவேல். அது இயல்பான தன் மனைவியின் வரவை ஆசையோடு எதிர்பார்த்திருக்கும் கணவனின் காத்திருப்பு அல்ல… மதுமதியின் நடவடிக்கையில் காணப்படும் மாற்றங்கள் அவனுக்குப் புதிதாய்த் தெரிந்தது.அவளது இந்த மாற்றத்தில் அவனுக்கு மகிழ்ச்சியே என்றாலும் ‘இது புரிதலுடன் கூடிய மனமாற்றமா… இல்லை வெறும் தீ விபத்தினால் ஏற்பட்ட பதற்றமா’ என்று அவனுக்குத் தெரிய வேண்டி இருந்தது.
ஆனால் அவளுடைய வெட்கத்துடன் கூடிய புன்னகை முகம் அவனுக்கு வேறு ஒரு செய்தியைக் கூறியது.இருவரும் ஒன்று சேர்வதாக இருந்தால் அது உணர்ச்சிவயத்தால் அல்ல…இருவரின் மனதையும் ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொண்ட பின்னரே என்பதில் மட்டும் உறுதியாக இருந்தான்.
அவனை அதிகம் காக்க வைக்காமல் அறைக்குள் நுழைந்தாள் மதுமதி… எப்போதும் போல் சோபாவை நாடாமல் அவன் அருகே கட்டிலில் வந்து அமர்ந்தவளை ஆச்சரியத்தோடு புரியாமல் பார்த்தான்…அவனது நிலையைக் கண்டு புன்னகைத்த மதுமதி அவனிடம் “நேத்து தோப்புக்குப் போயிருந்தேன்…” என்று தொடங்கியவள் அனைத்தையும் ஒன்றுவிடாமல் கூறினாள்…மறவாமல் அவனைக் புண்படுத்தியதற்காய் அவனிடம் மன்னிப்பையும் கோரினாள்.
இவற்றையெல்லாம் சிறிதும் சலனமில்லாமல் கேட்டவனிடம்,”உங்களுக்கு ராஜா சின்ன மாமாவின் பிள்ளை இல்லைனு உங்களுக்கு முன்னாடியை தெரியுமா…”என்றவளிடம்
“ஆமாம்” என்று தலையாட்டினான் வெற்றிவேல்.
”எப்போ எப்படித் தெரியும்…”
“முந்தி சித்தப்பாவுக்கு ஒரு ஆக்சிடெண்ட் ஆச்சு… அப்போ அவருக்கு ரத்தம் தேவைப்பட்டது…ராஜாதான் கொடுத்தான்… கொஞ்ச நேரத்துலயே என்னைய திரும்பவும் ரத்தம் கொடுக்கச் சொல்லிக் கூப்பிட்டாரு நம்ம குடும்ப டாக்டர்…என்ன காரணம்னு இரத்தம் கொடுத்து விட்டு வந்து நானும் கதிரும் அவர்கிட்ட போய் விசாரிச்சோம்…அவர் அப்போ சித்தப்பாவோட பிளட் குரூப் ஓ பாசிட்டிவ்ன்னும்,ஆனா ராஜாவோடது ஏபி நெகட்டிவ்ன்னும் அதனால ராஜாவோட ரத்தம் சித்தப்பாவுக்குப் பொருந்தாதுன்னும் சொன்னாரு…அதோட சித்தப்பா ஓ பாசிட்டிவ்ங்கிறதால ஏபி நெகட்டிவ் க்ரூப் கொண்ட ராஜா அவனோட மகனாக இருக்க வாய்ப்பே இல்லைனும் அடிச்சு சொன்னாரு…அவர் பொய் சொல்லணும்கிற அவசியம் இல்லை…அது மட்டும் இல்லாம இது அலசி ஆராய வேண்டிய விஷயமும் கிடையாது…இந்த விஷயத்தில ஒரு துளி வெளியே சென்றாலும் அது சித்திபேரக் கெடுத்து குடும்ப மானத்தையே நடுத் தெருவுக்குக் கொண்டு வந்து விட்டுடும்…எது எப்படி இருந்தாலும்
ராஜா என் தம்பிதான்னு இருந்துகிட்டேன்…”என்றான்.
“அதுக்குத்தான் அன்னைக்கி சின்னத்தைக்கு இராஜாவை பிளட் கொடுக்க வேண்டாம்னு சொன்னீங்களா” என்றவளிடம்,
“ஆமாம்…இந்த டாக்டரும் இதைக் கண்டுபிடிச்சு சொல்லிட்டாருன்னா அப்புறமா இந்த விஷயம் வெளியே தெரிஞ்சு போய்டும்னு நினைச்சேன்…” என்ற வெற்றிவேல் அவள் மனதில் மலை போல் உயர்ந்து நின்றான்.
எப்படிப்பட்ட மனிதன் இவன்…தனக்குத் தீங்கே இழைத்திருந்த போதும்…தன் வாழ்வைப் பாலைவனமாக மாற்றியபோதும் கூட ராஜாவைப் பற்றிய இந்த உண்மையை இவன் வெளிவிட வில்லையே…இவனைக் கணவனாக அடைய நாம் முந்தைய பிறவிகளில் புண்ணியம் செய்திருக்க வேண்டும் என்று நெகிழ்ந்தவள்…அவனின் பெருந்தன்மையான குணத்தை எண்ணி பெருமிதம் கொண்டாள்…அந்தப் பெருமிதம் அவன் மீது மையலாய் உருவெடுத்தது…
ஆனால் அவன் இன்னமும் தன்னிடமிருந்து விலகியே இருக்கிறான் என்பதை உணர்ந்தவள்…தான் அந்த அளவு அவனைக் காயப்படுத்தியிருக்கிறோம்…முதலில் அவன் காயங்களுக்கு மருந்திட வேண்டும்…தான் அவனிடம் சொல்லப் போகும் காதல் தான் அவன் காயங்களை ஆற்றும் மருந்தாய் இருக்க முடியும் என்று எண்ணி அவனிடம் தன் காதலைக் கூற விழைந்தாள்…வெட்கத்தில் சிவந்து ரோஜாக்களை மலரச் செய்த கன்னங்களுடனும்… மந்தகாசப் புன்னகையுடனனும்…” மாமா” என்று அவளை அழைத்தவள்.
இரண்டு வருடங்களுக்குப் பிந்தைய அவளுடைய முதல் ‘மாமா’ என்ற அழைப்பு அவன் காதுகளில் தேனைப் பாய்ச்சியது…ஆனந்த அதிர்வோடு சிலிர்த்து நிமிர்ந்து பார்த்தான் வெற்றிவேல்…
“உங்களை எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு மாமா…ஐ… ஐ….ஹேவ் ஃபாலன் இன் லவ் வித் யு…” என்று கூறியே விட்டாள். பனிக்கட்டி மழை தன் மீது பொழிந்ததைப் போலக் குளிர்ந்து போனான் வெற்றிவேல்.தான் காதலைச் சொன்னதும் தன்னைக் கட்டிக் கொள்வான் என்று எதிர்பார்த்தாள் மதுமதி…அப்படிச் செய்து விட்டால் அவன் வெற்றிவேல் அல்லவே…
அவளை வம்பிழுக்கா விட்டால் அவனுக்குத் தூக்கம் எப்படி வரும்…அவளிடம் ஊடலுடன் கூடிய கூடலையே அவன் விரும்பினான்.எனவே அவளை வம்பிழுக்கும் நோக்கத்தோடு “ஆமாம்டீ … எப்ப கேட்டதுக்கு இப்ப வந்து சொல்லு…” என்றாள்.உடனே அவன் பூனைக்குட்டியும் சிலிர்த்துக் கொண்டது.
“ஆமாம் கிட்ட வந்தாலே ஆள முழுங்குற மாதிரி பாக்குறது… இல்ல பேசவே விடாமல் உதட்டை பஞ்சர் பண்றது…அதுவும் இல்லாட்டி மொத்தமா காணாமல் போயிருறது… இதுல இவரு கிட்ட காதல் சொல்லலையாம்…இப்ப மட்டும் என்ன கொறஞ்சு போச்சு… இப்பச் சொன்னது பிடிக்காட்டி போங்க… நான் தூங்கப் போறேன்…”என்று சோபாவை நோக்கி எழுந்தவளின் கரத்தைப் பற்றிச் சுண்டி இழுத்தான் வெற்றிவேல்.
அவன் மேல் பூக்குவியலாய் விழுந்தவளை தன் கையை வளைவுக்குள் கொண்டு வந்தவன்…” என் கிட்ட இருந்து ஓடுறதே உனக்கு வேலையா போச்சு பூனைக்குட்டி…இனிமே அப்பிடியெல்லாம் ஓடவும் முடியாது…ஒளியவும் முடியாது…ஐ வில் பி வாட்ச்சிங்…” என்றபடி அவளை முத்தமிட்டான். அவனது பூனை குட்டி என்ற கொஞ்சல் மொழி மீண்டு விட்டதை எண்ணி மகிழ்ந்தவள்,
“இங்க வாட்ச்சிங்னு சொல்லக் கூடாது வீரபாகு…கிஸ்ஸிங்னு” சொல்லனும் என்றவளை
“போதும்டி…எதுவும் சொல்ல வேணாம் சொன்னவரைக்கும் போதும்… இனிமேல் செயல்ல இறங்கிறலாம்” என்றவனின் அணைப்பு மேலும் இறுகியது…
மேலும் “ நான் சொல்றத…”என்று ஆரம்பித்தவளிடம் “இனிமேலும் உன்னையே பேசவிட்டு நான் கேட்டுக்கிட்டே இருந்தா என்னைய தப்பா நினைச்சுக்குவாங்கடி…” என்று அவள் இதழ்களைத் தன் இதழ்களால் மூடினான்.
ஆழ்ந்த அந்த இதழ் அணைப்பிலும் அடுத்தடுத்து அவன் நடத்திய முத்த ஊர்வலத்திலும் மொத்தமாய்த் தொலைந்தாள் மதுமதி.காதலெனும் பள்ளியில் முதன்முதலாய் பாடம் கேட்கும் மாணவியான மதுமதியை அவள் மிஞ்சும் இடங்களில் கெஞ்சியும் அவள் கெஞ்சும் இடங்களில் கொஞ்சியும் தன்னை அவளுள் தொலைத்தான்.காமதேவன் சந்நிதியில் சேர்ந்தே தொலைந்து போன இருவரும் வெகு நேரதத் தேடலுக்குப் பின் கூடிக் களித்துக் களைத்துத் தன் இருப்பிடம் அடைந்தபோது பொழுது விடிந்திருந்தது!
கோவாவிலிருந்து திரும்பி வந்த புதுமணத் தம்பதிகள் கதிரும் கயலும் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பியிருந்தனர்.அன்று இரவு உணவை முடித்துக் கொண்டு வந்த கயலை பின்னிருந்து அணைத்து தூக்கிக் கொண்டு கட்டிலுக்குச் சென்றான் கதிர். அவனது இந்தச் செயலால் ஆச்சரியமடைந்தாள் கயல்… கோவாவிற்குச் சென்றிருந்த போது கூடத் தன்னை நெருங்காமல் விரதம் காத்தவனைச் ‘சாமியார்’ என்று சாடி இருந்தாள் கயல்… ஆனால் இப்போது அவன் நடந்து கொள்வதைப் பார்த்து குழம்பியவள்,
“என்ன சாமியாரே விரதத்தைக் கைவிட்டுட்டீங்களா… என்றாள்.
“ ஆமாம்…கந்தர்வ கன்னியே…சாமியார் விரதத்தைக் கைவிட்டு விட்டு முழுதாக ஒரு நாள் ஆகிவிட்டது” என்றான் நாடக பாணியில்.
“ஏன் எங்கண்ணும் அண்ணியும் சந்தோசமா இருந்தாத்தான் நான் உங்கூடச் சந்தோசமா இருப்பேன்னு வசனம் பேசுனீங்க…இப்ப என்னாச்சாம்…”
“அவர்கள் இப்போது சந்தோசமாய் வாழ ஆரம்பித்து விட்டார்கள் தேவி…”
“தேவியா… ஆரது…”
“நீதான்…”
“எங்கண்ணனும் அண்ணியும் சந்தோசமா இருக்காகன்னு உங்களுக்கு எப்புடித் தெரியும்…உங்ககிட்ட சொன்னாகளா…எங்கிட்ட ஒண்ணும் சொல்லலையே…”
“சொல்லிப் புரிவதில்லை மன்மதக்கலை தேவி… உங்கண்ணன் விடும் ஜொள்ளின் அளவைப் பார்த்து நானே புரிந்து கொண்டேன்…”
“இனி நாம் நம் வாழ்க்கையைப் பார்க்கலாம்…உன் சாமியார் பரவச நிலையில் இருக்கிறேன்…எனவே உன் சேவை இப்போது என் தேவை…” என்றான்.
“என்னாது சேவையா”
“ஆம் தேவி…நீ எனக்கும் நான் உனக்கும் மட்டுமே செய்து கொள்ளும் சேவை…”
“ஐயோ…எதுக்கு இப்பிடி உளறருறீங்க…புரியிற மாதிரிப் பேசுங்க..”
என்றவளிடம்
“ஏய் பாப்பு…இன்னும் நாம பேசிக்கிட்டே இருந்தா மிஸ்டர் காமதேவன் நமக்கு நோட்டீஸ் விட்டுருவாரு…என்றவாறே அவன் மேல் சரிந்து படர்ந்தான்.இதுநாள் வரை அவன் கண்களில் நேசத்தை மட்டுமே கண்டிருந்தவளுக்கு இன்று புதிதாய் முளைத்திருந்த சரசம் அவளுக்கு வெட்கத்தை உண்டு பண்ணியிருந்தது…தன் மேல் சரிந்திருந்தவனைக் கண்டு வெட்கமடைந்தவள் கண்களை இறுக மூடிக்கொண்டாள்.
“ஏய் பாப்பு…நான் என்ன டாக்டரா உனக்கு என்ன ஊசியா போட போறேன்…பல்லக் கடிச்சுக் கண்ணை மூடிக்கிட்டு இருக்க…”
“ கண்ணைத் திறந்து என்னைப் பாரு” என்றவன் அவள் கண்களைத் திறந்ததும் “ஐ லவ் யூ பாப்பு” என்று ஒரு யுகத்துக்கான காதலை தன் கண்களில் தேக்கியபடியே கூறி அவள் இதழ் நோக்கி குனிந்தான். வேகத்துடன் அவளை அணுகினாலும் தன் மனைவியை வதங்காமல் பார்த்துக் கொண்டான் கதிர்.அங்கே அழகான இல்லறம் இனிதாய் அரங்கேறியது…
இது தஞ்சம் மன்னவன் நெஞ்சத்தின் இறுதி அத்தியாயம் நட்புக்களே…நாளை எபிலாக்…எனது முதல் படைப்பு இந்தக் கதை…நீங்கள் தந்த ஊக்கம் தான் என்னை இறுதி அத்தியாயம் வரை இக்கதையைத் தொடர்ந்து எழுத வைத்தது…இத்தனை நாளும் சைலண்ட் ரீடர்களாய் இருந்தாலும் இன்றைய பதிவிற்கு உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள் நட்புக்களே…பிடித்திருந்தால் பாராட்டுங்கள்…குறைகள் இருந்தாலும் தயங்காமல் கூறுங்கள்…உங்கள் கருத்துக்கள் தான் நான் என்னை நானே மதீப்பீடு செய்ய உதவுபவை…சென்ற அத்தியாயத்திற்கு ஆதரவளித்த அனைத்து நட்புகளுக்கும் மிக்க நன்றி…உங்கள் கருத்துக்களை ஆவலுடன் எதிர் நோக்கும் பிரியா குமார்….எபிலாக்கில் சந்திப்போம்…