UEJ 33-2
UEJ 33-2
கௌதம் இதுவரையிலும் எந்த நிலையிலும், சதாசிவத்திடம் குரலை உயர்த்தி பேசியே இராத நிலையில், இன்று அவன் பேசிய விதமும், அதில் இருந்த ஆக்ரோஷமும், அவரை அதிர்ந்து போக வைத்துவிட, பேச வந்த வார்த்தை தொண்டையிலேயே சிக்கிக்கொண்டது அவருக்கு…
கௌதமின் கோபத்திற்கு முன், அவர் பேச வந்த எதுவும், வாய் விட்டு வெளிவர தயாராக இல்லாத நிலையில், அமுதன் தான் சதாசிவத்திடம் வந்தவன், “சார், அண்ணாக்கு இப்ப தேவை நல்ல ரெஸ்ட்.. இதபத்தி மேல பேசி, அவர டென்ஷன் படுத்தறது சரியில்ல. விடுங்க பார்த்துக்கலாம். அவரு இந்த அளவு கோபப்படறாருன்னா, ஏதாவது இல்லாம இருக்காது.. நீங்க வீட்டுக்கு போங்க. நா பார்த்துக்கறேன்!” என்று சமாதானம் செய்து, அவரை அனுப்பியவனுக்கு மனம் சொன்ன ஒரே விசயம், ‘காயத்ரி ஏன் செல்லம்மாவாக இருக்கக்கூடாது?!’ என்பதே….
சதாசிவத்தை அனுப்பிவிட்டு வந்தவன் பார்த்தது, அந்த நாளிதழை கையில் வைத்துக்கொண்டு, உலகத்தின் ஒட்டுமொத்த சோகத்தையும், வலியையும் பிரதிபலிக்கும் கண்களோட அமர்ந்திருந்த கௌதமை தான்.
மெல்ல அருகே வந்த அமுதன், “அண்ணா, என்னாச்சி?! விடுங்க அது அவங்க விதி.. நடந்து முடுஞ்சு போனத நினைச்சு, மனச வருத்திக்காதீங்க. லவ்வர்ஸ் க்குள்ள நடந்தது, அவங்கள சேர்த்து தானே வச்சிருக்கு!” என்று கௌதமிடமிருந்து உண்மை வெளிவருவதற்காகவே சொல்லிட…
அமுதன் எதிர்பார்த்த மாதிரியே, “என்னோட செல்லம்மா அந்த சூழ்நிலையில, எப்படி தவிச்சு போயிருப்பா, என்னை எப்படி தேடியிருப்பான்னு, உனக்கு எப்படிடா தெரியும்? அதோட ஆரன், அப்படி நடந்திருக்கவே மாட்டான். அவங்க ரெண்டு பேரை பத்தியும், என்னை விட யாராலும் புருஞ்சுக்க முடியாதுடா..
நிச்சயமா சொல்றேன், இந்த பேப்பர்ல போட்டிருக்கற எதுவுமே உண்மையா நடந்திருக்க வாய்ப்பே இல்ல. அவங்கள கோவலப்படுத்த செய்யப்பட்ட சதி.. ஆனா, அதனாலையே அவங்க வாழ்க்கை திசை மாறி போயிருக்குன்னு மட்டும் தெரியுது… அமுதா ஒரு ஹெல்ப் பண்றையா… ப்ளீஸ்…!” என லேசாக கண்கள் கலங்கியிருக்க, கையை ஏந்தி கேட்ட கௌதம், ‘தான் நினைத்தால் எதையும் செய்திட முடியும்!’ எனும் நிலையில் இருக்கும் கௌதம் சக்கரவர்த்தி, இப்போது ஒரு பிச்சைக்காரன் போல கை நீட்டி கேட்ட நிலை, அமுதன் விழிகள் கலங்கிட செய்தாலும், தன்னுள் சமாளித்து நின்றவன்,
“என்ன அண்ணா, செய்யிடான்னா, செய்ய போறேன்! அதவிட்டு, ஹெல்ப் செய், ப்ளீஸ்! ன்னு.. ஏண்ணா, என்னைய தள்ளி நிறுத்தறீங்க..?” என எவ்வளவு தான் சமாளித்தும், குரல் தழுதழுக்க கேட்டவனை பரிவோடு பார்த்த கௌதம்,
“சாரிடா, எனக்கு உன்னை தவிர யாரையும் நம்பி கேட்க முடியல.. என்னோட நிலைமை, நானே தனியா செயல்படவும் முடியலை ங்கறதால, அப்படி கேட்டுட்டேன், இதுல உன்னை தள்ளி வைக்கற மாதிரி எதுவும் இல்லடா..!” என்றவனின் மனநிலை புரிய, தன்னை நொடியில் சரி செய்தவன்,
“சொல்லுங்க அண்ணா, இப்ப என்ன செய்யணும்..?!” என கேட்க, “எனக்கு ஆரன், செல்ல… ‘க்ஹுகும்..!’ சாரி காயத்ரி எங்க இருக்காங்க, எப்படி இருக்காங்கன்னு தெரியணும். சதா அங்கிள் பேசறத பார்த்தா, அவருக்கு தெரிஞ்சிருக்கு. பட், இவ்வளவு கோவலமா பேசினவர்கிட்ட போய், மறுபடியும் நா அவங்கள பத்தி கேட்க விரும்பல.. சோ, எதாவது ஏற்பாடு பண்ணு..!” என்று கேட்க,
“இவ்வளவு தானா அண்ணா.. ஒரு ப்ரைவேட் டிடக்டீவ் கிட்ட சொன்னா, அன்னைக்கி என்ன நடந்தது அப்படிங்கறதுல இருந்து, இப்ப வரை அத்தனை டீட்டெயிலும் வாங்கிடலாம். கவலைய விடுங்க. இப்ப வாங்க, கொஞ்சம் சாப்பிட்டு, டேப்லெட் போட்டுட்டு ரெஸ்ட் எடுங்க” என்றவன், வற்புறுத்தி சாப்பிடவைத்து தூங்க வைத்துவிட்டு, சென்னையின் பிரபல டிடெக்டிவ் ஏஜென்சி பற்றி அலசியவன், அதில் சிறந்த ஒன்றை தொடர்பு கொண்டு அப்பாயின்மென்ட் வாங்கி விட்டே உறக்கத்திற்கு சென்றான்.
அடுத்த நாள், மாலை பிரபலமான ***** ஹோட்டலுக்கு அமுதனும், கௌதமும் சென்று, அந்த ஏஜென்ட்டை சந்தித்து, தங்களுக்கு தேவையானதை பற்றி சொல்லிட, அவரும் அனைத்து, தகவலையும் பெற்றுக்கொண்டவர், விரைவில், ஆராய்ந்து அறிக்கையை அளிப்பதாக சொல்லி சென்றிட, அமுதன், “என்ன அண்ணா இப்ப ஓகே வா.. ஒன்னு ரெண்டு நாள்ல, அவங்கள பத்தி எல்லாமே தெரிஞ்சிடும். வாங்க போலாம்?!” என்று, சிறு புன்னகையோடு, கௌதமின் கரம் பற்றி வெளியே செல்லவிருந்த சமயம்,
கௌதமின் உள்ளுணர்வு சொன்னபடி திரும்பிட, அந்த ஹாலின் கடைக்கோடியில், ஒரு பொண்னோடு பேசியபடி அமர்ந்திருந்தான் ஆரன் சாம்வேல். தன் ஆரனை சந்தித்த தருணத்தை சொல்லவும், வார்த்தை வராமல், அமுதன் பிடித்திருந்த கரத்தின் மீது அழுத்தியவன், மெல்ல தனது சுட்டுவிரல் கொண்டு ஆரனை காட்டிட,
முதலில், கௌதம் கரம் கொடுத்த அழுத்தத்தில் புரியாது அவரின் முகம் பார்த்தவன், அதில் தெரிந்த சந்தோஷம் கலந்த கண்ணீர் பாவனையில், அவர் கரம் காட்டும் திசையை பார்க்க, பேப்பரிலும், இப்போது அந்த ஏஜெண்ட்டிடம் கொடுக்க கொண்டுவந்த போட்டோவிலும் பார்த்திருந்ததால் ஆரனை அடையாளம் கண்டு கொண்ட அமுதன், “வாவ்.. அண்ணா நமக்கு வெயிட் பண்ண வேண்டிய அவசியமே இல்லாம, அவரே நம்ம கண்ணு முன்னாடி.. கிரேட் இல்ல..!” என்றபடி கௌதமை, மெல்ல அவர்கள் அமர்ந்திருந்த இடத்திற்கு அழைத்து செல்ல, அங்கு ஆரன் சொன்ன விசயத்தை கேட்டு அதிர்ந்து நின்றனர், சிலையென இருவரும்…
தன் முன் அமர்ந்திருந்த பெண்ணிற்கு, தனது லேப்டாப்பை எடுத்து எதையோ காட்ட விளைந்திருந்த ஆரனை, கௌதம் நெருங்கவும், “இங்க பாருங்க, இது தான் என்னோட பேமிலி.. இது தான் மை லிட்டில் ஏஞ்சல், என்னோட பொண்ணு பட்டு…!” என காட்டிய புகைப்படம், அந்த மெல்லிய இருளில் பளிச்சென தெரிய, அதில் இருந்தது, சமீபத்தில் கொண்டாடப்பட்ட பட்டுவின் பிறந்தநாள் புகைப்படம்…
தேவதை போன்று, அழகிய வெண்ணிற கவுனில், ஆரனின் தோள் சாய்ந்து சிரித்தபடி இருந்த, சின்ன குழந்தையை பெருமித்தோடும், மகிழ்வோடும் பார்த்த படி, மலர்ந்த முகத்தோடு காயத்ரி ஒரு புறமும், ஆரன் மறுபுறமும் இருக்க, அந்த புகைபடத்தை கண்ட நொடி மனதில் எழுந்த வலி, மெல்ல கௌதமின் உடலுக்கு கடத்த, ஏற்கனவே சற்று பலகீனம் கொண்ட உடல் வேகமாய் நடுங்க துவங்கியது..
அவரை கைபற்றி நின்றிருந்த அமுதனுக்கே, அதை பார்த்த போது அவ்வளவு வேதனையை கொடுக்கும் போது, கௌதமின் நிலை! என்று அவரை பார்த்தவன், அவரால் நிச்சயம், இனி ஒரு நிமிடமும் இதை காணும் சக்தியோடு இருக்க மாட்டார் என்பது விளங்க, அவரை தன்மீது முழுமையாய் சாய்த்தவன், விரைவாக, அந்த ஹோட்டலில் இருந்து அழைத்து வந்தான் வீட்டிற்கு..
வரும் வழி முழுவதும், நடைபிணம் போல், ஒரே இடத்தை வெறித்திருந்த கௌதமை காண காண பொங்கும் வேதனையை பற்களை கடித்து அடக்கியபடி வீட்டிற்கு வந்தான் அமுதனும்… வீட்டினுள் நுழைந்ததும், கௌதம், “அமுதா, அந்த ஏஜென்ட் கிட்ட சொல்லி, அவங்கள பத்தி விசாரிக்க வேணாம் சொல்லிடு..!” என்றிட…
இனி அவர்களை பற்றி தெரிந்து சென்றாலும், இதே வேதனை தானே மிஞ்சும் என்று நினைத்த அமுதனும் “சரிண்ணா.. நா பார்த்துக்கறேன்.. நீங்க தூங்குங்க… ப்ளீஸ், இனி அத மறக்க பாருங்க..!” என்றிட…
“மறக்கறதா…!” என்றபடி ஒரு விரக்தியான சிரிப்பை உதிர்த்த கௌதம், “அமுதா, இப்ப, இந்த நிமிஷம், நா அந்த கடவுள் கிட்ட வேண்டிக்கறது ஒன்னே ஒன்னு தான், இன்னொரு முறை, நா அவங்கள பார்க்க கூடாது. அப்படி பார்த்தா, நா எப்படி ரியாக்ட் பண்ணுவேன்னு சத்தியாமா எனக்கு தெரியல…! அது நிச்சயமா அவங்க மேல இருக்கற சந்தேகத்துல இல்ல.. அவங்க வாழ்க்கையில, என் மூலமா மறுபடியும் ஒரு சூறாவளி வீசிட கூடாதேன்னு தான்….!” என்ற சொன்னவனின் குரலில் இருந்த உறுதியும், அதை விட அதிகமாய் தெரிந்த வலியும் புரிய.. கௌதமிற்காக அதே வேண்டுதலை வைத்தபடி வெளியேறினான் அமுதன்…..
*****
அமுதன் சொல்லி முடித்த போது, அந்த அறையில் நிசப்தம் மட்டும் பல நிமிடங்கள் நீடித்தது. காரணம் அனைவர் மனதிலும் அந்த நேரத்தில் மற்றவர் சிக்கி கொண்டு, சூழ்நிலை கைதியாகி ஒருவர் மற்றவரால் அணுகிட இயலாமல் போனது குறிந்த சிந்தனையால்….
அமுதன் சொன்னதை வைத்து பார்த்தால், காயத்ரிக்கு நேர்ந்த விபத்தன்று தான், கௌதமிற்கும் தலையில் பட்ட அடிபட்டிருக்கும். அதனாலேயே அவன், அன்று அந்த நிலையில் அதிர்ந்து அமர்ந்திருக்கிறான். அதோடு அடிக்கடி தலைவலி என்றது, வாமிட் செய்தது, சோர்ந்து இருந்தது என அனைத்தையும் பார்த்தும், நீ அக்கரையோடு அவனை கவனிக்காமல் விட்டுவிட்டாய்!’ என்று ஆரனின் மனசாட்சி கேள்வி கேட்க, தன்னையே மன்னிக்க இயலாது தவித்தவன்,
யாரும் எதிர்பாரா வண்ணம் அமுதனை அணைத்து, கண்ணில் வடியும் நீரோடு, “தேங்க்ஸ் அமுதா.. நீ மட்டும் அன்னைக்கி, சரியான நேரத்தில டாக்டரோட கருத்துக்கு எதிர்ப்பு சொல்லாம போயிருந்தா..!” என்றவனின், உடலில் தோன்றிய மெல்லிய நடுக்கம், ‘இன்று கௌதம் முழுமையாய், தன் முன் வராமல் போயிருப்பானே..!’ என்ற பயத்தை உணர்த்தியது..
“அண்ணா, எனக்கும் இவரோட எல்லா நியாபகமும் திரும்ப வந்திட்டதா நினச்சி தான், அவரு வேணாமின்னு சொன்னதும், சரின்னு விட்டுட்டேன். இல்லையென்றால் நான் அவர் சொன்னதை செய்திருக்க மாட்டேன்..!” என்று தானும் இதை சரியாக செய்யவில்லையே, என்ற ஆதங்கத்தில் சொன்னவனை பார்க்கும் போது, கௌதம் சேர்த்துவைத்திருக்கும் உன்னத உறவுகளை நினைத்து பெருமையே எழுந்தது ஆரனுக்கு..
உணர்ச்சி வசப்பட்டதால், கரகரத்த தொண்டையை சரி செய்த ஆரன், “நா செஞ்ச முதல் தப்பால காயத்ரியோட மானத்திற்கு இழுக்கு வந்துச்சுன்னா, ரெண்டாவது தப்பு கௌதமோட அழகான குடும்பத்தையே, அவன்கிட்ட இருந்து பிரிச்சிடுச்சு! அதோட, நா கொஞ்சம் அக்கரையோட கௌதமை பார்த்திருந்தா என் கௌதமுக்கு இப்படி ஒரு நிலைமையே வந்திருக்காதே!” என தவறு முழுவதும், தன் பக்கம் மட்டுமே என பேசும் நண்பனை பார்த்த கௌதம்,
“டேய், உனக்கு அக்கரை இல்லாம இல்ல.. என் உடம்பு மேல எனக்கு அக்கரை இல்லாம போனதால தான்.. அது மட்டுமில்ல, இந்த விசயம் எதுவுமே நீயோ, அல்லது நானோ திட்டம் போட்டோ இல்ல விளையாட்டாகவோ செய்யல.. ஆனா நடந்திடுச்சு! இதுல குற்றவாளி நீயா, நானா ன்னு பார்க்கறத விட, இதுல அதிகமா தண்டனைய அடைச்ச காய.. இல்ல… என்னோட செல்லம்மா’வ இனியாவது நல்லபடியா பார்த்துக்கணும், அது தான் இப்போ ரொம்பவும் முக்கியம்!
ஆனா, அவ என்னோட தரப்ப சொன்னா, என்னை ஏத்துப்பாளா ன்னு தெரியலையேடா…?!” என்று ஆரனிடம், ‘எங்கே தன்னவள் தன்னை வெறுத்திடுவாளோ?!’ என்ற ஆதங்கத்தோடும், பரிதவிப்போடும் கேட்க,
“கௌதம், உனக்கு காயூவோட காதலின் ஆழம் புரியல… அமுதன் சொல்லும் போது தான் எனக்கு புரிஞ்சுது.. உனக்கு ஆபத்தோ அல்லது எதாவது விரும்பத்தகாத நிகழ்வோ நடக்கும் போது, அது அவள மனசளவுல பாதிக்குது.. உன்னை கருணைக்கொலை செய்ய பேசினதா சொன்ன நேரத்துல தான், காயத்ரி ராத்திரியில பயந்து பதறி எழுந்து ஓயாம அழுதது.. அது மட்டுமில்ல, பட்டு பிறந்த உடன், அவளுக்கு மயக்கம் தெளியவே இல்ல. அமுதன், நீ.. மீண்டு எழுந்ததா சொல்ற, அப்ப தான் அவளும் திரும்ப வந்தா..!
இவ்வளவு ஏன், ரெண்டு நாள் முன்னாடி, இதோ..!” என்றவன், கௌதம் கரத்திலிருந்த கட்டி காட்டி.. “இதுகூட அவளால உணர முடுஞ்சிக்கும் போதே தெரிய வேண்டாமா…! இப்பவும், அவ உனக்காக தான், நீ.. நல்லபடியா திரும்ப வருவன்னு விரதம் இருந்துட்டு இருக்கா…!” என அனைத்தையும் சொல்ல, தன் மீது இவ்வளவு நம்பிக்கையை வைத்திருந்தவளுடன், வாழ்ந்த வாழ்க்கையையே மறந்து போய் நிற்கும், தன் மீதே கோபம் எழுந்தது கௌதமிற்கு…
அவனின் மனநிலை புரியாமல் ஆரன், “கௌதம் அன்னைக்கி, அந்த ஹோட்டலுக்கு என் பிஸ்னஸ் டெவலப் பண்ண பணம் தேவை பட்டதால, லோன் விசயமா பேச பேங்க் மேனேஜரோட வந்திருந்தேன். அவர் பேசிட்டு போகும் போது, எதார்த்தமா அந்த பக்கம் இருந்த ரூம்ல ஒரு பொண்ணு ஹெல்ப் கேட்டு கத்தற சத்ததுல போய் பார்த்தா, ஒருத்தன் அந்த பொண்ணுகிட்ட மிஸ்பிகேவ் பண்ணிட்டு இருந்தான்.
அவன அங்கிருந்த ஹோட்டல் மேனேஜர கூப்பிட்டு, போலீஸ்ல ஒப்படைச்சிட்டு தான், அந்த பொண்ணு கூட பேசிட்டு இருந்தேன். ரொம்பவும் பயந்து போன அவள சகஜமா பேச வைக்க தான், பட்டு போட்டோஸ் காட்டிட்டு இருந்தேன்.
நீ, இப்ப காப்பாத்தி ஹாஸ்பிட்டல்ல சேர்த்தியே, அந்த ஹரிணி தான் அந்த பொண்ணு.. அவளோட குவாலிபிகேஷன் பார்த்துட்டு, என்னோட கம்பெனியில வேலைல சேர சொல்லவும், அவளோட முதலாளி மாதிரி ஆகிடுமோன்னு பயந்தவ, நா கல்யாணம் ஆனவன்னு நம்பற மாதிரி, அந்த போட்டோஸ் அமைஞ்சிட, அதையே நானும் மறுக்காம போனதால வந்த பிரச்சனை, இவ்வளவு தூரம் நம்ம லைப்பையே மாத்தி போட்டிடுச்சு…!” என வருத்தத்தோடு சொல்ல,
“ஆரன், உன்னை மட்டுமே குத்தம் சொல்லாதே, நீ, உன் பக்கத்தை எனக்கு உணர்த்த வேண்டி, எத்தனையோ மெயில்ஸ் அனுப்பின தானே..?! நீ அனுப்பின மெயில்ஸ், என்னோட பர்ஷனல் மெயில்ல இருந்ததால, யாருமே பார்க்கல ன்னாலும்,
நா மறுபடியும் கம்பெனிய பார்க்க ஆரம்பிச்ச பின்னாடி, அந்த மெயில் ஐடிய ஓப்பன் பண்ணினேன். அதுல உன் மெயிலை படிக்கல. அதை, நா படுச்சிருந்தாலும், இவ்வளவு சிக்கல் வந்திருக்காதே…
எனக்கிருந்த பயமே, எங்க அந்த மெயில்ல, செல்லம்மாவுக்கும், உனக்கும் நடந்த கல்யாணத்த பத்தி சொல்லியிருந்தால்… அப்படிங்கறது தான்….
கிட்டதட்ட ரெண்டு வருஷமா, உன்னோட பர்ஷனல் மெயில் ஐடில இருந்து வந்தது, உன்னோட கம்பெனி A. G. ங்கற நேம்ல வரவும், அத தொடவே கூடாதுன்னு முடிவே பண்ணிட்டேன்”
“A. G. என்னோட கம்பெனின்னு உனக்கு அப்பவே எப்படி தெரியும்.. ?! என்னா, முதல்ல அது அப்பா பேர்ல தான் இருந்துச்சு.. நா, அத டெவலப் பண்ணும் போது தான் பேர் மாத்தினேன்..” என்று ஆச்சரியத்தோடு கேட்க,
“நீங்க பார்க்க போன பேங்க் மேனேஜர் மூலமா, நீங்க லோனுக்கு அப்ரோச் பண்ணது தெரிஞ்சு.. கௌதம் அண்ணா தான் ஸ்யூரிட்டி சைன் போட்டு, லோன் கிடைக்க வச்சாங்க. பட், உங்களுக்கு தெரியாம தான்..
அதோட, அப்ப இருந்து உங்க கம்பெனிக்கு வந்த, புது ஆர்டர்ஸ், கஸ்டமர்ஸ் எல்லாத்துலையும் அண்ணாவோட பங்கும் இருக்கு….” என்ற அமுதனின் வார்த்தையில், என்ன சொல்ல என்பதே தெரியாமல் திகைத்து நின்றான் ஆரன்…
“அதோட இப்ப சமிபத்துல, உங்க கம்பெனி காண்ட்ராக்ட் எல்லாமே, ஒரு குறிப்பிட்ட கம்பெனி தட்டிப்பறிக்கறது தெரிஞ்சு தான், நாங்க அங்க வந்தோம்…” என்றதும், தன்னை விட்டு விலகி நின்ற போதும், தனக்காக பார்த்து, பார்த்து இப்போதும் செய்துவிட்டு, தனிமையை மட்டுமே, இன்றும் துணையாக்கி வாழும் கௌதமை பார்த்தவனுக்கு, அவனின் பொக்கிஷத்தை உடடனடியாக அவனுடன் சேர்க்கும் எண்ணம் வலுத்தது.
“உங்க ரெண்டு பேரோட பெயரையும் வச்சு கம்பெனி ஆரம்பிச்சதும், உன்னை விட்டு விலகி நிற்கணுமின்னு, எடுத்த முடிவுல ரொம்பவும் ஸ்ராங்கா இருந்தாலும், நீயும், செல்லம்மாவும் எந்த விதத்திலையும் கஷ்டமில்லாம வாழனுமின்னு தான், ஒதுங்கி நின்னு எல்லாத்தையும் செஞ்சேன்..!” என்ற கௌதமின் வார்த்தையில்,
தலையில் கை வைத்து அமர்ந்த ஆரன், “அடேய், முடியலடா. ஏன்டா.. ஏன்… நீங்களா, ஒரு அர்த்தத்த எடுத்துக்கிட்டு, மனுஷன டார்ச்சர் பண்றீங்க…?!” என்றபடி, அடுத்து சொன்ன வார்த்தையில் , “என்னதூ….!” என்றபடி எழுந்தனர், கௌதமும், அமுதனும்…..