UEJ-35(2)

தனது கரத்தில் இருந்த, பதிவு திருமணத்திற்கான சான்றும், அதனோடு சிறிய பாக்ஸில் தாலியோடு இருந்த லெட்டரையும் பார்த்தவளுக்கு, அதை எப்படி எடுத்துக்கொள்ள என்றே முதலில் புரியாது தான் திகைத்தாள்.

 

அந்த கடிதத்தில்,

 

இன்று உன் கரத்தில்…

நாளை உன் கழுத்தில்…

 

என்று கௌதம் கைப்பட எழுதியிருந்த வாசகத்தை கண்டபின், அவளால் தனது உணர்வுகளை கட்டுப்படுத்த முடியாது போக, அவளின் கண்ணீரால் நனைந்தது அவள் கரத்திலிருந்த அந்த மாங்கல்யம்…

 

அவர்களின் திருமணம் சட்டபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டது என்பதை, பார்த்த போது, அந்த பரிசை பார்க்காமல் போனதற்கு, கௌதம் ஏன் அப்படி ஒரு பாவனை காட்டினான் என்பதும், எதனால் அவன் ஒரு நொடி, தன்னை நெருங்கும் வேளையில் யோசனையில் ஆழ்ந்தான் என்பதும் இப்போது தெளிவாக, அவள் கௌதம், தன் மனைவி என்னும் உரிமையால் மட்டுமே தன்னை நெருங்கியிருக்கிறான் என்பது, அவளின் மனதில் இதுவரை இருந்த அத்தனை குற்ற உணர்வும் நீங்கிட, தன்னவன், தனக்கு, எந்த நிலையிலும்  கலங்கம் ஏற்படாமல் காக்க செய்திருப்பதை எண்ணி, மனதில் பெரும் நிம்மதியை விதைத்தது.

 

அந்த ஆனந்தமும் சேர, கண்கள் அருவியாய் மாறி, கண்ணிரை பொழிய அழுது ஓய்ந்தவள், கௌதமின் குரலை இந்த நொடி கேட்க வேண்டும் என்ற உந்துதலோடு, அவனுக்கு அழைக்க துவங்கினாள். அன்று காலை துவங்கி பலமுறை முயன்றும் கிடைக்காமல் போக, அதற்கும் சேர்த்து வைத்து அழுதவள், இறுதியாய் ஆரனுக்கு தகவல் அனுப்ப, அவன் கௌதம் வருவதாய் சொன்ன சொல்லிற்காக, அந்த ஹோட்டலுக்கு சென்றவள், அதன் பின் விதியின் கைபாவையாகி போனாள்.

 

******

 

நடந்த அனைத்தையும் சொல்லி முடித்த பின்பும், தனது கரத்தில் இருந்தவற்றை வெறித்தவனின் நிலையில் மாற்றமில்லாது இருக்க, அவனை நெருங்கி, “கௌதம்…!” என்றதும், “செல்லம்மா… எனக்கு.. எனக்கு.. என்னால.. இது எப்படி நடந்தது. எனக்கு தெரியல..! பட், என்னோட குற்ற உணர்வை, உனக்கு, நா செய்ததா நினச்ச துரோகத்தை, இது போக்கிடுச்சு..!!” என்றவனின் குரலில் இருந்தே, அவனின் மகிழ்ச்சியும், நெகிழ்ச்சியும் புரிய, அவனின் அருகே நின்றவள், அவனின் தலையை, தனது வயிறோடு சேர்த்தணைக்க, அவனும் தனது ஒரு கரம் கொண்டு, அவளின் இடையோடு அணைத்துக்கொண்டான்.

 

அவன் கேட்க வருவது புரிய, “எனக்கே

இது சர்ப்ரைஸ் தான் கௌதம். ஏன்னா இப்படி ரிஜிஸ்டர் மேரேஜ்க்குன்னு, நா கையெழுத்தே உங்களுக்கு போட்டு கொடுக்கல…! அதனால தான், அவ்வளவு ஷாக்..” என்றதும்,

 

அவளுக்கே தெரியாமல் எப்படி தான் இதை செய்தோம், என்ற குழப்பம் வர, “அப்ப இது எப்படி சாத்தியம் செல்லம்மா?! ஒருவேளை, நா போர்ஜரி பண்ணி ரெடி பண்ணியிருக்கனா..?!” என்றவனுக்கு மனதில், ‘அவ்வாறு இருந்திடக்கூடாதே!’ என்ற பயமும், நிச்சயமாய் எழாமல் இல்லை.

 

“நிச்சயமா இல்ல.. இது என்னோட கையெழுத்து தான்!” என்ற உடன் தான், நிம்மதியாய் உணர்ந்த கௌதம்,

 

“அப்ப, உனக்கே தெரியாம எப்படி?!” என்று சந்தேகத்தை எழுப்ப,  

 

“அன்னைக்கி, ஆரன் பிறந்தநாளுக்கு போயிட்டு வரும் போது தான் நீங்க, நா எது செஞ்சாலும், என் மேல நம்பிக்கையோட இருப்பியாங்கற மாதிரி கேட்டதுக்கும், இதுக்கும் நிச்சயம் சம்மந்தம் இருக்குமுன்னு தோணுது எனக்கு.

 

பிக்காஸ், அத கேட்ட அடுத்த ரெண்டு நாள்ல, கால் பண்ணி, கம்பெனிக்கு வர சொன்னீங்க. அப்ப, என்னோட ட்ரீட்மெண்ட் விசயமா, பாரின் கூட்டிட்டு போற ப்ளான் இருக்கு, அதுக்கு பாஸ்போர்ட் அப்ளை பண்ண ஃபாம் ன்னு சொல்லி, கையெழுத்து வாங்கினது எனக்கு நல்லா நியாபகம் இருக்கு. அது தவிர வேற எப்பவும், நா உங்ககிட்ட கையெழுத்து போட்டு கொடுக்கவே இல்ல.

 

சோ, அதுல இதையும் வச்சிட்டு தான், நா படுச்சிட கூடாதுன்னு, அந்த சேட்டை அன்னைக்கி பண்ணியிருக்கீங்க.!” எனும் போதே, அவளின் குரலில் வந்த மாற்றத்தில், அன்று தான் ஏதோ சில்மிஷம் செய்து, அவளுக்கே தெரியாமல் கையெழுத்து பெற்றது புரிய,

 

சட்டென, நெற்றியில் அறைந்து கொண்டவன், “சாரிடா, அப்பவே உன்கிட்ட ஓப்பனா பேசி, எல்லாத்தையும் செஞ்சிருந்தா, இத்தன பிரச்சனையும் நடக்காம தவிர்த்திருக்கலாம்! நா செஞ்ச சின்ன தவறு, எப்படிபட்ட இழப்புக்கள நமக்கு கொடுத்திருக்கு…!” என்றவனுக்கு தனது செயலில், தன் மீதே கோபம் வர, அதை எப்படி தீர்க்க என்பதாய் தவிக்க துவங்கினான்.

 

அவனின் கோபமும், அதற்கான காரணத்தையும் நன்கு உணர்ந்தவள், “கௌதம் இங்க பாருங்க, நீங்க, இத இவ்வளவு தூரம் அவசரமா செஞ்சிருக்க, வேற காரணமும் இருந்திருக்கலாம். உங்களுக்கு ஏற்பட்ட மறதி தான் காரணமே தவிர, இதில் உங்க பிழை என்று எதுவுமே இல்லை. எல்லாமே, விதி செய்த சதி..!” என்று சமாதானம் செய்தாலும், அவனின் முகம் தெளியாததை பார்த்தவள்,

 

இது உடனே சரி செய்ய முடியாத பிரச்சனை, அவனே தேறி வந்தால் மட்டுமே இது சரியாகும் என்பதை உணர்ந்து, “ஓகே கௌதம், அதெல்லாம் போகட்டும். ஏற்கனவே லேட் நைட் ஆகிடுச்சு. படுத்து தூங்குங்க. எதுவானாலும் நாளைக்கி பார்த்துக்கலாம்..” என்று, அவன் படுப்பதற்கு ஏதுவாய், தலையணையை வைத்தவள், அம்மூவை நடுவில் விட்டு மறுபுறம் சென்று படுத்துக்கொண்டாள், அவனை மேலும் வேறு விதத்தில் தொந்தரவு செய்திட கூடாது என்ற எண்ணத்தில்..

 

பல்வேறு சிந்தனைக்கும் நடுவே, தனது மனைவி, குழந்தை அருகிருக்கும் நிலை, கௌதமின் விழிகளை தூக்கத்தில் ஆழ்த்த, நீண்ட வருடத்திற்கு பிறகு நெஞ்சின் நிம்மதி வெகு நேரம் வரை தூக்கத்தில் அவனை மூழ்கடித்தது.

காலையில், தனது செல்ல மகளின், “அப்பா, வேக் அப்..! குட் மார்னிங்” என்ற குரலில், விழி திறந்தவனுக்கு அன்றைய நாள், மிகவும் இனிமையானதாய் மாறிப்போனது…

 

அம்மூவோடு வெளியே வந்தவன், ஹாலில் அமர்ந்திருந்த ஆரனிடம் செல்ல, அவனிடமும், “டாடி, குட் மார்னிங்!” என்ற அம்மூவிடம், “ஹாய், பட்டு குட் மார்னிங்..!” என்றபடி, அவளை தூக்கவென, கை நீட்டியவனிடம் செல்லாது, கௌதமின் மடியிலேயே இருக்க நினைத்து, அவன் கழுத்தை கட்டி கொண்டதை பார்த்த நொடி, ஆரன் கண்ணில் வந்து போன உணர்வை அவதனித்த கௌதமிற்கு, உடனடியாக, ஏதாவது இதற்கு செய்ய வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது.

 

காலை உணவிற்கு பிறகு, ஆரன், கௌதம், அமுதன் மூவரும் துஷ்யந்த் தொடர்பான வேலையிலும், அவரவர் கம்பெனி விசயத்திற்காகவும், பிசியாகி போக, அன்றைய நாள் மட்டுமல்லாது தொடர்ந்த சில நாட்களும், அதே போலவே சென்றது.

 

தனியாக இருக்கும் வேளையில், ஆரனுடன் இருக்கும் அம்மூ, கௌதம் வந்த நொடி, அவனிடம் தாவிச்செல்வதை ஒருவித இயலாமையோடு, யாரும் அறியா வண்ணம், தன் முக பாவத்தை வைத்துக்கொண்டு நகரும், ஆரனின் மனப்போராட்டத்தை கௌதமால் மட்டும்  நன்கு உணர முடிந்தது. இது போன்ற உதாசினத்தை, நிதமும் அனுபவித்தவன் ஆயிற்றே.. அவனுக்கா தெரியாது… ஆரனின் மனதை பற்றி..

 

அதே யோசனையில், பால்கனியில் நின்றிருந்த கௌதமிற்கு பால் கொண்டு வந்த காயத்ரி, அவனின் தீவிர யோசனையே பார்த்து, “என்னாச்சு, கௌதம்?! என்ன இவ்வளவு டீப் திங்கிங்..!” என்றிட, அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்தவன், அவனின் செல்லம்மாவை இழுத்து தனது மடியிலேயே அமர்த்தி, அவளை பின்னிருந்து அணைத்தவன், அவளின் கழுத்துவளைவில் முகம் வைத்து,

 

“செல்லம்மா, அம்மூ வர வர ஆரன அவாய்ட் பண்ணிட்டே இருக்கா.. அது அவன ரொம்ப ஹர்ட் பண்ணுது.. அதான் ஒரே யோசனையா இருக்கு, என்ன செய்யன்னு..?!” என்றதும்..

 

“கௌதம், அவ பொறந்ததுல இருந்து, ஆரன் கூட தான் இருந்திருக்கா.. புதுசா உங்கள பார்த்ததும், இப்ப இப்படி பிகேவ் பண்ற.. கொஞ்ச நாள்ல நார்மல் ஆகிடுவா.. குழந்தைன்னா அப்படி தான்.

பட், நீங்க சொன்னதும், எனக்கும் ஒரு விசயம் தோணுது.. சொல்லவா..?!” என்றிட,

 

“நீ சொல்றத, நா எப்பவும் இனி மறுத்து பேச மாட்டேன். சொல்லு செல்லம்மா…!” என்றிட,

 

“நம்ம ஆரனுக்கு, கல்யாணம் செஞ்சு வச்சிட்டா, அவருக்கும் குடும்பம், குழந்தைங்கற நிரந்தர பந்தம் கிடச்சிடுமே..!” என்றதும், சட்டென அவளை, தன்னை நோக்கி திருப்பிய கௌதம், அவளின் முகமெல்லாம் முத்த மழை பொழிந்து விட்டு,

 

“ச்சான்சே இல்ல செல்லம்மா..! நானும் ரெண்டு, மூனு நாளா குழப்பிட்டே இருந்தேன். என்னோட குழப்பத்த, ஒரு நிமிஷத்துல தீர்த்து வச்சிட்ட.. லவ் யூ டீ…!” என்று உணர்ச்சி வசப்பட்டவனின் குதூகலத்தில், சிறிது நேரம் மெல்லிய புன்னகையோடு அமர்ந்திருந்தவள்,

 

அவனின் சட்டை பட்டனில், தனது விரல் கொண்டு விளையாடிய படி, “கௌதம், ஆரனுக்கு நா சொல்ற பொண்ணையே பேசி முடிக்கறீங்களா..?!” என்று கேட்க,

 

“செல்லம்மா, நீ சும்மா சொன்னாலே செய்வேன், இதுல, நீ இப்படி உக்காந்து, இந்த மாதிரியெல்லாம் கேட்டா மாட்டேன்னு சொல்லிடுவேனா இல்ல, சொல்ல தான் முடியுமா…! சொல்லு, யாரு அந்த பொண்ணு?!

 

நீ, எப்படி எனக்கு எல்லாமுமா இருக்கியோ, அதே மாதிரி அந்த பொண்ணு, ஆரன பார்த்துக்கணும்! அது மட்டும் தான், எனக்கு வேணும்.. மத்தபடி படிப்பு, வசதி, ஜாதியெல்லாம் தேவையே இல்ல..” என்றதும், அவனின் ஆரன் மேலான அக்கரையை ஏற்கனவே அறிந்திருந்தவள் தானே, அதனால்,

 

“கௌதம் உங்கள விட, ஆரன் லைப் நல்லா அமையணுமின்னு நினைக்கறதுல, நா உறுதியா இருக்கேன். நமக்காக, அவர் இழந்த இழப்பு சாதாரணமானது இல்ல. அவர அப்பா, அம்மாவா இருந்து பார்த்துக்கற அளவு அவன் மேல உண்மையான பாசம் வச்சிருக்கற பொண்ணு தான், நா சொல்றது” என்றதும்,

 

காயத்ரி சொல்வதை கொண்டு பார்த்தால், நிச்சயம் அவளுக்கு மிகவும் பரிச்சயம் ஆன பெண் தான் என்பதால், “யார் அந்த அதிஷ்டசாலி, என்னோட ஆரனுக்கு நீ பார்த்திருக்கற, பொண்ணு?!” என்றிட,

 

“அந்த பொண்ண கட்டிக போற, ஆரன் தான் உண்மையிலேயே அதிஷ்டசாலி. அவ வேற யாருமில்ல, நம்ம ஹரிணி தான். அவரோட வேலைல இருந்து, ஹெல்த் வரை ரொம்ப அக்கரையா கவனிச்சு, பார்த்துக்கறவ… அன்பும், பாசமும் நிரஞ்ச பொண்ணு. அமைதியா, பொறுமையா, ஆரன் சேட்டைக்கு அடங்கி போறவ..” என்றதும்,

 

“நீ, முடிவு பண்ணிட்ட தானே செல்லம்மா,  இனி மத்தத நா பார்த்துக்கறேன்..!”  என்று வாக்கு கொடுத்தவன், அடுத்த அடுத்த திட்டத்தை மனதில் தீட்டி முடித்து உறங்கச்சென்றான்.

 

அடுத்த நாளே, காயத்ரியோடு மருத்துவமனைக்கு சென்றவன், ஹரிணியிடமும், அவளின் தாயிடமும் நடந்த சகலத்தையும், விளக்கி சொல்லி ஆரனுக்கு, ஹரிணியை மணம் முடிக்க கேட்டான்.

 

ஏற்கனவே ஆரனின், காயத்ரி, பட்டு மீதான அக்கரையில், அவன் போன்றவன் வந்தால் நன்றாக இருக்குமே, என்று நினைத்திருந்தவளுக்கு, அவனையே மணக்க கேட்ட போது மறுத்து கூற இயலா விட்டாலும், தனக்கு கடந்த காலத்தில் நேர்ந்த நிகழ்வுகளை கொண்டு, அதை ஆரன் எவ்வாறு எடுத்துக்கொள்வனோ?! தன்னை ஏற்பதில் அவனுக்கு எந்த விதமான உறுத்தலும் இல்லாது இருக்க வேண்டுமே?! என்பதை நினைத்தவள்,

 

“சார், நா சம்மதிக்கறது இருக்கட்டும். முதல்ல, ஆரன் சாருக்கு இதுல சம்மதமான்னு கேட்டுட்டு முடிவு செய்ங்க!” என்றிட,

 

“உனக்கு, ஓகே ன்னா போதும்மா..! என் ஆரன பத்தி, எனக்கு நல்லா தெரியும். அவன், நா சொன்னா கேட்பான். உனக்கு, ஓகே வா?!” என்று கேட்ட கௌதமிற்கு பதில் சொல்லாமல், தனது தாயை பார்க்க, அவருக்கும் ஆரனின் செயலில், அவன் மீது ஏற்கனவே இருந்த நன்மதிப்பு இப்போது இன்னும் கூடிப்போனதில், ‘சம்மதம்’ என்பதை கண்களால் அறிவிக்க,

 

“ஓகே சார், அவருக்கு ஆட்சேபனை எதுவும் இல்லன்னா, இந்த கல்யாணத்துக்கு நா சம்மதிக்கறேன்!” என்றதும், காயத்ரி ஹரிணியை அணைத்து, தனது மகிழ்ச்சியை தெரிவிக்க, கௌதம், ஹரிணியின் தாயோடு பேசி, ஹரிணியின் உடல்நிலைக்காக, ஒரு மாதம் சென்று இரு முறைப்படியும் திருமணம் செய்வதாய் முடிவு எடுக்கப்பட்டது.

 

ஆரனின் விருப்பத்தையும், சம்மதத்தையும் அறியாமல்  கௌதம், காயத்ரி செய்திருக்கும் செயலுக்கு ஆரனின் பதில்….?????!!!!!