UKIK – 8

8

இன்னும் ஒரு நாள் தான் மீதமிருக்கிறது, அதற்குள் தனது கையில் இருக்கும் கொலை கேஸில் ஏதாவது தடயம் சேகரித்துவிட வேண்டும் என நினைத்த கனிஷ்கா, இரவு ரவுன்ட்ஸை கொலை நடந்த இடத்தின் பக்கம் வைத்தாள்..

எப்போதையும் போல பைக்கை மெதுவாய் ஓட்டி வந்தவள், ஆளில்லா அந்த பஸ் நிலையத்தின் ஓரமாய் பைக்கை ஸ்டான்ட் போட்டு நிறுத்தினாள்..

பின்பாக்கெட்டில் இருந்து கர்சீப்பை எடுத்தவளின் கரங்கள் கைத் துப்பாக்கி இருக்கிறதா எனத் தொட்டுப் பார்க்க, இன்று அவளின் போதாத காலம் மறந்து வைத்துவிட்டு வந்திருந்தாள்..

‘உச்’ கொட்டி தனது மடத் தனத்தை ஒதுக்கியவள், கையில் வைத்திருந்த கர்சீப்பை உதறி, அந்தப் பேருந்து நிலையத்தில் ஒரு இருக்கையில் அமர்ந்தாள்..

லேசாக குனிந்து அமர்ந்து கைகளை தொடைக்கு மேல் வைத்து முன்னே கோர்த்தவள், தலையை கொஞ்சம் மேலே நிமிர்த்தி சுற்றம் பார்த்து கொண்டே கொலை நடந்த அன்றைய சம்பவத்தை தனது மனக் கண்ணில் கொண்டு வந்தாள்..

பத்து நாட்களுக்கு முன் காலை 6.30 மணி,

“இந்தா மா லஞ்ச் பேக்..” பைக்கில் இருந்து இறங்கும் ஸ்தமதியின் கையில் தந்தை கோபால் கொடுத்த உணவு பையை வாங்கியவள்..

“ம்..” என முனங்கலுடன் அவ்விடம் விட்டு அகன்று பேருந்து நிறுத்தத்தில் இப்போது கனி உட்கார்ந்திருக்கும் இதே இடத்தின் அருகே வந்து நின்று கொண்டாள் ஸ்தமதி..

எப்போதும் மகளை இறக்கிவிட்ட உடனே கிளம்பிவிடும் கோபால் அன்று ஒரு நிமிடம் வரை அவ்விடத்தில் நின்றுவிட்டு கிளம்பினார்..

தந்தை சென்றதும் தனது கைப்பையில் மெல்லமாய் சினுங்கி இசைக்கும் தனது போனை ஆன் செய்தவள் பேசிக் கொண்டே போக, கொஞ்சம் கொஞ்சமாய் வேலைக்கு போகும் இளைஞர்களின் கூட்டமும் பேரூந்து நிலையத்திற்கு வரத் தொடங்கியது..

பேசியில் யாருடனோ வாதம் புரிந்து கொண்டே ஸ்தமதி தற்செயலாய் திரும்ப, அவளது பத்தடி தூரத்தில் கைத் துப்பாக்கியுடன் வந்தவன், அனைவரும் சுதாரிக்கும் முன் நெஞ்சிலும் வாயிலும் அவளைச் சுட்டிருந்தான்..

அனைவரும் பேருந்தை எதிர் பார்த்து ரோட்டைப் பார்த்து கொண்டும் போனை நோண்டிக் கொண்டும் இருந்த அந்த நொடி நேரத்தில், “டொப்..” என்ற துப்பாக்கி சத்தத்துடனும் அதைத் தொடர்ந்த அலறலுடனும் கீழே விழுந்திருந்தாள் ஸ்தமதி..

கூடியிருந்தோர் ஸ்தம்பித்து அவனைப் பிடிக்க அடியெடுத்து வைக்க முனையும் போதே துப்பாக்கி முனையில் அனைவரையும் மிரட்டி பக்கத்தில் இருந்த ரயில் நிலைய சுவர் ஏறி குதித்து மறைந்திருந்தான்…

இரத்த வெள்ளத்தில் 7.15 மணிக்கே ஸ்தமதி மிதந்திருக்க, அடுத்தடுத்த போலீஸுக்கு தகவல் தெரிவித்திருந்தனர்..

சம்பவத்தை மணக் கண்ணில் கொண்டு வந்தவள், கொலைகாரன் தப்பித்தாய் சொல்லும் சுவரை கூர்ந்து பார்த்து தற்செயலாய் கீழே பார்க்க,
அங்கே ஸ்தமதி இரத்த வெள்ளத்தில் படுத்திருந்து கனியைப் பார்த்து இதழ் சுழித்து கோரமாய் சிரித்தாள்..

தன் கண் முன்னே ஸ்தமதி இருக்கவும், நெஞ்சம் டக்கென அதன் இயக்கத்தை ஒருமுறை நிறுத்த, அடுத்த நொடி தன்முன்னே பிணமாய் மாறி புகையாய் காற்றில் கரைந்தாள் ஸ்தமதி..

புகையாய் அவள் மறைந்ததும், துணிச்சலாய் எழுந்த கனி, குற்றவாளி ஏறி குதித்த சுவரில் ஏற முயல, இரண்டு முறை தோல்வியைத் தழுவி மூன்றாம் முறையே அவளால் ஏற முடிந்தது..

சுவரில் கை வைத்து எம்பியவள் அப்போது தான் கவனித்தாள், தான் கை வைத்த இடத்தைத் தவிர்த்து மத்த இடங்களில் பீங்கான் பாட்டில்கள் நொறுக்கிப் போட்டிருப்பதை..

இப்போது தான் கைவைத்த இடத்தை கவனிக்கும் போது அது பீங்கான்களை எடுத்துவிட்டு சிமின்ட் பால் ஊற்றப்பட்டிருப்பதை போன்று இருக்க, வேகமாய் உள்வாங்கி கொண்டு எம்பி மேலேறி நின்றாள் கனிஷ்கா..

சுவரில் ஏறி நின்று சுற்றும் முற்றும் பார்க்க, இப்போது பஸ் நிலையத்தின் வாயிலில் கால்களை குறுக்கி தனது வயிற்றைப் பிடித்து உட்கார்ந்து இவளையே பார்த்து கொண்டிருந்தாள் ஸ்தமதி..

விழிகளை ஸ்தமதிவிட்டு வேறு பக்கம் திருப்பிய கனிஷ்கா, இப்போது குதிக்கும் இடத்தைப் பார்க்க, அது தான் ஏறி உயரத்தைவிட பள்ளமாய் இருந்தது..

இரு கைகளில் இருந்த தூசியை தட்டிவிட்டவள், எப்படி ஏறினாலோ அதே போல கீழே இறங்க, அவள் இறங்கி பைக்கில் ஏறி அங்கிருந்து அகலும் வரையிலும் அங்கே உட்கார்ந்து வெறித்து பார்த்து கொண்டிருந்தாள் ஸ்தமதி..

அச்சாலையைவிட்டு கிளைச்சாலைக்குள் வண்டியைச் செலுத்தி கொண்டிருந்த கனிஷ்காவிற்கு, இப்போது பல சந்தேகங்கள் முளைத்திருக்க, நேற்றில் இருந்து தான் ஒரு புது மனிதனால் கண்காணிக்கப் படுவதை உணராமல் பரத்திற்கு வாய்ஸ் மெசேஜ் அனுப்பிக் கொண்டிருந்தாள்..

***

நேற்று இரவு தூங்காத தூக்கத்தைக் கண்கள் இரண்டும் இறைஞ்ச, நாலு மணி நேரமாய் தனது தூக்கத்தை தொடர்ந்த சந்த்ருவை எழுப்பினான் ஆனந்த்..

கண்களைத் திறக்காமலே போனை எடுத்து காதுக்கு கொடுத்தவன், “ம்..” என முனங்க

“பாஸ், இவனை என்ன பண்ண..?” எனக் கேட்டான்..

“கிளம்பி வரேன்..” இருவார்த்தையில் பதிலளித்தவன் அடுத்த அரை மணி நேரத்தில் தனது வீட்டில் இருந்து
ஈசிஆர் போகும் சாலையில் வண்டியை ஓட்டினான்..

மனதில் வேகமாய் ஆயிரம் யோசித்தவனுக்கு, இரண்டு தினங்களுக்கு முன் ஈஸ்வர் இறந்த அன்று கனி குழப்பமாய் நின்றது சின்ன சிரிப்பை உதிர்க்க, அவளது எண்ணுக்கு,

“கொலை நடந்த இடத்தை பத்துமுறை பார்த்தா
கொலைகாரன் கிடைக்க மாட்டான்..” என அனுப்பி வைத்தான்..

ஈசிஆர் பங்களாவினுள் தனது வண்டியை அவன் நிறுத்தியதும், அன்றைக்கு போலவே ஒருவன் ஓடிவந்து நம்பர் ப்ளேட்டை மாற்றி வைக்க, சந்த்ரு வேகமாய் நடுகூடத்தை கடந்து ஆனந்த் இருக்கும் அறைக்குள் நுழைந்தான்..

ஆனந்த அங்கிருந்த ஒரு சேரில் தலைவைத்து படுத்திருக்க, மூலையில் கை, கால்கள் கட்டப்பட்டு கிடந்தான் ஒரு வாலிபன்..

ஆனந்தை எழுப்பாமல் நேரே அவனுக்கு எதிரே சந்த்ரு செல்ல, இவனது ஷூவின் சத்தத்தில் எழுந்துவிட்டான் ஆனந்த்..

சந்த்ரு கிடத்தப்பட்டவனுக்கு அருகே சென்றதும், ஆனந்த் ஓடிச் சென்று அவனது வாயின் கட்டை அகற்ற, அருகில் இருந்த சேரை இழுத்து போட்டு அதில் அமர்ந்தான் சந்த்ரு..

கைகளை மார்பின் குறுக்கே கட்டியவன், இடது காலின் மேல் வலது காலை வைத்து, அவனையே தீர்க்கமாய் பார்க்க,

“யாரு நீ..”எனக் கத்தி கொண்டிருந்தவனின் கண் கட்டு இன்னும் அவிழ்க்கப்படவில்லை..

அவனது எந்தக் கேள்விக்கு பதில் கூறாமல் அமைதி காத்தவன், “உன் பேர் என்ன..?” என்றான்..

சந்த்ருவின் கேள்வியில் வாயை இறுக மூடிக் கொண்டவன், அமைதியாய் இருக்க, அவனது உள்ளங்காலில் பிரம்பை வைத்து அடித்தான் ஆனந்த்..

வலியில் கத்துபவனின் முடியைக் கொத்தாய் பற்றிய சந்த்ரு, “சொல்லு..” என மொட்டையாய் சொல்ல,
“முத்து..” எனச் சொன்னான் அவன்..

“ம்…முத்து..” ஒருமுறை சொல்லி பார்த்தவன் ஆனந்திடம் கண்களால் செய்கை செய்து அனுப்பியவன்,

”எதுக்கு அந்த போலீஸ்காரியை ஃபாலோ பண்ற..?” எனக் கேட்டான்..

“அது வந்து..” அவனது தயக்கத்தில் இதழ் பிரித்து சிரித்தவன்,

“எது வந்து..?”

“அது..அது..” என்றவன் தயங்க, இப்போது அவனது வலது கையைப் பிடித்து, சுவரில் துளையிடும் மிஷினை ஆன் செய்து,

“சொல்றீயா இல்ல கையில ஹோல்ஸ் போடுவோமா..?” என மிரட்டலாய் ஆனந்த் கேட்டான்..

“இல்ல வேணாம்..என்கிட்ட ஒருத்தர் பணம் கொடுத்து அந்த மேடத்தை ஃபாலோ பண்ண சொன்னார்..” என்க

“யார் பணம் கொடுத்தா..?”

“அது தெரில..”

“தெரிலனா..?”

“எனக்கு அது யாருனு தெரில..”

“அதான் தெரிலனா..?”

“எனக்கு ஒரு நெட் நம்பர்ல இருந்து போன் வந்து இவங்கள ஃபாலோ பண்ண சொல்லி அசைன்ட்மென்ட் கொடுத்தாங்க..” என்றவன் சொல்ல, இப்போது தீர்க்கமாய் அவனது வாய் மொழியினை உள்வாங்கியவன்,

“எதுக்கு இவளை ஃபாலோ பண்ணனும்..?” என்று கேட்க

“அது தெரியாது…”

“டெய்லி அவன் கிட்ட என்ன சொல்லுவ..உன்கிட்ட அவன் என்ன கேட்பான்..?”

“டெய்லி அந்த அம்மா எங்க எங்க போகுதுனும் யார் யார்கிட்டலாம் பேசுறாங்கன்னும் பார்த்து சொல்லனும் சார்..”

“நீ எத்தன நாளா ஃபாலோ பண்ற..”

“ஒன் வீக்கா தான் சார்..” என்றவன் முடிக்க அவனது பேன்ட் பாக்கெட்டில் போன் அலறியது,

“ஆனந்த் அது யார் போன்..”

“இவன் கிட்ட இருந்து எடுத்த ஃபோன் தான் பாஸ்..” எனவும், கைநீட்டி அந்த போனை எடுத்து தனது பாக்கெட்டில் போட்டுக் கொண்டவன் ஆனந்தை வெளியே வருமாறு செய்கை செய்தான்..

விறுவிறு எட்டு வைத்து முன்னேறியவன், தனது பின்னே ஆனந்த் வந்ததும், “அவனுக்கு மயக்க மருந்து கொடுத்து, நுங்கம்பாக்கம் ரோட்ல இன்னைக்கு மிட் நைட் ஈஸ்வரை விட்ட அதே ரோட்ல போட்ருங்க..” என்றவன் காரில் ஏறும் முன்,

“அவன் எக்காரணத்தைக் கொண்டும் இந்த வீட்ல இருக்கிற யாரையும் முக்கியமா உன்னய கூட அவன் பார்க்க கூடாது..” ஸ்திரமாய் சொன்னவனது கார் காற்றாய் பறந்தது..

ஆட்டம் வலுக்கும்..