UMUV11

Banner-07fbfca3

11

ஓட்டமும் நடையுமாக வந்த விஷ்ணு, “எங்க போன? மொபைலுக்கு கால் பண்ணேன்” வர்ஷாவை கேட்க,

“சாரி ஃபோன் சைலென்ட்ல இருக்கு”

“பரவால்ல” என்றவன் வர்ஷாவுடன் பேசியபடியே வர, அவ்வப்போது ஓரிரு வார்த்தைகளில் ரிஷி பதில் தர, என்று அவர்கள் பயணம் உணவகம்வரை தொடர்ந்தது.

உணவகத்தைப் பார்த்த வர்ஷா, “இதென்ன புதுசாயிருக்கு” என்று கேட்க,

ரிஷி “இது ஸ்பெஷல் நார்த் இந்தியன் ரெஸ்டாரண்ட், நமக்குப் பக்கத்துலயே செஃப் சப்பாத்தி செஞ்சு சுடச் சுட கொடுப்பார், பக்கத்து மேடைல ஆர்கெஸ்டரா இருப்பாங்க. நாம கேட்கிற பாட்டை பாடுவாங்க. இது விஷ்ணுவுக்கு ரொம்ப பிடிச்ச ஹோட்டல்” என்றவன் வர்ஷாவிற்காக உணவக கதவைத் திறந்து பிடித்துக்கொண்டான்.

ரிஷி சொன்னபடியே அவர்கள் மேஜையின் அருகில் ட்ராலியில் அடுப்புடன் வந்த சமையல்காரர் சுடச் சுட சப்பாத்திகளைச் செய்து பரிமாற, காதிற்கு இதமான பாடல்களை இசைக் குழுவினர் பாடத் துவங்கினர்.

“நார்த் இந்தியன் ரெஸ்டாரண்ட்ல எப்படி தமிழ் பாட்டு பாடுறாங்க” வர்ஷா பொதுவாகக் கேட்க,

விஷ்ணு, “தமிழ் ஹிந்தி ரெண்டுமே பாடுவாங்க, நாலு அஞ்சு பாடகர்கள் இருக்காங்க” என்றவன், “நீ ஏதான சாங் சொல்லுடா” விஷ்ணு கேட்டுக்கொள்ள, “நாம மூணு பேருமே கொடுக்கலாம்” என்ற ரிஷி பட்டியலை இசைக் குழுவினரிடம் கொடுத்தான்.

விருந்தும் இசையும் மூவர் மனங்களையும் நிரப்ப, தான் வாங்கிய பரிசை விஷ்ணுவிடம் கொடுத்தவள் மீண்டும் வாழ்த்து தெரிவித்தாள்.

“எதுக்கு வர்ஷா ஃபார்மெலிட்டி? ஃபிரெண்ட்லியா தானே கூப்பிட்டேன்” செல்லமாகக் கோவித்துக் கொண்டாலும், “தேங்க்ஸ்” என்று புன்னகையுடன் அதை வாங்கிக்கொண்டவன், ஆவலுடன் அதனைப் பிரித்துப்பார்த்தான்.

“ஹேய் எப்படி தெரியும் எனக்கு ஹெட்ஃபோன் வேணும்னு?” ஆச்சர்யமாகக் கேட்க,

“காலைல பேசிட்டு இருக்கும்போது உங்க அண்ணா கிட்ட சொன்னீங்களே, இந்த மாடல் ஸ்டாக்கே இல்லைனு, அதான் ரெண்டு மூணு கடைல கேட்டேன், இருக்குன்னு சொன்னதும் போய் வாங்கினேன்”

விஷ்ணு சந்தோஷத்தில் மீண்டும் மீண்டும் நன்றி சொல்ல, ரிஷியோ அவள் செய்கையில் சொல்லத் தெரியாத உணர்வில் மூழ்கினான்.

‘இவ்ளோ ஸ்வீட்டா இருக்கிற உன்னை எப்படி என்னால ஏமாத்த முடியும், எப்படி சொல்லுவேன் வர்ஷா நான் யாருன்னு’

அவர்கள் காரில் திரும்பிக்கொண்டிருக்கும் பொழுது, 

விஷ்ணு விஷம புன்னகையுடன், “வர்ஷா அண்ணாகிட்ட எதுவோ கேட்கணும்னு சொன்னியே” என்று வர்ஷாவை பார்க்க,

விக்கித்து நின்றவள், “ஏன் கோர்த்துவிடுறீங்க?” என்று வாயசைத்தாள்.

“என்ன கேட்கணும்?” ரிஷி கேட்க,

கண்களை மூடிக்கொண்டவள், ‘அதான் எப்படியும் வராதே! இப்போ என்னனு உளறப் போறேனோ!’

அவள் பேசுவாளென்று காத்திருந்தவனுக்கு, அவள் மௌனமும் எதிர்பார்த்ததுதான் என்பதால், பொறுமையாகக் காத்திருந்தான்.

“உங்…பேர்…எ…” ‘முடிஞ்சுது முடிஞ்சுது, நான் பேசாம கார் கதவைத் திறந்து குதிச்சுட்டா பரவாயில்ல’ நொந்துகொண்டாள்.

ரிஷியின் இதயமோ படபடவென அடித்துக்கொள்ள, ஆழ்ந்த மூச்சை விட்டவன், தீர்மானமான முகத்துடன், பேசத் துவங்க,

“நந்தா” என்றான் விஷ்ணு!

அதிர்ந்தவன் விஷ்ணுவை ‘ஏண்டா?’ என்பதுபோல் பார்க்க,

“நந்தா! அவன் பேரு நந்தா!” மீண்டும் சொன்ன விஷ்ணுவோ, “அவன் காரை ஓட்டுவானா இல்லை உன் விடுகதையை புரிஞ்சுகிட்டு பதில் சொல்லுவானா? கவனம் சிதறினா ரிஸ்க்ல?” சப்பைக்கட்டுக் கட்டினான்.

இரு ஆண்களுமே அவளைப் பார்க்க, அவளோ ‘நந்தா’ வாயசைத்து தனக்குத்தானே புன்னகைத்துக் கொண்டிருந்தாள்.

உண்மையைச் சொல்லவும் முடியாது, மறைக்கவும் முடியாது வர்ஷாவிடம் நந்தனாகிப் போனான் ரிஷிநந்தன்!

அன்று நாள் முழுதும் கனவுலகில் மிதந்தபடி கழித்தவள், இரவு ரிஷியிடம் பேசி அவன் பெயரை அறிந்துகொண்டதைச் சொல்லக் காத்திருந்தாள்.

இரவு எப்பொழுதும்போல அவனை அழைத்தவள், “ரிஷி நான் எவ்ளோ ஹேப்பி தெரியுமா? அவன் பேர் நந்தாவாம் சூப்பர்ல. எனக்கு ரொம்ப பிடிச்சுருக்கு” என்று குதிக்க, என்ன பதில் தருவதென்று தெரியாமல் “ம்ம்” என்றபடி அமைதியாக இருந்தான் ரிஷி.

“என்ன ரிஷி ஏதாவது வேலையா இருக்கீங்களா?”

“இல்ல கொஞ்சம் தலைவலிமா”

“ஐயோ எப்படி மேனேஜ் பண்ணுவீங்க, கவுன்சிலிங் கால்ஸ் வந்தா?”

அவன் பதில் தரும் முன்னே, கதவைத் திறந்து உள்ளே வந்த ரஞ்சனி, “டேய் மஞ்சப்பொடி பால் குடிக்கிறியா?” என்று கேட்க,

“ம்ம் சரிமா, தலை வலிக்குது, எதாவது சூடா குடிச்சா தேவலாம்தான்” என்று சொல்ல, சரியென்றுவிட்டு அவர் சென்றுவிட்டார்.

“ரிஷி, உங்க அம்மாவா? இப்ப நீங்க ஆஃபீஸ்ல இல்லையா?” அவள் கேட்கவும், நெற்றியில் தட்டிக்கொண்டவன்,

“இல்ல, போகல”

“ஏன்?”

“அந்த ஜாப் செட்டாகலைனு, இப்போ போறதில்லமா” பல பொய்களைச் சமாளிக்கும் எண்ணம் அவனுக்கில்லை, முற்றுப்புள்ளி வைக்க எண்ணிச் சொல்லிவிட,

“ஏன் ரிஷி? அப்போ செலவுக்கு என்ன செய்வீங்க?” அவள் குரலிலிருந்த ஆதங்கம் அவனைச் சுட்டது.

“அதெல்லாம் பரவால்லமா, பகல்ல போற வேலைல ப்ரமோஷன் கொடுத்துட்டாங்க, இனிமே சமாளிச்சுப்பேன் நீ அதெல்லாம் யோசிச்சு குழப்பிக்காத” அவன் சொன்னதுதான் தாமதம்,

“ஹை ஹை! சூப்பர் பாத்தீங்களா நீங்க சின்சியரா நேர்மையா உழைச்சதுக்கு உங்களுக்குப் பலன் கிடைச்சிருக்கு, செம்ம ஹேப்பி! ஆமா எங்க ட்ரீட்?” அவள் குரலில் தெரிந்த சந்தோஷம் அவன் மனதில் சொல்லத் தெரியாமல் உழன்றுகொண்டிருந்த வலியை மறக்கடித்து.

“என்ன வேணும் சொல்லுமா” அவன் புன்னகையுடன் கேட்க,

“ம்ம் தோணலையே” யோசிக்கத் துவங்கினாள்.

ரிஷியோ “என்ன வேணுமோ கேளு, உனக்கு ஏதாவது தரத்தான் நானும் நினைக்கிறேன், உனக்கு என்ன பிடிக்கும்?” என்றான் ஆர்வமாக.

வர்ஷா, “சமோசா?” என்றதில் தலையில் அடித்துக்கொண்டவன்,

“நான் என்ன கேக்கறேன் நீ என்ன ரெண்டு ரூபா சமோசால இருக்க?”

“சரி சென்னா சமோசா! அது ஒன்னும் ரெண்டு ரூபா இல்ல முப்பது ரூபாவாது இருக்கும்” அவள் மிடுக்காகச் சொல்ல,

“நீ ஃபோனை வச்சுட்டு ஓடிடு! எனக்கு காண்டாகுது!”

“அப்போ என்ன தரணும்னு இருக்கோ நீங்களே சொல்லுங்க”

‘அதான் எனக்கும் தெரியல என்ன தரணும்னு, என்னையே தரவும் தோணுது’ மனம் போகும் போக்கைக் கண்டு வியந்தவன், “வர்ஷா ஒரு டூ மினிட்ஸ் கழிச்சு கூப்பிட்றேன்” என்று வேகமாக அழைப்பைத் துண்டித்துவிட்டு, ரஞ்சனியிடம் சென்று விட்டான்.

“என்னடா ரொம்ப தலைவலிக்குதா?” ரஞ்சனி பதற,

“அம்மா எனக்கு ஒரு மாதிரி இருக்கு, என்ன ஏதுன்னு கேட்காத, நானே அப்புறம் சொல்றேன், இன்னிக்கி உன்கூட தூங்கவா?”

அவனை ஆராய்வதைப் போல் பார்த்தவர், “படுத்துக்கோ அதுக்கு எதுக்கு பெர்மிஷன் கேக்குற? போ நான் பால் எடுத்துக்கிட்டு வரேன்”

“நான் ஒரு அரைமணி நேரத்துல தூங்க வரேன். ” என்றவன் தன் அறைக்குள் நுழைந்ததும் வர்ஷாவை அழைக்க மொபைலை எடுக்க, கேலரியில் அன்று மதியம் விஷ்ணு பிறந்தநாள் லன்ச் பார்ட்டியில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களில் வர்ஷாவை பார்க்கத் துவங்கினான்.

“என் கூட பேச உனக்கு பயம் பயம்னு சொல்லிட்டு, இப்போ என்னைப் பார்த்து நானே பயப்படுற மாதிரி செஞ்சுட்டல நீ?” புகைப்படத்தில் அவள் நெற்றியை முட்டியவன், அவளை அழைத்தான்.

“தூக்கம் வந்தா தூங்குங்க ரிஷி, நான் நந்தா பெயரைச் சொல்லத்தான் கால் பண்ணேன். கேட்கணும்னு நினைச்சேன் மாலதி எப்படி இருக்காங்க?” அவள் ஆர்வமாக,

“யாருக்கு தெரியும்?” என்றவன் கண்களை மூடி உதட்டைக் கடித்துக்கொண்டான்.

“என்ன சொல்றீங்க? ஏதாவது சண்டையா?” அவள் பதற,

“ஐயோ அதெல்லாம் இல்ல, பேசல அவ்ளோதான். ஆமா நீ இன்னிக்கி அவன் கிட்ட பேசினியா?”

“நான் தானே? நந்தா கிட்ட தானே? பேசுவேன் என்னிக்காவது, என்னிக்கின்னு தான் தெரியல”

“நிஜமாவே சொல்லு நீ ஏன் அவன் கிட்ட பேச மாட்டேங்குற, அவனும் ஆதேஷ் மாதிரி தப்பானவனா இருப்பான்னு நினைக்கிறியா…இல்லை பொறுக்கின்னு…”

“ஐயோ இல்ல! அவன் தப்பா ஒரு பார்வை கூட பாக்குறதில்ல, கண்ணை தாண்டி பார்வை போனதே இல்ல ரிஷி. ரொம்ப டீசண்ட், ரொம்ப நேர்மையானவனா தெரியுறான், அவன் தம்பி மேல எவ்ளோ பாசமா இருக்கான் தெரியுமா? விஷ்ணுக்கு அவ்ளோ பெருமை அவன் அண்ணனை நினைச்சு”

“நீ ரொம்ப ஓவர் பில்டப் கொடுக்கறே” அவன் வம்பிழுக்க,

“நோ நோ! அவன் வேற ரிஷி! அவன் வேற!”

“ஆஹான்! அவன் அவ்ளோ பெரிய அப்பா டக்காரா?” ஜன்னல் கம்பி வழியே வேடிக்கை பார்த்தபடி நின்றிருந்தவன், உள்ளே நுழைந்த ரஞ்சனியைக் கவனிக்கவில்லை,

“நீங்க அவனை பார்த்தா உங்களுக்கே பிடிச்சுப்போகும்”

“பார்றா, நீ இவ்ளோ சொல்றே கடைசில நான் நேர்ல பார்த்து அவன் வெத்துவேட்டா இருந்தா அப்புறம் என்ன செய்ய” அவன் சிரிக்க, வர்ஷா கோவம் கொண்டது அவள் குரலில் தெரிந்தது.

“ரிஷி! சும்மா அவனை பார்க்காம கமெண்ட் அடிக்காதீங்க. அவன் ஒரு ஏஞ்சல்! எனக்காகவே வந்த ஆண் தேவதை அவன். இதெல்லாம் சொன்னா புரியாது, அவனை பார்த்தாதான் தெரியும்!”

“என்ன ரெண்டு ரெக்கை இருக்குமோ உன் ஏஞ்சலுக்கு?” அவன் நக்கலில் சிரித்தவள்,

“இருக்கும் ! என் கண்ணுக்கு மட்டும் தெரியும்!” சிரித்தவள், “அவன் நடக்கறதா பார்த்தா அவ்ளோ மேன்லியா இருக்கும்! அவன் மீசை இருக்கே! ஐயோ ஐயோ எப்படி பர்ஃபெக்டா ட்ரிம் பண்ணியிருப்பான் தெரியுமா? அவன் கண்ணு இருக்கே…” அவள் அவனை அவனிடமே வர்ணிக்கத் துவங்கினாள்.

குழையக் குழைய சிரித்துப் பேசியபடி முகம் மென்மையாகச் சிவந்திருக்கும் மகனைப் புன்னகையுடன் அதிசயமாகப் பார்த்திருந்த ரஞ்சனியோ பால் டம்பளரை மேஜையில் வைத்துவிட்டு வெளியே சென்றுவிட்டார்.

எதையும் உணராதவனோ, அவளை வம்பிழுப்பதை நிறுத்தவில்லை, அவளும் தன் நந்தாவை புகழ்வதை நிறுத்தவில்லை. புகழும் போதை தான் என்பதை வர்ஷாவின் வார்த்தைகளில் உணர்ந்தவன் கனவுலகில் வர்ஷாவுடன் நுழைந்துவிட்டான்.

வர்ஷாவின் பாட்டி வந்து திட்டும் வரை அவர்கள் உரையாடல் நீண்டது. அழைப்பைத் துண்டித்துவிட்டுத் திரும்பியவன் மேஜையிலிருந்த பாலை பார்த்துவிட்டு, நெற்றியில் தட்டிக்கொண்டான்.

கிட்டத்தட்ட குளிர்ந்தேவிட்ட பாலை சுடவைக்க அவன் அறையை விட்டு வெளியேற, குசு குசுவெனப் பேசிக்கொண்டிருந்த ரஞ்சனியும் விஷ்ணுவும் அவன் வருகையில் அமைதியாக,

“தூங்கலையா ரெண்டுபேரும்?” என்று கேட்டவன், அவர்கள் முகத்திலிருந்த கிண்டல் புன்னகையில், ஓரளவிற்கு விஷயத்தை யூகித்துக்கொண்டான்.

எதுவும் பேசாது சமையல் அறைக்குள் நுழைந்தவன், பாலை சுடவைக்க,

“என்ன சார் முதல் தடவா கடலை போட்ட மாதிரி இருக்கு?” விஷ்ணுவின் குரலில் வேறு புறம் திரும்பிக்கொண்டு புன்னகையை மறைக்கத் திணறினான் ரிஷி.

இப்பொழுது ரஞ்சனியும் விஷ்ணுவுடன் சமையலறை வாசலில் வந்து நின்றார்.

“நீ வேற, அவனை நீ பார்கலையே, பொண்ணுங்க தோத்தாங்கபோ, உங்கண்ணன் என்னமா வெட்கப்படுறான் தெரியுமா? முகம் சிவந்து, கம்பியில முட்டிகிட்டு, அசட்டுத் தனமா சிரிச்சுக்கிட்டு…”

“அம்மா!” அவரை முறைக்கத் திரும்பியவன், அவர்கள் கேலி புன்னகையில் மீண்டும் முகம் சிவந்து தலையைக் கோதியபடி, “ஹே! ப்ளீஸ் ஓட்டாதீங்க. நான் சும்மா பேசிகிட்டு தானே இருந்தேன்” அவனாலும் சிரிப்பைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

“உங்க ஊர்ல இப்படித்தான் வெட்கப்பட்டுக்கிட்டே சும்மா பேசுவீங்களா?” ரஞ்சனி அவனைப் பார்த்துச் சிரிக்க,

“உனக்கு வெட்க படக்கூட வருமா? இதை வர்ஷா கிட்ட சொல்லியே ஆகணுமே” என்ற விஷ்ணு, “இல்லை காட்டணும்” என்று ரிஷி எதிர்பாராத நொடி புகைப்படங்கள் எடுக்கத் துவங்க,

“டேய்” அவனை விரட்டிய ரிஷியைப் பார்த்திருந்த ரஞ்சனி.

“உன் மொபைல்ல வர்ஷா ஃபோட்டோஸ் இருக்காமே, விஷ்ணு சொன்னான்” என்று கேட்க, பிரேக் அடித்ததைப் போல் நின்ற ரிஷி, விஷ்ணுவை முறைக்க,

“பாருமா முறைக்கிறான். நீ நம்ப மாட்டே இவன் பக்கத்துல ஃபோனா அந்த பொண்ணு என்கிட்டே நகர்ந்து நகர்ந்து வரா, இவனா விடாம அவ பக்கத்திலேயே போறான், போட்டோவ பார் புரியும் எப்படி ஒட்டிக்கிட்டு நிக்குறோம் மூணு பேரும் எதோ ஒட்டிப்பிறந்த குழந்தைங்க மாதிரி” என்ற விஷ்ணு ‘மாட்டினியா’ என்பதைப் போல் ரிஷியைப் பார்க்க,

அவனோ, “ஓகே குட்நைட்” என்று தப்பிக்கப் பார்த்தான்.

ரிஷியை வழி மறித்த விஷ்ணு அவன் கையிலிருந்த மொபைலை பிடுங்கப் பார்த்தான்.

ரிஷி கையை மேலே உயர்த்தி அவனுக்குப் போக்கு காட்ட, பின்னாலிருந்து அதைக் கொஞ்சம் எம்பி பிடுங்கி இருந்தார் ரஞ்சனி.

“அம்மா ப்ளீஸ்!” அவன் கெஞ்சும் முன், “முடியாது! எனக்கு அவளை பார்க்கணும்” அவர் வீம்பாக மொபைல் லாக்கை திறக்க முயற்சிக்க,

விஷ்ணு “உன் பிறந்தநாள் தான் லாக் நம்பர்மா”

ரஞ்சனியோ, “டேய் அவ்ளோ பிடிக்குமா டா என்னை” ரிஷியை ஆசையாகப் பார்க்க,

அவனோ “மா…மா…ப்ளீஸ்மா! நானே காட்டறேன், நீ ஃபோனை குடேன்” கெஞ்ச, லாக்கை திறந்து புகைப்படங்களைப் பார்க்க முயற்சித்தார் ரஞ்சனி.

“இரு ஆறு இன்ச் ஸ்க்ரீன்விட, எங்கண்ணன் விசிறியை அறுவது இன்ச் டிவி ஸ்க்ரீன்ல பார்ப்போம்” என்ற விஷ்ணு, மொபைல் திரையை டிவியில் ப்ரோஜெட் செய்து, வர்ஷாவின் புகைப்படங்களை ரஞ்சனிக்குக் காட்டத் துவங்கினான்.

ரிஷியோ ‘பிடிச்சுருக்குன்னு சொல்லுமா, எதாவது நல்லதா மட்டும் சொல்லேன் ப்ளீஸ்’ தாயின் முகத்தையே ஏனோ ஆர்வமாகப் பார்த்திருந்தான்.

வர்ஷாவை பார்த்ததுமே சிரித்துவிட்ட ரஞ்சனியோ, “உங்க ரெண்டு பெருகும் நடுவுல, ஹாஹாஹா என்னடா துளியூண்டு இருக்கா பொம்மை மாதிரி” அவர் சிரிக்க, ஏனோ கோவம் வர, திரையை மறைத்தபடி நின்ற ரிஷி,

“அவ நல்லா தான் இருக்கா, நாங்க தான் உங்களால இவ்ளோ உயரமா வளர்ந்து தொலைச்சுட்டோம்”

ரஞ்சனி சிரித்தபடி “அடேய், நகருடா” அவனை விலக்கப் பார்க்க,

அசையாமல் நின்றவனோ, “நீ ஏன் என்னை உயரமா பெத்த?” என்று முறைதான்.

“ஹே சீ நகருடா” ரஞ்சனி எம்பி எம்பி தொலைகாட்சி திரையைப் பார்க்க,

ரிஷி விடாது “நீ ஏன் உயரமா இருக்க?” கேட்க,

“இதென்னடா வம்பா போச்சு?” ரஞ்சனி முறைக்க,

“எல்லார் அம்மாவும் குட்டியா கியூட்டா இருக்காங்க. நீ மட்டும் ஆறடிக்கு வளர்ந்து நிற்கிற?”

“ஆறெல்லாம் இல்லடா 5’10 தான்” ரஞ்சனி சொன்னபடி, அவனை விலக்க,

“அம்மா அவன் பிரச்சனை உன் உயரம் இல்ல, வர்ஷாவை நீ குள்ளம்னு சொன்னல” விஷ்ணு சரியாகக் கண்டுபிடித்தான்.

“அடப்பாவி! நான் அவளைக் குறை சொல்லலைடா, உங்க ரெண்டு பேருக்கும் மாரளவுதான் இருக்காளா…அதான் பொம்மைன்னு செல்லமா சொன்னேன்” என்றவர்,

“நல்ல பொண்ணா தான் தெரியுறா, எனக்கு ஓகே!” என்று இரு கை கட்டை விரல்களையும் உயர்த்தினார்.

“என்ன ஓகே? அவ ஜஸ்ட் ஃபிரென்ட் தான் மா” சாதித்த மகனைப் பார்த்துக் கிண்டலாகப் புன்னகைத்தவர்,

“ஆஹான்? என்ன விஷ்ணு வெறும் பிரெண்டாமே! எனக்கு இவளை பிடிச்சுருக்கு மருமகள் ஆவான்னு பார்த்தேன், விடு அவனுக்கு பிடிக்காட்டி , நம்ம ரூபாவோட பையனுக்கு கேட்போம்” அவர் சொல்ல, ரிஷிக்கு முன்னே பதறியது விஷ்ணுதான்.

“ஐயோ! நான் அவளை அண்ணின்னு மைண்ட்ல செட் பண்ணிட்டேன்” என்றவன், “சொல்லுடா” என்று ரிஷியை முறைக்க, அவனோ இறுகிய முகத்துடன் அமர்ந்துவிட்டான்.

“என்னடா நான் சும்மா விளையாட்டுக்கு சொன்னேன். ஏன் அப்செட் ஆகுற? அவ்ளோ பிடிக்கும்னா சொல்லுறதுக்கு என்ன? அவங்க வீட்ல போயி பேசட்டுமா?” ரஞ்சனி அவன் தோளைப் பற்ற, அவர் முகம் பார்த்தவனோ,

“எனக்கு என்னையே இன்னும் க்ளியரா தெரியல மா! ப்ளஸ் நான் அவகிட்ட பொய் சொல்லி பழகுறதே மனசை ரொம்ப உறுத்துது. இதுல அவ அன்பை எந்த முகத்தை வச்சுக்கிட்டு எதிர்பார்ப்பேன்? பொய்யா நடிச்சவன் தானே நீன்னு ஒரு வார்த்தை அவ சொல்லிட்டாலும் என்னால தாங்க முடியாது, வேண்டாம் மா”

“இங்க பாருடா நீ ஒன்னும் வர்ஷாக்கு ஆசை வார்த்தை காட்டி பேசலை, அவளை ஈர்க்கணும்னு எதுவுமே செய்யலை. அவளுக்கே உன்னை தானா பிடிச்சுருக்கு, அன்பை ஏத்துக்குறதுல என்ன தேஞ்சு போவியாம்?”
விஷ்ணு கேட்க, அவனை முறைத்த ரஞ்சனி,

“பொய் சொல்லி பழகுறது தப்பு தான், அவன் பயமும் நியாயம் தான், நீ கூடிய சீக்கிரம் அவகிட்ட உண்மையை சொல்லிடு, அவ அன்பு உன்மைனா அவ உன்னை தப்பா நினைக்கவே மாட்டா” அவர் ரிஷியின் தலையை வருட,

“அவ ரொம்ப நம்பறா. ரிஷியையும் நந்தாவையும்! அதான் எனக்கு…” அவரை கட்டிக்கொண்டவன், “அவளை ஏத்துக்கவும் முடியல, இழந்துடவும் வலிமை இல்லமா” என்றவன் அமைதியாக,

“எதுக்கு இழக்கணும்? நீ பேச தயங்கினா நான் பேசறேன்” ரஞ்சனி சொல்ல,

“இல்லமா! வேண்டாம்” என்றான் உறுதியாய்!

“ஏன்டா?” அவர் சந்தேகமாய் பார்க்க,

“இப்போதைக்கு அவளுக்கு இருக்குறது ஈர்ப்புதான், சும்மா அழகை பார்த்துக்கூட…விடு கொஞ்ச நாள் போகட்டும்” என்றவன், எழுந்து சென்றுவிட,

விஷ்ணு, “அவன் சொல்றதும் நியாயம் தான், கொஞ்சம் டைம் கொடுப்போம்” என்று சொல்ல,

“ம்ம் என்னமோ நல்லது நடந்தா சரி” என்றார் ரஞ்சனி.

அறைக்குள் நுழைந்த ரிஷி விட்டத்தைப் பார்த்தபடி யோசனையில் மூழ்கினான். மறுபுறம் வர்ஷாவோ நந்தாவைப் பற்றிய கனவில் தொலைந்தாள்.