varaga 15

varaga 15

கார்த்திகாயினி தேர்ந்தெடுத்த புடவை அனைவருக்கும் பிடித்திருக்க… இப்பொது முகிலனிற்கு ஆடை எடுக்கும் படலம் ஆரம்பித்தது. ஆனால் பெரியவர்கள் இன்னமும் புடவை எடுக்காமல் இருக்க… இளையவர்கள் பட்டாளத்தை மட்டும் ஆண்கள் பிரிவுக்கு அனுப்பி வைத்தனர்.

அதன்படி… கார்த்திகாயினி, முகிலன், ருத்ரா, முத்ரா அனைவரும் அங்கு சென்றனர். கார்த்தி தான் ஏற்கனவே  சென்று, இருக்கும் அனைத்து மாடல் ஆண்கள் ஆடையையும் கலைத்து போட்டுக்கொண்டிருந்தானே…

அவன் கவலை அவனிற்கு… எதை போட்டால் நாம் ஒல்லியாக தெரிவோம் என்று ட்ரையல் பார்த்தே சலித்து விட்டான். இது வேலைக்காகாது… காயுவ தான் கூப்பிடனும் என்று முடிவெடுத்து அவளுக்கு அழைத்தான்.

முதல் அழைப்பிலேயே எடுத்தவள், அவன் பேசும் முன்னால்,

“நாங்க அங்க தான் வருகிறோம்… பட்டு வேஷ்டி சட்டை பிரிவுக்கு வா”

என்றதோடு கட் செய்தாள்.

இவனும் அது எப்படி தான் இந்த குட்டிப்பிசாசு துணி சம்மந்தப்பட்ட இடத்துக்கு போனா மட்டும் அந்நியன்னா மாறுகிறாளோ…? என்றவாறு போனான்.

வீட்டில் வம்பு செய்யும் தங்கை… அவர்களின் கடைக்கும் துணி உற்பத்தி ஆகும் இடத்திற்கும் போனால் மட்டும் தனக்கு அக்காவாக மாறும் அவளை கண்டால் ஆச்சரியமே… அவளின் துணிகள் மீதான காதல் இவனை எப்போதும் வியக்க வைக்கும் ஒன்று… அதை பற்றி பேசினாலே அவள் வேறு உலகிற்கு சென்றுவிடுவாள். இவனிற்கு தான் காதில் இரத்தம் வராத குறை…

தங்கையை பற்றி யோசித்துக்கொண்டே ஆண்கள் பட்டு பிரிவை அடைந்தவன், அங்கு உள்ளே கடையை வேடிக்கை பார்க்கும் முத்ராவை பார்த்தான்… அவ்வளவு தான் தெரியும்… அடுத்த கனம் கால் தவறி கீழே விழப்பார்த்தான். 

பின் கடினப்பட்டு தன்னை சமன் செய்து நிற்க… அதற்குள் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த முத்ரா…

“பார்த்து…”

என்று அனிச்சையாய் பதறியிருந்தாள்.

அவனோ… அவளை முறைத்து… மனதிற்குள்.. எல்லாம் உன்னை பார்த்ததால தான்… போனை தட்டி விடுறது போய்.. இப்போ என்னையே கீழ தள்ளிவிட பார்க்குற  என்று வைதான். என்னமோ அவள் தான் முதுகிற்கு பின்னால் இருந்து தள்ளி விட்டது போல்…

முகிலன் தன் தம்பியின் அருகே வந்து…

“கீழே பார்த்து வர மாட்டியாடா…” 

என்றான்.

அப்போது தான் கீழே என்னவென்று பார்க்க… ஒவ்வொரு பிரிவாக இருக்கும் பகுதிக்கு கீழே சற்று மேடாக சின்ன  படிக்கட்டு போல் இருந்தது… கீழே பார்த்து வந்திருந்தால் தெரிந்திருக்கும்…

கார்த்தி அதை பார்த்து உள்ளுக்குள் அசடு வழிய… வெளியே எதையும் காமிக்காமல்…

“வாங்கண்ணா… அதான் ஒன்னும் ஆகலையே”

என்றவாறு போய் காயுவிடம் தனக்கும் ஆடை எடுத்து தர சொன்னான்.

ஒரு வழியாக கல்யாணத்திற்கு அனைவரும் புத்தாடைகளை அள்ளிக் கொள்ள… ருத்ரா குடும்பம் விடைபெற்று கிளம்பியது.

கிளம்பும் வரையில் ருத்ராவோ முகிலனோ தன் வருங்கால சரிபாதியுடன் பேசவே இல்லை. முகிலன் கூட தன் பார்வையால் அவ்வப்போது தொடர்ந்தான்… ஆனால் ருத்ரா சங்கடத்தால் அவன் இருக்கும் பக்கம் திரும்ப கூட இல்லை.

அதோ இதோ என்று கல்யாண நாளும் விடிந்தது.

பெரியகுளத்தில் இருக்கும் அந்த பிரமாண்ட மண்டபம் பலவகை கச்சேரியோடு களைக்கட்டி கொண்டிருந்தது.

இன்னும் சிறிது நேரத்தில் முகூர்த்தம் என்றிருக்க…  

மணமகனாகிய முகிலன் தங்கநிற பார்டர் வைத்த பட்டு வேஷ்டி மற்றும் வெண்பட்டு சட்டை அணிந்திருந்தான். கூடவே அவனது அகன்ற தோளை அங்கவஸ்திரம் அலங்கரிக்க… சமர்த்தாக அமர்ந்து ஐயர் கூறும் மந்திரங்களை உச்சரித்துக் கொண்டிருந்தான்.

சில நிமிடம் கழித்து ஐயர் பெண்ணழைத்ததும், மணமகள் அறையில் இருந்து… காயு மற்றும் முத்ரா கைவண்ணத்தில் பொற்பாவை என  தயாரான ருத்ரா வெளிவந்தாள்.

லாவெண்டர்க்கும் ரோசிற்கும் இடைப்பட்ட கலரில் பட்டுபுடவை அவள் மேனியை எழிலாக தழுவிருக்க… அதற்கு தோதாக அணிந்த ஆபரணங்கள் மேலும் அவள் அழகை மெருகூட்டியது.

அவள் சபையை வணங்கி முகிலன் அருகில் அமர்ந்ததும் இருவரது ஜோடி பொருத்தமும் பார்ப்பவர்களுக்கு பிரமிப்பை ஏற்படுத்தியது எனலாம்.

எப்பொதும் போல் முகிலன் கண்டும் காணாமல் அமர, ருத்ரா மனதிற்குள் புழுங்கியே அமர்ந்திருந்தாள். முகிலனாவது இடைப்பட்ட நாளில் தான் உன்னை தவறாக நினைக்கவில்லை என்று உணர்த்தியிருக்கலாம். ருத்ரா அவனை நிமிர்ந்தும் பார்க்காத காரணத்தால் அவனின் கள்ளப்பார்வையும் அறியாமல் போக… விதியும்  இவர்களிடம் கொஞ்சம் விளையாடி பார்க்க ஆசைபட்டது.

அனைத்து சடங்குகளும் முடிந்து கெட்டிமேளம் கெட்டிமேளம் என்று ஐயர் குரல் குடுக்க…

வராக நதியில் தத்தளித்த அந்த பளிங்குமுக வசீகரியின் கழுத்தில் பொன்மாங்கல்யம் கொண்டு இரண்டு முடிச்சை முடிச்சிட்டான், பின்னர் நாத்தனார் முடிச்சை காயு கட்ட, ருத்ராவை தனது பத்தினியாக்கிக் கொண்டான் கார்முகிலன். 

திருமணம் முடிந்ததும் திருமணத்திற்காக விடிகாலையில் வந்தவர்கள் பந்திக்கு செல்ல.. கடனே என்று வந்துள்ள,  நிற்க நேரமில்லாமல் ஓடிக்கொண்டிருப்பவர்கள், திருமணப்பரிசை கொடுத்து விட்டு சாப்பிட்டேன் பேர்வழி என்று போக்கு காமித்து பறக்க…

திருமண தம்பதிகள் சாப்பிடும் நேரமும் வந்தது… ஆனால் என்னே இவர்கள் இருவருக்கும் வந்த சோதனை… அனைவர் பார்வையும் இவர்கள் மேலே இருக்க.. போதாதக்குறைக்கு போட்டோ வீடியோ வேறு இவர்களை சுற்றி வட்டமடிக்க… இவர்களால் ஒரு பிடி உணவு உண்ண முடியவில்லை என்பதே உண்மை.

மேலும் அங்கு வந்த இளமை பட்டாளம்… ஊட்டி விட சொல்லி ஆர்ப்பாட்டம் பண்ண… போட்டோ எடுப்பவரும் தன் பங்கிற்கு வற்புறுத்த… அங்கே பெரும் கலாட்டாவோடு ஆளுக்கொரு வாய் ஊட்டி விட்ட கையோடு அரைகுறையாக உண்டு முடித்து எழுந்துவிட்டனர்.

பின்னர் ஒரு மணி நேரம் கழித்து சுமார் மூன்று மணி அளவில் மறுவீடு சென்றார்கள். அங்கும் சென்று பால், பழம் உண்டு இவர்களுக்கு தேவையானதை மூட்டை கட்ட ஆரம்பித்தனர்.

ஆம்… முகிலன் ஏற்கனவே வீட்டினரிடம் கல்யாணத்தை முடித்த கையோடு இரவு 7 மணிக்கு மதுரை விமான நிலையத்தில் இருந்து ஆந்திரா செல்வதாக கூறிவிட்டான். இரண்டு பக்க பெற்றோருக்கும் இதில் மனம் சுணங்கினாலும் ஒன்றாக தானே செல்கின்றனர் என்று மனதை சமாதானம் செய்திருந்தனர்.

மூன்று நாள் அங்கு தங்க வேண்டியிருந்ததால் அதற்கு தேவையானதை தனியாகவும்… பின்னர் அங்கிருந்து ருத்ரா நேராக கோவை செல்வதால் அவளுக்கான அனைத்து சீர்வரிசை பொருட்கள் தனியாகவும் பிரித்திருந்தனர்.

அவள் புகுந்த வீடு சென்ற பிறகு அதனை கொண்டு வந்து சேர்ப்பதாக ஏற்பாடு… நேரம் செல்ல செல்ல காலையில் இருந்த மகிழ்ச்சி குறைந்து ருத்ராவை பிரியும் வேதனை அவள் வீட்டினரை ஆக்கிரமிக்க ஆரம்பித்தது. விமானத்தில் செல்வதால் இருவரும் காஷுவல் உடைக்கு மாறியிருந்தனர்.

அனைவரிடமும் ருத்ரா கண்கலங்க விடைபெற ஆரம்பித்தாள். தங்கை அருகே வந்ததும் அவளை இறுக கட்டிகொண்டாள். அதுவரை கலங்கி இருந்த கண்ணில் இருந்து கண்ணீர் உடைபெடுத்தது ருத்ராவிற்கு.

முத்ராவிற்கு சொல்லவா வேண்டும்… தன் பிறப்பில் இருந்து தன்னோடு பக்கபலமாக உயிராய் இருந்தவளை பிரியப்போகும் வலி அவள் நெஞ்செங்கும் பரவ… எங்கே வாய் விட்டு கதறி விடுவோமோ என்று எண்ணி தன்னை கடினப்பட்டு அடக்கிக் கொண்டிருந்தாள்.

ருத்ரா வாசல் புறம் திரும்பவும், மெதுவாக யாரும் அறியாமல் பின்னே நகர்ந்து, ஓடிச்சென்று தங்கள் அறையில் தஞ்சமடைந்தாள். மேலும் அந்த அறையின் ஒவ்வொரு இடமும் அவள் தமக்கையை நினைவுபடுத்த… அதற்கு மேல் கட்டுப்படுத்த முடியாமல் கட்டிலில் அமர்ந்து,  சத்தமின்றி வாய் மூடி அழ ஆரம்பித்தாள்.

அடுத்த நிமிடமே அவள் தலையை தன் நெஞ்சில் சாய்த்து, அதன் மீது தன் தாடையை பதித்திருந்தாள் ருத்ரா.

தங்கை முகம் கசங்கி இருக்கவும் அவள் அழப்போகிறாள் என்பதை கண்டுபிடிக்க தெரியாதவளா ருத்ரா… வாசல் புறம் இருந்த முகிலனிடம் முதன்முதலாக வாய் திறந்து,

“ஒரு டாகுமெண்ட் என் ரூம்ல இருக்கும் எடுத்துட்டு வரேன்..” என்று கூறி அவன் பதிலை எதிர்பார்க்காமல் திரும்ப.. தங்கை ஓடியிருந்தாள்.

பின்தொடர்ந்து தங்கையை தாங்கியிருந்தாள் ருத்ரா… 

அக்காவை பார்த்ததும் இன்னும் அழுகை வர… கூடவே அவளை கண்டதால் மீண்டும் சந்தோசம் கூட… தன் உணர்வுகளை கொட்ட ஆரம்பித்தாள்.

“எனக்கு எங்க பாத்தாலும் உன் நியாபகமா வருது… நான் எப்படி இனி இங்க தனியா இருப்பேன்… என்னால முடியல..”

என்று அவள் நெஞ்சிலே முகம் புதைத்து தேம்பினாள்.

அவள் கூடவே அழுத ருத்ரா… பின் தன் கண்ணை துடைத்துவிட்டு… அவள் கண்ணீரையும் துடைத்துவிட்டாள்.

“இப்படி அழுதா நான் எப்படி போவேன்… நான் என்ன பண்ணனும்னு சொல்லு… நான் பண்றேன்”

என்றவாறு கைகட்டி படுக்கையில் சாய்ந்து அமர்ந்துவிட்டாள்.

அதை பார்த்ததும் முத்ராவின் மூளை குழம்பியது… அவள் என்னவென்று சொல்லுவாள்… போகாதே என்றா…? அம்மா அடிபின்னி விட மாட்டாரா…? என்று யோசித்தவள். பின்…

“ஏய்… என்ன நீ… என்னை சமாதானம் பண்ணுவனு பார்த்தா.. அம்மா கிட்ட அடிவாங்க வைக்க பிளான் போடுற.. கிளம்பு கிளம்பு… எல்லாரும் உனக்காக காத்திருப்பாங்க…”

என்று கைபிடித்து கீழே அழைத்து வந்தாள்.

ருத்ரா வந்ததும்,

“டாகுமெண்ட் எங்க…?”

என்று முகிலன் கேட்க…

ருத்ரா உள்ளுக்குள் திருதிருவென விழித்து…

“அது அங்க இல்லை.. எடுத்து வச்சிட்டேன் போல…”

என்று அவன் முகம் பார்க்காமல், வேறு எங்கோ பார்த்து சமாளித்தாள்.

அந்த நேரம் கார்த்தி தன் அண்ணாவின் விருப்பமான டஸ்டர் காரை ஓட்டி வந்தான்.

தன் காரை பார்த்த முகிலன் பேஸ்தடித்து நின்றான். கொஞ்சம் இவனை போல் திமிராக, கர்வமாக இருந்த அவன் கார், தற்போது சிவப்பு மற்றும் வெள்ளை ரோஜாக்களால் அலங்கரிக்கப்படிருக்க தன் திமிரை தொலைத்து.. வயதிற்கு வந்த பெண் போல் வெட்கப்பட்டு நின்றது.

அதை பார்க்கவே முகிலனிற்கு கொடுமையாக இருந்தது. இருந்தும் இத்தனை பேர் கூடியிருக்கும் இடத்தில் தம்பியை கடிந்து கொள்ள மனமின்றி…

“ஏர்போர்ட்க்கு இது எதுக்கு டா… சாதாரண கார் போதும்..”

என்று சொல்லிப் பார்த்தான். ஆனால் தம்பி விட்டால் தானே..

“இது உங்களுக்காக செஞ்ச ஸ்பெஷல் டெக்கரேஷன் அண்ணா… வாங்க போகலாம்.”

என்றவாறு பெட்டியை தூக்கி டிக்கியில் வைக்க…

கார்முகிலன் மற்றும் ருத்ராவை சுமந்துக்கொண்டு கார் மதுரை விமான நிலையம் நோக்கி சென்றது.

விமான நிலையத்தில் அனைத்து செயல்முறையையும் முடித்து தங்கள் இடத்தில் அமர்ந்தனர். ருத்ராவிற்கு முதல் விமான பயணம் என்பதால் முகிலன் பார்த்து பார்த்து அனைத்தையும் விளக்க… அவளோ அதை கண்டுக்கொள்ளாமல் அமர்ந்திருந்தாள். கடுப்பாகிய முகிலன் அவள் அந்த பக்கம் வேடிக்கை பார்க்கையில் எழுந்து சென்றுவிட்டான்.

சிறிது நேரம் கழித்தே பக்கத்தில் ஆள் இல்லாததை உணர… எங்காவது போயிருப்பான் என்று காத்திருந்தாள். ஆனால் நீண்ட நேரம் அவன் வராமல் போகவே… அங்கிருக்கும் பணிப்பெண்ணிடம் விசாரிக்க… அவள் முன்னால் கை காட்டினாள்.

அந்த பெண் போய் கூறியதும்…

“தேங்க்ஸ்”

என்றவாறு தன் இடத்திற்கு வந்து தூங்க ஆரம்பித்தான்.

“எதுக்கு இப்போ அங்க போய் உட்கார்ந்தீங்க…” என்று ருத்ரா கடிக்க… அவன் அசையாமல் காதை மற்றும் ஒற்றை விரல் கொண்டு தேய்த்து…

“சும்மா அங்க உட்காரனும் என்று தோன்றிச்சு அதான் உட்கார்ந்தேன்… இப்போ குட்நைட்.. எனக்கு தூக்கம் வருது..”

என்று கூறி தூக்கத்தை தொடர்ந்தான். ருத்ரா வாய்க்குள் எதையோ திட்டி தானும் உறங்க கண்ணை மூடினாள்.

சரியாக இரவு பன்னிரண்டு மணிக்கு விமானம் ஆந்திரா மாவட்டம் விஜயவாடாவில் தரையிறங்கியது.

 

 

 

 

 

 

 

   

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

  

 

error: Content is protected !!