Un Vizhigalil Vizhuntha Naatkalil 23

Un Vizhigalil Vizhuntha Naatkalil 23

வாணியை அதிக நேரம் காத்திருக்க வைக்காமல் வில்லியம் வெளியே வந்தான்.

அவனைக் கண்டதும் வாணிக்கு ஏனோ அவனைப் புதிதாகப் பார்ப்பது போல இருந்தது.

“ ச்சே! வாழ்க்கைல இந்த புள்ள பூச்சிக்கெல்லாம் பயப்படுவேன்னு நெனச்சுக் கூட பாக்கல.. ம்ம்ம் இல்ல… நான் பயப்படல , ஆனா இங்க வந்து இப்படி காலங்காத்தால நிக்க வெச்சுட்டானே! “ தனக்குள் புலம்பிக் கொண்டு அவன் செயல்களை நோட்டம் விட்டாள்.

வீட்டிற்கு வெளியே வந்தவன் முதலில் தன் போனை எடுத்து வசுந்த்ரவிற்குப் போன் செய்தான்.

போன் செய்தவன் , வீட்டில் இருப்பவர்களுக்குத் தெரியக் கூடாது என்று அங்கிருந்து நகர்ந்து கோவில் வழியே வந்து நின்று பேசினான்.

அங்கிருந்த வாணி அவன் பேசுவதைக் கவனமாகக் கேட்டாள்.

“ கிளம்பிட்டேன் அக்கா..” – வில்லி

‘ யார இவன் அக்காங்கறான் , எங்க போறான், ஒரு வேளை இவன் சொந்தகாரங்ககிட்ட பேசறானா! “ அவன் பேச்சு புரியாமல் இருந்தாள் வாணி.

“ நீங்க சொல்றதெல்லாம் சரி தான். ஆனா அவங்கள எங்க போய் தேடுவேன்.?” வில்லி கேட்க,

“ ஆமா அது பெரிய சென்னை சிட்டி பாரு. அந்த ஊர்ல இருக்கறதே ஒரு பத்து தெரு தான். அதுல இவங்க தனியா பேசணும்னா ரெண்டு மூணு தோப்பு தொறவு தான் இருக்கு. இல்லனா வாய்கா வரப்பு. போய் பார்பியா.. எல்லாத்தையும் என்கிட்டையே கேட்டுட்டு நிக்கற “ இருந்த எரிச்சலில் வசுந்தரா இவனைத் திட்ட,

“ ஆனா இப்போ ஜீவா எங்க இருப்பான்னு தெரியல, அவன் கண்ணுல பட்டா அவ்ளோ தான். அவனுக்கு ஏற்கனவே என்மேல கொஞ்சம் லைட்டா கடுப்பிருக்கு “

“ டேய்… இப்போ போறியா இல்ல நானே பாதுக்கவா?” வசு மேலும் கொதிக்க,

“ சரிக்கா சரிக்கா… நான் பாத்துக்கறேன். வெச்சிடறேன் “ போனை வைத்து விட்டு தலையைச் சிலுப்பிக் கொண்டான்.

‘ அடப் பாவி, ஜீவா கண்ணுல படக் கூடாதா, அப்போ நீ கண்டிப்பா எங்களப் பிரிக்க தான் ப்ளான் பண்ணுறியா, இருடா உன்னை நான் கவனிக்கறேன். ஆனா இவன் யார அக்கா னு சொல்றன்னு தெரியலே, இவனுக்கு சப்போர்ட் பன்றது யாரு! ‘ வாணி ஒரேடியாக குழம்பிப் போனாள்.

மறுபடியும் வீட்டிற்குள் சென்றவன் ஒரு சிறிய பையை தோளில் மாடிக்கொண்டு தன் பைக்கில் கிளம்பினான்.

வாணியும் கோவில் வாசலில் இருந்த ஆட்டோ ஒன்றில் ஏறி அவனைத் தொடர்ந்தாள். சிறிது நேரத்திலேயே தெரிந்தது அவன் ஜீவாவின் ஊருக்குத் தான் செல்கிறான் என்று.

இந்த விஷயத்தை ஜீவாவிடம் சொல்லலாம் என்றால் அவள் கையில் செல்போன் கூட இல்லை. உடனே அதிகம் யோசிக்காமல் ஆட்டோகாரனிடம் போனை வாங்கி ஜீவாவிற்கு அழைக்க, அது தொடர்பு எல்லைக்கு வெளியில் இருப்பதாகச் சொல்லியது.

கடுப்புடன் அதை அவனிடமே திருப்பிக் கொடுத்து விட்டு , வில்லியைக் கவனித்தாள்.

அவன் நேராக ஜீவா வீட்டின் தெரு முனையில் நின்றான். அப்போது தான் சுபத்ரா வருவதைக் கண்டு அவளை பிடிக்க முடியும் என யோசித்தான். ஆனால் அவன் இது வரை சுப்த்ராவைப் பார்த்ததே இல்லை.

அவன் பின்னால் வந்த வாணி, ஆட்டோவில் இருந்த படியே பார்க்க, அவன் ஜீவா வீட்டிலேயே கண்ணாக இருப்பது தெரிந்தது.

‘ ஜீவா வுக்குத் தெரியாம ஏதோ பண்ண நினைக்கறான். ஆனா இங்க யாருக்காக நிக்கறான். நாம நேரா போய் இந்த விஷயத்தை ஜீவா கிட்டே சொல்லிடுவோம்’ இவ்வாறு வாணி யோசிக்க ,

அப்போது தான் சுபத்ரா வீட்டில் இருந்து வெளியே வருவதைக் கண்டனர் இருவரும்.

உடனே வில்லி மீண்டும் வசுந்த்ராவிற்குப் போன் செய்து ,

“ அவங்க வீட்டுலேந்து ஒரு பொண்ணு வெளிய வரா, அவ தான் சுபத்ராவா இருக்கணும், ஏன்னா எனக்கு யமுனாவை நல்லாத் தெரியும், சோ இவ அந்த சுபத்ரா தான். நான் இனி அவள பாத்துக்கறேன்” சொல்லிவிட்டு நடந்து சென்றான்.

‘அடப் பாவி ! நீ சுபத்ராவ என்ன செய்யப் போற, நீ அவள பாத்ததில்லன்னு வேற இன்பர்மேஷன் குடுத்துட்ட , இரு டா மரமண்ட உன்னைக் கண்பியூஸ் பண்றேன் ‘ வாணியும் மெல்ல தொடர்ந்து பின் அவனை முந்திக் கொண்டு வேகமாக சென்றாள்.

அவளைக் கண்ட வில்லி, ‘ இந்த ஊர்ல கூட ஜீன்ஸ்பேன்ட் போடற பொண்ணுங்க இருக்காங்க போலிருக்கே’ முகம் முழுதும் மூடியிருந்த வாணிய அடையாளம் காண முடியவில்லை.

“ ஹே! ராதா! நில்லுடி “ வேண்டுமென்றே சுபியைப் பார்த்து சத்தமாக கத்தினாள்.

சுபத்ராவும் யாரென்று திரும்பிப் பார்க்க, வேகமாக சென்று அவளுடன் சேர்ந்து நடந்தாள்.

‘ அடடா, இது சுபத்ரா இல்லையா , நல்ல வேளை. இல்லனா ஆள மாத்தி தூக்கிடோம்னு அதுக்கு வேற பிரச்சனை ஆகிருக்கும். இந்த புண்ணியவதிக்கு தான் தேங்க்ஸ் சொல்லணும். ‘ சற்று பெருமூச்சு விட்டு மெதுவாக அவர்கள் பின்னேயே நடந்தான்.

ஆனால் சுபி குழம்பினாள்.

“ நான் ராதா இல்லங்க, நீங்க யாரு ?” சுபி கேட்க,

நல்ல வேலையாக இவள் பேசியது சற்று இடைவெளி விட்டு நடந்து வந்த வில்லியின் காதில் விழவில்லை.

அவனைத் திரும்பிப் பார்த்த வாணி, அவன் எங்கோ பார்க்கவும்,

“ சுபி நான் தான் இதயவாணி. இங்க பாரு , அந்த பையன் பேரு வில்லியம். அவன் எங்கள பிரிக்க உன்னை வெச்சு ஏதோ ப்ளான் பண்றான். நீ தான் சுபின்னு காட்டிக்காத.” மெல்ல அவள் காதில் மட்டும் கேட்குமாறு பேசினாள்.

“ என்ன சொல்ற வாணி எனக்குப் புரியல!”

“உனக்கு இப்போ என்னால விளக்க முடியாது. நான் சொல்ற மாதிரி செய், நீ கொஞ்ச தூரம் என்கூட வந்துட்டு , அப்பறம் வந்த வழியே திரும்பிப் போ! அவனை க்ராஸ் பண்றப்ப , என்னைப் பார்த்து பை சுபின்னு கத்தி சொல்லு அவன் காதுல விழற மாதிரி. அவன் நான் தான் சுபின்னு நினச்சுப்பான். அவன நான் பாத்துகறேன். நீ அதுக்கப்பறம் உடனே வீட்டுக்குப் போய் உங்க அண்ணன கூட்டிட்டு உங்க வாழைத் தோப்புக்கு வா, அப்படியே எங்க அண்ணனுக்கும் போன் பண்ண சொல்லிடு. சரியா… வா கொஞ்ச தூரம் நடக்கலாம்” வாணி அதற்குள் ப்ளான் செய்து சொல்ல,

எதுவும் விளங்காமல் தவித்தாள் சுபத்ரா.

“ உன்ன ஏதாவது செஞ்சுடப் போறான் வாணி.” அவளுக்கு வயிற்றுக்குள் ஏதோ பிசைய,

“ அவன எனக்கு சின்ன வயசுலேந்து தெரியும். நீ பயப்படாத சுபி. சரி இப்போ நீ திரும்பிப் போ, நான் சொன்ன மாதிரி செய்” அவளுக்கு தைரியம் சொல்லி, திருப்பி அனுப்பினாள்.

அவளும் வேறு வழியின்றி திரும்பிச் சென்று, வில்லி அருகில் வந்ததும்,

“ பாத்துப் போ சுபி “ என்று லேசாகக் கத்தினாள்.

அவன் அவளைப் பார்க்க,

‘ என்னது அவ தான் சுபதராவா! ‘ வில்லி யோசிக்க, மீண்டும் சுபியிடமே அவன் கேட்டான்.

“ எக்ஸ்கியூஸ்மீ , அவங்க தான் சுப்த்ராவா? ஜீவாவோட தங்கச்சி தான?” நல்லவன் போலக் கேட்க,

“ ம்ம்ம்..” வேகமாக தலையாட்டிவிட்டு வீட்டை நோக்கி ஓடினாள். உடனே ஜீவாவிடம் இதைச் சொல்லி அவனைக் கூப்பிட வேண்டும் என்று பதட்டம் அவளைத் தொற்றிக் கொண்டது.

அந்த நேரம் ஜீவாவும் தவசியும் புறப்பட்டுச் செல்ல, அவர்கள் பின்னாலேயே யமுனாவும் கிளம்பி சுபியைத் தேடித் தான் வந்துகொண்டிருந்தாள்.

மூச்சு வாங்க ஓடி வரும் சுபியைக் கண்டதும் யமுனா பதற,

“ என்ன ஆச்சு சுபி! ஏன் ஓடி வர?” அவளை தாங்கிப் பிடித்த படி கேட்டாள்.

“ சொல்றேன் யம்மு, அண்ணன் எங்க? கிளம்பியாச்சா?” மூச்சு வாங்கிக் கொண்டே கேட்க,

“ அதை சொல்லத் தான் வந்தேன். நீ கிளம்பி கொஞ்ச நேரத்துலையே ஆனந்த் அத்தான் போன் பண்ணாங்க, மாமாக்கு உடம்பு சரியில்லாம ஹாஸ்பிட்டல்ல சேத்திருக்காங்க. அதுனால வர முடியாதுன்னு உங்கிட்ட சொல்லத் தான் போன் பண்ணாங்க. இப்போ அண்ணனும் பெரியப்பாவும் டவுன் ஹாஸ்ப்பிடளுக்குத் தான் போயிட்டு இருக்காங்க. “ யமுனா சொல்லவும்,

“ அடச் ச்சே எல்லாம் ஒரே நேரத்துலயா வரும். இப்போ வாணி தான் பிரச்சனைல மாட்டிக்கிட்டா . நீ என்கூட வா, உடனே போய் அண்ணனுக்கு போன் பண்ணலாம். “ அவசரப் படுத்தினாள் சுபி.

“ என்ன சொல்ற சுபி, வாணிக்கு என்ன? நீ பேசறதே புரியல!”

“ உனக்கு போறப்ப எல்லாம் சொல்றேன் வா” வீட்டை நோக்கி ஓடினர்..

வீட்டில் இருக்கும் யாருக்கும் எதையும் காட்டிக் கொள்ளாமல்  முதலில் ஜீவாவுக்கு போன் செய்தாள் . அவன் வண்டியில் சென்றுகொண்டிருந்ததால் போன் அடிப்பது அவன் காதில் விழவில்லை.

வெற்றியின் நம்பர் வேறு அவளுக்குத் தெரியாது. அதனால் மீண்டும் ஜீவாவிற்கே போன் செய்ய, இம்முறை எடுத்துப் பேசினான்.

“ அண்ணா, நீ உடனே கிளம்பி இங்க வா, வாணிக்கு ஆபத்து, யாரோ வில்லியமாம். அவன் ஏதோ ப்ளான் பண்றான்னு  சொல்லி , வாணி இப்போ அவன் கிட்ட மாட்டிக்கிட்டா . நீ உடனே நம்ம வாழத் தோப்புக்கு வந்துடு, அப்புறம் வாணியோட அண்ணனுக்கும் போன் பண்ணி சொல்லிட சொன்னங்க, எனக்கு நம்பர் தெரியாது, நீயே சொல்லிடு” போனை வைக்கப் போக,

“ சுபி நான் உடனே வரேன், நீ நம்ம முருகனை கூட்டிட்டு உடனே அங்க போய் பாரு, முடிஞ்சா முருகனை விட்டு அந்தப் பையன பிடிச்சு வைக்க சொல்லு, நான் இன்னும் பத்து நிமிஷத்துல அங்க இருப்பேன் “ மனசெல்லாம் துடிக்க ஆரம்பித்தது.

தன் தந்தையிடம் விஷயத்தை சொல்லி, அவரை மட்டும் டவுனுக்கு பஸ்ஸில் அனுப்பிவிட்டு அவன் கிளம்பினான்.

வழியிலேயே வெற்றிக்குப் போன் செய்து சொல்ல,

அப்போதுதான் வீட்டில் அவளைக் காணாமல் வில்லியின் வீட்டிற்கு கோபமாகக் கிளம்பிக் கொண்டிருந்தான் வெற்றி. இதைக் கேட்டதும் அவனும் உடனே கிளம்பினான்.

ஆனால் வாணியோ வில்லியமிற்கு ஊரைச் சுற்றிக் காட்டிக் கொண்டிருந்தாள். வாழைத் தோப்பிற்கு உடனே செல்லாமல் சற்று போக்குக் காட்டிக் கொண்டிருந்தாள்.

சிறிது நேரம் கழித்து வாழைத் தோப்பிற்கு செல்லும் வழியில் அவள் செல்ல,

வில்லி சற்று வேகம் பிடித்தான். இத்தனை நேரம் ஊருக்குள்ளேயே இருந்ததால், யாராவது இவன் செயலை கவனித்தாலும் ஆபத்தாகக் கூடும் என்று தான் அவனும் மெதுவாக அவளைத் தொடர்ந்து கொண்டிருந்தான்.

இப்போ ஆட்கள் நடமாட்டம் சற்று குறைய வேக எட்டுக்களைப் போட்டு அவளை நெருங்கினான்.

வாழைத் தோப்பிற்குள் அவள் நுழையவும் அவளது கையை வில்லி பற்றவும் சரியாக இருந்தது.

அவளது இரண்டு கையையும் பின்னால் பிடித்து வைத்திருந்தான். கையைக் கட்ட கயிறு போல எதையாவது தேட, முகத்தைச் சுற்றிக் கட்டியிருந்த அவளது சால்வையைக் கழட்டிக் கட்டினான்.

பிறகு தான் அங்கிருப்பது வாணி என்று அவனுக்குத் தெரிந்தது. உடனே இரண்டடி பின்னால் நகர்ந்தான்.

“ வாணி .. நீயா!”

“ ஆமா டா , நீ இவ்வளவு மோசமானவனா இருப்பன்னு நெனச்சுக் கூடப் பாக்கல “  அவள் முகத்தில் அத்தனை எரிச்சல்.

வாணியின் முன்னே இப்போது ஒரு தப்பானவனாக நிற்பது அவனுக்கு அவமானமாக இருந்தது.

ஆனாலும் தன்னை நியாயப் படுத்த,

“ இல்ல வாணி. நீ என்னை தப்பா நினைக்காத, நான் ஏன் இதெல்லாம் பண்ணேன்னு தெரியுமா, நான் உன்ன காதலிக்கறேன்”

“ சீ ! வாய மூடு, சின்ன வயசுலேந்து ஒண்ணா தான படிக்கறோம். எப்படி டா உன்னால எனக்கு இப்படி ஒரு காரியத்தை செய்ய முடிஞ்சுது, நானும் ஜீவாவும் விரும்பறோம்னு தெரிஞ்சு கூட இப்படி பண்ணிட்டியே! இதுல எங்க கிட்ட நல்லவன் வேஷம் வேற. “ அவள் அவனை பிடிக்காமல் பேசுவதை அவனால் பொறுத்துக் கொள்ள முடியாமல்,

“ ஆமா டி! நீ எனக்கு வேணும். அதுக்குத் தான் இப்படி பண்ணேன். இப்போ என்ன அவன் தங்கச்சிய வெச்சு அவன ப்ளாக்மெயில் பண்ணி, உங்க வீட்டுக்கு வர விடாம செய்யலாம்னு நெனச்சோம். ஆனா அவளுக்கு பதில் ரொம்ப புதிசாலித் தனமா யோசிச்சு செஞ்சதா நெனச்சு நீ வந்து மாட்டிக்கிட்ட, எப்படியோ எனக்கு வேண்டியது நடக்கப் போகுது ! “ வன்மமாக ஆரம்பித்து பின்பு வெறியுடன் அவளை நோக்கி நடந்தான் வில்லி.

 

 

 

 

 

 

error: Content is protected !!