Un vizhigalil vizhuntha naatkalil – 5

Un vizhigalil vizhuntha naatkalil – 5

வாணியின் அண்ணன் வெற்றிவேல் அன்று விடுமுறைக்காக வந்திருந்தான். எப்போதும் வெற்றி ஊரிலிருந்து வந்தால் அவளுக்காக பல பொருட்களை வாங்கி வருவான். இம்முறை என்ன வாங்கி வந்திருப்பான் என்பதைப் பார்க்க ஆவலாக இருந்தாள்.

“ டேய் அண்ணா.. என்ன வாங்கிட்டு வந்த எனக்கு?” பையிலிருந்து அவன் பொருட்களை நோண்டியபடியே கேட்டுக் கொண்டிருக்க,

கிச்சனிலிருந்து ரேகா கொடுத்த காபியை கொஞ்சம் கொஞ்சமாக சிப்பிய படியே வெளியே வந்து அவள் செய்கையைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தான்.

“ குட்டிமா.. உனக்கு இந்த தடவ நான் வாங்கிட்டு வந்தது என் பைல இல்லை.. அது தனி பார்சல். “ என பக்கத்திலிருந்த அட்டைப் பெட்டியை எடுத்து வந்து தர, ஆவலாக அதைப் பார்த்தாள்.

“ ஹை… என்ன டா அண்ணா.. ஸ்பெஷல் கிஃப்டா?” கண்கள் மின்ன அதைப் பிரிக்கத் தொடங்கினாள்.

அதற்குள் ரேகாவும் வந்து விட,

“ஏன் டா வெற்றி, இவ சும்மாவே ஆடுவா, இப்படி ஒவ்வொரு தடவையும் எதாவது வாங்கிட்டு வந்து அவள கெடுக்காத.. அதுவும் இல்லாம காசு இப்படி செலவு பண்ணாத டா.. அவ கல்யாணத்துக்கு சேர்த்து வைக்கணும். வர்றவன் என்ன என்ன கேட்பானோ! “ வழக்கம் போல புலம்ப ஆரம்பித்தார்.

“அம்மா அவளுக்கு என்ன குறைச்சல்.. அவ தேவதைம்மா. அவள கல்யாணம் பண்ணிக்கறவனே எல்லாம் செஞ்சு கல்யாணம் பண்ணிப்பான். அவ அதிர்ஷ்டக்காரி.” தங்கையின் பெருமை பேச

அவளோ இருவரின் பேச்சையும் கவனிக்காமல், கொக்கிற்கு ஒன்றே மதி என்பது போல அந்தப் பார்சலைப் பிரிப்பதிலேயே குறியாக இருந்தாள்.

“ அண்ணா…. “ முறைத்துக் கொண்டே வெற்றியைப் பார்த்தாள்.

“ என்ன டா.. புடிச்சிருக்கா..?”

“ என்னண்ணா இது.. புக்ஸ் வாங்கிட்டு வந்திருக்க..? ஆப்டிடியூட் ஆஆ? ச்சே…” தூக்கிய புத்தகத்தை கீழே வைத்து விட்டு எழுந்து கொள்ள,

“டேய் குட்டிமா.. இது உனக்கு யூஸ்ஃபுல்லா இருக்கும் .. படிக்க ஆரம்பிச்சா.. உனக்கே இன்ட்ரெஸ்ட் வந்துடும் பாரேன். அப்புறம் போர் அடிச்சா கூட இந்த புக் தான் நீ படிப்ப !” அவளது தோளைப் பிடித்து அவளுக்குப் புரியவைத்தான்.

“ ப்ச்… போடா அண்ணா.. கடுப்பாக்காத… “ அவள் முகத்தை தூக்கி வைத்துக் கொள்ள,

“ ஏன் டி. உனக்கு வேலைக்கு போகணும்னு நீ சொன்னதுனால தான் அவன் இத வாங்கிட்டு வந்திருக்கான். ஒழுங்கா படிச்சு வேலைக்கு போகணும். “ வழக்கம் போல அட்வைஸ் செய்ய ஆரம்பித்தார் ரேகா.

“ ஆமா.. நான் வேலைக்குப் போவேன். ஆனா இப்போ தான காலேஜ் ஜாயின் பண்ணியிருக்கேன். அதுக்குள்ள வேலைக்கு போறத பத்தி என்ன? கொஞ்ச நாள் என்ஜாய் பண்றேனே ..” அம்மாவிடம் சண்டைக்கு வர,

 “ சரி சரி… உன்ன யாரும் வேலைக்கு போக சொல்லி கட்டாயப் படுத்தல. உன்னோட விருப்பம் தான் எனக்கு முக்கியம். நீ சந்தோஷமா இருக்கணும். நீ மேல படிக்கணும்னு ஆசைப் பட்டாலும் அதையும் செய்யலாம் சரியா. இந்த புக்ஸ் நான் வாங்கினது உன்னை வேலைக்கு அனுப்பறதுக்கு இல்லை. ஜஸ்ட் ஒரு நாலேட்ஜ் கெய்நிங்க்கு தான். உனக்கு யூஸ் ஆகும் சரியா.. “ என்று அவள் தலையைப் பிடித்து ஆட்டி விட்டு சொல்ல,

மெல்ல சிரித்தாள் அன்புத் தங்கை. ரேகாவைப் பார்த்து இல்லாத காலரைத் தூக்கி விட,

“ நீ தான் இவளை செல்லம் குடுத்து கெடுக்கற வெற்றி. வாழ்க்கைல அப்புறம் கஷ்டம் தான். “ சொல்லிவிட்டு அவர் சென்று விட்டார். ஆனால் அதுவே பலித்துவிடும் என்று தெரிந்திருந்தால் ஒரு வேளை சொல்லாமலே இருந்திருப்பாரோ என்னவோ!

அவர் சென்ற பிறகு வாணியின் கைகளில் ஒரு கை கடிகாரத்தை கட்டிவிட்டான் அவளின் அண்ணன்.

“ அண்ணா… வாவ்.. சுப்பரா இருக்கு. ஏன் அப்போவே தரல..?” அந்த வாட்ச்சின் அழகை ரசித்த படியே அவள் சொல்ல,

“ உனக்கு சர்ப்ரைஸா குடுக்கலாம்ன்னு தான் டா..” அவளின் மகிழ்ச்சியில் ஆனந்தம் அடைந்தான் வெற்றி.

நீண்ட நாட்களுக்குப் பிறகு அன்று குடும்பத்துடன் வயலூர் முருகனை தரிசிக்கச் சென்றனர். வாணி தன் அண்ணனுடன் பேசிக் கொண்டும் சிரித்துக் கொண்டும் இருந்தாள்.

இலைப் பச்சை நிற பட்டு சுடிதார் அணிந்து , காதோரம் முடியை எடுத்து நடுவில் கிளிப் போட்டு விரித்து விட்டிருந்தாள். முல்லைப் பூச் சூடி அங்கிருப்பவர்களை அதன் வாசத்தால் இழுத்துக் கொண்டிருந்தாள். மெல்லிய ஒப்பனையில் அன்று மாலை மங்களகரமாக காட்சியளித்தாள்.

அங்கிருந்த இளைஞர் கூட்டத்தின் கண்கள் இவளைத் தான் சுற்றின.

அவள் சராசரி உயரம் தான். வரிசையில் நின்று உள்ளே இருந்த முருகனை எட்டிப் பார்த்துக் கொண்டே வந்தாள்.

ஒரு கட்டத்தில் மிகவும் கஷ்டப் பட்டு பார்க்க , முன்னே நின்று கொண்டிருந்த ஒருவரின் காலை மிதித்து விட்டாள். அவர் “ஆ”வெனக் கத்த, “சாரிங்க சாரிங்க “ என்று இவள் கெஞ்ச , அதைப் பார்த்த எதிர் வரிசையில் வந்த ஒருவன் சிரித்தான்.

அவன் சிரிப்பது இவள் காதில் விழுந்து அவனைத் திரும்பிப் பார்க்க, அங்கே வெள்ளை நிற சட்டையில் அம்சமாக நின்று கொண்டிருந்தான் ஜீவா.

முறைத்துக் கொண்டே திரும்பியவள் அவனைக் கண்டதும் கோவம் பனியென உருகி, அந்த முருகனை விடுத்து இந்த அழகனைப் பார்க்கத் தொடங்கினாள்.

அவன் புருவத்தை ஏற்றி என்னவென்று கேட்க, ஒன்றுமில்லை என்று தலையசைத்தாள்.

லேசாகச் சிரித்தவன், “ சாமிய பாரு!” என்று கண்ஜாடை காட்ட, அவள் உடனே சுற்றம் நினைவு வந்து கண்ணத்தில் போட்டுக் கொண்டு வரிசையில் முன்னே சென்றாள்.

அவள் செய்கையை ரசிக்காமல் இருக்க அவனால் முடியவில்லை. ‘சின்ன சின்ன விஷயம் கூட பிடிக்குது டி ,மாயக்காரி’ மனதில் அவளை செல்லமாகத் திட்ட,

அவளுக்கு அங்கே புரை ஏறியது. உடனே அவனைப் பார்க்க, இப்போது கண்ணத்தில் போட்டுக் கொள்வது அவன் முறையாயிற்று.

அதைக் கண்டு அவள் சிரித்து விட, வெற்றி உடனே “ என்ன சிரிப்பு” என்று கேட்டான்.

“ ஒன்னுமில்ல ..சும்மா ஏதோ ப்ரெண்ட்ஸ் சொன்னது ஞாபகம் வந்துச்சு அதான் சிரிச்சுட்டேன்” மழுப்பினாள்.

“ ம்ம்… இப்படி தான் அடிக்கடி ஏதோ நினச்சு புலம்பறா சிரிக்கறா ..காலேஜ் போனதுலேந்து இப்படித் தான்” குற்றப் பத்திரிக்கை வாசித்தார் ரேகா.

“அம்மா ! காலேஜ்னா அப்படித் தான் இருக்கும்” தங்கைக்குப் பரிந்து பேசினான் வெற்றி.

ஒருவழியாக முருகனை தரிசித்துவிட்டு வெளியே வந்தனர். ரேகா கோயிலை சுற்ற வேண்டும் என்று கேட்டதால், வெற்றியும் கூட சேர்ந்து சுற்ற, கால் வலி என்று வெளியே வந்து அமர்ந்து விட்டாள் வாணி.

சக்கரைப் பொங்கல் பிரசாதத்தை கொஞ்சம் கொஞ்சமாக ருசித்து சாப்பிட்டுக் கொண்டே ஜீவாவைத் தேடினாள். அவனைக் காணாததால், அவன் ஒரு வேளை தான் குடும்பத்துடன் வந்திருப்பதால் பேசாமலே சென்று விட்டானோ என்று கையில் மீதமிருந்த பொங்கலிலிருந்து நெய் வடிய அதை உதட்டால் நக்கியபடியே திரும்ப அருகில் வந்து அமர்ந்தான் ஜீவா.

“ எனக்குக் கொஞ்சம் பொங்கல் வேணும் தா..” கையை நீட்டிக் கொண்டே அவளைப் பார்க்க,

தன் அண்ணனையும் அம்மாவையும் கண்களால் தேடிக் கொண்டிருந்தாள்.

“ அவங்க இப்போ வரமாட்டாங்க, எனக்கு கை வலிக்குது சீக்கிரம் குடு “ அவளது பதட்டம் உணர்ந்து இதமாகக் கேட்க,

தன் இடது கையில் இருந்த தொன்னையை நீட்டினாள் வாணி.

“ ரைட் ஹென்ட்ல குடுக்கற பழக்கம் இல்லையா உனக்கு..” நக்கலாகக் கேட்க ,

உதட்டை சுழித்துக் கொண்டு அவனைப் பார்த்து ,

“ ரைட் ஹான்ட் எச்சில் .. பாத்தா தெரியலையா?” முறைப்பாகக் கேட்டாள்.

“ தெரிஞ்சு தான கேட்கறேன்.. அது உனக்கு புரியலையா?” பதிலிக்கு சிரிப்புடன் அவன் கேட்க,

இப்போது அவளுக்கு வாயடைத்துப் போனது.

‘ இவன் என்ன கேட்கறான்.. என்னோட எச்சில சாப்டறேங்கறான்.. விட்டா வாய்லேந்து எடுத்து சாப்பிடுவான் போல ‘ வாயில் போட்டு அவசரமாக விழுங்கினாள்.

அதைக் கண்டு அவனுக்கு சிரிப்பு வர, ‘ஒரு நாள் அதை வாங்காமல் விடமாட்டேன். அப்போ என்ன செய்யறன்னு பாக்கறேன்’ மனதில் சொல்லிக்கொண்டு எழுந்தான்.

கூடவே தானும் எழுந்தவள் , அவனுக்கு பொங்கலை நீட்ட,

“ எனக்கு வேணாம். அதையும் நீயே சாப்பிடு” சலித்துக்கொண்டான்.

“ அது வேணாம் எச்சில். இது எடுத்துக்கோங்க.. “ அவனிடம் நீட்டிக் கொண்டே இருந்தாள்.

“ சரி அப்போ நீயே என் வாய்ல ஊட்டிவிடு. “ எதார்த்தமாக சொல்ல,

“ என்னது… ?!! நானா.. முடியாது..” கோயிலில் வைத்து என்ன கேட்கிறான் என்று நினைத்தாலும் (அப்போ வேற இடமா இருந்தா ஓகே வா என்று மைன்ட் வாய்ஸ் கத்தியது)

“ ஹே நான் ஒன்னும் தப்பா கேட்கல, பாரு ஆல்ரெடி உன் கையெல்லாம் நெய் வடியுது. இப்போ நானும் கையெல்லாம் நெய் ஆக்கிகனுமா.. அதான் சொன்னேன். அப்போ கூட அதுனால தான் உன் கைல இருக்கறதை கேட்டேன். நீ சொத்துல பங்கு கேட்ட மாதிரி உடனே முழிங்கிட்ட.. “ ஏதோ வாய்க்கு வந்த பாயிண்டை சொல்ல,

 நிஜமாவே அதுனால தான் கேட்டிருப்பானோ என்று அவளுக்கு சந்தேகமே வந்தது. இருந்தாலும் அவன் கேட்டுவிட்டு கொடுக்காமல் இருப்பது அவளுக்கு என்னவோ போல இருந்தது.

அதற்காக ஊட்டி விட முடியுமா.. உடனே யோசித்தவள், அருகில் இருந்த மரத்தின் இலையைப் பறித்து அதை ஸ்பூன் போல மடக்கி  அந்த பொங்கலில் வைத்து அவனிடம் நீட்டினாள்.

‘அடிப்பாவி… இதுக்கெல்லாம் நீ ஒரு நாள் அனுபவிப்ப டி . மாங்கா டி நீ. உனக்காக ஏங்கற ஒருத்தனோட ஃபீலிங் புரியுதா பாரு. புரிஞ்சாலும் ஒண்ணுமே தெரியாத மாறி இருப்பா.. ப்ரெண்ட்டா பாக்கறாளாம்.. ஃபிராட்..‘ மனதிற்குள் திட்டியபடியே அதை வாங்கி உண்டான்.

அப்பாவி போல அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள். தூரத்தில் அண்ணனின் தலை தெரிய,

“ அச்சோ எங்க அண்ணன் வரான். அப்பறம் பாக்கலாம் பை..” அவன் பதிலுக்குக் கூட காத்திருக்காமல் அங்கிருந்து மறைந்திருந்தாள்.

அவளின் பயத்தைக் கண்டு அவனுக்கு புன்னகையே வந்தது. அவனும் அங்கிருந்து சென்றான் அவள் செய்து கொடுத்த அந்த இலை ஸ்பூனை பத்திரப்படுத்திக்கொண்டு.

மனதில் அவனைக் கண்ட சந்தோஷத்தை வாணியின் முகம் அப்பட்டமாக தெரியப் படுத்தியது. அவளின் முக மாற்றத்தை கவனித்தான் வெற்றி.

வாணி , வெற்றியைப் பார்த்ததும் அங்கிருந்து கிளம்பியிருந்தாலும் , அதற்கு முன்னமே வெற்றி அவர்களைப் பார்த்துவிட்டான் என்பதை அவள் அறியமாட்டாள்.

தங்கையை கண்ணுக்குள் வைத்துப் பார்த்துக் கொள்பவன் , அவளைக் கண்ணில் படும் தூரத்தில் தான் தனியாக விட்டான் என்பதை அப்போது அவள் உணரவில்லை. ஜீவாவைக் கண்டதும் அவளுக்கு அனைத்தும் மறந்துவிடுகிறது.

ஆனால் வெற்றி அவனை நன்கு கவனித்தான். இது வெறும் ப்ரென்ட்சிப்பாக மட்டும் இருக்காது என்பது நன்றாகவே தெரிந்தது. ஏனெனில் தங்கையின் ஒவ்வொரு அசைவையும் சிறு வயதிலிருந்தே பார்த்து வருகிறானே.

ஜீவாவின் மீது கண் வைக்க முடிவு செய்தான்.

இரண்டு நாள் மேலும் லீவ் எடுத்துக் கொண்டு அவர்களை கண்காணிக்க நினைத்தான். ஒரு வேளை வெறும் நடப்பாக மட்டும் இருந்தால் எந்தப் பிரச்சனையும் இல்லையே.. தங்கை மனதளவில் கூட காயப் பட்டு விடக் கூடாது விரும்பினான்.

ஒரு வேளை அது காதலாக இருந்தால்… அதை அவனால் யோசிக்க முடியவில்லை. தனியாக தங்களை வளர்த்த தாயின் வளர்ப்பை அனைவரும் குறை கூற விடக் கூடாது என்பது மட்டுமே அவன் மனதில் இருந்தது. என்ன செய்வது என்று இப்போது அவனால் யோசிக்க முடியவில்லை.

உள்ளுக்குள் ஒரு திட்டம் ஓடத் தொடங்கியது.

மறு நாள் காலையில் ஆபீசிற்கு போன் செய்து லீவ் சொல்ல, ஏற்கனவே இரண்டு பேர் உடல் நிலை சரியில்லாமல் விடுப்பில் இருக்க, இவனது லீவை மறுத்தனர். வந்தே ஆகவேண்டும் என்று சொல்லிவிட, வேறு வழியின்றி கிளம்பினான்.

விட்டுப் பிடிப்போம் என்று மனதை கட்டுப் படுத்திக் கொண்டு சென்றான்.

                                             

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!