Unnalei Uzhagam Azhagachei – 2
Unnalei Uzhagam Azhagachei – 2
2
ஆண்டாளிடம் பேசிக் கொண்டிருக்கும் போது தற்செயலாய் அவளது முதுக்கு பின்னே நிறுத்தியிருந்த பைக்கின் சைட் மிரரில் அருண் கோபமாய் ஹாக்கி ஸ்டிக்கை ஓங்குவதைக் கண்டவன், நொடிகளுக்கும் குறைவான நேரத்தில் தானும் குனிந்து ஆண்டாளின் பேக்கைப் பிடித்திழுத்து அவளையும் குனிய வைத்திருந்தான்…
சரியாக அவன் ஓங்கியது, ஆண்டாள் நின்ற பைக்கில் பட்டு தூரப் போய் விழ, ஃபெரோஸ் கோபமாய் திரும்பும் முன் பரணி அருணின் சட்டையைக் கொத்தாய் பிடித்திருந்தான்..
ஆண்டாளும் என்ன ஏதென உணர்ந்து அங்கே சண்டைக்கு தயாராய் நிற்பவர்களைப் பிரித்துவிட்டவள்,
“எதுக்கு அருண் இப்படி பண்ணுன..?” கொஞ்சம் கோபமாய் கேட்டவளின் முன் நின்ற அருண் ஒல்லியாய் அழகாய் இருந்தாலும் அவனது விழிகளில் வழிவது பொறாமை மட்டுமே…
“அவன் உன்னை டார்ச்சர் பண்ணுனா நான் பார்த்துட்டு இருப்பேனா..?”
“அவன் என்ன டார்ச்சர் பண்ணுறதா உன்கிட்ட சொன்னேனா அருண்..” என்றவளைப் பார்த்து முகம் மலர சிரித்தான் ஃபெரோஸ்..
அவனது சிரிப்பைத் திரும்பாமலே உணர்ந்தவள் தலையில் அடித்து கொள்ள, அருண் ஒருவித நம்பாத பார்வை பார்த்து,
“என்ன பிரியா நீ அவனுக்கெல்லாம் சப்போர்ட் பண்ணுற..?” என்றவனுக்கு உண்மையாக பிரியா என்றால் உயிர் தான்..
ஆம்! அவன் பிரியாவை உண்மையாக விரும்பினான்… ஆனால் ப்ராக்ட்டிக்கலில் பிரியாவின் பின்னால் சுத்தும் தனது மானசீக எதிரியான ஃபெரோஸிடம் எங்கே ஓகே சொல்லிவிடுவாளோ என்ற பயத்தில் மற்றும் ஈகோவின் பொருட்டே அவன் சூசைட் நாடகத்தை அரங்கேற்றியது..
இப்போதும் அவனுக்குத் தெரியும் ஆண்டாள் தன்னை விரும்பவில்லை என்பது…அவளது அண்ணனும் காதல் தோல்வியில் தற்கொலை செய்து இறந்து போனதால் மட்டுமே இவன் மீதுள்ள பயத்தில் எங்கே இவனும் அதே போல செத்துவிடுவானோ என்ற குழப்பத்தில் அவனுடன் இருக்கிறாள்..
யோசனையில் ஆழ்ந்தவனின் முன்னே சொடக்கிட்டவள் தனக்கு அருகே நின்ற ஃபெரோஸின் கையைப் பிடித்திழுத்து, “இவன்கிட்ட சாரி கேளுங்க அருண்..” என்றாள்..
உரிமையான தன்னை இதுவரையில் சுண்டுவிரல் கூட தீண்ட அனுமதிக்காதவள், அந்த ஃபெரோஸை தொட்டு இழுக்கவும் அவளைப் பார்த்து முறைத்தவனுக்கு அவளை எதிர்க்கும் துணிவு சுத்தமாய் இல்லை, அதற்காக அவனிடம் மன்னிப்பும் கேட்க முடியாதே!
இருவரையும் பொசுக்கிவிடுவதைப் போல பார்த்தவன் விறுவிறுவென அங்கிருந்து நகர்ந்துவிட, “இவனை…” எனப் பல்லைக் கடித்த ஆண்டாள், ஃபெரோஸிடம் திரும்ப,
அவனோ அவள் பிடித்திருந்த தனது கையை நண்பர்களுக்கு காண்பித்து கெத்து காட்டிக் கொண்டிருந்தான்…
அவனது முகபாவனையில் அவனது கையை உதறியவள், “உன்னயெல்லாம் திருத்தவே முடியாது..போடா..” என்க…
அவள் தனது கையை உதறியதும் பாவமாய் பார்த்தவன், “அதுக்கு எதுக்கு பட்டுகுட்டி கையை உதறுர..இந்தா மாமா கையைப் பிடிச்சுக்கிட்டே சொல்லு பார்ப்போம்…” என்றவனை முறைத்து அங்கிருந்து நகர்ந்தாள்..
அவள் சென்ற திசையை விழியெடுக்காமல் பார்த்தவன் தனது தலையைக் கோதி கொள்ள, “என்ன மச்சான் இது..?” என்ற நண்பர்களின் கேள்விக்கு சிரிப்பைப் பதிலாய் கொடுத்தான்..
“அவா தான் அருணை லவ் பண்ணுறான்னு தெரியும்ல டா..அப்புறம் எதுக்கு இப்படி..?” என்ற சேதுவிடம்..
“மாமு…அந்த அருண் அவளைவிட்டு ஒருநாள் போயிடுவான்..” என்றவனை முறைத்தவர்கள்,
“உன் சுயநலத்துக்கு இப்படி சொல்லலாமா..?” எனக் கேட்க
“இல்ல மாமு…ஆண்டாளுக்கு அவனைப் பிடிக்காது..”
“பிடிக்காம தான் லவ் பண்ணுறாளா..?” என்ற நண்பனின் கேள்விக்கு ஃபெரோஸ் சிரிக்க, அவனது சிரிப்புடனே மணி அடித்து அன்றைய வகுப்பைத் தொடங்கியது..
அவனைக் கடந்து வந்த ஆண்டாளைப் பிடித்து கொண்ட ராகவி, “ப்ரியா, என்ன ஆச்சு..” என்க,
அங்கே நடந்ததை விளக்கமாய் சொன்னதும் ராகவி சொன்ன முதல் வாக்கியம், “அந்த அருண் சரியே இல்லை..அவன் வேணாம் டி..” என்றாள் தினமும் உச்சரிக்கும் தாரக மந்திரமாய்..
அவளுக்கு ஆமோதிப்பாய் தலையசைத்த ஆண்டாள், “எனக்கே தெரியும் ராகு..இன்னும் ஆறு மாசம் தானே..அவன் படிக்க ஃபாரின் போனதும் அப்படியே மறந்திடுவான்…” என்றவளை இடைமறித்தவள்,
“ஒருவேளை அப்பவும் உன்னை விடலைனா என்ன பண்ணுவ..?”
“எனக்கு அருண் மேல நம்பிக்கையிருக்கு அவன் என்னைவிட்டு போயிடுவான்னு..”
“அப்றமும் எதுக்கு டி லவ் பண்ணுற..? இப்படி அருணை ஏமாத்துறது தப்பில்லையா..?” என்ற கேள்விக்கு பெருமூச்சை விடுத்தவள்..
“என்னோட அப்பா சின்ன வயசுலயே இறந்துட்டார் ராகு..எனக்கு ஒரு அண்ணா இருந்தான்..”
“இருந்தாங்க அப்படின்னா..?”
“நவ் ஹி இஸ் நோ மோர்..” குரல் கரகரக்க சொன்னவள்
“என்னைவிட எட்டு வயசு பெரியவன்..? வேலைக்குப் போய் எங்களை காப்பாத்திடுவாம்னு நம்பிக்கையில தான் எங்க அம்மா கஷ்டப்பட்டு அவனைப் படிக்க வச்சாங்க..படிக்கும் போதே ஏதோ பிள்ளைய லவ் பண்ணுனானாம் அவங்க ஒத்துக்கல, சூசைட் பண்ணி இறந்துட்டான்..அதே போல இவனும் பண்ணிப்பேன்னு சொன்னதும்..” என நிறுத்தியவளைத் தொடர்ந்து மணியடிக்க
“வா ராகு க்ளாஸ்க்கு போகலாம்..” என்றாள் முகத்தை அழுந்தத் துடைத்து..
ராகவிக்குப் புரிந்தது, இது தேவையில்லாத பயம் என்பது..ஆனால் ஒரு இழப்பில் இருந்து மீண்டவர்களுக்கு அருணின் மிரட்டல் எவ்வளவு பயத்தைக் கொடுத்திருக்கும் என்பதையும் அவளால் புரிந்து கொள்ள முடிந்தது…
ஆண்டாளை நினைத்து பெருமூச்சை விடுத்தவள்,
“கடவுளே..அந்த கொம்பு மூக்கனை எப்படியாச்சும் இந்த காலேஜ் விட்டு அனுப்பிடு..” என வேண்டி, ஆண்டாளின் பின்னே ஓடினாள்..
மாலை கல்லூரி முடிந்ததும், வீட்டிற்கு வந்த ஃபெரோஸை முன்வாசலின் பக்கவாட்டில் உள்ள தோட்டத்தில் தொழுது கொண்டிருந்த மைதீன் பிச்சை வரவேற்க, தந்தை ஓதும் சத்தம் கேட்டவன், பைக்கை நிறுத்தி தள்ளிக் கொண்டு வந்து வீட்டில் விட்டான்..
சத்தம் வராமல் சூவைக் கழற்றியவன், மெதுவாய் வீட்டுக்குள் நுழைய அங்கே தனது அன்னை ஜென்ஸி குழந்தை யேசுவின் படத்திற்கு முன் மெழுகுவர்த்தி ஏற்றிக் கொண்டிருக்க, அவரையும் கடந்து சத்தமில்லாமல் தனது அறைக்குள் நுழைந்தவன் உடை மாற்றி,
“செல்லத்தா செல்ல மாரியாத்தா, எங்கள் சிந்தையில் வந்து அருளை நாடி நில்லாத்தா
பொன்னாத்தா உனைக் காணாட்டா இந்தக் கண்கள் இருந்து என்னப் புண்ணியம் சொல்லடி நீயாத்தா..”
என்ற பாடலை அலறவிட்டிருந்தான்..
தொழுது முடித்து வாயிலில் அமர்ந்திருந்த மைதீனுக்கும், அவருக்கு காபி கலந்து எடுத்து வந்த ஜென்ஸிக்கும் இது ஆறு மாத காலமாய் பழகி போயிருக்க, பக்கத்து வீட்டு ராகவேந்திரன் காம்பவுன்ட் சுவரில் பக்கம் நின்று,
“என்ன மைதீன் சார்…? பாட்டு பலமா இருக்கு..?” எனக் கேட்க,
அந்நேரம் வெளியே வந்த ஃபெரோஸ், “அங்கிள், என் லவ்வர் ஹிந்து அதான்…” என்றான் சிரித்த முகமாய்..
மகனின் முதுகில் ஒன்று வைத்த ஜென்ஸி, “லூசு மாதிரி பேசாம வாயை மூடுடா..” என்க
“சில உண்மைகள் கசக்க தான் செய்யும் அம்மோய்..” என்றவனின் குரலில் அவனை முறைக்க, மைதீனோ,
“பிஜிலி, உண்மையாவே லவ்வா டா..?” என்றார் கண்களில் ஆர்வம் மின்ன..
“விட்டா புள்ளய இவரே கெடுத்துருவார் போல..எந்திரிச்சு உள்ள போடா..” சராசரி தாயாய் உரையாடும் ஜென்ஸியைப் பார்த்து சிரித்தவன்,
“ஏன் அம்மோய், நான் யாரையாச்சும் லவ் பண்ணுனா என்ன பண்ணுவீங்க..?” மகனது கேள்வியில் இடைபுகுந்த மைதீன்,
“பெயர் சொல்லும் பிள்ளை டா நீ…நான்லாம் பச்சை சிக்னல் போட்டு விட்டிருவேன்..” என்றதும்,
“வேணாம் பிஜிலி…நீ உங்கத்தை மவா பர்வீனையே கல்யாணம் பண்ணிக்கோ..அப்படியாச்சும் உங்க ஆச்சிக்கு நம்ம மேல இருக்க கோபம் போகட்டும்..நீயும் காதல் கீதல்னு எங்க தலையில மண்ணை அள்ளி போட்டுறாத டா..” இவ்வளவு நாள் சொந்தமில்லாமல் வாழ்ந்த ஆதங்கத்தில் பேசியவர் உள்ளே சென்றுவிட,
“அவா கிடக்கா டா கூறுகெட்டவா..நீ உனக்கு பிடிச்ச வாழ்க்கைய வாழனும் டா பிஜிலி…” என்றவரிடம்,
“என்ன நைனா சென்ட்டிமென்ட்ட போட்டு தாக்குற..?”
“ஹி ஹி..சும்மா…ஏன்டா மவனே..உண்மையாவே பொண்ணு ஹிந்துவா..?”
“யேன் நைனா ஹிந்து வேணாமா..?”
“இல்ல டா..எனக்கு பிரச்சனை இல்ல..ஆனா அந்த பொண்ணு வீட்டுல ஒத்துப்பாங்களா..?”
“நைனா முதல்ல அந்த பொண்ணு ஒத்துக்குமா’னு கேளு..” மகன் சொன்னதும் வியப்பாய் பார்த்தவர்,
“உனக்கு என்ன டா நீ என்னை மாதிரியே அம்புட்டு அழகா இருக்க..உன்னை யவா வேணாம்னு சொல்லுவா..?” தற்பெருமை பேசும் தந்தையை அவன் சுட்டெரிக்கும் போதே,
“ஹா ஹோ ஹோ டாடி..செம காமெடி..” என காமோன்ட் சுவர் ஏறி வந்தான் பரணி..
பரணியும் சேதுவும் அக்கம்பக்கம் வீட்டார் தான்..சிறிது நேரம் முன்பு காமோன்ட் சுவரில் எட்டிப் பார்த்தாரே ராகவேந்தர் அவர் தான் பரணியின் தந்தை…
“ஏன்டா உருப்படாதவனே..முன்வாசல் வழியா வரவே மாட்டியா..?” என ஃபெரோஸ் திட்ட,
“அதெல்லாம் விடு நண்பா..நான் சுவர் ஏறி குதிக்கும் போது ஏதோ அழகுன்னு என் காதுல விழுந்துச்சே உனக்கு எதுவும் கேட்டுச்சா..?” ஓரக் கண்ணால் தன்னைப் பார்த்து கொண்டே கேட்கும் பரணியை கண்டும் காணாமல் தனது அலைபேசிக்குள் மைதீன் மூழ்கிவிட,
“அதுவா என் நைனா நம்ம வயசுல ஹிருத்திக் ரோஷன் மாதிரியே இருந்தாராம் டா..அதை தான் பேசிட்டு இருந்தோம்..” தன்பங்குக்கு மைதீனை வாரிக் கொண்டிருக்கும் போதே, வாயிலின் கேட்டை திறந்து இவர்கள் இருக்கும் பத்தடி தூரத்தை நிரப்பியபடி வந்து சேர்ந்தார் ராகவேந்தர்..
ராகவேந்தர் வருவதை ஓரக் கண்ணால் கண்டுவிட்ட பரணி, “உங்க அப்பாவாச்சும் பரவாயில்ல டா என் அப்பா நம்ம வயசுல அமிதாப் பச்சன் மாதிரியே இருந்ததா இப்போ தான்டா பீலா வுட்டுட்டு வாராரு..” என்றவன் சொன்னதும் ஃபெரோஸ் வாய்விட்டு சிரிக்க,
“உங்க அப்பாவ உத்து பாரு அப்படியே நோட்டா படத்துல வர ms.பாஸ்கர் மாதிரியே இல்ல..”
“எங்க அப்பா அம்புட்டு அழகாவா மச்சான் இருக்காரு..இரு எங்க அம்மா கிட்டயே கேட்போம்..” என்றவன்..
“அம்மோய்..இங்க ஒரு நிமிஷம் வா..” என அழைக்க
“என்ன டா..?” தோசை மாவு பிசைந்த கையோடு வந்தவரிடம்
“அம்மா அப்பா அழகாவா இருக்காரு..?” எனக் கேட்டு வைக்க, பக்கத்து வீட்டுக்காரர் உட்கார்ந்திருக்கும் போது விவஸ்தையில்லாமல் பேசும் தனது மகனை முறைத்தவர் அதே கையோடு வீட்டுக்குள் சென்றுவிட்டார்..
அன்னையின் முறைப்பில் அசடு வழிய திரும்பியவன், “ஹி ஹி எங்க அம்மாவுக்கு என்மேல அன்பு ஜாஸ்தி டா..” என்றவனை நக்கல் சொட்டும் விழிகளால் பரணி பார்த்தான்..
“இந்தா வந்துட்டாருல்ல நம்ம ராஜசேகர்..” சேரில் உட்காரும் ராகவேந்திரரை சுட்டிக் காட்டி பெரோஸ் சொல்ல,
“டேய் எரும எங்க அப்பா பேரு ராகவேந்திரன்..”
“உங்க அப்பாவ பார்க்க ராஜா ராணி நாடகத்துல வர ராஜசேகர் மாதிரியே இல்ல டா மாமு..”
“ராஜா ராணில யாரு டா ராஜசேகர்..”
“அதான் மாமு நம்ம செண்பாவோட மாமனார்..”
“அவர் ரொம்ப நல்ல மனுஷன் டா..” மகன்கள் இருவரும் பேசும் நாடக அரங்கேற்றத்தை காண வலுயில்லாமல் எரிச்சலுற்ற இருவரும்,
“டேய் இரண்ட் பேருக்கும் இது தானகடைசி வருஷம்..படிக்கலாம்ல..உருப்படுற வழி கொஞ்சம் கூட இல்ல..இதெல்லாம் என் அரசி மண்டிய பார்த்துக்க கூட லாய்க்கு இல்ல..”ராகவேந்தர் திட்டுவதை தோளில் தட்டி துடைத்து போட்ட பரணி..
“மச்சான்..வா டா நாம ஓரமா போய் பேசலாம்..இங்க நம்ம அமெரிக்க அதிபர் ட்ரம்பும் வடகொரிய அதிபர் கிம் ஜொங் உன்னும் ஏதோ நாட்டு வளர்ச்சி பத்தி உரையாட போறாங்களாம்…” என்றவன் ஃபெரோஸில் முதுகில் கைப்போட்டு அணைப்பாய் கூட்டிச் செல்ல,
மைதீன் பிச்சை வெடித்து சிரித்தார் என்றால் ராகவேந்திரருக்கு காதில் புகை வந்தது..
உலகம் அழகாகும்..!