உயிர் தேடல் நீயடி 11
காலை எழுந்தவுடன் நாட்காட்டியின் நேற்றைய தாளை கிழித்து விட்டு, இன்றைய தனது ராசி பலனை ஒருமுறை பார்த்து விடுவது தினமும் தொடரும் இவளின் சிறு பிள்ளை தனமான பழக்கம் தான் என்றாலும் இன்றைய நாளில் தன் ராசிக்கு என்ன பலன் வந்திருந்தது என்பது மட்டும் எவ்வளவு யோசித்தும் காவ்யதர்ஷினியின் நினைவுக்கு வருவதாய் இல்லை.
‘நிச்சயம் ஏதாவது மோசமான பலனாக தான் இருந்திருக்கும்’ என்று சலித்தபடி தன் ஸ்கூட்டியை சாலையில் செலுத்திக் கொண்டிருந்தாள்.
இன்று எப்போதும் போல எல்லாம் சரியாக தான் நடந்து கொண்டிருந்தது மேலாளர் ரங்கராஜன் இவளை அழைக்கும் வரை!
“என்ன காவ்யா, செக் எல்லாம் எம்ட்டியா இருக்கு, விபி சார்கிட்ட சைன் வாங்க சொல்லி இருந்தேனே, ஏன் வாங்கல?”
“நான் எம்டி சர் டேபிள்ல அப்பவே வச்சுட்டேன், அவர் அப்புறம் சைன் பண்றதா சொன்னாரு, மறந்துட்டார் போல” என்றாள்.
‘என்ன பதில் இது’ என்பதை போல அவளை பார்த்து விட்டு, விபீஸ்வர் எண்ணை கைப்பேசியில் சொடுக்கினார்.
“ஹலோ ரங்கா அங்கிள்” விபீஸ்வரின் உற்சாகமான அங்கிள் என்ற அழைப்பே இவருக்கு கடுப்பை கிளப்பியது.
“என்ன விபி, செக்ல சைன் பண்ணாம போயிருக்க, இப்ப எப்படி செக் மூவ் பண்றது?”
“ஓ நோ, நான் மறந்துட்டேன்”
“என்ன இர்ரெஸிபான்ஸிபிள் பதில் இது?” அவரும் அவனின் அங்கிளாகவே கண்டித்தார்.
மாத கணக்கில் வியாபார அலைச்சலின் மன அழுத்தத்தில் மண்டை காய்ந்து போயிருந்தவன், இன்று நிறுவனத்திற்கு வந்தும் மனம் ஒட்டாமல் விரைவாகவே கிளம்பி விட்டிருந்தான்.
“ஜஸ்ட் கூல் அங்கிள், ரிக்கி கிட்ட செக் கொடுத்து அனுப்புங்க நான் சைன் பண்ணி தரேன், சிம்புள்”
“இப்ப நீ எங்க இருக்க விபி?”
“அது ரிக்கிக்கு தெரியும், யூ டோண்ட் வொர்ரி அங்கிள்” என்று வைத்து விட்டான்.
இவருக்கு தலையில் அடித்துக் கொள்ள தான் தோன்றியது. ஒருபுறம் எல்லாவற்றையும் கச்சிதமாய் கையாளும் திறன் மிக்கவனாக, மறுபுறம் பொறுப்பற்ற அசட்டை உல்லாசியாக நடந்து கொள்ளும் இவனை என்ன தான் செய்ய முடியும்?
இது போன்ற நேரங்களில் தான், தன் உற்ற நண்பரான, நிறுவனத்தின் பெரிய முதலாளி சக்கரவர்த்தி உயிரோடிருந்தால் நன்றாயிருந்திருக்கும் என்று அழுத்தமாய் தோன்றும் இவருக்கு.
காசோலையை ரிக்கியிடம் கொடுத்து, விபியிடம் கையொப்பம் வாங்கி வருமாறு, காவ்யாவிடம் சொல்லி அனுப்பினார்.
காவ்யா ரிக்கியிடம் சொல்ல அவனோ, “நான் இம்பார்டன்ட் வொர்க்ல இருக்கேன், இதை முடிச்சுட்டு தான் என்னால நகர முடியும்” எப்போதும் போல சிடுசிடுப்பாய் பதில் தந்தான்.
“அதைவிட இது இம்பார்டன்ட். டிரேடர்ஸ், டீலர்ஸ், ரா மெட்டிரீயல்ஸ் எல்லாருக்கும் கொடுக்க வேண்டிய செக்ல எம்டீ சைன் பண்ணாம கிளம்பிட்டாங்க. இன்னைக்கு செக் மூவ் பண்ணியே ஆகணும்” அவள் நிலைமையை விளக்கமாக எடுத்து சொல்லியும், “அப்படினா நீங்களே போய் சைன் வாங்க வேண்டியது தான” அவன் பதில் தெனாவெட்டாக வந்தது.
“சர் இப்ப எங்க இருக்காங்க சொல்லுங்க, நானே போறேன்” அவனிடம் முகவரியை வாங்கிக் கொண்டு இதோ வந்து விட்டாள்.
அந்த இடம் நகருக்கு வெளிப்புறம் இருந்ததால் கண்டுபிடித்து வருவது இவளுக்கு தலைவலியாகி போயிருந்தது.
இதோ விபீஸ்வரனின் கெஸ்ட் ஹவுஸிற்கு அவள் வந்தாயிற்று.
‘இங்க வரதுக்கு எத்தனை பாடு’ என்று எண்ணியபடி, அங்கே வாயில் காவலாளியிடம் வந்து விசாரிக்க, அவர் இவளை மேலும் கீழும் அசட்டையாக பார்த்துவிட்டு கேட்டை திறந்து விட்டார்.
“தோட்டத்து பக்கமா சுத்திட்டு போமா, சார் பின்னாடி தான் இருக்காரு” என்று அவர் சொன்ன வழியில் நடந்தாள்.
விருந்தினர் மாளிகை பெயருக்கேற்றாற் போல, பிரம்மாண்டமாக பேரழகாய் அமைந்திருந்தது. அதனை சுற்றிலும் தோட்டமும் நடைபாதை அமைப்பும் கூட பணத்தின் செழுமையை பறைசாற்றிக் காட்டியது.
வியப்பு கலந்த ரசனையோடு சுற்றி பார்த்து கொண்டு சென்றவளின் செவிகளில் அவர்கள் சிரிப்பு சத்தமும் நீர் தலும்பும் சத்தமும் விழ, அந்த புறம் பார்வையை செலுத்திய இவள் கால்கள் அப்படியே கடிவாளமிட்டபடி நின்று விட்டன.
அங்கு காண நேர்ந்த காட்சியில் இவள் முகம் கசங்கி போனது. அங்கே, நீச்சல் குளத்தில் விபீஸ்வர், உடன் நாகரிக நங்கை ஒருத்தியோடு நீர் விளையாடிக் கொண்டிருந்தான். அவர்களை நீச்சல் உடையில், அத்தனை நெருக்கமாய் பார்த்தவளுக்கு அருவெறுப்பாக இருந்தது.
சட்டென திரும்பி நின்று கொண்டாள். தன் உள்ளைங்கையால் தன் நெற்றியை நான்கைந்து முறை அடித்துக் கொண்டவள், ‘அச்சோ பிள்ளையாரப்பா, இந்த நாசமா போன கண்றாவிய எல்லாம் பாக்க வேண்டியதா போச்சே’ என்று கலக்கமோடு முறையிட்டாள்.
இப்படியே போய்விடலாம் என்றது மனது, வந்த வேலை முடியவில்லையே என்றது அறிவு. இரண்டு மூன்று முறை ஆழ மூச்செடுத்து தன்னை சமன் செய்து கொண்டவள், கைப்பேசியில் எண்களை சொடக்கினாள்.
இரண்டு அழைப்புகள் தவிர்த்து தாமதமாக தான் அழைப்பை ஏற்றான் விபீஸ்வர், “ஹலோ, விபீஸ்வர் ஹியர்” சலிப்பாகவே அவன் குரல் ஒலித்தது.
“சர்… க்கும்… சர் காவ்யா பேசறேன்”.
“ப்ச் என்னை டிஸ்டர்ப் பண்ண கூடாதுன்னு சொல்லி இருந்தேன் இல்ல”.
“அது… செக்ல உங்க சைன் வேணும்… வெயிட் பண்றேன் சர்” அவள் திணறலுடன் பேச, இவன் கண்கள் மின்னின.
“எங்க?”
“இங்க தான் சர், உங்க கெஸ்ட் ஹவுஸ்ல” அவளின் பதிலில் இவன் பார்வை அங்கே சுழன்றது. சற்று தூரத்தில் அவள் திரும்பி நிற்கும் பக்கவாட்டு தோற்றத்தை பார்த்தவனுக்கு சிரிப்பு தான் வந்தது.
“அங்க என்ன செடியில ஆராய்ச்சி பண்ணிட்டு இருக்க? இங்க எடுத்துட்டு வா, சைன் பண்றேன்” அவன் குரல் இப்போது கேலியாக ஒலிக்க,
“அது… வந்து சர்… நான் எப்படி?” இந்த சூழலில் எப்படி பேசுவது என்று அவளுக்கு புரியவில்லை.
“அதான் இவ்வளோ தூரம் வந்துட்டியே” அவளின் தடுமாற்றத்தை ரசித்தவன், வேண்டுமென்றே பேச்சை வளர்த்தான்.
“நான் வாட்ச்மென் கிட்ட ஃபைல் கொடுக்கிறேன் சர், நீங்க சைன் பண்ணி கொடுங்க” சட்டென யோசனை வர, படபடவென சொல்லி முடித்தாள்.
“நோ… வே… நீயாதான் என்கிட்ட வரணும்…” அவன் குரல் தன்னருகில் ஒலிக்க, பயத்துடன் திரும்பியள், சற்று ஆசுவாசமாய் உணர்ந்தாள்.
ஈரம் சொட்டி கொண்டிருக்கும் தன் உடலை வெண்ணிற மேலங்கியால் முட்டிவரை மறைத்தபடி எதிரே நின்றிருந்தான் அவன். காவ்யா மீது அவன் ஆழ் மனதில் இருக்கும் நல்லெண்ணத்தின் வெளிப்பாடு அது.
காவ்யா கோப்பினை அவனிடம் கொடுக்க, அதை வாங்கி பார்த்து ஒவ்வொன்றாய் கையோப்பம் இட்டான்.
மொத்தமாய் நனைந்திருந்த அவன் மயிரிழைகளில் இன்னும் ஈரம் சொட்டிக் கொண்டிருக்க, அவன் முகத்திலும் உடலிலும் நீர் திவலைகள் துடைக்கப்படாமல் இருந்தன. இன்னும் அவன் நீர் விளையாட்டு நீளும் என்பதற்கு அறிகுறியாய்.
அவளின் மருண்ட பார்வை தன்னிடம் இருப்பதை கவனித்தவன் இதழில் வசீகர புன்னகை குடியேறிக் கொண்டது.
அவள் அவன் முகம் பார்க்க, ‘என்ன’ என்பதை போல ஒற்றை புருவத்தை ஏற்றி இறங்கினான். இவள் ‘ஒன்றுமில்லை’ என்பதாய் வேகமாக தலையசைத்து, அவன் கையெழுத்திட்ட காகிதங்களை பெற்று கொண்டு, அவசரமாய் திரும்பி நடக்க யாரோ மீது மோதி நிமிர்ந்தாள்.
எதிரே வேறொரு அழகு பதுமையை கண்டவளின் உள்ளம் அடைத்துக் கொண்டது.
அவள் இவளை அலட்சியமாய் பார்த்துவிட்டு, “ஹாய் விபி டார்லிங்” என்று துள்ளலாய் சென்று அவனை கட்டிக் கொள்ள, “யூ, டூ லேட் பேப்” என்று அவளின் மெல்லிடையை வளைத்தவன் கண்கள் காவ்யாவிடம் திரும்பியன.
இந்த கண்ராவியை எல்லாம் இன்னமும் வேடிக்கை பார்த்து கொண்டு நிற்க, அவளுக்கென்ன பைத்தியமா! எப்போதோ அவள் பறந்து விட்டிருந்தாள்.
தான் கண்ணால் பார்க்க நேர்ந்த ஒழுக்க சீர்கேட்டை இன்னமும் அவளால் ஜீரணிக்க முடியவில்லை. மிகவும் கசப்பாக உணர்ந்தாள்.
தன் முதலாளி இப்படி தான் என்று அரசல்புரசலாக முன்பே கேள்விபட்டு இருந்தாள் தான். ஆனால் இப்போது நேரிலேயே பார்த்தபிறகு, முன்பு போல் அதை சாதாரணமாக ஒதுக்குவது கடினமாக இருந்தது.
அவளின் கைப்பேசி சிணுங்க, வண்டியை ஓரமாய் நிறுத்திவிட்டு, காதில் ஒற்றினாள்.
“காவ்யா, நான் ரிக்கிய தான போக சொன்னேன். நீ எதுக்காக அங்கெல்லாம் போன?” தந்தையின் கண்டிப்போடு ரங்கராஜன் குரல் மறுமுனையில் ஒலித்தது.
“அது… ரிக்கி தான் போக லேட் ஆகும்னு என்னை போக சொன்னார்” எத்தனை முயன்றும் அவள் குரல் கமறலாக தான் ஒலித்தது.
“அந்த ரிக்கிய நான் கவனிச்சுகிறேன் ராஸ்கல்… நீ எங்கேயும் போக வேணாம், நேரா ஆஃபிஸ் வா” அவர் உத்தரவிட,
“நான் பாஸ்கிட்ட சைன் வாங்கிட்டேன், ஆஃபிஸ் தான் வந்துட்டு இருக்கேன் சர்” அவள் பதில் தயக்கமாய் வந்தது.
“ஓ வேற எந்த பிரச்சனையும் இல்லையே?” அவர் சங்கடமாக கேட்க,
“இல்ல சர்” என்று கைப்பேசியை அணைத்து வைத்தாள். ரங்கராஜனின் பரிவான பேச்சில் இவள் படபடப்பும் சற்று அமைதியானது.
எனினும் அன்றைய இரவில், அங்கு பார்த்த காட்சிகளே மூடிய இமைகளில் மோதி அவளை இம்சித்தன.
நாகரிகம் என்ற பெயரில் சுய ஒழுக்கத்தை காற்றில் பறக்க விட்ட, விபீஸ்வரையும், அந்த பெண்களையும் எந்த வகையில் சேர்ப்பது என்றே அவளுக்கு புரியவில்லை.
வயிற்றுக்கும் பிழைப்புக்கும் இல்லாமல் வேறுவழி தெரியாமல் தடம்மாறி போகும் பெண்களையே ஈன பிறவிகளாய் ஒதுக்கும் நமது சமுதாயத்தில், அளவுக்குமீறிய பணமும், அழகும், பகட்டும் எல்லாம் இருந்தும் தரிகெட்டு போகும் இவர்களை போன்றோரை என்னவென்று சொல்வது!
மேல்நாட்டு வாழ்க்கைமுறை என்று அலட்டாமல் சொல்லிக் கொண்டாலும், மேல்நாட்டின் நாகரிக நெறிகளில் இந்த ஒழுக்கக்கேட்டை மட்டுமே தேடி பிடித்து பின்பற்றும் புதுமைவாதிகளை என்ன செய்தால் தகும்!
காவ்யாவின் உள்ளக்கொதிப்பு அடங்கி, அவள் உறங்குவதற்கு நேரமாகி இருந்தது.
அதே கெஸ்ட் ஹவுஸ்… அங்கே அந்த நீச்சல் குளம் தான்… ஆனால் விபீஸ்வரின் அத்தனை அருகாமையில் தன்னை பார்த்தவளுக்கு சப்த நாடியும் அடங்கி போயின.
வேர்த்து விறுவிறுத்து தூக்கத்தில் இருந்து எழுந்து விட்டாள் காவ்யா. ‘ச்சே கண்றாவி, த்தூ என்னென்ன கர்மமோ கனவா வருதே, எல்லா அந்த ரிக்கி சண்டாளனால, ஒழுங்கா அந்த லூசு போயிருந்தா, கண்ட கர்மத்தை பார்க்க வேண்டி வந்திருக்குமா எனக்கு’.
விடிந்தும் விடியாத வைகறை பொழுதில் முணுமுணுத்தபடி படுக்கையில் உட்கார்ந்து இருந்த மகளை கவனித்து எழுந்த பார்கவி, “என்ன காவ்யா, இவ்வளோ சீக்கிரமா எந்திரிச்சிட்ட?” என்று கேட்டார்.
“ஆ இல்ல மா, ஏதோ கெட்ட கனா அதான்” என்று மீண்டும் இழுத்து போர்த்தி கொண்டு படுத்து விட்டாள்.
அடுத்த நாளில் இருந்து காவ்யாவின் பார்வையில் இருந்த ஒதுக்கத்தை விபீஸ்வரால் உணர முடிந்தது. ஆனால் காரணம் மட்டும் விளங்கவில்லை.
தன் சொந்த பொழுதுபோக்குகளை, நிறுவன வேலை நேரத்தில் எப்போதும் அவன் யோசிப்பது கிடையாது. அவனுக்கான தனிபட்ட எந்த விமர்சனத்தையும் அவன் சட்டை செய்ததும் இல்லை.
அதனால் தான் காவ்யா மனதில் மரியாதைக்குரிய இடத்தில் இருந்து நேற்றோடு அவன் தாழ்ந்து போய்விட்டதை அவனால் உணர முடியாமல் போனது.
காவ்யா வழக்கம் போல தனக்கு இடப்பட்ட பணிகளை தன்னால் முயன்ற மட்டும் செவ்வனே செய்து வந்தாள். ஆனால் முன்பை விட அதிகமாய் விபீஸ்வரிடம் இருந்து ஒதுங்கியே இருந்தாள்.
தொழிலை பொறுத்தவரை விபீஸ்வரின் திறமையையும் யுக்திகளையும் காவ்யா பார்த்து வியந்திருக்கிறாள் தான். அதோடு அவனின் பார்வை வேறு பெண்கள் மீது தவறாய் விழுந்து பார்த்தது இல்லை.
அவன் வாழ்க்கை முறை எப்படி இருந்தாலும் நிறுவனத்தை பொறுத்தவரை விபீஸ்வர் சிறந்த முதலாளி மற்றும் அவன் கீழ் பணிபுரியும் பெண்களிடம் கண்ணியம் தவறாமல் நடந்து கொள்பவன் என்ற நம்பிக்கையை பற்றிக் கொண்டிருந்தாள்.
வழக்கம் போல, உற்பத்தி ஆலைகளை பார்வையிட வந்திருந்தனர் இருவரும். பெரிய பெரிய நவீன ரக நசவு தரி இயந்திரங்கள் அங்கே ஆடைகளை நெய்தபடி இருந்தன. மறுபுறம் முழுமை பெற்ற துணிகள் சாயப்பட்டறைக்கு எடுத்து செல்லப்பட வேலைகள் நடைந்தேறிக் கொண்டிருந்தன.
அனைத்தையும் பார்வையிட்டு திரும்பினர்.
காரில் ஓட்டுநர் பக்கத்து இருக்கையில் காவ்யா அமர்ந்து இருக்க, விபீஸ்வர் முதலாளியாக பின் இருக்கையில் அமர்ந்து வந்தான்.
ட்ராஃபிகில் கார் நின்று விட, நிமிட முள் நகர நகர கார் ஆமை வேகத்தில் நகருவதும் நிற்பதுமாக ஊர்ந்தது.
அங்கே, காரின் கண்ணாடியை தட்டி, “சார் சார், விதவிதமான கீ செயின், வெறும் பத்து ரூவா தான் சார், வாங்கிக்கோங்க” அழுக்கு சட்டை அடையாளத்துடன் ஒரு சிறுவன் தன் வியாபாரத்தை கைகளில் ஏந்தி நின்றான்.
ஏற்கனவே ட்ராஃபிக் காரணமாக கடுகடுப்பு எகிறிக் கொண்டிருந்தது விபீஸ்வருக்கு. “ப்ச்” அசட்டையான உச்சு கொட்டல் அவனிடம் வர, அதேநேரம், “அந்த சிவப்பு கலரு கீ செயின் கொடுப்பா” காவ்யா பத்து ரூபாய் தாளை அந்த சிறுவனிடம் நீட்டி இருந்தாள். அவள் கேட்ட கீ செயினை தந்து விட்டு, “தேங்க்ஸ் கா” என்று அடுத்த காரில் தன் வியாபாரத்தை கவனிக்க நகர்ந்து விட்டான் அவன்.
‘சே என்ன தான் தகுதி வளர்ந்திருந்தாலும் இப்படி சில்லி தனமா திங்க்ஸ் வாங்கற பழக்கம் போகல பாரு இவளுக்கு’ விபீஸ்வர் மனம் அசூசை கொண்டது.
“உனக்கு கீ செயின் வேணும்னா ஏதாவது ஸ்டோர்ஸ்ல வாங்க வேண்டியது தானே, இந்த ஃபிளாட்பார்ம் பசங்க கிட்ட வாங்க வேண்டிய அவசியம் என்ன வந்தது?” விபீஸ்வர் கேட்டே விட்டான்.
“எனக்கு கீ செயின் அத்தனை அவசியம் இல்ல சர், இந்த ட்ராஃபிக் கடக்குறத்துக்குள்ள குறைஞ்சது அஞ்சு கீ செயினாவது விக்கணும்கிறது அந்த பையனுக்கு அவசியம்… அதுல தான் அவனோட அடுத்த வேலை சாப்பாடு இருக்கு” காவ்யாவின் பதில் அழுத்தமாக வந்தது.
“சேவையில மதர் தெரிசாவ பீட் பண்ற ஐடியால இருக்க போல” அவன் குரலில் அப்பட்டமான கேலி தெறிக்க,
பதில் தர துடித்த நாவை முயன்று அடக்கி கொண்டு பொறுமையை இழுத்து பிடித்து கொண்டாள்.
அவளின் பதில் மௌனம், தன்னிடம் வீண்பேச்சு வளர்க்க அவளுக்கு விருப்பமில்லை என்பதை தெளிவாக சொன்னது அவனுக்கு.
அவனுக்குள் சுறுசுறுவென கோபம் ஏற, “என்னாச்சு கவி… பதில் பேசாம அமைதியாகிட்ட?” அவளை உசுப்பேற்றவென்றே அவளின் பெயரை சுருக்கி அழைத்தான்.
“ஏதோ என்னால முடிஞ்சதை என் அறிவுக்கு தோணினதை செய்றேன், இது அவங்களும் சக மனிதர்கள் தான்ற எண்ணமே தவிர, சேவைன்னு சொல்றதெல்லாம் ரொம்ப பெரிய வார்த்தை சர், ரோட்டரி கிளப், லயின்ஸ் கிளப்னு லட்ச கணக்குல டொனேட் பண்ற நீங்களெல்லாம் வேணா, மதர் தெரேசாவ பீட் பண்ண ட்ரை பண்ணலாம்” படபட பட்டாசாய் பொரிந்தவள், “டோன்ட் கால் மீ கவி அகெய்ன், ஐ’ம் காவ்யா… காவ்யதர்ஷினி” என்று அழுத்தமாய் சொல்லி முடித்தாள்.
‘மறுபடி துடுக்குதனமான திமிர் பேச்சு, கொஞ்சம் ஓவரா தான் பேசுறா, கவனிச்சுக்கிறேன் உன்ன’ என்று அவனின் எண்ணம் ஓட,
அவனிடம் இருந்து எந்த பதிலும் வராமல் போகவே தான், தான் அதிகம் பேசி விட்டதை உணர்ந்தாள் காவ்யா.
அதுவும் டிரைவருக்கு முன்னால் முதலாளியிடம் இப்படி பேசியது தவறென்றும் அவள் அறிவுக்கு சற்று தாமதமாக புரிய, “சாரி… சர்” தாழ்ந்த குரலில் மன்னிப்பும் கேட்டு வைத்தாள்.
“இட்’ஸ் ஓகே, நெவர்மைண்ட் கவி…” விபீஸ்வர் பெருந்தன்மையாக கூற, இவளின் காரபார்வை அவன் புறம் திரும்பியது. அவன் அசட்டையாக புருவங்களை ஏற்றி இறக்கி தோள்குலுக்கி காட்ட, இவள் தன் கண்கண்ணாடியை அவசரமாய் சரிபடுத்திக் கொண்டு, சாலையில் கவனம் பதிக்க முயன்றாள்.
அப்போது ட்ராஃபிக் குறைந்து இருக்க, காரும் சாலையில் வேகம் பிடித்து இருந்தது.
# # #
அவள் முகத்தில் கணநேரம் தெறித்து மறையும் அந்த கோப வீச்சை காணவே, வேண்டும் என்றே அவளை ‘கவி’ என்று அழைத்து உசுப்பேற்றிக் கொண்டிருந்தான் விபீஸ்வர்.
அப்போதெல்லாம், இவனோடு எதிர்வாதம் செய்பவர்கள் என்று யாருமே இருந்ததில்லை. வியாபாரம் தொடர்பாக அத்தகைய எதிர் வாதங்கள் முன்வைக்கப்பட்டாலும், தனிப்பட்ட முறையில் அப்படி யாரும் இவனுக்கு அமையவில்லை.
லலிதாம்பிகை கூட மகன் சொல்வதற்கு எல்லாம் சரியென்று சொல்வாரே தவிர, மறுத்து பேசுபவர் இல்லை.
உற்ற உயிர் நண்பர்கள் என்று பெரிதாக இவன் யாரையும் சம்பாதித்துக் கொண்டதும் இல்லை. அதேபோல் எதிரிகள் என்று எவருக்கும் முத்திரை குத்தியதும் இல்லை. வியாபார ரீதியில் பகைமையும் தோழமையும் வந்து வந்து போவது. நிலைத்திருக்கும் என்று சொல்வதற்கில்லை.
ரங்கராஜன் சில நேரங்களில் கண்டிப்பு காட்டுவார் தான் என்றாலும் தனது முதலாளி என்ற வகையில் விபீஸ்வரை அவராலும் எதிர்த்தோ மறுத்தோ பேச இயலாது.
அதனால் தான் ‘கவி’ என்ற அழைப்புக்கு அவள் காட்டும் அத்தனை மறுப்பு, பிடிவாதமான எதிர்ப்பு இவனுக்கு சுவாரஸ்யமாக இருந்தது.
ஒருவேளை அது எதிர் எதிர் துருவங்கள் ஈர்க்கப்படும் விந்தையாக கூட இருந்திருக்கலாம்.
எப்போதும் போல எல்லாமே நன்றாக தான் நகர்ந்து கொண்டிருந்தது. அந்த ஓர் இரவு வரும்வரை!
விபீஸ்வரால் என்றுமே மறக்க முடியாத இரவு அது. அவனை மொத்தமாய் தலைகீழாய் புரட்டிப்போட்ட நிகழ்வு அது!
# # #
உயிர் தேடல் நீளும்…