UTN 12

UTN 12

உயிர் தேடல் நீயடி 12

எப்போதும் போல, புத்தம் புது நாளாக விடிந்த காலை பொழுதில், அவனுக்குள் கரைபுரண்ட உற்சாகம் அவன் முகத்திலும் பேச்சிலும் ஏன் ஒவ்வொரு செயல்களிலும் வெளிப்பட்டு கொண்டிருந்தது.

விபி குழுமத்தின் ஆண்டு விழா இன்று ஏற்படாகி இருந்தது. சக்கரவர்த்தியால் சிறிய அளவில் தொடங்கப்பட்ட நிறுவனத்தின் இன்றைய வளர்ச்சி நிச்சயம் வியக்கத்தக்கது. அதுவும் விபீஸ்வர் பொறுப்பேற்ற பின் அது பிரமாண்ட வளர்ச்சியாக உயரத்தை தொட்டிருக்க, அவனின் கர்வத்தை இன்னும் கொஞ்சம் கூட்டி இருந்தது என்றும் சொல்லலாம்.

காவ்யதர்ஷினி வேலைக்கு வந்தபிறகு அவள் பங்கேற்கும் முதல் ஆண்டு விழா இது தான். விழாவை முன்னிட்டு, பணிபுரியும் ஒவ்வொரு பணியாளருக்கும் போனஸ் தொகையும், புத்தாடையோடு இனிப்பும் வழங்கப்பட்டது. போனஸ் வழங்கப்பட்டதால் தொழிலாளிகளுக்கும் இருமடங்கு மகிழ்ச்சி.

நிறுவனத்தின் கீழ் இயங்கும் ஒவ்வொரு தளங்களும், ஆலைகளும், மில்களும் சுத்தம் செய்யப்பட்டு எங்கும் வண்ண காகிதங்களின் அலங்காரத்தோடு மிளிர்ந்தன.

தங்கள் நிறுவனத்தின் தொழிற்முறை நண்பர்களுக்காக இரவு நட்சத்திர ஓட்டலில் விழா ஒன்றையும் ஏற்பாடு செய்ய ஆணையிட்டு இருந்தான் விபீஸ்வர். அதற்கான பணிகளை ரிக்கியின் உதவியோடு காவ்யா செய்திருந்தாள்.

அன்று இரவு வெகு உற்சாகமாக விழா தொடங்கி இருந்தது. வருடம் தோறும் தவறாமல் ஆண்டு விழாவில் லலிதாம்பிகை கலந்து கொள்வது வழக்கமாக இருந்தது. எனவே விபீஸ்வரின் தந்த பதுமைகளுக்கு இந்த விழாவில் எப்போதும் அனுமதியோ அழைப்போ வழங்கப்பட்டது இல்லை.

இது இயல்பான தொழில்முறை குடும்பங்களின் விழாவாக மட்டுமே ஏற்பாடாகி இருந்தது. நிறுவனத்தின் பங்குதாரர்களும், மற்றைய தொழில்முறை நண்பர்களும் வாடிக்கையாளர்களும் தங்கள் குடும்பத்துடன் பங்கேற்க அழைக்கப்பட்டிருந்தனர்.

மேலும் இரண்டு பங்குகளை தானே வாங்கிக் கொண்டு, நிறுவனத்தின் அதிக சதவீதம் பங்குகளை தன்வசம் ஆக்கிக் கொண்டிருந்தான் விபீஸ்வர். அவனின் இரட்டிப்பு மகிழ்ச்சிக்கு இதுவும் ஒரு காரணமாக அமைந்தது. ஆனால்‌ சில தொழில்முறை நண்பர்களுக்கு அதுவே பொறாமையையும் கிளப்பி இருந்தது.

நிகழ்ச்சியை துவங்கிய ரங்கராஜன் அனைவரையும் வரவேற்று, தங்கள் நிறுவனத்தின் தொடக்கம், வளர்ச்சி, சாதனைகள் போன்றவற்றை பட்டியலிட்டு, சக்கரவர்த்தி அவரின் புகழையும் விபீஸ்வர் நிறுவன பொறுப்பேற்ற பிறகு ஏற்பட்ட அசுர வளர்ச்சியையும் பற்றி கூறி பெருமிதம் கொண்டார்.

அவ்விதமே நிறுவன பங்குதாரர்களும் இரண்டிரண்டு நிமிடங்கள் என வாழ்த்தையும் பாராட்டையும் கூறினர்.

கடைசியாக விபீஸ்வர்‌ அனைவருக்கும் நன்றி கூறி, விழாவை சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்ள, அப்போதே அந்த இடம் களைக்கட்டியது.

விழாவிற்காக பெல்லி நடன குழுவினர் வரவழைக்கப்பட்டு இருக்க, துள்ளிசையில்‌ நடன கலைஞர்களின் உடலசைவில் கோலாகலம்‌ இன்னும் கூடியது.

ஒருபுறம் விருந்து‌ பஃபே முறையில் நடந்து கொண்டிருக்க, மறுபுறம் மது வகைகளும் தவறாமல் இடம் பெற்று இருந்தன.

மகனின் வளர்ச்சியைக் கண்டு பெருமைக் கொண்ட மனதோடு தன் வயதொத்த தோழிகளோடு இணைந்து‌ கொண்டார் லலிதாம்பிகை.

தொழிற்முறை அழைப்பின் பேரில், மகழ்நன், நீலவேணி மற்றும் மாணிக்க சுந்தரமும் வந்திருந்தனர்.

மாணிக்க சுந்தரம் ஜவுளி ராஜ்ஜியத்தை தன்வசம் வைத்திருப்பவர், தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இவரது‌ ஜவுளி மாளிகை கிளை பரப்பி இருந்தது. சக்கரவர்த்தி உடன் இருந்து இப்போது வரை விபி நிறுவனத்தின் நிரந்தர வாடிக்கையாளராய் இருந்து வருகிறார். அத்தோடு ஜனனியின் தந்தையும் இவரே.

“ஹாய் அங்கிள், எப்படி இருக்கீங்க?” விபீஸ்வர் உபசாரமாய் விசாரிக்க. “எப்பவும் போல நல்லாயிருக்கேன், விபீஸ்வர், சக்கரவர்த்தி மகன்னு நிருபிச்சு இருக்க, அப்படியே அவரோட வேகத்தை உன்கிட்டையும் பார்க்கிறேன்” என்று பாராட்டி பேசினார்.

“தேங்க்ஸ் அங்கிள்” என்று இயல்பாக நன்றி சொன்னவனை பார்த்து அவர் முகம் மாறியது. “ஆனா உங்கப்பா தனிப்பட்ட வாழ்க்கைமுறையில ஒழுக்கசீலரா இருந்தார்… அந்த குணத்துல நீ தவறிட்ட விபீஸ்வர்” சற்று கசப்பாகவே அவர் சொல்ல, அதற்கும் விரிந்த சிரிப்பை தந்தவன் ‘என்னோட பர்சனல் விசயத்துல தலையிட இவங்களுக்கு யாரு உரிமை கொடுத்தது?’ என்று தோன்றிய சலிப்பை முகத்தில் பிரதிபலிக்காமல் நகர்ந்து விட்டான்.

அங்கே தனக்கான வேலைகளை கவனித்தப்படி வலம்வந்த காவ்யதர்ஷினியை பார்த்து திலோதமாவின் முகத்தில் சிவப்பேறியது. அன்று தன்னிடம் போலி தகவல்களை தந்து, பணத்தையும் பெற்றுக் கொண்டு அவள் தன் முகத்தில் கரி பூசியது நினைவிற்கு வந்தது. அதோடு ஒப்பந்தம் கைவிட்டு போனதில் நீலவேணி அவளை ‘முட்டாளெ’ன்று திட்டியதும் கூட, அவளுக்குள் குரோதத்தை கிளப்பிவிட, வேண்டும் என்றே காவ்யாவின் குறுக்கே வந்து அவளின் காலை தட்டிவிட்டாள்.

அந்த வழுவழு தரையில் சற்று கவனமாகவே நடந்து வந்தவள் எதிலோ தடுக்கி, நிலைதடுமாறி எதிரே வந்தவன் மேலே சரிந்து விட்டாள். பிடிப்பிற்காக இவள் கைகள் அவன் கோர்டை இறுக்கி பிடித்து கொள்ள, பழக்கதோஷத்தில் அவன் கரம் இவளிடையை வளைத்திருந்தது. தன்னை சமாளித்து நிமிர்ந்து பார்த்தவளுக்கு விபீஸ்வரின் முகம் அருகில் தெரிய, சட்டென விலகி நின்று கொண்டாள்.

“சாரி சர்… ஏதோ கால்ல தடுக்கி… தெரியாம உங்க மேல… எக்ஸீட்ம்லி சாரி சர்” சங்கடத்துடன் தலைத்தாழ்த்தி மன்னிப்பு வேண்டியவளை, கண்கள் சுருக்கி யோசனையாக பார்த்தவன், “இட்’ஸ் ஆல் ரைட்” என்று நகர்ந்து விட்டான். இரண்டு நொடிகள் கூட தாண்டாத நிகழ்வு அங்கிருந்த யாரையும் பாதிக்கவில்லை. அதோடு விபியை பெண்களோடு பார்ப்பது அங்கு யாருக்கும் புதிதாக தோன்றவும் இல்லை.

“ஹாய் விபி, என்ன? இப்ப உன் பிஏவை கரெக்ட் பண்ணி இருக்க போல” மகிழ்நன் கிண்டலாக கேட்டுவைக்க, “அதிலெல்லாம் உனக்கு தான மகிழ் முன் அனுபவம் அதிகம்” என்று சிதறாத
சிரிப்போடு விபீஸ்வர் கோர்த்து விட்டு நகர்ந்து கொண்டான்.

‘அடாபாவி’ மகிழ்நன் கலவரத்தோடு தன் மனைவியை பார்க்க, நீலவேணி பார்வையில் அப்பட்டமாக வெறுப்பை உமிழ்ந்து விட்டு, அங்கிருந்து வேகமாக வெளியேற, “அய்யோ அவன் பொய் சொல்றான் நீலா… என்னை நம்பு” என்று கெஞ்சியபடி மகிழ்நனும் அவள் பின்னோடே செல்ல, அங்கே சிரிப்பொலிகள் எழுந்து அடங்கின.

முன்னிரவு ஏறிக்கொண்டிருக்க, விழா சிறப்பாகவே முடிந்திருந்தது. விருந்தினர் அனைவரும் கிளம்பி இருக்க, முன்னரே லலிதாம்பிகையும் வீட்டிற்கு கிளம்பி இருந்தார். ஓய்விற்காக அந்த ஓட்டலில் தனக்கான அறைக்குள் தஞ்சம் புகுந்தவன், இந்த இனிய இரவினை வெறுமையாக கழிக்க மனமின்றி ரிக்கியை கைப்பேசியில் அழைத்தான்.

“எஸ் பாஸ், ரிது ஓகேவா பாஸ்? அவங்களை வர சொல்றேன்” அவன் சேவைக்கு இவன் தயாராய் இருந்தான்.

“ப்ச் வேணாம், வேற யாராவது?”

“ஸ்வீட்டி… செர்ரி… மேகிய கூப்படவா பாஸ்?”

“ம்ஹும்…” அவன் குரலில் சலிப்பு தட்டியது.

‘வேற பொண்ணை நான் எங்க தேடுறதாம்…’ என்று ரிக்கியும் சலித்துக்கொள்ள, அவன் பார்வையில் காவ்யதர்ஷினி விழுந்தாள்.

இவனின் கோணல் புத்தி வேலை செய்ய, “பாஸ் காவ்யா ஓகேவா?” கேட்டு விட்டான்.

“ஹு’ஸ் தட்?”

“காவ்யதர்ஷினி பாஸ்”

“வாட்?” விபியின் குரலில் அதிகபட்ச அதிர்ச்சி தெரிந்தது.

“உங்களுக்கு இன்ட்ரஸ்ட் இல்லைன்னா வேணா பாஸ்”

“அப்படி இல்ல ரிக்கி, காவ்யா அந்த கேட்டகிரி பொண்ணா நான் நினைக்கல, அதான்…”

“உங்க அழகுக்கும் பணத்துக்கும் விழாத பொண்ணுங்க யாராவது இருக்காங்களா பாஸ்” ரிக்கி உசுப்பேற்றிவிட,

“கவிக்கு ஓகேன்னா… எனக்கும் ஓகே” அவனிடமிருந்து சந்தேகமாக பதில் வந்தது.

“நான் கேட்டு சொல்றேன் பாஸ்… இன்னும் டென் மினிட்ஸ்ல காவ்யா உங்க ரூம்ல இருப்பாங்க…” பேச்சை முடித்து விட்டு, காவ்யாவை நோக்கி சென்றான்.

இப்போது தான் விழாவிற்கான செலவினை சரிபார்த்து முடித்து, அதற்கான தொகையையும் செலுத்திவிட்டு வந்தாள்.

“சென்டில்மென்ட் முடிஞ்சுதா காவ்யா?” ரிக்கி கேட்க, “முடிஞ்சது நீங்க கிளம்பலையா சர்?” இவளும் இயல்பாக கேட்டபடி, விழா செலவு தொகை ரசிது காகிதங்களை கோப்பில் சரியாக அடுக்கி வைத்தாள்.

“இந்த பேப்பர்ஸ்ஸ பாஸ்கிட்ட சைன் வாங்கிட்டு கிளம்புங்க, நானும் கிளம்புறேன்”

“இப்பவா? லேட் நைட் ஆகிடுச்சு, நாளைக்கு மார்னிங் வாங்கினா போதாதா?”

“ஏன் நாளைக்கு மார்னிங்… பில்ல கோல்மால் பண்ணலாம்னு ஐடியா இருக்கோ உங்களுக்கு”

“மைண்ட் யுவர் வேர்ட்ஸ்… பாஸ் தூங்கி இருப்பாரு, இப்ப போய் அவரை டிஸ்டர்ப் பண்ணனுமா?”

“பாஸ் இன்னும் தூங்கல, இப்பதான் ஃபோன்ல பேசினேன், உங்களுக்காக தான் வெயிட்டிங் போங்க” என்றவன் அங்கிருந்து கிளம்பி விட்டான்.

காவ்யாவிற்கு அப்படியே பற்றிக் கொண்டு வந்தது. ‘இவனையும் தூக்குல போடணும், இவன் பாஸையும் தூக்குல போடணும்’ என்று கறுவியபடி விபீஸ்வர் அறையை நோக்கி சென்றாள்.

காவ்யதர்ஷினி தன் அறைக்கு வரும்வரை ரிக்கி சொன்னதை விபீஸ்வரால் முழுமையாக நம்ப முடியவில்லை.

சிறு தலையசைப்பில் அவளை உள்ளே அழைத்தவன் பார்வை அவளை மேலும் கீழுமாய் அளந்தது. விழாவிற்காக பிரத்யேக வடிவமைப்பு சுரிதார் அணிந்து சற்று அலங்காரத்துடன் வந்திருந்தாள். கூந்தல் கூட மேலே தூக்கி முடிந்து, விழும் கருப்பு அருவி போல விரித்து விட்டிருந்தாள்.
முகமும் கண்களும் மட்டும் தான் அலைச்சல், சோர்வு மற்றும் தூக்க கலக்கத்தில் கொஞ்சம் வாடித் தெரிந்தது.

“சர் சென்டில்மென்ட் பேப்பர்ஸ்…” அவள் நீட்ட,

“இட்’ஸ் ஓகே கமான் பேப்…” அவன் சொல்வது விளங்காமல் இவள் நின்றாள்.

“நீங்க சென்டில்மென்ட் பேப்பர்ஸ்‌ கேட்டதா, ரிக்கி சொன்னாங்க”

“ம்ஹும் நீ நைட் என்னோட கம்பனி கொடுக்க ஒத்துக்கிட்டதை ரிக்கி எங்கிட்ட சொல்லிட்டான்”

“என்ன உளறீங்க?” அவள் பார்வையில் கடுமை கூட,

“ஹே கூல் பேப்…பி, உன் ஃபேஸ் பார்த்தா பேபி போல இருக்கு, பட் உன்னோட ஆட்டிடியூட் மெச்சூரா இருக்கு, செம்ம காம்பினேஷன் நீ…” என்று விபி அவளை நோக்கி முன்னேற, காவ்யா பின்னால் விலகி நின்றாள்.

“நீ… நீங்க ஏதோ தப்பா புரிஞ்சிட்டு இருக்கீங்க சர்… அந்த மாதிரி பொண்ணு நான் இல்ல… கிளம்பறேன் சர்” திரும்பி வேகமாய் வந்து கதவை திறக்க முயன்றவளின் முகம் வெளிரியது.

“ஆட்டோமேட்டிக் டோர் பேப்… சும்மா எல்லாம் ஓபன் ஆகாது” பின்னால் அவன் குரல் கேலியாய் ஒலிக்க, இப்போதுதான் சூழ்நிலையின் விபரீதம் அவளுக்கு புரிய, கலவரமாய் திரும்பினாள்.

கேலி சிரிப்பில் விரிந்திருந்த முகம், சிவந்திருந்த கண்களில் தேங்கியிருந்த போதை, அவன் நிலையை இவளுக்கு காட்டியது. விழாவின் கொண்டாட்டத்தில் அதிகமாகவே குடித்திருந்தான்.

“விருப்பமில்லாத பொண்ணு கிட்ட… நெருங்கறது தப்பு சர்” அடைத்து கொண்ட தொண்டை வழி வார்த்தைகள் சிக்கி வெளி வந்தன அவளுக்கு.

“உனக்கும் ஓகேன்னு ரிக்கி சொன்னானே” என்றபடி கைகளை உயர்த்தி அவன் சோம்பல் முறிக்க,

“நான் சொல்றேனே, நீங்க நினைக்கிற மாதிரி பொண்ணு நான் இல்லனு… என்னை போக விடுங்க சர், ப்ளீஸ்…” அவனிடம் கேஞ்சி நின்றாள்.

“உனக்கு ஓகே இல்லனா, நீ ஏன் என் ரூம்க்கு வந்த ம்ம்?”

“அது… பில் பேப்பர்ஸ்ல… உங்க சைன் வாங்க…” அவள் சொல்லும் போதே இவன் வாய்விட்டு சத்தமாய் சிரித்தான். இவளுக்குள் நடுங்கியது.

“என்ன இவ்வளவு சில்லி ரீசன் சொல்லற, மிட் நைட்ல பேச்சுலர் ரூம்க்கு வரதுக்கு இன்னும் ஸ்ட்ராங் ரீசன் இருக்கு பேப்… கமான் ஐ’ல் டீச் யூ” அவன் ஒற்றை கண் சிமிட்டி நெருங்க,

“ஏய்… அங்கேயே நில்லு… அவ்ளோ தான் உனக்கு மரியாத, ஒழுங்கா கதவை திறந்துவிடு, இல்ல…” அவன் பேச்சு அவளுக்கு சகிக்கவில்லை, ஆவேசமாக குரலை உயர்த்தினாள்.

அவன் இளநகை விரிய, “நீ லோக்கல்னு நிருபிக்கிற பார்த்தியா, இன்டர்ஷ்டிங்” அவனோ அவள் கோபத்தை சிலாகித்தான்.

“வார்த்தையை அளந்து பேசு, உன்ன மாதிரி என்னையும் கேவலமா நினச்சுட்டியா? திரும்ப திரும்ப சொல்றேன் இல்ல… நீ நினைக்கிற மாதிரி பொண்ணு நான் இல்லன்னு” அவள் குரல் ஆத்திரமாக உயர்ந்தது.

“இப்ப உனக்கு என்னதான் ப்ராப்ளம் கவி, அமௌண்ட் அதிகமா எதிர் பார்க்கறியா? நீ கேட்கறதை விட டபுளா தரேன்”

“செருப்பு பிஞ்சுடும் ராஸ்கேல்… கேவலம் பணத்துக்காக எந்த சாக்கடையிலயும் விழுந்து எழறவன்னு நினச்சியா என்னை…” அவள் உள்ளத்தின் கொதிப்பு, பேச்சிலும் பார்வையிலும் தெறித்தது.

அவளின் தோளை பற்றி தன்னருகே கொண்டு வந்தவன், “நீ ரொம்ப பேசுற பேபி… பட், இப்படி அடங்காம நீ திமிரும் போதுதான் உன்ன அடக்கி பார்க்கணும்னு ஒரு வெறி வருது எனக்குள்ள” என்று மேலும் நெருங்க முயன்றவனை, தன்னிடம் இருந்து விலக்கி தள்ளியவள், “ச்சீ உன்னோட கேடுகெட்ட புத்தி தெரிஞ்ச அப்புறமும் உனக்கு கீழ வேலை செய்யற பொண்ணுங்க கிட்ட நீ எப்பவும் கண்ணியமா நடந்துப்பன்னு நம்புன பாரு, என் புத்திய சொல்லணும்”.

“இப்ப என்னடி உன்கிட்ட தப்பா நடந்துகிட்டேன்? இவ்வளோ நேரமும் பேசிட்டு தான இருக்கேன்” என்றவன் அவளை சுவரோடு தள்ளி நிறுத்தி, அவளின் கைகள் இரண்டையும் உயர்த்தி சுவரோடு அழுத்தி பிடித்துக் கொண்டான்.

இந்த திடீர் தாக்குதலில் அவள் உடல் முழுதும் நடுங்க மொத்தமாய் வியர்த்து கொட்டியது. “இதுவரைக்கும் நான் வேணும்னு என்னை நெருங்கி வந்த பொண்ணுங்களை தான் பார்த்திருக்கேன்… என்ன திமிர் இருந்தா என்னை விலக்கி தள்ளுவ நீ…” அவன் முகம் சிறுத்தையின் சீற்றத்தோடு அவளை நெருங்கியது.

அவன் பிடியிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள போராடியவள் முடியாமல் போக, தன் காலை மடக்கி முட்டியால அவன் தொடையை தாக்க முயன்றாள். அதனை லாவகமாக தடுத்தவன், “ஷிட் என்னதான் டீ ப்ராப்ளம் உனக்கு, என்னோட கம்பனி கொடுக்க உனக்கு அவ்வளோ கசக்குதா…” மதுவின் போதை பாதியும், அவள் தன்னை மறுப்பதை ஏற்க முடியாத பிடிவாதம் மீதியுமாக அவன் உறுமினான்.

“உனக்கெல்லாம் பொண்ணுங்கன்னா கிள்ளு கீரையா போச்சா… இப்பவும் சொல்றேன் மரியாதையா என்னை விட்ரு… இல்ல… உன்ன கொல்லவும் தயங்கமாட்டேன்…” அந்த நிலையிலும் எச்சரித்தாள் அவள்.

அவளின் ஆவேச கோலத்தை பார்த்து அவன் பார்வையில் அலட்சியம் குடியேறியது. “ப்ச் சாரி பேப், நீ என் ஈகோவ சீண்டி விட்டுட்ட… இனிமே என்னால உன்ன விடமுடியாது…”

“ச்சீ நீயெல்லாம் மனுசனா? உன்ன நம்பி வந்த பொண்ணு கிட்ட தப்பா நடந்துக்க உனக்கே கேவலமா இல்ல…”

“நான் இதுவரைக்கும் உன்ன தப்பா பார்த்தது கூட கிடையாது… இப்ப கூட அந்த இடியட் ரிக்கி சொல்ற வரைக்கும் உன்ன நெருங்கணும்ற எண்ணம் கூட வந்ததில்ல, பட் இப்ப…” அவன் அவள் முகம் நோக்கி நெருங்க, “நோ…” பயத்தில் அலறி விட்டாள்.

விபீஸ்வர் தன்னை கட்டுபடுத்தி கொண்டு தலையை குலுக்கி அவளை விட்டு விலகி, தன் கேசத்தை அழுத்தமாக கோதிவிட்டு கொண்டான்.

காவ்யா இன்னும் கலவரமாய் அவனை பார்த்து நின்றாள்.

“யா, இப்ப தான் எனக்கு விசயம் புரியுது… அந்த ரிக்கி ராஸ்கல் நம்ம ரெண்டு பேர்கிட்டையும் சீப்பா கேம் விளையாடி இருக்கான்… ச்சே அவன் உன் பேர் சொல்லும் போதே எனக்கு டவுட் வந்துச்சு… பட், பார்ட்டில என்னை ஹக் செஞ்ச இல்ல… அதான் உனக்கு என் மேல இன்ட்ரஸ்ட் வந்திருக்கும்னு நெனச்சேன்” விபீஸ்வர் சற்று தெளிவாக யோசித்து பேசினான்.

“அது… நான் கால் தவறி விழுந்துட்டேன்… வேணும்னு செய்யல” அவள் படபடப்பாக தன் நிலையை விளக்க,

“ம்ஹும் உன்கிட்ட இருக்க ஏதோ ஒண்ணு என்னை இம்ப்ரஸ் பண்ணுது… ஜஸ்ட் இந்த ஒன் நைட் என்னோட ஸ்பென்ட் பண்ணறதுல உனக்கு என்ன லாஸ் வந்துட போகுது?” விபீஸ்வர் வெகு சாதாரணமாக கேட்க, அவளுக்கு வந்த ஆத்திரத்தில். தன் கையில் கிடைத்த பீங்கான் பூஜாடியை எடுத்து ஆவேசமாக அவன் மீது வீசி இருந்தாள் காவ்யா.

“ஏய்…” அவன் சட்டென விலகிக்கொள்ள பின்னால் இருந்த கண்ணாடி சுவரில் விழுந்து, கண்ணாடி சில்லுகள் உடைந்து சிதறின.

“இடியட், பேசிட்டு இருக்கும் போது அடிக்கிற”

“மறுபடியும் இப்படி தப்பு தப்பா பேசின… உன் மண்டைய உடைச்சு மாங்கா ஊருகா போட்டுருவேன் பாத்துக்க…” அவளுக்கு அப்படியே பற்றிக் கொண்டு வந்தது. தன்னை அறைக்குள் பூட்டி வைத்து அவன் கண்டபடி பேசுவதை அவளால் மேலும் சகித்துக் கொள்ள முடியவில்லை.

“இந்த ஆட்டிடியூட் தான்… எனக்கு மசிய மாட்டேன்னு தெனாவெட்டா நிக்கிற பாரு, இதான் என்னை உன்பக்கம் இழுக்குது… எனக்கு வேணும்னு நினைச்ச எதையும் நான் விட்டதில்ல! உன்னையும் விட போறதில்ல! கோபபடாம பொறுமையா நான் சொல்றதை கேளு…” அவன் பேசிக்கொண்டு அவளிடம் வர, அவள் பின்னால் விலகி நடந்தாள்.

“உனக்கு என்ன வேணும் கேளு… பணம் வேணாம் ஓகே… ஜ்வல்ஸ் பிடிக்கும் இல்ல, டைமண்ட்ஸ்? இல்லனா பங்களா? வேற ஏதாவது…! வேர்ல்ட் டூர் போக ஆசையா? உனக்கு ஆஃபர் பண்றேன் பேப், இந்த ஒரு நைட்க்கு நீ என்ன கேட்டாலும் நான் தரேன்…”

“அதுக்கு வேற எவளையாவது போய் பாரு” கடித்த பற்களுக்கிடையே வார்த்தைகளை துப்பினாள் அவள்.

“ம்ஹும் இன்னைக்கு நீ மட்டும் தான்… யோசிச்சு சீக்கிரம் ஓகே சொல்லிடு ஸ்வீட் ஹார்ட்” ஹஸ்கியான குரலில் தன் பிடிவாத குணத்தை அழுத்தமாக பதிவிட்டான்.

இன்று நாள்முழுவதும் வேலை அலைச்சலில், மேலும் இந்த போராட்டத்தில் அவள் மனமும் உடலும் சோர்ந்து போய் ஓய்விற்காக கெஞ்சின.
தன் எதிரில் இருப்பவன் மனிதன் தான் என்ற நம்பிக்கையை அவள் முழுவதுமாய் இழந்து விட்டிருந்தாள். அவனுக்கு தன்னை வேட்டையிடுவது மட்டுமே குறி என்பதும் இவளுக்கு நன்றாகவே புரிந்தது. தான் சற்று ஓய்ந்து போனாலும் இந்த மிருகத்துக்கு இறையாகவே நேரும்… எப்படியாவது இப்போதே இங்கிருந்து வெளியேற வேண்டும்… அவள் யோசிக்க எதுவுமே புலப்படவில்லை.

இதுவரை இவன் பார்வைக்கே மயங்கிய பெண்களுக்கு இடையே, தான் இத்தனை தூரம் தன் விருப்பத்தை கூறியும் மறுப்பவளை, இன்னும் இன்னும் அவன் பிடிவாதகார மனம் நாடியது.

அவன் அவளை நொக்கி முன்னேறி வர, மிரட்சியோடு பின்னால் நகர்ந்தவளின் கால்களின் அடியில் கண்ணாடி துகள்கள் மிதிபட்டன. உடைந்த கண்ணாடி துண்டுகள் கீழே இறைந்து கிடக்க, அதிலொன்றை கையில் எடுத்துக் கொண்டாள்.

“கிட்ட வராத… வந்த… இதனாலேயே உன்ன குத்தி கழிச்சுடுவேன்” அவன் முன் கண்ணாடி துண்டை நீட்டி மிரட்டினாள்‌.

“சின்ன விசயத்துக்கு நீ ஓவரா ரியாக்ட் பண்ற பேபி” என்று விபீஸ்வர் சலித்தபடி முன்னேற,

“எங்களை பொறுத்தவரைக்கும் அது தான் பெரிய விசயம்… உயிரையும் விட பெரிசு எங்க மானம்” அவள் உறுதியாக அழுத்தி சொல்லி, கையிலிருந்த கண்ணாடி துண்டால் ஆவேசமாக அவனை தாக்கினாள்.

அவளின் தாக்குதலை விளையாட்டாக எண்ணி லாவகமாக தப்பியவன், ஒரு கட்டத்திற்கு மேல் அவள் கரத்தை தடுத்து பிடித்து, அவளை சுழற்றி பின்பக்கமாக அணைத்து பிடித்துக் கொண்டான்.

“இந்த விளையாட்டு எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு! இதுவரை எங்கூட யாரும் இப்படி மோதினது இல்ல… சும்மா நெருப்பா அனல் வீசற கவி… உன்ன கூலாக்க ட்ரை பண்ணவா? ஜஸ்ட் சே ‘ஓகே’ பேப்… ப்ளீஸ்‌, ஐ கா’ன்ட் வெயிட் எனி மோர்” அவளின் காதோரம் அவன் குரல் கிறக்கமாக ஒலித்தது.

இவள் ஆத்திரமாக திமிறி விலக போராட, அவன் அவளை அசைய விடாமல் தன் பிடியை இறுக்க, காவ்யா கைகளில் பிடித்து இருந்த கண்ணாடி துண்டு அவளின் உள்ளங்கையை ஆழமாக பதம் பார்த்தது.

“ஸ் ஆ…” காவ்யா வலியில் துடிக்க, தன் கையில் ரத்தத்தின் ஈரத்தை உணர்ந்தவன் சட்டென பிடியை விலக்கி கொண்டான். இவன் கை முழுதும் இரத்தக் கறை!

இரத்தம் தோய்ந்த கண்ணாடி துண்டு கீழே விழ, அவளின் உள்ளங்கை சதை கிழிந்து இரத்தம் வழிந்தோடியது. அந்த வலியை தாங்க முடியாமல் காவ்யா மடிந்து அமர்ந்து விட்டாள்.

விபீஸ்வர் அதிர்ந்து தன் கைக்குட்டை எடுத்து அவள் கையருகே செல்ல, “கிட்ட வராத…” காவ்யா வலியிலும் அவனை விலக்கி நிறுத்தினாள்.

“ஹே கைல எவ்ளோ பிளீடிங் ஆகுது பாரு!” அவள் கையை பற்றி கட்டிட முயன்றவனை விலக்கி விட்டு, கீழே கிடந்த கண்ணாடி துண்டை மறுபடி கையிலெடுத்து கொண்டு வலியோடு எழுந்து நின்றாள்.

அவன் மீது அவளுக்கு துளியும் நம்பிக்கை இருக்கவில்லை. தான் விழிப்புடன் இருக்கும் போதே தன்னை காத்துக்கொள்ள எண்ணினாள். “என்னை நெருங்காத…” அவள் குரல் ஈன ஸ்வரத்தில் ஒலித்தது.

“ச்சே என்னை என்ன மிருகம்னு நினைச்சியா? முதல்ல கை நீட்டு” அவன் அவளை கண்டிக்க, மறுப்பாக தலையசைத்தவள், “என்னை இங்கிருந்து போக விடு…” அவளின் கலங்கிய கண்கள் சிவக்க, கண்ணாடி துண்டை அவன் முன்னால் நீட்டி மிரட்டினாள்.

அவளின் அத்தனை வலியிலும் எப்படியாவது அங்கிருந்து போனால் போதும் என்ற துடிப்பே அவளை எழுந்து நிற்க செய்திருந்தது.

அவள் நின்ற கோலத்தை பார்த்து விபீஸ்வர் மிரண்டு தான் போனான். மொத்தமாக அவன் போதை வடிந்துபோக, தன்னுடைய தவறை அவனால் இப்போது உணர முடிந்தது.

“சாரி காவ்யா… நான் உன்ன ஃபோர்ஸ் பண்ணது தப்பு தான்… நீ இவ்வளோ பயப்படற அளவுக்கு நான் மோசமானவன் கிடையாது! முதல்ல அதை தூக்கி போடு” என்று அவசரமாய் சொன்னவன், அவள் நம்பாமல் இறுகி நிற்பதை பார்த்து ‘உடனே தன் அறைக்கு மருத்துவரை அனுப்பும்படி’ வரவேற்பறைக்கு தகவல் சொன்னான்.

ஒரு கையில் இரத்தம் வழிய, வலியிலும் வேதனையிலும் அவள் கண்களில் மொத்த ஜீவனும் கரைய நின்றிருந்தவளை பார்க்கும் போது இவன் மனதிற்குள் ஏதோ பிசைந்தது.

தன்னிடம் பழகும் பெண்களை போல இவளையும் நினைத்திருக்க கூடாது என்பது தாமதமாகவே அவன் அறிவுக்கு உறைத்தது.

மருத்துவர் வந்துவிட, மறுப்பு சொல்லாமல் அவரிடம் கையை காட்டினாள். உண்மையில் அந்த வலியை அவளால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. காயத்தை சுத்தம் செய்து மருந்திட்டு கட்டு போட்டவர், வலி குறைய ஊசி வழி மருந்தேற்றி விட்டு, ஓய்வெடுக்கும் படி சொன்னார். அந்த அறை இருந்த கோலத்தை சலிப்பாக பார்த்து விட்டு கிளம்பினார்.

காவ்யாவும் தன் பையை எடுத்து கொண்டு சோர்வாக வெளியேற, விபீஸ்வர் புதிதாக மனதில் முளைத்து விட்ட குற்றவுணர்வில் குறுகி நின்றிருந்தான்.

ஓட்டலின் வரவேற்பரையில் சிவா, காவ்யாவை பார்த்து ஓடி வந்தான். கிட்டத்தட்ட ஒரு மணி நேரமாக அவளுக்காக காத்து கிடந்தான். அவள் கைப்பேசியும் பதிலின்றி போக, ஓட்டல் ஊழியர்களும் சரியான தகவல் சொல்லாதிருக்க, சற்று பதற்றமாகி இருந்தவன் அக்காவை பார்த்ததும் தான் நிம்மதியாக உணர்ந்தான்.

“என்னை வரசொல்லிட்டு காக்க வைக்கிறதே உன் வேலையா போச்சு…” என்று படபடத்தவன், அவளின் ஓய்ந்த முகத்தையும் கட்டு போடப்பட்ட கையையும் கவனித்துவிட்டு, “அச்சோ அக்கா, என்னாச்சு உனக்கு?” என்று பதறினான்.

“கை… கைல அடிபட்டுடுச்சு! ரொம்ப… ரொம்ப வலிக்குது சிவா…” என்று கண்கள் கலங்க, தம்பியின் தோள் சாய்ந்து கொண்டாள். அப்படியே வாய்விட்டு கதறி அழுதுவிட வேண்டும் போல தோன்றிய உணர்வை முயன்று அடக்கி கொண்டாள்.

அவளின் தோளை தட்டிக் கொடுத்தவன், “என் ஜான்சிராணி அக்கா, இந்த சின்ன காயத்துக்கெல்லாம் அழலாமா? ஷேம் ஷேம் இல்ல” அவளை கேலி பேசி சமாதானப்படுத்த முயல, முயன்று சிரித்தவள், அவன் தோளை தட்டிவிட்டாள்.

உள்ளுக்குள் மொத்தமாய் உடைந்து போனவளாய் தம்பியோடு சென்று வண்டியில் ஏறிக்கொள்ள, அந்த இரும்பு குதிரை சிவாவின் கைகளில் விரைந்தது.

அதுவரை அவர்களை பார்த்திருந்த விபீஸ்வர், இருள் கவிழ்ந்த முகத்துடன் தன் அறையை நோக்கி வந்தான். அவனுக்குள் எல்லாமே வடிந்து போன வெறுமையான உணர்வு பரவியது.

ஓட்டல் ஊழியர்கள் கைவண்ணத்தில் அவன் அறை சுத்தமாகி இருந்தது. உடைந்திருந்ந கண்ணாடி சுவர் மட்டும் அவளின் ஆவேச தாக்குதலுக்கு சாட்சியாக காட்சி தந்தது.

# # #

உயிர் தேடல் நீளும்…

error: Content is protected !!