உயிர் தேடல் நீயடி 8
விபீஸ்வர் நீட்டிய காகிதத்தை வாங்கி பார்த்தவளின் விழிகள் வியப்பில் விரிந்தன.
சோடாபுட்டி கண்ணாடிக்கு பின்னால் அகல விரிந்த அவள் கோலிகுண்டு கண்கள் இவனின் இதழ் புன்னகையை மேலும் விரிய செய்வதாய்.
“சர்… இது… நான்…” காவ்யதர்ஷினிக்கு வார்த்தைகள் வரவில்லை.
“உங்களை என்னோட பிஏ போஸ்ட்கு அப்பாய்ண்ட் பண்ணி இருக்கேன் மிஸ் காவ்யா” விபீஸ்வர் சொல்ல, நிச்சயம் அவளுக்கு நம்பிக்கை எழவில்லை.
“போனா போகுதுன்னு பாவபட்டு இந்த பிரோமோசன் கொடுக்கிறீங்களா சர்?” இப்படி கேட்க கூடாது தான் இருந்தும் காரணத்தை தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும் என்ற முடிவோடு கேட்டும் விட்டாள்.
‘பார்க்க தான் அடக்க ஒடுக்கமா தெரியுறா, துடுக்கு பேச்சு வாய் நீளம் தான் இவளுக்கு’ விபி மனம் அவளை பற்றி கமெண்ட்ரி அடித்து கொண்டது.
“இங்க நான் என்ன பொட்டி கடையா வச்சு நடத்துறேன், பாவ புண்ணியம் பார்த்து வேலை கொடுக்க. உங்க நேர்மைக்கும் திறமைக்குமான என்னோட வெகுமதி இது” விபீஸ்வர் பதிலும் அவளுக்கு இணையாக அழுத்தமாக வந்தது.
‘தன்னுடைய திறமைக்கு கிடைத்த உயர்பதவி இது’ என்று எண்ணும்போதே காவ்யதர்ஷினி மனதிற்குள் நிறைவும் குதுகலமும் தொற்றிக் கொண்டது.
“தேங்க் யூ சர், தேங்க் யூ வெரி மச் சர்…”
.
.
.
முகமும் இதழ்களும் எதிர்பாராத மகிழ்ச்சியில் மலர்ந்திருக்க, சந்தோசத்தில் கண்கள் கலங்க, நன்றி நவின்ற காவ்யதர்ஷினியின் முகம் இப்போதும் விபீஸ்வர் மனதில் அழியாமல் பதிந்து இருந்தது.
தலையணையை அணைத்தபடி கட்டிலில் சாய்ந்திருந்தவனின் நினைவுகள் நிஜத்திற்கு வந்திருந்தன.
ஜன்னலின் வெளியே விடியலின் வெளிச்சம் மெல்ல பரவி கொண்டிருக்க, இவன் சந்தோச வானம், தன் விடியலானவளின் தரிசனம் இன்றி இருண்டு கிடந்தது.
தன்னவளை சந்தித்த நினைவுகளில் இரவு முழுவதையும் தூங்காமலேயே கடந்து இருந்தான் அவன்.
‘சாரி பேபி, நான் செஞ்சது எல்லாமே தப்பு தான்… எனக்கே எனக்குன்னு நீ வருவன்னு முன்னையே தெரிஞ்சு இருந்தா நிச்சயமா நான் வேற பொண்ணு நிழலை கூட தொட்டிருக்க மாட்டேன். ப்ராமிஸ் கவி… என்கிட்ட திரும்பி வந்திடு டீ இல்ல… நானே உன்கிட்ட வரவேண்டியது இருக்கும்” என்று புலம்பியவன், தான் ஆண் என்பதையும் மறந்து அழுது விட்டான்.
அவள் இவன் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்த பிறகும், தனது நேரடி பார்வையில் பணியாற்றிய நாட்களிலும் கூட, எந்தவிதத்திலும் காவ்யாவின் மீது இவனுக்கு எவ்வித ஈர்ப்பும் ஏற்பட்டதே இல்லை. இவனை ஈர்க்கும் எந்தவித சிறப்பம்சமும் அவளிடம் இருக்கவில்லை என்றும் சொல்லலாம்.
தான் சொன்ன வேலையைப் பிசிரில்லாமல் செய்து முடிக்கும் அவளின் தொழில் பற்று, திறமை இவனை மெச்ச வைத்தது. ஒரு முதலாளிக்கான சிறந்த தொழிலாளி என்ற அளவில் தான் அவளை எண்ணி இருந்தான் அப்போதெல்லாம்.
‘அந்த எண்ணம் மாறாம அப்படியே இருந்திருந்தா… நான் வலுகட்டாயமா உன் வாழ்க்கைக்குள்ள நுழையாம இருந்து இருந்தா… நீயும் நல்லா இருந்து இருப்ப இல்ல பேபி!’ அவன் மனம் பிதற்ற, அந்த வலிமிகுந்த உணர்விலிருந்து தன்னை வலுக்கட்டாயமாக நீக்கிக் கொண்டு நிமிர்ந்தான்.
முகத்தை அழுத்த துடைத்து கொண்டு, கலிலை இன்டர்காம் மூலம் அழைக்க,
அடுத்த இரண்டு நிமிடங்களில் ஆவி பறக்கும் காஃபி கோப்பையோடு கலில் எதிரில் நின்றான்.
இதமான சுடுபானம் உள்ளிறங்க, கடந்த காலத்தில் இருந்து தன்னை முழுதாய் மீட்டு கொண்டவன், கலிலின் உதவியோடு குளித்து, உடைமாற்றிக் கொண்டு சோஃபாவில் அமர்ந்து தனது மடிக்கணினியை உயிர்பித்தான்.
கிட்டத்தட்ட இருபது நாட்களாய் தன் நேரடி பார்வை இல்லாததால் தொழிலில் ஏற்பட்டிருக்கும் மந்த நிலையை சீர்செய்ய வேண்டிய பெரிய வேலை இருந்தது அவனுக்கு.
தன்னால் முயன்ற மட்டும் வீட்டிலிருந்த படியே தொழிலைக் கவனித்து வந்தான். ஆனால் இது மட்டும் போதாது என்று தோன்றுயது. எதையும் நேரடியாக பார்த்தால் தான் அவனுக்கு திருப்தி. எப்படியும் விரைவில் கம்பெனிக்கு செல்ல வேண்டும் என நினைத்து கொண்டான்.
தன் தொழில் பற்றிய சிந்தனையில் உற்ற மனைவியின் இழப்பு அவன் நினைவில் கீழிறங்கி இருந்தது.
சூரியன் உச்சி வானில் ஏறி இருக்க, இதோடு ஆறாவது முறையாக ஜனனி விபீஸ்வர் எதிரில் வந்து நின்றாள். இப்போதும் அவன் நிமிர்ந்தான் இல்லை. வேறெதிலும் சிந்தனையை சிதற விடாமல் தன் வேலையில் மூழ்கி இருந்தான்.
வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் இவனின் நிறுவன உடைகளுக்கு சந்தையில் மதிப்பு உயர்ந்து இருந்தது. தங்கள் நிறுவனத்தின் ஆடைகளின் தரத்திலும் வடிவமைப்பில் இவன் எப்போதுமே கூடுதல் சிரத்தை எடுத்துக் கொண்டிருப்பான்.
இந்த துறையில் அதிகளவு போட்டிகள் இருப்பதால் கவனமாக செயல்பட வேண்டியது அவசியமாக இருந்தது. ஒரு சிறிய கவனக் குறைவும் பெரிய அளவிலான நஷ்டத்தை ஏற்படுத்திவிட கூடும். முன்பு தொழிலில் விழுந்து எழுந்த அனுபவங்கள் அவனை எப்போதும் இரு மடங்கு எச்சரிக்கையாகவே வைத்திருக்கும்.
ஜனனி பொறுமை இழந்து நின்று இருந்தாள். “என்ன விபி இது? டாக்டர் உன்ன ஃபுல் பெட் ரெஸ்ட்ல இருக்க சொல்லி இருக்காங்க. நீ மணி கணக்கா லேப்டாப் கையுமா உக்கார்ந்து இருக்க” என்று குரலில் உரிமை கண்டிப்பு காட்ட,
“நான் இங்க ரெஸ்ட் எடுத்தா, என் கம்பெனி ஃபுல் ரெஸ்ட் எடுத்துக்குமே ஜெனி” என்று தோள் குலுக்கி புன்னகைத்தான் பழக்கதோஷத்தில்.
ஜனனி அவன் மலர்ந்த முகத்தில் இருந்து பார்வையை விலக்காமல் நெகிழ்ந்து நின்றாள்.
அவன் தோள்பற்றி அருகில் அமர்ந்து கொண்டவள், “ஏன் விபி, இத்தனை நாளா இந்த சிரிப்புக்கு லீவ் விட்டு இருந்த?” என்று கேட்க, அவனிதழ் விரிப்பு மெல்ல சுருங்கி போனது.
“ம்ஹும், என் விபி எதுக்கும் உடைஞ்சு போக மாட்டான்னு நினைச்சு இருந்தேன், இப்பெல்லாம் உன்ன இப்படி பார்க்க எனக்கு எவ்வளவு கஷ்டமா இருக்கு தெரியுமா?”
“…”
“இது என் விபி இல்லன்னு மனசு அடிச்சுக்குது”
“ட்ரூ ஜெனி, நான் பழைய விபி இல்லை தான். என்னை மொத்தமா சுழட்டி அடிச்சுட்டு போயிட்டா…” விபியின் குரல் இறங்கி பேச,
“லல்லி ஆன்டிக்கு என்னாச்சு? ஏன் நைட் அப்படி ஆர்பாட்டம் பண்ணாங்கன்னு தெரியல” ஜனனி லாவகமாக பேச்சை மாற்றி விட்டாள். ஏனோ காவ்யா பற்றி அவன் உருகி பேசுவதை கேட்க இவளுக்கு கசப்பாயிருந்தது.
“காவ்யாவ நினைச்சுட்டே படுத்து இருப்பாங்க, அதான் ஏதோ கனவு கண்டு பயந்து கத்திட்டாங்க, இப்ப மாம் ஓகே தானே”.
“நாட் ஓகே டா, ஏதோ பூஜை, பரிகாரம் அது இதுன்னு யார் யார்கிட்டயோ டிஸ்கஸ் பண்ணிட்டு இருக்காங்க” என்று அவள் சலிப்பாக சொல்ல, இவனுக்கு சிரிப்பு தான் வந்தது.
“அவங்களுக்கு என்ன தோணுதோ அப்படி செய்யட்டும் விடு” என்றான்.
“இந்த பேய், பிசாசு, பரிகாரம் இதுல எல்லாம் உனக்கு நம்பிக்கை இருக்கா விபி?”
“இதெல்லாம் சுத்த நான்சென்ஸ் என்ற நம்பிக்கை இருக்கு” என்றான் சாதாரணமாக.
ஆனால் லலிதாம்பிகையினால் எதையும் சாதரணமாக எடுத்து கொள்ள முடியவில்லை. மறுநாளே அந்த பங்களாவின் பரந்த கூடத்தில், வேத மந்திரங்கள் ஒலிக்க, ஹோம புகை அந்த வீடெங்கும் பரவியது.
விபீஸ்வரனுக்கும் ஜனனிக்கும் இந்த பூஜை எப்போதடா முடியும் என்றாகி விட்டது.
அன்று இரவு லலிதாம்பிகை நிம்மதியோடு உறங்கிக் கொண்டிருந்தார்.
மறுபடி அதே படபட சத்தம், திடுக்கிட்டு விழித்து பார்க்க, அங்கே காவ்யதர்ஷினியின் நிழல் உருவம்… இதழ் வளைத்த கேலி சிரிப்போடு காட்சியானது.
“…!”
இவர் பயந்து அலறி கத்த, இவரின் குரல் எழும்புவதாக இல்லை. இவர் உச்சக்கட்ட பயத்தில் நடுங்கி கொண்டிருக்க, கண்முன்னே அந்த நிழல் உருவம் காற்றோடு காற்றாய் மறைந்து போனது.
# # #
லலிதாம்பிகை, தன் அறையில் அந்த மனவியல் நிபுணரின் முன்பு அமர்ந்து இருந்தார். தன் அம்மாவின் பயத்தை போக்க விபீஸ்வரின் ஏற்பாடு இது.
அவர் முகத்தில் இருந்த மிரட்சியைக் கவனித்தபடி, மருத்துவர் மாதவன் பேச்சை தொடங்கினார்.
“ஏன் மேடம், இவ்வளோ பயப்படுறீங்க? நீங்க ரொம்ப தைரியசாலின்னு விபீஸ்வர் சொல்றாரு!”
“நான் தைரியசாலியா தான் இருந்தேன். ஆனால் கண்ணு முன்ன ரெண்டு முறை பேயை பார்த்ததுக்கு அப்புறம் எங்க தைரியமா இருக்கிறது?”
“உங்களுக்கு சின்ன வயசுல இருந்தே இந்த அமானுஷ்ய விசயங்கள் மேல நம்பிக்கை இருக்கா?”
“ச்சே ச்சே இல்லவே இல்ல. இப்ப என் கண்ணால பார்த்த அப்புறம் நம்பாம இருக்க முடியலயே”.
“சரி, நீங்க என்ன பார்த்தீங்க? என்கிட்ட விளக்கமா சொல்ல முடியுமா?”
“அது, மூணு வாரத்துக்கு முன்ன ஆக்ஸிடென்ட்ல இறந்து போன… அந்த காவ்யா பொண்ணோட உருவம் தான் தெரிஞ்சது”.
“காவ்யாவுக்கும் உங்களுக்கும் என்ன சம்பந்தம்?” என்ற அவரின் கேள்விக்கு இவர் முகம் கோணியது.
“அவ என் பையனோட பொண்டாட்டி” அவரின் பதிலும் கசப்பாகவே வந்தது.
“ஏன் உங்க மருமகள்னு சொல்ல மாட்டீங்களா?” அவர் மென்னகையோடு கேட்க,
“அப்படி உறவுமுறை வச்சு கூப்பிட அவளுக்கு தகுதி இல்ல” லலிதாம்பிகை பதில் பட்டென வந்தது.
“உங்க மருமகள் இறப்பை பத்தி உங்க மனசுல என்ன தோணுது?”
“இப்ப செத்து தொலஞ்சவ, ஒரு நாலு மாசம் முன்னாடி போயிருந்தா என் பையனாச்சும் நல்லா இருந்துருப்பான்”.
“சரி, உங்களுக்கு காவ்யாவோட உருவம் எங்கே தெரிஞ்சது?” என்ற கேள்விக்கு கிழக்கு புற ஜன்னலைக் கைக்காட்டினார். டாக்டர்
மாதவன் எழுந்து ஒருமுறை அவர் சொன்ன இடத்தில் நின்று பார்த்துவிட்டு அவரருகில் வந்தார்.
“அங்க எதுவும் இல்லையே”
“இப்ப இல்ல, ராத்திரியில மட்டும் தான் தெரியுது, ஏதேதோ பூஜை, பரிகாரம் எல்லாம் கூட செஞ்சு பார்த்துட்டேன். அப்ப கூட அது போகல”.
“ம்ம் நீங்க சொல்ற மாதிரி, உங்களுக்கு தெரியறது ஆவியா இருந்தால், செய்த பூஜைக்கு அப்புறம் அது தெரியாம போயிருக்கணும் இல்ல, அப்படி யோசிச்சா நீங்க பார்த்தது அமானுஷ்யம் இல்ல”
“அச்சோ இல்ல டாக்டர், நான் என் முழு சுயவுணர்வோட அதை பார்த்தேனே”
“அதற்கு காரணம், உங்க ஆழ்மன போராட்டத்தின் வெளிப்பாடா இருக்கலாம்… முன்ன நீங்க உங்க மருமகளை அதிகமா வெறுத்து இருக்கலாம், அவங்களை கஷ்டபடுத்தி இருக்கலாம். இப்ப அவங்களோட திடீர் மரணம், உங்களுக்குள்ள குற்றவுணர்வை ஏற்படுத்தி இருக்கலாம். அதனால இப்படிப்பட்ட மாய பிம்பம் உங்களுக்கு தெரியலாம்”.
“அந்த உருவம் இனிமே என் கண்ணுக்கு தெரியாம இருக்கறதுக்கு என்ன டாக்டர் செய்யணும்?”
“ரொம்ப சிம்பிள், உங்க மருமககிட்ட மனசை திறந்து பேசுங்க”
“என்ன?”
“அதாவது உங்க மருமகளோட போட்டோவ பார்த்து, உங்க மனசுல இருக்கிறதெல்லாம் எந்த ஒளிவுமறைவும் இல்லாம வாய்விட்டு பேசிடுங்க. உங்க மன அழுத்தம் குறைஞ்சிடும். அதோட அவங்க பிம்பமும் உங்களுக்கு தெரியாது” என்றார்.
மருத்துவர் சொல்வதை எந்தளவுக்கு நம்புவது என்று லலிதாம்பிகைக்கு புரியவில்லை. எனினும் அந்த பிம்பம் மீண்டும் தெரிவதையும் அவர் விரும்பவில்லை. எனவே அவர் சொன்னபடியே செய்வதாக ஒத்துக் கொண்டார்.
பூஜை அறையில், நிழற்படமாய் மென்னகையோடு இருந்தாள் காவ்யதர்ஷினி.
குழந்தைதனம் மாறாத முகத்தோற்றம் அவளுடையது. லலிதாம்பிகை தயக்கமாக பேச்சை தொடங்கினார்.
“ஏய் பொண்ணு, உன்ன எனக்கு சுத்தமா பிடிக்காது. விபி பிடிவாதத்துக்காக தான் உங்க கல்யாணத்தை நான் சகிச்சுகிட்டேன். நீ வசதியான குடும்பத்தில பிறக்கலன்றதுக்காக நான் உன்ன வெறுக்கல. நானும் சாதாரண குடும்பத்து பொண்ணு தான். என் புருசன் என்மேல வச்சிருந்த காதலால என்னை ராணி மாதிரி பார்த்துகிட்டார்!
எல்லா அம்மாவுக்கும் தன் புள்ள பேரழகன் தான். அதேபோல தான் எனக்கும். என் மகனோட மனைவி பேரழகியா இருக்கணும்னு நானும் ஆசைப்பட்டேன். என் விபியோட அழகு, திறமை, வசதி, ஆளுமை எதனோடும் நீ ஒத்து போகல. அவன் உன்ன எனக்கு முதல்ல காட்டும்போது, அவன் பின்னாடி புள்ளபூச்சி மாதிரி நீ நின்னிட்டு இருந்த… போயும் போயும் உன்மேல எப்படி விபிக்கு ஆசை வந்ததுன்னு இப்பவரைக்கும் எனக்கு புரியவே இல்ல…!
உன்கிட்ட நான் வெறுப்பை மட்டும் தான் காட்டியிருக்கேன். மனசுல ஒண்ணு வச்சுகிட்டு முகத்தில் வேற காட்ட தெரியில எனக்கு. அதுக்காக, வாழ ஆரம்பிக்கறதுக்கு முன்னாடியே நீ இறந்து போனதை நினச்சு சந்தோசபடுற அளவுக்கு நான் மோசமானவ இல்ல!
எனக்கு பெண் குழந்தை இல்ல, என் மருமகளை என் பொண்ணா தாங்கனும்னு நினச்சு இருந்தேன். ஏனோ என்னால உன்கூட ஒட்டமுடியாமலே போயிடுச்சு!
ஓர் அம்மாவா நடந்த ஆக்ஸிடென்ட்ல எம்மகன் ஆபத்தில்லாம மீண்டது எனக்கு நிம்மதி. நீ இப்படி இல்லாம போனது எனக்கும் அதிர்ச்சி, வருத்தம் தான்.
நான் தெரிஞ்சும் தெரியாம உன்ன கஷ்டப்படுத்தி இருந்தா என்னை மன்னிச்சிடு…” இமையோரம் ஈரம் சேர கையெடுத்து கும்பிட்டு விட்டு நகர்ந்தார்.
இப்போதே தன் மனதின் பாரம் இறங்கியதாய் தோன்றியது அவருக்கு.
அதுவரை லலிதாம்பிகை காவ்யா நிழற்படத்திடம் பேசிக்கொண்டிருந்தவற்றை கேட்டு கொண்டிருந்த விபீஸ்வரின் கையசைப்பில் கலில் சக்கர நாற்காலியின் பிடியை நகர்த்திச் சென்றான்.
ஏனோ அம்மா பேசியதை கேட்டதும் விபீஸ்வரின் மனதில் ஏதோவொரு ஆறுதல் வந்திருந்தது.
காவ்யா இந்த வீட்டில் வாழ்ந்த நாட்களில் லலிதாம்பிகையின் பார்வையில் அவள் படும்போதெல்லாம் சுடும் வார்த்தைகளால் அவளை காயப்படுத்தியே பழக்கப்பட்டவர் இவர்.
‘மாம், நீங்க பேசனதுக்கு எல்லாம் சேர்த்து வச்சு, அடுப்பில்லாம, நெருப்பில்லாம என்னை தான் வருத்தெடுப்பா உன் மருமகள்னு, தெரியுமா உங்களுக்கு!’ விபீஸ்வரின் மனம் மானசீகமாய் தன் அன்னையிடம் முறையிட்டது.
அதேநேரம் இன்ஸ்பெக்டர் காசிநாதன் விபீஸ்வரின் நிறுவனத்திற்குள் வந்திருந்தார்.
என்னதான் நடந்தது விபத்து போலிருந்தாலும், நிச்சயம் இது கொலை முயற்சியாக இருக்க வாய்ப்புகள் அதிகம். எனவே அவர் இந்த வழக்கை கொலை முயற்சியாகவே கொண்டு சென்றார்.
அவரின் அடுத்த விசாரணை, காவ்யதர்ஷினி வேலை பார்த்த விபீஸ்வரின் நிறுவனம்…
# # #
உயிர் தேடல் நீளும்…