UUP–EPI 14

அத்தியாயம் 14

செரெடோனின் (seretonin) எனும் இந்த ஹார்மோன் தான் நமது மூட் நல்லபடி இருக்கவும், நாம் நன்றாக இருக்கிறோம் என உணரவும், மன சந்தோஷத்தைக் கொடுக்கவும் உதவுகிறது. இந்த ஹார்மோன் குறையும் போது நமக்கு டிப்ரஷன், தற்கொலை எண்ணம் போன்றவை ஏற்படுகிறது.

அன்று

கதிரும் சண்முவும் ப்ளஸ் டூ முடிவுக்காக காத்திருந்த தருணம் அது. கதிருக்கு வாழ்க்கை எப்பொழுதும் போல போக சண்முவுக்கோ விதி எனும் சைத்தான் சைக்கிளில் வந்து டார்ச்சர் கொடுக்க ஆரம்பித்தது. வளர்ந்து வைரமென ஜொலித்தவளை, தங்கள் வீட்டுக்குக் கொண்டு சென்று அழகு பார்க்க விரும்பினர் பலர்.

அதனாலேயே மீனாட்சியின் வீட்டுக்கு தரகர் வருகையும், பையனை வைத்திருக்கும் சொந்தங்களின் வருகையும் அதிகரித்திருந்தது.

“இப்போ எனக்கு கல்யாணம்லாம் வேண்டாம்மா” என முரண்டினாள் சண்மு.

“அடியே! எனக்கு மட்டும் இப்பவே கல்யாணம் பண்ணி வைக்க ஆசையாடி? அப்படி செய்யனும்னாலும் பணத்துக்கு எங்கடி போறது? கண்ணன் வேற படிக்கிறான். ஆம்பள பையன் படிச்சா நல்ல வேலைக்குப் போய் குடும்பத்துக்கு உதவியா இருப்பான். நீ இந்தப் பரிட்சையோட படிச்சது போதும்டி சண்மு! வேலைக்குப் போக ஆரம்பிடி! உன் சம்பளத்த சேர்த்தாச்சும் இன்னும் ரெண்டு மூனு வருஷத்துல உன்னை கரை ஏத்திடறேன்” என இவர் வேறு திட்டம் போட்டார்.

“அம்மா, ஒரு டிப்ளோமாவாச்சும் படிக்கறேன்மா” என கெஞ்சியவளை முறைத்துப் பார்த்தார் மீனாட்சி.

“இப்பவே குனிஞ்சு நிமிந்து வேலைப் பார்த்தா எனக்குப் படபடன்னு வருதுடி! எனக்கு எதாச்சும் ஆகறதுக்குள்ள உன்னை கட்டிக் குடுக்கனும்டி! சேர்த்து வச்சிருக்கற கொஞ்ச பணத்துல உனக்கு நகை நட்டு வாங்கினாலும், வரதட்சணை குடுக்க காசு வேணுமே! அப்போத்தானே கொஞ்சமாச்சும் நல்ல இடத்துல உன்னைப் பிடிச்சுக் குடுக்க முடியும்”

‘நான் என்ன ஆடா மாடா புடிச்சுக் குடுக்க?’ என மனதில் இருந்ததை கேட்கவில்லை அவள்.

படபடவென வருகிறது என நெஞ்சை நீவி விட்டுக் கொண்டிருப்பவரிடம் இன்னும் பேசி பிரச்சனை செய்ய வேண்டாம் என கோயிலுக்குக் கிளம்பி விட்டாள் சண்மு. அங்கே சென்றும் சாமியைக் கும்பிடாமல் கடவுளின் திரு உருவத்தை முறைத்தப்படி நின்றிருந்தாள். மனதோடு கடவுளிடம் சண்டைப் போட்டாளோ என்னவோ! அதன் பிறகு அமைதியாக கோயில் வளாகத்தில் கொஞ்ச நேரம் அமர்ந்திருந்தாள். அப்பொழுது மடியில் ரோஜா மலர் ஒன்று வந்து விழுந்தது. யாரது என நிமிர்ந்துப் பார்த்தால், பெருமாள் அங்கு நின்றிருந்தான்.

“என்னடா?”

“உன் கிட்ட பேசனும் சம்மு”

“சம்முன்னு கூப்ட கும்மிப்புடுவேன்”

“இப்படிலாம் என் கிட்ட பேசாதடி! அப்பால ரொம்ப வருத்தப்படுவ!”

“என்னடா அப்பால, இப்ப அடிக்கப் போறேன் பாரு செருப்பால!”

“புருஷன செருப்பால அடிப்பியாடி?”

“புருஷனா? எவன் அவன்?”

“நான்தான்டி! எங்கப்பாவ மிரட்டி உன்னைப் பொண்ணு கேக்க போக சொல்லியிருக்கேன்”

“ஓஹோ! என்னன்னு சார் மிரட்டனீங்க?”

“உன்னைக் கட்டி வைக்காட்டி கரண்டுல கைய வச்சிருவேன்னு சொல்லி வச்சிருக்கேன். மொதல்ல சொத்து வராது, பத்து வராதுன்னு குதிச்சாரு! அப்புறம் ஒத்த மவன் உசுருதான் பெருசுன்னு ஒத்துக்கிட்டாரு” என சொல்லி குஜாலாக சிரித்தான் பெருமாள்.

“ஏண்டா பெருமாளு! ஏற்கனவே உன் முகர கரண்டுல கை வச்சு கருகி போன மாதிரி தான் இருக்கு! இப்போ மறுபடி ஏன் கரண்டுல கை வைக்கப் போற நீ?” என கேட்டவள் இடிஇடியென சிரித்தாள்.

கடுப்பாகிக் போனான் பெருமாள்.

“இந்த ஊருலயே நீ மட்டும்தான் அழகா இருக்கேன்னு திமிருல பேசறியாடி? இரு இரு, எங்க வீட்டுக்கு மருமகளா வருவல்ல! எங்காத்தா குடுக்கற குடுப்புல இந்த வாயெல்லாம் காணாம போயிரும். பெருமாள் மாமா, அயித்தான்னு மூக்கணாங்கயிறு மாட்டுன மாடு மாதிரி என் பின்னால சுத்துவடி நீ!”

“போடா டேய்! உன்ன மாதிரி சைத்தான்ன நாங்க அயித்தான்னு கூப்டுட்டாலும்! தேங்காய விட்டடிக்கறதுக்குள்ள ஓடிப்போயிரு! இல்லைன்னா பெருமாள் மாமா, ஆயிட்டாரு கோமான்னு நாளைக்குப் பேப்பருல வந்துரும்” என மிரட்டியவள் சாமிக்கு உடைக்க எடுத்து வந்திருந்த தேங்காயை அவன் முன்னே ஆட்டிக் காட்டினாள். அதற்கு மேல் அங்கே நிற்க பெருமாள் மாமாவுக்கு ஏது தில்லு!

கதிருக்கோ சண்முவுக்கு வரன் வர வர வயிற்றில் புளியைக் கரைத்தது. காத்திருந்தவன் பொண்டாட்டியை நேற்று வந்தவன் கொண்டு போய் விடுவானோ என கலங்கித் தவித்தான். அவளிடம் தன் காதலை சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் தனக்குள்ளேயே போராடி களைத்துப் போனான்.

அன்று இரவு குழலை எடுத்துக் கொண்டு துணி துவைக்கும் கல்லின் மேல் அமர்ந்துக் கொண்டான். மனது ஏனோ பாரமாக இருப்பது போல இருந்தது. உள்ளிருக்கும் காதல் அவனை பாரமாக அழுத்தியது. புல்லாங்குழலை எடுத்து வாயில் வைத்தவன்,

“கனவு கலையவில்லை கண்களில்

இதயம் துடிக்கவில்லை ஆசையில்

வாழ்வும் தாழ்வும் அவள் வார்த்தையில்”

என ஊத ஆரம்பித்தான். உயிர் மூச்சு குழலில் கலந்து, அந்த ஏகந்த வேளையில் அவன் ஏக்கத்தை வெளிக் கொணர்ந்தது.

தன் அருகே யாரோ அமர்வதை உணர்ந்த கதிர், குழழூதுவதை நிறுத்தி விட்டு யாரென பார்த்தான். அங்கே பார்வதி அமர்ந்திருந்தார்.

“என்னடா ராசா? கொஞ்ச நாளா ஒரு மாதிரியா இருக்க?”

“அதெல்லாம் ஒன்னும் இல்லமா”

மகனின் தலையைக் கோதிக் கொடுத்தவர்,

“உன் மனச என்னவோ வாட்டுது! சரியா சாப்பிடறது கூட இல்ல! என்னாச்சுப்பா? பரிட்சை ரிசல்ட்டு வருதுன்னு பயமா?” என கேட்டார்.

சமாளிக்க சாக்கு கிடைக்கவும், ஆமென தலையாட்டினான் கதிர்.

“அதெல்லாம் பயப்பட வேணாண்டா ராசா! என்ன மார்க்கு வந்தாலும் அம்மாக்கு பரவாயில்லடா! நம்ம கிட்ட இல்லாத காசா? ப்ரைவட்டா படி! வெயாபாரம் எதாச்சும் பண்ணு! போலீஸ் தான் ஆவனும்னு கட்டாயம் இல்ல! என் புள்ள சந்தோசமா இருந்தா போதும் எனக்கு”

“போலீஸ் ஆகனும்மா! அதான் சந்தோசம் எனக்கு!”

“கண்டிப்பா ஆவடா ராசா! எனக்கு உன் மேல முழு நம்பிக்கை இருக்கு! சரி உள்ளாற வா! பனியா இருக்குப் பாரு”

“நீ போம்மா! இன்னும் கொஞ்ச நேரத்துல வரேன்” என்றவன் மீண்டும் வாசிக்க ஆரம்பித்தான்.

பார்வதி எழுந்து சென்றிருக்க, மீண்டும் ஆள் உட்காரும் உணர்வு. திரும்பி பார்க்காமலே, மூக்கு உணர்ந்த நெடியில் தன் அப்பா தான் என அறிந்துக் கொண்டான் கதிர். பிறந்ததில் இருந்து அவன் உணர்ந்த சாராய நெடியாயிற்றே! அதோடு சேர்ந்து இன்னொரு வாசமும் வந்தது.

“லாஜா!”

“என்னப்பா?”

“இந்தா இந்த ஜூடான காபிய குழி! குளிருது பாழு!”

அவர் நீட்டிய டம்ளரை வாங்கிக் கொண்டான் மகன். மெல்ல உறிந்து குடிக்க ஆரம்பித்தான்.

“இன்னாச்சுப்பா?” இப்பொழுது மகனை விசாரிப்பது இவர் முறையானது.

“ஒன்னும் இல்லப்பா!”

“ஒங்கம்மால ஏமாழ்த்துன மாதிலி என்னையும் ஜெய்ய முடியாது! ஜொல்லுப்பா”

அமைதி மட்டும் தான் பதிலாக கிடைத்தது.

“ஜொல்லாம வுடமாட்டேன்” சின்னப்பிள்ளையாக அடம் பிடித்தார் பரமு.

“ப்பா! காதல்னா என்னப்பா?”

தாடையை சொறிந்தார் பரமு.

“காதல்னா உஜுருப்பா(உசுரு)! எப்டி உஜுரு போய்ட்டா பொணமா ஆகிடறமோ, அப்டி காதலோ இல்ல காதலியோ போய்ட்டா நாமளும் உஜுரு இருக்கற பொணமா போய்ழ்டுவோம்” சொன்னவர் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு எழுந்து போய்விட்டார். தள்ளாடியபடி செல்லும் தன் தகப்பனையே பார்த்திருந்தான் கதிர்.

‘காதல சொல்லாம பொத்தி வச்சி, சம்முவ யாராச்சும் கட்டிக்கிட்டுப் போயிட்டா நானும் உயிருள்ள பொணம் ஆகிருவனோ? விட மாட்டேன்! நாளைக்கே என் காதல அவ கிட்ட சொல்லிடறேன்’ என மனதில் சங்கல்பம் எடுத்துக் கொண்டான் கதிர்.

மறுநாள் சண்முவை சந்தித்தவன்,காதல் என்றால் என்னவென கேட்க, கீழே கிடந்த செருப்பை வெறுப்புடன் காட்டினாள் அவள்.

“காதல்னா செருப்புடா கதிரு!”

பேவென விழித்தான் கதிர்வேலன்.

இன்று

எல்லோருக்கும் பின்னால் நுழைந்த கதிர் சண்முவை நெருங்கி மெல்லிய குரலில்,

“ஹாய் சம்மு பேபி! கண்டுப்புடிச்சு வந்தேன் பார்த்தல்ல! ஏசிபிடி நானு!” என சொல்லி புன்னகைத்தான்.

அவள் முறைக்க, இவன் தோளைக் குலுக்கி விட்டு சோபாவில் போய் அமர்ந்துக் கொண்டான்.

பரமு நடந்துப் போய் கட்டிலின் கீழே கார்பெட்டில் அக்கடாவென படுத்துக் கொண்டார். வந்திருந்த இரண்டு பெண்மணிகளும் சண்முவை முறைப்புடன் பார்த்தவாறே யார் முதலில் ஆரம்பிப்பது என யோசனையில் நின்றிருந்தனர். முதலில் சுதாரித்த பார்வதி,

“ஏன்டி உனக்கு…” என ஆரம்பிக்க, மங்கையோ

“அத்தை, ஸ்டாப் ஸ்டாப்! நான் இப்போ கீழ காபி ஷாப்கு போக போறேன்! அதுக்கு அப்புறம் உங்க குடும்ப சண்டையை கண்டினியூ பண்ணுங்க!” என சொன்னாள்.

“பாய்ங்க சண்மு!” என்றவள் கதிரை நெருங்கி,

“பாய் கதிர்வேலன்! ஆல் த பெஸ்ட்” என தம்ப்ஸ் அப் காட்டினாள். சிரித்த முகத்துடன் அவளை கதவு வரை சென்று அனுப்பி வைத்துவிட்டு வந்து மீண்டும் சோபாவில் அமர்ந்துக் கொண்டான் கதிர்.

தவமங்கை போனவுடன், பார்வதியை முந்திக் கொண்டு மீனாட்சி ஆரம்பித்தார்.

“ஏன்டி சண்மு! உனக்கு எவ்ளோ தெனாவெட்டு இருந்தா இப்படி ஒரு காரியத்த செஞ்சிருப்ப?” என அவளை அடிக்கப் போனார்.

“அத்தை!” கடுமையாக வந்தது கதிரின் குரல். அவனது குற்றவாளியை மிரட்டும் குரலுக்கு கொஞ்சமாய் நடுங்கிப் போனார் மீனாட்சி. அதோடு மீனாம்மா போய் அத்தை எனும் அழைப்பைக் கவனித்தவர் முகம் சுணங்கினார்.

“பேச்சு பேச்சாத்தான் இருக்கனும்! சம்மு மேல உங்க மூச்சுக் காத்து கூட மோதக் கூடாது! புரிஞ்சதா? அவ ஒரு காரியத்தையும் செய்யல! சம்முவ கல்யாணம் செய்யப் போறென்னு முடிவு எடுத்தது நானு! அத உங்க கிட்ட சொன்னதும் நானு!”

அம்மாக்கள் இருவரும் ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக் கொண்டனர்.

“யாரும் என்னை அத்தைன்னு கூப்ட வேணாம்! ஆத்திரேலியால இருக்கற என் மருமகனுக்கு மட்டும்தான் அந்த உரிமை” மெதுவாக என்றாலும் தெளிவாகவே உரைத்தார் மீனாட்சி.

“உங்க மக டைவோர்ஸ் பண்ணறதுக்கு முன்ன தான் அந்த வெண்ணெய் உங்களுக்கு மருமகன்! பண்ணிட்டால்ல! கதம் கதம் ஆச்சுல்ல! இனிமே நான் தான் உங்க மருமகன். நான் அத்தைன்னு  கூப்படறது பிடிக்கலனா, அத்தா இல்ல அத்தகாருன்னு தெலுங்குல கூப்புட்டுப் போறேன்! எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்ல! இப்போ தள்ளி நின்னு கண்டினியூ பண்ணுங்க, பேச்சை மட்டும்”

மீனாட்சி வாயடைத்துப் போய் நிற்க, பார்வதி ஆரம்பித்தார்.

“ஊருல வேற யாரும் கிடைக்கலியாடி? நிச்சயம் பண்ணி கல்யாணத்துக்கு ரெடியாகிட்ட என் மவன புடிச்சிட்ட? உனக்கு வெக்கமாயில்ல?”

“அவ எதுக்கும்மா வெட்கப்படனும்? அவ என்னைப் பிடிக்கலியே! நான் தானே அவள பிடிச்சு தொங்கிட்டு இருக்கேன்! நான் தானே அவ வேணும்னு கல்யாணத்த நிறுத்துனேன்! அப்போ உன் பேச்சுப்படி உன் மகன் வெக்கங்கெட்டவனாம்மா?”

மகனின் பதிலில் இப்பொழுது வாயடைத்துப் போவது பாருவின் முறையானது.

பரமு படுத்தவாக்கில் பக்கென சிரித்துவிட்டார்.

“என்ன அங்க சத்தம்?” என பார்வதி கத்த,

“விக்கழு பாழு!” என பதில் கொடுத்தார் அந்த எமகாதகன்.

தன்னைப் பேசவிடாமல் தானே பதிலளித்துக் கொண்டிருக்கும் கதிரைப் பார்த்து முறைத்தாள் சண்மு. ஒற்றைக் கண்ணை சிமிட்டி, அழகான புன்னகையை அவளுக்குத் திருப்பிக் கொடுத்தான் கதிர். இருவரின் சமிக்ஞையைப் பார்த்த மீனாட்சிக்குப் பற்றிக் கொண்டு வந்தது.

“உன் கல்யாணத்தப்பவே இந்த வெறும் பயலுக்காக அழுதவதானடி நீ! அதையெல்லாம் பொறுத்துக்கிட்டு உன் கூட குடும்பம் நடத்துன என் மருமவன் தெய்வம்டி! அவர வெட்டி விட்டுட்டு, இவன் வேணும்னு தானே மறுபடியும் வந்துருக்க? ஒரு பொண்ணுக்கு புருஷன் ஒருத்தன்தான்டி இருக்கனும்! பல பேரு இருந்தா அவளுக்குப் பேரே வேற!”

“அம்மா!”

“அத்தை!”

“தங்கச்சி!”

சண்மு, கதிர், பரமு மூன்றுப் பேருமே கத்தி இருந்தார்கள். தன் அம்மாவின் வாயின் வழியாகவே இந்த வார்த்தைகளைக் கேட்ட சண்மு துடித்துப் போனாள்.

கதிரை நெருங்கியவள், அவன் சட்டைக் காலரைப் பிடித்துக் கொண்டு,

“இதுக்குத்தான் சொன்னேன்! இந்த எழவு பேச்சுக்குத்தான் பயந்தேன்! என் அம்மா வாயாலயே இதெல்லாம் கேக்க வச்சிட்டல்ல! ஏன்டா, ஏன்? நான் இல்லாம இருக்க முடியலனா, இருக்காத! செத்துப்போ! செத்துப்போ! உனக்கு தோழியா இருந்த பாவத்துக்கு நானும் சேர்ந்து செத்துப் போறேன்” என கதறியவள், அவன் நெஞ்சில் விடாமல் அடித்தாள். கை வலிக்கும் வரை அடித்தாள். ஒவ்வொரு அடிக்கும் அமைதியாகவே நின்றான் கதிர். ஆனால் கண்கள் மட்டும் கலங்கி சிவந்திருந்தது.

படக்கென எழுந்து வந்த பரமு, சண்முவைப் பிரித்து விட்டார் தன் மகனிடம் இருந்து. பரமுவைக் கட்டிக் கொண்ட சண்மு, அழுது கரைந்தாள்.

“கதிரப்பா! எனக்கு யாரும் வேணா! அம்மா வேணா, தம்பி வேணா, புருஷன் வேணா! உங்க மகன என் தோழனா மட்டும் இருக்க சொல்லுங்க! அது மட்டும் தான் எனக்கு வேணும்! வேற எதுவும் எனக்கு வேணா! வேணவே வேணா!” என அரற்றினாள்.

அவள் பிடித்திருந்த அழுத்தத்திற்கு தள்ளாடினார் பரமு. அன்று போல இன்றும் கதிர் இருவரையும் அணைத்துப் பிடித்துக் கொண்டான்.

இவர்கள் மூவர் கூட்டணியைப் பார்த்து இரு பெண்மணிகளுக்கும் கோபம் கொப்பளித்தது.

“இங்க பாருடா கதிரு! நீ ஒன்னும் வெறும் பய இல்ல! போலிஸ் வேலைல இருக்க! நல்ல சொத்துபத்து இருக்கு! கூலிக்கு மாரடிச்ச இந்தம்மா என்னமோ உன்னை இவ்வளவு கேவலமா பேசுது! இந்தம்மா பெத்து மேயவுட்ட அவ மக என்னடான்னா உன்னை செத்துப்போக சொல்லுறா! இதுக்காகவாடா உன்னை பாசத்தக் கொட்டி வளர்த்தேன்! உன்னை செத்துப்போன்னு கண்டவங்களாம் சொல்லுறதுக்காகவாடா என் உசுர குடுத்து உன்னைப் பெத்தேன்?” என விசும்பினார் பார்வதி.

“இங்க பாரு பார்வதி வார்த்தைய அளந்துப் பேசு! கூலிக்கு மாரடிச்ச கூட்டம்தான் ஆனா உன்னை மாதிரி மத்தவங்க வயித்துல அடிக்கல! மான ரோஷத்தோட பொழச்சவங்கம்மா நாங்க!” என எகிறினார் மீனாட்சி.

“நீங்க மான ரோஷத்தோட பொழச்சது எங்களுக்கு தெரியாதா என்ன! பெத்த பொண்ண பணக்காரனுக்கு கட்டிக் குடுத்து அவன் காசுல வயித்த வளக்கற குடும்பம் தானேம்மா உங்க குடும்பம்! இவ வெட்டிக்கிட்டு வந்தாலும், அவன் கட்டிக் குடுத்த வீட்டுல குஜாலா குடும்பம் நடத்தறவங்க தானேம்மா நீங்க! உங்க மான ரோஷம் தான் ஊரு முழுக்க சிரிப்பா சிரிக்குதே!”

“அப்படிப்பட்ட மான ரோஷம் இல்லாத குடும்பத்துப் பொண்ணதானேம்மா ரெண்டாங்கையா இருந்தாலும் பரவாயில்லன்னு உங்க பவுசான குடும்பத்துப் பையன் நாக்கத் தொங்கப் போட்டுட்டு தொரத்துறான்!”

“அம்மா! போதும் இதோட நிறுத்திக்குங்க! எது பேசறதா இருந்தாலும் என்னைப் பேசுங்க! அதுக்கு உங்களுக்கு உரிமை இருக்கு! என் கதிரப் பத்தி நாக்குல பல்லப் போட்டுப் பேசாதீங்க! நான் சும்மா இருக்க மாட்டேன்!”

“என்னடி செய்வ? இல்ல என்னத்த செஞ்சி கிழிச்சிருவ? உன்னைப் பெத்த பாவத்துக்கு கண்டவங்க வாயில எல்லாம் விழுந்து எழுந்திரிக்கிறேனே, என்னடி செய்வ என்னை? நான் வாழ்ந்த மாதிரி லோல்பட்டு வாழாம நீயாச்சும் சீரும் சிறப்புமா வாழனும்னு நல்ல பையனா பார்த்துக் கட்டி வச்சேனே இந்தப் பாவி அம்மா, என்னை என்னடி செய்வ?” என மறுபடியும் அடிக்க வந்தார் மீனாட்சி.

“அத்தை! அவ மேல கைய வச்சீங்க அப்புறம் என்னோட இன்னொரு முகத்தையும் பார்ப்பீங்க, சொல்லிட்டேன்!”

“நீ இருடா கதிரு! இது அம்மா மகளுக்கு உள்ள பிரச்சனை, நாங்களே பார்த்துக்குறோம்! என்ன செய்வேன்னா கேட்டம்மா?”

“ஆமாடி அப்படித்தான் கேட்டேன்!”

“உன்னை ஒன்னும் நான் செய்ய மாட்டேன்மா! என்னைப் பெத்து வளத்து, உன்னால முடிஞ்ச அளவுக்கு என்னை கரை சேர்த்தியே! உன்ன ஒன்னும் செய்ய மாட்டேன்மா! ஆனா என்னை என்ன செய்யக் கூடாதுன்னு இப்படி காட்டுக் கத்தல் கத்தறியோ அதை செய்வேன்மா!”

“என்னடி சொல்லற?” என இரண்டு அம்மாக்களும் கேட்க,

“நீங்க எதிர்பார்க்கறபடியே கதிர நான் கல்யாணம் செஞ்சுக்கப் போறேன்! இது நடந்துடும்னு தானே ரெண்டு பேரும் குதியா குதிக்கிறீங்க! உங்க நினைப்பை ஏன் பொய்யாக்கனும்? கதிர இன்னிக்கே நான் நண்பன் போஸ்ட்ல இருந்து அன்பன் போஸ்ட்டுக்கு ப்ரோமோட் பண்ணறேன்.” என நிறுத்தி நிதானமாக ஒவ்வொரு வார்த்தையையும் சொன்னாள் சண்முகப்ரியா.

படபடவென கையைத் தட்டிய பரமு, தன் சட்டையைத் தூக்கி வேட்டியில் சொறுகி இருந்த தாலியை எடுத்துக் கதிர் கையில் திணித்தார். கதிர் மங்கையுடனான கல்யாணத்தை நிறுத்தியதை சொல்லி, சண்மு தான் இனி தன் மனைவி என இவர்கள் மூவரிடம் சொன்ன கணமே தன் அம்மா சிவப்பாயியின் தாலியை பூஜை அறையில் இருந்து எடுத்து வேட்டியில் சொறுகி இருந்தார் பரமு. பெண்கள் இருவரும் கோபத்தோடு கிளம்பி இருக்க, இவர் ஒரு முடிவோடு கிளம்பி இருந்தார்.

“மம்மவ மன்சு மாறறதுக்குள்ள கட்டிருடா லாஜா” என மகனின் காதில் கிசுகிசுத்தவர்,

“யாழுக்கு பிடிச்சாலும் பிடிக்கலைனாலும் லாஜாத்திதான் என் மம்மவ! இது இந்த பழமுவோட கட்டளை, என் கட்டளையே ஜாசனம்!” என இரு பெண்மணிகளையும் பார்த்து சொன்னார் அவர்.

தாலியைக் கையில் வாங்கிய கதிர்,  

“சம்மு உனக்கு நல்ல தோழனா முன்னயும் இருந்தேன் இனி மேலும் இருப்பேன்டி. ஒரு கணவன் தோழனா ஆகறது ரொம்ப அபூர்வம், ஆனா ஒரு தோழன் நல்ல கணவனா வருவான்டி சம்மு. நான் உனக்கு ஒரு நல்ல கணவனா இருப்பேன், என்னை நம்பு! இனி மேலயும் உன்னை தூர நிறுத்தி என்னால மறுகி மறுகி சாக முடியாதுடி சம்மு! உங்கம்மா உன்னை மறுபடியும் பேக் பண்ணி, நீ வெறுத்து விட்டுட்டு வந்த அந்த பொறம்போக்குகிட்ட சேர்த்துருவாங்களோன்னு பதறிகிட்டே இருக்க முடியாதுடி! உன்னை என் கூடவே பாதுகாப்பா வச்சிக்கனும், அதுக்கு உன்னை நான் கல்யாணம் பண்ணிக்கனும்! ப்ளிஸ்டி சம்மு, இதுக்காக என்னை வெறுத்துறாதே!” என அவள் கண்ணைப் பார்த்து சொன்னவன், மடமடவென தாலியைக் கட்டிவிட்டான்.

“மாங்கலியம் தந்துனானே

மமஜீவன ஹேசுனா

கண்டே பத்மா மாமி ஜுபகே

துவ ஜீவ ஜதஸ்ஜதம்” என பரமு குளறலாக பாடி ஆசிர்வதித்தார்.  

அந்த நட்சத்திர ஹோட்டல் ரூம் கோயிலாக, நின்றிருந்த மூன்று பெரியவர்களும் சாட்சியாக தன் உயிர் தோழிக்குத் தாலியைக் கட்டி தன் உயிராய் மாற்றிக் கொண்டான் கதிர். கோபத்தில் தன் அம்மாவின் வாயை அடைக்க கதிரை மணக்கப் போகிறேன் என எகிறியவள், இப்பொழுது வாயடைத்துப் போய் நின்றாள்.

(உயிர் போகும்…)