வா… அருகே வா! –  21

   பூங்கோதையின் நாட்கள் அவளின் மிலிட்டரி இல்லாமல் நகர ஆரம்பித்தன.

              உண்மையில் அவளைச் சுற்றி இருந்தவர்களுக்கு ஆச்சரியமே மேலோங்கியது.

                   ‘பூங்கோதை அழுவாள். சோர்ந்து விடுவாள். குழந்தைப் பேறு நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில் பூங்கோதை எப்படி மீண்டு வருவாள்?’ போன்ற அச்சத்தோடு இருந்தவர்களுக்கு, பூங்கோதையின் செய்கை சற்று வித்தியாசமாகவே இருந்தது.

     திலக் அவளுடன் இல்லை. ஆனால், அவன் பணியில் காஷ்மீரில் இருக்கிறான் என்பது போலவே நடந்து கொண்டாள் பூங்கோதை.

             அவனுடன் பேச முடியாத நாட்களில், அவன் அனுப்பியிருக்கும் மடல்களைப் படிக்கும் வழக்கம் கொண்டவள், இப்பொழுதும் அது போலவே செய்தாள். அவன் அனுப்பியிருக்கும் வாட்ஸாப் ஆடியோ செய்திகளைக் கேட்டாள் பூங்கோதை.

பூங்கோதையை நெருங்கிப் பேச அனைவருக்கும் சற்று தயக்கமாகவே இருந்தது. அவள் அறையின் வாசல் வரை வந்துவிட்டு, அவளைப் பார்த்து விட்டுச் சென்றனர்.

 பூங்கோதையின் தோழி கயல், பூங்கோதையின் அறையின் வாசல் வரை வந்துவிட்டு, பூங்கோதையின் செயலில் ஆணி அடித்தார் போல் கதவருகே நின்றுவிட்டாள்.

பூங்கோதை திலக்கின் பையைத் திறந்தாள்.

                   அவன் அவளுக்காக எழுதியிருந்த கடிதங்களைப் படித்தாள். பூங்கோதையின் செவிகளில், அவன் குரலே ஒலித்தது.

    “பியூட்டி… பியூட்டி… பியூட்டி…” என்று அழைப்போடு தொடங்கியது அவன் கடிதம்.

        “சௌக்கியமா பியூட்டி?” பூங்கோதை சத்தமாக வாசித்தாள்.

                      அவன் கேள்விக்குப் பதில் கூறுவது போல், “மிலிட்டரி… எனக்காக நீ இருக்கும் பொழுது, என் சௌக்கியத்துக்கு என்ன குறைச்சல்?” என்று உதட்டில் அவனுக்காகப் புன்னகையோடு, கண்களில் வர எத்தனித்த கண்ணீரை உள்ளிழுத்து, “நான் அழ மாட்டேன் மிலிட்டரி… நீ வருவ… எனக்காக வருவ…” என்று உறுதியோடு கூறினாள் பூங்கோதை.

                      “என் குழந்தை என்ன சொல்லுதா? எனக்கு குழந்தையோட அசைவை தொட்டு பார்க்கணும்ன்னு ஆசையா இருக்கு பியூட்டி. செவி சாய்த்து குழந்தை கிட்ட பேசணுமின்னு இருக்கு பியூட்டி. நான் பேசினா குழந்தைக்கு கேட்கும் தானே?  சீக்கிரம் வந்துடுவேன் பியூட்டி.” என்று திலக் எழுதியதை சத்தமாக வாசித்தாள் பூங்கோதை.

     “நீங்க வருவீக… சீக்கிரம் வந்திருவீக… நம்ம குழந்தையை கையில் வாங்க வந்திருவீக.” என்று அவன் கடிதத்தை நெஞ்சோடு அணைத்துக் கொண்டு உறுதியாகக் கூறினாள் பூங்கோதை.

“குழந்தைக்கு அப்பாவை சொல்லி குடுத்திட்ட தானே? நான் வந்ததும் என் குழந்தை கிட்ட கேட்பேன்.” என்று திலக் எழுதியதை வாசித்து விட்டு, “கேளுங்க… கேளுங்க… என் குழந்தை உங்க கிட்ட கேட்கும், வளைகாப்புக்குக்  கூட ஒழுங்கா வர முடியலைன்னு?” என்று அவனோடு மனதோடு அவள் ஆதங்கத்தை முன் நிறுத்திச் சண்டையிட்டுக் கொண்டிருந்தாள் பூங்கோதை.

       அவன் பையிலிருந்த காகிதத்தை மேலும் பார்த்தாள் பூங்கோதை

            மேடிட்ட வயிரோடு பூங்கோதை நிற்பது போலவும்… திலக் அவள் வயிற்றின் மேல் கைவைத்து குழந்தையின் துடிப்பை உணர்வது போலவும் அவன் வரைந்திருந்த காட்சியை ஆசையாக வருடினாள் பூங்கோதை.

      அந்த காகிதத்தைச் சேலைக்கு இடையே, அவள் வயிற்றின் மீது வைத்து, “உங்க அப்பா… உன் நினைப்பா தான்… இல்லையில்லை நம்ம நினைப்பாதான் இருப்பாக.” என்று தன் உரிமையை அந்த நொடியிலும் விட்டுக் கொடுக்காமல் கண்மூடி அழுத்தமாக கூறினாள் பூங்கோதை.

       அதற்கு மேல் தாங்க முடியாமல், கயல் அறைக்கு வெளியே வந்து சுவரில் சாய்ந்து கண்ணீர் வடித்தாள்.

              “பூங்கோதையை பார்க்க வந்துட்டு, இப்படி அழுதா என்ன அர்த்தம்?” என்று அப்பொழுது வீட்டிற்குள் நுழைந்த செல்லமா கேட்க, அவள் பின்னோடு வந்த கதிரேசனும், வள்ளியும் அதே கேள்வியோடு  அவளைப் பார்த்தனர்.

    “என்னால முடியலை. ஏன் பூங்கோதைக்கு மட்டும் இத்தனை கஷ்டம்? அவ அழுது தொலைச்சிட்டா கூட பாரவல்லை. எனக்கு அவளை பார்க்கவே பயமா இருக்கு.” என்று தோழிக்காகக் கண்ணீர் வடித்தாள் கயல்.

   “கயல், நீ எவ்வளவு தைரியமான பொண்ணு. நீ தானே உன் தோழிக்கு தைரியம் கொடுக்கணும்?” என்று கதிரேசன் கேள்வியாக நிறுத்த தன் கண்களைத் துடைத்துக் கொண்டு மேலும் கீழும் தலை அசைத்தாள் கயல்.

     “அவளை காலேஜூக்கு போக சொல்லணும்…” என்று கயல் தயக்கத்தோடு இழுக்க, “நானும் அதே தான் நினச்சேன்.” என்று வள்ளி முன்னே வந்தாள்.

       “இப்பவா?” என்று செல்லமா சிந்திக்க, “இவ்வுளவு நாள் பூங்கோதை காலேஜுக்கு போய்கிட்டு தானே இருந்தா?” என்று வள்ளி கேட்க, கதிரேசன் தன் மனைவிக்கு ஆமோதிப்பாகத் தலை அசைத்தான்.

    செல்லமா மேலும் சிந்திக்க, அவர்கள் குடும்ப விஷயத்தில் அதிகம் மூக்கை நுழைக்க முடியாத காரணத்தினால், கயல் அவர்களைத் தடுமாற்றத்தோடு பார்த்துக் கொண்டிருந்தாள்.

     முத்தமா ஆச்சியும், பார்வதி ஆச்சியும் அவர்கள் வாழ்வைப் பறி கொடுத்தது போல் அமர்ந்திருந்தனர்.

     அனைவரும் உள்ளே செல்ல, “பூங்கோதை! காலேஜ் போறியா?” என்று கதிரேசன் கேட்க ஒரு நொடி அவனை ஆழமாகப் பார்த்தாள் பூங்கோதை.

          “போகணும் அத்தான். போகலைன்னா, அவுக வந்ததும் என்னை வைவாக.” என்று பூங்கோதை கூற, அனைவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.

     ‘இவள் நம்பிக்கையை என்னவென்று சொல்வது?’ என்ற கேள்வியே அனைவரின் மனதிலும்.

                       “பூங்கோதை… நீ நம்ம வீட்டுக்கு வந்திரு. அங்க இருந்து காலேஜ் போ.” என்று செல்லமா அங்கு நிலவிய மௌனத்தை உடைக்க, ‘இது அக்கறையா? இல்லை கரிசனாம?’ என்ற கேள்வி கயல் மனதில் எழுந்தது.

    ‘எது எப்படியோ? இது நல்லதுக்கு.’ என்ற எண்ணத்தோடு கயல் பூங்கோதையை பார்த்தாள்.

               சில நொடிகள் சிந்தித்தபின், “இல்லை அத்தை… நான் இங்கனயே…” என்று பூங்கோதை இழுத்தாள்.

    “என் மகனால், அங்கயும் இங்கயும் அலைய முடியாது.” என்று செல்லம்மா கண்டிப்போடு கூற, அவர் கண்டிப்பு சிறியவர்களைப் பாதித்தாலும், ‘பூங்கோதை அவர்கள் வீட்டில் இருப்பது, இந்நேரம் அதிக பாதுகாப்பு.’ என்ற எண்ணம் தோன்ற அனைவரும் மெளனமாக பூங்கோதையை பார்த்தனர்.

    பூங்கோதை வேறு வழியின்றி சம்மதமாகத் தலை அசைத்தாள்.

அதே நேரம் இந்தியப் பாகிஸ்தான் எல்லையில்.

                    அவர்கள் உரையாடல் ஹிந்தியில் தொடர்ந்து கொண்டிருந்தது.

    “நமக்கு தேவையான ரகசியத்தை வாங்கிட்டு, இவனைச் சுட்டுப் பொசுக்க வேண்டியது தானே?” என்று குறுந்தாடி மனிதன் துப்பாக்கியைத் தரையில் அழுத்திக் கூற, அந்த சிறிய அறைக்குள் இருந்த மற்றொருவன் அவன் பேச்சுக்குத் தலை அசைத்தான்.

       நெற்றியிலிருந்து ரத்தம் வழிய வழியத் தலையைத் தொங்கப் போட்டுக்கொண்டு மூச்சு வாங்கிக் கொண்டு அவர்களைக் கண்களைச் சுருக்கி உறுதியாகப் பார்த்தான் திலக்.

      அவன் கால்களும், கைகளும் கட்டப்பட்டிருந்தன.

                          “என் நாட்டின் மீது ஆணை. நீ நினைக்கிறது ஒரு நாளும் நடக்காது. பாரத மாதா கி ஜெ! ” என்று மூச்சு வாங்கிக் கொண்டு திலக் கர்ஜித்து அவன் தேச பக்தியை வெளிக்காட்டினான்.

  அந்த நெட்டை மனிதன் திலகை கால்களால் எட்டி உதைத்தான்.

               திலக் பின் பக்கமாகச் சரிந்து சுவரோடு சாய்ந்தான். “ஜெய்ஹிந்த்… ஜெய்ஹிந்த்… ஜெய்ஹிந்த்…” திலக்கின் உதடுகள் முணுமுணுத்துக் கொண்டே இருந்தன.

திலக்கின் உறுதியை அவன் தனக்கு தானே வலியுறுத்திக் கொண்டிருந்தான்.

“நீ இங்க இருந்து உயிரோட போக முடியாது. இந்திய நாட்டை பொறுத்தவரை நீ செத்துட்ட. நீ நிம்மதியா சாக வேண்டியவன் தான். உன் துரதிஷ்டம், எங்க அதிர்ஷ்டம் எங்க கிட்ட சிக்கிட்ட.” என்று குறுந்தாடி மனிதன் திலக்கை துப்பாக்கி முனையில் மிரட்டினான்.

                   ‘பியூட்டி… என் பியூட்டியின் அதிர்ஷ்டம்.’ என்று அந்த துப்பாக்கி முனையிலும் உறுதியாக நம்பினான் திலக்.

   ‘விதி, என் பியூட்டியை சோதிக்காது.’ திலக்கின் மனம் உறுதியாக நம்பியது.

   “நாங்க கேட்குற கேள்விக்கு பதில் சொல்லு.” என்று அங்கிருந்த நெட்டை மனிதன் அவனைச் சுவரோடு இறுக்க, திலக் அவர்களை அசட்டையாகப் பார்த்தபடி மௌனித்தான்.

                    “நீ அமைதியா இருந்தா, உன்னை விட்டுடுவோமுன்னு நினைக்காத. நீ ஆயுசுக்கும் இங்க தான் இருக்கனும்.” என்று நெட்டை மனிதன் கூற, “என்கிட்டே இருந்து உங்களால் எதுவும் வாங்க முடியாது. என்னால, எதாவது நடக்கணுமுன்னு நினச்சா, நான் உயிரோட இருக்கிறதை எங்க நாட்டுக்கு சொல்லுங்க. உங்களுக்கு எதாவது பிரயோஜனம் இருக்கும். இல்லை இங்கயே என்னை கொன்னுடுங்க. உங்களுக்கு ரொம்ப நல்லது.” என்று திலக் நிதானமாக கூறினான்.

திலக் சாதுரியமாக அவர்களோடான பேச்சைத் தவிர்க்க, திலக்கின் பேச்சில் கடுப்பாகி அவனை உள்ளே அடைத்துவிட்டு அவர்கள் வெளியே சென்றனர்.

                    அங்கு ஒரு கூட்டம் கூடியதற்கான அறிகுறியாகக் காலடி ஓசை கேட்க, திலக் அவன் செவிகளைக் கூர்மையாக்கினான்.

சிறிய அறையை ஒட்டிய அடுத்த அறையில் பேசியதை திலக்கால் தெளிவாகக் கேட்க முடிந்தது.

                    “இவனால் ஒரு பிரயோஜனம் இல்லை. இவனை கொன்னுடுவோம்.” என்று ஒருவன் கூற, மறுப்பாகத் தலை அசைத்தான் அவர்கள் கூட்டத்தின் தலைவன்.

        “இவன் ரோந்து பணியில் இல்லாமல், நம்மிடம் சிக்கியது நம் அதிர்ஷ்டம். இவன் இறந்துவிட்டது போல், இவன் பொருட்களை சம்பவ இடத்தில் தூக்கி எறிந்தது நம் சமயோஜித புத்தி. அது எல்லாத்தயும், இவனை கொன்னு நாசமாக்கணுமா? அவனை பேச வைக்கணும்.” என்று அந்த கூட்ட தலைவன் கர்ஜித்தான்.

              “அவன் பேசலைனா?” என்று ஒற்றை கண்ணோடு இருந்த ஒருவன் கேட்க, “இவனை வைத்து நமக்கு தேவையானதை சாதிக்கணும்.” என்று கிசுகிசுப்பான குரலில் கூறினான் அவர்கள் தலைவன்.

    கடைசியாகப் பேசியதைக் கேட்க முடியாமல், திலக் முகத்தைச் சுழித்தான்.

                 கூட்டம் முடிந்தது என்பது போல் அவர்கள் கலைந்து செல்வது அவர்கள் காலடி ஓசையில் கணித்துக் கொண்டான் திலக். அறைக்குள் நடக்க முடிவது போல் பிணைக்கப்பட்டிருந்தான் திலக்.

    திலக் அவன் அறையில் ஜன்னல் வழியாக வெளியே பார்த்தான். அங்கு சில பெண்கள் நடந்து சென்றனர். அவர்களோடு சில மணிகளின் ஓசையும்.

   மணியின் ஓசையில், “பியூட்டி… பியூட்டி…” என்று அவன் உதடுகள் முணுமுணுத்தன.

                 சுவரோடு சாய்ந்து அமர்ந்தான் திலக்.

    கீழே இருந்த மண் தரையில்  பூங்கோதையின் உருவத்தை விரலால் வரைந்தான்.

             அவள் உருவத்தை வரி வடிமாக தீண்டினான்.

     திலக்கின் விரல்கள் அவள் இடையை நெருங்க, அவன் கண்களில் கண்ணீர் வழிந்தது.

                                “எப்படி இருக்க பியூட்டி?” என்று அவன் கண்மூடி சாய, பூங்கோதை அவன் அருகே தோன்றினாள்.

     ‘மிலிட்டரி நீ இருக்கும் பொழுது என் சௌக்கியத்துக்கு என்ன குறைச்சல்?’ என்று பூங்கோதை வழக்கமாகக் கூறுவது இன்றும் அவன் காதில் எதிரொலித்தது.

      திலக் அவன் வரைந்த வரிவடிவத்தோடு பேச ஆரம்பித்தான்.

    “உனக்காகத்தான் நான் உயிரோட இருக்கேன் பியூட்டி. வருவேன்… உனக்காக உன்னை பார்க்க நான் வருவேன் பியூட்டி.” என்று தன் கண்ணீரை இமை சிமிட்டி மறைத்துக் கொண்டான்.

         “நீ தைரியமா இருக்கனும் பியூட்டி. என் பியூட்டி தைரியமா இருப்பா… நான் வருவேன்னு நம்பிக்கையோடு இருப்பா.” என்று உறுதியாகக் கூறிக்கொண்டு ஜன்னல் வழியாகப் பார்த்தான் திலக்.

    அவர்கள் திலக்கை சித்திரவதை படுத்தியததற்கு சான்றாக இரத்தம் வடிந்து கொண்டிருந்த காயங்கள். அந்த வலியைத் தாண்டி திலக்கின் மனதில் ஓர் உறுதி தெரிந்தது.

              ஜன்னல் வழியாக அவன் பார்த்த இயற்கைக் காட்சியில் அவன் முகத்தில் மெல்லிய புன்னகை தோன்றியது. திலக்கின் மனதில் பூங்கோதை மட்டுமே அமர்ந்திருந்தாள்.

       பூங்கோதையின் பேச்சு… பூங்கோதையின் தீண்டல்… பூங்கோதையின் கோபம்… அவர்களின் நாட்களை அசைபோட்டபடி கண்மூடி ரசித்தான் திலக்.

               ஜன்னல் வழியாகத் தென்றல் திலக்கை  தீண்ட, அவனுக்கு இதே சூழ்நிலையில் அமைக்கப்பட்ட பாடல் அவன் காதில் எதிரொலிக்க ஆரம்பித்தது.

‘தென்றல் என்னை தீண்டினால் சேலை தீண்டும் ஞாபகம்…’

திலக்கின் கனவுலகில், ‘மிலிட்டரி…’ என்று அழைத்துக் கொண்டு அவனை நெருங்கினாள் பூங்கோதை. பியூட்டியின் புடவை வாசம் அவனை மயக்கத்தில் ஆழ்த்தியது.

‘சின்ன பூக்கள் பார்க்கையில் தேகம் பார்த்த ஞாபகம்…’

       திலக் அடைக்கப்பட்டிருந்த இடத்தில் பூத்துக் குலுங்கிய வண்ண வண்ண பூக்களும் அவள் மென்மையான தேகத்தையே நினைவு படுத்தியது. காற்றோடு கலந்து அவனை நெருங்கிய, பூங்கோதையை இறுக அணைத்துக் கொண்டான் திலக். அவள் ஸ்பரிசம், அவனுள் சொல்ல முடியாத உற்சாகத்தை கொடுத்தது.

‘மேகம் ரெண்டு சேர்கையில் மோகம் கொண்ட ஞாபகம்…’

     பரந்து விரிந்து காணப்பட்ட வானம், அதில் மேகம் ஒன்றொன்றும் ஒன்று துரத்த, தன் கைவளைவிலிருந்து வெட்கப்பட்டு விலகி ஓடும் பூங்கோதையை மேலும் மேலும் மனதில் அவன் கண்கள் அவன் கைகள் அவன் மனம் என அனைத்து பூங்கோதையை தேட, “பியூட்டி… பியுட்டி…” என்று மனதோடு பேசினான்.

‘வாயில்லாமல் போனால் வார்த்தையில்லை பெண்ணே

நீயில்லாமல் போனால் வாழ்க்கையில்லை கண்ணே

முள்ளோடு தான் முத்தங்களா சொல் சொல்…’

காற்றோடும், மனதோடும் மட்டுமே இருந்த பூங்கோதை அவன் அருகில் இல்லாததை உணர்த்த,  அந்த ஜன்னல் கம்பியை அழுந்த பிடித்துக் கொண்டு சுயநினைவுக்குத் திரும்பினான் திலக்.

    ‘நான் உன்னை பார்க்க வந்துவிடுவேன்.’ என்று அவன் எண்ண ஓட்டம் உறுதியாகச் சிந்திக்க ஆரம்பித்து, ‘ஆனால்?’ என்று அவனுக்கு மட்டுமே தெரிந்த சந்தேகங்களோடு  நின்றது.

வா அருகே வா வரும்…

error: Content is protected !!