UUP–EPI 8

அத்தியாயம் 8

 

இன்சுலின்(Insulin) எனும் ஹார்மோன் நமது கணையத்தில்(பன்கிரியஸ்) இருந்து வெளிவருகிறது. இன்சுலின் நமது தசைகள், கல்லீரல் போன்றவைகளில் இருக்கும் செல்கள் ரத்தத்தில் இருக்கும் குளுகோஸ்சை எடுத்துக் கொள்ள உதவுகிறது. இந்த குளுகோஸ்தான் நம் உடலின் சக்தியாக மாறுகிறது. இன்சுலின் சுரப்பது குறையும் போது தான் நீரிழிவு நோய் வருகிறது.

 

அன்று

“ஏ விடுடி சம்மு! அவன விடு”

பெருமாளின் தலை முடியைக் கொத்தாகப் பிடித்து ஆட்டிக் கொண்டிருந்த சண்முவை பிடித்து இழுத்தான் கதிர்.

பதினான்கு வயதில் பெருமாள் மற்றும் கதிரை விட நெடுநெடுவென வளர்ந்திருந்தாள் சண்மு.

“இன்னிக்கு இவன் மண்டையப் பொளந்து உள்ள மூளைன்னு ஒரு வஸ்து இருக்கான்னு பார்க்காம விடமாட்டேன்டா கதிரு!”

இன்னும் ஆங்காரமாய் பெருமாளின் தலை முடியைப் பிடித்து இழுத்தாள் சண்மு. வலியில் கத்திய பெருமாள்,

“விடுடி என் முடிய! வலிக்குது விடுடி எருமை” என சொல்லியபடியே பலம் கொண்ட மட்டும் தம் கட்டி சண்முவைக் கீழே தள்ளிவிட்டான்.

தன் தோழி மண் தரையில் விழுந்ததைப் பார்த்ததும் கதிருக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது.

“ஏன்டா அவள கீழ புடுச்சு தள்ளுன? ஒரு பொம்பள புள்ள கிட்ட எப்படி நடந்துக்கறதுன்னு தெரியாது உனக்கு? சாவுடா!” என எகிறியவன் பெருமாளைக் கீழே தள்ளி அவன் மேல் ஏறி முகத்திலேயே அறைய ஆரம்பித்தான்.

அடிப்பவனைத் தடுத்துக் கொண்டே,

“அவ பொம்பள புள்ளையாடா? பாவாடை போட்ட பேய்டா அவ! அவ எதுக்குடா தேமேன்னு போனவன் முடியப் புடிச்சு இழுத்து அடிக்கிறா?” என கத்தினான்.

“சம்மு காரணம் இல்லாம கை நீட்டிருக்க மாட்டா! அதெல்லாம் அவ விட்டு ரெண்டு வருஷம் ஆச்சு! அவ கை நீட்டினா என் கிட்ட வந்து சொல்லு! நான் என்னன்னு கேக்கறேன்! அத விட்டுட்டு ஏன்டா கீழ தள்ளி விட்ட! இனிமே அவ மேல கை வைப்ப, கை வைப்ப?” என கேட்டு கேட்டு அறைந்தான் கதிர்.

“உன் சம்மு, கும்மு என்னை அடிச்சா நானும் திருப்பி அடிப்பேன்டா! நான் பெருமாள்டா! பெரியவங்க சொன்னா பெருமாள் சொன்ன மாதிரிடா என் டுபுக்கு! நான் சொன்னா பெரியவங்களே கேப்பாங்க! உன் சம்மு என்னடா சுண்டைக்காய்” என சொல்லியவன் கதிரை புரட்டிப் போட்டு இவன் அடிக்க ஆரம்பித்திருந்தான்.

எழுந்து நின்று, கதிர் அடிப்பதை வேடிக்கைப் பார்த்த சண்மு, இப்பொழுது தன் நண்பன் அடி வாங்கவும் இவளும் களத்தில் இறங்கினாள். சண்முவும் கதிரும் பெருமாளைப் புரட்டி எடுக்க நெற்றியில் காயம் பட்டு அவனுக்கு ரத்தம் வழிந்தது.

“கதிரு விடுடா! ரத்தம் வருது”

முதலில் சண்மு தான் சண்டையை நிறுத்தினாள். தோழி தடுத்து நிறுத்தவும் தான் ரத்தத்தைக் கவனித்தான் கதிர்.

கோபத்துடன் எழுந்து நின்ற பெருமாள்,

“ரத்தக் காயம் பண்ணிட்டீங்கல்ல! இந்த பெருமாள சாய்ச்சுப்புட்டிங்கல்ல! உங்க ரெண்டு பேரையும் கதற கதற அழ வைக்கல, என் பேரு பட்டாப்பட்டி பெருமாளு இல்லடா!” என சபதம் எடுத்தவன் தன் தகப்பனைத் தேடிப் போனான்.

டாஸ்மாக்கில் ஃபுல் ஒன்று ஏத்திவிட்டு ஊறுகாயை நக்கியப்படி பரமுவிடம் பேசிக் கொண்டிருந்தார் பெருமாளின் தகப்பன். பேச்சின் ஊடே அங்கே பாட்டுக் கச்சேரி வேறு அரங்கேறிக் கொண்டிருந்தது. பெருமாளின் அப்பா மேசையை மத்தளமாக்கித் தட்ட, பரமு தன் இனிமையான குரலால் பாடி வந்திருந்த குடிமக்களை மகிழ்வித்துக் கொண்டிருந்தார்.

“ஞான் விட்டேலிஞ்சேன் ஜல்லிய

ஏழ்த்திக்கிட்டேன் மில்லிய

குதிலை மேல ஏழி போயி

வாங்க போலேன் தில்லிய

நம்ம ஜிங்காரி ஜரக்கு…”

சுதி ஏற ஏற பரமுவுக்கு சுருதியும் ஏறியது. அமர்ந்திருந்தவர்கள் மேசையைத் தட்டி உற்சாகப்படுத்த, இன்னும் சிலர் எழுந்து ஆட என அந்த இடமே கோலாகலமாக இருந்தது. எல்லாமே பெருமாள் கதறிக் கொண்டு வரும் வரைதான்.

“யப்பா! அந்த சண்மு என் மேல கைய வச்சிட்டாப்பா! அவ கூட சேந்து அந்த கதிரும் என்னை அடிச்சிட்டான்பா”

“ஓடிப் போனவன் பெத்து வுட்ட கிரகம் புடிச்சவ, எவ்வளவு கொழுப்பு இருந்தா என் மவன் மேல கைய வச்சிருப்பா. இன்னிக்கு வீடு பூந்து அவள தூக்கிப் போட்டு மிதிக்கறேன் பாரு” என பெருமாள் அப்பா முழங்க, அடுத்த நொடி அவர் வாயில் இருந்து குபு குபுவென ரத்தம் கொட்டியது.

கையைத் தேய்த்து விட்டுக் கொண்டே பரமு,

“என் மம்மவள மீச்சிருவியா நீயீ! கொன்ட்ருவேன் பாழ்த்துக்கோ. லாஜாத்திடா அவ, என் லாஜாத்தி!” என ஆவேசமாக நின்றிருந்தார்.

அதற்கு பிறகு என்ன, அங்கே நட்பு புட்டுக் கொண்டது. மேசை நாற்காலி பறக்க கையும் காலும் சண்டையிட்டுக் கொண்டது. சற்று முன் சிரிப்பில் குலுங்கிய இடம் ரணகளமாகி நலுங்கிப் போனது,

“எத்தனை தடைவைடி சொல்லறது கை நீட்டாதன்னு! என் கிட்ட சொன்னா நான் பாத்துக்க மாட்டேனா? என்ன பிரச்சனை இப்போ அந்தப் பெருமாள் கூட? அதுவும் முடியப் புடிச்சு அடிக்கற அளவு?” பெருமாள் போனதும் தன் தோழியைக் கடிந்துக் கொண்டான் கதிர்.

“நான் முன்னைக்கு எவ்வளவோ அடக்கமா இருக்கேன்னு உனக்குத் தெரியும் தானே கதிரு? ஆனா அதுக்கும் ஒரு எல்லை இருக்குடா! நீ தானே நம்ம பக்கம் நியாயம் இருந்தா அச்சமென்பது இல்லையேன்னு சொல்லிருக்க!”

“அடியே, அத நான் சொல்லலடி! பாரதியார் சொல்லியிருக்கார்.”

“பாரதி சொன்னத நான் பார்க்கல! என் நண்பன் கதிரு சொன்னத தான் பார்த்தேன், கேட்டேன்! அதனால என்னைப் பொருத்த வரைக்கும் அத சொன்னது நீதான்”

“சரி அத விடு! பெருமாள் மேட்டருக்கு வா சம்மு”

“கண்ணன அடிச்சிட்டான்டா அவன்! தம்பி கையில வச்சிருந்த மாங்காயப் புடுங்கிக்கிட்டானாம். புடுங்கி தின்னானே அப்படியே போக வேண்டித்தானே! உங்கக்காவ அடிக்க முடியல, அதுக்கு பதிலு உன்னையாச்சும் அடிச்சுக்கறேன்னு சொல்லி அடிச்சிட்டுப் போயிருக்கான் அந்த பெருமாளு!” சொல்லும் போதே அவளுக்கு கண் கலங்கியது.

தன் தோழிக்கு தம்பி மேல் உள்ள அளப்பரிய பாசத்தை அறியாதவனா கதிர்!

“இத ஏன் நீ முன்னயே சொல்லல! இன்னும் நாலு சாத்து சாத்திருப்பேன் அவன”

“இந்தக் கண்ணன் ஏன்டா இப்படி இருக்கான் கதிரு! யார பார்த்தாலும் பயப்படறான்! எதிர்த்து நின்னு பேச மாட்டறான். என் பாவாடையப் புடிச்சுட்டே இன்னும் சுத்துறான். எல்லாப் பசங்களும் அவன சீண்டறதும், அவன் சாப்பாட புடுங்கிக்கிறதும்னு தொல்லைக் குடுக்கறாங்க. இவன் ஏன்டா கதிரு உன்ன மாதிரி ஸ்ட்ராங்கா நிக்காம, பயந்து சாகறான்? சீக்காளியா இருக்கானேன்னு நானும் அம்மாவும் ரொம்ப செல்லம் குடுத்துட்டமோ? இல்ல,பொம்பளைங்க கூட வளரறதுனால அவனும் மென்மையா ஆகிட்டானோ!” குழம்பித் தவித்தாள் சண்மு.

“இப்போத்தானே அவனுக்கு பத்து வயசு சம்மு! நம்மா கண்ணா போக போக சரியாகிருவான்டி!”

“நெஜமாவாடா?”

“நெஜமாடி! ஆனா சம்மு, நீ சொன்னதுல ஒன்னு சரியில்ல தெரியுமா?”

“என்ன சரியில்ல கதிரு?”

“உன்னைப் பார்த்து தம்பியும் மென்மையா இருக்கான்னு சொன்னியே, அது அண்டப்புளுகு ஆகாசப் புளுகுடி!”

ஒற்றைப் புருவத்தைத் தூக்கி அவனைப் பார்த்தவள்,

“என்ன சொன்னீங்க கதிரு சார்?” என கேட்டாள்.

லேசாக தள்ளி நின்றுக் கொண்டவன்.

“சம்முவுக்கு மென்மை, கண்மைலாம் தெரியாது. அவளுக்குத் தெரிஞ்சது எல்லாம் கருமை, வன்மை, எருமை! அவ்ளோதான்!” என சொல்லியவன் மெல்ல மெல்ல பின்னால் நகர்ந்துக் கொண்டே,

“திடீர்னு ஒரு கவிதை தோணுது சொல்லவா சம்மு?” என கேட்டான்.

ஏற்கனவே அவளை வன்மை எருமை என சொன்னதில் கடுப்பாக இருந்தவள்,

“சொல்லு!!! சொல்லித்தான் பாரு” என்றாள்.

“மரத்துல தாவுதாம் குரங்கு

சம்முக்கு இருக்குதாம் சிரங்கு!!!” என சொல்லியபடியே மெல்ல ஓட்டமெடுத்தான்.

அவன் பின்னால் ஓடியபடியே,

“டேய் கதிரு! சொறிலாம் நல்லா போச்சுடா எனக்கு! இப்போலாம் சொறியறதே இல்லன்னு உனக்குத்தான் தெரியுமே!” என கேட்டப்படியே அவனைப் பிடிக்கத் துரத்தினாள்.

“எப்படி பைத்தியம் தன்னை ஒரு பைத்தியம்னு ஒத்துக்காதோ, அதே மாதிரி சொறித்தியமும் தன்னை சொறிப் புடிச்சவன்னு ஒத்துக்காது”

அவன் ஓட்டத்தின் வேகம் அதிகரித்திருந்தது.

“சொறித்தியம்னு ஒரு வார்த்தை இருக்காடா?” என கேட்டவளின் ஓட்டத்தின் வேகமும் அதிகரித்தது.

“உனக்காகவே அகராதில புதுசா சேர்த்துருக்காங்கடி சம்மு”

“அத அகராதி புடிச்ச நீ சொல்லக்கூடாதுடா” என அவன் பின்னால் அடிக்கத் துரத்தியவளின் சிரிப்பொலி கதிரின் சிரிப்போடு கலந்தொலித்தது. நீ ஆண், நீ பெண் என இரு வீட்டு அம்மாக்களும் அவர்கள் பழகுவதற்கு தடைப் போட்டிருந்தாலும், இவர்களின் நட்பு கள்ளம் கபடம் இல்லாமல் தொடர்ந்துக் கொண்டுத்தான் இருந்தது.

 

இன்று

ஒரு வாரமாக கதிரைக் கண்ணால் கூட காணவில்லை சண்மு. டிபார்ட்மெண்ட் விஷயமாக சென்னை சென்றுள்ளான் என சிவா போனில் பேசும் போது ஏதேச்சையாக கேட்டிருந்தாள் அவள்.

வேலையோ தலைக்கு மேல் இருந்தது சண்முவுக்கு. சிறு வயதில் இருந்தே தோட்ட வேலையில் பழக்கம் இருந்தாலும், ஆஸ்திரேலியாவில் இதைப்பற்றி நேரடியாக அறிந்திருந்தாள். அங்கு வீட்டுப் பக்கமாக இருந்த ஒரு நர்சரியில் வேலைப் பார்த்திருக்கிறாள். அதோடு பொக்கே செய்வதற்கான தனிப்பயிற்சியும் பெற்றிருந்தாள் சண்மு.

கதிரின் தலையீட்டால் கட்டட வேலை அதி வேகமாக நடந்தது. இன்னும் இரு வாரங்களில் கடையைத் திறந்து வியாபாரத்தையும் ஆரம்பித்துவிடலாம் என திட்டமிட்டிருந்தாள். அதற்காக திறப்பு விழா கார்டையும், கடை முன் வைக்க வேண்டிய பெயர் பலகையையும் தானாகவே டிசைன் செய்ய முனைந்தாள். கட்டிட இடத்தில் தூசியும் மண்ணாகவும் இருக்க, நாற்காலி கொண்டு வந்து நர்சரி உள்ளேயே அமர்ந்துக் கொண்டாள்.

சாருமதி புதிதாக வாங்கி இருந்த பூச்செடிகளை சூரிய ஒளி படும்படி வரிசையாக கண்ணுக்கு நேர்த்தியாக அடுக்கிக் கொண்டிருக்க, நடு வயது பெண்ணான மேகலை பெத்துனியா என அழைக்கப்படும் பூச்செடி விதைகளை குட்டியான ஜாடிகளில் விதைத்துக் கொண்டிருந்தார். பல வண்ணங்களில் இருக்கும் இந்த மலரைத் தொங்குவது போல் வீட்டுத் தோட்டத்தில் அல்லது வராண்டாவில் வைத்தால் அழகாக இருக்கும். வளர்த்து விற்பதற்காக தான் அந்த விதைகளைத் தேடி வாங்கி இருந்தாள் சண்மு.

இருவரும் வேலை செய்வதை கவனித்தவள், அவர்களே சமாளிப்பார்கள் என தோன்றவும் லாப்டாப்பில் டிசைனிங் வேலையை ஆரம்பித்தாள். ஏற்கனவே கடைக்குப் பெயர் தேர்ந்தெடுத்திருந்தாள் அவள். “கடம்பூவனம்”(எதுக்கு இந்தப் பேர்னு கெஸ் பண்ணி சொல்லுங்க டியர்ஸ்) என்பதே அவள் தேடிப்பிடித்திருந்த பெயர். ப்ரோஷர்ஸ், அழைப்பிதழ், பெயர் பதாகை போன்றவற்றை டிசைன் செய்தவள், பெண்களிடம் சொல்லிவிட்டு இவற்றை ப்ரிண்ட் செய்யும் கடையைத் தேடிப் போனாள்.

மூன்று வருடங்களில் ஜெயங்கொண்டான் பல மாற்றங்களைக் கண்டிருந்தது. கடையைக் கண்டுப்பிடித்து உள்ளே நுழைந்தவள், ஆணி அடித்தது போல நின்றாள்.

“பெருமாளு!”

“யாரு?” என சண்முவை உற்றுப் பார்த்தவனின் முகம் ஏளன சிரிப்பைத் தத்தெடுத்தது.

“வாங்க, வாங்க சம்மு மேடம்! எப்படி இருக்கீங்க? நம்ம ஊருக்கே திரும்பி வந்துட்டீங்கன்னு கேள்விப் பட்டேன். வந்து கண்டுக்கனும்னு நினைச்சேன். அதுக்குள்ள நீங்களே வந்துட்டீங்களே என்னைத் தேடி” வார்த்தை ஒவ்வொன்றும் நக்கலில் குளித்து வந்தது.

“சம்முன்னு கூப்புடாதேன்னு சொல்லிருக்கேன்!”

“ஓ ஆமால்ல! சம்முன்னு அந்தப் பெரிய மனுஷர் தானே கூப்புட முடியும். எங்களையெல்லாம் தள்ளில நிறுத்துவீங்க சண்மு மேடம்! சம்மு என் பொம்முன்னு பின்னாலேயே சுத்திட்டு இருந்தவனுக்கு சூப் குடுத்தல்ல, அதான்டி இப்ப யாரும் இல்லாம நிக்கற. ஆனாலும் இன்னும் அதே அழகோடதான்டி இருக்க”

கோபத்தை முயன்று அடக்கியவள், கடையில் இருந்து வெளியேற முனைந்தாள்.

“புருஷனும் விட்டுட்டான், கதிரும் வேற ஆள் தேடிட்டான். இனியாச்சும் என்னை கொஞ்சம் நெனைச்சுப் பார்க்கலாம்ல சண்மு!”

பட்டென திரும்பிப் பார்த்து முறைத்தாள் சண்மு.

“என்னடி பார்க்கற? நானும் வீடு வாசல், கடை கண்ணின்னு நல்லாதான் இருக்கேன். என்ன, வீட்டுல ஒரு பொண்டாட்டி இருக்கா! இருந்துட்டுப் போகட்டுமே! அது வேற ரூட்டு, நீ வேற ரூட்டு! ரெண்டையும் அழகாக மேயின்டேன் பண்ணுவான் இந்தப் பெருமாளு” என சொல்லியவன் கடகடவென சிரித்தான்.

அவன் சிரித்து முடிக்கும் வரை காத்திருந்தவள்,

“அந்த வயசுல லவ் லேட்டர் குடுத்தப்ப, செருப்ப சாணில முக்கி அடிச்சதெல்லாம் மறந்துப் போச்சுன்னு நினைக்கறேன் பெருமாள் சார்! கொஞ்சம் ஞாபகம் படுத்தி பாருங்க! இல்லைன்னா உங்க பொண்டாட்டி முன்னுக்கே வந்து நான் ஞாபகப்படுத்த வேண்டி வரும். வீட்டம்மா ரொம்ப டெரர் பீசாம்மே! பிஞ்சி உடம்பு பிஞ்சிறபோது! வரட்டா” என கெத்தாக கேட்டவள், அவன் கெட்ட வார்த்தைகளில் அர்ச்சனையை ஆரம்பிக்க காது கேளாதது போல வெளியே வந்துவிட்டாள்.

முகத்தைக் கல் போல வைத்திருந்தாலும், உள்ளே கோபம் கனன்று கொண்டிருந்தது சண்முவுக்கு. கொண்டவனைப் பிரிந்து வந்தால் கண்டவனுக்கெல்லாம் கொண்டாட்டமாகிப் போகிறதே என மனம் ஊமையாய் அழுதது.

அவளது தாரக மந்திரத்தை மனதில் பல முறை உச்சரித்து மனதை அமைதியாக்க முனைந்தாள் சண்மு.

“துச்சமாக எண்ணி நம்மைச் தூறுசெய்த போதினும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே”

போன வேலையை முடித்துக் கொண்டு அவள் நர்சரிக்கு வந்தப் போது மாலை ஆகியிருந்தது. இரு பெண்களும் அவளிடம் விடைப் பெற்றுப் கொண்டு வெளியேற, ரேடியோவை ஓடவிட்டவள், மாலையில் மட்டும் நீர் பாய்ச்ச வேண்டிய செடிகளுக்கு நீர் விட ஆரம்பித்தாள்.

“தேவைப்பட்ட தண்ணி மட்டும் குடிங்க கண்ணுகளா! ரொம்ப குடிச்சாலும் உங்களுக்கு உடம்பு முடியாம போயிரும். அப்புறம் அம்மாவுக்குத்தான் மனசு கவலையா இருக்கும். நான் வீட்டுக்குப் போனதும், நைட் பத்திரமா தூங்கி ஓய்வெடுக்கனும். சரியா? காலையில வந்து எழுப்பி விடறேன். இப்போ எல்லாரும் அம்மாவுக்கு பாய் சொல்லுங்க” என பேசியபடியே திரும்பியவள், பின்னால் நின்றிருந்த உருவத்தின் மேல் மோதிக் கொண்டாள்.

வாட்டரிங் கேனுடன் தடுமாறி நின்றவளை பிடித்து நிறுத்தினான் கதிர்.

“பார்த்து, விழுந்துறாதே” என்றவன் அவளைப் பிடித்திருந்தப் பிடியை மட்டும் விடவில்லை.

“விடுங்க ஏசிபி சார்” என விலக முனைந்தாள் சண்மு.

இவன் விலகி, அவளை விலக்கத்தான் முனைந்தான்! ஆனால் முடியவில்லை. சண்முவின் தோளைப் பற்றி இருந்த கைகள் மெல்ல அவளை இறுக்கி அணைத்துக் கொண்டது.

“விடுங்க சார், விடுங்க”

“ஷ்ஷ்ஷ், சண்மு! நான் தான்டி”

“இல்ல வேணா, விடு, விடு” அவன் அணைப்பில் இருந்து வெளியாகப் போராடினாள் சண்மு. அவள் கையில் இருந்த வாட்டெரிங் கேன் கீழே விழுந்து தரையில் நீர் கொட்டியது. ஆனாலும் அவன் பிடி தளரவில்லை.

“சம்மு!”

அந்த அழைப்பில் மெல்ல தொய்ந்தாள் சண்மு. கண்கள் கலங்க,

“வேணான்டா கதிரு! விட்டுருடா” என மெல்ல முனங்கினாள்.

“விட முடியலையேடி! நான் என்ன செய்ய?” குரல் கரகரத்தது கதிருக்கு. எவ்வளவு நேரம் அப்படி நின்றார்களோ இருவரும்!

“வேல்!” எனும் குரல் இருவரையும் தரை இறக்கியது.

சண்மு கூனிக் குறுக, கதிர் உடல் விரைத்தான்.

 

(உயிர் போகும்….)