UUP–EPI 9

அத்தியாயம் 9

 

மெலெடெனின்(melatonin) எனும் ஹார்மோன் தான் நமக்கு தூக்கம் வரவைக்கும் ஹார்மோனாகும். இந்த ஹார்மோன் உடலை ரிலெக்‌ஷாக வைத்து உடலில் உஷ்ணத்தையும் குறைத்து நல்ல தூக்கம் வர உதவுகிறது. தூக்கம் வராமல் தவிப்பவர்களுக்கு மெலெடெனின் சப்ளிமெண்டரி கொடுப்பார்கள் டாக்டர்கள்.

 

அன்று

“யக்கா! இந்த மீனாட்சி மவளப் பாத்தியா? என்னம்மா ஜொலி ஜொலிக்கிறா! நம்ம ஊருல எவளும் இவள மாதிரி இம்புட்டு அழகு இல்லைக்கா”

“அடி போடி கூறு கெட்டவளே! பதினாறு வயசுல பன்னி கூட பளீருன்னுதான்டி இருக்கும். நல்லா எருமை கணக்கா மதமதன்னு வளந்து கிடக்கா, அவளப் பார்த்து அழகு, மொளகுன்னுகிட்டு. வாய்ல நல்லா வந்துரும் எனக்கு!”

தறி வேலை செய்யும் பெண்கள், தங்களுடன் அமர்ந்துப் பேசிக் கொண்டிருந்த பார்வதியின் வாயைப் பிடுங்கி வம்பு வளர்த்துக் கொண்டிருந்தனர்.

“என்னவோ போக்கா! நீதான் அவள கரிச்சுக் கொட்டுற! உன் புருஷன் என் மருமவ, என் ராஜாத்தின்னு ஊரெல்லாம் சொல்லிட்டுத் திரியறாரு”

“அந்தக் குடிகாரன் பேச்செல்லாம் விடிஞ்சா போச்சுடி! என் மவன் ராஜாதி ராஜா! அவனுக்கு போயும் போயும் இந்தப் பிச்சைக்காரியையா கட்டி வைப்பேன்? பிச்சைக்காரியா இருந்தாலும் பரவாயில்லன்னு விட்டறலாம்! அதுவே ஒரு மானங் கெட்டக் குடும்பம். அப்பன்காரன் சின்ன பொண்ணுக் கூட ஓடிப் போயிட்டான். அவனுக்குப் பொறந்தவளை என் மருமகளாக்கிக்க நான் என்ன கேணைச்சியா? இந்த ஊருல எங்களுக்குன்னு மானம் இருக்கு மருவாதை இருக்கு! நான் உசுரோட இருக்கற வரைக்கும் இதெல்லாம் ஒரு நாளும் நடக்காதுடி!” வெகுண்டார் பார்வதி.

தங்களைப் போல அடிமட்டக் குடும்பத்தில் இருந்து வந்து, பெரிய வீட்டு மருமகள் ஆனதும் பார்வதி காட்டும் பந்தாவில் நொந்திருந்த வேலை செய்யும் பெண்களுக்கு இந்த விஷயத்தில் அவரின் கோபத்தைக் கிளறி குளிர் காய்வதில் அலாதி இன்பம். அதில் இன்னொரு பெண்,

“எனக்கென்னவோ அந்த சண்முதான் உன் வீட்டு மருமகளாகி உன் சிண்டு மயிர புடிச்சு ஆட்டுவான்னு தோணுதுக்கா! என் நாக்கு கரி நாக்குக்கா! நான் சொன்னா கண்டிப்பா பலிக்கும் பாரேன்!” என வம்பிழுக்க, பொங்கி எழுந்து விட்டார் பரமுவின் பாழு.

கொண்டையை அவிழ்த்து மீண்டும் முடிந்தவர்,

“தோ பாருடி! என் வீட்டு விஷயத்துல குறி சொல்லுற அந்த கரி நாக்க இழுத்து வைச்சி அறுத்துப்புடுவேன் அறுத்து! தாலாட்டி, பாராட்டி, சீராட்டி நான் ஒத்தப் புள்ளய வளத்து வைக்க, நோகாம அந்த சிறுக்கி(சாரி மக்களே! இந்த வார்த்தை இங்க வந்துதான் ஆகனும்! கோவிச்சுக்காதீங்க ப்ளிஸ்) வந்து லவட்டிக்கிட்டுப் போயிருவாளாம்ல! சொன்ன இந்தக் கரி நாக்குக்காரியையும் கிழிச்சி தோரணம் கட்டுவேன். அதையும் மீறி என் வீட்டுக்குள்ள காலடி எடுத்து வச்சா, அந்த சண்முவையும் ஆஞ்சிப்புடுவேன் ஆஞ்சி! பார்வதிடி!!!! அந்த சிவனையே ஆட்டிப் படைச்ச பார்வதி!” என ஆவேசமாகக் கத்த, அதற்கு மேல் வாயைத் திறக்க அங்கே வேலை செய்பவர்களுக்குப் பைத்தியமா என்ன!

பள்ளி இடைவெளியின் போது எல்லோரும் சாப்பிட சென்றிருக்க, ஜாடை காட்டி கதிரை கிளாசிலேயே இருக்க சொன்னாள் சண்மு. செகண்டரி ஸ்கூலில் இருவரும் தனித்து தான் அமர்கிறார்கள். பெண்கள் ஒரு வரிசையிலும் ஆண்கள் ஒரு வரிசையிலும் அமர்ந்தாலும், மற்ற நேரங்களில் கதிரும் சண்முவும் இன்னும் ஒன்றாகத்தான் திரிந்தார்கள்.

“என்னடி சம்மு? ஏன் வேய்ட் பண்ண சொன்ன? சாப்பிட போலாம்டி, பசிக்குது”

“இருடா கதிரு! உன் கிட்ட ஒரு மேட்டர் சொல்லனும்!”

“சரி சொல்லு! என்ன விஷயம்?”

“அது வந்து..” தயங்கினாள் சண்மு.

“என்னடி? என்னாச்சு? பொட்டிக் கடைக்குப் போய் கறுப்பு பையில அது வாங்கிட்டு வரனுமா?”

“ஒரு தடவை அவசரத் தேவைக்கு உன் கிட்ட ஹெல்ப் கேட்டுட்டேன்! அதுல இருந்து இதை ஒன்ன புடிச்சுட்டுத் தொங்கு! அதெல்லாம் என் கிட்டயே இருக்கு. இது வேற!”

“இல்ல தயங்கனியே! அதான் அந்த மேட்டரோன்னு நினைச்சுட்டேன்.”

“என் பேக்ல யாரோ கிரீட்டிங் கார்ட் வச்சிருக்காங்கடா கதிரு”

“கிரீட்டிங் கார்ட்டா? தீபாவளி வாழ்த்தா இருக்குமோ?”

“உன் தலை! தீபாவளி கார்ட்டு மேலத்தான் ஹார்ட் உட்டுருப்பாங்களா?”

“ஓ!!! அப்ப லவ் சொல்ற கார்டா? எவன்டி உனக்கு கார்ட் குடுத்தான் சொல்லு! இப்பவே போய் பொளந்துக் கட்டிருறேன்” எகிற ஆரம்பித்தான் கதிர். அவனை அடக்கி வைப்பதற்குள் போதும் போதுமென்றாகி விட்டது சண்முவுக்கு.

“இருடா டேய்! உன் கிட்ட காட்டி படிக்கலாம்னு இன்னும் பிரிச்சுக் கூட பார்க்கல” என்றவள் பேக்கில் இருந்து அந்த கார்டை கதிரிடம் நீட்டினாள்.

வாசமாக இருக்க, அதை கையில் வாங்கி முகர்ந்துப் பார்த்தான் கதிர்.

“ரோஸ் வாட்டர் வாசம்டி!”

“ரொம்ப முக்கியம் இப்போ! முதல்ல பிரிச்சுப் படிடா”

கார்டை கவரில் இருந்து எடுக்க, ரோஜா ஒன்று கீழே விழுந்தது.

“டி சம்மு! ரோஸ் வாட்டர் தெளிச்ச கார்டுல ரோஸ்சும் வைச்சிருக்கான்டி அந்தப் பரதேசி பய!” என்றவன் ரோஜா பூங்கொத்துப் படம் போட்டிருந்த அந்தக் கார்டைப் பிரித்துப் படித்தான்.

“நேற்று வரை நெஞ்சினில் யாருமில்லை

இன்று முதல் இதயம் துடிக்கவில்லை

உனைக் காணும் வரை காதல் தெரியவில்லை

கண்ட பின்பு கண்ணில் தூக்கமில்லை”

இரு முறை கவிதையைப் படித்துக் காட்ட சொன்னாள் சண்மு, பின்,

“கதிரு ஒவ்வொரு வரியாப் படி. இத எங்கயோ கேட்ட மாதிரியே இருக்குடா” என கேட்க அவனும் ஒவ்வொரு வரியாகப் படித்தான்.

“நேற்று வரை நெஞ்சினில் யாருமில்லை”

“பொய் சொல்லாதே!”

“இன்று முதல் இதயம் துடிக்கவில்லை”

“பொய் சொல்லாதே!”

“உனைக் காணும் வரை காதல் தெரியவில்லை”

“பொய் சொல்லாதே!”

“கண்ட பின்பு கண்ணில் தூக்கமில்லை”

“பொய் சொல்லாதே!”

“சம்மு இது ஜனவரி நிலவே நலம்தானா பாட்டுடி! நீ பொய் சொல்லாதேன்னு பாடவும் தான் தெரியுது!“ என கோபம் போய் சிரிப்பு வர வயிற்றைப் பிடித்துக் கொண்டு சிரித்தான் கதிர்.

“பாட்டு வரியைத் திருடி எனக்கு லவ் லெட்டர் எழுதுன அந்தப் பக்கிப் பேரு என்னன்னு பாருடா! இன்னிக்கு ஒரு தரமான சம்பவம் இருக்கு!” கடுப்புடன் கேட்டாள் சண்மு.

“பேரு குடுக்கலடி! ஆனா விடுகதைப் போட்டுருக்கான்”

“என்னவாம்?”

“பூஜையிலும் இருப்பேன், பூச்சியாகவும் இருப்பேன்!”

“என்னாது பூச்சியா இருப்பானா?”

“பேசாம இருடி கொஞ்ச நேரம்! நான் யோசிக்கறேன்” என்ற கதிர் நெற்றியைத் தட்டி தட்டி யோசித்தான்.

“பூஜை, பூச்சி, பூச்சி, பூஜை, பூஜை, பூச்சி”

“கண்டுப் புடிச்சியாடா கதிரு?”

“இருடி! பூச்சி, பூஜை!!!! ஆங்ங்! கண்டுப்புடிச்சுட்டேன்”

“யாரு, யாரு! சொல்லுடா!”

“பெருமாளு! பெருமாளுக்குத்தான் பூஜை செய்வாங்க! பெருமாள் பூச்சின்னு ஒரு வெட்டுக்கிளியும் இருக்குடி சம்மு”

“அப்படியா சங்கதி! அதான் ஐயா இப்போலாம் என்னைப் பார்த்து இளிச்சு வைக்கிறாரோ! அடிக்கடி நாம எங்கப் போனாலும் கண்ணுல படறானேன்னு யோசிச்சேன்டா கதிரு!”

“உன்னப் பார்த்தாலே மூக்கப் பொத்திட்டு ஓடுவான் அந்தப் பெருமாளு! இப்ப என்னடி பொசுக்குன்னு லவ் லெட்டர் குடுத்துட்டான்! அவன கொல்லனும் மாதிரி எனக்கு வெறியே வருதுடி சம்மு! ஏன்னே தெரியல!”

“கொல்லலாம் வேணாம்டா! இன்னிக்கு அவன தனியா புடிக்கறோம், அடி வெளுக்கறோம்”

“டன்” என்றவன் நன்றாக சண்முவை உற்றுப் பார்த்தான்.

“என்னடா பார்க்கற?”

“இல்லடி சம்மு! திடீர்னு லவ் லெட்டர் குடுத்துருக்கானே, எதப் பார்த்து அவனுக்கு லவ் வந்துச்சுன்னு பார்க்கறேன்!” என சொன்னவன் தோழன்  எனும் பார்வையை விலக்கி ஆண் எனும் கண் கொண்டு முதன் முதலாக தன் சண்முவைப் பார்த்தான்.

“என்னடா கதிரு?”

“நெஜமாவே ரொம்ப அழகாத்தான் இருக்கடி சம்மு!!!”

அன்று மாலை கதிர்,

“என் சம்முவுக்கே நீ லவ் லெட்டர் குடுக்கிறீயா!! எவ்ளோ திமிர்டா பூச்சி பெருமாளு” என பெருமாளை புரட்டி எடுக்க, அருகில் நின்று கதிருக்கு சப்போர்ட் செய்தாள் சண்மு.

கதிர், பெருமாள் பிரச்சனை தாஸ்மாக் வரை போக,

“உம் மவேன் மொகரைகட்டைக்கு எம் மம்மவ கேக்குதா! இன்னா திமிழு இழுந்தா என் லாஜாத்திக்கு லோஜா வச்சி கார்டு போட்டுருப்பான் உன் நாதாலி மவேன்” என பரமு ஆவேசமாகி பெருமாள் அப்பாவின் சட்டையைக் கிழிக்க, அவர் இவர் வேட்டியைக் கிழிக்க என்ன ஒரே சண்டையாகிப் போனது.

அதில் ஹைலைட்டே, கிழிந்த வேட்டியைப் பார்த்து பரமு பாடிய

“ஜட்டை கிழிஞ்சிழுந்தா தெச்சி முழிச்சிடலாம்

வேட்டி கிழிஞ்கிருச்சே எங்கே முழையிடலாம்”

எனும் பாட்டுதான்.

 

இன்று

 

உடல் களைத்துப் போய் கிடந்தது சண்முவுக்கு. உணவை விட படுத்துக் கொள்ள ஒரு பாய் இருந்தால் போதும் என்பது போல ஓய்வுக்கு கெஞ்சியது உடம்பு. உடல் உழைப்போடு சேர்ந்து மனமும் ஓவர்டைம் வேலைப் பார்ப்பதுதான் இந்தக் களைப்புக்குக் காரணம்.

ஒரு முறை நர்சரியை சுற்றி எல்லாம் சரியாக இருக்கிறதா எனப் பார்த்தவள், வீட்டுக்குக் கிளம்பி விட்டாள். அவளுக்கென வாங்கி இருந்த சுவிப்ட் செகண்ட் ஹேண்ட் காரில் ஏறி அமர்ந்தவள், மிக லாவகமாக காரை செலுத்தினாள்.

சண்மு வீட்டினுள்ளே நுழையும் போதே பேச்சு சத்தம் கேட்டது. யாராக இருக்கும் என்ற யோசனையுடன் உள்ளே நுழைந்தாள் அவள். மீனாட்சியுடன் வரவேற்பறையில் அமர்ந்துப் பேசிக் கொண்டிருந்த தவமங்கையப் பார்த்ததும் அதிர்ந்தவள், சட்டென புன்னகையை முகத்தில் பூசிக் கொண்டாள். இவளைப் பார்த்ததும் மலர்ந்து புன்னகைத்தாள் மங்கை.

“உன்னைப் பார்க்கனும்னு வந்திருக்கா கதிரு பொண்டாட்டி! காபி கூட வேணாம், நீ வந்ததும் குடிச்சிக்கறேன்னு உட்கார்ந்துருக்காடி சண்மு. அப்படியே கதிருக்கேத்த மாதிரியே குணம்!” என சிரித்த முகத்துடன் அறிவித்தார் மீனாட்சி.

தவமங்கையை நோக்கி,

“இருங்க மங்கை, நான் ஓடிப் போய் குளிச்சிட்டு வந்துரறேன்! மண்ணுலயே வேர்க்க விறுவிறுக்க நிக்கறது ஒரே கசகசன்னு இருக்கு” என்ற சண்மு தனது ரூமுக்குள் புகுந்துக் கொண்டாள்.

தவமங்கை முன் சிரித்த முகமாய் காட்டிக் கொண்டவள், ரூமில் நுழைந்தவுடன் படபடவென துடித்த நெஞ்சைத் நீவி விட்டுக் கொண்டாள்.

‘இப்போ எதுக்கு இங்க வந்துருக்கா? அன்னிக்கு நான் சொன்னத நம்பலயா? கடவுளே! என்னால என் கதிரு வாழ்க்கைல எந்தப் பிரச்சனையும் வரக்கூடாதுப்பா! அவனாச்சும் சந்தோஷமா பொண்டாட்டி புள்ளைங்கன்னு இருக்கனும்ப்பா முருகா’ என மனதினுள்ளேயே ஒரு வேண்டுதலை வைத்தவள், துண்டுடன் குளியலறையில் நுழைந்தாள்.

ஷவரின் அடியில் நின்றவளுக்கு அன்று நடந்த காட்சி கண் முன் விரிந்தது. இன்னும் கூட கதிர் அணைத்த இடம் தகிப்பது போல இருக்க, ஹீட்டரை அடைத்து விட்டு, குளிர் நீரின் கீழ் நின்றாள் சண்மு.

“விட முடியலையேடி! நான் என்ன செய்ய?”

கொளுகொளுவென இருந்தவள் இப்பொழுது இளைத்துக் கொடியிடையாய் இருக்க, போலிஸ் வேலைக்கு ஏற்ப திடகாத்திரமாய் இருந்தவன் அணைப்பில் சிக்குண்டுத் தவித்துப் போனாள் சண்மு. பின்னால் இருந்து பார்ப்பவர்களுக்கு கதிரின் பரந்த தோள் மட்டுமே தெரியும்.

“வேல்!”

சண்முவின் அருகாமையில் உருகி நின்றிருந்த கதிர் சட்டென விரைத்தான். அவனுள்ளே அடங்கி இருந்த சண்மு நடுக்கத்துடன் நிமிர்ந்து யார் என உதடசைத்துக் கேட்டாள்.

“தவா!” என இவனும் வாய் அசைத்து சொன்னான்.

“நான் எத சொன்னாலும் வாய திறக்கக் கூடாது நீ! புரியுதா கதிரு?” தன்னை சட்டென மீட்டுக் கொள்வதில் பீஎச்டி வைத்திருந்த சண்மு நிலைமையைக் கையில் எடுத்துக் கொண்டாள்.

அவளை ஆழ்ந்துப் பார்த்தவன், ஆமெனவோ முடியாது எனவோ ஒன்றும் சொல்லாமல் அமைதியாக நின்றான்.

அவன் அணைப்பில் இருந்து விலகியவள் சிரிப்பை உதட்டில் ஒட்டி வைத்துக் கொண்டு தவமங்கையைப் பார்த்தாள்.

கதிரின் முன் புறமாய் வெகு நெருக்கத்தில் இருந்து வெளி வந்த சண்முவை அதிர்ச்சியாகப் பார்த்தாள் தவமங்கை.

“என்ன அப்படி பார்க்கறீங்க? தப்பா ஒன்னும் நினைச்சுக்காதீங்க! நான் செடிக்கு தண்ணி ஊத்திட்டு திரும்பறப்போ அப்படியே மயக்கம் அடிச்சிருச்சு! லோ பீ.பீ இருக்குங்க எனக்கு! அந்த சமயம் பார்த்து கடையைப் பத்தி பேச வந்த கதிர் சார் பாஞ்சு வந்து காப்பாத்திட்டாரு! பாருங்க நான் கையில வச்சிருந்த வட்டர் கேன் கூட கீழ விழுந்து தண்ணிலாம் கொட்டிக் கிடக்கு! இது தாங்க நடந்துச்சு. வேற ஒன்னும் இல்லங்க” என சொல்லியவள் வேண்டுமென்றே தள்ளாடினாள். சட்டென்று கதிர் அவள் தோளைப் பிடித்துத் தாங்கிக் கொள்ள, தானும் பதறி அருகில் வந்தாள் தவமங்கை.

மங்கை அறியாமல் கதிரின் கையைக் கிள்ளியவள், டேய் பக்கி விடுடா என்னை என்பது போல கண் ஜாடைக் காட்டினாள். அவள் சொல்ல வந்தது புரிந்தாலும் அவளைத் தாங்கிக் கொள்வது போல பிடியை விடாமல் நின்றான் கதிர். இந்த கண் ஜாடையெல்லாம் சண்முவின் இன்னொரு புறம் வந்த மங்கை கைப்போட்டு சண்முவின் தோளைப் பிடித்துக் கொள்ளும் கேப்பில் நடந்தது. சண்முவைப் பிடிக்கும் போது மங்கையின் கை தன் மீது உரச சட்டென சண்முவின் தோளில் இருந்து கையை விலக்கிக் கொண்டான் கதிர்.

சண்முவை மெல்ல நடத்தி அங்கிருந்த நாற்காலியில் அமர்த்தினாள் மங்கை.

“வேல், என்ன அப்படியே நிக்கறீங்க! அந்த வாட்டர் பாட்டிலை எடுங்க” என கதிரை ஏவினாள் மங்கை.

கதிர் பாட்டிலை எடுத்துக் கொடுக்க, அந்த நீரால் சண்முவின் முகத்தைக் கழுவி விட்டாள் மங்கை. அப்படியே கொஞ்சம் குடிக்கவும் அவளுக்குத் தண்ணீர் கொடுத்தாள். மெல்ல தண்ணீரை உறிந்துக் குடித்த சண்மு,கதிரை பார்த்தும் பார்க்காதது போல பார்க்க அவனோ வேறு புறம் பார்த்துக் கொண்டிருந்தான்.

“இப்ப எப்படி இருக்குங்க?” என கேட்டாள் மங்கை.

“கொஞ்சம் ப்ரெஸ்சா இருக்குங்க. ரொம்ப நன்றி! பை தே வே என் பேரு..” என சொல்ல வந்தவளை இடைமறித்து பதில் அளித்தான் கதிர்.

“தவா, நான் சொல்லியிருக்கேனே சம்மு, மை பேஸ்டின்னு அது இவதான். முழு பேரு சண்முகப்ரியா! நிச்சயத்தப்போ அறிமுகப்படுத்த சான்ஸ் கிடைக்கல” என்றவன்,

“சண்மு, மீட் தவமங்கை” என இருவருக்கும் முறையாக அறிமுகப்படுத்தி வைத்தான்.

பெண்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துப் புன்னகைத்துக் கொண்டனர்.

“நீ எங்க இங்க தவா?” என கேட்டான் கதிர்.

“அத்த தான் போன் செஞ்சு கூப்டாங்க வேல். அவங்களோட நகைலாம் எனக்குத்தான் குடுக்கப் போறாங்களாமே, அப்படியே எடுத்துக்கறியா இல்ல மாத்தி என் டேஸ்ட்டுக்கு எதாவது செய்யலாமன்னு கேட்க கூப்டாங்களாம். அதப்பத்தி நீங்க என்ன நினைக்கறீங்க வேல்?”

“நகையைப்பத்தி எனக்கு என்ன தெரியும்!”

“சாருக்கு நகையைப் பத்தி ஒன்னும் தெரியாது! ஆன புகையைப் பத்தி ஓரளவு தெரியும்” என அவன் கட்டிப்பிடித்ததில் கோபத்தில் இருந்த சண்மு கதிரை மாட்டிவிட்டாள்.

“புகையா?”என மங்கை கேட்க,

“ஆமாம், புகைதான்! பதினாறு வயசுல உங்க வேல் நல்லா இழுத்து இழுத்துப் புகை விடுவாரு! அதை நான் போட்டுக் குடுக்க, உங்க அத்தை படையல் போட்டுட்டாங்க! அன்னிக்கி விட்டவரு தான். நான் பார்த்து ரொம்ப நாள் ஆச்சே, இப்ப அடிக்கிறாரா தம்மு?” என மங்கையைக் கேட்டாள்.

“அதெல்லாம் விட்டது விட்டதுதான். ஒரு விஷயத்தைத் தவிர மத்ததெல்லாம் சீச்சீன்னு ஒரு தடவை விட்டுட்டா மறுபடி தொடவே மாட்டேன்” என பதிலளித்த கதிர் சண்முவை ஆழ்ந்து நோக்கினான்.

“அது என்ன அந்த ஒரு விஷயம்?” என கேட்டாள் மங்கை.

என்ன சொல்லப் போகிறானோ என சண்மு பயத்துடன் பார்க்க,

“வீக்கேண்ட் தங்கிட்டுப் போறியா தவா? இல்ல இன்னிக்கே கிளம்பறியா?” என கேட்டு கதையை மாற்றி விட்டான் கதிர்.

“அத்தை தங்கிட்டுப் போக சொல்லறாங்க வேல்! அம்மாவும் வந்திருக்காங்க. வீட்டுல அத்தைக் கூட பேசிட்டு இருக்காங்க. சின்ராசு தான் நீங்க இங்க வந்துருக்கீங்கன்னு சொன்னான். அதான் அப்படியே உங்க கூட ஜாலியா வெளிய டின்னர் சாப்பிட்டுப் போகலாம்னு வந்தேன்”

“சரி போகலாம்!” என்றவன், சண்முவைத் திரும்பிப் பார்த்து,

“நீயும் எங்க கூட சாப்பிட வா” என அழைத்தான்.

“இல்ல! நீங்க ரெண்டு பேரும் ஜோடியா போய் சாப்பிடுங்க! நான் எதுக்கு நடுவுல நந்தியா” என சிரித்து வைத்தாள் சண்மு.

“அப்படிலாம் சொல்லாதீங்க! நீங்களும் வந்தா வேலோட சின்ன வயசு விஷயங்கள் எல்லாம் சொல்லுவீங்க! ஜாலியா போகும் டைம். இவர் இருக்காறே, பேசறதுக்கு கூலி கேப்பாரு! நிச்சயம் ஆகி இத்தனை நாளுல, நானேதான் மேசேஜ் போடறேன். நாலு வார்த்தை கேட்டா ஒத்தை வார்த்தையில பதில் வரும். ரொம்ப ஷை டைப்”

‘யாரு நீயாடா ஷை????’ என மனதிற்குள் நினைத்தவள் மங்கை கவனிக்காதவாறு கதிரை முறைத்து வைத்தாள்.

சண்மு கண்களை உருட்டி முறைக்க, முகத்தை எந்த உணர்ச்சியும் காட்டாமல் வைத்திருந்தவன் கண்கள் மட்டும் அவளைப் பார்த்து சிரித்தது.

அன்று மூவரும் ஒரே டேபிளில் அமர்ந்து இரவு உணவு உண்டார்கள். இரு பெண்களுக்கும் பறிமாறி விட்டே தனக்கு உணவு எடுத்துக் கொண்டான் கதிர். பேசிக் கொள்ளாமலே கதிருக்கு வேண்டியதை உணவு பாத்திரத்தை சண்முவும், சண்முவுக்கு வேண்டியதை கதிரும் நகர்த்தி வைத்துக் கொள்வதை ஆச்சரியத்துடன் பார்த்த மங்கை, அதை வாய்விட்டுக் கேட்கவும் செய்தாள்.

“அது வந்து.. சின்ன பிள்ளைல இருந்தே சேர்ந்து சாப்பிட்ட பழக்கம்ங்க. அவ்வளவுதான்” என சொன்னாள் சண்மு. அதன் பிறகு தான் உண்டு தன் உணவு உண்டு என இருந்துக் கொண்டாள் அவள்.

பெண்கள் இருவர் மட்டும் பொதுவாக பேசி சிரித்துக் கொள்ள, அவர்கள் பேச்சில் கலந்துக் கொள்ளாமல் அமைதியாகவே இருந்தான் கதிர்.

சாப்பிட்டு முடித்து பில் பே செய்யும் போது, சண்மு தன் பர்சை திறக்கவும் மங்கை அங்கிருப்பதைக் கூட மறந்து ருத்ர மூர்த்தியானான் கதிர்.

“அப்போ இருந்தே உனக்கு நான் தான் சாப்பாடு குடுத்துருக்கேன்! இப்பவும் சாப்பாடு குடுக்கற அளவுக்கு நல்லாத்தான் சம்பாரிக்கறேன்! உன்னோட ஆஸ்திரேலியா காசு இங்க யாருக்கும் தேவையில்ல. மேடம் பர்சை உள்ள வைக்கலாம்” என்றவன் பில்லைத் தானே போய் கட்டிவிட்டு வந்தான்.

கதிரின் கோபத்தில் மிரண்டு போய் நின்ற மங்கையை சண்முதான் தேற்றினாள்.

“பயப்படாதீங்க மங்கை! கதிர் சாருக்கு சட்டுன்னு கோபம் வராது! வந்துட்டா இப்படித்தான் மூக்கு விடைச்சுக்கும்! கோபம் வந்த மாதிரியே பட்டுன்னு ஓடியும் போயிரும்! அவனாவே வந்து சமாதானம் பண்ணுவான். இதெல்லாம் உங்க வருங்கால வாழ்க்கையில நீங்கப் பார்க்கத்தானே போறீங்க! என் நண்பன் ரொம்ப நல்லவன்” என நண்பனில் அழுத்தம் கொடுத்தாள் சண்மு.

இரவாகி விட சண்மு தனியாக போக வேண்டாம் என ,தன் காரை அங்கேயே விட்டு விட்டு, சண்முவின் காரிலேயே மங்கையையும் அழைத்துக் கொண்டு வீடு நோக்கிப் பயணப்பட்டான் கதிர்.

“பாத்தியா கோபம் போயிருச்சு! அவன் கிட்ட பயப்படாதே மங்கை! வெளியதான் முரடு, ஆனா ரொம்ப மென்மையானவன் என் நண்பன்” என மெல்லிய குரலில் மீண்டும் நண்பனை அழுத்தி சொன்னாள் சண்மு.

பெண்கள் இருவரும் முன்னே அமர்ந்து வர, பின் சீட்டில் அமர்ந்து சண்மு கார் ஓட்டும் அழகையேப் பார்த்தப்படி வந்தான் கதிர்.

அந்த கட்டிப்பிடி சம்பவந்த்திற்குப் பிறகு கதிர் சண்முவின் கண்ணிலேயே படவில்லை. இன்று மங்கை வந்து நிற்கிறாள். அவசரமாக துவட்டி, நைட்டி ஒன்றை அணிந்துக் கொண்டு வந்தாள் சண்மு.

காபி ரெடி செய்து வைத்திருந்தார் மீனாட்சி. கப்பை மங்கைக்கு கொடுத்தவள்,

“குடிங்க மங்கை” என்றாள்.

“உங்க கப்பையும் எடுத்துக்குங்க! உங்க ரூம் பார்க்கலாமா?” என கேட்டாள் மங்கை.

“வாங்க, வாங்க! அலங்கோலமா கிடக்கும்! அத மைண்ட் பண்ணிக்கலனா தாராளமா வாங்க” என தன் அறைக்கு அழைத்துப் போனாள். உள்ளே நுழைந்த மங்கை காபி கப்பை ஒரு கையில் பிடித்துக் கொண்டு, மறு கையால் கதவை சாத்தினாள்.

ஆச்சரியமாக சண்மு பார்க்க,

“உங்க கிட்ட ஒன்னு கேக்கனும்” என நேர்ப்பார்வைப் பார்த்தாள் மங்கை.

“கேளுங்க மங்கை”

“என் வேல் உங்கள லவ் பண்ணறாரா?”

அந்தக் கேள்வியில் சண்முவின் கை நடுங்க, கையில் இருந்த காபி கப்பும் மெல்ல ஆடியது.

 

(உயிர் போகும்….)