UUP–Epilogue

எபிலாக்

இரண்டு வருடம் கழித்து…

கதிருக்கு நிச்சயதார்த்தம் நடந்த அதே மண்டபம், இன்றும் விழாக்கோலம் பூண்டிருந்தது. பலூன் மற்றும் அழகிய பூக்களால் மாயலோகமாய் காட்சியளித்த அந்த மண்டபம் டிஸ்கோ லைட்டால் மினுக் மினுக்கென மின்னியது.

உள்ளே வந்துக் கொண்டிருந்தவர்களை ஒரு பக்கம் மீனாட்சியும் இன்னொரு பக்கம் பார்வதியும் வரவேற்றுக் கொண்டிருந்தனர். அவ்வப்பொழுது ஒருத்தரை ஒருத்தர் முறைத்துக் கொள்ள தவறவில்லை இருவரும். வட கொரியாவும் தென் கொரியாவும் இணைந்தால் கூட இவர்கள் இருவரும் இந்த ஜென்மத்தில் இணையமாட்டார்கள்.

வெள்ளை வேட்டி பச்சை கலர் சட்டையுடன் அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருந்தார் பரமு. சாப்பாட்டு ஐட்டங்கள் சரியாக அடுக்கப்பட்டிருக்கிறதா, வந்தவர்களுக்கு காபி டீ சரியாக வழங்கப்படுகிறதா என கவனிப்பதில் பிசியாக இருந்தார் அவர். ஆர்டர் செய்திருந்த இரண்டு கேக்குகளும் வந்து இறங்க, தவமங்கை அதை அழகாக டேபிளில் அடுக்கி வைக்க முனைந்தாள்.

“மாமா, எல்லாம் ரெடி! உங்க மகன் எங்க, கூப்புடுங்க! அவர் வந்து எல்லாம் ஓகேவான்னு சொல்லட்டும்” என மங்கை பரமுவிடம் சொல்ல,

“அந்த மகராசி சேலை கட்டி விட கூப்டுருப்பா! இவனும் குடுகுடுன்னு ஓடிருப்பான்!” மெல்லிய குரலில் முனகினார் பார்வதி.

“எங்க பொண்ணுக்கு சேலைலாம் நல்லாத்தான் கட்ட வரும்! இவங்க மகனுக்கு பொண்டாட்டிக்கு தானே கட்டிவிடனும்னு ஆசைன்னா அவளும் என்னதான் செய்வா!” என மீனாட்சி பதிலாய் முணுமுணுத்தார்.

இங்கே மாமியார்கள் இருவரும் கடுப்பில் இருக்க, புருஷனும் பொண்டாட்டியும் மண்டபத்தில் இருந்த ஒரு அறையில் தங்கள் பிள்ளைகளோடு மல்லுக் கட்டிக் கொண்டிருந்தார்கள்.

“ரெண்டு பேரும் உன்ன மாதிரியே ரப் அண்ட் டப்பா இருக்கானுங்க! கொஞ்சமாச்சும் அப்பன மாதிரி சாப்ட் நேச்சர் இருக்கா!” என சொல்லியபடியே கட்டிலை சுற்றி ஓடிக் கொண்டிருந்த சண்முகவேலனைப் பிடித்து பாம்பேர்ஸ் போட போராடினான் கதிர்.

“யாரு நீ சாப்ட் நேச்சரா? நீ அடாவடியா பண்ண அட்டகாசத்துக்குத்தான் ரெண்டும் அறந்தவாலா பொறந்துருக்குங்க!” என கதிரைத் திட்டியபடியே கதிர்காமனுக்கு பவுடரை போட முயன்று கொண்டிருந்தாள் சண்மு.

சண்முகவேலன் மற்றும் கதிர்காமன் இவர்கள் இணைந்து ஆசை ஆசையாய் வாழ்ந்த வாழ்க்கைக்கு கடவுள் பரிசளித்த இரட்டையர்கள். பிரிந்திருந்த குடும்பங்களை இணைத்த பாலம் இவர்கள் இருவரும்.

மகள் வாயும் வயிறுமாய் இருக்கிறாள் என்பதை கேள்விப்பட்டு தன்னோடு அழைத்துக் கொள்ள வந்த மீனாட்சியை,

“யாரு மருமகள யாரு கூட்டிட்டுப் போறது! மகளே வேணான்னு சாபம் விட்டுட்டுப் போனவங்க எல்லாம் குழந்தை வர போகுதுன்னு சொந்தம் கொண்டாடிட்டு வர வேணாம்” என சிலிர்த்துக் கொண்டு நின்றார் பார்வதி.

“என் மவள ஆள் மயக்கின்னு திட்டனவங்க எல்லாம், பேரப்புள்ளன்னு வந்ததும் மருமகள் என் திருமகள்னு பல்டி அடிக்கறது எல்லாம் கேக்கவே சகிக்கல” என மீனாட்சி எகிறினார்.

இந்த சண்டை எல்லாம் நர்சரியில் கதிர், சண்மு முன் தான் அரங்கேறியது.

“லெண்டு பேரும் ஓரமா போய் ஜண்டை போடுங்க! என் மம்மவள நானே லாஜாத்தியா பார்த்துப்பேன். பொறக்கப் போறது என் பேழன்” என தள்ளாடியபடி வந்து நின்றார் பரமு.

ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர் சண்முவும் கதிரும். இதற்கு முன் இருந்தே இரண்டு பெண்மணிகளும் கொஞ்சம் கொஞ்சமாக நெருங்கி வர முயன்றுக் கொண்டுதான் இருந்தார்கள். அவர்கள் இருவருக்கும் இவர்களையும் விட்டால் வேறு யார் இருக்கிறார்கள்! மீனாட்சி எதாவது பலகாரம் செய்து பரமுவிடம் கொடுத்தனுப்பினால் பார்வதி சாப்பாடு செய்து சின்ராசுவிடம் கொடுத்தனுப்புவார். சண்மு சென்னைக்கு சென்றிருக்கும் வாரத்தில் இரு பெண்மணிகளும் கடம்பூவனத்தை மேற்பார்வை பார்க்கிறேன் பேர்வழி என ஒருத்தரை ஒருத்தர் முறைத்தப்படி சுற்றிக் கொண்டிருப்பார்கள்.

கோபத்தை மறந்து வரும் பெரியவர்களை தங்களது மனஸ்தாபத்தை மறந்து ஏற்றுக் கொண்டனர் கணவன் மனைவி இருவரும். ஒரு மாதம் பார்வதி சண்முவை அதை சாப்பிடு இதை சாப்பிடு என படுத்தி வைக்க, மறுமாதம் அந்த வேலையை மீனாட்சி எடுத்துக் கொள்வார். இவள் எங்கே இருக்கிறாளோ அங்கே ஜாகையை அவ்வப்பொழுது மாற்றிக் கொள்வான் லீவுக்கு வரும் கதிர். அவனுக்கு இன்னும் இந்த டிஸ்ட்ரிக்குக்கு மாற்றல் கிடைத்தப்பாடில்லை. மூன்று வருடம் பிரிந்து இருந்தவனால், மூன்று நாள் சண்முவைப் பிரிந்து தனியாக இருப்பது கூட மூச்சு முட்டுவது போல இருந்தது. சண்முவுக்குப் போன் போட்டு அவளை மிஸ் யூடி என சொல்லி சொல்லியே ஒரு வழி செய்து விடுவான்.

ஒருத்தரை ஒருத்தர் காலை வாரியபடியே தங்கள் செல்வங்களின் ஒரு வயது பிறந்த நாளுக்கு பிள்ளைகளை கிளப்பி விட்டனர் சண்முவும் கதிரும். திருமணம் பெரிதாக நடக்கவில்லை, ஆகையால் குழந்தைகளின் பிறந்த நாளையாவது கிராண்டாக செய்து தனது ஆசையைத் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்பது பார்வதியின் ஆசை. கதிரும் சண்முவும் சரியென ஒத்துக் கொண்டனர்.

கதவைத் திறந்து பரமுவை அழைத்தான் கதிர். ஸ்டேடியாக நடந்து வந்த தன் தகப்பனை புன்னகையுடன் பார்த்திருந்தான் மகன். பேரப்பிள்ளைகள் வந்ததில் இருந்து பரமு பகலில் சரக்கடிப்பதில்லை. பிள்ளைகளுடன் நேரத்தைப் போக்குபவர், இரவில் அவர்கள் தூங்கியதும் மூச்சு முட்ட குடித்து, பார்வதியை வம்பிழுத்து விட்டு குப்புறப் படுத்துத் தூங்கி விடுவார்.

“அப்பா, இவனுங்கள புடிங்க! அம்மாகிட்டயும் அத்தைக்கிட்டயும் குடுத்துப் பார்க்க சொல்லுங்க! நாங்க கிளம்பிட்டு வந்துடறோம்” என சொல்லி இருவரையும் கொடுக்க,

“த்தா! த்தா!” என அழைத்துக் கொண்டே தாவினர் குட்டிகள் இருவரும். இருவரையும் இரண்டுப் பக்க இடுப்பில் இருத்திப் பிடித்துக் கொண்ட பரமு,

“ராஜா சீக்கிரம் கிளம்பி வாங்க! கூட்டம் கூட ஆரம்பிச்சிருச்சு! உங்கம்மா நகையை சிவப்பு பெட்டியில வச்சிருக்காலாம்! ராஜாத்திய போட்டுக்க சொன்னா” என சொல்லியபடியே நடந்து விட்டார்.

சண்மு அவர்கள் வீட்டுக்கு வந்ததில் இருந்து நடந்த இன்னொரு நல்ல காரியம், பார்வதி பரமுவை மதித்து மரியாதையாய் நடத்துவதுதான். தான் கணவனுக்கு கொடுக்கும் மரியாதை தானே தன் மகனுக்கும் கிடைக்கும் என அடக்கி வாசிக்க ஆரம்பித்திருந்தார். ஏற்கனவே கதிரை வாடா போடா என பேசி பழகியவளாயிற்றே சண்மு. தாங்கள் மனைவியாய் இருந்த போது செய்திருந்த தப்பு தவறுகளை கமுக்கமாக மறந்து விட்டு, மாமியார் போஸ்டிங் கிடைத்ததும் மருமகளிடம் பெர்பெக்‌ஷனை எதிர்ப்பார்ப்பது யூனிவர்சல் ட்ரேண்டாயிற்றே!

பரமுவும் அது தான் சாக்கு என தனது பாழுவிடம் பாசப்பயிரை வளர்க்க ஆரம்பித்திருந்தார். பரமுவின் பழைய வாழ்க்கை மீது கோபம் இன்னும் இருக்கத்தான் செய்தது பாருவுக்கு. துருதுரு பேரப்பிள்ளைகளை பரமு பார்த்துக் கொள்ளும் அழகில் கொஞ்சம் கொஞ்சமாக அதையெல்லாம் பின்னால் தள்ள பழகி இருந்தார் பார்வதி. குடிக்காத பகல் பொழுதுகளில் சில நேரம் இருவரும் சிரித்துப் பேசிக் கொள்வது கூட உண்டு. இரவில் குடித்து விட்டு பாழு என அவர் இளிக்கும் போது மட்டும் பார்வதியின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்கும். பேய்க்கு வாழ்க்கைப்பட்டா புளிய மரத்துல குடியிருக்கனுங்கற மாதிரி குடிகாரனுக்கு வாழ்க்கைப் பட்டா கூவத்துல நீச்சலடிச்சுதான் ஆகனும் என மனதை எப்பொழுதும் போல தேற்றிக் கொள்வார் பார்வதி.

பிள்ளைகளை அனுப்பிவிட்டு வந்த கதிர் கட்டிலில் மல்லாக்க சரிந்து விட்டான். முகத்தில் சிரிப்புடன் அவனைப் பார்த்திருந்தாள் சண்மு.

“கிரிமினல புடிக்க ஓடறது கூட இவ்வளவு டயரிங் இல்லடி! உன் புள்ளைங்கள கிளப்பறது இருக்கே, ஷப்பா!!! குண்டூசிய வச்சு குழி தோண்டற மாதிரி ரொம்ப குஸ்டமான வேலை” அலுத்துக் கொண்டன் கதிர்.

“சேட்டைப் பண்ணா மட்டும் என் புள்ளைங்க. சமத்தா இருந்தா உன் புள்ளைங்களா? நல்லா இருக்கே உன் நியாயம்! ஒத்தைப் புள்ளயா குடுடான்னு கேட்ட ரெட்டைப் புள்ளய குடுத்துட்டு பேசறான் பாரு பேச்சு” என தலையணையால் மொத்தினாள் கதிரை.

தலையணையோடு தன்னவளையும் சேர்த்து அணைத்தவன்,

“நமக்கு பொறந்துருக்கறது நன் ஐடெண்டிக்கல் ட்வீன் டீ! கதிர்காமன் உன்ன மாதிரி இருக்கான், சண்முகவேலன் என்னை மாதிரி இருக்கான். மாசா மாசம் ஒரு பொண்ணுக்கு ஒரு முட்டைத்தான் வெளிவரும். நீ தான் பெரிய அப்பாடக்கராச்சே! உனக்கு மட்டும் ரெண்டு முட்டை வெளி வந்துருக்கவும் தான் நமக்கு ஒரே மாதிரி இல்லாத, ரெட்டைப் புள்ள பொறந்துருக்கு. சோ இந்த மிஸ்டேக் என் கணக்குல வராது” என முத்தமிட்டப்படியே பயலோஜி சொல்லிக் கொடுத்தான் கதிர். பயலோஜி பாடம் கெமிஸ்ட்ரியை கூட்ட, மயக்கத்துடன்,

“ரெண்டு முட்டை வெளியானது என் மிஸ்டேக்னா, அது ரெண்டையும் பொரிச்சது உன் மிஸ்டேக்டா!” என முனகினாள் சண்மு.

“அடியே சம்மு! நாம மனுஷங்கடி! என்னமோ கோழி முட்டைப் போட்டு குஞ்சு பொரிச்ச மாதிரி என்னடி பேச்சு இது” சரசத்தில் இருந்தவனுக்கு சிரிப்புப் பொத்துக் கொண்டு வந்தது.

அவளும் மலர்ந்து சிரிக்க ஆசையாகப் பார்த்திருந்தான் தன் மனைவியை. இரட்டைப் பிள்ளைகள் வந்ததில் இருந்து இப்படித்தான் தங்களுக்குள் வம்பிழுத்துக் கொள்வார்கள் இருவரும். செல்லமாய் சலித்துக் கொண்டாலும் பிள்ளைகள் இருவரும் இவர்களின் கண்ணின் மணிகள்.

தன்னையேப் பார்த்திருந்தவனின் மடியில் ஏறி அமர்ந்துக் கொண்டவள்,

“சொர்க்கம்னா என்ன தெரியுமாடா கதிரு?” என கேட்டாள்.

“என் சொர்க்கம் நீ பெண்ணே!” என அவன் பாட,

“என் வாழ்க்கையின் சொர்க்கம் நீதான். நண்பனா இருந்தப் போதும் சரி, அன்பனா ஆனப்போதும் சரி என்னை கொண்டாடி மகிழும் நீதான் என் சொர்க்கம்! அப்போ எப்படி என்னை கவனிச்சுக்கிட்டியோ அந்த அன்பு குறையாம இப்பவும் அப்படியே இருக்கடா! எனக்கு கிழவி வயசு ஆனாலும் உன் அன்பு மட்டும் குறையாதுடா கதிர்! நான் போன ஜென்மத்துல நெறைய பாவம் செஞ்சிருந்தாலும் கொஞ்சமே கொஞ்சம் ஏதோ புண்ணியம் செஞ்சிருக்கேன் போல! அதான் வரமாய் என் வாழ்க்கையில நீ வந்துருக்க” என கண் கலங்கியவளை இழுத்து அணைத்துக் கொண்டான் கதிர்.

“வரம் தரும் தேவதை நீதான்டி சம்மு! நீ என்னைப் பிரிஞ்சு போனப்போ என் உசுர உன் கூட அனுப்பி வச்சிட்ட மாதிரி உணர்ந்தேன்டி சம்மு! உயிரே உயிர் போகுதடின்னு என் ஊனும் உயிரும் கதறி துடிச்சது!“

அவன் பேசியதைக் கேட்டு கண் கலங்க ஆரம்பித்தவளை ஆறுதலாக அணைத்துக் கொண்டவன்,

“சின்ன வயசுல பாசத்த அள்ளிக் குடுத்த, பள்ளிக்குப் போகற வயசுல அன்ப அள்ளிக் குடுத்த, வேலைக்குப் போன வயசுல அக்கறைய அள்ளிக் குடுத்த, இப்போ திகட்ட திகட்ட காதல அள்ளித் தர! என்னோட அட்சய பாத்திரம் நீ! மை சம்மு! மை ஓன் அண்ட் ஓன்லி சம்மு! சொறி சம்மு” என வேடிக்கையாக முடித்தான்.

“அந்த சொறிய மட்டும் நீ விடமாட்டியாடா ஒன்ர கண்ணா” என இவள் அவன் கன்னத்தைக் கடிக்க அவன் இவள் தாடையைக் கடிக்க என மீண்டும் ஒரு யுத்தம் ஆரம்பித்தது!

அதன் பிறகு அரக்கப்பறக்க இருவரும் கிளம்பி வர அரை மணி நேரத்துக்கும் கூட ஆகியிருந்தது. அவர்கள் வந்ததும் களை கட்டியது பிறந்தநாள் விழா. அமோகமாக பிறந்த நாள் வாழ்த்துப் பாடி ஆர்ப்பாட்டமாக கேக் வெட்டி சாப்பாடு பரிமாறப்பட்டது. ஊரே வந்து கதிரின் குடும்பத்தை வாழ்த்தி சாப்பிட்டு விட்டுப் போனார்கள்.

அதன் பிறகு ஆட்டக் கச்சேரி ஆரம்பித்தது. குட்டி இருவரும் தையதக்காவென ஆடி நிகழ்ச்சியைத் தொடக்கி வைக்க, அதன் பிறகு இஸ்டத்துக்கு எல்லோரும் புகுந்து பட்டையைக் கிளப்பினார்கள். ஏன் நம் பரமு கூட பாருவை துரத்தி துரத்தி,

“ரோஜா மலரே ராஜகுமாரி” என பாடலோடு சேர்ந்து பாடிக் கொண்டே,

“பாரு ,அருகே வரலாமா!” என சொந்தமாக மிக்ஸ் வேறு செய்து அட்டகாசம் செய்தார்.

கதிர் சண்முவை ஆட அழைக்க, வரவே மாட்டேன் என மறுத்து விட்டாள் அவள்.

“ஏ வாடி! எல்லாம் உனக்கு தெரிஞ்ச ஸ்டேப்தான்” என அவன் போட்டு விட்ட பாடல் என் ஜோடி மஞ்ச குருவி.

விருந்துக்கு வந்திருந்த பெருமாளுக்கு அசடு வழிய ஆரம்பித்தது. சண்முவின் கையைப் பிடித்து கதிர் ஆடும் இடத்துக்கு இழுத்துப் போக, அவள் எப்பொழுதும் போல ரோபோட் ஸ்டேப் போட ஆரம்பித்தாள். அவள் ஸ்டெப்புக்கு ஈடு கொடுத்து கதிரும் ரோபோட் போலவே ஆட, அவர்களின் செல்வங்களும் இடையில் புகுந்துக் கொண்டார்கள். பெருமாளும், அவர்களோடு பள்ளியில் படித்த சிலரும் சேர்ந்துக் கொள்ள ஆட்டம் களைக்கட்டியது. பெருமாளின் மகள்கள் தங்கள் பெரியம்மாவின் கைப்பிடித்து ஆட,(அதாங்க நம்ம சண்மு) பெருமாள் இரட்டையர்களில் ஒருவனைத் தூக்கிக் கொண்டு ஆடினான்.

“அடேய் என் குடும்ப பங்‌ஷண்டா இது! இங்க வந்து நீங்க அராஜகம் பண்ணறது கொஞ்சம் கூட நல்லாயில்லடா பெருமாளு” என கதிர் ஆடிக்கொண்டே கடுப்படிக்க,

“பெரியவங்களே பெருமாள் சொன்னா கேப்பாங்க! நீ என்னடா ஜூஜூபி” என கதிரை வம்பிழுத்தான் பெருமாள். இவர்களின் பேச்சைக் கேட்டு கொல்லேன சிரித்து விட்டாள் சண்மு.

உடம்பு வைத்து, முகம் மினுங்க, அழகாய் ஆடிக் கொண்டிருந்த தன் மகளை ஆசையாய் பார்த்திருந்தார் மீனாட்சி. தான் செய்த தப்பை தானே திருத்தி விட்டதில் அவருக்கு பரம திருப்தி. கண்கள் ஆனந்தத்தில் லேசாக கலங்க அமைதியாக நாற்காலியில் அமர்ந்து விட்டார். போன் அடிப்பதாக காட்ட எடுத்துப் பார்த்தவர், மகனின் முகம் அதில் பெயரோடு வர அதையேப் பார்த்திருந்தார். எப்பொழுதும் போல அடித்து ஓயும் வரை பார்த்தப்படியே இருந்தார் ஆனால் எடுக்கவில்லை. இவரும் மனம் மாறக்கூடும், மகனை மன்னித்து ஏற்றுக் கொள்ளக்கூடும்! அது காலத்தின் கையில் மட்டுமே உள்ளது.

மகளின் கரங்கள் தோளை அழுத்த மெல்லிய புன்னகையுடன் அவளை நிமிர்ந்துப் பார்த்தார் மீனாட்சி.

“மருந்து போட்டுடீங்களாமா?” என அவள் கேட்க ஆமென தலையாட்டினார் அவர். சண்முகவேலன் ஓடி வந்து அவர் மடியில் ஏறிக்கொள்ள, பேரனை அணைத்துக் கொண்டார் மீனாட்சி.

‘இது போதும்! இந்த அன்பு போதும்! சொச்ச காலத்த இப்படியே ஓட்டிருவேன்!’ என மனதில் எண்ணிக் கொண்டார் அவர்.

இரவாகிவிட்டதால் உடல் ஆட்டம் எடுக்க, சைக்கில் கேப்பில் சரக்கடித்து விட்டு வந்த பரமு கூட்டத்தின் நடுவில் நின்று சொற்பொழிவாற்ற ஆரம்பித்தார்.

“எனது அம்பு மக்களே! இந்த நெகிழ்ச்சிக்கு வந்ததுக்கு அல்லாருக்கும் தேங்க்ஜு! என் மவேன், மம்மவ, பேழக்குழந்தைகள வாழ்த்துன அல்லாருக்கும் தேங்க்ஜூ. இன்று போல என்றும் இவங்க நல்லா இருக்கோனும், வளமா வாழோனும்னு அந்த முழுகனை வேண்டிக்கறேன். என் பாட்ட கேக்க காத்திழுக்கும் மகா ஜன்ங்களே உங்ளுக்காக இந்த பாட்ட நான் ஜமர்பிக்கிறேன்!”

அவரது தாஸ்மாக் கேங் ஒரே கைத்தட்டல்.

“பழமு! பழமு!” என ஒரே சத்தம்.

“ஜம்மு! ஐ மீன் சம்மு..இங்க நான் ஹீரோவா இல்ல அவரு ஹீரோவா? இதெல்லாம் கொஞ்சம் ஓவரா இல்ல?” என தன் மனைவியின் காதைக் கடித்தான் கதிர்.

“சத்தியமா நீதான் ஹீரோ!” என அவள் பதிலளிக்க முகம் மலர்ந்தான் கதிர்.

“ஆனா என் மாமனாரு ஹீரோவுக்கெல்லாம் ஹீரோ!” என அவள் காலை வார, சிரிப்புடன் மனைவியின் தோளணைத்துக் கொண்டான் கதிர்.

பின்னால் மியூசிக் மட்டும் இசைக்க பரமு பாட ஆரம்பித்தார்.

“ஜும்மா கிழி

நான் தாண்டா இனிமேலு

வண்டு நின்னா தல்பாலு

ஒன்னோட கேங்கூ

நான் தாண்டா லீட்டு” என அவர் பாட அவரது தாஸ்மாக் கேங்கும் சேர்ந்து ஆட என ரணகளமாய் விடிய விடிய போனது பார்ட்டி.

முருகனின் அருள் என்றென்றும் இவர்களுக்கு கிடைக்கட்டும், வாழ்க்கை சிறக்கட்டும் என வாழ்த்தி நாமும் அவர்களிடம் இருந்து விடைபெறுவோம்.

 

(சண்மு கண்ணனை மன்னித்து ஏற்றுக் கொள்வாளா என்பதை அவள் வசமே விட்டு விடுவோம்.)

 

முற்றும்….

 

நாம் யாரும் அனாதை இல்லை! அன்பு மட்டுமே அனாதை என கூறிக் கொண்டு நானும் விடைபெறுகிறேன். எல்லா கதைய விடவும் இந்த கதை என்னை வச்சு செஞ்சதுல நான் ரெகுலர் யூடி குடுக்கல. இந்த கதை பயணிச்ச டைம்ல எனக்கு நெறைய கமிட்மெண்ட் வேற. அப்படியும் என் கூடவே சலிச்சுக்காம பயணிச்ச உங்க எல்லோருக்கும் என் அன்பு முத்தங்கள். இந்த கதைக்கு நெறைய சைலண்ட் ரீடர் எல்லாம் வெளிய வந்து காமேண்ட் போட்டுருக்கீங்க. ரொம்ப ஹேப்பியா இருக்கு. கொஞ்சமா கேப் விட்டு ரீடர் மோடுக்கு போய்ட்டு, அடுத்த கதையில் சந்திக்கலாம் டியரிஸ்… நன்றி, வணக்கம்..