UVU14

எல்லோருடைய பார்வையும் சித்ராவின் மேலேயே இருந்தது. ஈயென இளித்தவள்,

“சார் கூட அக்கவுண்ட்ஸ் பற்றி பேசிட்டு இருந்தேன். அதான் கவனிக்கல. சொல்லு தீபாம்மா, என்ன வேணும்?”

“வேறேன்ன கேப்பா உன் மக? இந்த ராத்திரியில ஐஸ்க்ரீம் வேணுமாம். அதான் உன் கிட்ட கேட்க சொன்னேன்” கூறினார் பத்மா.

மகளை முறைத்தவள்,

“அடி பின்னிருவேன் தீபா. வீட்டுல இருந்து வரப்போ என்ன சொன்னேன்? நோ ஐஸ்க்ரீம், நோ கோல்ட் ஜீஸ்னு தானே? சரி சரின்னு தலையாட்டிட்டு இங்க வந்து வேலயா காமிக்கிறியா?” கத்தாமல் குரலை அடக்கி மிரட்டினாள். மகளின் மேல் இருந்த கோபம் கையை விடாமல் அழிச்சாட்டியம் பண்ணும் பிரகாஷ் மேல் திரும்பியது. வேண்டுமென்றே வலிக்க அவன் தொடையைக் கிள்ளி வைத்தாள்.

அதிர்ச்சியில் பட்டென கையை விட்டவன், தொடையை தேய்த்து விட்டுக் கொண்டான். கிடைத்த கேப்பில் கையை அவசரமாக எடுத்து மேசை மேல் வைத்துக் கொண்டாள் சித்ரா.

‘யார் கிட்ட? நாங்களாம் கிள்ளறதுல பி.எச்.டி வச்சிருக்கோம். ‘ கெத்தாக அவனைப் பார்த்தவள், மீண்டும் கவனத்தை மகள் புறம் திருப்பினாள்.

அவளோ பத்மாவின் பரிதாபத்தை சம்பாதிக்க சோக சீன் போட்டுக் கொண்டிருந்தாள்.

“பத்துமா, அம்மா நான் எது கேட்டாலும் நோ சொல்லுறாங்க. நான் பாவம். எனக்கு யாருமே யெஸ் சொல்ல மாட்டிக்கிறாங்க. நான் ஐஸ்க்ரீம் தானே கேட்டேன். டூ ஸ்பூன் போதும். காட் ப்ராமிஸ்” கண்களில் மலை மலையாக கண்ணீர்.

பத்மாவுக்கும், பாலனுக்கும் உருகி விட்டது.

“ஒன்னு ஆர்டர் பண்ணலாம்மா சித்ரா. பத்துவும் பாப்பாவும் ஷேர் பண்ணிக்கட்டும். பிள்ளை அழறது நல்லாவா இருக்கு?”

பாலனிடம் மறுக்க முடியாமல், மகளை முறைத்தாள் சித்ரா.

“அம்மா மொறைக்கிறாங்க. அவங்க எஸ் சொல்லாட்டி எனக்கு வேணாம்.” தேம்பியபடியே சித்ராவுக்கு செக் வைத்தாள் மகள். முகத்தை சிரிப்பதைப் போல் வைத்துக் கொண்ட சித்ரா,

“கொஞ்சம் தான் தீபா. உனக்கு சட்டுன்னு சளி பிடிச்சுக்கும், தெரியுமில்ல?” பாசமான குரலாக இருந்தாலும் நிலாவுக்கும் மணிக்கும் புரிந்தது வீட்டுக்குப் போனவுடன் தீபாவுக்கு மிட்நைட் பூஜை இருக்கிறது என.

சிவா மட்டும் அமைதியாகவே அமர்ந்திருந்தான். என்றைக்கும் இல்லாத திருநாளாய் அழகு பதுமையென வந்திருந்த நிலா அவன் புத்தியைப் பேதலிக்க செய்து கொண்டிருந்தாள். அவள் அடித்திருந்த வெணிலா பெர்பியமும், புது சுடியின் வாசமும் அவனை தவிக்க வைத்தது. இந்த வருட பிறந்த நாளுக்கு அவன் தான் தேடி அலைந்து அந்த சுடியை வாங்கிக் கொடுத்திருந்தான். ஜீன்ஸ் டீசர்ட் ஏன் வாங்கி தரவில்லை என கடுப்புடனே அதைப் பெற்றுக் கொண்டாள் நிலா.

அவள் முன்னே வந்து கட்லரிசை எடுக்கும் போது அவளது துப்பட்டா வேறு ‘துப்பட்டா துப்பட்டா, கன்னத்துல அப்பட்டா அப்பட்டா’ என அவன் மேல் மோதி விளையாடியது. சுக இம்சையில் அமர்ந்திருந்தவன், அடிக்கடி கண்ணாடியைக் கழற்றி துடைத்து மாட்டினான்.

நிலாவோ அவனைக் கண்டுக் கொள்ளவே இல்லை. அருகில் அமர்ந்திருந்த மணியிடம் என்ன சாப்பிடுவது என ஆழ்ந்த விவாதிப்பில் இருந்தாள்.

‘மனுஷன் இங்கப் படற அவஸ்த்தைப் புரியல. இப்ப கிரில் சிக்கனா, கிரில் மட்டனா டிஸ்கஷன் தான் ரொம்ப முக்கியம்.’ வந்ததிலிருந்து அவன் முகத்தை கூட அவள் பார்க்காதது இன்னும் கோபத்தை விதைத்தது.

தொண்டையை லேசாக செறுமினான். மணியுடன் பேசிக் கொண்டிருந்தவள் தண்ணீர் கிளாசை அனிச்சையாக அவன் புறம் நகர்த்தி வைத்தாள். அவளின் செயல், புண்பட்ட இதயத்துக்கு புண்ணாக்கை ஐ மீன் புனித நீரை தடவியது போல் இருந்தது அவனுக்கு.

“வைசி” மெதுவாக அழைத்தான்.

அவளிடம் எந்த பதிலும் இல்லை.

மற்றவர்கள் கவனத்தைக் கவரா வண்ணம் அவளது துப்பட்டாவை லேசாக இழுத்தான். திரும்பி அவனைப் பார்த்தவள், என்ன என்பது போல இமையை தூக்கி இறக்கினாள்.

‘வாவ்! பிரியா வாரியார் தோத்துருவாடி.’ ஜொள்ளினான். அவன் கண்களில் தெரிந்த மயக்கம் நிலாவுக்குள் இருந்த மவுண்ட் எட்னா எரிமலையை வெடிக்க வைத்தது. வெடித்தது மட்டுமில்லாது எரிமலை குழம்புகள் இரண்டு கண்கள் வழியாக கொதித்து வெளியேறின.

அவள் கண்களின் சீற்றத்தைப் பார்த்தவன்,

“வைசி. கூல் டவுன்” என்றபடியே அவள் கையைப் பற்றினான். அக்கா மாதிரி நாசுக்குப் பார்ப்பவளா நிலா, கையை உதறி விட்டு பட்டேன எழுந்தாள். கேள்வியாக நோக்கியவர்களிடம்,

“லேடிஸ் போகனும். மணி எனக்கு ஆர்டர் பண்ணு”

என சொல்லிவிட்டு மடமடவென வெளியேறினாள். திகைப்பில் இருந்த சிவாவின் முகத்தில் அவளது துப்பட்டா மோதி சுயநினைவுக்கு கொண்டு வந்தது.

அவள் போன கையோடு இவனும் இழுந்தான்.

“என்னடா சிவா?” முறைத்தவாறே கேட்டார் பத்மா.

“கொஞ்ச நேரம் கிச்சனுக்குப் போய்ட்டு வரேன்கா. நீங்க ஆர்டர் பண்ணுங்க. இப்ப வந்துருவேன்”

“அதெல்லாம் வேணாம். எதுக்கு இப்போ கிச்சனுக்கு?” கடுப்பிருந்தது அவர் குரலில்.

“விடும்மா பத்து. அவன் தான் என்னமோ போய் பார்க்கனும்னு சொல்லுறான்ல. நீ போய்ட்டு வாப்பா. சாப்பாடு வரதுக்குள்ள வந்துரு.” என அனுப்பினார் பாலன். (போங்க சார், உங்க அடி கணக்கு கூடிட்டே போகுது)

சிவா அவசரமாக நிலாவை தேடிச் சென்றான். அவள் ரிசப்சனுக்கு பக்கவாட்டில் மறைவாக இருந்த சோபாவில் கண் மூடி பெரிய பெரிய மூச்சுக்களை இழுத்து விட்டபடு அமர்ந்திருந்தாள். அமைதியாக அவள் பக்கத்தில் அமர்ந்தான் அவன். பக்கத்தில் ஆள் அமரும் அரவம் கேட்டும் கண்ணைத் திறக்கவில்லை நிலா.

“வைசி” மென்மையாக அழைத்தான் சிவா.

“ஹ்ம்ம்”

“என் மேல கோபமா வைசி?”

“இல்ல. நீ யாரு? உன் கிட்ட ஏன் நான் கோபப்படனும்? உரிமை உள்ள இடத்துல தான் கோபம் வரும். உன் கிட்ட எனக்கு என்ன உரிமை இருக்கு?” கண்ணைத் திறந்தவள் அமைதியாக ஆனால் தெளிவாக கேட்டாள்.

“என் கிட்ட உனக்கு எல்லா உரிமையும் உண்டு வைசி” கைகளைப் பற்றினான்.

கையை உதறியவள்,

“தோ பாரு சிவுடு, இந்த தில்லாலங்கடி வேலைலாம் என் கிட்ட வச்சிக்காத. உன்னோட உரிமை, எருமை, கருமைலாம் கேக்கற மூட்ல நான் இல்ல. லீவ் மி அலோன்” எகிறினாள்.

“வைசி, சில நாளுல வெளிநாட்டுக்கு கிளம்பி போயிருவேன். இப்பக் கூட என் கிட்ட கோபமா பேசனுமா? அங்க இருக்கற மூனு வருஷமும் உன்னோட கோப முகத்தையே நினைச்சிட்டு நான் இருக்கனுமா? என்னால முடியாதுடா. ப்ளிஸ் வைசி, இப்படி என்னை சென்ட் ஆப் பண்ணாத”

“அப்போ எப்படி சென்ட் ஆப் பண்ணனும்? கட்டிப் பிடிச்சு, முத்தம் குடுத்தா? அப்படி செய்யனும்னா நீயும் நானும் காதலிச்சிருக்கனும். ஆனா இங்க தான் ஓன் சைட்ல ஓடுதே. அதுவும் இப்ப புட்டுக்கிச்சு”

“நெஜமா புட்டுக்கிச்சா? என் மேல இப்ப லவ் இல்லையாடி?” கோபம் அவன் குரலில்.

“இல்லடா! லவ்வும் இல்ல ஜவ்வும் இல்ல. ஐ எம் மூவிங் ஆன். லவ்வுக்குப் பிறகும் வாழ்க்கை இருக்குன்னு புரிஞ்சுகிட்டேன்.”

“நான் இல்லாமா, என் லவ் இல்லாம உனக்கு வாழ்க்கை இருக்கா வைசி?”

“இருக்கு, இருக்கு, இருக்கு ! என்னடா நினச்சிட்டு இருக்க மனசுல? நான் நெருங்கி வரப்ப துரத்தி விடற. நான் வேணானுன்னு போறப்ப நெருங்கி வர. எதுக்கு இந்த சீன்? பேசாம போயிரு. இன்னும் கொஞ்சம் நேரம் இங்க இருந்த கழுத்தப் புடிச்சு நெரிச்சிருவேன்.” கண்ணீரை மறைக்க முகத்தைத் திருப்பிக் கொண்டாள் நிலா.

சிவாவுக்கு என்ன செய்வது என புரியவில்லை. அவளை விடவும் முடியவில்லை, ஏற்கவும் முடியவில்லை. இவள் வேண்டாம் என உருப்போடும் அறிவு, நேரில் பார்க்கும் போது அவள் காலடியில் விழும் மனம், இரண்டுக்கும் மத்தியில் போராடி அரைப் பைத்திய நிலையில் இருந்தான். அறிவு வென்றாலும் சரி, மனம் வென்றாலும் சரி, தோற்கப் போவது அவன் தான். நித்தம் இந்தப் போராட்டத்தில் தன்னையே தொலைத்துக் கொண்டிருந்தவன், கொஞ்ச நாள் தனித்திருக்க முடிவெடுத்தான். அறிவு முடிவெடுத்து விட்டது. பாழாய் போன மனம் ரத்தக் கண்ணீர் வடித்தது.

“வைகாசி நிலவே
வைகாசி நிலவே
மைபூசி வைத்திருக்கும் கண்ணில் நீ..
பொய்பூசி வைத்திருப்பதென்ன” மெலிதாக பாடினான்.

வந்தது பார் நிலாவுக்கு கண் மண் தெரியாத கோபம். இடம், பொருள், செய்வினை, ஏவல் அனைத்தையும் மறந்தாள்.

“யாருடா பொய் பூசி வச்சிருக்காங்கா? நானா, நானா? செய்யறதெல்லாம் செஞ்சிட்டு என்னைப் பொய்க்காரின்னு சொல்லுறியா? இன்னிக்கு உன்னை ஏரோப்ளேன் ஏத்தி எமன் கிட்ட அனுப்பல, என் பேரு வைகாசி நிலா இல்லடா” அவன் புறம் திரும்பியவள் துப்பட்டாவை எடுத்து அவன் தலையில் போட்டு முகத்தை மூடியவள், மாற்றி மாற்றி கன்னத்தில் குத்தினாள் கும்மாங்குத்து.

துப்படாவில் இருந்து வந்த வாசனையில் தன்னை மறந்து முழுகி இருந்தவனுக்கு அவள் கொடுத்த குத்தெல்லாம், மெத்து மெத்தென இருந்தது. அவனிடம் சத்தமே வராமல் போகவும், துப்பட்டாவை உருவி அவன் முகத்தை நோக்கினாள் நிலா. சொர்க்க வாசலை தட்டி விட்டு வந்தவன் போல , ஷென்(zen) நிலையில் இருந்தான் சிவா. ஓங்கி விட்டாள் ஒர் அறை, தூக்கிப் போட கன்னத்தைப் பிடித்தப்படி பேந்த பேந்த விழித்தான் அவன்.

“ஏன்டி அறைஞ்ச?”

“பூமிக்கு வந்துட்டீயா?”

“இன்னும் பலமா குடுத்திருந்தீனா, பூமிக்குள்ளவே போயிருப்பேன்”

“நீ ஏன் பூமிக்குள்ள போக போற? என்னைத்தான் அங்க சீக்கிரமா அனுப்பி வச்சிருவ!” தன்னையும் மீறி குரல் தழுதழுத்தது அவளுக்கு.

“அப்படி சொல்லாதே வைசி. என்னால நீ இல்லாம இருக்க முடியாது” உட்கார்ந்த வாக்கிலே இருக அணைத்துக் கொண்டான். முதலில் திமிரியவள் பின், மெல்ல அவன் அணைப்பில் அடங்கினாள்.

“அடீ ஆத்தீ! இவ பின்னாலேயே குடுகுடுன்னு ஓடி வந்தப்பவே தெரியும்டா இப்படி ஏடாகூடமா ஏதாவது இருக்கும்னு” பத்மாவின் குரல் கேட்டு இருவரும் அவசரமாகப் பிரிந்தனர்.

“ஏன்டி வித்தாரக் கள்ளி ! சிங்காரக் கொண்டையிலெ தாழம்பூவாம், அதுக்குள்ளே இருக்குதாம் ஈரும் பேனும். நல்ல புள்ளையாட்டம் மூஞ்ச வச்சிக்கிட்டு, என் தம்பியவே மடக்கி போடுறீயா? ஏன்டி பாவி, உங்கக்காவுக்கு தானேடி பேசி வச்சிருக்கோம். அவ குடியையே கெடுக்கறீயே! நீ எல்லாம் என்னடி தங்கச்சி?” வார்த்தைகள் அமிலமென வந்திறங்கின. கண்கள் கலங்கினாலும், விறைப்பாக நின்றாள் நிலா.

“நிறுத்துக்கா. அப்படிலாம் பேசாதே! அவ மேல எந்த தப்பும் இல்ல.”

“என்னடா தப்பு இல்ல? தீபா பொறந்ததிலிருந்து சித்ரா தான் உனக்கு பொண்டாட்டினு நாங்க முடிவெடுத்துட்டோம். நீயும் சரின்னு தானே ஒத்துக்கிட்ட! இப்ப என்னடா இவள கட்டிப் பிடிச்சிக்கிட்டு இருக்கற? இந்த ஆட்டக்காரி, உடம்ப ஆட்டி உன்னை மயக்கிட்டாளா?”

“அக்கா!” குரலை உயர்த்தினான் சிவா.

அதற்கே கண் கலங்கி விட்டது பத்மாவுக்கு.

“என்னடா அக்கா? இந்த ராங்கிக்காரி வந்ததும் அக்கா வேணாதவளா ஆகிட்டேன் இல்ல?”

“அப்படிலாம் பேசாதக்கா” அக்காவை நோக்கி ஓர் எட்டு எடுத்து வைத்தவனை, இருக்கமாகப் பிடித்துக் கொண்டாள் நிலா.

“தோ பத்து! ஆமா உன் தம்பிய நான் காதலிக்கறேன். நான் தான் அவன மயக்கினேன். இப்ப என்ன அதுக்கு?” நிலாவும் அசராது திருப்பி கொடுத்தாள்.

“பாத்தியாடா இந்த திமிரு புடிச்சவள! என்ன தெனாவெட்டா பேசுறா! திமிர் உடம்பு முழுக்க திமிரு. மீண்டும் சரித்திரம் திரும்புதா?”

அவர் சொன்னதைக் கேட்டு கண்களில் பொல பொலவென கண்ணீர் வழிந்தது நிலாவுக்கு.

“அக்கா!” என கத்தியவன், அழும் நிலாவை இறுக அணைத்து தட்டிக் கொடுத்தான்.

“விட்ரா அவள! என் முன்னுக்கே சும்மா சும்மா கட்டிப் பிடிச்சுட்டு நிக்கற! வேணாண்டா சிவா! இவ சங்காத்தம் உனக்கு வேணாம்” வெறுப்பை உமிழ்ந்தார்.

சிவாவின் பிடியிலிருந்து மெல்ல விலகியவள்,

“பத்து உனக்கு பிடிச்சாலும், பிடிக்காட்டியும் இவன் தான் என் புருஷன். இத யாரும் தடுக்க முடியாது. மூனு வருஷம் கழிச்சு இவன் வந்ததும், என்னைத்தான் கட்டனும். இல்லன்னா உன்னையும் உன் தம்பியயும் பொழந்து கட்டிருவேன்” பத்மாவின் முன்பே, சிவாவின் புறம் திரும்பியவள், அவன் எதிர்பார்க்காத தருணத்தில் தன் உதட்டை அவன் உதட்டோடு அழுத்தினாள். உதடும் உதடும் ஒட்டிக் கொண்டது அவ்வளவுதான். அதற்கே சிவா ஷாக் அடித்தது போல் நின்றிருந்தான். பத்மாவோ அதிர்ந்து போய் பார்த்திருந்தார்.

“இத நான் குடுத்த அச்சாரமா வச்சிக்க. மூனு வருஷம் கழிச்சி மீதிய பார்த்துக்கலாம். அங்கே போய் எவ பின்னாலயாவது திரிஞ்சேனு தெரிஞ்சது, வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு தான். எதைன்னு உன் கற்பனைக்கே விட்டுறரேன். “

பத்மாவின் புறம் திரும்பியவள்,

“வரட்டா பத்து? சாரி, வரட்டா நாத்தனாரே” நக்கலாக கேட்டவள், சிவாவின் கன்னத்தில் ஆழமாக ஒரு முத்தத்தைப் பதித்து விட்டு விடுவிடுவென ரெஸ்ட் ரூம்கு நடந்துவிட்டாள்.

அவள் முத்தமிட்டு விலகும் போது கண்களில் இருந்து வீழ்ந்த கண்ணீர் துளி அவனின் கன்னத்தில் பட்டு விழுந்தது. சிவாவின் மனம் ஊமையாக பாடியது.

‘கன்னத்தில் முத்தத்தின் ஈரம்

அது காயவில்லையே

கண்களில் ஏனிந்த கண்ணீர்

அது யாராலே!’ (சத்தியமா உன்னால தான்டா)

நிலா முகம் கழுவி உள்ளே வரும்போது உணவு வந்திருந்தது. அதோடு உட்காருமிடமும் மாற்றப்பட்டிருந்தது. மணி இருந்த இடத்துக்கு சிவாவும், சிவாவின் இடத்திற்கு மணியும் வந்திருந்தார்கள். அவளை நிமிர்ந்துப் பார்த்து நன்றாக இருக்கிறாளா என ஆராய்ந்த சிவா, பத்மாவின் கணைப்பில் உணவில் கவனமாக இருப்பது போல காட்டிக் கொண்டான்.

‘அதுக்குள்ள உன் பத்து அக்கா வேப்பிலை அடிச்சிட்டாளா? போடா, போடா!’ மனதிலேயே திட்டியவள் எதையும் கண்டு கொள்ளாமல் அமர்ந்தாள்.

அதன் பிறகு அக்காவிடமும், மணியிடமும் கலகலவென பேசியவாறே சாப்பிட்டாள். பத்மா மட்டும் அவளை அவ்வப்போது முறைப்பதை நிறுத்தவில்லை. பத்மாவிடம் ஐஸ்க்ரீமை மட்டும் சாப்பிட்ட தீபா, அம்மா வேண்டுமென அடம் பிடித்து சித்ராவின் மடியில் வந்து அமர்ந்துக் கொண்டாள். பிரகாஷ் இன்னொரு நாற்காலி கொண்டு வந்து போடுகிறேன் என சொல்லியும் கேட்கவில்லை.

மடியிலிருந்த மகளையும், தட்டில் இருந்த சாப்பாட்டையும் சமாளிக்க முடியாமல் தடுமாறினாள் சித்ரா.

அவள் இங்கே போராடிக் கொண்டிருக்க தன் தட்டிலிருந்த உணவு வகைகளை யாரும் அறியாமல் அவள் தட்டுக்கு கொஞ்சம் கொஞ்சமாக மாற்றினான் பிரகாஷ். டயட் என சொல்லி கால் பாகம்(quarter chicken) இருந்த கோழியை ஆர்டர் செய்தவள், மகள் வேறு பங்குக்கு வரவும் அவளுக்கே அனைத்தையும் ஊட்டினாள்.

மகளிடம் பேசிக்கொண்டும், போராடி கொண்டும் இருந்தவள் பிரகாஷின் சித்து விளையாட்டை கவனிக்கவில்லை. தங்கள் உலகத்தில் இருந்த அம்மாவும் மகளும் தட்டை காலியானவுடன் தான் சுற்றி இருந்தவர்களை கவனித்தனர்.

மேய்ன் கோர்ஸ் முடியவும், சாக்லேட் கேக் வந்தது. சிவா செய்திருந்தது தான். எல்லோரும் ருசித்து உண்ண நிலா தொட்டுக் கூட பார்க்கவில்லை. அவள் சாப்பிடாததை மனம் வருந்த கவனித்தான் சிவா. நிலாவுக்காகவே, ஸ்பெசலாக அவன் செய்திருந்த கேக் அது.

கேக் சாப்பிட்ட வாயை கூட துடைக்காமல், பிரகாஷின் மடிக்கு ஷிப்ட் ஆகி இருந்தால் தீபா. அவனிடம் வளவளத்தவள், அவன் சட்டை எல்லாம் சாக்லேட்டை அப்பி இருந்தாள். சித்ரா கூப்பிட்டும் அவளிடம் வரவில்லை.

“குட்டிப் பிசாசு” முனங்கினாள் சித்ரா. பாம்பு காது பிரகாஷிற்கு அதுவும் கேட்டு விட்டது.

“(sinna)பிள்ளய அப்படி சொல்லாதே சிமி” மென்மையாக கடிந்துக் கொண்டான்.

‘அடேய்! அவ என் பிள்ளைடா. ஏசுவேன், பேசுவேன், அடிப்பேன், கடிப்பேன், எல்லாத்தையும் செஞ்சிட்டு சாவகாசமா அழுவேன். அது என் இஷ்டம். உனக்கு எங்க குஷ்டமா இருக்கு?’

அவள் கேட்க வருவதற்குள் போன் வந்துவிட்டது. போனை பார்த்து பதற்றமடைந்தவன், சட்டென முகபாவத்தை மாற்றிக் கொண்டான். பிள்ளையை தூக்கி சித்ராவின் மடியில் அமர்த்தியவன்,

“ஐ நீட் டூ அட்டேன்ட் திஸ் கால்” என பொதுவாக சொல்லிவிட்டு பேசியவாறே வெளியேறினான்.

போகிற போக்கில் அவன் பேசிய யூ ஃபூல், ஹவ் டிட் திஸ் ஹேப்பன், இஸ் ஷீ ஆல்ரைட், ஐல் பீ தேர் எர்லி இன் த மார்னிங், போன்ற வார்த்தைகள் இவர்களின் காதிலும் விழுந்தன.

இவர்கள் சாப்பிட்டு முடித்து விட்டு வெளியேறும் வரைக்கும் பிரகாஷ் வரவில்லை. தீபா வேறு தூக்கத்தில் தள்ளாடவும் இவர்கள் கிளம்ப ஆயத்தமானார்கள். பாலன் வேலை விஷயமாக யாரையோ பார்க்க வேண்டும் என கூறியதால், வந்தது போலவே இவர்கள் ஆட்டோவிலோ, டாக்சியிலோ செல்வதாக முடிவானது.

ஹோட்டல் லாபியை நோக்கி சென்றார்கள் சித்ராவும் அவள் சிறிய குடும்பமும்.

“மணி, அந்த செயற்கை நீருற்றுக்குப் பாப்பாவ கூட்டிட்டு போ. பத்து நிமிஷம் கழிச்சு வா” என அனுப்பினாள் சித்ரா. அவர்கள் அகன்றதும், தங்கயை இழுத்து தன் தோளில் சாய்த்துக் கொண்டாள்.

“அக்கா” குரல் தழுதழுத்தது நிலாவுக்கு.

“அந்த பாகுபலி திரும்பவும் வேலைய காட்டிட்டானா?”

அழுகை மட்டுமே நிலாவின் பதிலாக இருந்தது. தங்கையைத் தட்டிக் கொடுத்தாள் சித்ரா.

“அக்கா, நான் உனக்கு துரோகம் பண்ணுறேனாக்கா?” அழுகுரலில் கேட்டாள் நிலா.

“அட நீ வேற ஏன்டி! அந்த சோடாபுட்டிக்கு இங்க யாரும் ஏங்கி கிட்டு தவம் இருக்கல. நான் ஏற்கனவே உன் கிட்ட சொல்லிட்டேன், எனக்கு அவன பார்த்தா அடி வயித்துல இருந்து காதல் வரல, வெறும் காத்து தான் வருதுன்னு. அதனால துரோகம் மாதிரி பெரிய வார்த்தை எல்லாம் யூஸ் பண்ணாதே நிலாம்மா”

“எனக்கு மட்டும் ஏன்கா அவன பார்த்தா காதல் கன்னாபின்னான்னு பிச்சிக்கிது? என்னால இந்த வேதனைய தாங்கவே முடியலக்கா”

“இந்தக் காதல் ஒரு நோய்டா. ஏன் வருது, எப்படி வருதுன்னும் தெரியாது. எப்ப போகும் எப்படி போகும்னும் புரியாது. வந்தா நரக வேதனை. அது மட்டும் நல்லா புரியுதுடா.” குரலில் வலி.

“சாரிக்கா! என்னால பழைய விஷயம்லாம் ஞாபகம் வந்துருச்சா?”

“விடு நிலாம்மா. எவ்வளவோ தேறி வந்துட்டோம். எல்லாத்துக்கும் காலம் தான் சிறந்த மருந்து.”

“ஹ்ம்ம்”

மணியும் தீபாவும் இவர்களை நெருங்கவும் கண்களை அழுந்தத் துடைத்துக் கொண்டாள் நிலா. ஹோட்டல் பக்கத்தில் இருக்கும் டாக்சி ஸ்டேண்டுக்கு நடந்தவர்களின் அருகில் கருப்பு நிற வோல்வோ(Volvo XC 60) வந்து நின்றது. காரைப் பார்த்ததும் மணிக்கும் சித்ராவுக்கும் யாரென்று புரிந்து போனது. கார் கண்ணாடியை இறக்கிய பிரகாஷ்,

“மணி, கமான் கெட் இன். போற வழிதானே நான் ட்ராப் பண்ணுறேன்” என்றான்.

“இல்ல சார். நாங்க டாக்சிலே போயிருறோம்” மறுத்தாள் சித்ரா.

அவளைக் கண்டு கொள்ளாமல்,

“மணி, நைட்ல இத்தன லேடிஸ் கூப்டுட்டு டேக்சி எடுக்கறது சேப் இல்ல. “ என்றான்.

அக்காவிடம் திரும்பிய மணி,

“வாக்கா, இவரோடயே போகலாம். நமக்கு தெரிஞ்சவர் தானே. மிட்நைட் ஆக போது. அவர் சொல்லுற மாதிரி சேப் இல்ல தானே.” வற்புறுத்தினான்.

சரி என தலையாட்டியவள், தீபாவுடனும், தங்கையுடனும் பின்னால் இருக்கையில் அமர்ந்து கொண்டாள். மணி பிரகாஷின் பக்கத்தில் அமர்ந்து கொண்டான்.

மணி பொதுவாக பிரகாஷிடம் பேசியபடி வர, தீபாவோ குதித்து அட்டகாசம் செய்தாள்.

“தீபா! அடங்கி உட்கார மாட்டியா?” சுதி ஏறியது சித்ராவின் குரலில்.

“அம்மா பேட் கேர்ள். நான் மணிட்ட போறேன்” என சித்ரா தடுத்தும் லாவகமாக நடுவில் ஏறி மணியிடம் தாவி இருந்தாள்.

முன்னே சென்றவள் அமைதியாக இராமல், எல்லா பட்டன்களையும் காட்டி இது என்ன, அது என்ன என கேள்வி கேட்டுக் குடைந்தாள். பொறுமையாக அவளுக்கு பதில் அளித்தப்படி வந்தான் பிரகாஷ். பிளேயரைக் காட்டி,

“இது என்ன பாட்டு பிகாஷ்?” என கேட்டாள் தீபா.

“இது கஷல் டா தீபாக்குட்டி”

“எனக்கு இது வேணா. சோக்காமா சோக்காமா தான் வேணும்”

“அது என்ன பாட்டு?”

“ஐயோ பிகாஷ்! அந்தப் பாட்டு கூட தெரிலயா? அங்கிள் இப்டி இப்டி ஆடுவாங்க” என இருந்த இடைவெளியில் உட்கார்ந்து உட்கார்ந்து ஆடிக் காட்டினாள். பிரகாஷிற்கு சிரிப்பை அடக்க முடியவில்லை.

“சூப்பர் டான்சர் மா நீங்க”

“ஆமா. நான் நிலாவ விட நல்லா ஆடுவேன். குட் கேர்ள் நானு. அப்புறம் பிகாஷ், அந்தப் பாட்டுல நம்ம நிலா மாதிரியே ஓன் ஆன்ட்டி பின்னால ஆடுவாங்க. “

“ஆமாவா?” ஓரக்கண்ணால் நிலாவை பார்த்தான் பிரகாஷ். அவள் பீதியில் இருந்தாள்.

“அது வேற யாரோடா தீபாக்குட்டி. என்னை மாதிரியே ஏழு பேர் இருப்பாங்கடா உலகத்துல”

“நீ இல்லன்னு தான் பத்துமாவும் சொன்னாங்க. நீ அசிங்கமா இருக்கியாம். அந்த ஆன்ட்டி அழகா இருக்காங்களாம்.”

மணி வாய்விட்டே சிரித்தான். கோபத்தில் பல்லைக் கடித்தாள் நிலா.

“சேட்டைப் பண்ணது போதும். பின்னால வா” விட்டால் தங்கள் குடும்ப மானமே மும்பைக்கு கப்பல் ஏறும் சாண்ஸ் இருந்ததால் மகளைப் பின்னால் கூப்பிட்டாள் சித்ரா.

“நோம்மா. நான் இனி குட் கேர்ளா இருக்கேன். பிகாஷ்கு ஒரு ரைம் மட்டும் சொல்லுறேன்”

“அதெல்லாம் வேணாம்” சிடுசிடுத்தாள் சித்ரா.

“பரவாயில்ல சித்ரா மேடம். சொல்லட்டும்”

‘மத்தவங்க முன்னுக்கு சித்ரா மேடம், தனியா மாட்டுனா சிமி. நல்லா போடுறடா வேஷம்.’

“நீ படி தீபா குட்டி. எனக்கு ரைம்ஸ்னா ரொம்பப் பிடிக்கும்”

தொண்டையை கணைத்துக் கொண்டவள்,

“ப்ரௌனி ப்ரௌனி

யெஸ் பாப்பா” கார் ப்ரேக் அடித்து நின்று மீண்டும் நகர்ந்தது.

சித்ராவோ,

“அந்த ரைம் வேணாம் தீபா” பதட்டம் அவள் குரலில். பிரகாஷோ கண்ணில் சிரிப்புடன் ரியர் வியூ கண்ணாடி வழியாக சித்ராவை தான் பார்த்துக் கொண்டிருந்தான்.

“இது தான் என் பேவரேட் அம்மா. நான் பாடுவேன்.” என்றவள் மணியின் பக்கத்தில் இருந்த குட்டி தலையணையை எடுத்து மடியில் வைத்துக் கொண்டு மீண்டும் ஆரம்பித்தாள்.

“அம்மா இப்டிதான் சொல்லிக் குடுத்தாங்க பிகாஷ்.”

ப்ரௌனி ப்ரௌனி

யெஸ் பாப்பா

ஈட்டிங் சுகர்

நோ பாப்பா

டெல்லிங் லை

நோ பாப்பா

ஒப்பேன் யோர் மவுத்

ஹா ஹா ஹா” இப்படி பாடிட்டு தலகாணிய ப்ரௌனின்னு நினைச்சு குத்தனும்.” குத்திக் காட்டினாள்.

“ஏன் தீபா ப்ரௌனி மேல இந்தக் கோபம்?” பார்வை சித்ராவின் மேலேயே இருந்தது.

“ப்ரௌனி சுகர் சாப்டாங்களே! நாட்டி செஞ்சா அடிக்க மாட்டாங்களா? அதான்” சிரித்தாள் சின்ன சிட்டு.

நிமிர்ந்து கண்ணாடியைப் பார்த்த சித்ரா, அவனின் பார்வை வீச்சை தாங்க முடியாமல் மீண்டும் தலைக் குனிந்துக் கொண்டாள்.

‘இப்படி போட்டுக் குடுத்துட்டாளே என் மக. நான் இவன ப்ரௌனினு கூப்பிடறது தெரியுமா தெரியாதான்னு தெரியலையே. பார்வைய பார்த்த தெரியும் போல தான் இருக்கு.’ நேரிடையாக எப்பொழுது இவனை இப்படி கூப்பிட்டோம் என மண்டையக் குடைந்தவாறே அமர்ந்திருந்தாள் சித்ரா.

வீட்டை அடைந்தவுடன்,

“சித்ரா கொஞ்சம் பேசனும். பைவ் மீனிட்ஸ் ப்ளிஸ்” என அழைத்தான் பிரகாஷ்.

மற்றவர்களை உள்ளெ அனுப்பிய சித்ரா, அவன் ட்ரைவர் கதவின் அருகே வந்து நின்றாள். அவன் உள்ளேயே தான் அமர்ந்திருந்தான்.

“என்னை அடிக்கனும், குத்தனும்னா தலைகாணி வேணாம் சிமி. நேருலயே நீ குடுத்தாலும் சந்தோஷமா வாங்கிக்குவேன்.” சட்டென அவளின் கையை இழுத்து தன் கன்னத்தில் வைத்துக் கொண்டான்.

“ஹ்ம்ம். அடி சிமி. அடி” அவனின் சொரசொரப்பான கன்னத்தில் இருந்து கையை உருவிக் கொண்டவள்,

“அடி உதவுற மாதிரி , பாய் பெஹன்(அண்ணன், அக்கா—தம்பிக்கு ஹிந்தில என்ன வரும்னு சிமிக்கு தெரியல) உதவ மாட்டான். இனியும் இப்படி கோக்கு மாக்கு பண்ணிக்கிட்டு பின்னால வந்தா, அடியக் கிளப்பறத தவிர எனக்கும் வேற வழி இல்ல. ஜோனை சரி கட்டிட்டா எல்லாம் ஓவரா? இனிமே தான் இருக்கு உனக்கு.” மிரட்டியவள் திரும்பி நடந்தாள்.

மறுபடியும் திரும்பி வந்தவள்,

“சரி நான் உன்னைதான் ப்ரௌனினு கூப்படறது உனக்கு தெரியுமா? தெரிஞ்சா தெரிஞ்சிட்டு போகுது. இப்ப என்னா அதுக்கு? நீ ப்ரௌனா தானே இருக்க?”

சிரிப்புடன் தலையை ஆமென ஆட்டினான்.

“அப்போ அப்டி தான் கூப்டுவேன். உன்னால ஒன்னும் பண்ண முடியாது. நான் பாக்க தான் டீசண்ட். என்னை சீண்டுன, தர லோக்கல் ஆயிருவேன். வர்ட்டா” கெத்தாக நடந்தாள்.

பிரகாஷிற்கு சிரிப்பு தாங்கவில்லை.

“மோட்டி, மேய்ன் தும்சே பியார் கர்த்தா ஹூன். இப்போத்தான் லவ் இன்னும் கூடுது. யூ ஆர் மைன்” அவள் எதையாவது தூக்கி வீசுவதற்குள் எண்ணையை அழுத்தினான்.

“பாவ் பஜ்ஜி! உனக்கு உடம்பு முழுக்க கொழுப்பு ஹே! போய் தொலை ஹே!” கத்தியவள், திரும்பி உள்ளே நடந்தாள்.

(தொடர்ந்து உன்னோடுதான்)

comments