Uyir kadhal

உயிர் காதலே உனக்காகவே… 16

குளோபல் பிரைவேட் ஐஏஎஸ் கோச்சிங் சென்டர், மாரதஹள்ளி ரிங்ரோடு, பெங்களூரு…

பெங்களூருவில் மையமான இடத்தில் பரந்து விரிந்து இருந்த அந்த நான்கடுக்கு கட்டிடத்தை பார்வையால் நனைத்தவாறு செக்யூரிட்டியிடம் அனுமதி பெற்று உள்ளே சென்றான் சரண்.

“மத்திய அரசின் அங்கீகாரம் பெற்ற மையம் சார். ஒரு பேட்ச்க்கு இருபத்தைந்து நபர்கள் மட்டுமே சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் சார்.

இதனால் மாணவர்களின் கற்கும் திறன் கூடும் சார். வருடத்திற்கு நூற்றுக்கும் மேற்பட்ட அதிகாரிகளை உருவாக்கும் பயிற்சி மையம் இது சார்.”
பயிற்சி மையத்தின் விபரம் பெற வந்திருப்பதாக சரணை எண்ணிக்கொண்டு, இனிய குரலில் கன்னடத்தில் மனப்பாடமாக ஒப்பித்துக் கொண்டிருந்தாள் வரவேற்பறை பெண்.

பொறுமையாக அவள் கூறியது அனைத்தையும் கேட்டுக்கொண்டவன், தன் உத்தியோக அடையாள அட்டையை எடுத்துக் காட்டியபடி, “எட்டு வருடங்களுக்கு முன்பு இங்கே படித்தவர்களின் விபரங்கள் எனக்கு வேண்டும். யாரைப் பார்க்க வேண்டும் நான்?”
அவனது பதவிக்கு உரிய மரியாதையை குரலில் பவ்யமாகக் கொண்டுவந்தவள், “சார், யூ வில் கெட் தட் டீடெயில்ஸ் இன் ஆபீஸ் ரூம் சார். இட்ஸ் இன் செக்கண்டு ஃபுளோர் சார்.”
நன்றி கூறிவிட்டு லிஃப்ட்டை நோக்கி நடந்தவன் இரண்டாவது தளத்தில் செயல்பட்டுக் கொண்டிருந்த அலுவலக அறையை வந்தடைந்தான்.

அங்கிருந்த அலுவலர் ஒருவரிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு தான் தேடி வந்த விபரங்களைக் கேட்க,

“எடுத்துடலாம் சார். ஒரு வருடத்துக்கு இருபது பேட்ச் பசங்க இங்க படிப்பாங்க. மார்னிங் பத்து பேட்ச். ஈவினிங் பத்து பேட்ச். குறிப்பிட்டு எந்த பேட்ச்னு தெரியுமா சார்?”

“ம்ம், எந்த பேட்ச்னு தெரியாது. ஆனா அவங்க மூனு பேருமே எட்டு மாதங்கள்தான் இங்க படிச்சிருக்காங்க. அதுக்கப்புறம் டிஸ்கன்டினியூ பண்ணிட்டு போயிட்டாங்க.”

 

“சரி சார் பார்க்கறேன்.” என்றவாறு கணிணியைக் குடைந்தவர், எட்டு வருடங்களுக்கு முந்தைய பேட்ச்களில் கிஷோர், ஜனார்த்தனன், ஜார்ஜ் பெயர்களைத் தேட… சில நொடிகளில் கண்டறிந்தார்.

“இதோ இருக்காங்க சார்.”
“இவங்ககூட இந்த பேட்ச்ல படிச்ச மற்ற இருபத்தைந்து பேரோட டீடெயில்ஸூம் எனக்கு வேணும்.”

“தந்திடலாம் சார்.” என்றவாறு அந்த பேட்ச் விபரங்களை சரிபார்த்தவர்,

“சார், இவங்க மூனு பேர் மட்டும் டிஸ்கன்டினியூ பண்ணல சார். கூடவே இன்னும் ரெண்டு பேரும் பண்ணியிருக்காங்க.”
சற்று நிமிர்ந்து அமர்ந்தவன். “யார் அவங்க?”

“ஆனந்தன், தனசேகர்.”

“இவங்களோட சொந்த விபரங்கள் இருக்கா? அவங்க அட்ரஸ், ஊர் பெயர் ஏதாவது?”

“இருக்கு சார். கிஷோர் பெங்களூரு அட்ரஸ்தான் கொடுத்திருக்காரு. ஜனார்த்தனன் ஹைதராபாத் அட்ரஸ் கொடுத்திருக்காரு. ஜார்ஜ் சிக்மகளூர் அட்ரஸ் கொடுத்திருக்காரு. ஆனந்தன் மதுரை, தனசேகர் திருச்சி சார்.

ஆனா அவங்க அஞ்சுபேருமே ஒரே லோக்கல் ரெசிடன்ஷியல் அட்ரஸ் இங்க பெங்களூரு அட்ரஸ் கொடுத்திருக்காங்க.”

“அவங்க அஞ்சு பேரும் ஒரே இடத்தோட அட்ரஸ் கொடுத்திருக்காங்களா?” ஏதோ புரிவது போல இருந்தது அவனுக்கு.

“ஆமா சார் ஒரே அட்ரஸ்தான் கொடுத்திருக்காங்க.”

“ஓகே. நீங்க இந்த டீடெயில்ஸ் எல்லாமே பிரிண்ட் பண்ணிக் கொடுங்க.” அவரிடம் அனைத்துத் தகவல்களையும் பெற்றுக் கொண்டவன், அவர்கள் ஐவரும் தங்கியிருந்த வீட்டின் அட்ரஸை மனதில் இருத்தி, அந்த வீட்டை நோக்கி வண்டியைச் செலுத்தினான்.

சற்று அருகாமையிலேயே இருந்த ஏரியாதான். பத்து நிமிட வண்டிப் பயணத்தில் அட்ரஸ்ஸில் குறிப்பிடப்பட்டிருந்த பகுதி வந்தது.

எட்டு வருடங்களில் அளப்பரிய வளர்ச்சியை அடைந்திருந்தது அந்த ஏரியா. மிக நெருக்கமான வீடுகளும் அப்பார்ட்மெண்ட்களும் முண்டியடித்திருந்தது. அட்ரஸை சரியாக விசாரித்துக் கொண்டு அந்த வீட்டின் முன் இறங்கினான்.

அழைப்பு மணியை ஒலிக்க விட்டதும் வீட்டிலிருந்து சற்று தாட்டியான உருவத்துடன் வயதான ஒருவர் வந்தார். அவரிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டவன்,

எட்டு வருடங்களுக்கு முன்பு இந்த வீட்டில் குடியிருந்தவர்களைப் பற்றி விசாரித்தான்.
போலீஸ் என்றதும் சற்று மிரண்டவர், பவ்யமாகவே பதில் கொடுத்தார்.

“சார், இது எங்க சொந்த வீடுதான். ஆனா நாங்க மூனு வருஷத்துக்கு முந்திதான் இங்க குடி வந்தோம். பெல்லாரில பிரைவேட் கம்பெனில வேலை பார்த்தேன் சார். ரிடையர்டு ஆனதும் இங்க வந்துட்டோம். அதுக்கு முன்னாடி வாடகைக்குதான் விட்டிருந்தோம்.” கன்னடம் சுத்தமாய் இருந்தது.

“ஓகே, இங்க எட்டு வருஷத்துக்கு முன்ன வாடகைக்கு இருந்தவங்களைப் பத்தி ஏதாவது தெரியுமா உங்களுக்கு?”

“சார் இங்க சுத்தி நிறைய காலேஜ் இருக்கறதால காலேஜ் பசங்களுக்குதான் சார் வாடகைக்கு விடுவாங்க. அஞ்சாறு பசங்க ஒன்னா சேர்ந்து ஒரு வீட்ல தங்குவாங்க. வாடகையும் நிறைய வரும். அதுக்குன்னே ஒரு ஏஜென்ட் இருக்கார் சார். அவர் பொறுப்புலதான் விட்ருவோம்.

ஆள் பார்த்து வாடகைக்கு வைக்கிறது, வாடகை வசூல் பண்றது, வீடு மெயின்டெனன்ஸ் எல்லாமே அவங்க பார்த்துப்பாங்க. அவங்களோட கமிஷன் போக நமக்கு வாடகை வந்துடும். நானும் அப்படிதான் விட்ருந்தேன் சார்.

அதனால வாடகைக்கு இருந்தவங்களைப் பத்தி எனக்கு எதுவுமே தெரியாது சார்.”

“ஓ… அந்த ஏஜென்ட் இப்ப எங்க இருக்கார்?”

“அவர் இந்த ஏரியாதான் சார். அவரை நான் வரச் சொல்லட்டுமா? அவர் ஃபோன் நம்பர் என்கிட்ட இருக்கு.”

“வரச் சொல்லுங்க.” என்றுவிட்டு வெளியே நின்றிருந்தவனை உள்ளே அழைத்து அமரச் செய்தவர், அந்த ஏஜென்ட்டுக்கும் ஃபோன் செய்து வரச்சொன்னார்.

அந்த வீட்டுப் பெண்மணி அவனுக்கு முகமன் கூறிவிட்டு தேநீர் தந்து உபசரிக்க, மெதுவாய் ஊர்ந்த பத்து நிமிடங்களுக்குப் பிறகு, சற்று உயரமான அதற்கேற்ற உடலமைப்பு கொண்ட ஒருவர் வந்து தான்தான் அந்த ஏஜென்ட் என்று அறிமுகம் செய்து கொண்டார்.

காதோரத்தில் லேசாக நரைத்திருந்தது அவருக்கு. ஆஜானுபாகுவாக தோற்றம் காட்டினார். தான் ஒரு முன்னாள் இராணுவ வீரர் என்றும் அறிமுகப்படுத்திக் கொண்டார்.

பேச்சில் கன்னடம், ஹிந்தி, தமிழ் மூன்றுமே கலந்துகட்டி அடித்தது.

“வணக்கம் சார். இந்த வீட்ல எட்டு வருடங்களுக்கு முன்பு தங்கியிருந்த இந்த மாணவர்களைப் பத்தி விசாரிக்கனும்.” என்றபடி கிஷோர், ஜனார்த்தனன், ஜார்ஜ் ஆகியோரது புகைப்படங்களை எடுத்து நீட்டினான்.

புகைப்படங்களை வாங்கிப் பார்த்தவர் நாடியை லேசாகத் தடவியபடி, “பார்த்த மாதிரிதான் சார் இருக்கு. ஆனா சரியா நினைவுக்கு வரலையே. ஒரு வருஷத்துக்கு பல மாணவர்களுக்கு வீடு அமர்த்தித் தரேன் சார்… எட்டு வருஷத்துக்கு முன்னாடி பார்த்தது சரியா நினைவில்லையே.”

“கொஞ்சம் நியாபகப்படுத்தி பாருங்க. இந்த வீட்லதான் தங்கியிருந்திருக்காங்க. அஞ்சு பேர் தங்கியிருந்திருக்காங்க. பக்கத்துல குளோபல் பிரைவேட் ஐஏஎஸ் கோச்சிங் சென்டர்ல படிச்சிருக்காங்க. எட்டு மாசத்துலயே படிப்பை டிஸ்கன்டினியூ பண்ணிட்டு அவங்கவங்க ஊருக்கு போயிட்டாங்க.”

நெற்றி சுருக்கி யோசித்தவர், “எட்டு மாசத்துல போயிட்டாங்களா?”

“ஆமா”

“ஆங்… நினைவுக்கு வருது சார். பொதுவா வீடு வாடகைக்கு எடுக்கற பசங்க அஞ்சாறு பேரா ஷேர் பண்ணிக்குவாங்க. வாடகை குறைச்சலா வருமேன்னு.
ஆனா, இந்த இரண்டு வீட்டுக்குமே சேர்த்து அந்த அஞ்சு பசங்களே வாடகையை குடுத்திட்டாங்க.

யாரையும் அதுக்கு மேல இந்த வீட்ல தங்கறதுக்கு சேர்த்துக்கலை. நல்ல வசதியான வீட்டுப் பசங்க.
அதுமட்டுமில்ல நாங்க பொதுவா ஒரு வருஷ அக்ரிமெண்ட்தான் போடுவோம். நடுவுல காலி பண்ணா மீதி மாச வாடகைய முழுசா கொடுக்கனும். இதுக்கு எப்பவுமே நிறைய பசங்க பிரச்சனை பண்ணுவாங்க.

ஆனா இந்த பசங்க அப்ப அவங்களுக்கு இருந்த சூழ்நிலையிலயும், பிரச்சனையே பண்ணாம மீதி பணம் எல்லாத்தையும் செட்டில் பண்ணிட்டுதான் காலி பண்ணி போனாங்க.”

“புரியல? என்ன சூழ்நிலை?”

“அது… அவங்ககூட தங்கியிருந்த பையன்ல ஒருத்தன் செத்துப் போயிட்டான் சார்.”
சற்று நிமிர்ந்து அமர்ந்தான் சரண்.

சட்டென்று வந்து விழுந்தன கேள்விகள். “ஏன்? எதனால? எப்படி செத்தான்?”

“விபத்துன்னுதான் அந்த பசங்க சொன்னானுங்க. ஆனா தற்கொலைன்னும் ஏரியால பேச்சு இருந்தது சார்.

செத்துப்போன அந்த பையனும் அவன் காதலிக்கிற பொண்ணும் சிக்மகளூர் மலைபள்ளத்தாக்குல கார்ல போகும்போது கார் உருண்டு விபத்தாகிடுச்சி சார். அதுல அவனும் அந்த பொண்ணும் செத்து போயிட்டாங்க.

அதுக்கப்புறம் கொஞ்சநாள்ல அந்த பையனோட விபத்து கேஸ் முடிஞ்சதும் இவங்க நாலு பேரும் வீட்டை காலி பண்ணிட்டு அவங்கவங்க ஊருக்கு போயிட்டாங்க சார்.

நல்ல அழகான பையன் சார்… வீட்ல காதலுக்கு பெத்தவங்க ஒத்துக்கல, அதனால தற்கொலை பண்ணிக்கிட்டாங்கன்னும் அப்ப ஏரியால பேச்சு இருந்தது சார்.

போலீசெல்லாம் இங்ககூட வந்து எல்லாரையும் விசாரிச்சாங்க.”
அவர் பேசப்பேச ஒரளவுக்கு கேஸின் கோணம் பிடிபட்டது சரணுக்கு. விபத்தோ தற்கொலையோ அல்ல.

வேறு ஏதோ நண்பர்களுக்கிடையில் நடந்திருக்கிறது. தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் கொலைகள் அதை தெள்ளத் தெளிவாக உணர்த்துகின்றன.

“செத்துப் போனது யார் சார்? தனசேகரா? ஆனந்தனா?”

“ம்ம்… பேர் சரியா நினைவில்ல. ஆனந்தன்னுதான் நினைக்கிறேன்.”

“ஓகே. சார் உங்க தகவல்களுக்கு நன்றி. வேற ஏதாவது தகவல்கள் தேவைப்பட்டாலும் வந்து கேட்டுக்கறேன்.” என்றபடி அவரது அலைபேசி எண்களைப் பெற்றுக்கொண்டவன் வெளியே வந்து வண்டியை எடுத்தான்.

அந்த ஏரியா லோக்கல் காவல் நிலையத்தை நோக்கி வண்டியை செலுத்தியவனின் உள்ளத்தில் இந்த கேஸ் நிறைவுக்கு வரப்போகும் உற்சாகம் வந்திருந்தது.
மாரதஹள்ளி சரகத்துக்குட்பட்ட காவல் நிலையம், அதிக பரபரப்பின்றி காணப்பட்டது. எழுத்தர் தனது வழக்கமான பணி எதையோ செய்து கொண்டிருக்க, கான்ஸ்டபிள் இருவர் அவர்களுக்குள் எதையோ பேசிக் கொண்டிருந்தனர்.

உள்ளறையில் இருந்த இன்ஸ்பெக்டர் ஏதோ ஒரு கோப்பினுள் தலையைக் கொடுத்து அமர்ந்திருந்தார்.

காவல் நிலைய வாசலில் வண்டியை நிறுத்தியவன், உள்ளே நுழைந்து தனது அடையாள அட்டையைக் காட்டியதும், விரைத்து சல்யூட் வைத்த கான்ஸ்டபிள்களிடம் இன்ஸ்பெக்டரை சந்திக்க வேண்டும் என்று சொல்ல… உள்ளே அனுமதிக்கப்பட்டான்.

ஐம்பதுகளின் பிற்பாதியில் மதிக்கத்தக்க இன்ஸ்பெக்டரும் எழுந்து சல்யூட் வைக்க, தலையசைத்து ஏற்றுக்கொண்டவன் அமர்ந்ததும் தானும் அமர்ந்துகொண்டார்.

மேஜையிலிருந்த நேம் போர்டில் அவரது பெயரை ராஜ்குமார் என்று அறிந்து கொண்டவன், தான் தேடி வந்த கேஸ் விபரத்தைச் சுருக்கமாகக் கூறினான்.

“எட்டு வருஷத்துக்கு முன்ன நடந்த அந்த விபத்து கேஸோட ஃபுல் டீடெயிலும் எனக்கு வேணும்”

“தரேன் சார். அது சாதாரண விபத்து கேஸ்தான் சார்.” என்றபடி கான்ஸ்டபிளை அழைத்து கேஸ் விபரங்களைச் சொல்லி தேடித் தரப் பணித்தவர், கான்ஸ்டபிள் நகர்ந்ததும், “சார், இந்த கேஸைப் பத்தி உங்ககிட்ட கொஞ்சம் பேசனும். இங்க வேணாம் நாம வெளிய எங்கயாவது போயிடலாம்.”

சற்று ஸ்ருதி குறைந்த ரகசியமான அவரது குரலில், அவர் எதையோ தன்னிடம் சொல்ல விரும்புவதைப் புரிந்து கொண்டவன், அருகாமையில் உள்ள உணவகம் ஒன்றில் காத்திருப்பதாகச் சொன்னான்.

கான்ஸ்டபிள் தேடித் தந்த விபரங்களைப் பார்த்தவனுக்கு இறந்து போனது ஆனந்தன் என்று புரிந்தது. அந்த விபரங்களைப் பிரதி எடுத்துப் பெற்றுக் கொண்டவன், நேராக அந்த உணவகத்துக்கு வந்து சேர, பத்து நிமிட இடைவெளியில் அந்த இன்ஸ்பெக்டரும் வந்து சேர்ந்தார்.

சற்று உயர்தரமான ரெஸ்டாரண்ட் அது. ஒதுக்குப் புறமாக இருந்த இருக்கை ஒன்றில் எதிரெதிராக அமர்ந்தனர் இருவரும்.
அவரவர்க்குத் தேவையானவற்றை ஆர்டர் செய்த பிறகு பேரர் சென்றதும் பேச்சை ஆரம்பித்தான் சரண்.

“சொல்லுங்க மிஸ்டர் ராஜ்குமார்.”

“சார், இப்ப சமீபத்துல நடந்த மூன்று அரசு அதிகாரிகள் கொலை கேஸை நான் வாட்ச் பண்ணிக்கிட்டுதான் சார் இருக்கேன். உங்களைப் பத்தியும் உங்க ஃபாதரைப் பத்தியும் நல்லாத் தெரியும் எனக்கு. அதனாலதான் எனக்குத் தெஞ்ச சில தகவல்களை உங்களுக்குச் சொல்லலாம்னு…”
லேசாகத் தயங்கியவரை பார்வையாலேயே மேற்கொண்டு சொல்லும்படிக் கூற,

“ஆக்சுவலா உங்களை நேர்ல வந்து பார்த்து சொல்லனும்னுதான் சார் நினைச்சிருந்தேன். ஆனா, ரிட்டையர்ட் ஆகப் போற நேரத்துல தேவையில்லாம ஏதும் பிரச்சனை வருமோன்னும் பயமா இருந்தது. இன்னைக்கு நீங்களா தேடி வரவும்தான்…”

“…”

“என்னோட பேர் எதுலயும் வெளிய வராம பார்த்துக்கோங்க சார். உயரதிகாரிகளை என்னால பகைச்சுக்க முடியாது.”

“இல்ல, உங்க பெயரை எங்கயும் பயன்படுத்தலை. உங்களுக்குத் தெரிந்த விபரங்களைச் சொல்லுங்க.”

“சார் எட்டு வருஷத்துக்கு முன்ன இந்த விபத்து நடந்தப்ப இதே ஸ்டேஷன்லதான் நான் ஹெட் கான்ஸ்டபிளா இருந்தேன் சார்.
விபத்து நடந்து ஒரு நாள் கழிச்சுதான் அந்த பசங்க கம்ப்ளெயிண்ட் கொடுக்க வந்தாங்க. அப்ப இருந்த இன்ஸ்பெக்டரும் சின்சியரா பெங்களூர் சிட்டி முழுக்கத் தேடினாரு. அவங்க வழக்கமா எங்க போவாங்கன்னு அந்தப் பசங்ககிட்ட விசாரிச்சு சிக்மகளூர் காவல் நிலையத்துக்கும், வனத்துறை அதிகாரிகளுக்கும் தகவல் சொல்லி தேடினோம் சார்.

கிட்டத்தட்ட ஒருவாரம் கழிச்சுதான் விபத்து நடந்ததையே கண்டுபிடிக்க முடிஞ்சது. ஆனா…,”

“…”

“எதுக்காகன்னு தெரியாது அந்தக் கேசை மேற்கொண்டு விசாரிக்காம விபத்துன்னு உடனேமூடச் சொல்லி மேலிடத்துல இருந்து பயங்கர பிரஷர். பணமும் பெரிய அளவுல கைமாறுச்சி.

சாதாரணமா செய்யக்கூடிய எந்த சோதனையுமே அந்த கேஸ்ல செய்யப்படலை சார். விபத்து நடந்த இடத்துல இருந்து எடுத்த காரையும் சாம்பலையும்கூட சோதனை பண்ணல. அவசரஅவசரமா கேசை மூடிட்டாங்க.”

“வாட்? இறந்து போன நபர்களை உறுதிப் படுத்தற சோதனைகளைக்கூடச் செய்யலையா?”

“ஆமாம் சார். அந்த சோதனைகள் செய்யப்பட்டதா பொய்யா சர்டிபிகேட் வாங்கி வேகமா கேசை மூடிட்டாங்க சார்.”

“அவ்வளவு அவசரமா மூடக் காரணம்? யாரெல்லாம் இதுல இன்வால்வ் ஆனாங்கன்னு உங்களுக்குத் தெரியுமா?”

“இல்ல சார். அது எனக்குத் தெரியாது. ஆனா இது கண்டிப்பா விபத்தில்லைன்னு மட்டும் உறுதியா தெரிஞ்சது.”

“எதை வச்சு அப்படி சொல்றீங்க?”
“ஏன்னா, கார் விபத்துக்குள்ளான இடம் ரிசர்வ் ஃபாரஸ்ட் ஏரியா. அங்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதியே கிடையாது. அங்க அந்த கார் எப்படி போச்சுன்னு டவுட் இருந்துச்சி சார்.
அதுமட்டுமில்லாம அந்த விபத்துல செத்துப் போனவனோட தங்கியிருந்த பிரெண்டுங்கதான் இப்ப சமீபத்தில் கொலை செய்யப்பட்ட கலெக்டர், டிஎஸ்பி, ஃபாரஸ்ட் ஆபிசர்…

கண்டிப்பா அப்ப நடந்த சம்பவத்துக்கும் இப்ப நடக்குற தொடர் கொலைகளுக்கும் சம்பந்தம் இருக்கு சார்.”

“நண்பர்கள் அஞ்சு பேர்ல நாலு பேர் இப்ப உயிரோட இல்லை. மீதி இருக்கற அந்த தனசேகர்கிட்டதான் எல்லா ரகசியமும் இருக்கு.” யோசனையோடு சரண் கூற…

“ஆமாம் சார். செத்துப் போன ஆனந்தனும் அந்த தனசேகரும் ஒரே ஊர்க்காரங்க போல, நெருங்குன நண்பர்கள்னு நினைக்கிறேன். அப்ப அந்த பையன் மட்டும்தான் உண்மையா அழுத மாதிரி எனக்குத் தெரிஞ்சது.

அதுமட்டுமில்ல ஆனந்தன் குடும்பத்தைச் சேர்ந்தவங்களுக்கு எல்லா ஃபார்மாலிட்டியையும் முன்ன நின்னு முடிச்சுக் கொடுத்ததும் அவன்தான் சார்.”
கையிலிருந்த கேஸ் விபரங்களைப் பார்த்தவாறு, “இதுல குடுத்திருக்கற அட்ரஸ்ல இன்னும் அந்த தனசேகர் இருப்பானான்னு தெரியல.

திருச்சியில விசாரிக்கனும்.” என்ற சரண் மேலும் தேவையான சில விபரங்களை அவரிடம் பெற்றுக்கொண்டு, அவர் விடைபெற்றுச் சென்றதும் கிளம்பி அவனது அலுவலகம் வந்து சேர்ந்தான்.

அன்றைய நாளில் விசாரித்தத் தகவல்களை உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கும் போது அவனது அலைபேசி இசைத்தது.
ரகு காலிங்… திரையில் ரகுவின் பெயரைக் கண்டதும் அழைப்பை ஏற்றுக் காதில் வைத்தான்.

“சொல்லு ரகு.”

“இங்க சிக்மகளூர் அரசு மருத்துவமனையில ஜார்ஜ் போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்ஸ்லாம் கலெக்ட் பண்ண முயன்ற ஒருவனை அரெஸ்ட் பண்ணியிருந்தோம் இல்லையா சார். அவனோட அலைபேசியில இருந்து கடைசியா தனசேகர்ங்கறவர்க்கு கால் போயிருக்கு சார்.”

“வாட்? தனசேகரா?”

“எஸ் சார். நிறைய கால் அந்த நம்பர்ல இருந்து வந்திருக்கு. இந்த நம்பர்ல இருந்தும் போயிருக்கு. அந்த தனசேகர்ங்கறவரோட முழு விபரமும் அனுப்பியிருக்கேன் சார்.
அந்த நம்பரோட வாட்ஸ் ஆப் டிபில ஒரு புகைப்படம் இருந்தது. அநேகமா அது அந்த தனசேகரா இருக்கலாம் சார்.”

“ஃபோட்டோவும் அனுப்பியிருக்கீங்களா?”

“ஆமா சார்.”

“ஓகே. நான் அப்புறம் கூப்பிடறேன்.”
அழைப்பைத் துண்டித்ததும் விரைவாக ரகு அனுப்பிய தகவல்களையும் புகைப்படத்தையும் பார்த்தவன் அதிர்ந்து போனான்.

‘இவர்…? ஹரிணியின் அண்ணன் தனா அல்லவா? இவரா?’ மிகுந்த அதிர்ச்சியாக இருந்தது அவனுக்கு
ஹரிணியின் செய்கைகளுக்கான காரணம் புரிவது போல இருந்தது. ‘தன் அண்ணன் செய்த கொலைகளை மறைக்கதான் இவள் எதையும் என்னிடம் சொல்லாமல் இருந்தாளோ?’ மிகக்கடுப்பாக இருந்தது அவனுக்கு.

தன் அண்ணனை எச்சரிக்கை செய்ய திருச்சிக்கு வேறு சென்றிருக்கிறாள். ‘நேரில் வந்து உன்னிடம் பேசிக் கொள்கிறேன்’ மனதுக்குள் கருவிக் கொண்டவன், உடனடியாக திருச்சிக்குக் கிளம்பினான்.

திருச்சியில் லோக்கல் காவல் நிலையத்தைத் தொடர்பு கொண்டு மடக்கிப் பிடிக்கச் சொல்வோமா என்று எண்ணியவன் தன் எண்ணத்தை மாற்றிக் கொண்டான்.

‘வேண்டாம் அவன் தப்பிக்கவும் வாய்ப்பிருக்கிறது. நேரில் சென்று கவனித்துக் கொள்ளலாம்’ என்றெண்ணிக் கொண்டவன் தனது வாகனத்தை விரைந்து செலுத்தினான்.

திருச்சியில் தனாவிடம் கோபமாகப் பொறிந்த ஹரிணி அறைக்குள் வந்ததும் தன்னைமீறி படுக்கையில் விழுந்து கதறத் துவங்கினாள்.
தன் அண்ணன் இவ்வளவு கேவலமாக நடந்து கொண்டிருக்கிறானே. உயிராய் பழகிய நண்பனுக்கு எப்பேர்ப்பட்ட துரோகம் செய்திருக்கிறான். மனதே ஆறவில்லை அவளுக்கு.

ஹரிணியைத் தொடர்ந்து வந்த சுஜியும் எவ்வளவு தேற்றியும் ஹரிணியின் அழுகை மட்டுப்பட மறுத்தது. அவளது நிலைமை சுஜிக்கும் புரிந்தது.

மதுரையிலிருந்து திருச்சி வரும் வரை ஒரு நிமிடம்கூட ஹரிணி அமைதியாக இல்லை.

எதைஎதையோ எண்ணித் தனக்குள் உழன்றவள், தனா அண்ணன் மேல எந்த தப்பும் இருக்காதுடி என்று திரும்பத் திரும்ப கூறிக்கொண்டே வந்தாள்.

அது தனக்காக கூறினாளா? இல்லை அவளுக்கு அவளே சமாதானம் செய்து கொண்டாளா? ஏதோ ஒன்று ஹரிணியைப் பார்க்கப் பாவமாக இருந்தது. ஹரிணி தனாவை இப்படி எதிர்பார்க்கவில்லை என்பது மட்டும் உறுதி. தன் அண்ணனின் மறுபக்கம் புரட்டிப் போட்டிருந்தது அவளை.
தேம்பலுடன் படுத்திருந்தவளின் தோளைத் தொட்ட சுஜி, “ஹரிணி, ப்ளீஸ் அழாத.”

“…”

“அடுத்து என்ன பண்றது? சரணுக்குப் பேசலையா நீ?”
சுஜியின் கேள்வியில் மீண்டும் அழுகை உடைப்பெடுத்தது. ஒற்றை மகன் என்று தனாவின் மீது உயிரையே வைத்திருக்கும் தன் பெரியப்பா பெரியம்மாவையும் தன் தாய் தந்தையையும் நினைத்து அழுகை வந்தது.

தனாவைப் போலீஸ் அரெஸ்ட் செய்தால் தாங்குவார்களா அவர்கள்? ஆனாலும் ஆனந்தனுக்குத் தன் அண்ணன் செய்த துரோகம் நினைவுக்கு வந்து வெகுவாக இம்சித்தது.

கண்ணீர் வற்றும் மட்டும் அழுது தீர்த்தவள், தனக்குள் முடிவு எடுத்தவளாக, “சரணுக்கு ஃபோன் போட்டு வரச் சொல்லுவோம். என் ஃபோனை எடு சுஜி.”
சுஜி அலைபேசியை எடுத்துக் கொடுத்ததும் சரணுக்கு அழைத்தாள்.

பெங்களூருவிலிருந்து கிளம்பிய சரண் ஓசூர் பார்டர் தாண்டி தமிழகப்பகுதியில் கிருஷ்ணகிரி அருகே வாகனத்தில் வந்து கொண்டிருக்கும் போது, அவனுக்கு ஹரிணியிடமிருந்து அழைப்பு வந்தது.

ஹரிணியின் அழைப்பைப் பார்த்தவன், “இவ எதுக்கு இந்நேரத்துக்கு கால் பண்றா?” என்று தனக்குள் முனகியபடி வண்டியை ஓரமாக நிறுத்தி விட்டு அழைப்பை ஏற்றான். அவள் மீது ஏககோபம் வேறு இருந்தது அவனுக்கு.

“சரண்…”
அலைபேசியில் ஹரிணியின் விசும்பலையும் அழுகையையும் கேட்டவனுக்கு சட்டென்று பதற்றம் தொற்றிக்கொள்ள, “ஹரிணி, ஹரிணிம்மா… என்ன ஆச்சு?”
அழுகையோடும் விசும்பலோடும் தங்களுக்கு டைரி கிடைத்தது,

காட்டிற்குள் ஆனந்தனைப் பார்த்தது, இங்கு வந்து ஆனந்தனின் பெற்றோரைப் பார்த்தது, தனா தன்னிடம் கூறியது என அனைத்தையும் கூறியவள்,

“நீங்க உடனே திருச்சிக்கு வாங்க? அந்த மூனு கொலைகளை செய்தது ஹேப்பிண்ணாதான், ஆனா அவங்க இந்த நிலைமைக்கு வர்றதுக்கு அவனுங்களும் எங்க தனா அண்ணனும்தான் காரணம்.”
ஹரிணியின் பேச்சைக் கேட்டவனுக்குள் பெரும் அதிர்ச்சி. இப்படியொரு திருப்பத்தை அவன் எதிர்பார்க்கவில்லை.

‘ஆனந்தன் சாகவில்லையா?’ மனதுக்குள் அதிர்வாக உணர்ந்தவனுக்கு ஏனோ சிக்மகளூர் மலை உச்சியில் சத்ய சஞ்சீவினி வைத்திய சாலையில் பார்த்த உருவம் நினைவுக்கு வந்தது. உடனடியாக ரகுவுக்கு அழைத்து சில சந்தேகங்களை போக்கிக் கொள்ள வேண்டும் என்று எண்ணிக் கொண்டவன்,

“ஹரிணி நான் திருச்சிக்குதான் வந்துகிட்டேதான் இருக்கேன். சீக்கிரம் வந்துடுவேன். நீ ஜாக்கிரதையா இரு. நான் கொஞ்ச நேரத்துல கால் பண்றேன்.” என்றபடி அழைப்பைத் துண்டித்துவிட்டு ரகுவுக்கு அழைத்தான். எதிர்முனையில் அழைப்பு ஏற்கப்பட்டதும்,

“ரகு இப்ப எங்க இருக்க?”

“சிக்மகளூர்லதான் சார்.”

“ஓகே. நீ என்ன பண்ற, ஹெப்பி ஃபால்ஸ்ல இருந்து மலைக்கு மேல ஏறினா சத்ய சஞ்சீவினி வைத்திய சாலை இருக்கும். அங்க போய், ஆதிவாசிகள் கண்டெடுத்து கொண்டு வந்த நோயாளி ஒருத்தர் எட்டு வருஷமா அங்க இருக்காரு. அவர் அங்கதான் இருக்காரான்னு எனக்கு செக் பண்ணிட்டு தகவல் சொல்லு.”

“சரி சார்.” என்றபடி ரகு அழைப்பைத் துண்டித்ததும், தனது வாகனத்தைக் கிளப்பியவன் முன்னிலும் விரைவாக திருச்சியை நோக்கி செலுத்தினான்.

சரியாக ஒன்றறை மணி நேரம் கழித்து சரண் சேலம் நெருங்கிய போது ரகுவின் அலைபேசியிலிருந்து அழைப்பு வந்தது.

“சொல்லு ரகு.”

“சார், நான் இப்ப அந்த வைத்திய சாலையில இருந்துதான் பேசறேன். நீங்க சொன்ன அந்த நோயாளி இங்க இல்லை சார். மதியமே கிளம்பி மலையை விட்டு இறங்கினாராம். இன்னும் திரும்பி வரலைன்னு சொல்றாங்க சார்.”

ரகு கூறியதைக் கேட்டு அழைப்பைத் துண்டித்தவனுக்குள் பெரும் பதற்றம் தொற்றிக் கொண்டது. மலைமேல் தான் அன்று பார்த்தவன் நிச்சயமாக ஆனந்தனாகத்தான் இருக்க வேண்டும். உள்ளுணர்வு உணர்த்தியதை ரகுவின் கூற்றும் உறுதி செய்ய, அடுத்துச் செய்ய வேண்டியவற்றை முடிவு செய்தான்.

‘தன் நிலைமைக்குக் காரணமானவர்களில் மூவரைக் கொலை செய்த ஆனந்தனின் அடுத்த இலக்கு நிச்சயமாக தனாதான். அவரைத் தேடித் திருச்சிக்குதான் அவன் சென்றிருக்க வேண்டும். தனாவை எச்சரிக்க வேண்டும்’

எண்ணிக்கொண்டவனுக்குள், அங்கே ஹரிணி இருப்பதும் பதட்டத்தைக் கொடுத்தது.

ஹரிணிக்கு உடனடியாக அழைத்தவன், “ஹரிணி, அந்த ஆனந்தன் உங்க அண்ணனைத் தேடி அங்க வந்தாலும் வருவான்னுதான் நினைக்கிறேன். எதுக்கும் நான் லோக்கல் போலீஸ் ஸ்டேஷனுக்குத் தொடர்பு கொண்டு உங்க அண்ணன் வீட்டுக்குக் காவலுக்கு வரச் சொல்றேன். உங்க அண்ணனை ஜாக்கிரதையா இருக்கச் சொல்லு. நீயும் சுஜியும் பாதுகாப்பா இருங்க.”

“நீங்க எப்ப வருவீங்க?”

“சீக்கிரம் வந்துடுவேன். சேலம் தாண்டிட்டேன். நீ ஜாக்கிரதையா இரு.”
ஹரிணிக்கு பத்திரமாக இருக்கச் சொல்லிவிட்டு உடனடியாக தீரனுக்கு அழைத்தான். கேஸ் முடிவுக்கு வந்துவிட்டதைக் கூறியவன்,

குற்றவாளியைத் தேடி திருச்சிக்குச் செல்வதைத் தெரிவித்தான்.

மற்ற விபரங்களை நேரில் வந்து சொல்வதாகக் கூறியவன்,

“நீங்க உடனடியா தமிழக காவல்துறை உயரதிகாரிகளைத் தொடர்பு கொண்டு திருச்சியில ஹரிணியோட அண்ணன் தனசேகர் வீட்டுக்கு செக்யூரிட்டி ஏற்பாடு பண்ணச் சொல்லுங்க. ஹரிணியும் அங்கதான் இருக்கா. அந்த வீட்டு அட்ரஸ் நான் அனுப்புறேன்.”

தன் அலைபேசியிலிருந்து தனாவின் முகவரியை தீரனுக்கு அனுப்பி வைத்தவனின் கைகளில் அவனது வாகனம் பறந்தது. ஏழு மணிநேரப் பயணத்தில் சென்றடைய வேண்டிய திருச்சியை ஐந்தரை மணி நேரத்தில் சென்றடைந்தான்.

சரண் ஃபோன் செய்து ஆனந்தன் அங்கு வரக்கூடும் என்று கூறியதும், முதலில் புரியாவிட்டாலும் பிறகு புரிந்தது. அவனது அடுத்த இலக்கு தன் அண்ணன் தனசேகர்தானே. அவரைத் தேடி இங்கு வரக்கூடும் என்று புரிந்து கொண்டவள், சுஜியிடம் விபரத்தைக் கூறிவிட்டு தன் அண்ணனைப் பார்க்கச் சென்றாள்.

ஆயிரம் இருந்தாலும் தனா அவளது உயிருக்குயிரான அண்ணன்.

அவனது உயிருக்கு ஆபத்து வரக்கூடும் என்றதும் தன்னை மீறி கால்கள் அவனைத் தேடிச் சென்றது.
ஹாலில் அமர்ந்திருந்த அண்ணனைக் காணாமல் அவனது அறைக்குள் தேடிச் சென்றவளுக்குப் பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.

தன் முடிவைத் தானே தேடிக் கொண்ட தனா உத்திரத்தில் தொங்கிக் கொண்டிருக்க, அருகே இருந்த இருக்கையில் அவனைப் பார்த்து அமர்ந்தவாறு ஆனந்தன்… அவனருகே இருந்த மேஜையில் படபடத்தவாறு தனாவின் இறுதிக் கடிதம்…

—தொடரும்.