Anal aval 9

தமிழிடம் பேசிவிட்டு விவேகன் மற்றும் தென்றல் இருக்கும் இடத்திற்கு வந்த மித்ரன், தென்றல் சற்று தெளிந்து இருப்பதை கண்டு நிம்மதி பெருமூச்சு ஒன்றை வெளியிட்டவன்,

அவர்களிடம் சென்று விவேகனிடம் காலையில் நடந்த சம்பவத்திற்கும் தமிழுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்பதை பேசி புரிய வைத்தான். அதன்பிறகே தமிழின் மீதான விவேகனின் கோபம் தணிந்தது.

பிறகு மூவரும் சேர்ந்து சகஜமாக பேசியவாரு அவர்களின் வகுப்பிற்கு சென்றனர்.

மித்ரன் கூறியவற்றை மனதில் குழப்பிக் கொண்டே தமிழ் அவன் வகுப்பறைக்கு சென்றான். பிறகு வகுப்புகள் துவங்க அந்த நினைவுகளிலிருந்து தன்னை மீட்டுக் கொண்டவன் பாடங்களில் கவனம் செலுத்த துவங்கினான்.

வகுப்புகள் அதன் போக்கில் சென்று கொண்டிருக்க என்றும் இல்லாத திருநாளாக இன்று தென்றல் அனைத்து பாடங்களிலும் அதிக கவனம் செலுத்தினாள்.

அதிலிருந்து அவள் தன் பயத்தில் இருந்து வெளி வர முயன்று கொண்டிருக்கிறாள் என்பது புரிய விவேகனும் மித்ரனும் அவளை அவள் போக்கில் விட்டு விட்டனர்.

வெங்கடேசன் சாரும் கடமையே கண்னென பாடத்தை நடத்தியவர் மாணவர்களில் யார் முகத்தையும் தெரியாமல் கூட காணவில்லை. பாடத்தை முடித்தவர் இன்றுடன் கல்லூரி விடுமுறை எனவும் பத்து நாட்களுக்குப் பிறகு தேர்வுகள் துவங்கும் எனவும் அறிவித்து செல்ல.

அன்றைய கல்லூரி நேரமும் முடிவுக்கு வந்தது.

கல்லூரியில் இருந்து வெளியேறியவர்கள் தமிழை தேடி சென்று ஸ்கூட்டியை தென்றல் வீட்டில் விட்டு விடுமாறு கூற,

தமிழ் விவேகன் முகத்தையும் தென்றல் முகத்தையும் இவர்கள் பேசி விட மாட்டார்களா என ஏக்கமாக பார்க்க விவேகன் தமிழை பார்த்து சினேகமாக சிரிக்க,

“சாரி விவேக் காலையில நான் பொறுமையா தாண்டா வந்தேன் எதிரில வந்தவன் தான் கொஞ்சம் கோளாறு பண்ணிட்டான்”  என்க.

அதற்கும் விவேகனிடமிருந்து சிரிப்பே பதிலாக வர தமிழ் மீண்டும் தென்றலின் முகத்தை பார்த்தான். தென்றல் தமிழை கண்டதும் குனிந்த தலையை நிமிரவே இல்லை.

பிறகு வண்டியை எடுத்துக்கொண்டு தமிழ் புறப்படவும் மூவர் படை மித்ரன் வீட்டை வந்தடைந்தது.

வழக்கம் போல் சாப்பிட்டு முடித்தவர்கள் அவர்களின் அரட்டையை தொடர விவேகன் சற்று கோபமாக தென்றலிடம் பேசினான்.

“இங்க பாரு தென்றல் இனிமே நீயாதான் தனியா பஸ்ஸில போக வர பழகிக்கணும் டெய்லி ஒருத்தர உனக்கு பாதுகாப்புக்கு அழைச்சுட்டு இருக்க முடியாது புரியுதா. தனியா வரதுனா காலேஜுக்கு வா இல்லையா வீட்டிலேயே இருந்துக்க” என விவேகன் பொரிந்து தள்ளினான்‌.அவனும் பாவம் எவ்ளோ தான் பொறுமையா இருக்க முடியும்.

இன்று கண்ணீர் சுனாமியே வரப்போவதை அறிந்த மித்ரன் கையில் கை குட்டையுடன் தயாராக இருக்க,

தென்றலோ இவர்களின் எதிர்பார்ப்பிற்கு எதிராக, “சரி விவு இதுக்கு எதுக்கு இவ்வளவு சீரியஸா பேசுற நான் தனியா வரணும் அவ்வளவு தானே சரி” என முடித்துவிட்டாள்.

மித்ரனிர்க்கும் விவேகனிர்க்கும் பேரதிர்ச்சி இனி காலேஜிக்கு வரமாட்டேன் வீட்டிலேயே இருக்கேன்னு சொல்லிட்டுவானு நினைத்திருந்த இருவருக்கும் தென்றலின் இந்த மாற்றம் பேரிடியாக இருந்தது.

பிறகு தென்றலே “சரிடா நான் வீட்டுக்கு கிளம்பறேன் என்ன பஸ் ஸ்டாப்புல கொண்டு வந்து விடுங்க” என்க.

மூவரும் ஒரு சேர பேருந்து நிலையம் சென்று அவர்கள் பேருந்திற்கு காத்திருக்க எந்த ஒரு அலப்பறையும் செய்யாமல் தென்றல் வந்த பேருந்தில் ஏறி கையசைத்து விட்டு சென்று விட்டாள்.

பேருந்து இவர்களைக் கடந்து சென்ற பிறகும் கூட இருவரும் அதிர்ச்சியில் இருந்து வெளிவரவே இல்லை பிறகு ஒருவரை ஒருவர் சமாதானம் செய்து கொண்டு வீடு வந்து சேர்ந்தனர்.

ஆனால் பேருந்தில் ஏறியவளுக்கோ இவர்களிடம் தைரியமாக பேசிவிட்டாலும்
மனம் திக்திக் என்று அடித்துக் கொண்டே தான் இருந்தது.வீடு போய் சேரும் வரையிலும்,

20 நிமிடங்கள் சென்ற நிலையில் தேவகியிடம் இருந்து அழைப்பு வந்தது தென்றல் வீடு வந்து சேர்ந்து விட்டாள் என.

பிறகு மித்ரனும் விவேகனும் சிந்தனையிலேயே இருந்தனர். இருவருக்குமே தென்றலின் இந்த திடீர் நடவடிக்கையில் அத்தனை சந்தேகம் எழுந்தது‌.

இத்தனை வருடங்களாக மாறாதவள் ஒரே நாளில் இப்படி என்றால் யாரால் தான் உடனே ஏற்றுக் கொள்ள முடியும்.

தென்றலின் வீட்டில் வண்டியை ஒப்படைத்து விட்டு வீடு வந்து சேர்ந்த தமிழின் மனதில் முழுவதும் நிறைந்து இருந்தது தென்றலின் நினைவுகளும் அவளின் பாராமுகமும் தான்.

இவை அனைத்தையும் தாண்டி அவன் மனதில் எழுந்த கேள்வி விவேகன் தென்றல் இவர்கள் இருவருக்கும் இடையில் இருக்கும் உறவு என்ன, நண்பர்கள் என்றால் இத்தனை ஒற்றுமையாக புரிதலுடன் இருப்பதற்கு வாய்ப்பே இல்லை என்பது தான் அவன் மனதின் வாதமாக இருந்தது.

இவனுக்கு அப்படியான நட்பு கிடைக்காமல் போனதாலோ என்னவோ அதன் உன்னதம் உணராமல் போயிருந்தான்‌.

‘இதைப் பற்றி யாரிடம் கேட்பது தென்றலிடம் கேட்கலாமென்றால் விவேகனை தாண்டி அவளைப் பார்ப்பது என்பதே பெரிய சாதனை இதில் பேசுவது என்பது நடக்காத செயல்.

விவேகன் இடமே கேட்டு விடலாம் என்றால் அவன் சரியான கல்லுளிமங்கன் பக்கம் பக்கமாக பேசினாலும் பதில் என்னவோ வெறும் சிரிப்பு தான்.

இதைப் பத்தி தெரிஞ்சுக்க சரியான ஆளு மித்ரன் மட்டும் தான் அவன் கிட்ட இருந்து மட்டும் தான் நம்ம எல்லா கேள்விக்கும் விடை தெரியும்’.

‘ஆனால் இன்னைக்கி கடைசியா மித்ரன் ஏதோ சொன்னான்ல எல்லாமே நல்லா தான் போயிட்டு இருந்தது அவன் வர்ற வரைக்கும்னு ஏதோ சொன்னானே அந்த அவன் யார் ஒருவேள அவன பத்தி தெரிஞ்சா நம்ம கேள்விக்கு விடை கிடைக்குமோ என்னவோ’,

என நினைத்துக் கொண்டிருக்கும்போதே தேவகினிடம் இருந்து அழைப்பு வந்தது.
அக்ஷாவிற்காக அவர் தான் அவனிடம் தமிழின் எண்ணை வாங்கி இருந்தார்.

அதை ஏற்று காதில் வைக்க எதிர்புறம் இருந்து தென்றலின் குரல்,

“ஹலோ தமிழ்”

“நான் தான் பேசுறேன் தென்றல் சொல்லு”

“அது வந்து.. சாரி காலையில என்னால தான் உங்களுக்கு கஷ்டம் விவேகனும் உங்க மேல கோபப்பட்டுடான் சாரி” எப்படியோ கூற நினைத்ததை சொல்லி முடித்து விட்டாள்.

“இதுல என்னங்க இருக்கு விவேக் எனக்கும் ஃபிரண்டு தான் நான் அதெல்லாம் பெருசா எடுத்துக்கல தென்றல் நீயும் அதை மறந்துடு”.காலையில் விவேகனின் கோபம் எதும் அவனை பாதித்திருக்கவில்லை, தென்றலின் பாராமுகம் தான் ஏனோ அவனை சங்கட படுத்தியது.அதுவும் இப்பொழுது சரி ஆகி இருக்க தமிழ் மகிழ்ச்சியாகவே பேசினான்.

“ரொம்ப தேங்க்ஸ் தமிழ் அப்ப நான் வெச்சுடறேன்” என இவன் பதிலை எதிர்பாராமல் அழைப்பு துண்டிக்கப்பட்டது.

தென்றலின் அழைப்பு துண்டிக்கப்பட்ட உடன் தமிழ் மீண்டும் விவேகன் மற்றும் தென்றலின் உறவில் உள்ள சந்தேகங்களை நினைத்து தன்னையே குழப்பிக் கொள்ளத் துவங்கினான்.

பிறகு இதற்கெல்லாம் முடிவாக அடுத்தமுறை மித்ரனை சந்திக்கும் போது அனைத்து சந்தேகங்களையும் கேட்டு விட வேண்டுமென மனதில் முடிவு எடுத்துக் கொண்டான்.

……………….

விவேகன் அவர்களின் நானா விற்கு உதவ சென்றுவிட மித்ரன் வீட்டில் அவன் அன்னைக்கு உதவிக் கொண்டிருந்தான்.

தென்றலும் வழக்கம்போல் அக்ஷாவுடனும் தேவியுடனும் வாயடித்துக் கொண்டு அன்றைய பொழுதை கழித்தனர்.

இவ்வாறு சந்தோஷமாக சென்று கொண்டிருக்கும் இவர்களின் வாழ்வை புரட்டிப் போடுவதற்காகவே அடுத்த நாளும் அழகாக விடிந்தது.

வழமை போல் இன்றும் விவேகன் மற்றும் மித்ரன் தென்றலின் வீட்டில் ஆஜராகிவிட தமிழும் தன் ஆசிரியர் கடமையை செவ்வனே செய்ய தென்றலின் வீட்டிற்கு வருகை புரிந்தான்.

தேவகி டார்லிங்கின் டீயில் அனைவரும் மூழ்கியிருந்த வேலையில் தென்றல் விவேகனின் காலை சுரண்டுவதும் கையை சுரண்டுவதும் காதில் கிசுகிசுபதும் கண்களாலே கெஞ்சுவதும் என பலவகையான சேட்டைகள் செய்து கொண்டிருக்க தமிழுக்கு புகையத் தொடங்கியது.ஏனோ தென்றல் தன்னுடனும் அப்படி இருக்க வேண்டும் என அவன் அடி மனம் அவனை பிராண்டியது.

இதனைக் கண்ட மித்ரன் மனதிற்குள்ளே குத்தாட்டம் போட மகனே இப்படியே வயிறு எரிந்து சாவுடா என நினைத்துக் கொண்டான்.

தென்றல் மீண்டும் மீண்டும் விவேகனை போட்டு பாடாய்ப்படுத்துவதை கவனித்த தேவகி,

“என்ன தாண்டி வேணும் உனக்கு இப்போ ஏன் அவன் உயிரை வாங்கிட்டு இருக்க பட்டர் பிஸ்கெட் தீந்து போச்சா என்ன? தீந்து போச்சுனா உங்க நானாக்கிட்ட சொன்னா அவர் வாங்கிட்டு வர போறாரு, ஏன் இப்படி என்புள்ள உயிர வாங்குற” என தேவகி தென்றலிடம் எரிந்து விழ,

“டார்லிங் பொருமையா வயசான காலத்துல ஏன் டார்லிங் உனக்கு இவ்வளவு டென்ஷன் அவ எதுவுமே என்ன தொல்லை பண்ணல நான் தான் அவ கெஞ்சினா கியூட்டா இருக்கேன்னு லைட்டா கெஞ்ச விட்டேன்” என்ற விவேகன் தென்றலை பார்த்து கண்ணடிக்க தென்றல் முகத்தை கோபமாக திருப்பிக் கொண்டாள்.

இப்போது கெஞ்சுவது விவேகனின் முறையானது.

இவை அனைத்தையும் பார்த்த தமிழுக்கு பற்றிக் கொண்டு எரிய எரியும் நெருப்பில் மேலும் மண்ணெண்ணையை ஊற்றினான் மித்ரன்.

“ஏண்டா டேய் உன் செல்லத்த நீ இப்படி கஷ்டப்படுதலாமா அப்பிடி என்ன கேட்டா நீ இப்படி பிகு பண்ணிக்கிற” மித்ரனுக்கும் தமிழை வெறுப்பேற்றி பார்ப்பதில் அத்தனை மகிழ்ச்சி.

“ஒன்னும் இல்லடா இதுக்கு அப்புறம் லீவ் தானே இன்னைக்கு ஒரு நாள் மட்டும் பீச் கூட்டிட்டு போனா மத்த நாள்ல ஒழுங்கா படிக்கிறாளாம் அதான் கேட்டா”

“அதுக்கு என்னடா பீச் தானே போகலாம் நீ போய் கெளம்பு டோரா” என மித்ரன் தென்றலை பார்த்து கூற விவேகனும் அக்ஷாவும் வயிற்றை பிடித்துக்கொண்டு சிரிக்க துவங்கிவிட்டனர்.

“என்னை எதுக்கு அப்படி கூப்பிட்டா” என்று தென்றல் மித்ரனை போட்டு வெளுத்து வாங்க இப்போது சிரிப்பது தமிழின் முறையானது.

“அது ஒண்ணும் இல்ல, நேத்து டோரா புஜ்ஜி கார்டூன் பார்த்தேன் உனக்கும் அதுக்கும் ஒரே ஒரு வித்தியாசம்தான் அதுக்கு முடி சின்னதா இருக்கும் உனக்கு கொஞ்சம் பெரிசு அவ்வளவுதான் அதான் உன்ன அப்படி கூப்டேன்” அவன் பதிலை கேட்டாள்,

மேலும் மித்ரனை போட்டு நான்கு மிதி மிதித்து விட்டு கடற்கரை பயணத்திற்காக செல்ல தயாரானாள்.

அக்ஷா‌ தனக்கு வர விருப்பமில்லை எனவும் தேவகியும் அவளுக்கு துணையாக வீட்டில் இருப்பதாக கூறி விட்டார்.

பிறகு தமிழ்தான் வருவதாக கூறவும் அவர்களின் பயணம் 2 இருசக்கர வாகனத்தில் தொடங்கியது.

விவேகனும் தென்றலும் விவேகன் மற்றும் மித்ரனுக்காக  அவர்களின் நானா வாங்கிய பல்சரில் ஏறி கொள்ள,

தமிழும் மித்ரனும் அக்ஷாவின் ஸ்கூட்டியில் ஏறி கொண்டு அவர்களின் பயணத்தை தொடர்ந்தனர்.

பயணம் தொடங்கிய நொடி முதல் தமிழின் மனதில் மைண்ட் வாய்ஸாய் ஓட

அனைத்தையும் கேட்ச் பண்ண மித்ரன் மனதில் ‘வெய்ட் அன்ட் வாட்ச் மகனே’ என நினைத்துக்கொண்டான்.

(தொடரும்)