Uyir thedal neeyadi 2

உயிர் தேடல் நீயடி 2

 

பரந்து விரிந்து பேரழகாய் நேர்த்தியாய் இருந்த அந்த அறையில் வெறுமை மட்டுமே படர்ந்திருந்தது. அவனுக்கு மிகவும் பிடித்த விசயங்களில் அவனின் அறையும் ஒன்று.

 

அவனுக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து இவனுக்கு மட்டுமே உரியது. இவனுக்கு உரியவர்களைத் தவிர வேறு யாருக்கும் அவன் அறைக்குள் அனுமதியில்லை.

 

இதுவரை அவன் மனைவி தவிர வேறு யாருக்கும் தன் அறையை பகிர்ந்து கொண்டதும் இல்லை அவன்.

 

பார்த்து பார்த்து ரசித்து ரசித்து தனக்கென உருவாக்கிக் கொண்ட தனி உலகம் அவனின் அறை. அவனின் இன்பம், துன்பம், சுகம், துக்கம், வெற்றி, தோல்வி அனைத்தையும் அறிந்த ஒரே இடம்.

 

வெளி உலகுக்கு அவன் எப்படியோ, அவன் அறைக்குள் அவன் அவனாக மட்டுமே இருந்தான்.

 

அவனறையில் ஒவ்வொரு பொருளும் மதிப்பு மிக்கது. இணையற்றது. அவன் ரசித்து அமைத்தது.

 

நான்கு பக்க சுவர்களில் வாரி இறைத்திருந்த வண்ண கலவைகள், திரைச்சீலைகள் அலைப்பாய்ந்த கண்ணாடியால் பிணைக்கப்பட்ட சன்னல்கள், விலைமதிப்பில்லா ஓவியங்கள், நவீன அத்தியாவசிய பொருட்கள் என ஒவ்வொன்றும் அவனுக்கு, ‘ரசிகன்’ என்ற பட்டப் பெயரை சூட்ட வைக்கும்.

 

அறைக்குள் அறையாய் உள்ளே செல்ல, நுணுக்க வேலைப்பாடுகளுடன் அமைந்து பெருமிடத்தை ஆக்கிரமித்திருந்த பால் வண்ண கட்டில் அவன் பார்வையில் பட ஆழமான துன்ப பெருமூச்சை வெளியேற்றினான்.

 

மருத்துவமனையில் இருந்து இன்று தான் வீட்டிற்கு திரும்பி இருந்தான் அவன். விபத்து நடந்து முடிந்த இந்த மூன்று வாரங்களில் அவன் காயங்கள் ஓரளவு குணமாகியிருந்தன.

 

தலையிலும் கையிலும் இருக்கும் கட்டுகள் இப்போது சிறியதாகியிருந்தது. உடலின் சிராய்ப்புகளும் வெகுவாக ஆறியிருந்தன.

 

காலில் இருந்த கட்டு மட்டும் அப்படியே இருந்தது. கால் காயம், எலும்பு முறிவுகள் குணமாகி எழுந்து நடக்க மாதங்கள் ஆகுமென மருத்துவர் கூறியிருந்தார்.

 

சக்கர நாற்காலியில் அமர்ந்தபடியே தான் அவன் அறைக்குள் நுழைந்தான். உடன் ஜனனி மட்டுமே இருந்தாள்.

 

அறைக்குள் வந்தவுடன் அவன் பார்வையில் தெரிந்த வெறுமை, அவன் முகம் வெளிபடுத்திய வலி, அறை முழுதும் துழாவிய அவன் கண்களின் தேடல் அனைத்தையும் கவனித்தப்படி, அவன் சக்கர நாற்காலியை நகர்த்தி வந்தாள்.

 

அவன் அறையின் பிரம்மாண்டமும் நேர்த்தியும் அவளை வியக்க செய்தது. ரசிக்கவும் தூண்டியது. எத்தனை முறை இந்த வீட்டிற்கு வந்து போயிருக்கிறாள். ஆனால் அவன் அறைக்குள் நுழைவது இதுவே முதல் முறை. ஆனால் அவற்றை சிலாகிக்கும் சூழ்நிலை தான் அங்கு இல்லை.

 

அறையின் வலது புறத்தில் வசதியாய் அமைக்கப்பட்டிருந்த நீண்ட வெண்ணிற சோஃபாவின் அருகில் வந்து அவனுக்கு கை கொடுக்க, அவள் கையை பிடித்து, மறுகையால் அவளின் தோள் பற்றி, தன் முழு உடல் பாரத்தையும் தன் இடது காலில் தேக்கி சோஃபாவில் அமர்ந்து கொண்டான்.

 

அவனுக்குள் எழுந்த வலிமிகுந்த உணர்வு, அவன் உள்ளம் முழுவதும் நிறைந்து அழுத்துவதாய்.

 

கண்களை இறுக மூடியபடி பின்பக்கம் தலையைச் சாய்த்து கொண்டான்.

 

அவன் படும் மரண வேதனையை காண ஜனனிக்கு சகிக்கவில்லை. அவன் இப்படி உடைந்து போய் அவள் ஒருநாளும் பார்த்ததில்லை.

 

அவனுக்கு வியாபாரத்தில் இழப்பு ஏற்பட்டாலும் கூட சிறு அலட்சிய புன்னகையுடன் நகர்பவன், அந்த புன்னகையின் பொருள் அந்த இழப்பிற்கும் சேர்த்து இரு மடங்காய் அவனுக்கு கிட்டும் லாபம் என்பது விரைவிலேயே புரிய வரும்.

 

வெகு சிலருக்கேயுரிய தனித்தன்மையான ஆளுமை அது. தன் முகம் மாறாமலேயே தோல்வியையும் வெற்றியாய் மாற்றும் திறமை. அது அவனுடையது.

 

அத்தனை மனவலிமை கொண்டவன், இன்று இப்படி!

 

ஜனனியின் மனம் தாங்கவில்லை. அவனருகில் அமர்ந்து, அவன் கரத்தை தன்னிரு கைகளுக்குள் ஆதரவாய் பற்றிக் கொண்டாள்.

 

இனியும் அவனின் மௌனத்தை பொறுத்துக்கொள்ள முடியாமல் அவனை அழைத்தாள்.

 

“விபி…”

 

# # #

 

‘விபீஸ்வரன் சக்கரவர்த்தி’

 

வளர்ந்து வரும் இளம் தொழிலதிபர்.

இயல்பானவன். சராசரி வியாபாரி. எதையும் அலட்டிக் கொள்ளாதவன். தன் வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் ரசித்து அனுபவித்து மகிழ்ந்து வாழ்பவன்.

 

படு தோல்விகளையும் வெற்றியாக மாற்றும் திறமையாளன்.

 

அவன் வாழ்க்கையில் எப்போதுமே வரையறைகள் இருந்ததில்லை. அவன் கருத்தை கவர்ந்த எதையும் அவன் தவறவிட்டதில்லை.

 

நிர்வாக மேற்படிப்பு என்ற பெயரில் மேனாட்டில் இலக்கின்றி திரிந்து கொண்டிருந்தவனை சில வருடங்களுக்கு முன்பு தாய்நாடு தூண்டிலிட்டு இழுத்து வந்திருந்தது. ஆனால், அந்த தூண்டிலில் இறையானது அவன் தந்தையின் உயிர்.

 

அவரின் திடீர் இறப்பு அவனுக்கு அதிர்ச்சியும் வேதனையும் தர, மேலும் குடும்ப பொறுப்பும் கடமையும் இப்போது இவன் கைகளில்.

 

விபீஸ்வர் முதலில் தடுமாறித்தான் போனான். வெகுவிரைவில் அனைத்தையும் சமாளிக்க கற்றுக் கொண்டான்.

 

குடும்ப தலைவனின் திடீர் இழப்பால் நிலைக்குலைந்திருந்த சமயத்தை சாதகமாக்கி தன் தேவைகளை தீர்த்து கொள்ள எத்தனித்த உறவுகளை இனங்கண்டு விலக்கினான்.

 

தொழிலில் ஏற்பட்ட திடீர் தடுமாற்றம், தலைமையின் இழப்பு, அதனால் ஏற்பட்ட வேலை தேக்கம் போன்ற குறைகளை காட்டி நிறுவனத்தை தங்கள் பக்கம் இழுக்க முயன்ற பங்குதாரர்களை முயன்றே சமாளிக்க வேண்டியதாக இருந்தது.

 

அப்போதெல்லாம், ‘வழிநடத்த தன் தந்தை தன் அருகில் இல்லையே’ என்று வெறுமைபட வருந்தி இருக்கிறான்.

 

விபீஸ்வர் தொழிலில் தன் திறமையை நிரூபித்த பின்னரே பங்குதாரர்கள் அவனை நம்ப தொடங்கினர்.

 

இப்போது, இவனின் ஒரு வார்த்தைக்கு, ஏன்? ஒரு பார்வைக்கு கூட எதிர்ப்பு எழ வாய்ப்பில்லை. அப்படி தன் தொழிலை விரல் நுனியில் கொண்டு வந்திருந்தான் விபீஸ்வரன்.

 

அதற்காக அவன் தந்த உழைப்பும் சாதுர்யமும் அதிகமானவை.

பட்டுக்கு பெயர்பெற்ற காஞ்சிபுரத்தில் பட்டு உற்பத்தியும் விற்பனையும் செய்துவந்த பாரம்பரிய குடும்பத்தில் பிறந்தவர் சக்கரவர்த்தி.

 

லலிதாம்பிகையை காதல் திருமணம் செய்து கொண்ட ஒரே காரணத்திற்காக, தன் குடும்பத்தில் இருந்து விலக்கி வைக்கப்பட்டவர்.

 

ஒருவித ஆதங்கத்தையும் உத்வேகத்தையும் கொண்டு நண்பர்களின் துணையுடன் ஆடை உற்பத்தி தொழிலகத்தை தொடங்கினார்.

 

வெகு சாதாரணமாக தொடங்கப்பட்ட தொழில், அவர்கள் வாழ்வில் பெரும் வளர்ச்சியை கொண்டு வந்திருந்தது. தன்னை ஒதுக்கியவர்கள் முன்னிலையில் வென்று காட்டினார் சக்கரவர்த்தி.

 

எல்லா வகையான ஆடைகள் உற்பத்தியிலும் வடிவமைப்பிலும் சிறந்து விளங்கியது அவர் நிறுவனம்.

 

தொழில் வளர்ச்சியிலும் காதல் வாழ்விலும் வெற்றியை மட்டுமே தக்கவைத்துக் கொண்ட சக்கரவர்த்தியை, காலன் ஆழ்ந்த உறக்கத்திலேயே தோற்கடித்து இருந்தான்.

 

இரவு அமைதியாக உறங்கச் சென்றவர், விடியலில் எழவே இல்லை.

 

சக்கரவர்த்தி இழப்பில், விபீஸ்வரனை விட லலிதாம்பிகை பெரிதும் உடைந்து போயிருந்தார்.

 

தன் அம்மாவை அந்த பெரும் துயரிலிருந்து வெளிக் கொண்டு வருவது அவனுக்கு பெரும் சவாலாகவே இருந்தது.

 

விபீஸ்வர் தொழில் பொறுப்பேற்ற அடுத்தடுத்த வருடங்களில் ஆடை உற்பத்தியுடன் சேர்த்து, ஆடை வடிவமைப்பிலும் புதுப்புது மாற்றங்களைக் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டு இருந்தான். அதற்கான வேலைகளில் முழுமூச்சாக இறங்கி இருந்தான்.

 

தொழில் வளர்ச்சியில் தன் தனித்திறமையை நிரூபிக்க எண்ணினான் அவன்.

 

அவனது திறமை, கல்வி, ஆடை வடிவமைப்பில் அவருக்கிருந்த ஆர்வம், அவனின் புதிய தொடக்கத்திற்கும் வெற்றி பாதையையே அமைத்து தந்தது.

 

தன் நிறுவனத்தின் வேலைக்கான நேர்முகத் தேர்வில் தான் தன்னவளை முதன் முதலில் சந்தித்தான்.

 

அவள் தன் பார்வையில் பட்ட முதல் நொடி… அவளின் அந்த எளிமையான தோற்றம், இப்போதும் அவன் மனதை நிறைத்தது.

 

“விபி…”

 

ஜனனியின் அழுத்தமான விளிப்பில், அவன் கடந்தகால நினைவில் இருந்து கண் விழித்தான்.

 

அவன் கண்களில் நிறைந்து இருந்த வெறுமை ஜனனியை அலைகழிக்க பார்த்தது.

 

“ப்ளீஸ் விபி, என்னால உன்ன இப்படி பார்க்க முடியல, நடந்ததை யாராலையும் மாத்த முடியாது. உண்மையை ஏத்துக்கோ!” என்ற அவளின் தவிப்பும் கவலையும் அவனுக்கு நன்றாகவே புரிந்தது. எனினும், இவனால் செய்ய கூடியது எதுவும் இல்லையே!

 

“முடியல ஜெனி” என்ற இரண்டு வார்த்தைகளுக்கே அவன் குரல் கம்மியது.

 

“என்னடா முடியல? நீ போனவளை நினச்சு இங்க கலங்கிட்டு இருக்க, அவளோட அம்மா உன்மேல போலீஸ் கம்ப்ளெய்ண்ட் கொடுத்து இருக்காங்க” ஜனனியின் வார்த்தைகள் ஆதங்கமாய் வந்து விழுந்தன.

 

இந்த மாலை வேளையில் தன்னறை கட்டிலில் படுத்து தூங்க முயற்சி செய்து கொண்டிருந்தவனின் உள்ளத்தில் பழைய நினைவுகள் எல்லாம் எழுந்து, அவன் மனதிற்குள் பேரிலைச்சலை ஏற்படுத்தி கொண்டிருந்த வேலையில் தான் ஜனனி அவனை தட்டி எழுப்பியது.

 

ஜனனியின் ஆதங்கத்தை கண்டு கொள்ளாமல், யோசனையுடன் அவன் நெற்றி சுருக்க, “இன்ஸ்பெக்டர் உன்ன விசாரிக்கணுமா! உன்ன பார்த்தே ஆகணும்னு வந்திருக்கார். எழுந்து வா” என்று பற்களை கடித்தபடி சொன்னாள்.

 

விபீஸ்வர் சிறு விரக்தி புன்னகையை இதழில் படரவிட்டு, அவளுதவியோடு சக்கர நாற்காலியில் அமர்ந்தபடியே வெளியே வந்தான்.

 

“ஹலோ மிஸ்டர் விபீஸ்வர், ஐ அம் காசிநாதன்” என்று அவர் கைநீட்ட, “நைஸ் டூ மீட் யூ சர்” என்று விபீஸ்வரனும் மரியாதையுடன் கைகுலுக்கினான்.

 

காக்கி உடையில் காசிநாதன் கம்பீரமாகவே தெரிந்தார். நடு வயதை எட்டியிருந்த அவரின் ஆராயும் பார்வையை கவனித்தவனுக்கு அவர்மேல் அக்கணமே நல்லெண்ணம் தோன்றியது.

 

பார்ப்பவரை அரை நொடியில் எடை போடும் அவனின் வியாபார புத்தி போகாது இல்லையா!

 

காசிநாதன் சோஃபாவில் அமர்ந்திருக்க, விபீஸ்வர் சக்கர நாற்காலியிலிருந்தபடியே பதிலிருத்தான்.

 

“முன்ன விட இப்ப பார்க்க நீங்க ஓரளவு குணமாகி இருக்கீங்க, சீக்கிரமே நீங்க முழுசா குணமாக வாழ்த்துக்கள்” என்று பேச்சை தொடங்கினார் காசிநாதன்.

 

இவை வெறும் உபசார வார்த்தைகள் என்பது புரிந்தும் சிறு இதழ் விரிப்போடு,  “தேங்க் யூ சர்” என்றான் விபீஸ்வர்.

 

“நேத்து தான உங்க மனைவியோட காரியம் முடிந்தது?” என்று கேட்க, விபீஸ்வர் துன்ப பெருமூச்சோடு ஆமென்று தலையசைத்தான்.

 

அவர் விசாரணயை தொடர்ந்தார்.

 

“உங்க மனைவி பேரென்ன? நான் தெரிஞ்சுகலாமா?” அவர் கேட்க, எதற்காக இந்த தேவையற்ற கேள்வி என்று தோன்றியது ஜனனிக்கு.

 

விபீஸ்வரனின் இதழ்கள் மந்திரம் போல் மென்மையாய் உச்சரித்தன தன்னவள் பெயரை காதலுடன்.

 

“காவ்யதர்ஷினி”.

 

# # #

 

உயிர் தேடல் நீளும்…