Uyir Thedal Niyadi 29(1)

Uyir Thedal Niyadi 29(1)

உயிர் தேடல் நீயடி 29(1)

நடு இரவு நெரம்,

சோர்ந்து வேதனை சுமந்த முகத்தோடு, உடல் முழுவதும் காயங்களின் கட்டோடு சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி அந்த மருத்துவ அறைக்குள் நுழைந்தான் விபீஸ்வர்.

அவன் சக்கர நாற்காலியை தள்ளி கொண்டு வந்த செவிலி கட்டிலின் அருகே நிறுத்திவிட்டு நகர்ந்து விட்டாள்.

அந்த கட்டிலில் காவ்யதர்ஷினி தலையில் குருதி கசியும் பெரிய கட்டுடன், உடல் முழுக்க விதவிதமான வயர்களின் பிணைப்புக்களோடு, எந்த அசைவும் இன்றி கிடத்தி வைக்கப்பட்டு இருந்தாள்.

விபீஸ்வரின் வேதனை பார்வை அவள் முகத்தை வருடியது.

“பேபி… கெட் அப்”

அவன் வேதனை மூச்சுக்களோடு வலியான வார்த்தைகள் மட்டுமே அந்த அறையில் ஒலித்தது.

“கெட் அப் பேப்…”

விபத்து முடிந்து சிகிச்சையில் ஒரு முழு நாள் கழிந்திருந்தது.

விபத்தின் அதிர்ச்சியாலும் காயங்களின் வலியின் வேதனையாலும் அவனால் தொடர்ந்து பேச முடியாமல் மூச்சிறைத்தது. அதையும் தாண்டி தன்னவளை எப்படியும் சுயநினைவுக்கு கொண்டு வர முயன்று கொண்டிருந்தான் அவன்.

அவளின் கைப் பற்றி, “எத்தனை முறை உன்ன கூப்பிடுறேன்… எழுந்து என்னோட பேசு காவ்யா…”

“உனக்கு ஒண்ணும் ஆகலடீ… தலையில மட்டும் கொஞ்சம் பலமான காயம்… அவ்ளோ தான், அதுவும் சீக்கிரம் குணமாகிடும்… எனக்கும் தான அடிப்பட்டு இருக்கு, கால் ரொம்ப வலிக்குது டீ… நீ என்கிட்ட பேசாம இருக்கிறது இன்னும் அதிகமா வலிக்குது காவ்யா”.

அவன் கண்களில் கண்ணீர் பெருகி கன்னங்களில் பட்டிருந்த சிறு காயங்களில் பட்டு தகித்து வழிந்தது.

“பிளீஸ் கவி ஏதாவது பேசு, கண்ணை திறந்து‌ என்னை பாரு… இப்படி அமைதியா மட்டும் இருந்து என்னை கொல்லாதடீ…”

“நாம சேர்ந்து வாழ வேண்டிய வாழ்க்கை நீண்டு கிடக்கு பேபி… பல்லு போன பிறகும் உன் சுருக்கம் விழுந்த கன்னத்தில நான் முத்தம் வைக்கணும்… அப்பவும் வெட்கப்பட்டு நீ என் தோள் சாஞ்சிக்கணும்… நான் உன்ன என்மடி ஏந்திக்கணும்… உன்னோட இந்த சிலநாள் வாழ்ந்தது மட்டும் போதாது டீ எனக்கு, லைஃப் லாங் நாம காதலோடு வாழணும்! வா பேபி…”

காவ்யாவிடம் எந்தவித அசைவும் ஏற்படவில்லை. மருத்துவ உபகரணத்தின் திரையை கவனித்திருந்த மருத்துவருக்கு காவ்யா உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் தெரிந்தபாடில்லை. காவ்யா சுயநினைவுக்கு வந்தால் மட்டுமே மேற்கொண்டு சிகிச்சை அளிக்க முடியும் என்ற நிலை அவருக்கு.

விபீஸ்வர் அவளிடம் பேச்சுக் கொடுத்தபடியே இருந்தான். “உன்ன இப்படி பார்த்தா அத்தை, சிவா, மஞ்சு எல்லாரும் துடிச்சு போயிடுவாங்க… எனக்காக வேண்டாம்… அவங்களுக்காகவாவது எழுந்திரு கவி…”

இப்போதும் அவளிடம் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

விபீஸ்வரின் முகம் இறுகியது. “காவ்யா… எழுந்திரு காவ்யா… நீ என்னை அவாய்ட் பண்ணா எனக்கு பிடிக்காது தெரியும் இல்ல உனக்கு… என்னை கோவபடுத்தாம எழுந்து வா…” என்று அவள் கையை வேகமாக இழுக்க, எந்த சிறு அசைவும் அவளிடம் இல்லை.

விபீஸ்வரின் பார்வை மருத்துவரை பார்க்க, அவர் இடவலமாக தலையசைத்தார்.

ஒருகாலூன்றி வலி பொறுத்து எழுந்து கொண்டவன் இருகைகளால் அவளின் தோள் பற்றி குலுக்கினான்.

“உனக்கு இன்னுமா என்மேல நம்பிக்கை இல்லாம போச்சு… என்னோட சேர்ந்து வாழ உனக்கு துளிகூட ஆசையில்லையா? எழுந்திரு காவ்யா…!”

மருத்துவரும் செவிலிப் பெண்ணும் விபீஸ்வரை விலக்கி பிடிக்க முயன்றனர்.

“டாக்டர், நீங்க என்னவாவது செயிங்க, எனக்கு கவி உயிரோட வேணும்” விபீஸ்வர் கத்தி கூச்சலிட,

“ரிலேக்ஸ் சர்” – மருத்துவர் அவனை அமைதிப்படுத்த முயன்றார்.

காவ்யாவிடம் திரும்பியவன்,
“என்னை இப்படி பழி தீர்த்துக்காத கவி… நீ மட்டும் என்னை விட்டு போனே… உன்ன கொன்னுடுவேன் பார்த்துக்க…”

அவனின் துடிப்பும் தவிப்பும் கத்தலும் கதறலும் எதுவும் கேட்காத தூரத்திற்கு… அடி ஆழத்திற்குள் அமிழ்ந்து போயிருந்தாள் அவள்.

#
#
#

நினைந்து நினைந்து
நெஞ்சம் வலி கொண்டதே…
என் நிழலில் இருந்தும்
ரத்தம் கசிகின்றதே… ஏ…
ஒருசொல் ஒருசொல்
ஒருசொல் சொன்னால்
உயிரே ஊறிவிடும்,
அடியே அடியே முடியாதென்றால்
இதயம் கீறிவிடும்,
நிலா… ஆ…
நீயல்லவா…
தேய்பவன் நான் அல்லவா…
காரணம் நான் சொல்லவா…
கால்கள் இல்லாமலே
காற்று நடை போடலாம்,
நீயும் இல்லாமலே
நாட்கள் நடை போடுமா?
இமை மூட மறுத்துவிட்டால்
விழிகள் தூங்காது,
இடி தாங்கும் இதயம் கூட
மௌனம் தாங்காது.
உன் விழி ஈர்ப்பு விசையினிலே‌
அன்பே… அன்பே…
நான் வந்து விழுந்து விட்டேன்
அன்பே… அன்பே…
கண்ஜாடை ஆமாமென்றது
கைஜாடை இல்லையென்றது
பசும்பூங்கொடி
நிஜமென்னடி
இதில் வாழ்வா? சாவா?
எதை நீ தருவாய்
பெண்ணே…?

விபீஸ்வர் வீசி எறிந்த பேப்பர் வெய்ட், பாடல் ஒலித்திருந்த ஹோம்தியேட்டரை உடைத்தெறிந்தது.

அந்த பாடல் வரிகள் இவன் இதய காயத்தை மேலும் கீறி வலி தருவதாய், ஆண்மையின் கண்களில் காதலின் கண்ணீர் ஊற்று!

நடந்து முடிந்த வலி நிறைந்த நினைவுகளின் அழுத்தத்தில்
இரு கைகளாலும் தலையை பிடித்து கொண்டு தன் அறையின் கதிரையில் அமர்ந்து விட்டான் விபீஸ்வர்.

காவ்யாவை பிரிந்த வலியை விட, தான் அத்தனை அழைத்தும் அவள் சுயநினைவுக்கு வராத ஆற்றாமை இவனை வதைத்தது.

உள்ளமும் உடலும் பகிர்ந்து கொண்ட பின்னரும் கூட, தன் தவிப்பையும் குரலையும் உணர்ந்து கொள்ள முடியாமல் அடங்கிபோன அவள் மீதான ஆற்றாமை!

தான் கொண்ட உயிர் காதல் அவளின் உயிர் ஆழம்வரை தீண்ட முடியாமல் தோற்றுப்போன ஆத்திரம்!

தான் கொண்ட நேசத்தால் தன்னவளை மீட்டெடுக்க இயலாமல் போன ஆதங்கம்!

மொத்த உணர்வு பிழம்புகளின் தாக்கத்தில் அவன் உள்ளுக்குள் மடிந்து கொண்டிருக்க… அவன் எதிரே காவ்யதர்ஷினியின் நிழலுருவம் காற்றில் அசைந்தபடி புகை காட்சியாக தோன்றியது. அவனை வாஞ்சையாக பார்த்தபடி!

நிமிர்ந்தவனின் கண்களில் கனல் தெறிக்க, “ஏன் என் முன்ன வந்து இப்படி நிக்கிற… நான் வேணான்னு தான என்னை விட்டு போன… இப்பவும் போயிடு… மறுபடி என் கண்ணுல படாத போயிடு… போயிடு…!” விபீஸ்வர் தன் இரு கைகளால் சோஃபாவை தட்டி ஆக்கரோஷமாக கத்த, அவளின் நிழலுருவம் அப்போதே காற்றில் கரைந்து மறைந்து போனது.

“ச்சே… ஷிட்…” அவன் அருகிருந்த பூ ஜாடியை ஆத்திரம் குறையாமல் தூக்கி வீசி விட்டு மறுபடி தலையை பிடித்து கொண்டான்.

அவன் அறை ஜன்னல் வழியே இதையெல்லாம் பார்த்து நின்ற ஜனனியின் இரத்தம் உறைந்தது பொலானது.

அவனை பார்க்க ஆசையோடு வந்தவள் இப்போது அதிர்ச்சியில் அசைவற்று நின்று விட்டாள்.

‘அப்ப அந்த பேய் விபி கண்ணுக்கும் தெரியுதா?’

‘பின்ன ஏன் அவன் எதுவும் தெரியலன்னு சொன்னான்?’

‘விபி எதுக்கு பொய் சொல்லணும்?’

‘இவன் போ சொன்னதும் அந்த பேய் போயிடுச்சு! மனுசன் சொல்றதை பேய் கேக்குமா என்ன?’

பாதி பயத்திலும் பாதி குழப்பத்திலும் ஜனனி குழம்பி தவித்து நின்றாள்.

விபீஸ்வர் எழுந்து அறைக்கு வெளியே வர, ஜனனி பதற்றம் குறையாமலேயே நகர்ந்து விட்டாள்.

“மாம்…”

மகனின் அழைப்பில் லலிதாம்பிகை நிமிர, விபீஸ்வர் அவரின் அறை வாசலில் நின்றிருந்தான்.

“வா விபி” அவர் அழைக்க, அவன் ஸ்டிக் ஊன்றி மெதுவாக நடந்து வந்து அம்மாவின் அருகில் அமர்ந்தான்.

அவன் முகம் முற்றிலும் சோபை இழந்து உயிர்பற்று தெரிய, அவர் தாய் மனம் துவண்டது.

“ஏன் விபி கண்ணா இப்படி இருக்க?”

“முடியல மாம், ரொம்ப கஷ்டமா இருக்கு, ரொம்ப லோன்லியா ஃபீலாகுது! உங்க மடியில கொஞ்சம் படுத்துக்கவா?” அவன் உடைந்து குரலில் கேட்டான்.

நினைவு தெரிந்த நாளிலிருந்து தன் மடியை தேடாத செல்ல மகன், இப்போது தேடி வந்திருக்க வாஞ்சையாய் மடிசாய்த்துக் கொண்டார்.

அவன் இழந்த கருவறையின் கதகதப்பை மீட்டுணர முயன்று இமைகள் மூடிக் கொண்டான்..

சில மௌன நிமிடங்கள் கழிய, அவன் கன்னத்தில் கண்ணீர் துளிகள் சொட்டின. விபீஸ்வர் விழித்து பார்க்க, வாய்மூடி குமுறிக் கொண்டிருந்த லலிதா, வெடித்து அழுது விட்டார்.

“நீங்க ஏன் அழறீங்க மாம்”

“அந்த காவ்யா பொண்ணு இல்லாம நீ இப்படி உருதிரிஞ்சு உடைஞ்சு போவன்னு நான் நினைக்கல விபி, உன் மனசு முதல்லையே புரிஞ்சு இருந்தா நான் அவளை வெறுத்திருக்க மாட்டேனே! தலையில தூக்கி வச்சு கொண்டாடி இருப்பேனே!” என்று காலம் தாழ்ந்து கதறினார்.

“நீங்க காவ்யாவோட டைம் ஸ்பென்ட் பண்ணி இருக்கலாம் மாம்! கொஞ்சம் பேசி, பழகி இருந்தீங்கன்னா அவளை உங்களுக்கும் பிடிச்சு இருக்கும் மாம்” என்று விரக்தியான சிரிப்பை உதிர்த்தவன், சற்று அமைதியை இமைகள் மூடினான்.

தான் தவறிய இடத்தை புரிந்துக் கொண்டவர், ஆழ்ந்த துன்ப பெருமூச்செறிந்தார்.

குழந்தையாய் உறங்குபவன் கேசம் வருடி, மனம் கசிந்துருக அவனை தட்டிக் கொடுத்தார்.

# # #

மகிழ்நன் முன் காசிநாதன் ஆராய்ச்சி பார்வையோடு அமர்ந்திருக்க, மகிழ்நன் விரிந்த புன்னகையோடே பதிலிருத்தான்.

“விபி ஆக்ஸிடென்ட் கேஸ்ல உங்களுக்கு என்மேல சந்தேகம் வரதில பெரிய ஆச்சரியம் இல்ல இன்ஸ்பெக்டர், நாங்க ரெண்டு பேரும் தொழில்முறை எதிரிங்கன்னு இங்க எல்லாருக்குமே தெரியும்”.

“அப்ப விபீஸ்வர் உங்க எதிரின்னு நீங்க ஒத்துக்கிறீங்க” காசிநாதனும் தூண்டிலிட்டார்.

“தொழில்ல நான் அவனை முந்தணும், அவன் என்ன முந்தணும்ற போட்டி எங்களுக்குள்ள இருக்கும்… ஆனா ஒருதரை ஒருத்தர் அழிச்சிக்கிற அளவு பகை இருந்தது இல்ல” மகிழ்நன் பதில் தெளிவாக வந்தது.

காசிநாதனும் அதை ஆமோதித்து கொண்டார். கிட்டத்தட்ட விபீஸ்வரும் மகிழ்நனனுடனான தொழில் போட்டியை ஆரோக்கியமானதாகவே சொல்லி இருந்தான்.

“விபீஸ்வரை தாக்குற அளவுக்கு அந்த எதிரி யாரா இருக்கும்? உங்களுக்கு யார் மேலையாவது சந்தேகம் இருக்கா?” காசிநாதன் கேட்க,

மகிழ்நன் உதட்டை பிதுக்கி இல்லையென தலையசைத்து, “விபி எப்பவுமே கூல் பர்சன், அவன் கோபப்பட்டோ, கத்தி பேசியோ நான் பார்த்ததும் இல்ல, கேள்விபட்டதும் இல்ல… என்னை பொறுத்தவரை நடந்தது ஆக்ஸிடென்ட்டா தான் இருக்கணும்… கொலை முயற்சியா இருக்க வாய்ப்பு குறைவு” மகிழ்நன் தன் மனதில் பட்டதை வெளிப்படையாக சொல்ல,

காசிநாதன், “விசாரணைக்கு நீங்க தந்த ஒத்துழைப்புக்கு நன்றி மகிழ்நன்” என்று விடைப்பெற்று கிளம்பினார்.

விபீஸ்வரின் தற்போதைய நிலைமை மகிழ்நனுக்கும் என்னவோ போல தான் இருந்தது.

அனுமதி கேட்டு உள்ளே வந்த அவனது காரியதரிசி, “சாரி சர்… இந்த டென்டர் நமக்கு மிஸ்‌ ஆகிடுச்சு” தயக்கமாக சொல்ல,

“வாட், அதெப்படி முடியும்?” என்று கத்திவிட்டான்.

“அது, விபி கார்மென்ஸ் நம்மல முந்திடுச்சு”

“ஷிட் அவனுக்கு எப்படி?” என்று மேசையை எட்டி உதைத்தவன், “ச்சே அவனுக்கு போய் ஒரு செகண்ட் பாவ பட்டேன் வேற, சரியான எமகாதகன்” என்று ஒப்பந்தம் கைவிட்டு போன ஆதங்கத்தில் விபீஸ்வரை வறுத்து தள்ளினான் மகிழ்நன்.

அதே நேரம்,

விபீஸ்வர் வெளியே சென்ற பிறகு, ஜனனி அவன் அறைக்குள் தடதடக்கும் இதயத்தோடு நுழைந்தாள்.

அவள் அறிவுக்குள் ஏதோ சந்தேகம் தோன்றி இருந்தது. உள்நாக்கு வறண்டு போக அந்த அறையை பார்வையால் ஒருமுறை சுற்றி வந்தாள். உடல் வியர்த்து போனது.

பயந்து பயந்து ஒவ்வொரு அடி எடுத்து வைத்து நேற்று விபீஸ்வர் அமர்ந்திருந்த சோஃபாவை நோக்கி நடந்தாள்.

முன்பும் நேற்றும் அந்த சோஃபா அருகில் மட்டும் தான் அந்த நிழலுருவத்தை இவள் பார்த்திருந்தாள் எனவே தான் அவளுக்கு ஏதோ முரண்டியது.

சிதறிய தைரியத்தை திரட்டி சோஃபாவில் அமர்ந்தாள். ஏதும் வித்தியாசம் தோன்றவில்லை.

இப்போது சற்று துணிவு வந்திருந்தது. நேற்று விபீஸ்வர் தட்டியது போல அதே இடத்தில் தன் கையை தட்டி பார்த்தாள்… பார்வையை நிமிர்த்தினாள்…

அந்த அறை அசாத்திய அமைதியில் அவளை அச்சுறுத்த பார்த்தது. அவளெதிரில் மெல்ல புகைமூட்டம் மூள, அது பெண்ணின் நிழல் உருவாய் காட்சியானது.

ஜனனி அலறி உடலை சுருக்கிக் கொண்டு, மூச்சை இழுத்து இழுத்து விட்டாள்… தன்னை சமன்படுத்திக் கொள்ள முயன்று, மறுபடி பார்வையை நிமிர்த்தினாள்.

நிழலுருவம் அங்கேயே நின்றிருந்தது!

அவள் மறுபடி சோஃபாவில் அடிக்க, அந்த நிழலுருவம் அப்படியே கரைந்து மறைந்து போனது.

ஜனனி தன்னை ஆசுவாசப்படுத்தி கொண்டாள். உண்மை அவளுக்கு தெள்ளத் தெளிவாக புரிந்தது.

அந்த சோஃபாவின் கைப்பகுதியை மெல்ல அகற்றி தேட, அங்கே சிறிய அளவிலான கையடக்க தொலையியக்கி பொருத்தி வைக்கப்பட்டிருந்தது.

‘ரிமோட் இங்க இருக்கு, இந்த இல்யூஷனை கிரேட் பண்ற புரோஜெக்டர் எங்க இருக்கும்?’ என்று சோஃபாவை சுற்றி தேடினாள், அறையின் பொருட்கள் அனைத்தையும் அலசி பார்த்தாள், ப்ரொஜெக்டர் எங்கும் அவளுக்கு தென்படவில்லை.

வேறு யோசனை தோன்ற லலிதாம்பிகை அறைக்குள் சென்று அங்கும் அலசினாள். அவளால் மாயத்தோற்றத்தை உருவாக்கும் கருவியை கண்டறிய முடியவில்லை. ஆனால், இந்த நிழலுருவம் செயற்கை மாயத் தோற்றம் தான் என்பது உறுதியானது.

இது அனைத்தும் விபீஸ்வர் வேலைதான் என்பது அவளை கலங்கடித்தது.

‘என் விபி ஏன் இப்படி எல்லாம் செய்யறான்?’

# # # # # #

உயிர் தேடல் நீளும்…

error: Content is protected !!