Uyir Vangum Rojave–EPI 27

ROSE-0e54927a

அத்தியாயம் 27

நான் உன்னை மட்டும் லவ் பண்ணல கௌதம். உன்னோட ஆசைய, உன்னோட கனவ, உன்னோட உணர்வ, எல்லாத்தையும் சேர்த்து தான் லவ் பண்ணறேன்.

(ஜோதிகா—சில்லுன்னு ஒரு காதல்)

 

“மலர்! எழுந்திரு” கணவனைத் தட்டி எழுப்பினாள் தேவி.

வாரி சுருட்டிக் கொண்டு எழுந்தவன்,

“என்னம்மா? என்ன ஆச்சு? எங்கயாச்சும் வலிக்குதா?” பதறினான்.

“இல்ல மலர், ரொம்ப சூடா இருக்கு. ஏர்கோண்ட் போட்டும் காங்கையா இருக்கு. இதோட நாலு தடவை பாத்ரூம் போய்ட்டேன். “

முகம், கழுத்தெல்லாம் வேர்த்திருக்க , பேபி பம்ப் நன்றாக தெரிய ஓவியமென அமர்ந்திருந்தாள் தேவி. துண்டு எடுத்து வந்து முகமெல்லாம் துடைத்து விட்டவன்,

“பாத்ரூம் போகும் போது என்னை எழுப்ப சொல்லியிருக்கேன் தானே? தூக்க கலக்கத்துல எங்கயாச்சும் விழுந்து வைக்கவா?” மென்மையாக கடிந்து கொண்டான்.

“எத்தனை தடவை தான் உன்னை எழுப்பறது? பாவமா தூங்கிகிட்டு இருந்த, அதான் எழுப்பல. அன்கம்பர்டபளா இருக்கு மலர்”

“இந்த டைம்ல இப்படி தான்டா இருக்கும். தூங்கவும் கஸ்டமா இருக்கும். எது சாப்பிடாலும் அஜீரணமா இருக்கும். கொஞ்ச நேரம் நேரா படு. அம்மா சொல்லி கொடுத்த மாதிரி தொப்புள சுத்தியும் அடி வயித்துலயும் விளக்கெண்ணை தடவுறேன். இதமா இருக்கும்”

வயிற்றைத் தொட்டாலே பிள்ளைக்கு வலிக்குமோ என்பது போல் மென்மையாக தடவினான்.

“ஏன் மலர், என்னவோ படத்துல நாயகி வயித்துல ஆம்லேட் போடுவாங்கலாம். நீ என்னன்னா விளக்கெண்ணெய் தடவற?” கிண்டல் செய்தாள் அவனை.

“ஆம்லெட் தானே? அதெல்லாம் பழசு. பிள்ளை பெத்து வந்தவுடனே, நாம பிஷ்ஷாவே(pizza) சுடலாம்.” சிரித்தான் அவன்.

அவனைப் பார்த்து அழகாக புன்னகைத்தாள் தேவி. அவளுக்கு ஐந்து மாதங்கள் முடிவடைந்திருந்தது. அதற்குள் பிள்ளைப்பேறு பற்றி பல புத்தகங்களை தேடிப் படித்து கைத்தேர்ந்த கைனக்கலோஜிஸ்ட் ஆகியிருந்தான் வேந்தன். டாக்டருக்கே டிப்ஸ் கொடுக்கும் அளவிற்கு தேறி இருந்தான். அவன் தொல்லைத் தாங்காமல், டாக்டர் அப்பாயின்மேண்டுக்குக் கூட அவனுக்குத் தெரியாமல் தான் செல்வாள். ஆனாலும் மோப்பம் பிடித்து வந்து விடுவான். அவன் கேட்கும் கேள்விக்குப் பதில் அளிக்க டாக்டருக்கே முழி பிதுங்கிவிடும். தேவிக்காக பொறுத்துப் போவார்.

அதுவும் முதன் முதலாக ஸ்கேன் செய்ய செல்லும் போது, குடும்பமே கூடி விட்டது. உள்ளறையில் ஸ்கேன் செய்யும் இடத்தில் வேந்தன் மட்டும் இருக்க, வெளியே இன்னொரு ஸ்கிரின் வைத்து மற்றவர்களுக்கு படம் காட்டினார் டாக்டர். பாப்கார்ன் மட்டும்தான் மிஸ்ஸிங். குழந்தையின் ஸ்கேனைக் கூட கூடிப் பார்த்து கும்மி அடித்த குடும்பம் இதுவாகத் தான் இருக்கும். இந்து அதற்கும் மேலே போய், ஸ்கிரினை தடவிப் பாட வேறு செய்தார்.

“கற்பூர பொம்மை ஒன்று
கை வீசும் தென்றல் ஒன்று
கலந்தாட கை கோர்க்கும் நேரம்
கண்ணோரம் ஆனந்த ஈரம்
முத்தே என் முத்தாரமே சபை ஏறும்
பாடல் நீ பாடம்மா நீ பாடம்மா “

வெளியே வந்த டாக்டர்,

“அம்மா, கற்பூர பொம்மை ஒன்று இல்ல, இரண்டு” என கூறியது தான் தாமதம் அந்த ரூமே அல்லோலகல்லோலப் பட்டது.

டாக்டரைக் கட்டிப் பிடித்து முத்தமழை பொழிந்து விட்டார் இந்து. கண் கலங்கியபடியே வெளியே வந்தான் வேந்தன். அவன் பின்னால் வந்தாள் தேவி.

கத்தி கூச்சலிட்டு ஆரவார வரவேற்பு இருவருக்கும். இது ஹாஸ்பிட்டல் சத்தம் கூடாது என செக்குரிட்டி வந்து சாந்தமாக(?) சொல்லவும்தான் வெளியேறினார்கள் அவர்கள்.

கார்த்திக் வேந்தனை ஆரத் தழுவிக் கொண்டான்.

“டேய்! சிங்களாகவே இருக்கப் போறென்னு சொல்லிட்டு, இப்போ டபுள்ஸ் ரிலீஸ் பண்ணீட்டீயே. கலக்கிட்டே போ. டேய்! ஏண்டா கண்ணு கலங்கி போய் இருக்குது? ஆம்புள பையன் அழக் கூடாதுடா. கெத்தா இருக்கனும் மச்சி”

“போடா! நல்லா வண்ண வண்ணமா சொல்லிருவேன். சந்தோஷத்துல கூட ஒரு ஆம்பிளை கண் கலங்க கூடாதா? அவன மட்டும் கடவுள் என்ன கல்லுலயா செஞ்சிருக்கான்? கெத்து, பொத்துன்னுகிட்டு. நான் இப்படிதான்டா. என் வீட்டுப் பொண்ணுங்களுக்கு ஒன்னுன்னா துடிச்சுப் போயிருவேன். அவங்க கண்ணுல ஒரு சொட்டு கண்ணீர் வந்தாலும், மனம் கலங்கிருவேன். அவங்க சந்தோசமா இருந்தா நானும் சந்தோசமா இருப்பேன். கெத்தெல்லாம், சரி சமமா இருக்கற ஆம்பிளை கிட்டக் காட்டனும்டா. நம்மள உயிரா நினைக்கிற நம்ம வீட்டும் பொண்ணுங்க கிட்ட காட்டக் கூடாது? சரி, தெரியாம தான் கேக்கறேன், நம்ம பாத்து பழகன எத்தன ஆம்பிள்ளைங்கடா, கெத்து காட்டிட்டு சுத்திக் கிட்டு திரியறாங்க? அப்புறம் ஏன்டா ஆளுமை, கெத்துன்னு புடிச்சிட்டு தொங்குறீங்க? என் பொண்டாட்டி சந்தோசமா இருந்தா மகிழ்ந்து, துக்கப் படறப்ப நானும் துக்கப் பட்டு, திட்டறப்ப கோபப்படாம சமாதானப் படுத்தி, அங்க இங்க வலிக்குதுன்றப்ப பிடிச்சி விட்டு அன்பா பர்த்துக்கறது கெத்து இல்லைன்னா, போடா நான் கெத்து இல்லாமலே இருந்துட்டுப் போறேன். நானே இரட்டைப் பிள்ளையா இருக்கே, இவ எப்படி தாங்கப் போறாளோன்னு கண்ணு கலங்கிப் போய் நிக்கிறேன். வந்துட்டான், வம்பிழுக்க”

“சரி விடு மச்சி. எதுக்கு இம்புட்டு இமோஷனல் ஆகற? இது செலெபரேஷன் டைம். குடும்பமா வெளிய போய் சாப்பிட்டுட்டு, பீச்சுக்குப் போய்ட்டு வரலாம்.”

அவர்கள் பின்னால் வந்த தேவி அனைத்தையும் கேட்டுக் கொண்டு தான் வந்தாள்.

எல்லோரும் அவளிடம் நெருக்கமாக இருந்தாலும், லட்டு மட்டும் ஹாய், பாய் எனும் அளவில் தான் இருந்தாள். இவளும் அலட்டிக் கொள்வதில்லை. தேவியைப் பொருத்த வரை வேந்தன் உயிராய் அவளைப் பார்த்துக் கொண்டான். மற்றதெல்லாம் இரண்டாம் பட்சமாக தான் இருந்து அவளுக்கு.

உணவை திணிக்காமல் தேவையான சத்தான உணவை அவள் சாப்பிடுமாறு பார்த்துக் கொண்டான். அவள் வேலையில் இருந்தாலும், சாப்பாட்டு நேரத்திற்கு கரெக்டாக இந்துவின் வீட்டிலிருந்து உணவு வந்துவிடும். இரவில் அவன் கையாலேயே அவளுக்கு ஊட்டி விடுவான். மருந்து மாத்திரைகளையும் சரியாக கொடுத்துவிடுவான். இந்த மாதிரி நேரத்தில் மீண்டும் அவளுக்கு மன உளைச்சல் வராத மாதிரி பார்த்துக் கொண்டான். மன அமைதி தரும் இசையை ஒலிக்க விட்டு, அவளை மடியில் தாங்கிக் கொள்வான். அவள் அசந்து தூங்கியவுடன் தான் வயிற்றுப் பிள்ளையிடம் பேசுவான். மற்ற நேரங்களில் அவளாக பகிர்ந்தால் தவிர பிள்ளை அசைவையோ, அதன் வளர்ச்சியையோ பற்றி கேட்க மாட்டான்.

“ரோஜா!” அவன் உலுக்கவும் தான் தன் நினைவு அடைந்தாள் அவள்.

“என்ன மலர்?”

“நான் கூப்பிட்டுக்கிட்டே இருக்கேன். என்ன நினைப்பு?”

“நான் உன்னை ரொம்ப படுத்தறேனா மலர்?”

“நடக்க மாட்டேன்னு அடம் பிடிச்சு மாடி வரைக்கும் என்னை தூக்கிட்டு வர வைக்கறீயே அதுவா? நடு ராத்திரியிலே எழுப்பி, இத்தாலியன் பஸ்தா வேணும்னு கேக்கறீயே அதுவா? வேலை நேரத்துல போன் பண்ணி முத்தம் வேணும், நேருல வான்னு கூப்புடுறீயே அதுவா? இல்ல, தூக்கம் வரல, பாட்டு பாடுன்னு நீ அசந்து தூங்கறவரைக்கும் தொண்டை தண்ணி வத்த கத்த வைக்கறீயே அதுவா? எதை நான் படுத்தறதா எடுத்துக்கறது?” கேட்டுச் சிரித்தான் வேந்தன்.

“போடா! நீ எதுவும் எனக்கு செய்ய வேணாம் போ.” முறுக்கிக் கொண்டாள் அவள்.

“கோவிச்சுக்காதடி என் வெள்ளை இத்தாலி! இதெல்லாம் நீ செய்யலைனா தான் நான் தவிச்சுப் போயிருவேன். இந்த ரோஜா என் உயிரை வாங்கினாலும், மீண்டும் மீண்டும் உனக்காகவே உயிர்ப்பான் இந்த ராஜா. ரோஜா மலரை காக்கும் வேந்தன்டி நானு.”

அவனையே கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தாள் தேவி. பின் கட்டிலில் இருந்து எழுந்தவள்,

“பீச்சுக்கு போலாம் மலர்”

“இந்த நேரத்துலயா? மணி விடிகாலை ரெண்டு. இந்த நேரத்துல காஞ்சனா பேய் தான் பீச்சுல வாக்கிங் போகும். பேசாம படு ரோஜா” மிரட்டினான் அவன்.

அவனை ஒரு பார்வைப் பார்த்தவள், திரும்பி பார்க்காமல் ரூமை விட்டு வெளியேறினாள்.

“உடம்பு முழுக்க பிடிவாதம். மனுஷன் நல்லது சொன்னா கேக்கறதே இல்ல. வெள்ளை கழுதை” திட்டியபடியே அவசர அவசரமாக அவளது குளிர் சட்டையை எடுத்துக் கொண்டு, அவனது டீ சர்டையும் அணிந்து கொண்டு ஓடினான். அதற்குள் வாசல் கதவை திறந்திருந்தாள் அவள். பின் அவளுடன் இணைந்து கடற்கரைக்கு நடந்தான். கடல் காற்று ஊசியாய் குத்தியது. வேகமாக நடந்தவளை கைப் பிடித்து நிறுத்தி குளிர் சட்டையை அணிவித்தான்.

“ரோஜா! வேகமா நடக்காதன்னு எத்தனை தடவை சொல்லுறது? உனக்குள்ள ரெண்டு குட்டீஸ் இருக்காங்க. பார்த்து பத்திரமா நடக்கனும்” மெல்லிய தொனியில் அறிவுறுத்தினான்.

“அவங்க என்னோட குட்டீஸ். நீ ஒன்னும் கவலை பட வேணாம். நான் பத்திரமா பார்த்துக்குவேன்” ஆத்திரத்துடன் கத்தியவள், மெதுவாக மணலில் அமர்ந்தாள். அவள் அருகில் அவனும் அமர்ந்தான்.

அவளுக்கு மூட் சரியில்லை என நன்றாக தெரிந்தது வேந்தனுக்கு. அந்த மாதிரி சமயங்களில் தான் முகத்தில் அடித்த மாதிரி பேசுவாள். அமைதியாக அவளது கையைப் பற்றிய படி அமர்ந்திருந்தான் அவன். மணலை கைகளால் அலைந்தபடி இருட்டை வெறித்துக் கொண்டிருந்தாள் அவள். பின் அவன் மடியில் சாய்ந்து படுத்துக் கொண்டாள்.

மெல்லிய நிலவொளியில், கடல் காற்று மோத அழகிய சிற்பமாய் கவிழ்ந்து கிடந்தவளை பாசத்துடன் பார்த்தான் வேந்தன். அவனை அறியாமலே கைகள் நீண்டு அவள் மணிவயிற்றைத் தடவிக் கொடுத்தது.

“நெஞ்சே நெஞ்சே நெறுங்கிவிடு
நிகழ்ந்ததை மறந்துவிடு
நெஞ்சே நெஞ்சே நெகிழ்ந்துவிடு
நிஜங்களில் கலந்துவிடு
கட்டி வைத்த காற்றே வந்துவிடு
கைகள் ரெண்டை ஏந்தினேன்
காதல் பிச்சை கேட்கிறேன் ம்ம்ம்ம்  “

அவள் தலை முடியை கோதியவாறே மென்மையாக பாடினான் வேந்தன். இத்தனை நாள் இல்லாமல் ஏன் திரும்பவும் இந்த மனப்புழுக்கம் அவளுக்கு என மனம் யோசித்துக் கொண்டே இருந்தது.  

படுத்தவாறே அவனை நிமிர்ந்து பார்த்தவள்,

“நிகழ்ந்ததை மறந்துவிடுன்னு பாடுறியே, ஆனா மறக்க விடாம மீண்டும் மீண்டும் அந்த புண்ணைக் குத்தி ரணமாக்குறாங்க மலர். எவ்வளவு தான் என் காயங்கள நீ ஆற்றினாலும், அந்த ஆளு திரும்பவும் குத்தி புண்ணாக்குறான். அவனைக் கொன்னாத்தான் இந்த வெறி அடங்கும்”

“ரோஜா! வயித்துல பிள்ளைய வச்சிக்கிட்டு இப்படி ஆங்காரமா பேசாதடா. இந்த மாதிரி நேரத்துல மனசு சாந்தமா இருக்கனும். நல்ல எண்ணங்கள மட்டும் விதைக்கனும். தாயோட கோப தாபங்கள் பிள்ளைங்களையும் பாதிக்கும். நீ ஆசையா சுமக்கற இந்த பிள்ளைங்க நல்ல மனிதர்களா உருவாக வேண்டாமா?”

“என் பிள்ளைங்க உன்னை மாதிரி நல்லவனா இருக்கனும் மலர். என்னை மாதிரி இருக்க கூடாது.”

“அப்படின்னா உன் மனச அரிக்கறது என்னன்னு என் கிட்ட பகிர்ந்துக்கம்மா. மனசு விட்டு பேசுனா பாரம் குறையும் ரோஜாம்மா”

“கண்டிப்பா குறையுமா? என் கதைய கேட்டுட்டு, என்னை விட்டுப் போயிர மாட்டீயே மலர்?”

“நீ கொலையே செய்திருந்தா கூட உன்னை விட்டுப் போக மாட்டேன்டா”

“இன்னிக்கு அந்த ஆளுக்கு பிறந்த நாள்”

அந்த ஆள் அவளது அப்பா ராகவன் என அவனுக்குப் புரிந்தது.

“நல்லா குடிச்சு கூத்தடிச்சுட்டு, எவளையோ கட்டி பிடிச்சு, பேஸ்புக்ல செல்பி வித் குல்பின்னு போட்டு வச்சிருக்கான். ரகசியமா நடந்த லீலை எல்லாம் நான் துரத்தி விட்டதும் பகிங்கரமாகவே நடக்குது.”

“விடுமா! அவரு வாழ்க்கை அவர் கையில. நாம கட்டுப்படுத்த அவர் என்ன சின்ன பிள்ளையா?”

“அது மட்டும் இல்ல, சொத்தெல்லாம் நான் அபகரிச்சிட்டேன்னு கேஸ் வேற போட்டுருக்காரு. இதெல்லாம் எங்கம்மா சொத்து. என் பிள்ளைகளுக்கு சேர வேண்டியது. அந்த ஆளை ஜெய்க்க விடமாட்டேன்.”

அங்கே இந்துவின் இல்லத்தில், ஏதோ சத்தத்தில் தூக்கம் கலைந்து எழுந்து அமர்ந்தாள் லட்டு. கார்த்திக் நாற்காலியில் அமர்ந்திருந்தான். அவன் கண்கள் அழுதது போல் பளபளப்பாக இருந்தது. அவள் எழுந்ததைப் பார்த்து கண்களை துடைத்தவன் சட்டென முகத்தை சீர் படுத்திக் கொண்டான்.

“என்னாச்சு கார்த்திக்? தூங்கல?”

“வரேன் லட்டும்மா. கொஞ்சம் மெயில் செக் பண்ணிகிட்டு இருந்தேன்.”

“பொய் சொல்லாதடா ! என்ன ஆச்சு? ஏன் இந்த கண்ணீர்?”

அவளது கூரிய பார்வையில் தடுமாறியவன்,

“இன்னிக்கு எங்க அம்மாவோட நினைவு நாள்.” குரல் கலங்கியது அவனுக்கு.

கட்டிலில் இருந்து எழுந்து வந்தவள், அவனை வயிற்றோடு கட்டிக் கொண்டாள். அவளது இடுப்பைச் சுற்றி கைப் போட்டு அணைத்துக் கொண்டான் அவன். சத்தமில்லாமல் அவன் சிந்திய கண்ணீர் அவள் நைட்டியை நனைத்தது. ஆறுதலாக அணைப்பை இறுக்கினாள் அவள்.

மெல்ல இயல்புக்கு திரும்பியவன், அவளை தன் மடியில் அமர்த்திக் கொண்டான்.

“எங்கம்மா ரொம்ப நல்லவங்க லட்டு. மனிதர்களின் பச்சோந்திதனத்தை பகுத்தறிஞ்சிக்க தெரியாதவங்க. பெரிய பணக்காரக் குடும்பத்துல பிறந்தும், புருஷன் தான் எல்லாம், அவனுக்கு சேவை செய்யத்தான் நாம பிறந்திருக்கோம்னு போதிக்கப்பட்டவங்க. கணவன் சொல்லே மந்திரம்னு வாழ்ந்தவங்க. ஆனா கடைசியிலே பக்கத்துல யாரும் இல்லாம அனாதையா இறந்தாங்க.”

அமர்ந்த வாக்கிலே அவளை அணைத்துக் கொண்டவன், சிறிது நேரம் அமைதியாக இருந்தான்.

“பிரேய்ன் டியூமர். எனக்கு சின்ன வயசா இருக்கறப்பவே. கொஞ்சம் கொஞ்சமா கண்ணு மங்கி, உடல் உறுப்புகள் செயல் இழந்து பரிதாபமா இறந்தாங்க. என் வாழ்க்கை முழுக்க ஹாஸ்டலிலே தான். விசிட் பண்ண போகும் போதெல்லாம் கட்டிப் பிடிச்சுக்குவாங்க. என் முன்னாடி ஒரு சொட்டு கண்ணீர் விட மாட்டாங்க. முதல்ல வீட்டிலே வச்சிப் பார்த்தாங்க. நோயோட தீவீரம் கூட கூட ஹாஸ்பிட்டல் வாசம் தான். நான் ஒவ்வொரு தடவை பார்க்கறப்பவும் ஒவ்வொரு புலன் செயல் இழந்திருக்கும். கடைசியா பார்த்தப்ப கண்ணு தெரியாம இருந்தாங்க. பேச மட்டும் தான் முடிஞ்சது அவங்களால. காது கூட கேட்காது. நான் அவங்க சொன்னது புரிஞ்சதுன்னு, கை பிடிச்சி அமுக்கி தான் உணர வைப்பேன். “

சிறிது நேரம் அவர்கள் இருவரின் மூச்சு சத்தம் மட்டும் தான் கேட்டது.

“பணம் இருந்ததுன்னு சொன்னீங்க, அவங்கள காப்பாத்த முயற்சி செய்யலயா கார்த்திக்?”

“முதல் தடவை ஆபரேசன் செஞ்சாங்க. ஆனா கட்டிய முழுதா அகற்ற முடியலை. ஆறு மாசத்துல திரும்பவும் கட்டி பெருசா வளர ஆரம்பிச்சது. திரும்பவும் செஞ்சா ரிஸ்க். பேரலைஸ் ஆக சான்ஸ் இருக்குன்னு டாக்டர்ஸ் கருத்து. அவங்க உடலும் ஒத்துழைக்கல. அதோட அம்மாவும் முடியாதுன்னு சொல்லிட்டாங்க. முடிக்க வேண்டிய கடமை ஒன்னு இருக்கு. அதுக்கு முன்ன தனக்கு ஒன்னும் ஆகக் கூடாதுன்னு ஒத்தை காலுல நின்னுட்டாங்க. அது தான் அவங்க கடைசி ஆசைன்னும் சொன்னாங்க. என்னால ஒன்னும் பண்ண முடியலைடா”

“உங்க அப்பா?”

“அவரப் பத்தி எதுக்கு இப்ப பேச்சு? ஒன்னு மட்டும் சொல்லுறேன். அவர் பிறந்த நாள் அன்னிக்குத் தான் அவங்க இறந்தாங்க. அந்த ஆளு அப்ப எவ கூட எங்க சுத்திக்கிட்டு இருந்தானோ. அந்தக் கடவுளுக்குத் தான் வெளிச்சம்”