Uyirkadhal final

Uyirkadhal final

உயிர் காதலே உனக்காகவே… 18

மொரீஷியஸ்… தேனிலவுக்காகவே பிரத்யேகமாக இறைவனால் ஸ்ருஷ்டிக்கப்பட்ட பகுதியோ என வியப்புறும் வண்ணம் எங்கு நோக்கிலும் இயற்கையழகு கொட்டிக் கிடந்தது.

பச்சையும் நீலமும் கலந்த பளிங்கு போன்ற சுத்தமான கடல்நீர். கண்ணுக்கு எட்டியவரை தீவைப் போர்த்தியிருந்த பசுமை. தேனிலவுத் தம்பதியரைத் தொந்தரவு செய்யக் கூடாது என்ற கவனத்தோடு மெல்லத் தலைநீட்டிய சூரியன்.

மேனியைத் தழுவிச் செல்லும் குளிர்காற்று என அனைத்தையும் ரசித்தபடி அமர்ந்திருந்தான் சரண்.
அது ஒரு ஹனிமூன் காட்டேஜ்.

தனித்தனி குடில்களாக போதுமான இடைவெளி விட்டு, அறைகள் கடலுக்கு வெகு அருகில் அமைக்கப்பட்டிருந்தது.

படுக்கையறை, வரவேற்பறையைத் தொடர்ந்த பால்கனியில், நீச்சல் குளம் இருக்க, அதனோடு சேர்ந்த படிக்கட்டுகள் வெளியே அமைக்கப்பட்டு அவை கடல் நீருக்குள் இறங்கும் வழியாகவும் இருந்தது.

அந்த படிக்கட்டில் இறங்கி அமர்ந்து கால்களை கடல் நீரினுள் தொங்கவிட்டபடி கையில் தேநீரோடு அமர்ந்திருந்தான் சரண். இலகுவான பனியனும் பெர்முடாஸும் அணிந்திருந்தான். சூழலுக்கு இதமாக சூடான தேநீர் துளித்துளியாய் தொண்டையில் இறங்கிக் கொண்டிருந்தது.

முன்னிரவு விடியலின் தொடக்கம் வரை விடாமல் படித்த காதல் பாடத்தின் விளைவாக ஹரிணி களைப்போடு தூங்கிக் கொண்டிருந்தாள். தூக்கம் கலைந்து எழுந்தவன் அவளது தூக்கத்தைக் கலைக்க மனமில்லாமல் இயற்கையை ரசிக்க வந்து அமர்ந்திருந்தான்.

திருமணமாகி நான்கு நாட்களே ஆகியிருந்தது. அவள் படிப்பு முடியவும் மீண்டும் திருமணத்திற்கு பேசிய பெரியவர்களிடம்,

ஆனந்தனின் கேஸ் முடிந்து அவன் விடுதலையடையும் வரை திருமணத்துக்கு ஒப்புக்கொள்ள மாட்டேன் என்று பிடிவாதம் பிடித்திருந்தாள் ஹரிணி.

அவனுக்குமே அவளது வாதம் சரியென்று பட்டதில் பெரியவர்களை சமாதானப்படுத்தி வைத்திருந்தவன், கேஸ் முடிந்து ஆனந்தன் விடுதலையானதும் உடனடியாக திருமணத்தை நடத்திக் கொண்டு கையோடு ஹனிமூனுக்கும் அவளை அழைத்துக்கொண்டு வந்துவிட்டான்.

நான்கு நாள் மணவாழ்க்கை, உடலின் ஒவ்வொரு அணுவிலும் கலந்துவிட்ட காதல் மனைவியின்றி இனி தான் ஒரு நொடிகூட இல்லை என்பதைப் புரிய வைத்திருக்க, ஆனந்தனின் கோபத்துக்கான நியாயம் தெளிவாகப் புரிந்தது.

ஒரு காவல்காரனாக ஆனந்தனின் செயல் தவறென்று எண்ணினாலும், ஒரு காதல் கணவனாக அவனது செயல் நியாயம் என்றே தோன்றியது. தன் இணையின் மீது எவ்வளவு நேசமிருந்திருந்தால் அவளது நிலைக்கு காரணமானவன் ஒவ்வொருவனையும் தன் கையால் பழி தீர்க்கும் வெறி ஏற்படும்?

ஆனந்தனின் மனம் அமைதியடைந்ததில் அவனது வாழ்வும் இனி மெல்ல மலரும் என்ற நம்பிக்கை வந்திருந்தது. சரணுக்கு மனம் நிறைவாக உணர்ந்தது.

கிட்டத்தட்ட ஆறேழு மாதங்களுக்கு முன்பு ஆனந்தனைச் சந்திக்க சிக்மகளூர் சென்றபோது நிகழ்ந்த நிகழ்வுகள் நினைவுக்கு வந்தன.

ஆனந்தனிடம் ஏதோ ரகசியம் இருப்பதாகத் தோன்றவும் அவனைச் சந்திக்க சிக்மகளூர் சென்றான் சரண். அவன் சிக்மகளூர் சென்று மலை மீதிருந்த சத்ய சஞ்சீவினி வைத்திய சாலையை அடையும் பொழுது சூரியன் தன் பணியை சுறுசுறுப்பாகச் செய்யத் துவங்கியிருந்தான்.

மலை மீது வீசிய குளிர் காற்றுக்கு கதிரவனின் கிரணங்கள் இதம் சேர்க்க, அதனை ரசித்தபடி அங்கிருந்த இளம் வைத்தியர் ஒருவரிடம் ஆனந்தனைப் பார்க்க வந்திருப்பதாகச் சொல்ல, அவர் ஆனந்தன் வழக்கமாக தியானம் செய்யும் பாறையைக் காட்டினார்.

கிடுகிடு பள்ளத்தாக்கின் விளிம்பில் பாறையின் மீது அமர்ந்து அமைதியாக கண்களை மூடி அமர்ந்திருந்தான் ஆனந்தன்.

பத்மாசனத்தில் அமர்ந்து கைகள் சின் முத்திரையை தாங்கியிருக்க, முகமோ வெகு அமைதியாக இருந்தது.
நடந்து ஆனந்தனின் அருகே வந்த சரண், “ஆனந்தன்…” என்றழைக்க, மெல்லக் கண்கள் திறந்தவன் சரணைப் பார்த்து புன்னகைத்தான்.

“உங்களோட கொஞ்சம் பேசனுமே. வழக்கு சம்பந்தமா.”
சலனமில்லா முகத்தோடு சரணை ஏறிட்டவன், மெல்ல எழுந்தான்.

பலமில்லாத கால்கள் லேசாகத் தடுமாற, பதற்றத்தோடு ஆனந்தனைத் தாங்கிக் கொண்டது சரணின் கரங்கள்.

“ஏன் இங்க வந்து தியானம் பண்றீங்க. லேசா சிலிப் ஆனாலும் என்ன செய்யறது?”
சரணின் பதட்டத்தில் ஆனந்தனின் உதடுகள் புன்னகை சிந்த,

“அதெல்லாம் ஆகாது. மூனு வருஷமா இங்கதான் தியானம் செய்யறேன். அகன்ற அண்ட வெளியில் பார்வையை நிறுத்தி, புலன்களைக் குவித்து,

கொந்தளிக்கும் மனதை ஒருநிலைப் படுத்த முயற்சி செய்வேன். ஆனா, முடிஞ்சதில்லை. இப்ப கொஞ்ச நாளாதான் மனசு அமைதியா இருக்கு.”
பேசிக்கொண்டே வைத்திய சாலையை அடைந்திருந்தனர் இருவரும்.

அப்பொழுது வெளிவந்த வயதான தலைமை வைத்தியர் ஆனந்தனிடம்,

“உன் மனைவி எழுந்திட்டா பா. எழுந்ததும் உன்னைப் பார்த்தாகனும் அவளுக்கு, அதுவரை யாரையும் அவளறைக்குள்ள அனுமதிக்க மாட்டா. சீக்கிரம் போ.” என்க.
சரணுக்கு அதிர்ச்சியான அதிர்ச்சி.

“மனைவியா? இ… இவர் என்ன சொல்றாரு ஆனந்தன்? அ… அப்ப பூரணி?”

“உள்ள வாங்க.” என்றபடி ஆனந்தன் வைத்திய சாலைக்குள் நடக்க, அவனைப் பின்தொடர்ந்தான் சரண்.

மூலிகை வாசம் வீசும் அறைகள் சிலவற்றைக் கடந்த பிறகு சிறு குடில் போன்ற அமைப்பு ஒன்றினுள் நுழைந்தனர். அறைக்குள் போடப்பட்டிருந்த மூங்கில் கட்டிலின் மூலையில் ஒடுங்கி அமர்ந்தவாறு அறைக்குள் வந்த புதியவனை கண்களில் மிரட்சியுடன் பயமும் தேங்கியிருக்கப் பார்த்திருந்த பூரணியைக் கண்ட சரணுக்குள் என்ன சொல்வதென்றே தெரியாத அதிர்ச்சி வியாபித்திருந்தது.

அவளைப் பார்த்த ஆவலில், கட்டிலின் அருகே மேலும் இரண்டு அடிகள் எடுத்து வைத்த சரணைக் கண்ட பூரணி, கட்டிலின் ஓரத்தில் மேலும் மேலும் ஒடுங்கியவாறு தீனமான ஓசையெழுப்பி நடுங்கத் தொடங்க, விரைந்து சென்று அவளை அணைத்துக் கொண்டான் ஆனந்தன்.

“ஒன்னுமில்லைம்மா. ஒன்னுமில்லை. அவர் ரொம்ப நல்லவர். நமக்கு நல்லது செய்யதான் வந்திருக்காரு. பயப்படக்கூடாது. பூரணி நல்ல பிள்ளையில்ல. இங்க பாரு… மாமாவைப் பாரு.”
ஆனந்தனின் மார்பில் முகம் புதைத்து மேலும் மேலும் நடுங்கி ஒன்றியவளை சமாதானப்படுத்த முயற்சித்தான். பூரணியின் பயத்தை உணர்ந்து கொண்ட சரண் சற்று பின்னோக்கி நகர்ந்து கொண்டான்.

பூரணியின் நிலை மிகவும் பரிதாபத்தை வரவழைப்பதாய் இருந்தது. இளைத்து மெலிந்த தேகத்தோடு தொளதொளவென்று ஒரு அங்கி போன்ற ஆடையை உடுத்தியபடி தோள் வரை வழிந்த கூந்தல் கண்டபடி கலைந்து கிடக்க, பயந்து நடுங்கி ஒடுங்கி அமர்ந்திருந்தாள்.

விபத்தின் தாக்கத்தால் கை கால்களில் தழும்புகள் ஏராளமாக இருந்தது. முகத்தில் காயத் தழும்புகள் அவ்வளவாக இல்லாததால் பூரணியின் முகம் மட்டும் தெளிவாக இருந்தது.

வார்த்தைகளின்றி குரல் மட்டும் வித்தியாசமாக கீச் கீச் என்று எழுப்பியபடி இருந்தவளைப் பாவமாகப் பார்த்திருந்தான் சரண்.

அதற்குள் ஆனந்தன் சற்று அவளைச் சமாதானப்படுத்தியிருக்க, ஆனந்தனின் தோள்களில் புதைந்தவாறு அமைதியாக இருந்தாள் பூரணி.

“சாரி சரண், வெளியாட்கள் யார் வந்தாலும் பூரணி இப்படிதான் நடந்துக்குவா. இங்க இருக்கறவங்கள்ல கூட ஆண்களை அவ நெருங்க விடறதில்லை.

என்னையும் ஐயாவையும் (தலைமை மருத்துவர்) தவிர வேற யாராலையும் அவளை சமாளிக்க முடியாது.”

அப்பொழுது தலைமை மருத்துவரோடு பெண் ஊழியர் ஒருவர் பூரணிக்கான உணவை எடுத்து வர, அதனை வாங்கிக் கொண்ட ஆனந்தன் மெதுவாக பூரணிக்கு ஊட்டத் துவங்கினான்.

தலைமை மருத்துவரை ஏறிட்ட சரண், “ஐயா, அன்னைக்கு நான் வந்தப்ப ஆனந்தன் பத்தி சொன்னீங்க. ஆனா பூரணி பத்தி எதுவுமே என்கிட்ட சொல்லலையே ஏன்?” அவனுக்கு மிகுந்த ஆதங்கமாக இருந்தது எட்டு வருடங்களாக இவர்கள் இருவரும் இருப்பதே வெளியுலகுக்குத் தெரியாமல் போனதே என்று.
ஆதூரத்தோடு பூரணியை ஏறிட்டவர்,

“இளம் பெண்பிள்ளை… அதுவும் தன்னிலை இல்லாமல் இருப்பவளைப் பற்றி வெளியில் சொல்வது அவ்வளவு பாதுகாப்பு இல்லைன்னுதான் நான் சொல்லலைப்பா.

மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்ட இந்தப் பெண்ணைப் பற்றிய எந்தத் தகவலும் தெரியாத போது, யாரிடம் என்று இவளைப் பற்றி சொல்ல முடியும்? அது பாதுகாப்பா இருக்குமா?”

“…”

“இவரைக் கொண்டு வந்த ஆதிவாசிகள்தான் பூரணியையும் கொண்டு வந்தாங்க. மிகுந்த சேதமடைஞ்சு இருந்த அவங்களோட உடல் உறுப்புகளைச் சேர்த்து அவங்களுக்கு சுயநினைவுக்கு வர வைத்தியம் பார்க்கறதுக்கே எங்களுக்கு மாசக்கணக்குல ஆச்சுது.

ஆனந்தன் கிட்டத்தட்ட அஞ்சு வருஷம் சுயநினைவில்லாம கிடந்தாரு. ஆனா பூரணிக்கு சில மாதங்கள்லயே சுயநினைவு வந்துடுச்சி. மிகப் பெரிய அதிர்ச்சியை சந்திச்சதால மனதளவில் ரொம்ப பாதிக்கப்பட்டிருந்தா. அந்த அதிர்ச்சியில அவளுக்குப் பேச்சும் வரலை. அதற்கான சிகிச்சைகள்தான் இப்ப நடந்துகிட்டிருக்கு.

ஆரம்பத்துல என்னைக்கூட அவளைத் தொட அனுமதித்ததில்லை. பெண் செவிலியர்களை வைத்துதான் அவளை சமாளித்தோம்.

இருவரையும் ஒன்றாக கொண்டு வந்ததால் இருவரும் தெரிந்தவர்களாகவோ அல்லது கணவன் மனைவியாகவோதான் இருக்க வேண்டும் என்று நினைச்சதால இரண்டு பேரையும் ஒரே அறையில்தான் வைத்திருந்தோம்.
அப்பொழுது மற்ற யாரையும்

அருகில் வரவிடாவிட்டாலும், சுயநினைவில்லாத ஆனந்தனின் கரங்களைப் பிடித்தவாறு சூனியத்தை வெறித்தபடி அமைதியாக அமர்ந்திருப்பாள்.

இருவருக்கும் என்ன நேர்ந்தது என்பது தெரியாததாலும், இவர்களை யாருமே இந்த பகுதியில் தேடாததாலும் என்ன செய்வது என்றே புரியாமல் இருந்தோம்.

அப்பொழுது அவனுடைய பெயர்கூட தெரியாது எங்களுக்கு. அப்படியும் ஆனந்தனைப் பற்றி மட்டும் காவல்நிலையத்தில் புகாராக பதிவு செய்திருந்தேன். ஆனால் யாருமே அவனைத் தேடியும் வரவில்லை.

ஆனந்தனுக்கு சுயநினைவு வந்த பிறகும் அவனுக்கு பழைய நினைவுகள் எதுவுமே இல்லை.

ஆனால் பூரணியை மட்டும் நினைவிருந்தது. வேறு எந்தத் தகவல்களையும் அவனால் சொல்ல முடியவில்லை.

அவர்கள் இருவரைப் பற்றிய தகவல்களைத் தேடத்தான் அவன் மலையை விட்டு இறங்கிச் செல்வான். அதுவுமே பூரணிக்கு மயக்கத்தில் வைத்து சிகிச்சைகள் நடக்கும் நாட்களில்தான் போவான்.

அவனில்லாத பொழுதுகளில் இந்தப் பெண்ணை சமாளிப்பது எங்களுக்கு கஷ்டம்.”

“…”

“எட்டு வருஷமா இரண்டு பேரையும் என்னுடைய குழந்தைகளாகவே எண்ணி பாதுகாத்து வந்தேன். சமீத்தில்தான் ஆனந்தனின் வழக்கு விபரமும் அவன் செய்த கொலைகளைப் பற்றியும் தெரிய வந்தது.

கயவர்களைக் களையெடுத்த அவனுடைய செயல் எனக்குத் தவறென்று படவில்லை.

அதனாலதான் பூரணிக்குப் பூரணமா குணமாகறவரை இங்கயே இருக்கோம்னு அவன் சொன்னதும் ஒத்துக்கொண்டேன்.”

இவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே பூரணிக்கு உணவூட்டி அவள் முகத்தைக் கழுவி அவளுக்குத் தரவேண்டிய மருந்துகளைத் தந்தவன், அவளை பெண் செவிலியர் ஒருவரிடம் ஒப்படைத்துவிட்டு வந்தான்.

“பூரணியைப் பற்றி அவங்க பேரண்ட்ஸ் கிட்ட சொல்லனும்னு தோனலையா உங்களுக்கு? முன்னாடி உங்களுக்கு உங்க சொந்தங்களைத் தெரியாது… ஆனா, இப்ப அவங்களைத் தெரியுமே. அவங்களும் தங்களோட பொண்ணை இழந்துட்டு எட்டு வருஷமா கஷ்டப்படறாங்க. பூரணி உயிரோட இருக்கறது தெரிஞ்சா சந்தோஷப் படுவாங்கல்ல.” சரணின் குரலில் பலத்த ஆதங்கமிருந்தது.

“கண்டிப்பா சொல்லுவேன் சரண். என்னோட டைரியைப் படிச்சுதான் பூரணி என்மேல வச்சிருந்த அளவில்லாத காதலை என்னால முழுசா தெரிஞ்சுக்க முடிஞ்சுது. என் மேல உள்ள பிரியத்துல என்னைத் தேடி எனக்காக பெத்தவங்களை விட்டு பெங்களூரு வந்த பூரணிய அவளோட பெத்தவங்க முன்னாடி இப்படி ஒரு நிலையில நிறுத்த விரும்பல.

தன்னைப் பெத்தவரையும் தன் அண்ணன்களையுமே பார்த்து பயந்து அலறக்கூடிய நிலையில இருக்கற அவளைப் பார்த்தா அவங்க இன்னும் உடைஞ்சு போயிடுவாங்க.
முன்பைவிட பூரணிகிட்ட இப்ப நல்ல முன்னேற்றம் இருக்கு. அவ சீக்கிரம் நார்மலுக்கு வந்துடுவா. அப்ப அவங்ககிட்ட அவளை பத்திரமா கொண்டு சேர்ப்பேன்.”

ஆனந்தன் சொன்னதில் இருந்த நியாயத்தை சரணால் புரிந்து கொள்ள முடிந்தது. அதே சமயம் அன்றே அந்த விபத்து வழக்கை போலீசார் ஒழுங்காக விசாரித்திருந்தால் எட்டு வருடங்கள் இவர்கள் இப்படி இருந்திருக்க வேண்டியதில்லையே என்று தோன்றியது.

ஆனால்… ஒருவேளை அப்பொழுது போலீசார் இவர்களை கண்டுபிடித்திருந்தாலும், குற்றுயிராய் இருந்தவர்களை அந்தக் கயவர்கள் மூவரும் உயிரோடு விட்டுவைத்திருக்க மாட்டார்கள் என்றும் தோன்றியது.

நடந்தது அனைத்தும் நன்மைக்கே என்று எண்ணிக் கொண்டான்.
“அவ்வளவு உயரத்துல இருந்து விழுந்தும் நீங்க ரெண்டு பேருமே உயிரோட இருக்கறது நிஜமாவே ஆச்சர்யமான விஷயம்தான்.

இதுக்காக கடவுளுக்குத்தான் நன்றி சொல்லனும்.
அன்னைக்கு என்ன நடந்ததுன்னு உங்களுக்கு நினைவிருக்கா? எப்படித் தப்பிச்சீங்க? கார் தீப்பிடிச்சு எரிஞ்சு போயிருந்தது. நீங்க காரைவிட்டு எப்படி வெளிய வந்தீங்க ஏதாவது நினைவிருக்கா?”

“இல்ல, எனக்குத் தெளிவா எதுவுமே நினைவில்லை. அன்னைக்குப் பூரணியை நான் பார்த்த கோலமும், அந்த சம்பவத்துக்குக் காரணமான அந்த நாலு பேரோட முகமும்தான் தெளிவா நினைவிருக்கு.

என் பின் மண்டையில யாரோ தாக்கினது லேசா நினைவிருக்கு. அப்புறம் எங்களை கார்ல வச்சு மலைமேல இருந்து உருட்டி விட்டப்ப,

அவ்வளவு உயரத்துல இருந்து கீழ விழும்போதே கார் கதவுகள் திறந்துடுச்சி. என்கூட இருந்த பூரணியை மார்போட இறுக்கி அணைச்சுக்கிட்டு காரை விட்டு வெளியே வந்து மரங்கள்லயும் பாறைகள்லயும் மோதி விழுந்தது லேசா நினைவுல இருக்கு.

ஆனா, இதெல்லாம் அப்புறமா நான் யோசிச்சுப் பார்க்கப் பார்க்க கொஞ்சம் கொஞ்சமா நினைவுக்கு வந்தவை. கண் விழிச்சப்ப பூரணியைத் தவிர வேற எதுவுமே நினைவில் இல்லை.”

“அந்த நாலு பேரைப் பற்றிய தகவல்களை எப்படி சேகரிச்சீங்க?”

“இங்க வைத்திய சாலையில இருந்த நியூஸ் பேப்பர்லதான் அந்த கலெக்டர் முகத்தைப் பார்த்தேன்.

பழையவைகள் கொஞ்சம் கொஞ்சமா நினைவுக்கு வந்தது. அதுக்கப்புறம் அவனைப் பற்றிய விபரங்களைத் தெரிஞ்சுக்க மலையை விட்டு இறங்கி டவுனுக்குப் போய் பிரௌசிங் சென்டர்ல இன்டர்நெட்ல தேடி தெரிஞ்சுகிட்டேன்.

என்னால கம்ப்யூட்டர்லாம் உபயோகிக்க முடியும்ங்கறதே அப்பதான் தெரிஞ்சிக்கிட்டேன்.

அப்படியே எந்தவித இலக்கும் இல்லாம தொடர்ந்து தேடும் போதுதான் அந்த டிஎஸ்பியோட தகவல்களும் கிடைச்சது.

அதுக்கப்புறம் மீதி இரண்டு பேரும் இதேமாதிரி அரசு அதிகாரிகளா இருக்கலாமோன்னு யூகிச்சுத் தேடும் போதுதான் அவங்களைப் பற்றியும் தெரிஞ்சுக்க முடிஞ்சுது. இவங்க தகவல்களை எல்லாம் தேடிக் கண்டுபிடிக்கவே எனக்கு பல மாசங்கள் ஆனது.

முதல்ல கலெக்டரையும் டிஎஸ்பியையும்தான் பிளான் பண்ணி பின்தொடர்ந்து வந்து அவங்களைக் கொன்னேன்.

ஆனா அந்த ஃபாரஸ்ட் ஆபிசர் ஜார்ஜ் தானாதான் என் கண்ணுல சிக்கினான். அன்னைக்குக் காட்டுக்குள்ள வழக்கம் போல தூக்கம் வராம நடந்துகிட்டு இருக்கும்போது எதிர்பாராத விதமாதான் அந்த ஃபாரஸ்ட் ஆபீசரைப் பார்த்தேன்.

அஸ்ஸாம்ல இருந்தவன் ஒரு வாரம் முன்னதான் அந்த காட்டுக்கு மாற்றலாகி வந்திருந்தான். அவனைப் பார்த்ததும் அங்கயே அவனுக்கு முடிவு எழுதினேன்.

அங்கதான் ஹரிணியையும் பார்த்தேன். அதுக்கு முன்னவே அவளைப் பார்த்திருந்தாலும் அதெல்லாம் என் கவனத்துல அவ்வளவா பதியலை. அந்தக் காட்டுக்குள்ள ஹரிணி என்கிட்ட பேசியதை வச்சு அவளுக்கு என்னை முன்பே தெரிந்திருக்கலாம்னு நினைச்சேன்.

நான்காவது ஆளையும் முடிச்சிட்டு அப்புறமா அந்தப் பெண்ணைத் தேடி அவளிடம் இருந்து என் கடந்த காலத்தைப் பத்தி கேட்டுத் தெரிஞ்சுக்கனும்னு நினைச்சிருந்தேன்.

அப்புறம் நாலாவதா தனாவைக் கொல்லத் தேடி வரும்போது போலீஸ்கிட்ட செய்த குற்றங்களைச் சொல்லி சரணடையனுங்கற முடிவோடதான் வந்தேன். அங்க ஹரிணியை அவனோட தங்கையா சந்திச்சதும் அவகிட்ட இருந்து என் டைரி கிடைச்சதும் என் பெற்றவர்களைப் பத்தி தெரிஞ்சிக்கிட்டதும் எதிர்பாராம நடந்தது.

ஹரிணி நான் செய்த கொலைகளை எல்லாம் நேர்ல பார்த்து அடையாளம் கண்டுபிடிச்சு என்னைத் தேடித் தெரிஞ்சுகிட்டதும், நீங்க உங்க விசாரணையின் மூலமா பழைய சம்பவங்களைக் கண்டு பிடிச்சதும் அப்புறமாதான் எனக்குத் தெரிஞ்சது.”

“…”

“இப்பவும் சட்டத்தை என் கையில எடுத்துக்கிட்ட தப்புக்குத் தகுந்த தண்டனைய அனுபவிக்கனும், அதுதான் நியாயம்னு தோனுது.
ஆனா பூரணிக்கு இப்ப என்னைவிட்டா யாருமே கிடையாது, அவ யாரையும் நெருங்கவும் விட மாட்டா. அவளுக்காக தண்டனை இல்லாம அவகூடவே இருக்கனும்னும் மனசு அடிச்சுக்குது.

பார்க்கலாம் தீர்ப்பு எப்படி வருதுன்னு.” சலனமில்லாத மெல்லிய குரலில் சொல்லி முடித்தான்.

“உங்களை தண்டனை எதுவுமில்லாம சீக்கிரம் வெளியே கொண்டு வந்துடுவேன்னு ஒருத்திகிட்ட வாக்கு கொடுத்திருக்கேன்.

உங்களுக்கு ஏதாவது தண்டனை கிடைச்சா அவ என்னை ஒருவழியாக்கிடுவா. குறைந்தபட்ச தண்டனைகூட இல்லாம உங்கள வெளிய கொண்டு வரவேண்டியது என்னோட பொறுப்பு.

இப்பவும் பூரணி உயிரோட இருக்கற விஷயம் தெரிஞ்சா அடுத்த நிமிஷம் இங்க வரனும்னு நிப்பா. அவளையும் அழைச்சுக்கிட்டு அடுத்து வரேன்.

அதுவுமில்லாம இந்த கேஸ் முடியனும்னா பூரணியப் பத்தின தகவல்கள் வெளிய தெரியனும் ஆனந்தன். இன்னமும் பூரணியை போலீஸ் தடவியல் துறையில தேடிகிட்டு இருக்காங்க.

அவங்களைப் பத்தின தகவல்களை சீக்கிரம் வெளிய சொல்லியே ஆகனும்.”

“எனக்குக் கொஞ்சம் அவகாசம் மட்டும் கொடுங்க சரண். பூரணியோட நிலையில நிறைய மாற்றம் தெரியுது. சீக்கிரம் அவ சரியாகிடுவா. வெளியுலகத்துல எல்லாரையும் பயமில்லாம பேஸ் பண்ற அளவுக்கு அவளைத் தயார் படுத்திட்டு அவளைப் பற்றிய தகவல்களைத் தரலாம்.”
ஆனந்தனின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டான் சரண். பூரணியைப் பற்றி ஹரிணியிடம் சொன்னதில் தலைகால் புரியாமல் குதித்தவள் உடனே பார்க்க வேண்டும் என்று சரணை இழுத்துக் கொண்டு வந்திருந்தாள்.

எந்தத் தவறுமே செய்யாமல் எட்டு வருடங்களாக தண்டனை அனுபவித்த இருவரையும் பார்க்கும் போது மனது வலித்தாலும், இனியாவது இருவரும் நல்ல வாழ்க்கை வாழ வேண்டும் என்பதே தினசரி பிரார்த்தனையானது அவளுக்கு.

வாராவாரம் பூரணியைப் பார்க்க ஆவலோடு வரும் சுஜி மற்றும் ஹரிணியுடன் நன்கு பழகும் அளவுக்கு பூரணி சற்று தேறியிருந்தாள். வெளியாட்களை தனியாக எதிர்கொள்ளும் அளவுக்கு மாறாவிட்டாலும் ஆனந்தனின் துணையோடு எதிர்கொள்ளும் அளவுக்கு மாற்றம் சில மாதங்களுக்குப் பிறகு வந்திருந்தது.

அதற்கு ஹரிணியும் சுஜியும் மிக முக்கிய காரணமாயிருந்தனர். பூரணியோடு இயல்பாக பேசிப்பேசி உலகத்தை எதிர்க்கொள்ளும் தைரியத்தை சிறிது சிறிதாக அவளுக்குள் விதைத்திருந்தனர்.

‘பூரணிக்கா பூரணிக்கா…’ என்று வாய் ஓயாமல் அழைத்தபடி தன்னுடன் பேசும் அந்தப் பெண்கள், தன் சிறுவயதை நினைவுபடுத்தினரோ என்னவோ! மிகவும் பிடித்திருந்தது பூரணிக்கு.

பூரணிக்கு பேச்சு வருவதற்கான சிகிச்சைகள் மட்டும் தொடர்ந்து கொண்டிருந்தது. இடையில் அதிர்ச்சியில் போன குரல் ஆதலால் கண்டிப்பாக மீண்டுவிடும் என்ற நம்பிக்கை அனைவருக்குமே இருந்தது.

சில மாதங்களுக்குப் பிறகு எவ்வளவு தேடியும் பூரணியின் எலும்புத் துகள்கள் கிடைக்காததில் அவளும் எங்காவது உயிரோடு மீண்டிருக்கக்கூடும் என்ற எண்ணம் போலீசுக்கு வந்ததில், அவளைத் தேடும் பணியில் ஈடுபடும்போது அவளைப் பற்றிய தகவல்களை வெளியுலகத்திற்குத் தெரிவித்தான் ஆனந்தன்.

தங்கள் பெண்ணின் நிலை தாங்க முடியாத வருத்தத்தைக் கொடுத்தாலும் இறந்து போனதாக எண்ணியிருந்தவள் மீண்டு வந்ததே மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுத்தது அவளது பெற்றவர்களுக்கு.

அதன் பிறகு வழக்கு விசாரணை விரைவாக முடிவுக்கு வந்திருந்தது. எட்டு வருடங்களாக அவர்கள் அனுபவித்து வந்த துன்பம் இருவர் மீதும் பெரிய பரிதாபத்தை வரவழைத்திருந்தது.

அவர்களின் நிலைக்குக் காரணமான அந்த நான்கு பேரும் மனிதர்களாகவே மதிக்கத் தகுந்தவர்கள் இல்லை. அவர்களைக் கொன்றது தவறே இல்லை என்ற எண்ணம் அனைவருக்குமே வந்திருந்தது.

இணையதளத்திலும் தொலைக்காட்சி விவாதங்களிலும் இந்த வழக்கு மிகப்பெரிய பேசு பொருளாகி, ஆனந்தனுக்கு குறைந்தபட்ச தண்டனைகூட கிடைக்கக்கூடாது என்று வலியுறுத்தப்பட்டது.

அரசுத் தரப்பில் ஆனந்தனுக்கு எதிரான வலுவான சாட்சியம் எதுவுமே இல்லாதது ஆனந்தனுக்கு சாதகமாக வழக்கின் தீர்ப்பு வரக்காரணமாக இருந்தது.

“குற்றம் சாட்டப்பட்டவர் செய்த கொலைகளை ஒப்புக்கொண்டாலும், கொலைக்கான சாட்சியங்கள் பெரிதாக அரசுத் தரப்பில் சமர்ப்பிக்கப்படவில்லை. இது குற்றம் சாட்டப்பட்டவருக்கு சாதகமான ஒன்றாகும்.

கொலை செய்ததற்கான காரணமாக குற்றம் சாட்டப்பட்டவர் கூறிய காரணங்களை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு ஆராய்ந்ததில், எட்டு வருடங்களுக்கு முன்பு அவருக்கு இழைக்கப்பட்ட அநீதியை நீதிமன்றம் உணர்ந்துகொண்டது.

மேலும் குற்றம் சாட்டப்பட்டவருக்கு இருக்கும் மனரீதியான பாதிப்புகள் நிரூபிக்கப்பட்டதில் அவருக்கு வேண்டிய சிகிச்சைகள் தொடரவும், இந்த நீதிமன்றம் பரிந்துரை செய்கிறது.

சமூக அநீதியால் கடுமையாக பாதிக்கப்பட்ட ஒருவரின் தார்மீகக் கோபமாக இந்தக் கொலைகளைக் கருதுவதால், அவருக்கு மன்னிப்பு அளித்து இந்த வழக்கில் இருந்து அவரை விடுவிக்க இந்த நீதிமன்றம் உத்தரவிடுகிறது.”

நீதிபதி வழக்கின் தீர்ப்பை வாசித்து முடிக்கும்போது எதையோ சாதித்த திருப்தி சரணுக்கும் தீரனுக்கும் இருந்தது. ஆதரவோடு ஆனந்தனை அணைத்துக் கொண்டான் சரண்.

ஆனந்தன், பூரணியின் பெற்றவர்களும் வந்திருக்க, அனைவருக்குமே மகிழ்ச்சியைக் கொடுத்தது இந்த தீர்ப்பு.

ஆனந்தனும் பூரணியும் அவர்களோடு மதுரைக்கு கிளம்புவதாகவும், அங்கிருந்தே இருவரது சிகிச்சைகளையும் தொடர்வதாகவும் முடிவு எடுக்கப்பட்டது.

மனநிறைவோடு அவ்வளவையும் நினைத்து முடிக்கவும், கையிலிருந்த தேநீர் முடியவும், அவன் கழுத்தில் மாலையாய் ஹரிணியின் கரங்கள் பின்னிருந்து விழவும் சரியாய் இருந்தது.

முகம் கொள்ளாப் புன்னகையோடு தன் மனையாளின் கரங்களைப் பிடித்து இழுத்து தன் மடியில் அவளை அமர்த்திக் கொண்டவனுக்குள் பெரும் நிறைவு.

அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு அவன் மார்பில் சாய்ந்து கொண்டவள், “ஹேப்பிண்ணா இப்ப ஃபோன்ல பேசினாங்க. பூரணிக்காவுக்கு கொஞ்சம் கொஞ்சம் வார்த்தைகள் பேச வருதாம். ரொம்ப முயற்சி பண்ணி கஷ்டப்பட்டு என்னோட பேரை பூரணிக்கா சொன்னாங்க.” என்றவளுக்கு வெகுவாக கண்கள் கலங்கியிருந்தது.

“ம்ப்ச், என்னடா?” என்றபடி அவள் நெற்றியோடு நெற்றியை முட்டியவன், “சரியாகிடுவாங்க ஹரிணி. அருமையான ஒரு வாழ்க்கையை அவங்க ரெண்டு பேரும் வாழ்வாங்க. இனி பழையதை நினைச்சு வருத்தப்படவே கூடாது.

அவங்களோட நல்ல வாழ்க்கைக்காக மனதார பிரார்த்தனை மட்டும்தான் நாம செய்ய வேண்டியது.”
“ம்ம், புரியுது. ஆனா அவங்க செய்த தவறு என்ன? எதுக்கு அவங்களுக்கு இந்த தண்டனைங்கற கேள்விக்குதான் பதிலே இல்லை.”

எப்பொழுதும் போல மனதை அழுத்தும் ஆதங்கம் அவளது கேள்வியாய்…

“ஹரிணிம்மா, வாழ்க்கையில சில நேரம் சில நிகழ்வுகளுக்கு நமக்கு காரணமே தெரியறதில்லை. அதற்கான பதில் கடவுள்கிட்டதான் இருக்கு.”

சரணின் பேச்சுக்கு பதில் பேசாமல் அமைதியாக மார்பில் சாய்ந்திருந்த ஹரிணியை சற்று நேரம் அமைதியாக பார்த்திருந்தான்.

“ஓய் பொண்டாட்டி, ஹனிமூனுக்கு வந்துட்டு சோககீதம் வாசிச்சிக்கிட்டு இருக்கற. தப்பாச்சே!…” அவளை திசைதிருப்பும் முயற்சியாக குறும்போடு அவள் முகத்தை லேசாக உயர்த்தியவன், கலங்கிய அவள் கண்களோடு தன் கண்களைக் கலந்தபடி, அவன் மட்டுமே படிக்க பிரசுரிக்கப்பட்ட அவளது இதழ்களை நிதானமாக படிக்கத் தொடங்கினான்.

இருவரின் இமைகளும் சொருக, அவளை எவ்வளவு நேசிக்கிறான் என்று அவனாலும், அவனை எவ்வளவு நேசிக்கிறாள் என்று அவளாலும் வார்த்தைகளால் விவரிக்க முடியாத அந்த தருணத்தில் முத்தங்களால் விவரித்துக் கொண்டனர்.

இதழ்கள் பிணைத்துக் கொள்ளும் நேரம் வார்த்தைகள் விடுதலையாக, அவளைக் கைகளில் அள்ளிக் கொண்டவன் மெல்ல பள்ளியறை நோக்கி நடக்கத் துவங்கினான். இரு கைகளுக்குள் சொர்க்கம் அடங்குமென்று அவன் உணர்ந்து கொண்ட தருணமது.

இரு தேகங்கள் தாங்கிய கட்டில் ஓய்வுக்கு ஏங்க, அவர்தம் இளமையோ சிருங்காரத்தில் மூழ்க, பசி தூக்கம் மறந்து கொஞ்சும் கிளிகளாய் காதலில் திளைக்க, நேரம் காலம் மறந்து போனது அவர்களுக்கு.

யாரும் இல்லாத தனிமையில் அவனும் அவளும் மட்டும்… வேண்டாம் என்று அவளும் வேண்டும் என்று அவனும்…

எல்லைப் போராட்டம் நடத்தும் அவள் தேகம், அவன் தாகத்தைத் தீர்க்க… நிறைவான கூடல் முடிவில் கிறக்கத்தில் அவனும் மயக்கத்தில் அவளும்…

ஹரிணியின் மனத் தாங்கல்களுக்கு சரண் மருந்தாவது போல காலப்போக்கில் பூரணியின் மனக்காயங்களை ஆனந்தனின் அன்பு மாற்றி, இருவருடைய வாழ்க்கையும் இனிதாய் ஒருநாள் மலரும் என்ற நம்பிக்கையோடு விடைபெறுவோம்….

—-சுபம்.

error: Content is protected !!