UYIRODU VILAIYADU 16

e05cb271a307e37eb8119560c7061188

(போரும், மோதலும் எப்போதுமே பெரிய வணிகங்களின் கதவுகளாகவே இருக்கின்றன. அதில் கூலிப்படை/A mercenary, /soldier of fortune, தனியார் இராணுவ ஒப்பந்தக்காரர்கள்/private military contractorsகளுக்கு உலகளாவிய சந்தை 100 பில்லியன் டாலருக்கும் அதிகமாகும்.

ஒரு நாட்டின் தலையெழுத்தையே மாற்றும் வல்லமை கொண்டவர்கள் இந்த, ‘ghost army/ inivisible army ‘  என்று அழைக்கப்படுபவர்கள். இவர்கள் ஒரு நாட்டின் முறையான ராணுவ வீரர்கள் இல்லை.

Private Military Contractor on patrol in destroyed city — Stock Photo © kaninstudio #88675492

ஜெனீவா உடன்படிக்கைகள் கூலிப்படையினர், தனியார் ராணுவ ஒப்பந்தக்காரர்கள் முறையான போராளிகளாக அங்கீகரிக்கப்படவில்லை என்றும்,  ஒரு வழக்கமான இராணுவ வீரன் எதிரி நாட்டினரால் கைது செய்யப்படும்போது கொடுக்கப்பட வேண்டிய, அதே சட்டப் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டியதில்லை என்றும் அறிவித்துள்ளது.

இந்திய வரலாற்றில் கூலிப்படையினர் உள்ளனர், குறிப்பாகப், ‘புர்பியாக்கள்’.

‘புர்பியாக்கள்’ ராஜ்புத் போர்வீரர்களால் வழிநடத்தப்பட்ட கங்கை சமவெளிகளின் (இன்றைய மேற்கு பீகார் மற்றும் கிழக்கு உத்தரப்பிரதேசம்) பகுதியைச் சேர்ந்த போர்வீரர்கள். காலப்போக்கில், அவர்கள் முகலாயர்கள், மராட்டியர்கள் மற்றும் ஆங்கிலேயர்களுக்காகவும் போராடியுள்ளனர்.

நவீன ஜனநாயகத்தின் பிறப்பு, போரின் பரிணாமம், ஆயுத, தளவாடங்களின் வளர்ச்சி, உலகளாவிய மோதல், தேவைகள் அதிகரித்த காலநிலை ஆகியவை பெருநிறுவன கூலிப்படை, தனியார் இராணுவ நிறுவனங்கள், பி.எம்.சி/ PMC private military contractors உருவாகக் காரணமாய் இருந்துள்ளது.)

அத்தியாயம்  16

நினைப்பதெல்லாம் நடந்து விட்டால்
தெய்வம் ஏதும் இல்லை....’  என்ற பாடல், கோயிலின் முன்புறம் இருந்த டீக்கடையிலிருந்து ஒலிக்க, கோயிலின் பின்புறம் நின்றிருந்த அந்தச் சிறிய கூட்டத்தின் மனதை கச்சிதமாய் படம் பிடித்துக் காட்டி கொண்டிருந்தது.

நாம் எப்போது பிறப்போம், எப்போது இறப்போம், அல்லது வாழ்க்கை பயணம் என்னவாக இருக்கும் என்பது யாருக்கும் தெரியாது.

ஒவ்வொருவரின் வாழ்க்கை என்ற பயணத்தின் சுவாரஸ்யமே, அடுத்த நொடி என்ன நடக்கிறது என்பதை அறிய முடியாத ஒரு சாகசமாய் இருப்பதே என்றால் மிகையல்ல.

அது தான் வாழ்க்கை என்ற பயணமானது, நமக்கு அள்ளி வழங்கும் வர்ணஜாலம்.

யாராலும் வெல்ல முடியாத, யூகிக்க முடியாத கண்ணாமூச்சி விளையாட்டு தான் வாழ்க்கை.

வாழ்நாளில் பாதைகள் தவிர்க்க முடியாமல் மாறும். பயணம் ஒரு முடிவுக்கு வரும். நம்மால் பிறருக்கோ, பிறரால் நமக்கோ வாழ்க்கை பயணத்தின் பாதையானது நன்மைக்கோ, தீமைக்கோ மாற்றப் படலாம். இதை நாம் உணர்ந்தால் ஆச்சரியங்களும், திகைப்புகளும் நம்மைப் பாதிக்காது.

ஆனால், அங்கு நடந்து கொண்டிருந்த திருமணம்,  அதனால் யார் வாழ்வு, யார் மூலமாய், எப்படி எல்லாம் மாறப் போகிறது என்பதை யூகிக்க முடியாத ஒரு புதிராய் தான் விரிந்து கொண்டிருந்தது.

சம்யுக்தா கழுத்தில் ஈஸ்வர் திருமாங்கல்யத்தை அணிவிக்க முயன்ற பதினைந்து நிமிடங்களுக்குப் பிறகு, கோயில்பின் புறத்தில் சிறு கூட்டமே ரெண்டாய் பிளந்து, வெளியே தெரியாதது போல் நின்றிருந்தது.

சிறு கூட்டம் என்று தான் சொல்ல வேண்டும்.

இருபதிற்கும் மேற்பட்டவர்கள் அடங்கிய கூட்டம் தான் அது. உயர்ந்த குரல்கள், அதனால் எழுந்த கூச்சல், குழப்பம், தள்ளு முள்ளுகள் என்று அந்த இடமே குழாயடி சண்டைக்கு நிகராகி போனது.

அதன் பின் எழுந்தது மயான அமைதி.

கண்கள் மட்டும் போர்வாட்களாய் உரசி கொள்ள, ‘எப்பொழுது, என்ன நடக்கும்!…’ என்று இதய துடிப்புகளை எகிற வைத்துக் கொண்டிருந்த அந்தச் சூழ்நிலையில், அங்கிருந்தவர்களின் வாய் மௌனத்தை ஆடையாக அணிந்து கொண்டிருந்தது.

வாய் திறந்து பேசும் நிலையில் அங்கு யாருமே இல்லை. தங்கள் கண் முன் விரிந்து கொண்டிருக்கும் காட்சிக்கு, எப்படி ரியாக்ட் ஆவது என்று கூடத் தெரியாமல் நின்றிருந்தார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.

கோயிலுக்குப் பின்புறம் கட்டிட வேலை பாதியில் நிறுத்தப்பட்டு இருந்த பகுதி அது. ஆள் நடமாட்டம் இல்லாத இடம். கட்டிட வேலைக்குத் தேவையான பொருட்கள் வந்து குவிந்து இருக்க, போதுமான மறைவை அது கொடுக்க, அங்கே நடந்து கொண்டிருப்பது வெளியே தெரியாமல் போனது.

Residential Real Estate Construction Business Investment Opportunity in Bangalore, India seeking INR 1 crore

பல்தேவ் வீடியோ வழியாகக், கண் முன்னே தன் மகள் திருமண கோலத்தில் ஒருவனிடம் திருமாங்கல்யம் பெற போவதை கண்டு திகைத்து, “சம்யுக்தா!….” என்று கர்ஜித்து இருக்க, ஜெவியரும் அவன் ஆட்களும் இருக்கும் இடத்தையும் மறந்து, துப்பாக்கி எடுத்து நீட்டி விட, அதற்கும் பல்தேவிடம் வாங்கி கட்டி கொண்டார்கள்.

“அறிவு கொஞ்சமாவது இருக்கா இல்லையா!… என் பெண்ணைப் பாதுக்காக்கும் வேலை, எந்த லட்சணத்தில் செய்து இருக்கீங்க என்பது, அவ திருமண கோலத்தில் மணமேடையில் அமர்ந்து இருப்பதே சாட்சியாய் இருக்கிறது.

இந்த லட்சணத்தில் என் மகளைக் கண்காணிக்க தான் உங்களுக்கு மாச மாசம், லட்சக்கணக்கில் கொட்டி கொடுத்துக் கொண்டு இருக்கிறேனா?

உங்களுக்கென்று கொடுத்த வேலை ஒன்றே ஒன்று. என் மகளுக்குப் பாதுகாப்பாய் இருங்க என்பது… எந்த அளவிற்கு அவளை லட்சணமாய் கண்காணித்து இருக்கிறீர்கள் என்பது இதோ, உங்கள் கட்டுக் காவலையும்  மீறி, ஒருவன் அவளைக் காதலித்து,  இருவரும் திருமணம்வரை சென்று இருபத்திலேயே தெரிகிறதே!

இது தான் நீங்க அவளைப் பாதுகாத்த லட்சணம் என்று பார்த்தால், துப்பாக்கியை எடுக்கக் கூட நேரம், காலம், இடமெல்லாம் பார்க்க மாட்டிர்களா?… கோயிலுக்கு வரும் யாராவது இதைப் போலீசுக்கு சொல்லி அவர்கள் வந்து விசாரித்து, விஷயம் சந்தி சிரிக்கணுமா?… அறிவு கெட்டவங்களா!….” என்று பல்தேவ் கர்ஜிக்க, அங்கிருந்த அனைவரையும் கோயிலுக்குப் பின்புறம், கட்டிட வேலைகள் நடந்து கொண்டு இருக்கும் ஒதுக்குபுறமான இடத்திற்கு, தள்ளிக் கொண்டு வந்தார்கள் ஜெவியரும் அவன் ஆட்களும்.

ஜெவியர் ஆட்கள் நீட்டிய துப்பாக்கிகள் அங்கிருந்த மற்றவரின் வாய்களைத் தானாக மூடச் செய்யும் பூட்டாகி போனது.

வாய் மூலமாக என்றால் பேச்சு வார்த்தை நடத்தலாம்.

பேச்சு வார்த்தையில் துப்பாக்கிகள் இடம் பெறும்போது, தங்களுக்குள் இருக்கும் தோட்டாக்களை, ‘முழங்குவதா வேண்டாமா?…’ என்ற நிலையில் இருக்கும்போது, அங்கே வாய் வார்த்தைக்கு வேலை இல்லாமல் தானே போகும்!.

ஒரு பக்கம் ஜெவியரும் அவன் ஆட்களும் துப்பாக்கியுடன் நின்றிருந்தனர்.

இன்னொரு பக்கம் அத்தனை துப்பாக்கிகளின் முன், இரு கையையும் அகல விரித்து,  தன் பின் நின்றவர்களைக் காப்பாற்றுவது போல், மணப்பெண் கோலத்தில் சம்யுக்தா நின்றிருந்தாள்.

மணமகள்கள் முன் ஆரத்தி தட்டு தான் நீட்டப்படும். ஆனால், இங்கே துப்பாக்கிகள் நீட்டப்பட்டு இருக்க, கழுத்தில் மண மாலையுடன், ஒரு மறைவான இடத்தில், நீட்டப்பட்ட துப்பாக்கிகளை எதிர்த்து நிற்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தாள் சம்யுக்தா.

சம்யுக்தாவிற்கு பின், அதே மாதிரிக் கைகளை அகல விரித்து ஹேமா நின்றிருக்க, அவளுக்குப் பின் மணி, கவிதா, கேசவன், நின்றிருந்தார்கள்.

அவர்களுக்குப் பின் செல்வம், எமி தங்களுக்கு பின்னால் இருந்த ஈஸ்வரை மறைத்தது போல் நின்றிருக்க, ரிஷி சம்யுக்தாவிடம் போகத் துடித்துக் கொண்டிருந்த ஈஸ்வரை இழுத்து பிடித்து நிறுத்தப் போராடி கொண்டு இருந்தான்.

தன் தந்தையின் ஒற்றை சொல்லுக்கு, அவரிடம் பாதுக்காப்பு பணியில் இருப்பவர்கள் துப்பாக்கியைத் தூக்குவர்கள் என்றோ, அதுவும் தன்னை கூடக் குறி வைப்பார்கள் என்பதோ சம்யுக்தாவே எதிர் பார்த்திராத ஒன்று.

தன் கண் முன்னே, அத்தனை துப்பாக்கி நீட்டப்படும் என்று கனவிலும் நினைத்துப் பார்த்திராதவளுக்கு  துடிக்கும் இதயமே, வெளியே வந்து விழுந்து விடும் போல் தான் துடித்துக் கொண்டிருந்தது.

‘தன் தந்தையின் கோபத்தை, ஈகோவை, பண வெறியை குறைத்து எடை போட்டு விட்டோமோ!… கடைசியில் செல்வம் பயந்தது போலவே நடந்து கொண்டிருக்கிறதே!… அப்பாவுக்குப் பேசிப் புரிய வைத்து, ஈஸ்வர் பற்றி விளக்கிச் சொல்லி, அதன் பிறகு திருமணத்தை நடத்த எதையும் செய்து இருக்க வேண்டுமோ!…’ என்று காலம் கடந்து, நீட்டப் பட்ட துப்பாக்கிகளின் முன் யோசனை வந்தது சம்யுக்தாவிற்கு.

அந்தச் சூழ்நிலை எவரும் யூகித்திராத ஒன்று. 

அதுவரை தனக்கு எல்லாமுமாக இருந்த வீட்டையும், வீட்டினரையும் எதிர்த்து, சொல்லாமல் கொள்ளாமல் பெண் திருமணம் செய்தால், ஒன்று ஒதுக்கி வைப்பார்கள் மாலினி, பல்தேவ் கதைபோல்.

இல்லையென்றால் போலீசுக்கு போவார்கள் தங்கள் பெண்ணை மீட்டு கொடுக்க வேண்டி.

காதல் என்று வந்து விட்டால் அங்கு நியாயம், தர்மம், எது சரி, எது தவறு என்பதெல்லாம் பின்னால் சென்று விடும் கதைகளும் இங்கே அதிகம். மாலினி போல் காதலன் உத்தமன், உலகில் அவனைத் தவிர நல்லவன், வல்லவன் வேறு யாரும் இல்லை என்று வாயிற்படியை உணர்ச்சிகளின் கொந்தளிப்பில் தாண்டும் பெண்களின் நிலைமை கவலைக்கிடமானது தான்.

தேவைகள் தீர்ந்த பிறகு சிகப்பு விளக்கு பகுதிகளில் விற்க படும் காதல்கள் இங்கே ஏராளம். பணம், நகை எல்லாம் சுருட்டி கொண்டு ஓடுவதும் உண்டு.

அதீதமாய் சில குடும்பங்களில் கத்தி, வீச்சரிவாள் பேசி, தலைகள் உருண்டிருக்கும். ஒரு பெண்ணின் கழுத்தில் ஏறும் தாலியானது, பல பெண்களின் கழுத்திலிருந்து திருமாங்கல்யம் இறங்கவும், சிறைசாலைகள் நிரம்பவும் கூடக் காரணமாய் அமைந்த வழக்குகள் இங்கே உண்டு.

சம்யுக்தா விஷயத்தில் இங்கே அட்வான்ஸடாக, அடியாட்கள் துப்பாக்கிகளை நீட்டிக் கொண்டிருக்க, டென்ட் கொட்டாய் படம் பார்ப்பவர்களிடம், ஹாலிவுட் அர்னால்டு படத்தை ஓட்டிக் காண்பித்து கொண்டிருந்தார் பல்தேவ்.

துப்பாக்கி முன், தைரியமாய் ஒவ்வொருவரும் மற்றவரைக் காப்பது போல், ஏதோ ஒரு அசட்டு துணிச்சலோடு நின்று விட்டார்கள் என்றாலும், உள்ளுக்குள் மட்டுமல்ல நிஜத்திலும் கால்கள் பயத்தில் வெடவெடத்து கொண்டு தான் இருந்தது சம்யுக்தா உட்பட அனைவருக்கும்.

பல்தேவின் அரக்க தோற்றத்துடன், சிவந்து விட்ட விழிகள் ஒன்றே போதுமானதாய் இருந்தது மரண பயத்தை அவர்களுக்குக் காட்ட. எம தூதர்கள் மாதிரி துப்பாக்கியுடன் நின்ற பல்தேவின் ஆட்களும் மிடறு விழுங்க வைத்திருந்தார்கள்.

இத்தனை ஆட்கள் என் பாதுகாப்பிற்க்கு மட்டுமா!… இந்திய நாட்டின் பிரதமர் அருகே கூட இத்தனை பேர் இருக்க மாட்டார்கள் போலிருக்கே!… இத்தனை பேர் என்னைத் தினமும் கண்காணித்து வருகிறார்கள் என்றால், அதைக் கூடக் கவனிக்காமல் விட்டு இருக்கிறோம் என்றால் என் உள்ளுணர்வு என்ன ஆனது.

இத்தனை பேரை என் பாதுகாப்பிற்க்கு நியமிக்க அப்படி என்ன ஆபத்து எனக்கு இருக்கிறது?… இவர்களும் பார்க்கத் தனியார் பாதுக்காப்பு நிறுவன ஆட்கள்போல் இல்லையே!. இப்படி பட்ட ஆட்களையா தன் தந்தை பாதுகாப்பிற்க்கு என்று உடன் வைத்திருக்கிறார்?…

இவங்க எல்லாம் பார்ப்பதற்கே, ஏதோ தெலுங்கு பாக்ஷன் படத்தில் பின்னால், ‘ஹேய்! … ஹேய்!…’ என்று கத்தி கொண்டு வரும் அடியாட்கள்போல் அல்லவா இருக்கிறார்கள்.

இவங்க போட்டு இருக்கும் உடைக்கும், இவர்கள் உடல் மொழிக்கும், நடக்கும் விதத்திற்கும் துளி கூடச் சம்பந்தமே இல்லையே!…

இவங்க கையில் இருக்கும் துப்பாக்கி மாடல் எல்லாம் இந்திய பாதுகாப்பு துறைக்கே அறிமுகமாகி இருக்குமா என்பது சந்தேகம். இதற்கெல்லாம் முதலில் காவல்துறை இவங்களுக்கு எப்படி லைசென்ஸ் கொடுத்தது? எந்தப் பாதுக்காப்பு நிறுவனம் ஒற்றை வார்த்தைக்கு இப்படி துப்பாக்கி எல்லாம் தூக்குவார்கள்?…

துளி கூடத் தயக்கம் என்பதே சிறிதும் இல்லாமல், இவர்கள் துப்பாக்கி பிடிக்கும் விதமே, இதை அவர்கள் முன்னர் பயன்படுத்தி இருக்கிறார்கள் என்று சொல்லாமல் சொல்கிறதே!…. ஒருவேளை குழப்பத்தில் எனக்குத் தான் சிறு விஷயம் கூடப் பூதாகாரமாய் தெரிகிறதா? ஏதோ பழமொழி சொல்வார்களே, ‘அரண்டவன் கண்ணுக்கு இருண்டது எல்லாம் பேய்…’ என்று அதுபோல் தான் இதுவுமா?… துப்பாக்கியை அருகே பார்த்ததும் இருந்த கொஞ்ச, நஞ்ச மூளையும் குழம்பிடுச்சா?’ என்ற எண்ணம் சம்யுக்தாவின் மனதில் ஓட, அவள் தந்தையே அவளுக்குப் புதிதாய் தோன்ற ஆரம்பித்து இருந்தார்.

ஏற்கனவே தந்தை என்பவரிடம் ஏதோ வித்தியாசமாய் இருப்பது போல் தோன்றி கொண்டிருந்த எண்ணம் சம்யுக்தாவிற்கு நொடிக்கு நொடி வலுப்பெற்றுக் கொண்டிருந்தது.

‘வாழ்க்கையில் தாங்கள் எடுக்கும் சிறு முடிவானது கூட எங்கே தங்களை கொண்டு போய் நிறுத்தும் என்பது தெரியாது என்று சொல்வார்கள். இன்று தான் எடுத்த, இந்தத் திருமணம் என்ற முடிவு, தன்னை எங்கே கொண்டு போய் நிறுத்தப் போகிறது?… ‘ என்ற பயம் சம்யுக்தாவிற்குள் மெல்ல எழுந்து கொண்டிருந்தது.

ஏதோ தெரிந்து இருக்க வேண்டிய விஷயம். தெரியாமல் ஆட்டம் காட்டுவதாய் தோன்றும் எண்ணத்தைச் சம்யுக்தாவால் விளக்க முடியவில்லை.

‘point of no return/ இனி மீளவே, திரும்பவே முடியாத வாழ்க்கை பாதை’ என்று சொல்வார்கள் அந்த இடத்தைத் தான் அடைந்து விட்டதாகவும், இனி தன் வாழ்வு முற்றிலும் மாற்றி அமைக்கப் படப் போகிறது என்ற அவஸ்தையான உணர்வு ஒன்று சம்யுக்தாவின் நெஞ்சை கசக்கி பிழிய, கண்களில் தோன்றிய கலக்கத்துடன் வீடியோ அழைப்பில் இருந்த தன் தந்தையை கண்டு மிடறு விழுங்கியவாறு நின்றிருந்தாள் சம்யுக்தா.

ஜெவியர் ஒரு கையில் துப்பாக்கி, இன்னொரு கையில் மொபைல் வீடியோ அழைப்பில் இருந்த பல்தேவ் என்று நின்றிருந்தான்.

விக்ரம் வெகுவேகமாய் திரையை விட்டு விலகி, விமானத்தில் இருந்த ஒரு அறைக்குள் புகுந்த கொண்டான்.
“விக்கி!… விக்கி!… நில்லு!… நில்லுடா… என்ன ஆச்சுடா?… எதுக்குடா இப்படி இருக்கே?… என்ன ஆச்சு?…” என்ற சம்யுக்தாவின் எந்தத் தவிப்பான பேச்சும் விக்ரமை நிறுத்தவில்லை.

மனதில் இருந்த பயம், கலக்கம், குழப்பத்தில், உலகத்தில் இனி எதுவுமே இல்லை… எல்லாவற்றையும் தோற்று விட்டவன் போல் தள்ளாட்டத்துடன் நடந்து சென்ற விக்ரமின் நடை சம்யுக்தாவின் கண்களுக்குத் தெரியாமல் போனது.

‘அவனிடம் சொல்லாமல் கூட மணமேடை ஏறி விட்டேன் என்ற கோபம் போலிருக்கு… பிறகு பேசிச் சமாதானம் செய்து கொள்ளலாம்.’ என்று எண்ணி கொண்ட சம்யுக்தா அறியாத ஒன்று, தன் திருமண ஏற்பட்டால் நொறுங்கி போயிருக்கிறது தன் நண்பனின் இதயம் என்பதை.

எப்பொழுதும் தனக்கும், தன் தந்தைக்கும் பலமாய் இருக்கும் நண்பன் முதல் முறையாக விலகிச் சென்றிருக்க, தனியாகச் சம்யுக்தா தந்தையை எதிர்கொள்ளும் நிலையில் நின்றாள்.

பல்தேவ் கைகளைப் பின்னால் கட்டி, கூண்டில் அடைபட்ட புலியொன்று உலவுவது போல் உலவி கொண்டிருந்தார் விமானத்தில்.

The Last Anti-Hero: Sanjay Dutt in Life and Art - Open The Magazine

நடையை நிறுத்தியவர், அங்கிருந்த லிக்கர் கேபினெட்டில் இருந்து முழு பாட்டில் மதுவை அப்படியே உள்ளே சரித்தார். நடு நடுவே தலையை வேறு குலுக்கி கொண்டார்.

தந்தையின் நிதானம் இல்லாத அந்த நிலை, மகளாய் சம்யுக்தாவின் மனதை கசக்கி பிழிய ஆரம்பித்தது.

“அப்பா!….”

“அப்பா !… ப்ளீஸ்ப்பா… உங்க கிட்டே சொல்லாமல் திருமணம் என்று வந்தது தப்பு தான்… உங்களுக்குப் பணத்தின் மீது இருக்கும் வெறி எல்லோருக்கும் தெரிந்த ஒன்று… ஸ்டேட்டஸ், தரம், தராதரம் என்று வீட்டில் ஒரு நாய் வாங்கவே அத்தனை பேசுவீங்க… இதற்கு ஒத்துக்க மாட்டிங்க என்று தான்…” என்று சம்யுக்தா மென்று முழுங்கப் பல்தேவின் சிவந்த விழிகள் சம்யுக்தாவை வெறித்துப் பார்த்தன.

“ஸ்டேட்டஸ், தரம், தராதரம்….” என்று முணுமுணுத்துப் பல்தேவ், மீண்டும் மதுவை நாடினார்.

ஸ்டேட்டஸ், பணம், தரம் தான் முக்கிய பிரச்சனை என்று நினைத்துக் கொண்டிருக்கும் சம்யுக்தாவிடம், அது அதி முக்கிய பிரச்சனை இல்லவே இல்லை என்று எப்படி பல்தேவால் சொல்ல முடியும்!.

சொல்ல ஆரம்பித்தால், அவர் ஆதி முதல் அந்தம் வரை எல்லாவற்றையும் அல்லவா சொல்ல வேண்டி வரும்.

‘பெற்ற பெண்ணிடம் சொல்லக் கூடியவற்றையா நான் செய்து வைத்திருக்கிறேன்!… உன் அப்பா வெளிநாட்டில் பிசினஸ் செய்து கொண்டிருப்பதாய் நினைத்துக் கொண்டிருக்கும் உன்னிடம், நான் செய்வது பிசினஸ் தான், ஆனால் எல்லாமே சட்டத்திற்கு புறம்பான பிசினஸ் என்று எப்படி சொல்வேன்?

இந்த நிழல் உலகம் தான், உன்னைப் போன்ற அப்பாவியான மாலினியை என்னிடமிருந்து பிரித்து விட்டது என்று எப்படி சொல்வேன்?

உன்னைக் காக்க, எனக்குக் குடும்பமே இல்லை என்று போலி பிம்பம் உருவாக்கி இருப்பதை எப்படி சொல்ல?… நான் வாழுவது கொடிய மிருங்கங்கள் இருக்கும் காடு. வேட்டையாடு, இல்லை வேட்டையாடப்படு என்பதே இங்கே வேதம்.

இதன் நிழல், உன்னைப் போன்ற மான் குட்டியின் மேல் படக் கூடாது என்று ஒவ்வொரு கணமும் ஆயிரம் திட்டங்கள் தீட்டிக் கொண்டிருக்கிறோம். இந்த உலகத்தின் கறுப்பு பக்கத்தின் வக்கிரங்கள், உன்னைத் தீண்டக் கூடாது என்றால், இதனால் எந்த வித ஆபத்திற்கும் நீ ஆளாகக் கூடாது என்றால், இந்த உலகத்தைப் பற்றிய நெளிவு, சுளிவு தெரிந்த, என்னைப் போல் எந்த எல்லைக்கும் சென்றும், உன்னைக் காக்க தயங்காத, விக்ரம் போன்ற ஒருவனால் மட்டுமே முடியும்.

கொடிய மிருங்கங்களிடமிருந்து உன்னைக் காக்க புலி போன்ற ஒருவன் தான் தேவை. இன்னொரு மான் குட்டியால் உன்னைக் காக்க என்ன செய்ய முடியும்? உன்னைப் பின் தொடர்ந்து வருபவனின் உயிரும் அல்லவா பணயமாகும்.

கொஞ்சமாவது கோடிட்டு காட்டியிருக்க வேண்டுமோ சம்யுக்தா உனக்கு?… உன்னைப் பெற்றவனின் வாழ்க்கை முறை எது என்று கொஞ்சமாவது உன்னிடம் சொல்லியிருக்க வேண்டுமோ!… அப்படி சொல்லியிருந்தால், காதல் என்ற பெயரில் நீ காதலிப்பவனின் உயிரையும் ஆபத்திற்குள்ளாகி
இருக்க  மாட்டாயோ!… சொல்லியிருந்தால் ஒருவேளை இவர்களை உன் அருகில் கூட வர விட்டு இருக்க மாட்டாயோ!…

சாதாரண வாழ்க்கை நீ வாழ வேண்டும் என்று நான் பாடுபட்டது, இப்படியொரு நிலையில் இத்தனை பேரைக் கொண்டு வந்து நிறுத்தும் என்று நான் நினைக்கவேயில்லையே!.

வெளியாட்களை அவ்வளவு சுலபமாய் இது போன்ற குழுக்களில் ஏற்க மாட்டார்கள். இவன் வாயை மூடிட்டு வேற இருக்கணும். நீ தேடி பிடித்துக் காதலில் விழுந்தவன் வேற, ரூல்ஸை கட்டிட்டு அழறவன். நீதி, நேர்மை, நியாயம் என்று உட்கார வைத்துக் கிளாஸ் எடுப்பவன். உலகத்தையே திருத்த வந்தவன் மாதிரி, சட்டத்தைப் பிடிச்சுட்டு தொங்குபவன். அவனுக்கு என் தொழில்பற்றித் தெரிந்தால் அமைதியாய் இருப்பானா?…

என்னை மட்டுமே குறி வைத்திருக்கும் பீரங்கி என்றாலே, அதை ஒன்றும் இல்லாமல் செய்பவன் நான். இதில் நீ தேர்ந்தெடுத்து இருக்கும் இவன், ஒட்டுமொத்த கூட்டத்திற்கே, பாசகயிறாய் அல்லவா இருப்பான்!.

ஏற்கனவே ஏதோ சந்தேகத்தில், என்னைப் பற்றி அந்தச் சைக்கோ விசாரிப்பதாய் தகவல் வந்திருக்கு. இதில் நீ, நீ காதலிக்கும் இவனைப் பத்தி தெரிஞ்சது, இவன் கிட்டே படிச்ச பசங்களை கூட விடாமல் துரத்தித் துரத்திக் கொன்று குவிப்பானே அந்தச் சத்ரு. தனக்கு ஒன்று என்றால் உலகத்தையே அழிக்கக் கூடத் தயங்காதவனாயிற்றே!.

இதில் உன்னைக் காப்பதே, பெரும் போராட்டமாய் இருக்க போகிறது. இதில் இவனுங்களுக்கு வேற பேபி சிட்டிங் செய்ய வைத்து விட்டாயே சம்யுக்தா….’ என்று தனக்குள் புலம்பிக் கொண்டு, ஏதேதோ எண்ணி கொண்டிருந்தவர், ஏதோ முடிவுக்கு வந்தவராய்,

“ஜெவியர்!… சம்யுக்தாவை உடனே கூட்டிட்டு கோவாவிற்கு வந்து சேரு.” என்றவர் அழைப்பைத் துண்டிக்கப் போக

“நான் இல்லாமல் சம்யுக்தா இனி எங்கேயும் போக மாட்டா…” என்ற குரல் பல்தேவை தடுத்து நிறுத்தியது.

ரிஷி கையை உதறி விட்டு, சம்யுக்தா அருகில் வந்து நின்றான் ஈஸ்வர்.

Chanakyathanthram l Super action scene - Unni Mukundan l Mazhavil Manorama - YouTube

சம்யுக்தா தோளின் மேல் கை வைத்து அவளைத் தன்னை நோக்கி இழுத்து அணைத்து , “நானும் சம்யுக்தாவும் காதலிக்கிறோம். நீங்க ஏற்று கொண்டாலும், ஏற்று கொள்ள விட்டாலும் சம்யுக்தா தான் என் மனைவி. அவளை எதற்காகவும், யாருக்காகவும் விட்டுக் கொடுக்க என்னால் முடியாது.

என்னை விட்டுப் பிரிய போவதாய் உங்கள் வற்புறுத்தலின் பேரில் சம்யுக்தா முடிவெடுத்தாலும், என்னைப் பிரிய நான் விடமாட்டேன். நினைத்த நேரத்திற்கு நினைத்த பெண்ணை மாற்றிக் கொண்டிருக்கும் கேடுகெட்ட ஜென்மம் நான் இல்லை.

எப்படி ஒருமுறை பிறந்து விட்டால் மீண்டும் தாயின் கருவறைக்குள் போக முடியாதோ அதைப் போன்றது என் காதல். இது ஒரு வழி பயணம். இந்தப் பயணத்தை எனக்கு அறிமுகம் செய்து, என்னை இது நாள்வரை வழி நடத்தி வந்தது உங்கள் மகள்.

அவளே முடிவெடுத்தாலும் சரி, யார் அவளை என்ன முடிவு எடுக்க வைத்தாலும் சரி சம்யுக்தாவை என்றும் நான் பிரிய மாட்டேன். ஸோ, நீங்க என்ன பேசுவது என்றாலும், என் முன்னால் என் சம்யுக்தா கூடப் பேசுங்க… இல்லையென்றால் நீங்கப் பேசவே வேண்டாம். சம்யுக்தா எங்கே போனாலும் நானும் கூடவே தான் போவேன்.

தெரியாம தான் கேக்கிறேன்… போன் இருக்கு, வீடியோ அழைப்பு இருக்கு. அதில் எல்லாம் பேச முடியாத என்னத்தை, பெண்ணைத் தனியாய், ஸ்டேட் விட்டு விட்டு ஸ்டேட் கூப்பிட்டு பேசப் போறீங்க அங்கிள்?” என்ற ஈஸ்வரின் குரலில் இருந்தது நக்கல் தான்.

பல்தேவிடம் அதுபோல் இதுவரை யாரும் பேசியது இல்லை போலிருக்கு. ஒரு கணம் அவர் முகத்தில் திகைப்பு வந்தாலும் அதை வெகு அழகாய் மறைத்தார்.

“ஹ்ம்ம்!…  என் பெண்ணுக்கு ஊர், உலகம் அறிய திருமணம் எப்படி செய்யறது!… ரிசெப்சனுக்கு எந்த நாட்டு பிரதமரைக் கூப்பிடுறது என்பதை பத்தி டிஸ்கஸ் செய்யத் தான் தம்பி.” என்றவரின் குரலில் என்ன இருந்தது.

‘நீயெல்லாம் என் தகுதிக்கு ஏற்றவனே இல்லை…’ என்ற மறைமுக ஏளனமா?..

‘அதனால் அவளுக்கு இன்னொருத்தனுடன் திருமணம் நடத்த போகிறேன்.’ என்ற திட்டமா?

“அது எப்படி அங்கிள் உங்க பெண்ணின் கழுத்தில் தாலி கட்ட போகும் மணமகன், அவளின் கணவன்  நான் இல்லாமல், எப்படி நீங்கத் திருமணம்…. அதுவும் ஊர் அறிய, உலகம் அறிய செய்ய முடியும்?. தாலி கட்ட நான் இருந்து தானே ஆகணும்!.” என்றான் ஈஸ்வர் விடாமல்.

“என் பெண்ணின் கழுத்தில் தாலி கட்ட மணமகன் வேண்டும் தான்…” என்று உரக்க சொன்னவர்,  ‘அது எப்படி நீயாக இருக்க போகிறாய் என்பதை பார்க்கத் தானே போகிறேன்.’ என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டார் வன்மத்துடன்.

“ஆனால் பாரு ஈஸ்வர்… இப்படி திருமணத்தைப் பற்றிப் பேச உங்க வீட்டிலிருந்து பெரியவங்க வந்து, முறைப்படி எண்னிடம் பேச வேண்டும் இல்லையா!… அதற்கு முதலில் ஏற்பாடு செய்… ஏற்பாடு செய்துட்டு வந்து என் முன்னே நின்னு பேசு…” என்றார் பல்தேவ்.

“அது தானே முடியாது அங்கிள்… என் வீட்டில் பெரியவங்க என்று யாருமே கிடையாதே!… இல்லாதவங்களை எங்கேயிருந்து அங்கிள் நான் கொண்டு வர முடியும்?” என்றான் ஈஸ்வர்.

“ஒஹ்ஹ அதானா!…” என்றார் பல்தேவ் நக்கலுடன்.

“ஓஹ் எதானா அங்கிள்!… கொஞ்சம் தெளிவாய் சொல்லுங்க…” என்றான் ஈஸ்வர்.

“பெரியவங்க இருந்து இதையெல்லாம் சொல்லிக் கொடுத்து வளர்த்து இருக்க வேண்டும் ஈஸ்வர். வீட்டில் பெரியவங்க என்று ஒருத்தங்க இருந்தால் தான், சாஸ்திரம், சம்ப்ரதாயம், வழி வழியாய் குடும்பத்தில் நடக்கும் நல்லது, கெட்டது எல்லாம் சொல்லிப் புரிய வைத்து இருப்பாங்க.

ஒரு குடும்பத்தின் பாரம்பரியம், அதன் கெளரவம் இதெல்லாம் புரிந்து இருக்கும். அது புரிந்து இருந்தால், தன் தகுதிக்கு மீறி ஆசை படுவது எத்தனை பெரிய முட்டாள்தனம் என்பதும் தெரிந்து இருக்கும்.

கோடீஸ்வரன் வீட்டு பெண் என்றதும் நாலு ஆசை வார்த்தை பேசி, மயக்கி, காதல் என்று அதற்குப் பெயர் கொடுத்து, மொத்தமாய் அந்த அப்பன்காரன் சேர்த்து வைத்து இருக்கும் சொத்தையெல்லாம் ஆட்டையை போடலாம் என்று இது மாதிரி அலைய தோன்றி இருக்காது தான் ஈஸ்வர்.

வானத்தில் இருக்கும் நிலவின் மீது ஆசை படலம். ஆனால், அந்த நிலவு தனக்கே சொந்தமாய் இருக்க வேண்டும் என்று எண்ணுவது பேராசை அல்லவா!… பேராசை பெருநஷ்டம் ஈஸ்வர்.

யாரும் இல்லாத அனாதைக்கு இப்படி இழுத்து கொண்டு வந்து யாருக்கும் தெரியாமல் திருட்டு தாலி தான் கட்ட தோன்றும்.” என்றார் பல்தேவ்.

அதைக் கேட்ட சம்யுக்தாவிற்கே ஒரு மாதிரி ஆகி போனது. பேசும் முறை என்று ஒன்று இருக்கிறது இல்லையா!… அவள் ஏற்பாடு செய்த திருமணத்தின் சிலுவையை சுமப்பது ஈஸ்வர் என்பதை அவளால் தாங்க முடியவில்லை. அதே எண்ணம் தான் ஹேமா, செல்வம், ரிஷி, எமி எல்லோருக்குமே.

ஈஸ்வரை மட்டம் தட்ட என்றே பல்தேவ் வார்த்தைகளை விட்டுக் கொண்டு இருந்தார்.

சம்யுக்தா ஏதோ சொல்ல முயல்வதற்குள், அவள் கையைப் பிடித்து அழுத்திய ஈஸ்வர், “உண்மை தான் அங்கிள் நான் அனாதை தான். எனக்கென்று யாரும் இல்லாமல் தான் போனார்கள்… என் குடும்பத்தினர் இன்று உயிரோடு இல்லை அங்கிள். அதனால் நான் அனாதை.  இதில் என் குற்றம் என்று எண்ண இருக்கிறது? மரணத்தை வெல்ல கூடியவன் யாரும் இல்லையே!… அவர்கள் மரணத்தைத் தடுக்கும் ஆற்றலும் எனக்கு இல்லையே!

ஆனால், உங்களுக்கு அம்மா, அப்பா, அக்கா என்று ஒரு குடும்பமே இருந்தது தானே!… அவர்கள் இருந்தும் வீட்டை விட்டு வெளியேறி வந்த மாலினி அத்தையை,  அவர்கள் வீட்டில் திரும்ப விடாமல் இதே கோயிலில், இதே கேசவன் அங்கிள் அப்பாவை வைத்து ஏன் அங்கிள் திருமணம் செய்து கொண்டீர்கள்?…

நீங்கள் எல்லோரும் இருந்தும் ஏன் இத்தனை வருடமாய் அனாதையாய் இருக்கிறீர்கள்?… உங்கள் வீட்டில் சாஸ்திரம், சம்ப்ரதாயம், வழி வழியாய் குடும்பத்தில் நடக்கும் நல்லது, கெட்டது எல்லாம் சொல்லிக் கொடுத்து உங்களை வளர்க்கவே இல்லையா அங்கிள்?…

எனக்காவது சொல்லிக் கொடுக்க யாரும் இல்லை தான். உங்களுக்குத் தான் எல்லோரும் இருந்தார்கள் தானே!… அப்புறம் எதற்கு நீங்களும் எங்களைப் போல் திருட்டு கல்யாணம் செய்தீர்கள்?

மாலினி என்ற வானத்து நிலவைக், கோவாவிலிருந்து ஒன்றுமே இல்லாமல் ஓடி வந்த, படிப்பு என்பதே இல்லாத, டீக்கடையில் வேலை செய்த பல்தேவ் கரம் பிடித்தது மட்டும் எந்த விதத்தில் சரியாகும் அங்கிள்?

இதற்கும் எனக்குச் சொந்த வீடு, படிப்பு, சமூகத்தில் உயர்ந்த ஆசான் என்ற தொழில் இருக்கிறது. உங்கள் அளவிற்கு நான் கோடீஸ்வரன் இல்லையென்றாலும், மனைவியின் குடும்பத்திலிருந்து சொத்தை வாங்கி அந்தப் பணத்தில் ஓசியில் உட்கார்ந்து சாப்பிடும் நிலை எனக்கு இல்லை அங்கிள்.

மனைவியின் வீட்டில் எவ்வளவு கொட்டி கொடுக்கிறார்கள் என்று நாக்கை தொங்க போட்டுக் கொண்டு நிற்கும் அளவுக்கு நான் ஆண்மை அற்றவன் இல்லையே!

உங்களை மாதிரி இருநூறு அறைகள் இருக்கும் வீட்டை, மாட மாளிகையை, வைர வைடூரியத்தை எல்லாம் என்னால் கொடுக்க முடியாது தான். ஆனால், நான் எதை வாங்கி கொடுத்தாலும் அது என் சொந்த உழைப்பில் வந்த பணத்தில் கொடுக்கக்கூடிய ஒன்றாய் இருக்கும் அங்கிள்.

உங்க பெண்ணைத் திருமணம் செய்து, அவள் கொண்டு வரும் பணத்தில், அவளுக்கே திருப்பிப் பெரிய மனது கொண்டு செய்வது போல் நடிக்க எல்லாம் வேண்டி வராது.

பல்தேவ் என்றால் எந்த ஆசையும் பேராசையாகாது… இதுவே ஈஸ்வர், அதே பல்தேவின் மகளைக் காதலித்து, கைப்பிடிக்க நினைத்தால் மட்டும் பேராசையாகி விடுமா என்ன அங்கிள்… இது எந்த ஊர் நியாயம்?

ஒரு நல்லதிற்கும், கெட்டதிற்கும், உறவு என்று சொல்லிக் கொண்டு ஒருத்தர் கூட உங்கள் வீட்டு படியை மிதிக்காத அளவிற்கு இருக்கும் நீங்கள், எத்தனை கோடி சேர்த்தாலும், தெரு கோடியில் இருக்கும் ஏழையைவிடப் மிகப் பெரிய பிச்சைக்காரன் அங்கிள்.

ஒரு மனிதனின் உண்மையான சொத்து, ஆஸ்தி, அந்தஸ்து எல்லாமே அவன் கூடத் தோள் கொடுத்து நிற்கும் உறவுகளும், தோழமைகளும் தான். என்னைச் சுற்றி அப்படி பலர் இருக்கிறார்கள். பலர் இருக்கும் படி நான் பார்த்துக் கொண்டேன். ஆனால் நீங்க… உங்களைப் பார்த்து எனக்கு ரொம்பவே பரிதாபமாய் தான் அங்கிள் இருக்கிறது. ” என்றான் ஈஸ்வர் அலட்டிக் கொள்ளாமல்.

பல்தேவ் முகத்தில் ஈயாடவில்லை. அவர் அடித்த பாலை அவருக்கே திருப்பி அனுப்பி சிக்சர் அடித்தது மட்டுமில்லாமல் பல்தேவை கிளீன் போல்ட் ஆகியிருந்தான் ஈஸ்வர்.

‘என்னைக் கைக்காட்டி குத்தி சொல்ல உனக்கு என்ன தகுதி இருக்கிறது கேட்காமல் கேட்டு விட்டான் ஈஸ்வர்.

பதில் தான் பல்தேவிடம் இல்லை. பல்தேவ் போல் பெண்களைக் காதல் என்ற பெயரில் ஏமாற்றும் யாரிடமும் பதில் இருக்காது தான்.

தன்னை போல் குரல் உயர்த்தவில்லை, குரலில் நக்கல் இல்லை தான் என்றாலும் பதில் சொல்லப் பல்தேவால் முடியவில்லை.

அங்கிருந்தவர்களுக்கு, ‘சபாஷ்’ போடத் தான் தோன்றியது. ஆனால், வாய் விட்டால் எங்கே, பல்தேவ் தங்களை போட்டு விடுவாரோ என்று எழுந்த சிரிப்பை அடக்கிக் கொண்டார்கள்.

“அப்பா!… ஈஸ்வர் என்னைக் கூட்டிட்டு வந்து இந்தத் திருமண ஏற்பாட்டைச் செய்யலை… இங்கே வந்து சேர்ந்த பின்னரும் கூட, நான் சொன்னபிறகு தான் அவருக்கே இந்த ஏற்பாடுபற்றித் தெரியும். அப்போ கூட உங்களைப் பத்தி தான் விசாரித்தார்.

‘உன் அப்பா வரலையா என்று?…’  நீங்க வராமல், நீங்க இல்லாமல் இந்தத் திருமணம் நடப்பதில் அவருக்கு இஷ்டமே இல்லை தான். நான் வற்புறுத்தியதால் தான் அவர் மணமேடைக்கே வந்தது… நீங்கக் குற்றம் சொல்ல வேண்டும் என்றால் என்னைத் தான் சொல்ல வேண்டும் அப்பா… ஈஸ்வரையில்லை.” என்றாள் சம்யுக்தா.

பல்தேவ் கோப விழிகள் சம்யுக்தாவை விட்டு, ஈஸ்வரை தான் பொசுக்கி கொண்டு இருந்தது.

‘தன் முன் நிற்கவே யோசிக்கும் மகள் இன்று தன்னை எதிர்த்துப் பேசுகிறாள் என்றால் அது இவன் கொடுத்த தைரியம் தான்…நேற்று வந்த இவனுக்காக என்னையே என் மகள் எதிர்கிறாள்.’ என்ற எண்ணம் ஓட, பல்தேவின் கோப விழிகள் ஈஸ்வர் மீது நிலைத்தது.

தாங்கள் சாதாரண குடும்பம் இல்லையென்பதோ, மற்ற குடும்பங்களைப் போல சாதாரண அப்பா, மகள் உறவு என்பது, இங்கே இல்லவே இல்லை என்பதோ பல்தேவிற்கு மறந்து போயிருக்க, நிழல் உலக தளபதிகளில் ஒருவரான பல்தேவ், அப்பொழுது சாதாரண தந்தைக்கு உண்டான பொஸசிவ்நெஸ் உடன் மகளின் காதலனை பார்வையால் எரித்துக் கொண்டிருந்தார்.

நிச்சயம், ‘கண்களால் மற்றவரை எரிக்கும் சக்தி தனக்கு இல்லையே!…’ என்று பீல் செய்துகொண்டிருந்தார் என்று தான் சொல்ல வேண்டும்.

‘clash of the titans’ மாதிரி பல்தேவ், ஈஸ்வரின் பார்வைகள் மோதிக் கொண்டன.

பல்தேவை வெறுப்பேற்ற என்றே, சம்யுக்தாவை இன்னும் இழுத்து அணைத்தான் ஈஸ்வர்.

தான் மோதுவது யாரிடம் என்று புரியாமல், அந்த அப்பாவி ஜீவன், தன் உரிமையைத் தன் காதலியின் மீது நிலைநாட்டிப் பல்தேவின் கோபத்தை அதிகரித்து கொண்டிருந்தான்.

எல்லா இடங்களிலேயும் காதலன் என்ற ஹீரோ ஜெயிப்பதில்லை என்று ஈஸ்வருக்கு யார் சொல்வது?

‘நாலு தட்டு தட்டினா, குட்டி கரணம் போட்டு விழுவான். என்னமோ சினிமா ஹீரோ மாதிரி சிலுப்பிட்டு வந்து நிக்குறான்… ‘ என்று மனதிற்குள் தாளித்த ஈஸ்வர், “ஜெவியர்!…” என்று அழைத்து, ஈஸ்வர் பக்கம் கண் காட்டி விட்டு அழைப்பைத் துண்டிக்கப் போக,

“ஈஸ்வர் எங்கே போனாலும், நாங்களும் கூடவே தான் இருப்போம்.” என்ற குரல் பல்தேவை தேக்கியது.

இந்தமுறை செல்வம், எமி, ரிஷி ஈஸ்வர் தோள்மேல் கை வைத்து நிற்க, ஜெவியருக்கே ஒரு மாதிரி ஆகி போனது.

‘இவர்கள் மனதில் என்ன நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள்!. ஆள் தெரியாமல் மோதிக் கொண்டு இருக்கிறார்களே!…

‘சாவையே கொடுத்து விடுங்கள்’ என்று கெஞ்ச வைப்பதில் பல்தேவ் அரக்கர். கிட்டத்தட்ட நாற்பது, ஐம்பது வருடமாய் நிழல் உலகில், சத்தமாய் இவர் பெயரைச் சொல்லக் கூட இன்னும் தயங்கி கொண்டு இருப்பவர்கள் அதிகம்.

யாரை எதிர்க்கிறோம் என்று கூடத் தெரியாமல் சின்னப் பிள்ளை தனமாய் செய்து கொண்டு இருக்கிறார்களே!… இவர்கள் தலைவிதி அவ்வளவு தான்.’ என்று ஜெவியர் அவர்களுக்காக வருந்தும் நிலை தான் அங்கே.

ஜெவியர் அவன் பின்னால் நின்ற ஆட்களிடம் வந்த பதற்றம், மற்றவர்களை ஒருவரையொருவர் பார்த்துக் கொள்ள வைத்தது.

வார்த்தை ஜாலம் யார் வேண்டும் என்றாலும் காட்டலாம். வாய் சொல்லில் வீரனாய் இருப்பது வெகுசுலபம். ஆனால் யாரை எதிர்த்துக் குரல் கொடுக்கிறமோ அவரின் பின்னணி தெரிந்து இருக்க வேண்டும். அவர் எந்த எல்லைக்குப் போகக் கூடியவர் என்பது தெரிந்து இருக்க வேண்டும். ஈஸ்வரும் அவன் நண்பர்களும் ஆழம் தெரியாமல் காலை விட்டுக் கொண்டு இருக்கிறார்கள் என்று தான் ஜெவியருக்கும், அவன் ஆட்களுக்கும் தோன்றியது. 

‘இத்தனை பொறுமையாய் பல்தேவ் இருப்பதே, சம்யுக்தா எதிரில் இருப்பதால் தான். இல்லையென்றால் இன்னேரம் பல்தேவின் கடைக்கண் பார்வைக்கே, ஜெவியரும் அவன் ஆட்களும் ஈஸ்வரையும், அவன் நண்பர்களையும் டார்ச்சர் செய்து கொன்றிருப்பார்களே!… இந்தப் பிள்ளைங்க வாழ வேண்டியதுங்க. அநியாயமாய் இதுங்க உயிர் போகப் போகுதே!…கடவுளே!…’ என்று மனதிற்குள் கதறி துடித்துக்கொண்டிருந்தார் கேசவன்.

அந்த அப்பாவி புரோகிதரால் செய்ய முடிந்தது அது ஒன்று தான்.

‘அப்படி என்ன சொல்லிட்டாங்க!… கூட வருகிறோம் என்று தானே சொன்னாங்க!… அதுக்கு எதுக்கு இப்படி மிரண்டு போய் ஒரு லுக் கொடுக்கறாங்க?…’ என்று சம்யுக்தாவும், ஹேமாவும் தலையைப் பிய்த்துக் கொள்ளாத குறை.

ஒரு கொலை என்றால் ஒகே… ஒரே சமயத்தில் நான்கு பேரைப் போட்டுத் தள்ளுவது, அதுவும் தங்கள் முதலாளியின் மகளின் காதலன், வருங்கால கணவன், அவனின் நண்பர்கள் என்று ஒட்டுமொத்தமாய் போட்டுத் தள்ளுவது என்பது அவர்களுக்கே ஒரு மாதிரி தான் இருந்தது என்று சொல்ல வேண்டுமோ!.

அவர்கள் பார்த்து வளர்ந்த பெண் சம்யுக்தா. நேரடி தொடர்பு இல்லையென்றாலும் தூரத்திலிருந்து இவர்கள் பார்க்க வளர்ந்த பெண். தங்கையாக மனதில் வரித்து, சொந்த தங்கை போலவே இவர்கள் பாதுகாத்து கொண்டிருக்கும் பெண்.

சம்யுக்தாவின் குணம், பழகும் முறை, டவுன் டு எர்த்  பெர்சனாலிடி அந்தக் கல் உள்ளத்திலேயும், பாசத்தை வரவழைத்து இருந்தது என்னவோ உண்மை.

அத்தனை வருடம் ஒரு பெண்ணுடன் காலை முதல் மாலை இன்னொரு நிழலாக உடன் இருக்கும்போது, தாங்களே அறியாமல், சம்யுக்தாவை தங்கள் வீட்டில் ஒருத்தியாக மனதளவில் ஏற்று கொண்டிருந்தார்கள் அந்த அரக்கர்கள்.

சம்யுக்தா தன் குணத்தால் இத்தனை சகோதரர்களைப் பெற்று இருக்கிறோம் என்பது அவளே அறியாத ஒன்று.

அவளின் வாழ்க்கையில், ‘எல்லாமுமாக இருப்பவன்’ என்று மனதில் வரித்து விட்ட ஒருவனை கொல்ல போவது என்பது அவர்களுக்கே மன வேதனையாகத் தான் இருந்தது.

“ஹ்ம்ம்!…” என்ற உறுமல் பல்தேவிடமிருந்து வெளிப்பட, ஜெவியருக்கே வியர்த்துக் கொட்டியது.

“ஜெவியர்!…” என்றவரின் கட்டளையை ஏற்று, ஸ்பீக்கர் அழைப்பைத் துண்டித்து விட்டு, ப்ளூ டூத் ஹெட் செட்டில் ஏற்றவன், அந்தப் பக்கம் பல்தேவ் சொன்ன ஒற்றை வார்த்தையில், கண்களில் திடுக்கிடலுடன் எதிரில் நின்றவர்களைப் பார்த்தான்.

‘தீர்ந்தானுங்க!….’ என்ற எண்ணம் எழுவதை ஜெவியரால் தடுக்க முடியவில்லை.

ஜெவியர் கண்கள் வேதனையோடு திருமண கோலத்தில் நின்ற சம்யுக்தாவின் மேல் வெகுநேரம் நீடித்தது.

“லாரி…” என்ற ஒற்றை வார்த்தை சொன்ன பல்தேவ் அழைப்பைத் துண்டித்து விட, பெருமூச்சு ஒன்று ஜெவியரே அறியாமல் வெளிவந்தது.

சம்யுக்தா என்ற பெண்ணின் காதல், திருமணம் என்பது சுபமாய், சந்தோசத்துடன், கதைகளில் வரும், ‘happily ever after’ வகையைச் சேர்ந்தது இல்லை.

உடுத்தும் உடையிலிருந்து, இருக்கும் இடம், சாப்பிடும் சாப்பாடு வரை அனைத்தும் பல்தேவின் கண் பார்வையில் தான் சம்யுக்தாவிற்கு நடந்து கொண்டிருந்தது.

Caged Heart Art - ID: 74723 - Art Abyss

கூண்டில் பொத்திப்பொத்தி வளர்க்கப்பட்டு வரும், ‘தங்க கிளி’ சம்யுக்தா என்ற பெண். வெளி உலகம் அறியாமல், அவளைச் சுற்றி, போலியாய் ஒரு உலகத்தையே அத்தனை வருடமாய் படைத்து வந்திருந்தார்கள் பல்தேவ், விக்ரம் என்று தான் சொல்ல வேண்டும்.

சம்யுக்தாவிற்கு அறிமுகம் ஆகி, நெருங்கிய நண்பர்கள் என்று நட்பு பாராட்டும் அனைவருமே, பல்தேவ், விக்ரமால் ‘complete filter’ செய்யப்பட்ட ஆட்கள்.

சம்யுக்தாவிற்கு எந்த விதத்திலேயேவது அவர்கள் பிரச்சனை கிளப்புவார்கள் என்ற சிறு சந்தேகம் தோன்றினால் கூட, அந்த நபர், சம்யுக்தாவின் வாழ்வில் மீண்டும் வந்ததே கிடையாது.

பள்ளி, கல்லூரி என்று சம்யுக்தா அறியாமல், அவள் வாழ்விலிருந்து நீக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை அதிகம். குடும்பத்தோடு பணி மாற்றம், லாட்டரி, வார்னிங் கொடுக்க வீட்டிற்கு ஆட்களை அனுப்புதல் என்று சாம, தான, பேத, தண்டம் என்று எல்லாவற்றையும் பயன்படுத்தி கொண்டிருந்தார்கள்.

அப்படி பெண்ணின் பாதுகாப்பிற்காகத் தன்னையே அவளிடம் விலக்கி, ஒதுக்கி வாழ்ந்து கொண்டிருப்பவரின் கட்டு கவலையும் மீறி, ஈஸ்வர் சம்யுக்தாவை நெருங்கியதே பல்தேவிற்கு மிகப் பெரிய அடி தான்.

இந்தக் கட்டுக்காவல் என்பது இல்லாவிட்டால் இந்தத் தங்க கிளியை, இரையாக்க சத்ருஜித், ஜோக்ராஜ் மாதிரி பருந்துகள் வெளியே சுற்றி கொண்டு இருக்கிறது என்பது ஒரு காரணம்.

ஒன்று சம்யுக்தா இவர்களின் அந்தப்புர ஆரணங்காக நூறோடு நூற்றி ஒன்றாக இருக்க வேண்டும். இல்லையென்றால் பல்தேவின் எதிரிகள் சம்யுக்தாவின் கை வேறு, கால் வேறு, தலை வேறாகத் துண்டு துண்டாகி பார்சல் அனுப்பி வைப்பார்கள்.

She is a high value target.

இது எதுவும், ‘சம்யுக்தாவை நெருங்கக் கூடாது’ என்று பல்தேவ் கட்டியிருந்த கோட்டையில், ஈஸ்வர் என்பவன் உடைத்து, அதன் வழியே பருந்துகளும், பேய்களும் சம்யுக்தாவை நெருங்க வழி செய்து விட்டான்.

காதல் என்பது எல்லா சமயத்திலேயும், தாம் காதலிப்பவரை வாழ வைக்காது தான். ஈஸ்வர் சம்யுக்தாவின் மேல் கொண்ட காதல் அத்தகையது தான். 

ஜெவியருக்கும் அது புரிந்தே தான் இருந்தது.

ஈஸ்வர், காதல் என்று இன்று இவர்கள் இரக்கம் காட்டினால் அவர்கள் பெண்ணே இல்லாமல் போய் விடுவாள்.

ஈஸ்வரால் தனக்கும், தன் மகளுக்கும், தன் குழுவிற்கும் பிரச்சனை நிச்சயம் எதிர்காலத்தில் வரும் என்று நினைத்த பல்தேவ் அறியாதது, ஏற்கனவே சத்ருஜித் சம்யுக்தாவை குறி வைத்து விட்டது.

ஜெவியர் கட்டளைக்கு அவன் ஆட்கள் காரை அங்கே கொண்டு வந்து நிறுத்த, “ஈஸ்வர்!… உங்க கூட வர, மத்த மூணு பேருக்கும் மட்டும் தான் அனுமதி. மீதம் உள்ள மத்த யாராவது இங்கே நடந்ததை பற்றி வாயைத் திறந்தீங்க, விளைவுகள் விபரீதமாய் இருக்கும்…” என்று கேசவன், மணி, கவிதா, பூக்கடை சுமதியை பார்த்துச் சொன்னான்.

“இல்லை நாங்களும்…” என்று ஆரம்பித்த மணியைத் தடுத்த சம்யுக்தா,

“வேணாம் அப்பா… இதுவரை நீங்கச் செய்த உதவியே போதும்… நீங்க வர வேண்டாம்…” என்றவள் கையைப் பிடித்துக் கொண்ட ஹேமா,

“எதுவாய் இருந்தாலும் அதை நான் பேஸ் செய்துக்கறேன்… நானும் கூடத் தான் வருவேன்…” என்றாள்.

“நீ இல்லாமலா!…” என்று ஹேமா கையை அழுத்திக் கொடுத்த சம்யுக்தாவை, வந்து நின்ற மூன்று காரில் ஒன்றில், ஹேமாவுடன் ஏற்றினான் ஜெவியர்.

உடன் ஏறச் சென்ற ஈஸ்வரை தடுத்தவன், “உங்களுக்கும் உங்க கூட நிற்கும் இவருக்கும் அடுத்த கார். அந்தப் பையனுக்கும், பெண்ணுக்கும் அடுத்த கார்.” என்று கைக்காட்டினான்.

Vijay Antony's next is a political thriller | Entertainment News,The Indian Express

“ஈஸ்வர்!… வேண்டாம்… எதுவோ சரியாய் படலை. வேண்டாம்…” என்றான் செல்வம் ஈஸ்வர் காதின் அருகே.

“எனக்கும் அப்படி தான் தோணுது செல்வம்… நம்மைக் கும்பலாய் போட்டுத் தள்ளத் தான் கூட்டிட்டு போறாங்களோ என்னவோ!… ஆனால், இதில் நாம் செய்ய எதுவும் இல்லையே!… இவனுங்களை நம்பி, நாம் சம்யுக்தாவை நாம் இப்பொழுது அனுப்பி வைத்தோம், அதன் பிறகு அவளை நாம் பார்க்க முடியும் என்று உனக்குத் தோணுதா?….

எந்த நாட்டில், அதில் உள்ள எந்த வீட்டில் சிறை வைப்பாங்க என்றே சொல்ல முடியாது.சாதாரண வீட்டு பெண்களைக் காபந்து செய்யவே அவனவன் என்னென்னவோ செய்வான்… இதில் பல்தேவ் மாதிரி கோடீஸ்வரர் எதையெல்லாம் செய்யத் துணிவார் என்று யாருக்கு தெரியும்?

சம்யுக்தா என்னில் சரி பாதி செல்வம். அவளை என்னால் விட்டுக் கொடுக்க முடியாது.” என்றான் ஈஸ்வர்.

எப்பொழுதுமே முகத்தில் எந்தச் சலனத்தையும் காட்டாமல் மர முகம் என்று சொல்லும் வண்ணம் இருக்கும் செல்வம் முகமே, கலக்கத்தை வெளிப்படையாகக் காட்டியது.

திருமண கோலத்தில் முன் காரில் ஏறிக் கொண்டிருந்த சம்யுக்தாவையும், புன்னகையுடன் நின்றிருந்த தன் நண்பனையும் பார்த்தவனிடமிருந்து அவனே அறியாமல் பெருமூச்சு ஒன்று வெளி வந்தது.

“ஹ்ம்ம்!… நேரம் ஆகுது ஏறுங்க…” என்றான் ஜெவியர் மிரட்டலாக.

ஒவ்வொரு காரிலும் முன்னால் இருவர், பின்னால் இருவர் என்று ஜெவியரின் ஆட்கள் ஏறிக் கொள்ள, முதலில் இருந்த காரில் சம்யுக்தா, ஹேமா, அடுத்த காரில் ஈஸ்வர், செல்வம், அதற்கு அடுத்த காரில் ரிஷி, எமி என்று பிரித்துப்பிரித்து ஏற்றப்பட்டார்கள்.

ஜெவியர், சம்யுக்தா இருந்த காரில் டிரைவர் சீட்டுக்குப் பக்கத்தில் ஏறி அமர, “அண்ணா!… உங்க பெயர் ஜெவியர் தானே அண்ணா?… விக்ரம் கூட உங்களைப் பார்த்திருக்கேன். ஈஸ்வர், எங்கே அண்ணா?” என்றாள் சம்யுக்தா.

“பின்னால் இருக்கும் காரில் இருக்கார் தங்கச்சி.” என்றான் ஜெவியர்.

“எல்லோரும் ஒரே காரில் போனால் என்ன?… எதுக்கு அவங்களை இப்படி பிரிச்சி வச்சி இருக்கீங்க?… நாங்க எல்லோரும் ஒரே காரில் வரோம் அண்ணா… இவங்களை அந்தக் காருக்கு போகச் சொல்லுங்க…” என்றாள் சம்யுக்தா, பாதுகாப்பிற்க்கு அந்த வண்டியில் இருந்த நான்கு ஆட்களைச் சுட்டி காட்டி.

“சாரி மா… செக்யூரிட்டி ரீசன்ஸ்… இப்படி தான் கூட்டி வரச் சொல்லி உத்தரவு.” என்றான் ஜெவியர்.

‘என்னவோ நான் இளவரசி மாதிரியும், தன்னை தூக்கி செல்ல எதிரி நாட்டு கொடூர தளபதி ஒருவன் காத்திருப்பது போலவும் எதுக்கு இந்த ஓவர் பில்ட் அப்… ஆமா இப்படி பிரித்து உட்கார வைத்து விட்டால், ஈஸ்வர் மேல் எனக்கு இருக்கும் காதல் அப்படியே நாலு கால் பாய்ச்சலில் எகிறி குதித்து வெளியே ஓடிடும் பாருங்க… வொய் டாடி!…’ என்று மனதிற்குள் புலம்பினாள் சம்யுக்தா.

“யார் உத்தரவு இது ?” சம்யுக்தா கடுப்புடன், , நிச்சயம் தன் தந்தை வேலை தான் என்பது நன்கு புரிந்தது சம்யுக்தாவிற்கு.

“பாஸ்!…” என்ற ஜெவியர், தன் அருகே இருக்கும் டிரைவரிடம், “கிளம்பலாம்…” என்றான்.

கிளம்பிய கார், அடுத்த நொடி பிரேக் போட்டு நின்றது.

கதவைத் திறந்து கொண்டு வெளியே எகிறி குதித்து இருந்தாள் சம்யுக்தா.

“தங்கச்சி!… என்னமா செய்யறே!…” என்றவாறு ஜெவியர் வெளியே குதிக்க, ஹேமாவும் இறங்கி இருந்தாள்.

“உங்க பாதுக்காப்பு பத்தி எல்லாம் எனக்கு அக்கறை இல்லை… ஈஸ்வர், எங்கே இருக்காரோ, அங்கே தான் அவர் கூடத் தான், நானும் இருப்பேன்… எங்களைப் பிரிக்க உங்க பாஸ் நினைத்தால் முடியாதுன்னு சொல்லிடுங்க…” என்ற சம்யுக்தா, ஈஸ்வர் இருந்த காரில் ஏறி அமர்ந்து கதவை அடித்துச் சாத்தினாள்.

ஜெவியரை முறைத்த ஹேமாவும், சம்யுக்தா ஏறிய அதே காரில் ஏறிக் கொள்ள, ஜெவியர் நெற்றியை தேய்த்து கொண்டான்.

‘சம்யுக்தா என்ற பெண்ணை அடக்குவது என்பது அத்தனை எளிதா என்ன?… தனக்கு எது சரியென்று படுகிறதோ அதில் உறுதியாய் இருப்பவள் ஆயிற்றே!… பல்தேவ் தன் மகளை, underestimate செய்கிறார்.’ என்ற எண்ணம் காரினுள் ஏறி அமர்ந்த சம்யுக்தாவை கண்டதும் ஈஸ்வர், செல்வம் எண்ணத்தில் ஓட, புன்னகையுடன் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள்.

ஈஸ்வரின் கை ஆறுதலாய் சம்யுக்தாவின் கையைப் பிடித்துக் கொண்டது.

“சாரி ஈஸ்வர்!… சோ சாரி… இப்படியெல்லாம் என் டாடி பிஹேவ் செய்வார் என்று சத்தியமாய் நான் எதிர்பார்க்கவில்லை ஈஸ்வர். நீங்க எல்லோரும் என் டாடியை பற்றிச் சொன்னபோது கூட நான் நம்பலை. இப்போ அவர் யார் என்றே எனக்குத் தெரியலை… ரொம்ப சாரி…” என்றாள் சம்யுக்தா கலக்கத்துடன்.

“உன் அப்பா வெளியே காண்பிக்கவில்லையென்றாலும் உன்மேல் அதிக பாசம் வைத்து இருப்பவர் சம்யுக்தா. எங்களுக்குப் புரிகிறது. பல்தேவ் என்ற இரும்பிற்குள் இருப்பது, அவர் பெண்ணான உன்மேல் வைத்திருக்கும் அளவு கடந்த பாசம். Daddy’s sweet, little princess இல்லையா நீ?

சாதாரண அப்பாவாய் இருந்தால், திட்டி, சண்டை போட்டு, கெஞ்சி கதறி என்று இருப்பார்கள். பல்தேவ் கோடீஸ்வரர் இல்லையா!… அதான் தன் பணபலம், ஆள் பலத்தை காண்பிக்கிறார். இதுக்கு நீ ஏன் உன்னை வருத்திக் கொள்கிறாய் சம்யு?… மாமனார், மருமகன் கோல்டு வார் எல்லாம் குடும்பங்களில் சகஜம் தானே!…” என்று கண் அடித்த ஈஸ்வரை விளையாட்டாய் தோளில் ஒரு அடி போட்டாள் சம்யுக்தா.

“அப்போ, இனி தான் தரமான சம்பவங்கள் இருக்குன்னு சொல்றியா ஈஸ்வர்!… பல்தேவ் இப்போ காட்டிய ட்ரைலருக்கே அல்லு உட்டுடுச்சு… பட்டுன்னு அத்தனை துப்பாக்கி, அதுவும் அதெல்லாம், ‘ஹை எண்டு துப்பாக்கி’ வகைகளைக் கண் முன் பார்த்ததும், மூச்சே நின்னு போச்சு.

அவனவன் பொண்ணுக்கு திருமணம் என்றால், ஆடு வெட்டிக் கரி சோறு போடுவாங்க என்று கேள்விப்பட்டு இருக்கேன். இங்கே இவ அப்பா, சரியான நரபலி மன்னார்சாமியாய் இருப்பார் போலிருக்கு!… மனுஷனையே வெட்டி, கடாக்கு பதில் குழம்பில், நம்மையே கொதிக்க வைத்துட்டு தான் மறுவேலை பார்ப்பார் போலிருக்கே!….” என்றான் செல்வம் அடக்கப்பட்ட புன்னகையுடன்.

“வெட்டி இல்லைடா சுட்டு… டிஷ்ஷியும்!… டிஷ்ஷியும்!…” என்று கையைத் துப்பாக்கி மாதிரி பிடித்து, ஈஸ்வர் செல்வத்தைச் சுடுவது போல் பாவனை செய்ய, செல்வம் துப்பாக்கி தோட்டா பாய்ந்து நெஞ்சை பிடித்துக் கொண்டு விழுவது போல் பாவனை செய்தான்.

ஈஸ்வர் தோளில் ஒரு அடி போட்ட, சம்யுக்தா, “என்ன விளையாட்டு ஈஸ்வர் இது?… நல்லா இல்லை… எதிலேயும் விளையாட்டு தானா உனக்கு? எனக்கு இன்னும் பக்பக்குன்னு இருக்கு… நீங்க ரெண்டு பேரும் நிலைமையின் தீவிரம் புரியாமா சுட்டு விளையாடிட்டு இருக்கீங்க.” என்றாள் கடுப்புடன்.

”பேபி!… இடுக்கண் வருங்கால் நகுக பாலிசி தான்மா… உங்க அப்பா புலி. அவர் வாலை பிடிக்கவே மாட்டேன் என்று இருந்த என்னை, காதல் என்ற போதை கொடுத்து, அதில் மூளை கலங்கி போய் அவர் வாலை பிடிக்க வைத்து விட்டாய் செல்லம். இப்போ புலி கர்ஜிக்கிறது.

எதிர்காலம் மிகப் பிரகாசமாய் கண் முன்னே, கலர் கலராய் தெரியும்போது இப்படி தான் நட்டு கழண்டு போகுமாம்… சுவாமி கைப்புள்ளையானந்தா சொல்லியிருக்கார்.” என்ற ஈஸ்வரை முறைக்க முயன்று தோற்றாள் சம்யுக்தா.

தன் கலக்கத்தை போக்கவே இப்படி ஈஸ்வர் விளையாடிட்டு இருக்கிறான் என்பது புரிய, பெருமூச்சுடன் ஈஸ்வர் தோள் சாய்ந்தாள் சம்யுக்தா.

‘நான் இருக்கேன்.’ என்பது போல் ஈஸ்வர் கரம் அவளை அணைத்து கொண்டது.

இவர்கள் காரின் உள்ளே நிலைமையின் தீவிரம் புரியாமல் விளையாடிக் கொண்டிருக்க, காருக்கு வெளியே ஜெவியர் பயத்தில் நின்று இருந்தான்.

மொபைல் எடுத்து யாருக்கோ அழைப்பு விடுத்தவன், டென்ஷன் உடன் முன் பக்கம் காரில் இருந்தவனை இறக்கி விட்டு, அந்தச் சீட்டில் ஏறி அமர்ந்து காரைக் கிளப்ப சொன்னான்.

ஈஸ்வருக்கும், அவன் செல்ல இருந்த காருக்கும், எதிரே வர இருந்த அசுர வேக லாரிக்கும், சீன பெருஞ்சுவராய் சம்யுக்தா என்ற பெண் நின்றுகொண்டிருந்தாள்.

சத்தியவான் உயிரைக் காப்பாற்ற எமனுடன் மோதிய சாவித்திரி கதையா?

இல்லை சீதா தேவியை கவர்ந்து சென்ற ராவணனனுடன் நடத்தப்பட போகும் இன்னொரு ராமாயண யுத்தமா!…

யார், யாரை காப்பாற்ற போகிறார்கள்?

சம்யுக்தா என்ற பெண்ணைக் காக்க, பல்தேவ் என்ற தந்தை, ஈஸ்வரையும், அவன் நண்பர்களையும் சென்னைக்குள்ளேயே பலி கொடுக்க ஆவண செய்து விட்டார்.

இங்குப் பெண்ணின் மனம், காதல் என்றெல்லாம் பல்தேவ் பார்த்தால், அந்தப் பெண்ணே இல்லாமல் போய் விடுவாள் என்ற நிலை. பெண்ணின் மானம், உயிரா?…  தெரியாத நால்வரின் வாழ்வா என்ற நிலை வந்த போது, பல்தேவ் மகள் என்ற நிலையை எடுத்து விட்டார்.

சென்னைக்குள் வைத்து ஈஸ்வர், அவன் உடன் இருப்பவர்கள் கதையை முடிக்க அவர்கள் போட்ட பிளான் சம்யுக்தா என்ற பெண்ணால் சிறு பின்னடைவை சந்தித்து இருந்தது.

அசுர வேக லாரி, பஸ், வேன் மோதி என்று உலகத்தில் தினம் தினம் நூற்றுக்கணக்கில் உயிர்கள் பறி போய்க் கொண்டு தான்இருக்கிறது. இதில் எத்தனை, ‘pre planned மர்டர்’ என்று சொல்ல முடியும்.

‘விபத்துகள்’ என்று செய்தி வருவதெல்லாம் உண்மையில் விபத்துக்களாய் இருப்பதில்லை.

லாரி வைத்து ஈஸ்வர் வரும் காரை அடித்து நொறுக்கி, மாலினியின் மரணம் போலவே அதை விபத்து என்று கொண்டு வந்து, ஈஸ்வரை சம்யுக்தாவிடமிருந்து அந்த நொடியே பிரிக்க பல்தேவ் போட்ட பிளான், சம்யுக்தா, ஈஸ்வர் இருக்கும் காரில் ஏறியதால் கைவிடப்பட்டது.

சென்னைக்குள் ஈஸ்வர் மற்றும் அவன் நண்பர்களின் உயிரை எடுக்க முடியாமல் போய் இருக்கலாம். எடுக்கவே முடியாது என்பதில்லையே!… எத்தனையோ இடம், எத்தனையோ வழிமுறை இருக்கிறதே ஒரு உயிரைக் கொல்ல!

சிங்க கூட்டம் தங்கள் உயிரை எடுக்கப் பிளான் போட்டு விட்டதை, அறியாத மான் கூட்டம் சிங்கத்தின் குகைக்கே தங்கள் பயணத்தைத் தொடங்கியது. வேட்டையாடக் கிழ சிங்கமும் தன் கூட்டத்தோடு தகுந்த நேரம் பார்த்துக் கொண்டிருந்தது.

Salé, the Father of Lions • Island Safari Lodge

A game of hunter and the prey begins.

ஒரு புறம் சிங்கம். அது கொல்ல நினைக்கும் மான் கூட்டம் என்றால், இன்னொரு புறம், சம்யுக்தா என்ற கிளிக்கு நேரம்குறித்து விட்ட பருந்தாய் சத்ருஜித்தின் ஆட்கள் சம்யுக்தாவை கடத்த வந்து கொண்டிருந்தார்கள்.

What's going on when I see little birds going after a big bird? | All About Birds All About Birds

இவர்களைச் சுமந்த கார் மீனம்பாக்கம் விமான நிலையம் நோக்கித் தங்கள் பயணத்தைத் தொடங்கவும், கோயில் வாசலில் சத்ருஜித் அனுப்பிய ஆட்கள் வந்து நின்று கோயிலுக்கும் செல்லவும் நேரம் சரியாக இருந்தது.

‘ஜஸ்ட் மிஸ்ஸு’ என்று சொல்வார்களே அது தான் அங்கே நடந்தது.

சம்யுக்தாவை காணாமல் திகைத்து நின்றார்கள் சத்ருஜித் ஆட்கள்.

Rahul Bose LEAKED details of Baahubali: Before The Beginning - tollywood

சத்ருஜித்துக்கு அந்தத் தகவல் பகிரப்பட்ட, அவன் மொபைலிருந்து யார் யாருக்கோ அழைப்புகள் பறந்தது சம்யுக்தா இருக்கும் இடத்தைக் கேட்டு.

“சம்யுக்தா!….” என்ற சத்ருஜித்தின் அலறல், அவன் இருந்த மாளிகையின் வெளி வாயில்வரை கேட்டது.

எது ஒன்று வேண்டும் என்றாலும், அது அடுத்த நொடியே சத்ருஜித் கைவசம் இருக்க வேண்டும் என்ற வெறி கொண்டு அலைபவன் அவன். அவன் வைத்த குறியிலிருந்து ஒரு பெண் தப்பி போய் இருக்கிறாள் என்பதை அந்த ஈகோ பிடித்தவனால் தாங்கவே முடியவில்லை.

நொடிக்கு நொடிக்கு உடலில் ஏறிக் கொண்டிருந்த உணர்ச்சி விஷமானது, சம்யுக்தாவை அடைந்தே தீர வேண்டும் என்ற எண்ணத்தை வலுவாக்கி கொண்டிருந்தது.

ஒரு பொருள் கை விட்டு ஒரு போகிறது என்றால் மனித மனம் அப்பொழுது தான் அது தன் கையில் கிடைத்தே ஆக வேண்டும் என்று எண்ணம் பேயாட்டம் போடும்.

அதுவும் நினைத்ததை எல்லாம் நடத்திய பழக்கப்பட்ட அந்த நிழல் உலக அரக்கனுக்கு சம்யுக்தா கைவசம் சேராத கோபம் பற்றி எரிய ஆரம்பித்திருந்தது. சம்யுக்தா என்ற பெண்ணை அடைய, எத்தனை உயிரைப் பலி கொடுக்க வேண்டும் என்றாலும் அதற்குத் தயாராகி விட்டான்.

அன்றைய தினம் சம்யுக்தா அவன் கைகளிலிருந்து தப்பி இருந்தாள், தன் தந்தையால் என்று தான் சொல்ல வேண்டும்.

ஒரு முறை தந்தையால் தப்பித்து விட்ட சம்யுக்தா அடுத்த முறையும் தப்பிப்பாளா?

பல்தேவ் நிச்சயமாய் ஈஸ்வரையும் அவன் நண்பர்களையும் கோவா அழைத்து செல்வது ஊர் அறிய, உலகம் அறிய சம்யுக்தாவை தாரை வார்க்க இல்லை.

ஈஸ்வர் உயிர் நிலைக்குமா?

சம்யுக்தாவின் மானம் காக்க படுமா?

சம்யுக்தா கழுத்தை அலங்கரிக்கும் திருமாங்கல்யம் யாருக்கு சொந்தமானது?

விடை தெரியா கேள்விகள்.

ஆட்டம் தொடரும்…

Written by

அன்புள்ள சகோதர/ சகோதரி, உங்கள் நட்பு கரத்திற்கு மனமார்ந்த நன்றிகள். என் பெயர் அனிதா ராஜ்குமார்.கடந்த ஐந்து வருடங்களாகத் தமிழ் கதாசிரியராக இருக்கிறேன். அமேசான் கிண்டல், sm tamilnovels தளத்தில் என் எழுத்துக்களை நீங்கள் படிக்கலாம். எனக்குத் திருமணம் ஆகி விட்டது.கணவர் MR. B. ARUN KUMAR BALAKRISHNAN superintendent, INTELLIGENCE WING, MINISTRY OF FINANCE/ uniformed officer ஆக மத்திய சர்காரில் பணி புரிகிறார். அதங்கோ மத்திய அரசாங்கத்தின் காவல் துறை என்று கூடச் சொல்லலாம். சொந்த ஊர் காஞ்சிபுரம். என் முதல் நாவல் 'என்ன தவம் செய்தேன் ' ஹியூமன் டிராபிக் பற்றியது, என் நான்காவது நாவல், ஆசிட் அட்டாக் victim பற்றியது 'சமர்ப்பணம்' ரெண்டிற்கும் சிறந்த தமிழ் நாவல் ஆசிரியர் என்ற விருதாய், துருவ நட்சத்திரம் என்ற விருது ஆன்லைன்னில் வழங்கப் பட்டது. இது வரை ஐந்து நாவல்கள் எழுதி உள்ளேன். 1.என்ன தவம் செய்தேன் 2. காஞ்சி தலைவன் 3.ஊரு விட்டு ஊரு வந்து 4.சமர்ப்பணம் 5.உயிரோடு விளையாடு -முத்த பாகம் 6.உயிரோடு சதிராடு - விரைவில் ஆரம்பிக்கப் படும். இதுவரை அமேசானில் 3 நாவல் ebook வடிவத்தில் வெளியிடப்பட்டுள்ளது.மேலும் மூன்று நாவல் விரைவில் வெளியிடப்படும். நீங்கள் நீட்டிய நட்புக்கரத்திற்கு மனமார்ந்த நன்றிகள் சகோதர/ சகோதரி. https://www.amazon.in/ANITHA-RAJKUMAR/e/B082S9C6Y5?ref=sr_ntt_srch_lnk_1&qid=1634620509&sr=8-1 அன்புடன் உங்கள் சகோதரி Mrs.அனிதா ராஜ்குமார். (tamil novelist-amazon kindle and smtamilnovels.com)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!