uyirodu vilaiyadu – 3

uyirodu vilaiyadu – 3
தந்தையின் கதையைத் தாயின் மூலமாய் கேட்டு, திருமணங்கள் எப்படி வியாபார சந்தைகள் ஆகிறது என்ற நினைவில் இருந்த சம்யுக்தாவை ஹேமாவின் குரல் நினைவுக்குக் கொண்டு வந்ததது.
“சரி ஆன்ட்டி… அங்கிள் வீட்டில் தான் திருமணத்தை கேலி கூத்தாக முயன்றார்கள்.. அங்கிள் கதைகளில் வரும் ஹீரோயின் மாதிரி ஓடி வந்துட்டார்… உங்க வீட்டில் என்ன பிரச்சனை?… அவங்க ஏன் உங்களைப் பிரிஞ்சி இருக்காங்க?… எங்க அங்கிள் மாதிரி வருமா சொல்லுங்க… ஆளு பார்க்கச் சும்மா ஹிந்தி பட ஹீரோ மாதிரி இருக்கார்… அவரை மருமகனாய் ஏற்று கொள்ள என்னவாம் உங்க வீட்டு ஆளுங்களுக்கு?…” என்றாள் ஹேமா கடுப்புடன்.
“காதல் என்றாலே எங்குமே பிரச்சனை தானே!… அதிலும் நான் பேசினால் கூட எனக்கு ஒன்றும் தெரியாது… அசடு, வெகுளி என்று பட்டம் கொடுப்பவர்கள், நான் வேறு மாநிலத்தைச் சேர்ந்தவரைக் காதலிக்கிறேன் என்றதும் ‘அய்யோ!… அப்படியா சந்தோஷம் என்று ஏத்துக்க போறாங்களா என்ன?…
பின்புலம் இல்லாத உங்க அங்கிளை மணக்கச் சம்மதிக்கவில்லை.. சொந்தமாய் வேர் இல்லாத குடும்பம்… ‘என்ன பிரச்சனை என்று அவர்கள் பூர்விகத்தை விட்டு ஓடிவந்தார்கள், உங்க அப்பா ஏன், கோவா விட்டுத் தமிழ்நாட்டிற்கு ஓடி வந்தார்?..
நாளை, இங்கு உன்னுடன் பிரச்சனை என்றால், உன்னை விட்டுஓடி விடுவாரா?…’ என்று கேட்டாங்க… வேற திருமணம் ஏற்பாடு செய்துட்டாங்க… பயங்கர கட்டு காவல்… கைதி மாதிரி தான்.
நான் சுவர் எல்லாம், ஹைஜம்ப் செய்து, நேரா உங்க அப்பா தங்கியிருந்த வீட்டிற்கு கொட்டும் மழை என்று கூடப் பார்க்காமல் போய்ட்டேன். விடிந்ததும் கோயிலில் வைத்துத் தாலி கட்டிட்டு வீட்டிற்கு போனோம்.
ஏத்துக்கவே இல்லை…கொஞ்சம் சொத்தை மட்டும் கொடுத்துட்டு தலை முழுகிட்டாங்க… உங்க அப்பா எவ்வளவோ சொல்லிப் பார்த்தார்… ‘எனக்குத் தேவை உங்க மகளின் காதல், அன்பு மட்டும் தான் என்று…’ கேட்கவே இல்லையே!… சொத்தைத் தூக்கி மூஞ்சில் அடிச்சிட்டு கதவைச் சாற்றி விட்டார்கள்.” என்றார் மாலினி கண்ணீருடன்.
“சோ… நீங்களும், அப்பாவும், அப்பவே ஒரு சூரியவம்சம், கதை ஒட்டிக் காண்பித்து இருக்கீங்க!… ஒரே பாட்டில் கோடீஸ்வரங்களா அம்மா?…” என்றாள் சம்யுக்தா.
“வாலு… அருந்த வாலு… ஒரு விதத்தில் அதுவும் உண்மை தான்… என் பணத்தில் தான் வாழ்க்கையைதொடங்கினோம். அதில் உங்க அப்பாவுக்கு, தன்மானம் அடிபட்டுப் போச்சு…
‘பொண்டாட்டி பணத்தில் குடும்பம் நடத்தறான்…’ என்று யாரோ சொன்னதை கேட்டுட்டு வந்து, அன்று எப்படி என்னிடம் துடித்தார் தெரியுமா சம்யுக்தா!… நாலு நாள் அவர் சாப்பிடவே இல்லை….
யாரோ அவரைக் கிண்டல் செய்ததில், ரோஷம் வந்து, இப்படி நம்மைக் கூட விட்டுட்டு, தன்னை உருக்கிக் கொண்டு, ஓடாய் உழைக்கிறார். மனைவி என்று தான் பெயர்… அவர் சரியா சாப்பிட்டாரா என்று கூடத் தெரிந்து கொள்ள முடியவில்லை.
உடல் நலம் இல்லை என்றால் கூட, இருந்து பார்த்துக் கொள்ள முடியாது… அவர் அங்கே என்ன பாடுபடுகிறாரோ!… இங்கே நான் குத்து கல்லுமாதிரி, ஒண்ணும் செய்ய முடியாமல் உட்கார்ந்துட்டு இருக்கேன்….” என்றார் மாலினி கதறலுடன்.
வாழ்வாதாராதிற்காகக் கணவனை வெளிநாடுகளுக்கு வேலைக்கு அனுப்பி விட்டு, ‘வெளியே மற்றவர் முன் ஒன்றும் இல்லை’ என்று போலி முகமூடி அணிந்து, கட்டிய கணவன் என்ற துணை, இன்பம், துன்பத்திற்கு அருகில் இல்லாமல், மூடிய நான்கு சுவற்றுக்குள், கதறும் பல இல்லத்தரசிகளின் பிம்பமாய் தான், மாலினி, சம்யுக்தாவின் கண்களுக்குத் தெரிந்தார்.
இதில் ஏச்சுக்களும், பேச்சுகளும் ஏராளம்.
‘புருஷனை வெளிநாட்டுக்கு அனுப்பி விட்டு, அவன் கஷ்டப்பட்டு உழைத்து அனுப்பும் காசில், அலுக்கி மின்னிக்கிட்டு ஊர் சுத்திட்டு இருக்கா…’ என்று வெகு சாதாரணமாய் விஷம் தோய்ந்து வந்து விழும் வார்த்தைகள் ஏராளம்.
உடன் இருப்பவர்களே, பின்னால் புறம் பேசி, தங்கள் பொறாமையை, வயிற்று எரிச்சலை தீர்த்துக் கொள்ள, பெண்மையை அங்கே குதறி எடுக்கும் சம்பவங்களும் இங்கே அதிகம்.
உடை, உணவு, உடல் அசைவு ஒவ்வொன்றிலும் குறை காண ஆயிரம் கண்கள், இங்கே கேமரா போல், போகஸ் ஆகி இருக்கும்.
உறவு, நட்பு, உடன் பணி புரியும் ஆண்கள் என்று யாரும் வீட்டிற்கு வந்து விடவோ, இவர்கள் சென்று விடவோ முடியாது.
கண், காது மூக்கு வைத்து, நிழலை நிஜமாக்கி கயிறு திரிப்பவர்கள் ஏராளம்.
அன்று சீதை இலங்கையில் சிறை வைக்கப்பட்டாள்.
இன்று வேலை என்ற சங்கிலியில்,பல ராமன்கள் வெளியூர்களில், வெளிநாடுகளில் சிக்கி கொண்டு இருக்க, இருக்கும் இடத்திலேயே, பல சீதைகள் தினம் தினம் அக்னி பிரவேசம் செய்து கொண்டு இருக்கிறார்கள்.
உதவியாய், ஆறுதலாய் இருக்கும் கரம் இப்படி கணவனை வெளிநாட்டிருக்கு அனுப்பி விட்டுக் காத்து இருக்கும் எல்லா சீதைகளுக்கும் கிடைப்பதில்லை.
கௌரவர்கள் அரசவைபோல், நடப்பதை எல்லாம் கண்டும் காணாமல் இருக்கும் மனங்கள் தான் இங்கே ஏராளம்…’ என்று எண்ணிய சம்யுக்தாவின் மனம், ‘இதற்க்கு என்று தான் விடிவு?…’ என்று வேதனை பட்டுக் கொண்டிருந்தது.
தந்தையின் தன்மானம், ‘தன்னை ஒரு வார்த்தை சொல்லி விட்டார்களே!…’ என்று சமுதாயத்தில், வெற்றி பெற்று காண்பிக்க வேண்டும் என்ற அந்த ஓட்டம் ஒரு புறம் பெருமிதத்தை கொடுத்தாலும், இன்னொரு புறம் தந்தையின் அன்பு, அரவணைப்பின்றி வளர்ந்த காலங்களின் ஏக்கம், தவிப்பு சம்யுக்தாவை வாட்டியது.
“அவர் கூட நாமளும் போய் இருக்கலாம் மம்மி. அப்பா கிட்டே நான் நம்மைக் கூட்டி போகச் சொல்கிறேன்.” என்றாள் சம்யுக்தா.
“வேண்டாம்டா செல்லம்… இங்கே எங்களைத் தாழ்த்தி கூறியவர்களின், கண் முன்னே நிமிர்வோடு வாழ்ந்து காட்டுவது தான், அவரின் தன்மானத்திற்கு அழகு.
இருப்பதினாலு மணி நேரம் உழைக்கப் போதவில்லை என்று புலம்பிக் கொண்டு இருப்பவருக்கு நாமும் பாரமாய் இருக்க கூடாது…” என்றார் மாலினி.
உண்மையான காரணம் தங்களின் பாதுக்காப்பு மட்டுமே முக்கியம் என்று கணவர் சொல்லியிருந்ததை, எப்படி சொல்வார்.
வாய்விட்டுப் பெற்ற மகளிடம் சொல்லிவிடும் விஷயம் இல்லையே கணவர் தன்னுடன் பகிர்ந்து கொண்டு இருந்தது.
வெளிநாட்டில் பழக்கமான தொழில் முறை நண்பனின் குடும்பம் எப்படி சிதைந்தது என்ற கதை அல்லவா அது?
கோடீஸ்வரர்களை, தொழில் அதிபர்களை, அவர்களின் குடும்பத்தை எல்லாம் பணத்திற்காக/ ransom கேட்டுக் கடத்துவது எல்லாம் எல்லா நாட்டிலும் சகஜம்.அதனால் தானோ என்னவோ பெரும் கோடீஸ்வரர்களுக்கு பாதுகாவலர்கள் என்று சிலர் உடன் வந்து கொண்டு இருக்கிறார்கள்.
அப்படி ransom கேட்டு, நண்பரின் மனைவியையும், மகளையும் கடத்தி இருந்தது ஒரு கும்பல்.
காவல் துறையின் உதவியை நாடாமல் கேட்ட பணத்தை அந்தத் தந்தை கொடுத்தும் உயிரற்ற பிணமாய் தான் அந்தத் தாயும் மகளும் அவருக்குத் திரும்பக் கிடைத்தனர்.
‘உயிரே போய் விட்டாலும் பரவாயில்லை’ என்று நினைக்கும் வண்ணம் பல கொடுமைகளை ஆளான பிறகே அந்த ரெண்டு உயிரும் பிரிந்து இருந்தது.
பல்தேவ் அடுக்கிக் கொண்டே போக, இங்கே மாலினி உடைந்து கதறி அழுதார்.
ஒரு தாயாய் அந்த முகம் தெரியாத அந்த மகளுக்கு நேர்ந்த கொடூரத்தை தாங்க முடியவில்லை.
யாரோ பெற்ற பெண் பிள்ளை என்றாலும், இங்கே இந்தத் தாயின் மனம் கதறி தவித்தது.
“பாதுகாப்புக்கு ஆள் ஏற்பாடு செய்துக்கலாங்க… அதான் VIP செக்யூரிட்டி எல்லாம் இருக்கே…” என்றார் மாலினி.
“அந்தச் செக்யூரிட்டியையும் தாண்டி, காவலுக்கு இருந்தவங்களை கொன்னுட்டு தான், அவன் மனைவியையும், மகளையும் கடத்தி கொன்றார்கள்.
குறி வச்சுட்டா ராணுவமே காவலுக்கு இருந்தாலும் அந்தக் கும்பலிடமிருந்து மீட்க முடியாது… இதெல்லாம் நம்ம மகளுக்கு…” என்று பல்தேவ் ஆரம்பிக்கும் போதே,
“வேண்டாம்… நாங்க இங்கேயே இருந்திடறோம்… நீங்க எப்போ எங்களை வந்து பார்க்க முடியுமோ, அப்போ வாங்க போதும்… அந்த நாட்டு வாழ்வே வேண்டாம்… நம்ம மகளின் பாதுக்காப்பு தான் முக்கியம்…” என்று முடிவு எடுத்தததை மாலினி சம்யுக்தாவிடம் சொல்லவில்லை.
தன் சிந்தனையில் உழன்று கொண்டிருந்தவரைக் கலைத்தது சம்யுக்தாவின் குரல்.
“மம்மி!… ‘அசோக், இந்த நாள் உன் டைரியில் குறிச்சி வச்சுக்கோ….’ என்று அண்ணாமலை ரஜினி, லைவ் ஷோ, ஓட்டிட்டு இருக்காரா உங்க வீட்டுக்காரர்?…
நீங்கக் குஷ்பூ மாதிரி,
அண்ணாமல!… அண்ணாமல!…
ஆசை வச்சேன் எண்ணாமலே
அன்னம், தண்ணி உண்ணாமலே
எண்ணி ஏங்குறேன்...’ என்று இங்கிருந்து சோலோ பாடிட்டு இருக்கீங்க அதானே!… ஜாடிக்கு ஏத்த மூடித் தான் மம்மி நீங்க…” என்று கிண்டல் அடித்தவளை அடிக்கத் துரத்தினார் மாலினி.
விடிவு ஒன்றே கிடைக்காமல், மாலினியின் அகால மரணம், சம்யுக்தாவிற்கு பேரிடியாய் தான் இருந்தது.
மாலினி இறந்த பிறகு, தந்தையுடன் செல்ல வேண்டும் என்ற எண்ணம் சம்யுக்தாவிற்கு விட்டுப் போனது என்று கூடச் சொல்லலாம்.
அன்னை வாழ்ந்த, இடத்தைவிட்டு, தந்தையுடன் கிளம்ப அவளுக்குப் பிடிக்கவில்லை.
தாயின் மூச்சுக்காற்று, ஆத்மா இருக்கும் இடம் தாங்கள் வாழ்ந்த இடம்.
அங்கு இருக்கும் உயிர்ப்பு, பளபள வெளிநாட்டு மேல்தட்டு வாழ்க்கையில் கிடைக்காது என்று தோன்றி விட, சம்யுக்தா தமிழகத்தை விட்டு நகரவில்லை.பல்தேவும் சம்யுக்தாவை கட்டாயப்படுத்தவில்லை.
அன்பு அவருக்கு இல்லையோ, இல்லை அதை எப்படிகாட்டவேண்டும்என்று தெரியவில்லையோ!…
சம்யுக்தா வழக்கம்போல் இங்கே… பல்தேவ் வெளிநாட்டில் அங்கே என்று தந்தையும் மகளும் விலகித் தான்இருந்தார்கள்.
இப்படி யாரும் இல்லாத சம்யுக்தாவும், ஹேமாவும், ஒருவருக்கு ஒருவர் துணையாக மாறிப் போனார்கள்.
கவிதா பேசிய பேச்சில், தன் அன்னை பற்றிய எண்ணங்களில் மூழ்கி, முகம் வாடி இருந்த சம்யுக்தாவை கண்ட மணி, கவிதாவை விட்டால், தன்தோழிபற்றிப் பேசிக் கொண்டே இருப்பார். அது சம்யுவை பாதிக்கும் என்பதால், அந்தப் பேச்சினை மாற்றும் விதமாய் மணி,
“மாப்பிளைக்கு போன் செய்து பேசிட்டியா சம்யு?…” என்றார்.
“பேசிட்டேன் அப்பா… வந்துட்டு தான் இருக்காங்க… அங்கங்கே போலீஸ் கெடுபிடி அதிகம் என்பதால், வர லேட்ஆகும்ன்னு சொன்னாங்க… ” என்றாள் சம்யுக்தா, தன் அன்னை பற்றிய நினைவுகளிலிருந்து மீண்டவளாய்.
அதற்குள் கேசவ மூர்த்தி அழைத்திருக்க, கவிதா அவரிடம் சென்றிருந்தார்.
கவிதாவின்மனநிலைக்கு சற்றும் குறையாத நிம்மதியில், சந்தோஷத்தில் பூரித்து இருந்தது ஹேமாவின் மனம்.
ஹேமாவுக்கு சம்யுக்தா அதி ஸ்பெஷல் தோழி என்று கூடச் சொல்லலாம். சிறு வயது முதல், சம்யுக்தாவுடன், மாலினியால் வளர்க்க பட்டதால், நட்பைத் தாண்டிய பாசம் இரு பெண்களுக்கு இடையில் இருந்தது.
ஹேமாவின் பெற்றோர்களும் மருத்துவர்கள். ‘டாக்டர்ஸ் வித்அவுட் பார்டர்ஸ்/doctors without borders’ என்ற அமைப்பில் இருப்பவர்கள்.
‘எல்லைகளற்ற மருத்துவர்கள்’ என்பது சமய சார்பற்ற, எந்த அரசாங்கத்தின் சார்பும் இல்லாமல், இலாப நோக்கமற்ற, மனித நேய உதவிகளை வழங்கும் ஓரு நிறுவனம்.
இது போரால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலும், கொடு நோய்களால் பாதிக்கப்பட்ட வளர்ச்சியடைந்து வரும் நாடுகளிலும், பல பணிகளைச் செய்கிறது.
1999 ஆம் ஆண்டின், ‘அமைதிக்கான நோபல் பரிசு’ இவ்வமைப்பிற்கு வழங்கப்பட்டது.
அந்த அமைப்பில் பணிபுரியும் ஹேமாவின் பெற்றோர் எப்பொழுது, எங்கே செல்வார்கள் என்பது, அவர்களுக்கே தெரியாத ஒன்று என்பதால், சம்யுவுடன் அவள் வீட்டில், தான் தன் சிறு வயது முதலே ஹேமா வளர்ந்தது.
பக்கத்து வீடு என்பதால், மாலினி உயிரோடு இருந்தவரை, மாலினியிடம் ஹேமாவை விட்டுத், தங்கள் சேவையைச் செய்ய, உலகம் சுற்றி கொண்டு இருந்தவர்கள் ஷீலா தம்பதியினர்.
இன்னொரு தாயாய் மாலினியும், ஹேமாவிடம் ஒன்றி போனார்.
‘மானுட சேவையா இல்லை டீனேஜ் வயதில் இருக்கும் மகளின் பாதுகாப்பா?…’ என்று ஹேமாவின் பெற்றோர் குழம்பி நின்றார்கள்.
இவர்கள் சேவை என்று செல்லும் இடம் எல்லாம் நோவும், வலியும், மரணமும், கோர தாண்டவம் ஆடும் இடம் என்பது மட்டுமில்லாமல், அடிப்படை வசதிகள் கூட இல்லாத இடம் என்னும் போது, மகளை அழைத்துச் செல்லவும் அவர்களால் முடியாது.
மகளுக்குப் பெற்றோராக இருந்து விடவும், இங்கேயே, ஏதாவது ஒரு மருத்துவமனையில் காசுக்கு வேலை செய்யவும், அவர்களின் மனம் இடம் கொடுக்கவில்லை.
இவர்கள் படிப்புக்கு, அனுபவத்திற்கு தனியார் நிறுவனங்கள் சில பல லட்சங்கள் சம்பளமாய் கொடுக்க முன் வந்தார்கள்.
அதையெல்லாம் நிராகரித்து விட்டு, ‘இது வேலை அல்ல… மனித சேவை…’ என்று வாழும் இந்தத் தம்பதிக்குப், ‘பிழைக்கத் தெரியாதவர்கள்’ என்ற பெயர் உண்டு என்றாலும், சிலரின் வெற்றி பணத்தால் நிர்ணயிக்கப் படுவதில்லை என்பதற்கு சிறந்த உதாரணம், ஹேமாவின் பெற்றோர்.
பெற்றோரின் தவிப்பு புரிந்து, அவர்களை அனுப்பி வைத்ததும் ஹேமா தான்.
“மருத்துவர்கள், காவல் துறையினர், ராணுவத்தினர், ஆசிரிய பெருமக்கள் வற்றாத ஜீவநதி போன்றவர்கள். தங்கள் ஓட்டத்தால், மக்களுக்குச் சேவை செய்யும் உன்னத மக்கள். கடவுளுக்குச் சமமானவர்கள்.
மக்களின் உயிரை,அறிவை, வாழ்க்கையை மேம்படுத்துவதில் இவர்களின் பங்கு அதிகம்.
பசி தீர்க்கும் அன்னைய போல் தாகம் தீர்க்கும் தண்ணீரை போல், தந்தைக்கு சமமான வழிகாட்டிப் போன்றவர்கள்.
உங்கள் கனவு, லட்சியம் மிகப் பெரிது. நீங்க எனக்கு மட்டும் பெற்றோராய் இருக்க வேண்டும் என்று நினைப்பது சுயநலம்.
ஏதோ மற்றவர்களுக்கும் உதவும் நிலையில் கடவுள் நம்மை வைத்துள்ளான். அதை நீங்கள் செய்யத் தடையாய் நான் இருக்க மாட்டேன்.
இதோ, இத்தனை வருடமாய் தூக்கி வளர்த்த மாலினி ஆன்ட்டி இருக்காங்க… என் சகோதரியாய் சம்யு இருக்கா.
நீங்க உங்க சேவையைச் செய்யக் கிளம்புங்க. என்னைப் பற்றிக் கவலைப்படாதீங்க…” என்று டீனேஜ் வயது ஹேமாவின் வார்த்தையை, மகளின் அந்தப் புரிதலைக் கண்டு, அவளை அணைத்து கொண்டார்கள்.
“ஹேமா!… இந்தச் சின்ன வயதில், இத்தனை தெளிவா உனக்கு?…” என்றார் ஹேமா தந்தை பெருமையுடன்.
“எல்லாத்துக்கும் சம்யு தான் காரணம் டாடி… அவ தான் பேசிப் புரிய வைத்தா… எனக்குப் பெற்றோராய் இருப்பது முக்கியமில்லை.
உங்கள் சேவை மக்களுக்குத் தேவைப்படுகிறது.கிளம்புங்க..” என்றாள் ஹேமா, தோழியை அணைத்து கொண்டு .
இதுபோல், சில தியாகங்கள் தான், உலகை செம்மை படுத்துவப்பவை. இந்தச் சேவைகளுக்கு ஈடாக எதையும் சொல்ல முடியாது.
‘வாங்கும் மாத சம்பளத்திற்கான வேலையாகப் பார்க்காமல், மனித இனத்தின் சேவையாக’ இருப்பவை இந்தத் துறைகள்.
சேவை என்று இந்தியாவின் மூலை முடுக்கு, வெளிநாட்டு போர்களங்களுக்கு, இயற்கை பேரழிவுகளை நோக்கிச் சுற்றும் பெற்றோர் ஒரு புறம் கொண்ட ஹேமா.
மாலினி உயிரோடு இருந்த போதும், மறைந்து விட்ட பிறகும் கூட, வேலையே தன் குடும்பம் என்று அதில் தன்னை மூழ்கடித்து உலகம் சுற்றி, வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே காண வரும் சம்யுவின் தந்தை ஒரு றம் என்று, ரெண்டு பெண்களும் குடும்பம் இருந்தும் யாரும் இல்லாதவர்களே!…
ஒருத்தி தானாய் தேர்ந்தெடுத்த வாழ்க்கை என்றால், இன்னொருத்தியின் மேல் திணிக்கப்பட்ட வாழ்க்கை அது.
பெற்றோர் துணை இல்லாமல், வாழ்ந்து வரும் இரு பெண்களுக்கும், நட்பையும் தாண்டிய ஒரு ஆத்ம பந்தம் உருவாகி இருந்தது என்றால் மிகையல்ல.
மாலினி பற்றிய சிந்தனையில் தான், ஹேமாவும் அப்பொழுது இருந்தாள் என்றாலும், ‘எதற்கு மணி அங்கிள், ஈஸ்வர் பற்றியே, இத்தனை முறை கேட்டுக் கொண்டு இருக்கிறார்?…’ என்ற சந்தேகம் எழும்ப, அப்பொழுது தான் சம்யுக்தாவின்முகத்தைப் பார்த்தவள், தன்னை தானே நொந்து கொண்டாள்.
மணியின் முயற்சி புரிய, ஹேமாவும் சம்யுக்தாவின் மனநிலையை, அப்பொழுது மாற்ற வேண்டிய அவசியத்தை உணர்ந்தாள்.
தான் கோடிட்டு காட்டாமலேயே ஹேமா, சம்யுக்தாவின் மனநிலையை புரிந்து கொண்டதை கண்டு கொண்ட மணியின் முகத்தில், ‘சம்யுக்தாவை டைவர்ட் செய்ய என்ன செய்வது?…’ என்ற கேள்வி தொக்கி நின்றது.
அதைப் புரிந்து கொண்ட ஹேமா, சத்தமாய் “என்ன அங்கிள் என்றைக்கும் இல்லாமல் இன்னைக்கு சென்னை இப்படி அதிருது?…” என்ற ஹேமாவின் கேள்வி, தன் எண்ணத்தில் உழன்று கொண்டிருந்த சம்யுவையும் கவனிக்க வைத்தது.
“ஓஹ்!… நீங்க நியூஸ் பார்க்கலையா?…. எல்லாம் அந்தப் படுபாவி தேஜ், அந்த மனித மிருகம் ‘லயன் பரணீதரனால்’ வந்தது.
கட்டையில் போறவனுங்க. படுபாவி பசங்க… நாசமாய் தான் போவானுங்க. அய்யோ!… கோயில இருந்திட்டு, என்னவெல்லாம் பேச வைக்கிறானுங்க!.
இவனுங்க ரெண்டு பேருக்கு, நடுவுல நடக்கும் சண்டையில் இன்னும் எத்தனை உயிர் தான் போகுமோ தெரிலை!…
அவனாலும், அவன் கூட்டத்தாலும் தான், இன்னைக்கு சென்னை இப்படி கெடுபிடியா இருக்கு…” என்றார் அவர் கோபத்துடன்.
“யார் அங்கிள் அந்தத் தேஜ், லயன் பரணீதரன்?…” என்றாள் சம்யுக்தா கடுப்புடன்.
‘அவர்கள்’ லட்சத்தில் ஒன்றாகக் கடந்து போகும் செய்தி அல்ல.
‘அவர்கள்’ தான், இனி தன் வாழ்க்கையை முடிந்த அளவிற்கு மாற்றி அமைக்கப் போகிறார்கள் என்ற உண்மை, சம்யுக்தாவிற்கு எடுத்துச் சொல்ல யாரும் இல்லாமல் போனது துரதிருஷ்டமே!
‘யாரோ, என்னவோ’ என்று அந்த அளவிற்கு அவர்கள்மேல் கவனம் வைக்காமல், ஏனோ தானோ என்று ஒரு செய்தியைக் கேட்கும் பாவனையில் தான் சம்யுக்தா, ‘அவர்கள் யார்?’ என்ற கேள்வியைஎழுப்பியது.
ஆனால், கவனமாய் இருந்திருக்க வேண்டுமோ!
கடந்து போக, அவர்கள் வெறும் சமூக வலைத் தளங்களில் கேள்விப்படும் செய்தி அல்ல.
தன் வாழ்க்கையை முற்றிலுமாகத் திசை மாற்றப் போகிறவர்கள் என்ற உண்மை அந்த நொடி சம்யுக்தா அறியவில்லை.
தன் திருமணத்திற்கே, லேட்டாக வரும் படி செய்த, ஒரு முகூர்த்தம் தவறி போகக், ஒட்டுமொத்த தமிழக காவல் துறை உஷார் நிலையில் இருக்க, அதனால் மக்களின் மனதில் ஏற்பட்ட ஒரு பதட்டமான நிலைக்குக் காரணமாய் இருந்த, அந்த முகம் தெரியாத தேஜ், பரணி மீது அத்தனை கோபம் வந்தது அவளுக்கு.
விவேக் சொல்வது மாதிரி, ‘போலீஸ் டேக் டைவெர்சன், டேக் டைவெர்சன்’ என்று படுத்திய பாட்டில், இவர்கள் வந்த கார் ஆந்திராவுக்கு செல்லாதது அதிசயமே!.
ஒருவேளை, ‘அந்தத் திருமணம் நடக்க கூடாத ஒன்று, நடந்தாலும் நிலைக்க முடியாத ஒன்று, ஒருவன் இல்லாமல் போகச் செய்யப் போகும் திருமணம் அது’ என்பதால் தான், அதற்கு இத்தனை தடைகள் வந்து சேர்கிறது என்ற உண்மையை யாராவது சம்யுக்தாவிற்கு சொல்லியிருக்கலாம்.
ஆனால், விதியின் ஆட்டம் போல், ஒரு கார் சாலையின் ஓரம் நிறுத்தப்பட்டு இருந்தது.
நான்கு புறமும் சாலை பிரிய, எந்தப் பக்கம் போவது என்று புரியாதவர்களாய் அவர்கள் இறங்கி நின்றார்கள்.
அக்மார்க் ரௌடிகள், அக்மார்க் அரக்கர்கள், எந்தப் பஞ்சமா பாதகத்திற்கும் அஞ்சாதவர்கள், என்ற முத்திரை, அவர்கள் முகத்திலேயே இருந்தது.
யார் இவர்கள்?… யாரை தேடி கொண்டு அங்கே நிற்கிறார்கள்?
யார் அந்தத் தேஜ்?
யார் அந்தப் பரணி?
ஆட்டம் தொடரும்…