UyirthedalNeeyadi27

உயிர் தேடல் நீயடி 27

 

காலையில் இருந்து சமையல் அறையை ரணகளம் ஆக்கிக் கொண்டிருந்தாள் காவ்யா. விபீஸ்வருக்காக இன்று தானே சமைக்கிறேன் பேர்வழி என்று அவனுக்கு பிடித்தவைகளை பட்டியலிட்டு, கலிலை ஒருவழி செய்து, அரைநாளை செலவிட்டு வெறித்தனமாக சமையலை முடித்திருந்தாள்.

அலைப்பேசி ஒலிக்க, விபி தான் அழைத்திருந்தான். சின்ன புன்னகையோடு ஏற்றாள்.

“என் பேபி என்ன பண்ணிட்டு இருக்கு?”

“ம்ம் விபிகாக சமைச்சிட்டு இருக்கு”

“நிஜமா! உனக்கு சமைக்க கூட தெரியுமா?”

“ஏதோ கொஞ்சம் தெரியும், கலில் அண்ணா சொன்ன மாதிரி சமைச்சிருக்கேன்”

“ம்ஹூம் அண்ணா இல்ல, கலில் மட்டும். வேலைக்காரங்களை உறவு கொண்டாடக் கூடாது காவ்யா” அவன் வழக்கத்தை சொல்ல,

“ம்ம் சரி” என்றவளுக்கு தானும் முன்பு அவனுக்கு கீழ் வேலை பார்த்தவள் தான் என்ற எண்ணம் நெருடலாக வந்து போனது.

“என்ன திடீர்னு சமையலெல்லாம்?”

“நாள் முழுக்க சும்மாவே இருக்க போரடிக்குது, அதோட என் கையால உங்களுக்கு சமைச்சு தரணும்னு தோணுச்சு”

“ம்ம் உன் கையால சாப்பாடு மட்டும் தான் கிடைக்குமா?”

“வேற என்ன வேணும்?”

“நிறைய வேணும்…!”

“…”

“கவி…” விபீஸ்வர் குரல் இறங்கி ஒலிக்க,

“உங்களுக்கானது உங்களுகாகவே தான் இருக்கு… ஏத்துக்கிறதும் மறுக்கிறதும் உங்க விருப்பம்” அவள் தவிப்பாய் பதில் தந்தாள்.

“ஆஹான் ஃபிரீ கேஜி பேபி எல்கேஜி தேறிட்ட போல” அவன் கிண்டல் செய்ய,

“பச் வேலைவெட்டி பாக்காம என்ன வெட்டி பேச்சு இங்க, நான் சமைச்சது எப்படி இருக்குனு சாப்பிட்டு சொல்லுங்க போதும்” அவள் படபடவென பொறிய, எதிர் முனையில் அவன் சிரிப்பு சத்தம் சத்தமாகவே கேட்டது.

காவ்யா சமைத்த உணவுகளை அடுக்கி வைத்து கணவனுக்கு அனுப்பி விட்டு வெளியே வர, கூடத்தில் லலிதாம்பிகையும் அவரது தோழியரும் அமர்ந்திருந்தனர். அவர்களை கவனித்து தன்னை அவசரமாக சரிபடுத்திக் கொண்டாள்.

முகத்தின் வியர்வையை முந்தானையில் ஒற்றி எடுத்து, சற்றே ஏற சொருகி இருந்த சேலையை இறக்கிவிட்டு, வரவேற்கும் விதமாக முகம் மலர்ந்து, “வாங்க… வாங்க மேடம்” என்றாள் மரியாதை நிமித்தமாக.

அவளை பார்வையால் அளந்தவர், “இனி நான் மேடம் இல்ல காவ்யா, ஆன்ட்டின்னு கூப்பிடு ஓகே” சந்திரமதி திருத்திச் சொல்ல, “ஓகே ஆன்ட்டி” இவளும் மாற்றிக் கொண்டாள்.

விபீஸ்வரின் நிறுவனத்தில் சந்திரமதியும் அவரது கணவரும் முக்கிய பங்குதாரர்களாக இருப்பதால், காவ்யாவை ஓரளவு தெரிந்திருந்தது.

“பெரிய இடத்து பொண்ணா இருந்தா, நாகரிகமா எப்படி பேசணும் எப்படி பழகணும்னு தெரிஞ்சு இருக்கும்” ஆப்பிள் பழச்சாற்றை‌ பருகிய படி பூங்காவனம் இளப்பமான வார்த்தைகளை வீச,

காவ்யாவிற்கு ‘என்ன இது இப்படி பேசுறாங்க!’ என்று இருந்தது.

“அப்படி சொல்லாத பூங்கா, காவ்யா புத்திசாலி பொண்ணு, வரைமுறை இல்லாம திரிஞ்சுட்டு இருந்த நம்ம விபிய ஓரிடத்தில பிடிச்சு நிறுத்தி இருக்கானா பார்த்துக்க” சந்திரமதி மெச்சுதலாக பேச,

“எத்தனை நாளைக்கு சந்திரா இவளால விபிய கட்டி வச்சிருக்க முடியும்? ஆச அறுபது நாளு மோகம் முப்பது நாளுன்னு சொல்லுவாங்க, ஆக மொத்தம் மூணு மாசம், அதுவரைக்குமாவது நிலைக்குமா இவங்க கல்யாணம்?” சாதாரண பேச்சில் இடியை இறக்கினார் அவர்.

“என்ன பூங்கா? இப்படி சொல்ற?” மகன் வாழ்வை எண்ணி பதற்றமாக லலிதாம்பிகை கேட்க,

“உள்ளதை தான் சொல்றேன் லல்லி, விபி டைம்பாஸ்க்கு பழகவே ஹைகிளாஸ் மாடல் பொண்ணுங்க கூட தான் சுத்திட்டு கிடப்பான். அப்படி பட்டவன் இந்த பொண்ணோட எத்தனை நாளைக்கு அட்ஜஸ் பண்ணிட்டு இருக்க முடியும்?” அவர் கொளுத்தி போட்டது மற்றவர்களிடம் சரியாக பற்றி கொண்டது.

“காவ்யா நீ கொஞ்சம் பார்த்து பக்குவமா நடந்து உன் புருசனை கைக்குள்ள வச்சுக்க பாரு சரியா?” சந்திரமதி தானறிந்த வழிவகைச் சொல்ல,

இவளுக்கு சங்கடமாகி போனது. ‘நான் கைக்குள்ள மடிச்சு வச்சுக்க அவனென்ன கைக்குட்டையா?’ எரிச்சலாகவும் தோன்றியது. அங்கு மேலும் இவ்விதமே பேச்சு வளர,‌ காவ்யா தன் பொறுமையை விட்டிறெரிந்திருந்தாள்.

“ப்ளீஸ்… உங்க அரட்டைக்கு எங்க வாழ்க்கைய பகடை காயா உருட்டாதீங்க” அப்போதும் தன்மையாகவே சொல்ல,

“காவ்யா பொண்ணு, பெரியவங்க புத்தி சொன்னா பொறுமையா கேட்டு நடக்கற வழிய பாரு, இப்படி துள்ளாத” லலிதாம்பிகை மருமகளை அடக்கினார்.

“அதெப்படி அத்த, தப்பான வழில போறது உங்க மகன், புத்திமதி மட்டும் எனக்கா?” அவள் வெடித்து விட்டாள்.

காவ்யா குணத்தில் அமைதியானவள் என்றாலும் எப்போதும் வீண் பேச்சுகளை கேட்டு அதற்கு அடங்கி இருப்பவள் கிடையாது. அவளுக்கு தனக்கான பொறுப்பும் தெரிந்திருந்தது, வெட்டி பேச்சுக்களுக்கு நேராக பதில் தரும் துணிவும் இருந்தது.

விபீஸ்வரின் திமிருக்கே இவள் அடங்கியவள் கிடையாது. அவளின் இந்த குணத்தில் தான் அவன் முதலில் விழுந்ததும் கூட!

“நீங்களும் பெண்கள் தானே கொஞ்சம் கூட தெளிவா யோசிக்க மாட்டீங்களா? அடங்காம தரிகெட்டு போற ஆம்பளைய கேட்க தைரியமில்லாம, வீட்டு பொண்ணுங்களுக்கு புத்தி சொல்றேன்னு அவளையும் கோழை ஆக்குவீங்களா?”

“காவ்யா, மரியாதையா பேசு” லலிதாம்பிகை குரல் அவளை அடக்க முயல,

“உங்க மரியாதைக்கு நான் எந்த பங்கமும் செய்யல அத்த, நானும் உள்ளதை தான் சொல்றேன். மகன் தப்பான வழியில போறான்னு தெரிஞ்சும் அமைதியா இருந்துட்டு,‌ வீட்டு மருமககிட்ட அவனை வழிக்கு கொண்டு வான்னு சொல்றதுல என்ன நியாயம் இருக்கு? நீங்களே யோசிச்சு சொல்லுங்க” காவ்யா கிடுக்கு பிடியில் மூவரும் பதிலின்றி வாய் பூட்டிக் கொண்டனர்.

“இங்க பெண்ணடிமைக்கு முக்கிய காரணம் ஆண்கள் இல்ல, பெண்கள் தான். ‘தப்பு செஞ்சாலும் அவன் ஆம்பளன்ற’ எண்ணம் நம்ம மனசுல ஊறி கிடக்கிற வரைக்கும், ஆம்பிளைங்க தப்பு செஞ்சுட்டே தான் இருப்பாங்க, பெண்களை பெண்களே அடங்கி போ, அட்ஜஸ்ட் பண்ணிட்டு போன்னு புத்தி சொல்லி அடக்கி வச்சுட்டே தான் இருப்பாங்க”

“சாதாரண பெண்கள் இப்படி பேசினா அறியாமைன்னு நினைக்கலாம், சமுதாயத்தில பெரிய இடத்துல இருக்க நீங்களெல்லாம் கூட இப்படி பேசினா அதை என்ன சொல்ல?” வருத்தமாகவே முடிக்க, மற்றவர்கள் முகங்கள் சங்கடம் பூசிக் கொண்டது.

பொது இடங்களில் பெண்ணுரிமை, பெண் தைரியம் என்று ஆவேசமாக பேசிவிட்டு, வீடு என்று வந்ததும் அடங்கி இரு, அனுசரித்து போ என்று அறிவுரையை வாரிவழங்கும் தங்களின் முரண்பாட்டு போக்கு அவர்களை சுடத்தான் செய்தது.

“ஏதாவது தப்பா பேசி இருந்தா மன்னிச்சிடுங்க” மரியாதைக்காக மன்னிப்பும் கேட்டுவிட்டு நகர்ந்து விட்டாள்.

“சரியான அடங்காபிடாரியா இருப்பா போல” பூங்காவனம் சத்தமாகவே முணுமுணுக்க, லலிதாவிற்கு தன் மருமகள் மீதான வெறுப்பு மேலும் அதிகமாகி போனது.

காவ்யா உள்ளம் உலைகளனாக கொதித்து கொண்டிருந்தது. விபீஸ்வரை அதிலிட்டு பொசுக்குவதற்காக!

# # #

புது மனைவி கையால் வெந்நீர் வைத்து தந்தாலும் பானகமாய் இனிக்குமாம்!

அப்படியிருக்க, அவன் காதல் மனையாள் அவனுக்காக வகை வகையாக சமைத்த உணவு ருசிக்காமல் போகுமா என்ன?

நாவில் சுவை கூட்டி தொண்டைக்குழிக்குள் இறங்கும் ஒவ்வொரு கவளமும் தன்னவள் மீதான காதலை இன்னும் இன்னும் கூட செய்வதாய்.

வேகவேகமாய் வேலையை முடித்து தன்னவளை நாடி ஓடி வந்திருந்தான் விபீஸ்வர்.

பால்கனி ஊஞ்சலில் சற்று சாய்ந்தாற் போல் அமர்ந்திருந்தாள் காவ்யா. தழைய விட்டிருந்த சேலையின் மேல் அவள் நீள பின்னல் கோணலாக நெளிந்திருந்து.

‘தன் ஒற்றை கைக்குள் அடங்கிவிடும் ஒடிசலான தேகம், தன்னை என்னவெல்லாம் பாடாய் படுத்துகிறது!’

“ஓய் சோடாபுட்டி” சீண்டலோடு அழைத்தப்படி அருகில் அமர்ந்தவனை எரித்து விடுவது போல பார்த்து வைத்தாள் அவள்.

அவள் தீப்பார்வையில் எரிந்து போவதும் ஒரு சுகமே இவனுக்கு! ஆனால் ஏதோ குறைவது போல தெரிந்தது.

“ஹே நீ ஏன்‌ இப்பெல்லாம் ஸ்பெக்ஸ் யூஸ் பண்றதில்ல?” மிக முக்கியம் போல அவன் கேட்டு வைக்க,

“எதுவும் பேசாதீங்க… இல்ல நானும் ஏதாவது பேசிடுவேன்” முகம் சிவக்க எச்சரித்து திருப்பிக் கொண்டாள்.

அவளின் முகம் திருப்பல் இவனுக்கொன்றும் புதிதில்லையே!

“நீ ஆசையா சமைச்சேன்னு நான் அளவில்லாம சாப்பிட்டுட்டு ஓடி வந்தா இப்படி முகம் திருப்புறியே சோடாபுட்டி”

“என்னை அப்படி கூப்பிடாதீங்கனு சொன்னே இல்ல” என்று அதற்கும் எரிந்து விழுந்தாள்.

“ம்ஹூம் என்னவோ… எனக்கானது எனக்காகவே காத்திட்டிருக்குன்னு சொன்ன! அப்படி எதுவும் இங்க இருக்கிற மாதிரி தெரியலையே” குறும்பாக அவன் இழுக்க,

சடாலென அவனிடம் திரும்பியவள், “நான் உங்களுக்கானவ தான் எடுத்துக்கங்க!” என்று ஆத்திரமாக சொன்னவளின் கண்கள் கலங்கின.

“நாள் கணக்கா, மாச கணக்கா, உங்களுக்கு நான் சலிச்சு போற வரைக்கும்… எடு…த்து…கங்க”

என்னமாதிரியான வார்த்தைகளை நான் பேசுகிறேன் என்று அவளுக்கே அவள் மீது கழிவிரக்கம் தோன்ற உள்ளுக்குள் கசந்தது.

விபீஸ்வரின் முகம் இறுகி போக, அவள் முகத்தில் கூர்மையான பார்வை பதித்தித்தான்.

“நீ என்ன சொல்ல வர காவ்யா?” அழுத்தமாக கேட்டவன் சட்டையை கொத்தாக பிடித்து கொண்டவள், “உங்களுக்கு புரியலையா? இங்க எல்லாத்துக்கும் நீங்க தான் காரணம், நீங்க நினைச்சது மட்டும் தான் நடக்கணும்கிற வீண் பிடிவாதம், உங்க அற்ப ஆசைக்கு நான் சம்மதிக்கலன்ற ஒரே காரணத்துக்காக தான, என்னை இப்போ இந்த நிலைமையில நிறுத்தி வச்சிருக்கீங்க…” ஆவேசமாக பேச, ‘அதற்கும் இதற்கும் ஏன் முடிச்சிடுகிறாள் இவள்?’ என்று கண்கள் சுருங்க பார்த்திருந்தான் அவன்.

“வேணாம், பிடிக்கல, ஒத்துவராதுன்னு அவ்வளோ சொன்னேனே கேட்டிங்களா? இப்ப என்னை ஒண்ணுமே இல்லாம நிக்க வச்சுட்டீங்கில்ல” அவன் சட்டை பிடித்திருந்த தன் கைகள் மீது முகம் பொதித்து அழுது விட,

“காவ்யா ரொம்ப தைரியமானவ, சின்ன விசயத்துக்கெல்லாம் அவ உடைஞ்சு போய் நான் பார்த்தில்ல” விபீஸ்வர் குரல் நிதானமாய் ஒலிக்க, அவள் தன் முகத்தை அழுத்தித் துடைத்து நிமிர்ந்து அமர்ந்து கொண்டாள்.

“இப்ப சொல்லு என்னாச்சு?”

“உங்களுக்கு எல்லாமே சீக்கிரமே போரச்சுடுமாம்! பொண்ணுங்க கூட… நா…நானும் உங்களுக்கு சலிச்சு போயிடுவேனாம்”

“யார் சொன்னது?”

“அதை பத்தி உங்களுக்கு என்ன?”

“ப்ச் சொன்னவங்களை விடு, உனக்கு என்மேல நம்பிக்கை இருக்கா? இல்லையா? அதை சொல்லு”

அவள் தாமதமின்றி இல்லையென்று தலையசைத்தாள்.

விபீஸ்வருக்கு அடிவாங்கிய உணர்வு!

தன் மனைவியின் நம்பிக்கையை சம்பாதிக்க தவறி இருந்தான் அவன்!

முதல் தோல்வி அவன் நெஞ்சை ரணமாக்குவதாய்!

மேலும் எதுவும் பேசவில்லை அங்கிருந்து வெளியேறி விட்டான்.

‘நான் எங்கு தோற்றேன்?’ கேள்விக்கான பதிலை தேடி அலைந்தது அவன் மனமும் அறிவும். அவன் கைகளில் மகிழுந்து வேகமெடுத்து சாலையில் இலக்கின்றி பறந்தது.

தன்னவளுக்காக தன்னை அவன் கரைபடாமல் பாதுகாத்து வைத்துக் கொள்ளவில்லை! அங்கே தோற்றிருந்தான் அவன்.

அவளின் பார்வையிலேயே தன் ஒழுக்கமின்மையை கடைப் பரப்பினான்! அங்கே தோற்றிருந்தான் அவன்.

அவளையே தன் இச்சைக்கு பலியாக கேட்டு நின்றான்! அங்கே தோற்றிருந்தான் அவன்.

‘இத்தனைக்கு பிறகும் பெண்ணவள் எப்படி நம்பிக்கை கொள்வாள் உன்னிடம்?’ அறிவு கேள்வியில் சாட,

‘நான் அவளை உயிருக்கு நேராக நேசிக்கிறேன்!’ மனம் கூக்குரலிட்டு கத்தியது.

நடு இரவு தொடும் நேரம் தான் வீடு திரும்பினான்.

நம்பிக்கை என்ற பிடிமானம் இன்றியே காதலென்ற உயர கட்டிடத்தை அவசரமாய் ஏற்றி இருந்தவன், இப்போது அதில் தள்ளாட்டத்தை உணர்ந்து துடித்து போயிருந்தான்.

தரையில் அமர்ந்து கட்டிலின் மீது தலைசாய்த்து மருகி இருந்தவள், அவன் வரவை உணர்ந்து எழுந்து நின்றாள்.

இருவருக்கும் பேச ஒன்றும் இருக்கவில்லை!

விளக்கணைத்து அவன் படுத்து கொள்ள, இவளும் மறுபுறம் படுத்து கொண்டாள்.

இரவு நகராமல் நீண்டு சென்றது.

உறக்கம் தூர நின்று வேதனை கூட்டியது.

விபீஸ்வர் எழுந்து தூக்க மாத்திரை ஒன்றை வாயில் போட்டுக் கொண்டான். தூங்கிவிட்டால் போதும் என்ற நிலை அவனுக்கு.

“எனக்கும் தூக்கம் வரல சர், தூக்க மாத்திரை தரீங்களா ப்ளீஸ்” சிறு குரலாய் காவ்யா கேட்க, அவன் விரக்தியாக சிரித்து கொண்டான். அவள் முதல் முதலாய் அவனிடம் கேட்பது இது தான்! ஒரு மாத்திரையை அவளிடம் தந்து விட்டு படுத்துக் கொண்டான்.

அன்றிலிருந்து இருவருக்கும் பேச்சு வார்த்தை குறைந்து போனது. ஏன் இல்லாமலேயே போனது.

வெறுமையான நாட்கள் கொடுமையாகவே நகர்ந்தன.

சென்ற மாதம் இன்றைய தினத்தில் அவர்கள் திருமணம் முடிந்திருந்தது. விபீஸ்வர் இன்றைய நாளை பார்ட்டி வைத்து கொண்டாட திட்டமிட்டிருந்தான் முன்பு. இப்போது வெறுமையாக கழிக்க மனம் வரவில்லை அவனுக்கு.

“காவ்யா வெளியே… ஷாப்பிங் எங்காவது போகலாம் கிளம்பு” கிட்டத்தட்ட பத்து நாட்களுக்கு பிறகான அழைப்பு. அவளும் துரிதமாக தயாராகி அவனுடன் கிளம்பினாள்.

அவன் அழைத்து வந்து நிறுத்தியது பிரபல தங்க, வைர நகை மாளிகை. அவள் மனம் சுணங்கியது.

“உனக்கு பிடிச்சதை பார்த்து எடுத்துக்க”

“இல்ல, எனக்கு எதுவும் வேணாம்” என்று அவள் மறுத்து நகர, அவள் கைப்பற்றி நிறுத்தியவன்,

“இன்னைக்கு என்ன நாள்னு தெரியும் இல்ல வாங்கிக்கோ கவி” என்று கெஞ்சலாக சொல்ல, அவளுக்கும் நினைவிருந்தது தான். மேலும் மறுக்க இயலாமல் உள்ளே சென்றாள்.

“வாவ் இந்த மாடல் நல்லா இருக்கு, வேற பீஸ் கிடைக்குமா?” ஆர்வமாக கேட்க, “சாரி மேம், இது லாஸ்ட் ஒன், அவங்க செலக்ட் பண்ணிட்டாங்க” சேல்ஸ்மேன் காவ்யாவை கைக்காட்ட, வர்ஷினி முகம் மலர்ந்தது.

“ஹாய் காவ்யா, எப்படி இருக்க?” வர்ஷினி குரலுக்கு நிமிர்ந்தவள் அவளை நினைவின்றி நெற்றி சுருக்கினாள்.

“உன்ன எனக்கு நல்லா தெரியும், உனக்கு என்னை தெரியாதில்ல” என்று விபி பெண் பார்க்க வந்து செய்த கூத்தைச் சொல்லி முடிக்க, காவ்யா அமைதியாக கேட்டு கொண்டாள்.

“அவன் காதலை ஃபீல் பண்ண உடனே இவ்வளவு சீக்கிரம் மேரேஜ் முடிப்பான்னு எதிர்பார்க்கல, எனிவே ஹேப்பி மேரேஜ் லைஃப்” என்று வாழ்த்த,

”நீங்க தப்பா புரிஞ்சிட்டு இருக்கீங்க! அவருக்கு என்மேல காதலெல்லாம் எதுவும் இல்ல மேடம்… என்னை அடையணும்கிற பிடிவாதம் மட்டும் தான்… அதனால தான் இப்படி எல்லாம் செஞ்சிருக்காரு… எங்க கல்யாண வாழ்க்கை நாள் கணக்கா? மாச கணக்கா?ன்னு தெரியல! ஆனா கூடிய சீக்கிரமே நான் அவருக்கு சலிச்சு போயிடுவேன்… அதுக்கப்புறம் நான் அவருக்கு தேவைபடமாட்டேன்…!” கலக்கமான விழிகளோடு காவ்யதர்ஷினி சொல்ல,

வர்ஷினிக்கு அவளின் பேச்சு அதிர்ச்சியை தந்தது. “ஏன் அப்படி சொல்ற காவ்யா?”

“காதல்னா ஒரு பொண்ணு மேல ஒருதடவை வரணும், பார்க்கிற எல்லா பொண்ணுங்க மேலையும் வந்தா அதுக்கு பேரு வேற” கசந்து சொல்ல,

“சரிதான் உங்ககிட்ட ப்ரபோஸ் பண்ணதுக்கு அப்புறம் விபி எத்தனை பொண்ணுங்க கூட பழகினான்?” வர்ஷினி நேர் பார்வையாக கேட்க, காவ்யா முகம் யோசனை காட்டியது.

அதன் பிறகு அவன் எந்த பெண்ணையும் நாட வில்லையே. எல்லா அலைப்பேசி தொடர்புகளை கூட ஒன்றாக துண்டித்திருந்தான்.

“விபி மேல இவ்வளவு வெறுப்பை சுமந்துகிட்டா அவனை கல்யாணம் பண்ணிகிட்ட?” வர்ஷினி சந்தேகமாக கேட்க, காவ்யா பதிலின்றி பார்வை தாழ்த்தினாள். அவளிடம் இருக்கும் பதில் அத்தனை தெரிவானதாக தோன்றவில்லை.

“ஹே வர்ஷு எப்படி இருக்க?” விபி அவர்கள் அருகில் வந்து இயல்பாக விசாரிக்க,

“அவசரபட்டுட்ட விபி, உன் காதலை காவ்யாவுக்கு புரிய வச்சுட்டு, கல்யாணம் முடிச்சு இருக்கணும், இப்ப எல்லாத்தையும் தலைகீழா குழப்பி வச்சிருக்க பாரு!” என்று வர்ஷினி அவனை கடிந்து விட்டு நிற்காமல் சென்று விட்டாள்.

விபீஸ்வர் காவ்யாவிடம் பார்வையை திருப்ப, அவள் அவனுக்காக தேர்ந்தெடுத்த ப்ரேஸ்லெட்டை அவனிடம் நீட்டினாள். இவனும் அவளுக்காக வைர நெக்லஸ் செட்டை தேர்ந்தெடுத்து இருந்தான்.

‘எனக்காக நீ உனக்காக நான்’ வார்த்தைகள் சேராத அர்த்தங்களை பார்வைகள் பரிமாற தயங்கி விலகின.

திரும்பும் வழியில் கூட இருவருக்கிடையேயும் எந்த பேச்சு வார்த்தையும் இல்லை.

இருவருக்கிடையேயும் உடைக்க முடியாத அசௌகரியமான மௌனம் நிலவி இருந்தது.

வழக்கம் போல் சிக்னலில் கார் நிற்க, இரு கைகளில் ஏந்திய ஒற்றை ரோஜா மலர்களை ஒவ்வொருவரிடமும் வாங்க சொல்லி கெஞ்சிக் கொண்டிருந்தாள் ஒரு சிறு பெண்.

ஒளி மங்கி தெரிந்த குட்டி கண்கள், கருத்து மெலிந்திருந்த தேகம், முள்ளோடு சேர்ந்த அழகான ரோஜாக்களை விற்று காசாக்க பரிதாபமாக கெஞ்சிக் கொண்டிருந்தாள் அந்த அழுக்கு சட்டை சிறுபெண்.

காவ்யாவின் பார்வை அவளிடமே இருப்பதை கவனித்த விபீஸ்வர் கார் கண்ணாடியை திறந்து அப்பெண்ணை அருகழைத்தான்.

வெட்ட வெயிலில் வெறுங்காலில் அவன் காரிடம் ஓடிவந்து நின்ற அச்சிறுமி, “எத்தனை பூ சார் வேணும்?” என்றாள் குரலில் ஆர்வத்தைத் தேக்கி.

“எல்லா பூவையும் கொடும்மா” என்றவன் பணதாளை நீட்ட, “என்னாண்ட சில்ற இல்லயே சார்” என்று தயக்கம் காட்டியது.

“எனக்கு சேன்ஜ் வேண்டாம், இந்த ப்ளவர்ஸ்ஸை அவங்கிட்ட நீ கொடுத்தா மட்டும் போதும்” என்று காவ்யாவை கண்காட்ட, அந்தச் சிறுமி பணத்தை பெற்றுக் கொண்டு காரை சுற்றி வந்து, காவ்யாவிடம் புன்னகை தளும்ப பூக்குவியலை தந்து விட்டு சென்றாள்.

காவ்யாவின் முகத்திலும் புன்னகை அரும்பி நிற்க கணவனை ஏறிட்டு, “தேங்க்ஸ்” என்றாள்.

“எதுக்கு தேங்க்ஸ்?” காரை செலுத்தியபடி விபீஸ்வர் கேட்க, “பூ வாங்கி கொடுத்ததுக்கு” என்றாள்.

“ஐயடா, டைமண்ட் செட் வாங்கி தந்ததுக்கு தேங்க்ஸ் இல்லையாம், வெறும் பூ வாங்கி தந்ததுக்கு தேங்க்ஸ்ஸாம்!” அவன் கிண்டலாகவே இழுக்க,

“அதுல உங்க ஆடம்பரம் தான் தெரிஞ்சது, இதுல உங்க அன்பு தெரியுது” மென்மையாய் பதில் தந்தாள்.

விபீஸ்வர் அவளை திரும்பி பார்க்க, காவ்யா பூக்களை ரசனையோடு வருடி தந்திருந்தாள்.

“உன்ன மட்டும் யார் இப்படி வளர்த்து விட்டது?” அவன் சலிப்பான கேள்விக்கு, “எங்க அப்பா” இதமாய் பதில் சொன்னாள்.

“உன் அப்பாவ உனக்கு ரொம்ப பிடிக்குமா?” தன் தந்தையின் நினைவோடு விபீஸ்வர் வாஞ்சையாய் கேட்க அவள், “ம்ம்” என்று ஆமோதித்து தலையசைத்தாள்.

“எவ்வளவு பிடிக்கும்!” எந்த சூழலிலும் அவளுடன் பேச்சு வளர்ப்பதில் அலாதி சுகம் இவனுக்கு.

அவன் முகத்தை நேராய் பார்த்தவள், “உங்களுக்கு உங்க அப்பாவ எவ்வளவு பிடிக்குமோ, எனக்கும் எங்க அப்பாவ‌ அவ்வளவு பிடிக்கும்” என்றாள்.

காரை ஓரங்கட்டி நிறுத்தியவன் அவளின் கன்னத்தில் அழுத்தமாக இதழொற்றி எடுத்து மீண்டும் காரை கிளப்பினான். காவ்யா திருதிருத்து அவனை பார்த்திருந்தாள்.

# # #

உயிர் தேடல் நீளும்…

error: Content is protected !!