VanavilVazhkai4(2)

வானவில் வாழ்க்கை 4 (2)

 

நல்லபடியாகத் தேர்வும் முடிந்தது. யார் நல்லா எழுதியிருக்காங்களோ இல்லையோ நாங்கள் ஐவரும் அருமையாக எழுதினோம்.ஐந்து பேரும் அடுத்து என்ன கோர்ஸ் எடுப்பது என்று யோசித்து கம்ப்யூட்டர் சையின்ஸ் எடுக்கலாம். இல்லை பயோ மேத்ஸ் ம்ம் இல்லை ப்யூர் சையின்ஸ், இல்லை பர்ஸ்ட் குரூப் என்று பேசிக் குழம்பிப் போய் சரி ரிசல்ட் வந்தவுடனே பார்ப்போம் என்று பிரிந்து வந்தோம்.

அடுத்து விடுமுறை என்பதால் வீட்டில் வேலை எல்லாம் நானே பார்க்கத் தொடங்கினேன். அப்பாவை அதிகம் வீட்டு வேலை செய்யவிடலை நான். காலையில் அப்பாவுக்கு டிபன் செய்து கொடுத்து அனுப்பி விட்டு, வீட்டு வேலை முடித்து சாப்பாடு செய்து கடைக்கு எடுத்துச் சென்று விடுவேன். அப்பாவை சாப்பிட்டு கொஞ்ச நேரம் ஓய்வெடுக்கச் சொல்லி விட்டு, நான் கடையைப் பார்த்துக் கொள்வேன்.

சாயந்திரன் ஏழு மணி போல் சைக்கிளை எடுத்துக் கொண்டு வீட்டுக்கு வந்து விடுவேன். அதுக்கப்புறம் துணி மடிக்கிறது, மாவு அரைத்து வைப்பது, இராத்திரிக்கு டிபன் செய்து முடித்து விட்டு டீவியைப் போட்டு உட்கார்ந்து விடுவேன்.

அப்பா வந்தவுடன் இருவரும் சாப்பிடுவோம். கிச்சனை சுத்தம் செய்து விட்டு அப்பாவும் நானும் ஏதாவது படமோ காமெடி நியூஸ்னு போட்டுப் பார்த்து கமெண்ட் பண்ணி சிரிப்போம். ரிசல்ட் வந்தது. ஐந்து பேரும் ஐநூறுக்கு ஐநூறு எடுத்திருந்தோம். ஸ்கூலில் அனைவரும் பாராட்டினார்கள்.

நிர்வாகம் எங்களுக்கு அடுத்த இரண்டு ஆண்டுக்கான அத்தனை கட்டணத்தையும் ஏற்றுக் கொண்டது. அன்று எங்கள் ஐந்து குடும்பமும் சினிமா பீச்னு சுத்திட்டு பிரிந்தோம். அப்பா எனக்கு நிறைய சுடிதார், பாவாடை, தாவணினு எடுத்து குவித்தார்.

நகைக் கடைக்கு அழைத்துச் சென்று கம்மல், ஜெயின், ஆரம், நெக்லஸ்னு எடுத்தார். எதுக்குப்பா இவ்வளவு பணத்தை செலவு பண்றீங்கனு கேட்டேன். இது உனக்காக சேர்த்த பணம். அதனால் வாங்குகிறேன் என்றார். கடைசியில் கைக்கு வளையல் வாங்கிக் கொண்டு ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு வீடு வந்து சேர்ந்தோம். வளையலும் வாங்கிக் கொண்டு ஹோட்டலிலேயே சாப்பிட்டு விட்டு வீட்டுக்கு வந்து சேர்ந்தோம். அதற்கப் பிறகு ஸ்கூல் திறந்தார்கள்.

நாங்கள் ஐவரும் என்ன குரூப் எடுக்கிறதுனு யோசிச்சிட்டு இருந்தோம். அப்போ தான் எங்க குடும்பத்திலே நீங்க என்னவாகனும்னு ஆசைப்படுறீங்க என்று கேட்டனர். ஐவரும் ஐஏஎஸ் என்று கூறினோம். பிரின்சிப்பல் ஆசிரியர்கள் எல்லாம் பர்ஸ்ட் குரூப் உங்களுக்கு. போய் அந்த வகுப்பில் உட்காருங்க என்றனர்.

அனைவரும் அந்த வகுப்பில் போய் உட்கார்ந்தோம். அடுத்து புத்தகங்கள் சீருடைகள் எல்லாம் வழங்கப் பட்டது. அப்பா கழுத்தில் டாலர் ஜெயினையும் கையில் வளையல்களையும் போட்டு விட்டு அனுப்பினார்.

வகுப்பில் என்னை எல்லோரும் சரியான அப்பா கோண்டு என்பார்கள். நானும் ஆமா நான் அப்பா கோண்டு தான். எனக்கு எங்க அப்பா தான் உயிர் என்பேன். ஐந்து பேரும் ஒன்றாகத் தான் இருந்தோம். நன்றாகத் தான் வாழ்க்கை இருந்தது.

ஆனால் திடீர்னு நிர்வாகியின் பேரன்கள் என்று சொல்லி நான்கு பேர் தஞ்சாவூரிலிருந்து வந்து சேர்ந்தனர். அவனுக யார் என்று தெரியாமல் இந்த வகுப்பு பசங்களும் “ ஏய் நீங்க புதுசா கூலுக்கு “என்றனர். ஆமாம் என்றனர். அப்போ எங்களுக்கு வணக்கம் சொல்லு. உங்க பேரைச் சொல்லுங்க என்று சொன்னார்கள்.
என் பேர் “ மோகன்,” அடுத்து அவன் “செந்தில்” அடுத்து அவன் “ கணேஷ்”, அடுத்து அவன் “சிவா”, என்றான். அடுத்து ஏதாவது பாட்டு பாடு டான்ஸ் ஆடு என்று வம்பு வளர்த்தார்கள். டேய் அடங்குங்கடா என்று அமிர்தா சொன்னாள். ஏய் உனக்கென்ன.
நாங்கள் அவனுகளைத் தானே கேட்கிறோம். நீ என்ன இடையிலே நாட்டாமைனு கேட்டானுக. எல்சி சொன்னவன் மேலே நோட்டைத் தூக்கி எறிஞ்சா. ஆனால் எதையும் சட்டை பண்ணாமல் நாங்கள் சொல்றதைச் செய் என்று சொன்னார்கள். அவனுக அசராமல் பாடிக்கிட்டே ஆடிக்கிட்டு பின்னால் இருந்த பென்ச்சில் உட்கார்ந்தார்கள். இப்போ சொல்றோம் கேட்டுக்கோங்க “ இது எங்க தாத்தா கட்டிய ஸ்கூல்”. எவனாவது எங்களைச் சீண்டீனீங்க அவ்வளவு தான் என்று சொன்னார்கள். நாங்க எல்லோரும் இவனுகளைப் பார்த்து நக்கலா சிரிச்சோம்.

அதுக்கப்புறம் ஆசிரியர் வந்து இப்போ நான்கு பேர் புதுசா வந்தவங்க எழுந்து நில்லுங்க என்றார். அவனுகளும் எழுந்து நின்றார்கள். பழைய ஸ்கூலில் மாதிரி இங்கே எதுவும் நடக்கக் கூடாதுனு தான் உங்களை இங்கே சேர்த்திக்காங்க. ஒழுங்கா வாலைச் சுருட்டி வைச்சிட்டு படிக்கிற வேலையை மட்டும் பாருங்க.

அன்னன்னிக்கு கொடுக்கிற ஹோம் ஒர்க் முடிச்சாகனும் என்று சொன்னார். ஆமாங்கடா இல்லைனா இங்கே நம்மை டின்னு கட்டிடுவாங்க அப்படினு பசங்க சொல்ல அடுத்து அமலா அவள் வாட்டர் பாட்டிலைத் தூக்கி அவன் மேல் எறிந்தாள். அவ்வளவு தான் வகுப்பே அமைதியானது. ஆமாம் இருக்கிற பொண்ணுகளிலேயே அமிர்தாவும் அமலாவும் கொஞ்சம் துடுக்குத்தனம் உள்ளவர்கள்.

அதனால் வகுப்பில் அதிக கலாட்டா இருக்காது. அப்புறம் ஆசிரியர்கள் வகுப்பு எடுக்க வகுப்பறை அமைதியானது. இங்கே எல்லாரும் இப்படி இருக்க புதுசா வந்த நால்வரும் பின்னால் தூங்கிட்டு இருந்திருக்காங்க. இதை ஆசிரியர் பார்த்துட்டு பின்னி எடுத்து விட்டார். நிர்வாகி, பிரின்சிப்பாலிடம் இந்த விசயம் போயிருக்கு.

அங்கே என்ன நடந்ததோ தெரியலை, அவனுக முகத்தைப் பார்க்கவே பயமா இருந்தது. நாங்கள் எங்க வேலையைப் பார்த்துட்டு இருந்துட்டோம். நாட்கள் வேகமாக உருண்டோட மாதத் தேர்வு வந்தது. எல்லோரும் நல்ல மதிப்பெண்கள் எடுத்திருக்க, அந்த நான்கு பேரும் அனைத்துப் பாடங்களிலும் பெயில் ஆகியிருந்தார்கள்.
அதுக்கும் அடி, திட்டுனு விழுந்தது. நாட்கள் வேகமாக ஓடி இறுதித் தேர்வும் வந்தது. அனைத்து எக்ஸாமும் நல்லபடியாக எழுதி முடித்தோம். விடுமுறை விடவும் வழக்கம் போல் என் வேலை தொடர்ந்தது. கடையில் அப்பாவிற்கு உதவுவது, வீட்டு வேலை என்றிருந்தோம்.

 

ஒரு நாள் என் அப்பாவிடம் ஏம்ப்பா நாம எங்கேயாவது வெளியூர் போயிட்டு வந்தால் என்ன? ஒரே கடை, வீடு, ஸ்கூலுமா இருந்து போரடிக்குதுப்பானு சொன்னேன். இதையே என் ப்ரண்ட்ஸ்களும் வீட்டில் சொல்ல எல்லோரும் கலந்து பேசி ஒரு வேன் எடுத்து “தஞ்சாவூர், திருச்சி, கொடைக்கானல், கன்னியாகுமரி”, எனச் சுற்றினோம். ஒருத்தருக்கொருத்தர் கிப்டா வளையல், சாக்லேட், டீத்தூள்,அது இதுனு எங்க அப்பாக்களின் பர்சைக் காலி செய்தோம்.

ஒவ்வொரு அம்மாக்களும் எனக்கு பேக், பர்ஸ், டிரஸ் என்று வாங்கிக் கொடுக்க அப்பாவும் அவர்களுக்கும் வாங்கிக் கொடுத்தார். ஒரு வழியா டூர் முடிஞ்சு வந்தோம். ஸ்கூல் திறக்கப்பட்டது. நானும் எப்போதும் போல சந்தோசமாகப் பள்ளிக்குச் சென்றேன்.

ஆனால் இந்த வருடத்துடன் என் வாழ்க்கை அஸ்தமிக்கப் போகிறது என்று யாரும் எதிர் பார்க்கவில்லை. அது தெரிந்திருந்தால் நாங்கள் அந்தப் பசங்களை எங்களோடு சேர்த்திருக்கவே மாட்டோம். விதியை யாரால் வெல்ல முடியும். வழக்கம் போல் வகுப்புகள் தொடங்கின. பப்ளிக் எக்ஸாம் என்பதோடு இந்த வருடம் தான் எங்கள் கனவையும் நிறைவேற்றும் என்ற உத்வேகத்தோடு படிக்க ஆரம்பித்தோம்.

வானவில் வளரும்