varaga 13

ருத்ராவிற்கு உண்மை தெரிய போகும் நிச்சியதார்த்த நாளும் கலர் கலராக விடிந்தது.

ஏற்கனவே காரில் கிளம்பி வந்து கொண்டிருந்த மாப்பிள்ளை வீட்டினர் அனைவரும் சந்தோசமாக உரையாட… ஒரு ஜீவன் மட்டும் ஒன்றும் செய்யாமல்.., செய்யத்தோன்றாமல், கண்மூடி சீட்டில் சயனித்திருந்தது… நீங்கள் நினைப்பது சரி தான் முகிலன் தான் அது…

வீட்டினர் அவனை கார் ஓட்டவேண்டாமென்று கூற… அவனிற்கும் அது சரியென்று தோன்றவே டஸ்டரை தவிர்த்தான். குடும்பத்திற்கு பொதுவான காரான பஜெரோவில் டிரைவர் காரோட்ட அனைவரும் கிளம்பியிருந்தனர்.

இனி இவர்களை பெரியகுளம் வந்த பிறகு பார்த்துக்கொள்ளலாம்.

இரண்டு நாளாக அனாவசியமாக அன்றி கீழே இறங்காமல் இருந்த சகோதரிகள் இருவருக்கும் சலிப்பாக இருந்தது.

முத்ராதான்,

“என்ன ருத்ரா இந்த அத்தைக்கெல்லாம் பயப்பட வேண்டிய நிலைமைல இருக்கிறோம்…”

என்று புலம்ப…

ருத்ராவும்

“அது ஏன் குட்டிமா அப்படி யோசிக்குற… நம்மகிட்ட இருந்து அத்தைய காப்பாத்த கூட அம்மாவும் அப்பாவும் நம்மள மேலேயே இருக்க சொல்லிருக்க சான்ஸ் இருக்கு தெரியுமா..”

என்று இல்லாத காலரை தூக்கிவிட்டு வேடிக்கையாக கூறனாள்.

அவர்களுக்கு சிரிப்பு பொங்கிக்கொண்டு வர… கலகலவென்ற அவர்களது சிரிப்பு சத்தம் அறையை நிறைத்தது…

ருத்ரா இனி இதுபோல் மனம் விட்டு சிரிக்க நாளாகலாம்… நன்றாக சிரித்துக்கொள்ளட்டுமே.

இரு நாட்கள் முன்னே கருணாகரன் தன் தங்கை வீட்டிற்கு சென்று ஒருவாறு தெய்வத்தை சமாளித்து அழைத்து வந்திருந்தார். சீதாவிற்கு அவர் வரவு கலக்கத்தை அளித்தாலும் அதனை கணவரிடம் சொல்லி நல்ல நாளும் அதுவுமாக தங்களுக்குள் பிரச்சனை வருவதை விரும்பவில்லை.

தெய்வமோ… வேறு வழியின்றி இதற்கு மேலும் அடம் பிடித்தால், எப்படியோ போ என்று சகோதரன் தண்ணீர் தெளித்து விட்டுவிடுவாரோ என்று பயந்து வந்திருந்தார். என்றாலும் தனது கெத்தை விட்டுக்கொடுக்கவில்லை.

ருத்ராவை எங்காவது பார்த்தால், கடித்து குதறும் மனநிலையில் இருந்தார் என்றால் மிகையல்ல.

ஆனால் இவரால் ருத்ராவை தனியாக சந்திக்க முடியவில்லை. எப்பொதும் தங்கையுடனும், மேலேயும் அவள் இருக்க… இதுவரை அவரிற்கு அத்தகைய வாய்ப்பு கிடைக்கவில்லை.

வழக்கம் போல் இருவரும் கிளம்பி ஆற்றுக்கு செல்லும் நேரம்… அவர்களது தாய் சீதா திருவாய் மலர்ந்தார்…

“எங்கடி கிளம்புறிங்க…? இன்று கூடவா ஆற்றுக்கு போகணும்…? நிச்சியதார்த்தத்த வச்சிட்டு ஏன் ருத்ரா இப்படி அலையுற…? மாப்பிள்ளை வீட்டுகாரங்க கிளம்பியாச்சாம்… நீ எப்போ தயாராகி எப்போ நிச்சியம் பண்ண…? வீட்டிலேயே கிளம்புங்க… முத்ரா!!! நீதான் உங்க அக்காவ அலங்காரம் பண்ணனும்…”

என்று படபட வென்று பேசி அடுப்படிக்கு நகர…

அக்கா தங்கையில் யாருக்கு உச்சபட்ச அதிர்ச்சி என்று சொல்வதற்கில்லை. இருவரும் சிலையாக அவரவர் எண்ணங்களில் எவ்வளவு நேரம் இருந்தார்களோ…

வெளியே சென்று வந்த கருணாகரன்.. இவர்கள் அருகில் வந்தார்… இத்தனை நாள் அனைவருக்கும் செய்தி சொல்லி, முக்கிய சொந்தங்களை அழைத்து, பரசுவ விட்டுட்டியே என்று சண்டையும் வம்பும் செய்தவர்களை சமாளித்து இப்போது தான் அவர் ஓய்வாக இருந்தார்.

சிலையாய் இருந்த தன் புதல்விகளை கண்டவர்… “என்னமா இங்கயே நிற்குறீங்க ரெண்டு பேரும்… அம்மா எதாச்சும் திட்டிட்டாளா…?”

என்றார் பரிவாக…

ருத்ரா என்னும் சிலைக்கு அப்போது உயிர் வர… அதிர்ச்சி போய் அந்த இடத்தை கோபம் ஆக்கிரமிக்க ஆரம்பித்தது. என்னிடம் கேட்காமல் எப்படி என் கல்யாணத்தை முடிவு பண்ணலாம் என்ற தார்மீக கோபம் அவளிற்கு வர…

“என்னப்பா இதெல்லாம்…”

என்று புயலை உள்ளடக்கிய குரலில் கேட்டாள்.

அந்த குரலை மகளுக்கு கல்யாணம் கூடி வரும் சந்தோஷத்தில் கவனிக்காதவர்… தன் சந்தோசத்தை கூற ஆரம்பித்தார்.

“என்னடா.. எல்லாம் உன் கல்யாணத்திற்கான ஏற்பாடு தான்… சம்மதம் சொன்னா மட்டும் போதுமா… மற்ற வேலையெல்லாம் யாரு பாக்குறது… பத்தாததிற்கு உங்க ரெண்டு பேர் ஜாதகத்திற்கும் சீக்கிரம் கல்யாணம் பண்ணுனா தான் நல்லதுன்னு ஜோசியர் சொல்லிட்டார்…அதான் இவ்வளவு சீக்கிரமா நடத்த வேண்டியதா போச்சி”

என்று என்னமோ அவர் மகள் ஏன் சீக்கிரம் நிச்சியம் செய்கிறீங்க என்று கேட்டது போல் விளக்கம் குடுத்தார்.

இப்பொது தான் ருத்ராவிற்கு தான் அவசரப்பட்டு சம்மதம் சொன்னது நினைவுக்கு வந்தது… ஆந்திரா போனால் போதும் என்ற ஆர்வத்தில் சரி சொன்னது இப்படி ஒரு சிக்கலில் கொண்டு விடும் என்று அவள் சத்தியமாக எதிர்பார்க்கவில்லை.

முத்ராவை திரும்பி பார்த்தால், அவள் இது அனைத்திற்கும் தான் தான் காரணம் என்று உணர்ந்து…  அழும் நிலையில் இருந்தாள்.

முகிலனும் ஆந்திரா போக உனது தந்தையிடம் பேசுகிறேன் என்று சொல்லி திருமணம் பேசியிருக்கிறான் என்று எண்ணி ஆத்திரத்தை அடக்க வழியின்றி தவிக்க ஆரம்பித்தாள்.

பின்னர் தாய் சொன்னதை மீறி வராக நதி நோக்கி யாரிடமும் பேசாமல் கிளம்பிவிட்டாள்.

அவள் மனமோ ஆவேசம் வந்த சாமியாக ஆடிக்கொண்டிருந்தது. ( சீக்கிரம் போய் குதிச்சு குறைமா கோபத்தை… எனக்கே பயமா இருக்கு…)

இங்கே வீட்டில் அப்பாவையும் அம்மாவையும் சமாளித்து ருத்ராவிற்கும் சேர்த்து திட்டியதை இவள் வாங்கி… கிளம்பி தமக்கையை தேட.. ருத்ரா கண்ணுக்கெட்டிய தூரம் வரை கண்ணில் படாமல் மறைந்திருந்தாள்.

முத்ரா ஆற்றை அடைந்ததும் கண்டது பேய்த்தனமாக நீச்சல் அடிக்கும் ருத்ராவை தான்.. அதை கண்டு இவள்..

“அக்கா… சாரிக்கா… நான் இப்படி ஆகும்ன்னு நினைக்கலை… முகிலன் சார் அப்பா பேசுனாங்க அப்படின்னு நம்ம அப்பா சொல்லும்போதே யோசிச்சிருக்கணும்… நான் வேண்டும்மென்றால் அப்பாக்கிட்ட பேசட்டுமா…?”

இவள் பேசியதிற்கு எந்த எதிர்வினையும் இல்லாமல் ருத்ரா பாட்டிற்கு நீந்தவும்… முத்ராவும் நீரில் பாய்ந்தாள்.

அவள் போகும் இடமெல்லாம் தங்கை போய் குறுக்கிட… ருத்ரா முறைத்ததற்கும் அஞ்சாமல்…

“என்னை என்ன பண்ண தோணுதோ பண்ணிக்கோ… ஆனா பேசாம மட்டும் இருக்காத சொல்லிட்டேன்… நான் என்ன வேணும்னேவா பண்ணுனேன்…?”

என்று நியாயம் கேட்டாள்.

தவறு இருவரிடமும் இருப்பதால்,

“இப்போ என்னடி பிரச்சனை உனக்கு.. ஒழுங்கா என்னை  யோசிக்க விடு.. நானே அந்த கார்முகிலன என்ன பண்ணினா தகும்னு யோசிக்குறேன்… இவ வேற..”

என்றுவிட்டு கோபம் குறைந்ததால் கரையேற…

நம்ம மீது கோபம் இல்லை… அது வரைக்கும் போதும் என்று எண்ணிய முத்ரா… பாவம் மாமா என்று நினைக்கவும் தவறவில்லை. அப்போதுதான் திடீரென்று முகிலனை மாமா என்று நினைத்தது முத்ராவை ஜெர்க் அடைய செய்ய… இதுக்கு மேல நாம வாய் மூடி இருப்பது உத்தமம் என்ற நல்ல முடிவுக்கு வந்தாள்.

இவர்கள் வீட்டிற்கு வரும் நேரம்… சீதா…

“அப்படி என்ன சொல் பேச்சு கேட்க கூடாதுன்னு புத்தி… இதே தான..”

என்று மேலும் எதோ கூற வர…

முத்ரா தான் இடையில் நுழைந்து…

“யம்மா.. ஏன்மா வந்தாலும் கத்துற.. வராட்டாலும் கத்துற… இப்போ நாங்க போய் ரெடி ஆகுறதா..? வேண்டாமா…?”

என்று கேட்க..

“இன்னும் ஒரு மணிநேரத்துல அவங்க வந்துருவாங்க.. அவங்களே அவங்க கடையில் இருந்து நல்ல டிசைன்னா இருக்குற  பட்டுப்புடவை எடுத்துட்டு வரோம்ன்னு சொல்லிடாங்க.. அவங்க கொண்டு வர புடவைய கட்டுனா போதும்… நீங்க அதை தவிர, வேற என்ன வேலை இருக்கோ… அதேல்லாம் பாருங்க…” என்றார்.

முத்ராதான் அப்போதும் விடாமல்,

“அவங்க புடவை அவங்க கடையில் இருந்து எடுத்துட்டு வராங்க.. ஓகே மா.. பட்.. அக்காவோட பிளவுஸ் அவங்க வாங்கிட்டு வரதுக்கு சரியா இல்லைனா என்ன பண்ணறது…?”

என்று அதிமுக்கியமான சந்தேகத்தை கேட்டாள்.

ருத்ராவோ இவள் நம்மள கல்யாணம் பண்ணி வச்சிட்டு தான் ஓய்வா போல.. என்று எண்ணி தங்கையை முறைத்தாள். அதை பார்த்த முத்ரா கப்பென்று வாய்மூடி கொண்டாள்.

அதற்கு சீதா..

“நீயே யோசிக்கும் போது நாங்க யோசிக்க மாட்டோமா… அவகிட்ட இருக்குறதே ரெண்டு கலர் பட்டுப்புடவைதான்… சம்பந்தி போன் பண்ணி கேட்டதும் சொல்லிட்டேன்… நாங்க ஒரு 10 புடவை எடுத்துட்டு வரோம்.. நீங்க பாத்து எடுத்துக்கோங்கன்னு சொல்லிட்டாங்க…”

என்று கூறி இடத்தை காலி செய்தார்.

அடுத்த ஒரு மணி நேரத்தில் பஜெரோ அந்த வீட்டின் முன் வந்து நின்றது.  

அவர்களை வாசலுக்கு வந்து வரவேற்றனர் கருணாகரன் – சீதா தம்பதியினர்.

அனைவரும் ஒருவரை ஒருவர் நலம் விசாரித்து உள்ளே நுழைந்ததும்… டிரைவர் 7 தாம்பூலங்களும், 10 புடவை உள்ள பெட்டியையும் கொண்டு வைத்துவிட்டு சென்றார்.

பின்னர் சீதாவே ருத்ராவிடம் உள்ள பிளவுஸிற்கு சரியாக உள்ள புடவையை தேர்ந்தெடுத்து… அதை அபிராமியிடம் கொடுக்க… அபிராமியும் அதை வாங்கி தாம்பூலம் மேலே வைத்தார்.

நல்ல நேரம் தொடங்கவும் தாம்பூலம் மாற்றிக் கொண்டனர் முகிலன் மற்றும் ருத்ரா குடும்பத்தினர்.

பின்னர் அதில் உள்ள புடவையை உடுத்தி முத்ராவின் அலங்காரமில்லா அலங்காரத்தில் வான்தேவதை என ருத்ரா இறங்கி வர…ஆண் பெண் வித்தியாசமின்றி அனைவரும் வியந்து பார்த்தனர்.

முகிலனும் தன்னை மீறி சில நொடிகள் அவளை பார்த்தான்… பின் எல்லார் பார்வையும் தன்மீது இருப்பதை அறிந்து கண்களை பிடித்து இழுத்து சுவற்றில் ஒட்ட வைத்தான்.

அவ்வளவு தான்… அதன் பின் அவளை அவன் நிமிர்ந்து பார்க்கவில்லை. ருத்ராவோ நிமிரவே இல்லை.

பின் இருவரும் அருகருகில் அமர வைக்கப்பட்டு மாலையை கழுத்தில் சூடி.. பால், பழம் ஆகியவை  இருவருக்கும் கொடுத்து.. என நிச்சிய தாம்பூல சடங்குகள் இனிமையாக முடிந்தன.

கார்த்திகாயினியும் கார்த்திகேயனும் இத்தகைய நிகழ்வுகளை நன்றாக வளைத்து வளைத்து போட்டோ எடுத்து கொண்டிருந்தனர். கார்த்திக், முத்ரா அருகில் நெருங்கும் போதெல்லாம் போனை இறுக பற்றிக்கொண்டான். அது என்னமோ அவளை பார்த்தாலே அவனின் போனிற்கு ஆபத்து என்று தோன்றுவது தான் விந்தையிலும் விந்தை.  

பின் அனைவரும் அவர்களை ஆசிர்வாதம் செய்ய… கார்த்திக் முகிலனிடம் மோதிரத்தை தந்தான்… அதே போல் சீதாவிடம் இருந்து முத்ரா மோதிரம் வாங்கி தனது தமக்கையிடம் தர… முகிலன் ருத்ராவின் கை பற்றி மோதிரத்தை அணிவித்தான்.

மோதிரம் மாற்றுகையில், எதேச்சையாக ருத்ராவின் முகத்தை நிமிர்ந்து பார்த்த முகிலன் துணுக்குற்றான். ருத்ராவின் கண்கள் இரண்டும் அவனை குற்றம் சாற்றிக்கொண்டு இருந்தன. அதை பார்த்ததும் ஏன் இவள் இப்படி பார்க்கிறாள் என்பதையும் மீறி… இவன் மனது அவளுக்கும் விருப்பம் இல்லை என்று சந்தோசப்படுவதா…? இல்லை துக்கப்படுவதா..? என்று தெரியாமல் இரண்டுங்கெட்டான்  நிலையில் குழம்ப தொடங்கியது.

ருத்ராவும் அவன் கையை தொடாமல் தொட்டு மோதிரமிட… அவர்களின் பாதி கல்யாணம் உறுதி படுத்தப்பட்டுவிட்டது.

பின் உறவினர்கள் அனைவரும் விருந்து உண்ண கலைந்து செல்ல… முகிலனிற்கோ அவள் ஏன் அவ்வாறு பார்த்தாள் என்று தெரிஞ்சே ஆக வேண்டிய நிலைமை… என்ன செய்வது என்று சுற்றும் முற்றும் பார்த்தவன்… ருத்ரா அவள் அறைக்கு திரும்பி செல்வதற்காக மாடிப்படி ஏறவும்… பக்கத்தில் இருந்த கருணாகரனிடம்..,

“அங்கிள்… நான் ருத்ராகிட்ட வேலை விசியமா கொஞ்சம் பேசணும்… பேசலாமா…?”

என்று கேட்டுவிட்டான்.

அதை கேட்ட ருத்ரா… நடப்பதை நிறுத்தியிருந்தாள்… மற்றவர்கள் நமுட்டு சிரிப்போடு கருணாகரனை பார்த்தனர். (அட நீங்க வேற… அவங்க என்ன காதலாவா பேச போறாங்க..)

முகிலன் குடும்பம் தான் அவனை சந்தேகமாக பார்த்தது..

“இவன் நிஜமாகவே தொழில் பத்தி தான் பேச போகிறானா…? இல்ல வேற எதாவது பேசி கல்யாணத்தை நிறுத்த போகிறானா…?”

என்று

ஒருவாறு கருணாகரன் அனுமதி குடுக்க…

“நாங்க தோட்டத்தில் இருக்கோம்…”

என்றவாறு முன்வாசல் பார்த்து கிளம்பிவிட்டான். ருத்ராவும் அவன் மீது உள்ள கோபத்தை அவன் மீதே காட்ட முகிலனை பின்தொடர்ந்தாள்.

யாருமில்லாத தோட்டத்தில் முகிலன் நடந்து கொண்டிருக்க… அவன் நிற்பான் நிற்பான் என்று பார்த்த ருத்ரா அவன் நடந்துக்கொண்டே இருக்கவும்…

“வாக்கிங் போகணும்ன்னா தனியா போக வேண்டியது தான..? இதுக்கு எதுக்கு என்னை கூப்பிட்டீங்க…”

என்று நக்கலா கோபமா என்று பிரித்தறிய முடியாத குரலில் கேட்க.

அவன் நின்று அவளை திரும்பி முறைத்தான்… யாரும் இவனிடம் இப்படி பேசாததால் சட்டேன்று கோபம் வந்திருந்தது. (சுத்தம்…)

“நடந்துட்டே கூட பேசலாம்… அது தெரியலனா நின்று பேசலாம்னு சொல்லணும் அத விட்டுட்டு…”

என்று பாதியில் நிறுத்தியவன்… வந்த வேலையை விட்டுவிட்டு பேச்சு வேறு எங்கோ போகவும்.. சுதாரித்தான்.

“உனக்கென்ன என்மேல கோபம்… என்னமோ உன் சொத்தை பிடுங்குன மாதிரி முறைத்து பார்த்த..”

என்று வினவினான். 

(அவன் சும்மா கேட்டாலே ஆடுவாள்.. இதில் உடுக்கையும் சேர்ந்து அடித்தால்)

“உங்களுக்கு காசு, பணம், சொத்து, புகழ் இதெல்லாம் தான் முக்கியம் இல்லையா…? என்கிட்ட ஆந்திரா போக அப்பாகிட்ட பேசுறேன்னு சொல்லி கல்யாணம் பேசியது உங்களுக்கு தப்பாவே தெரியலை… அப்படித்தான…?”

என்று சூடாக கேட்டாள்.

அவள் கூறியதை கோர்வையாக்கி யோசித்த முகிலன்..

“அப்போ நீ ஆந்திரா ட்ரிப் பத்தி கேட்கிறதா நினைச்சி… கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லிருக்கியா…?”

என்று சிறிது அதிர்ச்சியோடு கேட்க..

பட்டென்று விசியத்தை கிரகித்து கேட்பவனை இப்பொது அதிர்ச்சியாக பார்த்தாள் ருத்ரா. அவனை வாங்கு வாங்கு என்று வாங்க தோன்றியதெல்லாம் அவனின் ஒற்றை கேள்வியில் தவறு தன் பக்கம் இருப்பதாக தோன்றிவிட…

அவள் அமைதியாக இருக்கவுமே… உண்மையை அறிந்த முகிலனிற்கு சிரிப்பு தாங்கவில்லை. இப்படியும் இந்த காலத்தில் ஒரு பெண்ணா…? என்று மனதினுள் எண்ண பொங்கி பொங்கி வந்தது சிரிப்பு.

ஆனால் அதனை வெளிக்காட்டவில்லை. அதற்கு பதிலாக அவன் வேறு சொன்னான்…

“நான் கூட உன்னை மாதிரி தான்.. ஆந்திரா போறதை பத்தி வீட்டுல பேசுறதுக்கு முன்னாடியே எங்க அம்மா உன்னை கல்யாணம் பண்ண சொல்லி வெட்டு ஒன்னு துண்டு ரெண்டா பேசுனாங்க… நானும் உங்க இஷ்டம்ன்னு சொல்லி இங்க வந்து நிற்கிறேன்”

என்றான்.

ருத்ராவிற்கு கடுப்பு மேல் கடுப்பு ஏறி கொண்டிருந்தது.

“அப்போ ரெண்டு பேருக்கும் விருப்பம் இல்லை என்று கூறி கல்யாணத்தை நிறுத்தி விடலாம்…”

என்று விட்டு முன்வாசலை விட்டு வெகுதூரம் தள்ளி  வந்துவிட்டதால் பின்வாசல் வழி உள்ளே செல்ல…

முகிலன் அவள் செய்ய போகும் காரியம் உணர்ந்து அதிர்ந்தவன்… அவள் பின்னோடு விரைந்தான்.

 

 

 

  

error: Content is protected !!